என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • நடிகை இனியா நடித்துள்ள திரைப்படம் ‘காஃபி’.
    • இந்த திரைப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகவுள்ளது.

    நடிகை இனியா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'காஃபி'. இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் சாய் கிருஷ்ணா இயக்கி உள்ளார். மேலும், இதில் ராகுல் தேவ் மற்றும் முகதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.


    காஃபி

    ஊழல் மற்றும் மனித கடத்தலுக்கு மத்தியில் காணாமல் போன தனது சகோதரனைக் கண்டுபிடிக்க துடிக்கும் ஒரு சகோதரியின் தேடலை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை வயாகம் 18 தமிழ் எண்டர்டெயின்மெண்ட் சேனலான கலர்ஸ் தமிழ் வருகிற நவம்பர் 27-ஆம் தேதி மதியம் 2 மணிக்கு நேரடி சாட்டிலைட் ப்ரீமியராக ஒளிபரப்பவிருக்கிறது.


    காபி போஸ்டர்

    இது குறித்து நடிகை இனியா கூறியதாவது, "இது ஒரு அற்புதமான அனுபவம், குறிப்பாக ராகுல் தேவ் மற்றும் முக்தா கோட்சே போன்ற மூத்த நடிகர்களுடன் இணைந்து நடித்தது மட்டும் இல்லாமல் அவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ளும் அனுபவம் எனக்கு கிடைத்தது. சத்யா போன்ற ஒரு துணிச்சலான கதாபாத்திரத்தில் நடிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன், அதே நேரத்தில் ஆக்‌ஷன் காட்சிகளை எடுப்பது மிகவும் சவாலாகவும் இருந்தது. சக்திவாய்ந்த பெண் கதாபாத்திரங்களைக் கொண்ட படங்கள் உள்ளன, ஆனால் காபி பார்வையாளர்களுக்கு இன்னும் ஒரு படி அனுபவத்தை உயர்த்துவது உறுதி" என்று கூறினார்.

    • தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்.
    • இவர் பல படங்களுக்கு இசையமைப்பதில் பிசியாக உள்ளார்.

    தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான். இவர் இசையில் சமீபத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன் -1' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், உலகம் முழுவதும் ரூ.400 கோடிக்குமேல் வசூல் சாதனை செய்தது.


    ஏ.ஆர்.ரகுமான்

    இதனைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரகுமான் தமிழில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் 'பத்து தல', சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அயலான்', உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி வரும் 'மாமன்னன்' உள்ளிட்ட சில படங்களை கைவசம் வைத்துள்ளார்.


    ஏ.ஆர்.ரகுமான் மகள்கள்

    இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் புதிதாக எலக்ட்ரிக் கார் வாங்கியுள்ளார். இந்த புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர் "நீங்கள் பார்க்க விரும்பும் மாற்றமாக இருங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.




    • இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் ‘வாரிசு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இவர் சமீபத்தில் பனையூரில் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்தார்.

    இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் 'வாரிசு' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் 2023-ஆம் ஆண்டு சங்கராந்திக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    விஜய்

    இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் சமீபத்தில் பனையூரில் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திக்க சென்ற போது அவரது காரை ரசிகர்கள் பலரும் பின் தொடர்ந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. அதுமட்டுமல்லாமல் விஜய் காரில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஓட்டியிருப்பது குறித்து நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.


    விஜய்

    இந்நிலையில், மோட்டார் வாகன திருத்த சட்டத்தின் அடிப்படையில் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடிகர் விஜய்க்கு ரூ.500 அபராதம் விதித்துள்ளனர்.

    • தெலுங்கு முன்னணி நடிகர் சிரஞ்சீவி நடித்து வரும் திரைப்படம் 'வால்டேர் வீரய்யா'.
    • இப்படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கிறார் கதாநாயகியாக நடிக்கிறார்.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவியின் 154-வது படம் 'வால்டேர் வீரய்யா'. இந்த படத்தை இயக்குனர் பாபி என்கிற கே.எஸ்.ரவீந்திரா இயக்குகிறார். இப்படத்தில் சிரஞ்சீவியுடன் இணைந்து ரவிதேஜா நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய்.ரவி சங்கர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.


    வால்டேர் வீரய்யா

    இதில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். ஆர்தர் ஏ வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான 'பாஸ் பார்ட்டி' பாடலின் லிரிக்கல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.


    வால்டேர் வீரய்யா

    குத்துபாடலாக உருவாகியுள்ள இந்த பாடலை நகாஷ் அஜீஸ், தேவி ஸ்ரீ பிரசாத், ஹரி பிரியா மூவரும் இணைந்து பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.



    • ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த திரைப்படம் ‘காந்தாரா’.
    • இப்படம் உலகம் முழுவதும் ரூ.400 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த 'காந்தாரா' திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது. முதலில் இந்த படம் கன்னட மொழியில் மட்டுமே வெளியிடப்பட்டது. கர்நாடகாவில் விமர்சன ரீதியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், நல்ல வசூலையும் குவித்தது. இதையடுத்து, படத்தை மற்ற மொழிகளில் வெளியிட படத்தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் முடிவு செய்து. இதனடிப்படையில் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் சமீபத்தில் 'காந்தாரா' திரைப்படம் வெளியிடப்பட்டது.


    காந்தாரா

    தற்போது அனைத்து மொழிகளிலும் இந்த படம் வசூலில் சாதனை படைத்துள்ளது. இந்த படத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நடிகர் ரஜினிகாந்த் உள்பட பலரும் பாராட்டினர். மேலும், உலக அளவில் ரூ.400 கோடி வரை வசூல் குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


    காந்தாரா போஸ்டர்

    இந்நிலையில், 'காந்தாரா' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் நாளை (நவம்பர் 24) முதல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என ஓடிடி தளம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.



    • 7 ஆண்டுகளுக்கு பிறகு அல்போன்ஸ் புத்திரன் இயக்கியுள்ள திரைப்படம் ‘கோல்டு’.
    • இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார்.

    'நேரம்' படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அதை தொடர்ந்து பிரேமம்' படத்தை இயக்கி இருந்தார். கடந்த 2015-ம் ஆண்டு மலையாளத்தில் மட்டுமே வெளியான பிரேமம்', தமிழ் ரசிகர்களிடையேயும் மாபெரும் வரவேற்பை பெற்றது.


    கோல்டு

    'பிரேமம்' படம் அல்போன்ஸ் புத்திரனுக்கு மலையாள திரையுலகிலும், தமிழ் திரையுலகிலும் பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு இவர் இயக்கும் படம் 'கோல்டு'. பிரித்விராஜ் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார்.


    கோல்டு

    இப்படத்தின் கதை, திரைக்கதை, அனிமேஷன், ஸ்டன்ட் என அனைத்தையும் அல்போன்ஸ் புத்திரன் செய்து முடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 8-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் வெளியாகவில்லை. இந்நிலையில், இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.


    கோல்டு போஸ்டர்

    அதன்படி, 'கோல்டு' திரைப்படம் வருகிற டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.



    • இன்ஸ்டாகிராமின் புதிய ட்ரெண்ட் '#1MinMusic' , ரீல்ஸ் வடிவத்துடன் இசை வீடியோக்களை வெளியிட படைப்பாளிகள் மற்றும் கலைஞர்களுடன் இணைந்துள்ளது.
    • இதில் பாடகியும், நடிகையுமான சிவாங்கியின் தீவானா பாடல் 1 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

    ரீல்ஸ் மற்றும் ஸ்டோரிகளில் பயன்படுத்துவதற்குப் இன்ஸ்டாகிராம் பிரத்தியேகமாக அதன் பிளாட்ஃபார்மில் கிடைக்கும் மியூசிக் டிராக்குகள் மற்றும் வீடியோக்களின் தொகுப்பு #1MinMusic'. இதில் இந்தியா முழுவதும் உள்ள 200க்கும் மேற்பட்ட கலைஞர்கள் தனது ஒரு நிமிட பாடல்களைத் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டுவருகிறார்கள். இன்ஸ்டாகிராம் தமிழுக்காக சில்வர் ட்ரீ (Silver Tree) இணைந்து 25 கலைஞர்களுடன் பணியாற்றுகிறது.

    சிவாங்கி - இயக்குனர் குமரன்

    சிவாங்கி - இயக்குனர் குமரன்

     

    அந்த வரிசையில் பிரபல தமிழ்த் திரைப்பட பின்னணி பாடகி மற்றும் நடிகை சிவாங்கியினுடைய 'தீவானா' என்ற #1MinMusic சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. இயக்குனர் குமரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்த பாடலை அனி வீ இசையமைத்துள்ளார். சிவாங்கி தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள இந்த வீடியோ 1 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.

    • விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
    • பொங்கல் பண்டிகையில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து அதிக தியேட்டர்களை ஒதுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

     

    வாரிசு - விஜய்

    வாரிசு - விஜய்

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளி தினத்தன்று 'வாரிசு' திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு, சங்கராந்திக்கு திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இதனிடையே ஐதராபாத்தில் நடந்த தெலுங்கு தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் பொங்கல் பண்டிகையில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து அதிக தியேட்டர்களை ஒதுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த முடிவால் விஜய்யின் வாரிசு திரைப்படம் தெலுங்கில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது. இந்த முடிவுக்கு தமிழ் சினிமாவில் இருந்து பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர்.

     

    வாரிசு - விஜய்

    வாரிசு - விஜய்

    இந்நிலையில் விஜய்யின் வாரிசு எந்த ஒரு சிக்கலுமின்றி தெலுங்கில் திட்டமிட்டபடி அனைத்து இடங்களிலும் ரிலீசாகும் என்று தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், வாரிசு திரைப்பட ரிலீஸ் தொடர்பாக தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திடம் பேசி உள்ளோம் என்றும் அவர்கள் இது தொடர்பாக நல்ல முடிவை தெரிவிப்பதாக கூறியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

    • 'குற்றப் பரம்பரை’, ‘குறுதி ஆட்டம்’ போன்ற பல நூல்களை எழுதி பிரபலமடைந்தவர் வேல. ராமமூர்த்தி.
    • இவர் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

    'குற்றப் பரம்பரை', 'குருதி ஆட்டம்', 'பட்டத்து யானை' போன்ற பல நூல்களை எழுதி பிரபலமடைந்தவர் வேல. ராமமூர்த்தி. இவர் 'மதயானை கூட்டம்', 'கொம்பன்', 'அண்ணாத்த' போன்ற பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது பெயரில் மோசடி நடப்பதாக தெரிவித்துள்ளார்.


    வேல ராமமூர்த்தி

    அதாவது, என் பெயரில் சமூக வலைதளத்தில் போலி கணக்குகள் தொடங்கப்பட்டு பணம் கேட்டு ஏமாற்றுவதாகவும் இதனை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்றும் வேல. ராமமூர்த்தி எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது.

    • தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.
    • இவர் தற்போது குடும்பத்தினருடன் பூர்வீக வீட்டிற்கு சென்று அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

    தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளவர் கீர்த்தி சுரேஷ். இவர் முன்னாள் கதாநாயகி மேனகாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது உதயநிதியுடன் மாமன்னன், ஜெயம் ரவி ஜோடியாக சைரன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஒரே நாளில் பிறந்த தனது பெற்றோர்கள் பிறந்த நாள் விழாவை கொண்டாடினார். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் வெளிநாடுகளுக்கு செல்வது. உறவினர்களை பார்க்க கிராமங்களுக்கு போவது போன்ற பழக்கங்களை கடைபிடித்து வருகிறார்.

     

    குடும்பத்தினருடன் கீர்த்தி சுரேஷ்

    குடும்பத்தினருடன் கீர்த்தி சுரேஷ்

    இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் உள்ள தனது மூதாதையரின் பூர்வீக வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றார். பழமை வாய்ந்த அந்த வீட்டின் முன்னால் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார். பின்னர் வீட்டுக்குள் சென்று தரையில் உட்கார்ந்தும், அங்குள்ள உறவினர்களை சந்தித்து நலம் விசாரித்தும் மகிழ்ந்தார். அங்கிருந்த 8-ம் நூற்றாண்டை சேர்ந்த மிகவும் பழமை வாய்ந்த திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கும் சென்று சுற்றி பார்த்து சாமியை வழிபட்டார். இந்த புகைப்படங்களை தனது வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

    • இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் என்சி22.
    • இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது இயக்கி வரும் புதிய படம் என்சி22. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார். தற்காலிகமாக 'என்சி22' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பா ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.


    என்சி 22 படக்குழு

    இப்படத்தின் வில்லனாக அரவிந்த் சாமி நடிக்கிறார். இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர். மேலும், இதில் சரத்குமார், வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    கஸ்டடி போஸ்டர்

    இதைத்தொடர்ந்து, இந்த படத்தின் டைட்டில் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, என்சி22 படத்திற்கு படக்குழு 'கஸ்டடி' என்று தலைப்பு வைத்துள்ளது. மேலும், இது தொடர்பான போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளத்தில் கவனம் பெற்று வருகிறது.



    • பசங்க, களவானி, மஞ்சப்பை, கேடி பில்லா கில்லாடி ரங்கா படங்களில் நடித்து பிரபலமடைந்த விமல், தற்போது கதாநாயகனாக நடித்துள்ள படம் 'துடிக்கும் கரங்கள்'.
    • இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

    பசங்க, களவானி, மஞ்சப்பை, கேடி பில்லா கில்லாடி ரங்கா படங்களில் நடித்து பிரபலமடைந்த விமல், தற்போது கதாநாயகனாக நடித்துள்ள படம் 'துடிக்கும் கரங்கள்'. இந்தப்படத்தை வேலுதாஸ் இயக்க, ஒடியன் டாக்கீஸ் சார்பில் கே.அண்ணாதுரை, வேலுதாஸ் மற்றும் காளிதாஸ் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் மிஷா நரங் கதாநாயகியாக நடித்துள்ளார்.

     

    துடிக்கும் கரங்கள்

    துடிக்கும் கரங்கள்

    இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பிற பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். இதில் பேசிய இயக்குனர் லிங்குசாமி, "சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த படத்தின் டைட்டிலை இந்தப் படத்திற்கு வைத்துள்ளார்கள். அவரது படங்களில் கொஞ்சம் சுமாராக ஓடிய படங்களின் டைட்டிலை மீண்டும் பயன்படுத்தும் போது சென்டிமென்டாக அந்த படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளன. நான் மகான் அல்ல திரைப்படம் அதற்கு ஒரு உதாரணம், அதுபோன்ற ஒரு வெற்றியை இந்தப்படம் நிச்சயம் பெறும்.

    நடிகர் விமல் கேடி பில்லா கில்லாடி ரங்கா, மஞ்சப்பை என நல்ல படங்களில் நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் மாதிரி ஒரு இடத்திற்கு அவர் இந்நேரம் வந்திருக்க வேண்டியது. இடையில் ஏதோ சில தவறுகளால் அதில் கொஞ்சம் தடை ஏற்பட்டு விட்டது. இப்போது சின்னப்படங்கள் என்று சொல்லப்படக்கூடிய லவ்டுடே போன்றவை ரிலீசுக்குப்பின் ரசிகர்கள் ஆதரவுடன் வெற்றிபெற்று பெரிய படமாக மாறுகின்றன. இந்த படத்தின் டீசரை பார்த்தபோது எதுவுமே தப்பாக தெரியவில்லை. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும்.

    லிங்குசாமி

    லிங்குசாமி

     

    தற்போது ஆந்திராவில் பண்டிகை காலங்களில் தமிழ் படங்களை திரையிடக்கூடாது என தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்திருப்பது தவறானது. இப்போது வெளியாகும் படங்கள் எல்லாம் நன்றாக ஓடுகின்றன. இது சினிமாவிற்கு ஒரு பொற்காலம். இந்த சமயத்தில் இப்படி ஒரு பிரச்சனை வரவே கூடாது. வாரிசு ரிலீஸ் விஷயத்தில் சரியான ஆட்கள் பேசி இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும். குறுகிய எண்ணத்தோடு யாராவது இப்படி ஒரு முடிவெடுத்து இருந்தால், நிச்சயமாக வாரிசுக்கு முன், வாரிசுக்கு பின் என சினிமாவும் மாறிவிடும். அதனால் இப்போது ஏற்பட்டிருப்பது ஒரு சின்ன சலசலப்பு தான். இது விரைவில் சரியாகிவிடும் என நம்புகிறேன்" என்றார்.

    ×