search icon
என் மலர்tooltip icon

    பெல்ஜியம்

    • பெண் தனது இரண்டு குழந்தைகள் மற்றும் ஒரு பேரக்குழந்தையுடன் வசித்து வந்தார்.
    • தென் கொரியாவுக்கு விமானத்தில் செல்ல தயாராகி இருந்த நிலையில் கைது.

    பெல்ஜியம், லீஜ் நகரின் புறநகர் பகுதியில் உள்ள கால்வாயில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சந்தேகிக்கும் வகையில் பொருள் ஒன்று மிதந்துக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு தெரியவந்தது.

    இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பொருளை மீட்டு பார்த்தபோது அது குளிர்சாதனப் பெட்டி என்று தெரியவந்தது. மேலும், அந்த பெட்டியில் மனிதக்கை, கால் பாகங்கள் இருப்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கிடைத்த உடல் பாகங்களை கொண்டு ஆய்வு செய்தனர். இதில், அந்த உடல் பாகங்கள் 70 வயது மதிக்கத்தக்க பெண்ணுடையது என்று தெரியவந்தது.

    மேலும், துப்பறியும் நபர்களால் அந்தப் பெண்ணின் உடலின் எஞ்சிய பகுதிகளான தலை மற்றும் உடற்பகுதி அருகிலுள்ள குப்பை குவியலில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

    கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் மேற்கொண்டு நடத்திய விசாரணையில், பெண்ணை கொலை செய்தது அவருடைய 30 வயது மதிக்கத்தக்க மகன் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து, பெண்ணின் மகனை பிரஸ்ஸல்ஸ் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு ஓட்டலில் இருந்து விடியற்காலையில் கைது செய்தனர். தென் கொரியாவுக்கு விமானத்தில் செல்ல தயாராகி இருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக செய்தித் தொடர்பாளர் கேத்தரின் கொலிக்னான் கூறினார்.

    மேலும், போலீசார் நடத்திய விசாரணையில் கைது செய்யப்பட்ட நபர் தனது தாயை கொலை செய்து உடல் பாகங்களை வெட்டி குளிர்சாதனப் பெட்டியில் வைத்து ஆற்றில் வீசியதாக ஒப்புக் கொண்டுள்ளார்.

    லீஜின் தென்மேற்குப் பகுதியான செராயிங்கில், அந்தப் பெண் தனது இரண்டு குழந்தைகள் மற்றும் ஒரு பேரக்குழந்தையுடன் வசித்து வந்தார்.

    கொரோனா தொற்று ஊரடங்கிற்கு பிறகு, பெண்ணும் அவரது மகனும் வசித்து வந்த நிலையில், இருவருக்குள்ளும் அடிக்கடி வாக்குவாதங்களும், பிரச்சினையும் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரத்தில் தாயை கொலை செய்து உடல் பாகங்களை வெட்டி தூக்கி எறிந்தது தெரியவந்தது.

    இதையடுத்து, நீதிபதியின் உத்தரவை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நபரை போலீசார் காவலில் வைத்துள்ளனர்.

    • உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பாக நேட்டோ உள்ளது.
    • இந்த ராணுவ கூட்டமைப்பில் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் உள்ளன.

    பிரெசெல்ஸ்:

    உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பு நேட்டோ ஆகும். நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் மிகப்பெரிய ராணுவ பலத்துடன் அமெரிக்கா உள்ளது. இந்த ராணுவ கூட்டமைப்பில் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் உள்ளன.

    அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, துருக்கி உள்பட 30 நாட்கள் நேட்டோ அமைப்பின் உறுப்பு நாடுகளாக உள்ளன. இதனிடையே, உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததையடுத்து ஐரோப்பிய நாடுகள் இடையே போர் அச்சம் ஏற்பட்டது. இதனால், ஐரோப்பிய நாடுகள் மீது ரஷியா தாக்குதல் நடத்தினால் அது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என்ற அச்சம் நிலவி வருகிறது.

    இந்நிலையில், நேட்டோ அமைப்பில் பின்லாந்து இன்று இணைந்துள்ளது. நேட்டோ அமைப்பின் 31-வது உறுப்பு நாடாக பின்லாந்து இணைந்துள்ளது.

    நேட்டோ அமைப்பில் பின்லாந்து இணைந்துள்ளதால் அந்நாட்டிற்குள் நேட்டோ படைத்தளம், படைகள் குவிக்கப்படலாம். இது ரஷியாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உக்ரைன் மீதான போரை தீவிரப்படுத்த வழிவகுக்கும்.

    உக்ரைன் - ரஷியா இடையேயான போருக்கு மத்தியில் பின்லாந்து நேட்டோ அமைப்பில் இணைந்துள்ள சம்பவம் உலக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அமெரிக்கா, கனடாவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது.
    • பெல்ஜியத்திலும் டிக் டாக் செயலிக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பிரசெல்ஸ்:

    அமெரிக்காவில் உள்ள சில மாநிலங்கள் மற்றும் ஐரோப்பியாவில் உள்ள மாகாணங்களில் அதிகார பூர்வ மின்னணு சாதனங்களில் டிக் டாக் செயலியை பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கனடாவிலும் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மேற்கு ஐரோப்பிய நாடான பெல்ஜியமும் சேர்ந்துள்ளது. அதாவது அந்த நாட்டின் அரசு அலுவலகங்களில் அரசுக்கு சொந்தமான கம்ப்யூட்டர், செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் டிக் டாக் செயலியை வைத்திருக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    • தன்னை கருணைக்கொலை செய்யும் படி ஜெனிவில் லெர்மிட் கோரிக்கை விடுத்தார்.
    • கருணைக்கொலை செய்ய கோரிக்கை விடுத்த ஜெனிவில் லெர்மிட் கருணைக்கொலை செய்யப்பட்டதை அவரது வக்கீல் நிக்கோலஸ் கோஹன் உறுதிப்படுத்தினார்.

    பிரஸ்சல்ஸ்:

    பெல்ஜியம் நாட்டை சேர்ந்த பெண் ஜெனிவில் லெர்மிட் (வயது58). நிவெல்லஸ் நகரில் வசித்து வந்த இவர் கடந்த 2007-ம் ஆண்டு பிப்ரவரி 28-ந்தேதி தனது 5 குழந்தைகளை கொலை செய்தார்.

    3 முதல் 14 வயது வரை உள்ள ஒரு மகன் மற்றும் 4 மகள்களை கத்தியால் கழுத்தை அறுத்து கொன்றார். பின்னர் தன்னைத்தானே கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்றார்.

    அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 5 குழந்தைகளை கொன்ற ஜெனிவில் லெர்மிட்டுக்கு 2008-ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்ட அவர் 2019-ம் ஆண்டு மனநல ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார்.

    இதற்கிடையே தன்னை கருணைக்கொலை செய்யும் படி ஜெனிவில் லெர்மிட் கோரிக்கை விடுத்தார். பெல்ஜியத்தில் தாங்க முடியாத உளவியல் ரீதியில் பாதிக்கப்படுவதாக கருதப்பட்டால் கருணைக்கொலை முடிவை ஒரு நபர் தேர்ந்தெடுக்க அந்நாட்டு சட்டம் அனுமதிக்கிறது.

    கருணைக்கொலை செய்ய கோரிக்கை விடுத்த ஜெனிவில் லெர்மிட் கருணைக்கொலை செய்யப்பட்டதை அவரது வக்கீல் நிக்கோலஸ் கோஹன் உறுதிப்படுத்தினார்.

    இதுதொடர்பாக அவர் கூறும்போது, 'ஜெனிவில் லெர்மிட், அவர் செய்த கொலைகளின் 16-வது நினைவு நாளில் அவரது விருப்பத்தின்படி கருணைக் கொலை செய்யப்பட்டார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு பல்வேறு கருத்துக்கள் சேகரிக்கப்பட்டன. அதன் பிறகே கருணைக்கொலை செய்யப்பட்டார்' என்றார்.

    இவ்வழக்கின் விசாரணையின்போது, ஜெனிவில் லெர்மிட் மனநல டாக்டரை தவறாமல் சந்தித்து வந்தார் என்றும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டதால் சிறைக்கு அனுப்பக்கூடாது என்றும் அவரது வக்கீல்கள் வாதிட்டனர். ஆனால் நீதிபதிகள் அதை ஏற்க மறுத்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கத்தார் நாட்டிடம் லஞ்சம் பெற்றதாக கூறி ஐரோப்பிய பாராளுமன்றத்தின் பெண் தலைவரான எவா காயிலியை பெல்ஜியம் போலீசார் கைது செய்தனர்.
    • எவா காயிலி உள்பட 4 பேரை கைது செய்துள்ள போலீசார் அவர்கள் மீது சட்டவிரோத பண பரிவா்த்தனை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    பிரசல்ஸ்:

    மத்திய வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தாரில் வெளிநாட்டு தொழிலாளா்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் ஐரோப்பிய கூட்டமைப்பு தங்களுக்கு ஆதரவான அரசில் முடிவுகளை எடுப்பதற்கு கத்தாா் பணபலத்தை பயன்படுத்தி வருவதாக நீண்ட காலமாகவே குற்றம் சாட்டப்பட்டு வந்தது. ஆனால் கத்தார் அரசு இதை திட்டவட்டமாக மறுக்கிறது.

    இந்த நிலையில் கத்தார் நாட்டிடம் லஞ்சம் பெற்றதாக கூறி ஐரோப்பிய பாராளுமன்றத்தின் பெண் தலைவரான எவா காயிலியை பெல்ஜியம் போலீசார் கைது செய்தனர்.

    எவா காயிலி உள்பட 4 பேரை கைது செய்துள்ள போலீசார் அவர்கள் மீது சட்டவிரோத பண பரிவா்த்தனை வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீடு உள்பட 16 இடங்களில் போலீசார் சோதனை நடத்தி சுமாா் 6 லட்சம் யுரோ (ரூ.5.2 கோடி) பறிமுதல் செய்தனர்.

    அதன் தொடர்ச்சியாக நேற்று பெல்ஜியம் தலைநகர் பிரசல்சில் உள்ள ஐரோப்பிய பாராளுமன்ற அலுவலகங்களில் போலீசார் சோதனை நடத்தினர்.

    இதனிடையே லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து கிரீஸ் நாட்டை சேர்ந்த எவா காயிலி ஐரோப்பிய பாராளுமன்ற துணைத்தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

    • வன்முறை தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • பட்டாசு விழுந்ததில் ஒரு பத்திரிகையாளரின் முகத்தில் காயம் ஏற்பட்டது.

    பிரஸல்ஸ்:

    கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் குரூப்-எப் பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெல்ஜியம் அணி மொராக்கோ அணியிடம் 2-0 என தோல்வியடைந்தது.

    இந்த போட்டியைத் தொடர்ந்து பெல்ஜியத்தில் கலவரம் வெடித்தது. தலைநகரின் பல்வேறு இடங்களில் ரசிகர்கள் வன்முறை ஏற்பட்டது. கலவர தடுப்பு போலீசாருடன் ரசிகர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதில் பலருக்கு காயம் ஏற்பட்டது. கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் அப்பகுதி போர்க்களமாக காட்சியளித்தது.

    பின்னர் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு இரவு 7 மணியளவில் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. வன்முறை தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கலவரக்காரர்கள் பைரோடெக்னிக் பொருட்கள், எறிகணைகள், கம்புகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாகவும், நெடுஞ்சாலையில் தீ வைத்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டாசு விழுந்ததில் ஒரு பத்திரிகையாளரின் முகத்தில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் தலையிட்டதால் தண்ணீரை பீய்ச்சியடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலவரக்காரர்கள் விரட்டியடிக்கப்பட்டதாக போலீசார் கூறுகின்றனர். 

    • கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபரை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
    • மர்மநபரின் வயிறு மற்றும் காலில் குண்டு பாய்ந்தது.

    பிரஸ்சல்ஸ்:

    பெல்ஜியம் நாட்டு தலைநகர் பிரஸ்சல்சில் உள்ள வடக்கு ரெயில் நிலையம் அருகே இரண்டு போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த மர்மநபர் ஒருவர் இரண்டு போலீஸ் அதிகாரிகளை கத்தியால் சரமாரியாக குத்தினார்.

    இதில் பலத்த காயம் அடைந்த 2 அதிகாரிகளும் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபரை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். மர்மநபரின் வயிறு மற்றும் காலில் குண்டு பாய்ந்தது.

    பின்னர் காயம் அடைந்த 2 போலீஸ் அதிகாரிகள் மற்றும் மர்மநபரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ஆனால் ஒரு போலீஸ் அதிகாரி சிகிச்சை பலனின்றி இறந்தார். அவருக்கு கழுத்தில் கத்திக்குத்து காயம் பலமாக ஏற்பட்டிருந்தது.

    இதுகுறித்து போலீசார் கூறும்போது, "ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரி ஒருவர் கத்திக்குத்து தாக்குதலில் உயிரிழந்தார்.

    இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறோம். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது என்றனர்.

    கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபர் யார்? எதற்காக தாக்குதல் நடத்தினார்? போன்ற விவரங்களை போலீசார் தெரிவிக்கவில்லை.

    இச்சம்பவம் பெல்ஜியத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் டி க்ரு கூறும்போது, "எனது எண்ணங்கள், இறந்த அதிகாரியின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உள்ளது. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட மற்றொரு அதிகாரி நலமுடன் இருப்பார் என்று நம்புகிறேன்.

    குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக போலீஸ் அதிகாரிகள் ஒவ்வொரு நாளும் தங்களது உயிரை பயணம் வைக்கிறார்கள் என்றார்.

    • 5 மாதங்களில் உலகை தனியாக சுற்றி வந்த இளம் விமானி என்ற சாதனையை படைத்துள்ளார்.
    • மேக் ரதர்போர்ட் 15 வயதில் விமானிக்கான உரிமத்தை பெற்றார்.

    சோபியா :

    பெல்ஜியம் நாட்டை சேர்ந்த இங்கிலாந்து வம்சாவளியான மேக் ரதர்போர்ட் என்கிற 17 வயது சிறுவன் விமானத்தில் தனியாக பறந்து உலகை சுற்றி வந்ததன் மூலம் தனியாக உலகை வலம் வந்த இளம் விமானி என்கிற சாதனையை படைத்துள்ளான்.

    மேக் ரதர்போர்ட்டின் இந்த சாதனை பயணம் பல்கேரியா தலைநகர் சோபியாவில் இருந்து கடந்த மார்ச் மாதம் 23-ந்தேதி தொடங்கியது.

    மணிக்கு 300 கி.மீ. வேகத்தில் செல்லும் உலகின் அதிவேக அல்ட்ராலைட் விமானங்களில் ஒன்றான 'ஷார்க்' என்கிற விமானத்தில் பயணம் செய்த மேக் ரதர்போர்ட் 3 மாதத்தில் தன்னுடைய லட்சிய பயணத்தை நிறைவு செய்ய திட்டமிட்டிருந்தார்.

    ஆனால் பருவமழை, மணல் புயல் மற்றும் கடுமையான வெப்பம் என அவரது வழியில் எதிர்பாராத பல தடைகள் வந்ததால் பயணம் நீண்ட காலம் நீடித்தது.

    அதன்படி கடந்த 5 மாதங்களில் 5 கண்டங்களில் உள்ள 52 நாடுகளை சுற்றி வந்த மேக் ரதர்போர்ட் நேற்று பல்கோரியா தலைநகர் சோபியாவில் விமானத்தை தரையிறக்கி சாதனை பயணத்தை நிறைவு செய்தார்.

    மேக் ரதர்போர்ட்டை வரவேற்கவும் அவரது சாதனைகளைக் கொண்டாடவும் அவரது குடும்பத்தினர் உள்பட ஏராளமான மக்கள் விமான நிலையத்தில் குவிந்திருந்தனர். அவர்கள் கரவொலிகளை எழுப்பியும், ஆரவாரம் செய்தும் மேக் ரதர்போர்ட்டுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    கடந்த 2020-ம் ஆண்டு தனது 15 வயதில் விமானிக்கான உரிமத்தை பெற்று உலகின் இளம் வயது விமானி என்கிற பெருமையை அடைந்த மேக் ரதர்போர்ட் தற்போது 5 மாதங்களில் உலகை தனியாக சுற்றி வந்த இளம் விமானி என்ற சாதனையை படைத்துள்ளார்.

    இதற்கு முன் 19 வயதில் விமானத்தில் தனியாக உலகை சுற்றி வந்த இளம் விமானி என்கிற பெருமைக்குரியவர் ஜாரா ரதர்போர்ட். இவர் வேறு யாரும் அல்ல, மேக் ரதர்போர்ட் மூத்த சகோதரி தான். அதாவது, தனது அக்காவின் சாதனையைதான் மேக் ரதர்போர்ட் முறியடித்துள்ளார்.

    • ஹெலிகாப்டரில் தொங்கியபடி ஒரு நிமிடத்தில் 24 முறை புல்-அப்ஸ் எடுத்தார்.
    • அர்ஜென் ஆல்பரிசுக்கு பிறகு 2-வதாக ஸ்டான் பிரவுனி ஹெலிகாப்டரில் தொங்கியபடி புல்-அப்ஸ் எடுத்தார்.

    நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஸ்டான் பிரவுனி, அர்ஜென் ஆல்பர்ஸ் ஆகியோர் யுடியூப் சேனலை நடத்தி வருகிறார்கள்.

    உடற்பயிற்சி ஆர்வலர்களான இவர்கள் ஹெலிகாப்டரில் தொங்கியபடி ஒரு நிமிடத்தில் அதிக முறை புல்- அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்தனர்.

    பெல்ஜியத்தின் ஆன்ட்வெர்ப்பில் உள்ள ஹொவெனன் விமான தளத்தில், ஹெலிகாப்டர் குறிப்பிட்ட அடி உயரத்தில் ஒரே நிலையில் அசையாமல் பறந்து கொண்டிருந்தபோது அடிப்பகுதியில் உள்ள கம்பியை பிடித்து கொண்டு புல்-அப்ஸ் செய்தனர்.

    முதலில் அர்ஜென் ஆல்பர்ஸ், ஹெலிகாப்டரில் தொங்கியபடி ஒரு நிமிடத்தில் 24 முறை புல்-அப்ஸ் எடுத்தார். இதனால் முன்பு 23 முறை புல்-அப்ஸ் எடுத்திருந்த அர்மேனியாவின் ரோமன் சஹ்ரத்யனின் சாதனையை முறியடித்தார்.

    அர்ஜென் ஆல்பரிசுக்கு பிறகு 2-வதாக ஸ்டான் பிரவுனி ஹெலிகாப்டரில் தொங்கியபடி புல்-அப்ஸ் எடுத்தார். அவர் ஒரு நிமிடத்தில் 25 முறை புல்-அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்தார். அர்ஜென் ஆல்பர்ஸ் 2-ம் இடம் பிடித்தார்.

    • ரஷியா மீது சர்வதேச நாடுகள் வரலாறு காணாத பொருளாதார தடைகளை விதித்தன.
    • போருக்கு பிறகு 1,380 கோடி டாலர் மதிப்பிலான ரஷிய சொத்து முடக்கப்பட்டுள்ளது.

    பிரஸ்சல்ஸ்:

    உக்ரைன் மீது ரஷிய ராணுவம் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி தாக்குதலை தொடங்கியது. இதற்கு உக்ரைன் படைகள் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றது. இரு தரப்பிலும் அதிக அளவிலான உயிர்சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

    உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். உக்ரைன் மீதான போரை கைவிடுமாறு உலக நாடுகள் வலியுறுத்தி வந்த நிலையில், பல்வேறு கட்டங்களாக நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்தன.

    இதற்கிடையே, ரஷியா மீது சர்வதேச நாடுகள் வரலாறு காணாத பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

    இந்நிலையில், அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகளில் ரஷியாவின் சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் ரஷியா, உக்ரைன் போர் ஏற்பட்ட பிறகு 1,380 கோடி டாலர் மதிப்பிலான ரஷிய சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

    • பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் நகரில் ஐரோப்பிய ஒன்றியத்தின் 2 நாள் மாநாடு தொடங்கியது.
    • உக்ரைன், மால்டோவாவை வேட்பாளராக ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகள் அங்கீகரித்தன.

    பிரஸ்ஸல்ஸ்:

    நேட்டோவில் இணையக் கூடாது என்ற வலியுறுத்தலை ஏற்காததால் உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனுக்கு நிதி உதவி மற்றும் ஆயுத உதவி செய்துவரும் ஐரோப்பிய ஒன்றியம், அந்நாட்டை உறுப்பினராக சேர்த்துக் கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏனென்றால் உறுப்பு நாடு என்றால்தான் நேரடியாக ராணுவ உதவி செய்ய முடியும்.

    ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவது என்பது எளிதான காரியம் அல்ல. அதற்கான நடைமுறைகள் முடிந்து இறுதிக்கட்டத்தை அடைய பல ஆண்டு காலம் ஆகும்.

    இதற்கிடையே, உக்ரைன் கடந்த பிப்ரவரி 28ம் தேதி அன்று விண்ணப்பம் கொடுத்துள்ளது. அந்நாட்டுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் முதலில் வேட்பாளர் அந்தஸ்து வழங்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது. அதேபோல் மால்டோவா நாட்டுக்கும் இன்று வேட்பாளர் அந்தஸ்து வழங்கப்படும் என்று தெரிகிறது.

    இந்நிலையில், பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் நகரில் ஐரோப்பிய ஒன்றியத்தின் 2 நாள் மாநாடு தொடங்கியது. இதில் உக்ரைன் மற்றும் மால்டோவாவை வேட்பாளராக 27 உறுப்பு நாடுகள் அங்கீகரித்தன.

    • இந்த வெற்றி மூலம் இந்திய அணி புள்ளி பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது
    • நெதர்லாந்து 31 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

    ஆன்ட்வெர்ப்:

    புரோ ஆக்கி லீக் தொடர் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 9 நாடுகளை சேர்ந்த ஆக்கி அணிகள் பங்கேற்றுள்ளன. இந்தியா-பெல்ஜியம் இடையிலான லீக் ஆட்டம் பெல்ஜியத்தின் ஆன்ட்வெர்ப் நகரில் நேற்றிரவு நடந்தது.

    விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் முதல் பாதியில் பெல்ஜியம் 3 கோல்களும் இந்தியா ஒரு கோலும் அடித்திருந்தன. பின்னர் இரண்டாவது பாதியில் இந்திய வீரர்கள் ஹர்மன்பிரீத் சிங் 52-வது நிமிடத்திலும், ஜர்மன்பிரீத் சிங் 58-வது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல் அடித்தனர். இதனால் ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

    இதையடுத்து பெனால்டி ஷூட்-அவுட் முறையில் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்பட்டது. இதில் இந்தியா 5-4 என்ற கோல் கணக்கில் ஒலிம்பிக் சாம்பியனான பெல்ஜியத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.

    13-வது லீக் போட்டி முடிவில் இந்தியா 10 வெற்றி, 3 தோல்வி என்று 29 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. பெல்ஜியம் 28 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருக்கிறது. நெதர்லாந்து 31 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

    ×