என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
பி.எம்.டபுள்யூ. நிறுவனம் தனது இரண்டு மோட்டார்சைக்கிள் மாடல்களை வாங்குவோருக்கு ரூ. 1 லட்சம் மதிப்பிலான சலுகைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.
பி.எம்.டபுள்யூ. நிறுவனம் தனது ஜி 310 ஆர் ரோட்ஸ்டர் மற்றும் ஜி 310 ஜி.எஸ். மோட்டார்சைக்கிள் மாடல்களை வாங்குவோருக்கு வருடாந்தர சலுகைகளை அறிவித்துள்ளது. தற்சமயம் இரு மோட்டார்சைக்கிள்களின் விலை முறையே ரூ. 2.99 லட்சம் மற்றும் ரூ. 3.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இரு மோட்டார்சைக்கிள்களை வாங்குவோருக்கு பி.எம்.டபுள்யூ. நிறுவனம் மூன்று ஆண்டுகள், வரம்பற்ற கிலோமீட்டர்களுக்கு வாரண்டி வழங்குகிறது. பி.எம்.டபுள்யூ. ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜி.எஸ். மாடல்களில் 313சிசி, லிக்விட் கூல்டு, சிங்கிள் சிலிண்டர், 4-ஸ்டிரோக் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
இந்த என்ஜின் 34 பி.ஹெச்.பி. பவர், 28.4 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் இரு மாடல்களிலும் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. மேலும் முன்புறம் 41 எம்.எம். அப்சைடு-டவுன் ஃபோர்க், பின்புறம் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது.

பிரேக்கிங்கிற்கு முன்புறம் 300 எம்.எம். டிஸ்க், பின்புறம் 240 எம்.எம். டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டூயல் சேனல் ஏ.பி.எஸ். வசதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பி.எம்.டபுள்யூ. ஜி 310 ஆர் மாடல் கே.டி.எம். டியூக் 390, பஜாஜ் டாமினர் 400, யமஹா YZF R3, கவாசகி நின்ஜா 300 மற்றும் டி.வி.எஸ். அபாச்சி 310 ஆர்.ஆர். மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது.
பி.எம்.டபுள்யூ. ஜி 310 ஜி.எஸ். மாடல் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன், கவாசகி வெர்சிஸ் எக்ஸ் 300 மற்றும் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் கே.டி.எம். அட்வென்ச்சர் 390 மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கிராவிடாஸ் கார் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பாரக்கப்படும் கிராவிடாஸ் எஸ்.யு.வி. காரின் புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்தியாவில் பிப்ரவரி 2020 வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், இந்த காரின் ஸ்பை படங்கள் இணையத்தில் தொடர்ந்து வெளியாகி வருகிறது.
புதிய கிராவிடாஸ் கார் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் டாடா நிறுவனத்தின் மற்ற புதிய மாடல்களுடன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிராவிடாஸ் கார் ஒமேகாஆர்க் பிளாட்ஃபார்மில் உருவாகி இருக்கிறது. ஸ்பை படங்களின் படி இந்த காரின் முன்புறம் பார்க்க ஹேரியர் போன்றே காட்சியளிக்கிறது.
எனினும், டெயில்கேட் வித்தியாசமாக காட்சியளிக்கிறது. இந்த காரின் உள்புறம் பார்க்க ஹேரியர் மாடலில் உள்ள கேபின் போன்றே தெரிகிறது. இதில் ஹூண்டாய் நிறுவனத்தின் 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் 8.8 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் கொண்டிருக்கிறது.
புதிய டாடா காரில் பி.எஸ். 6 ரக 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படலாம். இதே என்ஜின் ஹேரியர் மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 170 பி.எஸ். பவர் வழங்கும் என தெரிகிறது. இத்துடன் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படலாம்.
இந்தியாவில் டாடா கிராவிடாஸ் காரின் விலை ரூ. 13 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 17.2 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். வெளியானதும் இந்த கார் மஹிந்திரா எக்ஸ்.யு.வி.500 மற்றும் எம்.ஜி. ஹெக்டார் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புகைப்படம் நன்றி: zigwheels
கியா மோட்டார்ஸ் நிறுவனம் புதிதாக செல்டோஸ் எலெக்ட்ரிக் காரை உருவாக்கும் பணிகளை துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கியா மோட்டார்ஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் செல்டோஸ் எஸ்.யு.வி. மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச சந்தையில் செல்டோஸ் கார் தற்சமயம் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் விற்பனை செய்யப்படுகிறது.
புதிய செல்டோஸ் இ.வி. கார் SP2 EV எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. செல்டோஸ் கார் இந்தியாவில் ஆந்திர பிரதேச மாநிலத்திலும் கொரியாவில் உள்ள குவாஞ்சு ஆலையில் உருவாக்கப்படுகிறது. செல்டோஸ் இ.வி. கார் பாடி பேனல்கள், உள்புறங்கள் செல்டோஸ் மாடலில் உள்ளதை பயன்படுத்திக் கொள்ளும் என கூறப்படுகிறது.

எனினும், ஸ்டான்டர்டு எஸ்.யு.வி. மாடலுடன் புதிய இ.வி. காரை வித்தியாசப்படுத்த சிறிதளவு மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் பார்க்க கியா நிரோ மற்றும் சோல் இ.வி. மாடல்களை போன்று காட்சியளிக்கும் என கூறப்படுகிறது.
மேலும் புதிய செல்டோஸ் இ.வி. காரில் கியா சோல் இ.வி. மற்றும் ஹூண்டாய் கோனா இ.வி. மாடல்களில் உள்ள எலெக்ட்ரிக் பவர்டிரெயின் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் 204 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் எலெக்ட்ரிக் மோட்டார், 64 KwH பேட்டரி பேக் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
செல்டோஸ் எலெக்ட்ரிக் கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 400 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய செல்டோஸ் இ.வி. கார் இந்தியாவில் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எம்.ஜி. மோட்டார் நிறுவனத்தின் இசட்.எஸ். எலெக்ட்ரிக் காரின் முன்பதிவு இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
எம்.ஜி. மோட்டார் இந்தியா நிறுவனம் தனது இசட்.எஸ். எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. காருக்கான முன்பதிவுகளை துவங்கியுள்ளது. எம்.ஜி. இசட்.எஸ். முன்பதிவுகள் முதற்கட்டமாக பெங்களூரு, டெல்லி, ஆமதாபாத், ஐதராபாத் மற்றும் மும்பை என ஐந்து நகரங்களில் நடைபெறுகிறது.
முன்பதிவுகளை வாடிக்கையாளர்கள் எம்.ஜி. மோட்டார் நிறுவனத்தின் ஆன்லைன் அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள நகரங்களில் நடைபெறுகிறது. எம்.ஜி. இசட்.எஸ். எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 50,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எம்.ஜி. இசட்.எஸ். இ.வி. கார் சில வாரங்களுக்கு முன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் எம்.ஜி. இசட்.எஸ். காரின் பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு, குஜராத் மாநிலத்தின் ஹலோல் தயாரிப்பு ஆலையில் அசம்பிள் செய்யப்படுகிறது. எம்.ஜி. இசட்.எஸ். இ.வி. கார் 44.5 கிலோவாட் பேட்டரி பேக் மூலம் சக்தியூட்டப்படுகிறது.

இது அதிகபட்சமாக 141 பி.ஹெச்.பி. பவர் செயல்திறன் வழங்குகிறது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 340 கிலோமீட்டர் வரை செல்லும். மேலும் இந்த காரை ஃபாஸ்ட் சார்ஜர் கொண்டு சார்ஜ் செய்யும் போது 0-80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய ஒரு மணி நேரத்திற்கும் குறைவாகவே ஆகும்.
காரின் உள்புறம் முழுக்க கருப்பு நிறம் கொண்டிருக்கிறது. இதன் டேஷ்போர்டு பிரீமியம் உபகரணங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. டேஷ்போர்டில் 8.0 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் யூனிட் வழங்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே, நேவிகேஷன், ரிவர்ஸ் / பார்க்கிங் கேமரா போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
கே.டி.எம். நிறுவனத்தின் 250 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளின் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.
கே.டி.எம். இந்தியா தனது முதல் அட்வென்ச்சர்-டூரர் மோட்டார்சைக்கிளை 390 அட்வென்ச்சர் மாடலுடன் சேர்த்து அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய கே.டி.எம். 390 அட்வென்ச்சர் மாடல் இந்தியாவில் அடுத்த மாதம் விற்பனைக்கு வருகிறது. கே.டி.எம். நிறுவனம் 390 அட்வென்ச்சர் மட்டுமின்றி புதிதாக 250 அட்வென்ச்சர் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய கே.டி.எம். 250 அட்வென்ச்சர் மாடலின் விற்பனை இந்தியாவில் அடுத்த ஆண்டின் அரையாண்டு காலக்கட்டத்தில் துவங்கும் என தெரிகிறது. இந்த மாடல் 390 அட்வென்ச்சர் மாடலின் கீழ் நிலைநிறுத்தப்பட்டு, புதிய 250 அட்வென்ச்சர் மாடல் கே.டி.எம். நிறுவனத்தின் என்ட்ரி-லெவல் அட்வென்ச்சர் மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது.

வடிவமைப்புகளில் புதிய கே.டி.எம். 250 அட்வென்ச்சர் பார்க்க ஒரேமாதிரியான வடிவமைப்பு, சேசிஸ் மற்றும் ஃபிரேம் உள்ளிட்டவற்றை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இரு மாடல்களை வித்தியாசப்படுத்த சிறிதளவு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது.
390 அட்வென்ச்சர் மாடலுடன் ஒப்பிடும் போது என்ட்ரி லெவல் அட்வென்ச்சர் மாடல் வித்தியாசமான கிராஃபிக்ஸ் கொண்டிருக்கும் என்றும், 250 அட்வென்ச்சர் மாடலில் ஹாலோஜென் ஹெட்லேம்ப் வழங்கப்படும் என தெரிகிறது.
இரு அட்வென்ச்சர் மாடல்களும் ஒரேமாதிரியான அலாய் வீல்கள், டையர் அளவுகளை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அந்தவகையில் புதிய மாடலில் 19 இன்ச் மற்றும் 17 இன்ச் வீல்கள் முறையே முன்புறம் மற்றும் பின்புறங்களில் வழங்கப்படும் என தெரிகிறது.
என்ஜினை பொருத்தவரை கே.டி.எம். 250 மாடலில் பி.எஸ். 6 ரக 249சிசி என்ஜின் வழங்கப்படலாம். இதே என்ஜின் டியூக் 250 மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 30 பி.ஹெச்.பி. பவர், 24 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது.
நிசான் நிறுவனத்தின் கிக்ஸ் எஸ்.யு.வி. பி.எஸ். 6 வேரியண்ட் புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
நிசான் கிக்ஸ் பி.எஸ். 6 கார் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. ஸ்பை படங்களின் படி புதிய காரில் புகையை சோதிக்கும் உபகரணம் பொருத்தப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதுதவிர காரின் வடிவமைப்புகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
நிசான் கிக்ஸ் கார் பெட்ரோல் மற்றும் டீசல் என மொத்தம் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த கார் XL, XV, XV பிரீமியம் மற்றும் XV பிரீமியம் பிளஸ் என்ற பெயர்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் 1.5-லிட்டர் H4K பெட்ரோல் என்ஜின் 106 பி.ஹெச்.பி. பவர், 142 என்.எம். டார்கியூ மற்றும் 5-ஸ்பீடு மேனுல் அல்லது CVT கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது.
இதன் 1.5 லிட்டர் K9K DCi டீசல் என்ஜின் 110 பி.ஹெச்.பி. பவர், 240 என்.எம். டார்கியூ செயல்திறன், 6-ஸ்பீடு மேனுவல் அல்லது AMT டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும் என தெரிகிறது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் அறிமுகமான கிக்ஸ் எஸ்.யு.வி. கார் விலை ரூ.9.55 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் டாப் எண்ட் XV பிரீமியம் பிளஸ் வேரியன்ட் விலை ரூ.14.65 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
புகைப்படம் நன்றி: Rushlane
கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார்னிவல் எம்.பி.வி. காரின் முதல் டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
கியா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் இந்தியாவில் தனது கார்னிவல் எம்.பி.வி. காருக்கான முதல் டீசரை வெளியிட்டுள்ளது. புதிய கியா கார்னிவல் எம்.பி.வி. கார் இந்தியாவில் ஜனவரி மாத வாக்கில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த கார் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவில் கியா கார்னிவல் மாடலில் உள்நாட்டிற்கு ஏற்ற சிறப்பம்சங்கள் மற்றும் ஸ்டைலிங் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய கார்னிவல் கார் பாகங்கள் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டு இங்குள்ள அனந்தபூர் ஆலையில் அசெம்பிள் செய்யப்பட இருக்கிறது.

புதிய காரின் விலையை கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் நிர்ணயிக்க கியா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது. அந்த வகையில் இதன் விலை ரூ. 30 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கியா கார்னிவல் கார் 5115எம்.எம். நீளமாகவும், 1985 எம்.எம். அகலம், 1740 எம்.எம். உயரமாக இருக்கிறது. இதன் வீல்பேஸ் 3060 எம்.எம். அளவில் இருக்கிறது. கியா கார்னிவல் எம்.பி.வி. கார் ஆறு, ஏழு அல்லது எட்டு பேர் பயணிக்கக்கூடிய ஆப்ஷன்களில் கிடைக்கும்.
புதிய கியா கார்னிவல் கார் 2.2 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ டீசல் என்ஜின் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 202 பி.ஹெச்.பி. பவர் 441 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும். இத்துடன் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வசதி வழங்கப்படலாம்.
மாருதி சுசுகி நிறுவனத்தின் எர்டிகா கார் இந்திய விற்பனையில் புதிய மைல்கல் கடந்துள்ளது. முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
மாருதி சுசுகி எர்டிகா கார் இந்திய விற்பனையில் புதிய மைல்கல் கடந்துள்ளது. இந்தியாவில் விற்பனை துவங்கியது முதல் எர்டிகா கார் இதுவரை சுமார் ஐந்து லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இந்தியாவில் மாருதி சுசுகி எர்டிகா கார் அறிமுகமாகி எட்டு ஆண்டுகள் ஆகிறது.
இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் எம்.பி.வி. கார் மாடல்களில் ஒன்றாக எர்டிகா கார் இருக்கிறது. முதல் தலைமுறை எர்டிகா கார் ஏழு ஆண்டுகளில் 4,18,128 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. அடுத்த 13 மாதங்களில் ஒரு லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.

மாருதி எர்டிகா கார் இந்திய சந்தையில் எம்.பி.வி. ரக மாடல்களில் 50.3 சதவீத பங்குகளை கொண்டிருக்கிறது. இதனால் மாருதி நிறுவன விற்பனை 25.3 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.
மாருதி எர்டிகா மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல், 1.3 லிட்டர் டீசல் என்ஜின்கள் வழங்கப்பட்டுள்ளது. 1.5 லிட்டர் K-சீரிஸ் பெட்ரோல் என்ஜின் முன்னதாக மேம்படுத்தப்பட்ட சியாஸ் செடான் மாடலில் வழங்கப்பட்டு இருந்தது.
இத்துடன் டீசல் என்ஜின் 1.3 லிட்டர் DDiS யூனிட் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 89 பி.ஹெச்.பி. பவர், 200 என்.எம். டார்கியூ செயல்திறன், 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
பென்லிங் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் ஆரா என்ற பெயரில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.
2019 இ.வி. எக்ஸ்போ விழாவில் பென்லிங் இந்தியா நிறுவனம் ஆரா என்ற பெயரில் புதிதாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இது அந்நிறுவனத்தின் முதல் அதிவேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். இதன் விலை அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் அறிவிக்கப்பட இருக்கிறது.
ரெட்ரோ ஸ்டைலிங் கொண்ட ஆரா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் அதிநவீன அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் ரிமோட் கீலெஸ் சிஸ்டம், யு.எஸ்.பி. சார்ஜிங் வசதி, ஆண்டி-தெஃப்ட் அலாரம், பின்புறம் ஒருங்கிணைக்கப்பட்ட லாக்கிங் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது.

இத்துடன் பிரேக்டவுன் ஸ்மார்ட் அசிஸ்டண்ஸ் சிஸ்டம் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இது வாகனம் நடுவழியில் பிரேக்டவுன் ஆனாலும் தொடர்ந்து இயங்க வழி வகுக்கும். புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 2500 BLDC எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் 72V/40Ah லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 120 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும். மேலும் இது மணிக்கு அதிகபட்சம் 60 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
பஜாஜ் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. ஸ்பை படங்களில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மெட்டாலிக் சில்வர் மற்றும் ரெட் நிற வெர்ஷன்களை கொண்டிருக்கிறது. இரு ஸ்கூட்டர்களும் பூனே அருகில் சோதனை செய்யப்படுகிறது.
எலெக்ட்ரிக் செட்டாக் ஸ்கூட்டரில் 4kWh மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இது IP67 தரச்சான்று பெற்று இருப்பதுடன் கழற்ற முடியாத லித்தியம் அயன் பேட்டரி கொண்டிருக்கிறது. இந்த ஸ்கூட்டரை ஒருமுறை சார்ஜ் செய்தால் ஸ்போர்ட் மோடில் 85 கிலோமீட்டர்களும், இகோ மோடில் 95 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும்.

செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முன்புறம் சிங்கில் ஆர்ம் யூனிட், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங்கிற்கு டிஸ்க் மற்றும் டிரம் பிரேக் செட்டப் வழங்கப்பட்டுள்ளது. செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் டிஜிட்டல் ப்ளூடூத் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது.
புதிய செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வடிவமைப்பு பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பிரபல ஸ்கூட்டராக இருந்த செட்டாக் மாடலை தழுவியே உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் ஷீட் மெட்டல் பாடி கொண்டிருக்கிறது. இதன் மீது பிரஷ் செய்யப்பட்ட குரோம் ஹைலைட்கள், வட்ட வடிவ எல்.இ.டி. ஹெட்லேம்ப் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ரூ. 1.25 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 1.40 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய செட்டாக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் ஏத்தர் 450 மாடலுக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது.
புகைப்படம் நன்றி: Rushlane
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் புத்தம் புதிய ஆரா காரினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது புதிய காம்பேக்ட் செடான் மாடல் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஹூண்டாய் ஆரா கார் இந்தியாவில் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் ஆரா சப் காம்பேக்ட் கார் 4 மீட்டர் அளவில் உருவாகி இருக்கிறது.
புதிய ஹூணாடாய் ஆரா கார் புதுவித வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இது அதிநவீன வடிவமைப்பு மற்றம் ஸ்போர்ட் தோற்றம் கொண்டிருக்கிறது. புதிய ஆரா செடான் கார் கிராண்ட் ஐ10 நியோஸ் மாடலை தழுவி உருவாகி இருக்கிறது. இந்த கார் பார்க்க எக்ஸ்சென்ட் போன்றே காட்சியளிக்கிறது.
புதிய காரின் பின்புறம் அழகிய வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் ராப் அரவுண்ட் எல்.இ.டி. டெயில் லைட்கள், பிளாக்=அவுட் சி பில்லர் வழங்கப்பட்டுள்ளது. இதன் உள்புறம் பற்றி ஹூண்டாய் இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், இதில் டூயல் டோன் டேஷ்போர்டு, தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்டீரிங் மவுன்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஆரா காரில் 1.2 லிட்டர் கப்பா என்ஜின் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இரு என்ஜின்களும் முறையே 83 பி.ஹெச்.பி. பவர், 113 என்.எம். டார்க் மற்றும் 120 பி.ஹெச்.பி. பவர், 172 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இவைதவிர 1.2 லிட்டர் டீசல் யூனிட் வழங்கப்பட்டுள்ளது.
டீசல் என்ஜின் 75 பி.ஹெச்.பி. பவர், 190 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. மூன்று என்ஜின்களும் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மூன்று என்ஜின்களும் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் புத்தம் புதிய ஆல்டோ 800 VXI+ காரை அறிமுகம் செய்துள்ளது.
மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் புத்தம் புதிய ஆல்டோ VXI+ காரை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ. 3.80 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஆல்டோ காரில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அந்த வகையில் புதிய ஆல்டோ VXI+மாடலில் மாருதியின் அதிநவீன ஸ்மார்ட்பிளே 2.0 ஏழு இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் 2019 வேகன்ஆர் மாடலில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டது.

புதிய ஸ்மார்ட்பிளே 2.0 இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கஸ்டமைஸ் செய்யும் வசதியும், பயனுள்ள கிராஃபிக்கல் யூசர் இன்டர்ஃபேஸ் கொண்டுள்ளது. மாருதி நிறுவனம் ஆல்டோ 800 ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்தது. இந்த கார் புதிய பாதுகாப்பு விதிகளை பூர்த்தி செய்யும் அம்சங்களை கொண்டிருந்தது.
புத்தம் புதிய ஆல்டா VXI+ மாடலிலும் 796சிசி, 3 சிலிண்டர் பி.எஸ். 6 ரக என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 47 பி.ஹெச்.பி. பவர், 69 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. மேலும் இந்த என்ஜின் முந்தைய பி.எஸ். 4 என்ஜினை விட 25 சதவீதம் குறைவான நைட்ரஜன் ஆக்சைடை வெளியிடும் என கூறப்படுகிறது.
புதிய மாருதி ஆல்டோ 800 VXI+ மாடலில் டிரைவர் சைடு ஏர்பேக், ஏ.பி.எஸ், இ.பி.டி. ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், சீட் பெல்ட் ரிமைன்டர், ஸ்பீடு அலெர்ட் அம்சம் வழங்கப்பட்டுள்ளது.






