என் மலர்
- அங்கப்புரம் உள்பட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மின் வெட்டு ஏற்படுபடுகிறது.
- இப்பகுதியில் போதிய மின் பணியாளர்கள் இல்லை என கூறப்படுகிறது.
கடையம்:
தென்காசி மாவட்டம் கடையம் மற்றும் சுற்று வட்ராப்பகுதியான பிள்ளைகுளம், அகம்பிள்ளைகுளம், மந்தியூர், நரையப்பபுரம், அங்கப்புரம் உள்பட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மின் வெட்டு ஏற்படுபடுகிறது.
இதனால் பள்ளி மாணவர்கள், ஒட்டல் நடத்துபவர்கள், பீடி சுற்றும் தொழிலாளர்கள், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் இந்த மின்வெட்டால் இரவு நேரங்களில் வீடுகளில் பெண்கள் சமைக்கவும் மற்றும் தூங்கும்போது மின்விசிறியை இயக்க முடியாமலும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவர்கள் பாடங்களை படிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.
இந்நிலையில் இப்பகுதியில் போதிய மின் பணியாளர்கள் இல்லை என கூறப்படுகிறது. எனவே அதிகாரிகள் போதிய மின் பணியாளர்களை நியமிக்கவும், மின் வெட்டை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- மாற்றுத்திறனாளிகள் வேறு எந்த ஒரு அலுவலகத்திலும் உதவித்தொகை பெறாத வராக இருக்க வேண்டும்.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ள தாவது:-
உதவித்தொகை
தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை திட்டத்தின்கீழ் வேலை வாய்ப்பு அலுவல கத்தில் பதிவு செய்து எவ்வித வேலை வாய்ப்பும் கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி 10-ம் வகுப்பில் தோல்வி யுற்றவர்களுக்கு மாதம் ரூ. 200, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ. 300, பிளஸ்-2 வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ. 400 மற்றும் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ. 600 வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
வங்கி கணக்கில்....
இத்தொகை நேரடியாக மனுதாரர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராகவும், தொடர்ந்து பதிவினை புதுப்பித்தும் இருக்க வேண்டும்.
எஸ்.சி., எஸ்.சி. (ஏ), எஸ்.டி. பிரிவினர் 45 வயதுக்கு மிகாமலும், பி.சி., பி.சி.எம்., ஓ.சி. பிரிவினர் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவு பெற்ற மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை கோரி விண்ணப் பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பம் செய்யும் மாற்றுத்திறனாளிகள் வேறு எந்த ஒரு அலுவலகத்திலும் உதவித்தொகை பெறாத வராக இருக்க வேண்டும்.
வயது உச்ச வரம்பு
மாற்றுத் திறனாளிகளுக்கு வயது உச்ச வரம்பு, வருமான உச்சவரம்பு ஏதுமில்லை. 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படித்த வர்களுக்கு மாதம் ரூ. 600- பிளஸ்-2 வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ. 750, பட்டதாரிகளுக்கு ரூ. 1000 வீதம் 10 ஆண்டுகளுக்கு வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது.
அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்கு சென்று பயிலும் மாணவ, மாணவிகள், பொறியியல், மருத்துவம், விவசாயம், சட்டம் போன்ற தொழிற் பட்டப்படிப்பு பயின்ற வர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட மாட்டாது . எனி லும், தொலை தூரக்கல்வி அல்லது அஞ்சல் வழி மூலம் கல்வி கற்பவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
அடையாள அட்டை
தகுதி உள்ளவர்கள் வேலைவாய்ப்பு அடையாள அட்டை (பழையது), மற்றும் இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆன்லைன் மூலம் பெறப் பட்ட 'பிரிண்ட் அவுட்கள்' போன்ற வற்றுடன் அலு வலக வேலை நாட்களில் தென்காசி மாவட்ட வேலை வாய்ப்ப கத்திற்கு நேரில் வருகை புரிந்து அதற்கான விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம்.
அல்லது https://tnvelaivaaippu.gov.in என்ற இணைய தளத்தின் மூலமா கவும் பொது, மாற்றுத்திற னாளிகள் அவர்க ளுக்குரிய விண்ண ப்பத்தினை தனித்தனியே பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து, பொதுப் பிரிவினர் மட்டும் அத்துடன் இணைக்க ப்பட்டுள்ள வருவாய்த்துறை சான்றில் கிராம நிர்வாக அலுவலர் மற்றம் வருவாய் ஆய்வாளர் அவர்களின் முத்திரையுடன் கூடிய கையொப்பம் பெற்று வேலை வாய்ப்பு அடையாள அட்டை (பழையது மற்றும் ஆன்லைன் பிரிண்ட் அவுட்), அசல் கல்விச் சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ், மாற்றுச்சா ன்றிதழ் (டி.சி), தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்குப்புத்தகம், ஆதார் அட்டை, ரேசன் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன் அலுவலக வேலை நாட்களில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவல கத்திற்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மக்கள் நல பணியாளர்களுக்கு பணி நிரந்தரத்துடன் கூடிய பணி நியமனை ஆணை வழங்கிட வேண்டும்.
- பணியாளர்களின் வாரிசுகளுக்கு உடனடியாக வேலை வழங்கிட வேண்டும்.
தென்காசி:
தென்காசியில் மக்கள் நல பணியாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மக்கள் நல பணியாளர் சங்கம் சார்பில் கருப்பு பேட்ஜ் அணிந்து தென்காசி புதிய பஸ் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தென்காசி மாவட்ட மக்கள் நலப்பணியாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வாசுதேவநல்லூர் எஸ். முருகன் தலைமை தாங்கினார். தென்காசி மாவட்ட மக்கள் நலப்பணியாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தென்காசி முத்துசாமி வரவேற்று பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு மக்கள் நல பணியாளர்களுக்கு பணி நிரந்தரத்துடன் கூடிய பணி நியமனை ஆணை வழங்கிட வேண்டும். மக்கள் நலப் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்.
நீண்ட தொலை தூரங்களில் பணிபுரிந்து வரும் மக்கள் நலப் பணியாளர்களை அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ஊராட்சிக்கு பணியிட மாறுதல் வழங்க அரசு உத்தரவிட வேண்டும். கடந்த 1-ந் தேதி அன்று பணியில் சேர்ந்து ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் இறந்துவிட்ட பணியாளர்களின் வாரிசுகளுக்கு உடனடியாக வேலை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு மக்கள் நல பணியாளர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் புதியவன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் திருமலை முருகன், தமிழ்நாடு பட்டு வளர்ச்சி துறை ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் வெங்கடேஷ், தமிழ்நாடு வேலைவாய்ப்பு துறை ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் க.மார்த்தாண்ட பூபதி, தமிழ்நாடு வருவாய்த்துறை ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பி.கே.மாடசாமி ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினர். முடிவில் தென்காசி மாவட்ட மக்கள் நல பணியாளர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் அருணாசலம் நன்றி கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் நலப்பணியாளர் சங்கத்தின் தென்காசி மாவட்ட துணைத் தலைவர் குருவிகுளம் தர்மராஜ், மேலநீலிதநல்லூர் லெட்சுமி, துணைச் செயலாளர்கள் கடையநல்லூர் கருப்பசாமி, சங்கரன்கோவில் சண்முகச்சாமி, மணி , மாநில செயற்குழு உறுப்பி னர்கள் சங்கரன்கோவில் மாரியப்பன், செங்கோட்டை பண்டார சிவன், தென்காசி அந்தோணி செல்லத்துரைச்சி, கடையநல்லூர் ராஜேந்திரன் மற்றும் தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் பணிபுரிந்து வரும் மக்கள் நல பணியாளர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து மக்கள் நலப்பணியாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் கலெக்டர் துரை ரவிச்சந்திரனை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்தனர்.
- நடப்பு ஆண்டில் 152 ஹெக்டேர் பரப்பில் நுண்ணீர் பாசன திட்டம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- சிறு, குறு விவசாயிகள், பெண் விவசாயிகள் மற்றும் ஆதிதிராவிட விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
கடையம்:
கடையம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் (பொறுப்பு) கோபி கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நுண்ணீர் பாசன திட்ட மானியம்
கடையம் வட்டாரத்தில் நடப்பு ஆண்டில் 152 ஹெக்டேர் பரப்பில் நுண்ணீர் பாசன திட்டம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் சொட்டுநீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம், மழைத்துவான் பாசனம் வழங்கப்பட உள்ளது.
சிறு, குறு விவசாயிகளுக்கு 2 ஹெக்டேர் வரையிலும் இதர விவசாயிகளுக்கு 5 ஹெக்டேர் வரையிலுமாக வழங்கப்படுகிறது.
சிறு, குறு விவசாயிகள், பெண் விவசாயிகள் மற்றும் ஆதிதிராவிட விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் பயிரிடும் தோட்டக்கலை பயிர்களை அடங்களில் பதிவு செய்து, குடும்ப அட்டை நகல், கணினி சிட்டா, ஆதார் அட்டைநகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், நில வரைபடம், சிறு, குறு விவசாயிகளாக இருப்பின் அதற்கான தாசில்தாரிடம் பெறப்பட்ட இணையதள சான்று உள்ளிட்ட அனைத்தையும் கடையம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேரில் கொடுத்து பயன்பெறலாம்.
திட்டத்தின் வாயிலாக 7 ஆண்டுகளுக்கு முன் மானியம் பெற்ற விவசாயிகளுக்கு புதிதாக சொட்டுநீர் பாசனம் இந்த நிதி ஆண்டில் அமைத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சிதம்பர வேல்பிரகாஷ் கனடாவில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார்.
- ரஞ்சித்துக்கு தட்கல் முறையில் பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வீரசிகாமணி கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி கோமதி. இவர்களது மகன் சிதம்பர வேல்பிரகாஷ் (வயது 28). இவருக்கு திருமணம் ஆகி இந்துமதி என்ற மனைவி, ஒரு குழந்தை உள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் கனடாவில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். அங்கு தன் மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 3-ந்தேதி காலை பிரகாஷ் சைக்கிளில் சென்றபோது, கார் மோதி உயிரிழந்தார். பிரகாஷ் உயிரிழந்த தகவல் தெரிந்ததும் அவரது உறவினர்கள் மிகுந்த கவலை அடைந்தனர். மேலும் இறந்த பிரகாஷின் உடலை இந்தியா கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே அவர் பணிபுரியும் நிறுவனம் அவருடைய சொந்தங்கள் யாராவது வந்தால் மட்டுமே விசா எடுக்க வாய்ப்புள்ளதாகவும், தொடர்ந்து அவருடைய மனைவி மற்றும் குழந்தையை அனுப்ப முடியும் என்று கூறியுள்ளது. எனவே அவரது சகோதரர் ரஞ்சித் அங்கு செல்ல தட்கல் முறையில் பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து ராஜா எம்.எல்.ஏ. கூறுகையில், பிரகாஷ் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் அவரது உடலை இந்தியா கொண்டுவர முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர், அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக உடலை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- கடந்த சில மாதங்களாக வாட்ஸ்-அப் புகார் எண், தொலைபேசி புகார் எண் இரண்டும் சரிவர செயல்படவில்லை.
- கலெக்டருக்கு புகார்களை தெரிவிக்கும் வகையில் மீண்டும் புகார் எண்களை செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களின் புகார்களை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் சென்று தெரிவிப்பதற்கு பதிலாக தனியாக தொலைபேசி மற்றும் வாட்ஸ்-அப் மூலம் புகார் அளிப்பதற்காக தனியாக புகார் எண்கள் அறிவிக்கப்பட்டிருந்தது.
பொதுமக்கள் புகார்
அதில் பொதுமக்கள் தங்களின் புகார்களை தெரிவித்தவுடன் அதற்கான உரிய பதில் சம்பந்தப்பட்ட நபருக்கு குறுஞ்செய்தியாகவோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக வாட்ஸ்-அப் புகார் எண் மற்றும் தொலைபேசி புகார் எண் இரண்டும் சரிவர செயல்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக கலெக்டருக்கு புகார்களை தெரிவிக்கும் வகையில் ஏற்கனவே செயல்பட்ட வாட்ஸ்-அப் புகார் மற்றும் தொலைபேசி புகார் எண்களை மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்காசி மாவட்ட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் புதிய தமிழகம் கட்சியின் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.
- ஆடி தபசு திருவிழாவுக்கு முன்பு சாலைகளை விரைந்து சரி செய்ய வேண்டும்.
சங்கரன்கோவில்:
தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதிய தமிழகம் தேர்தல் முகவர்கள் ஆலோசனை கூட்டம் சங்கரன்கோவிலில் நடைபெற்றது.
தென்காசி மாவட்ட செயலாளர் ராசையா தலைமை தாங்கினார். மாவட்ட இணைச்செயலாளர் செல்வராஜ் வரவேற்று பேசினார். மாவட்ட துணை செயலாளர் தங்கப்பாண்டி முன்னிலை வகித்தார்.
கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொது செயலாளர் அய்யர், மாநில துணை அமைப்பு செயலாளர் சட்டமன்ற தொகுதி மேலிட பொறுப்பாளர் சுந்தரராஜ், மாநில துணை கொள்கை பரப்பு செயலாளர் இரும்பொறை சேதுராமன், விருதுநகர் மாவட்ட இணைச் செயலாளர் குணம், குருவிகுளம் வடக்கு ஒன்றிய செயலாளர் ராமையா, குருவிகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன், ஒன்றிய செயலாளர்கள் சுகுமார், சங்கரலிங்கம், சுந்தர்ராஜ் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் புதிய தமிழகம் கட்சியின் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. அலுவலகத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அவர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றித் தரும் விதத்தில் அலுவலகம் முழுநேரம் செயல்படும் என நிர்வாகிகள் பொதுமக்களிடம் தெரிவிக்க வேண்டும்.
சங்கரன்கோவில் நகராட்சி பகுதிகளில் தோண்டி போடப்பட்டுள்ள சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளதை ஆடி தபசு திருவிழாவுக்கு முன்பு விரைந்து சரி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை நிர்வாகிகள், புளியங்குடி நகர செயலாளர் சாமிதுரை, சங்கரன்கோவில் வடக்கு ஒன்றிய செயலாளர் கந்தவேல், மேற்கு ஒன்றிய செயலாளர் மாடசாமி, வாசுதேவநல்லூர் பேரூர் செயலாளர் உமர்கத்தா, நிர்வாகிகள் மணிகண்டன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
- கிராமப்புறங்கள்,விரிவாக்க பகுதிகளில் இருந்து பாளைக்கு வரும் பஸ்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு.
- பெருமாள்புரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவிகள் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தனர்.
நெல்லை:
நெல்லை டவுன் பகுதியில் இருந்தும், மாநகரத்தில் விரிவாக்கப் பகுதியில் இருந்தும் தினமும் பாளை பகுதியில் உள்ள கல்லூரி களுக்கும், பள்ளிகளுக்கும் ஏராளமான மாணவ-மாணவிகள் படிப்பதற்காக வந்து செல்கின்றனர்.
மாநகர பகுதிக்குள் குறிப்பாக டவுன், பேட்டை, கே.டி.சி. நகர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து குறிப்பிட்ட அளவு பஸ்கள் இயக்கப்பட்டா லும் மாநகராட்சியை ஒட்டி அமைந்துள்ள கிராமப்புறங்களில் மற்றும் விரிவாக்க பகுதிகளில் இருந்து பாளைக்கு வரும் பஸ்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. இதனால் இந்த பஸ்களில் காலை மற்றும் மாலை வேலைகளில் மாணவ-மாணவிகள், பணிக்கு சென்று திரும்பும் பெண்கள் என கூட்டமாக காணப்படுகிறது.
அந்த வகையில் இன்று காலை மாநகராட்சி விரிவாக்க பகுதியில் இருந்து டவுனுக்கு ஒரு பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சில் பெருமாள்பு ரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் ஏராளமான மாணவ -மாணவிகள் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தனர். இதனை அந்த வழியாக வந்த சிறப்பு இன்ஸ்பெக்டர் ஒருவர் பார்த்து உடனடியாக அந்த பஸ் டிரைவரை பஸ்சை நிறுத்த சொல்லி அதில் தொங்கிக் கொண்டிருந்த மாணவிகளை படிக்கட்டில் இருந்து பஸ்சுக்குள் போகுமாறு அறிவுரை வழங்கினார். அதன் பின்னர் பஸ்சை கிளம்ப அறிவுறுத்தினார். தொடர்ந்து காலை மற்றும் மாலை வேலைகளில் மாநகர பகுதியில் பெரும்பாலான பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. எனவே இந்த வேலைகளில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சந்திப்பு பஸ் நிலையம் உள்ளிட்ட ஒரு சில ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- புதிய பாலத்தில் இருந்து மேலப்பாளையம் சாலை வரை நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது.
நெல்லை:
நெல்லை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. பாளை பஸ் நிலையம், வேய்ந்தான்குளம் புதிய பஸ் நிலையம், வணிக வளாகம், பல்நோக்கு அரங்கம் உள்ளிட்ட பெரும்பாலான பணிகள் முடிவடைந்து உள்ளது.
சந்திப்பு பஸ் நிலையம் உள்ளிட்ட ஒரு சில பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையே நெல்லை மாவட்ட மக்களின் ஜீவநதியாக விளங்கும் தாமிர பரணி ஆற்று தண்ணீரானது மாநகர பகுதியில் சாக்கடை உள்ளிட்ட கழிவுகளால் மாசடைவதாக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர்.
இதனால் அந்த மாசுபாட்டை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தாமிர பரணி ஆற்றின் அழகை ரசிக்கும் வகையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை கலெக்டர் அலுவலகம் எதிரே நடை பாதை அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்துக்காக ரூ. 11.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தாமிரபரணி ஆற்றங்கரையில் ஓரமாக புதிய பாலத்தில் இருந்து கலெக்டர் அலுவலக வளாகத்தை தாண்டி மேலப்பாளையம் சாலை வரையிலும் சுமார் 250 மீட்டர் நீளத்திற்கு இந்த நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது.
சுமார் 15 மீட்டர் அகலம் கொண்ட வகையில் அமைக்கப்படும் இந்த நடை பாதையில் மாநகர பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
மேலும் விடுமுறை காலங்களிலும், வெள்ள காலகட்டத்தின் போதும் தாமிரபரணி ஆற்றின் அழகை ரசிக்கும் வண்ணம் இந்த நடைபாதை அமைக் கப்பட்டுள்ளது. அந்த கால கட்டங்களில் இந்த நடை பாதையில் நின்று தாமிரபரணி ஆற்றின் அழகை புகைப்படம் எடுக்கவும், ரசிக்கும் விதமாகவும் 5 இடங்களில் 'வியூ பாய்ண்ட்' அமைக் கப்படுகிறது.
தற்போது இங்கு சுமார் 65 சதவீத பணிகள் முடிவடை ந்துள்ள நிலையில் கிரானைட் ஒட்டும் பணி, மின் கம்பங்கள் அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகள் வருகிற 3 மாதங்களுக்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்பட உள்ளதாக ஒப்பந்ததாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தாமிரபரணி நதியின் தூய்மையை பாதுகாக்க பல்வேறு பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற் கொண்டு வரும் நிலையில் தற்போது அதன் அழகை ரசிக்கும் விதத்தில் நடை பெற்று வரும் இந்த பணியை பொதுமக்கள் பயனுள்ள தாகவே கருதுகின்றனர்.
அதே நேரத்தில் இரவு நேரங்களில் அந்த நடை பாதைகளை மது பிரியர்கள் ஆக்கிரமித்து மது குடிப்பதை தவிர்க்கும் விதமாக கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் காவலாளிகள் மேற்பார்வை யில் காவல் பணிகள் தொடரும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழகம் மற்றும் கேரளாவின் பல பகுதிகளை இணைத்து பிலாஸ்பூர் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
- பராமரிப்பு பணிகள் முடித்து விட்டு நெல்லை பணிமனையில் 3 நாட்கள் ரெயில் காலியாக நிறுத்தி வைக்கப்படுகிறது.
நெல்லை:
நெல்லையில் இருந்து மத்திய பிரதேச மாநிலம் பிலாஸ்பூருக்கு(வண்டி எண்: 22620) வாராந்திர ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
பிலாஸ்பூர் ரெயில்
இந்த ரெயிலானது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.25 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு நாகர்கோவில், திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், பாலக்காடு, கோவை, சேலம், ஜோலார்பேட்டை, ரேணிகுண்டா வழியாக தமிழகம் மற்றும் கேரளாவின் பல பகுதிகளை இணைத்து திங்கட்கிழமை இரவில் பிலாஸ்பூருக்கு சென்றடையும் வகையில் இயக்கப்பட்டு வருகிறது.
மறுமார்க்கமாக இந்த ரெயிலானது (வண்டி எண்: 22619) ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் பிலாஸ்பூரில் இருந்து காலையில் புறப்பட்டு அதே வழித்தடங்களின் வழியாக வியாழக்கிழமை அதிகாலையில் 3.30 மணிக்கு நெல்லைக்கு வந்தடைகிறது. இந்த ரெயிலில் ஒரு 2 அடுக்கு ஏசி பெட்டியும், 5 மூன்றடுக்கு ஏசி பெட்டிகளும், 9 படுக்கை வசதி பெட்டிகளும், 4 முன்பதிவு இல்லாத பெட்டிகளும், 2 லக்கேஜ் மற்றும் மேலாளர் பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளன.
மேட்டுப்பாளையம் சிறப்பு ரெயில்
இதில் படுக்கை வசதி பெட்டியில் மொத்தம் 720 இருக்கைகள் உள்ளன. அதேபோல் 4 முன்பதிவு இல்லாத பெட்டியில் சுமார் 500 பேர் வரை பயணிக்கலாம். மூன்றடுக்கு ஏசி பட்டியில் மொத்தம் 360 பேர் வரை பயணிக்கலாம். 2 அடுக்கு ஏசி பெட்டியில் 52 பேர் பயணம் செய்யலாம். மொத்தம் இந்த ெரயிலில் சுமார் 1,500 பேருக்கும் மேலானவர்கள் இதில் பயணம் செய்ய முடியும்.
இந்த ரெயில் சேவையானது வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நெல்லை பணிமனையில் பராமரிப்பு பணிகள் முடித்து விட்டு காலியாக நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்த காலி ரெயில் பெட்டிகளை கொண்டு தான் கடந்த மாதம் வரை நெல்லை-மேட்டுப்பாளையம் இடையே சிறப்பு ெரயில் இயக்கப்பட்டு வந்தது. தற்போது நேற்று முன்தினம் முதல் மேட்டுப்பாளையம் ரெயில் சேவை வியாழக்கிழமை புறப்படுவதற்கு பதிலாக, ஞாயிற்றுக்கிழமைகளில் புறப்பட்டு செல்கிறது.
காலி பெட்டிகள்
இதன் காரணமாக இந்த வாரத்தில் இருந்து இந்த ெரயிலானது 3 நாட்கள் காலியாக நிறுத்த வைக்கப்பட்டிருக்கும் இந்த ரெயில் பெட்டிகளை கொண்டு நெல்லையில் இருந்து ஒவ்வொரு வியாழக்கிழமையும், தென்காசி, மதுரை, கரூர், நாமக்கல், சேலம், ஓசூர் வழியாக பெங்களூருக்கு புதிய வாராந்திர சிறப்பு ெரயில் சேவையை தொடங்க வேண்டும் என்று தென் மாவட்ட ரெயில் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
அதாவது ஒவ்வொரு வியாழக்கிழமையும் மாலை 5 மணிக்கு நெல்லை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்குள் செல்லுமாறும், மறு மார்க்கமாக வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்பட்டு நெல்லைக்கு சனிக்கிழமை காலை 9 மணிக்கு வந்தடையும் வகையில் இந்த ெரயில் சேவையை இயக்கலாம்.
மேலும் சோதனை அடிப்படையில் இந்த சிறப்பு ரெயிலை 3 மாதங்களுக்கு இயக்க வேண்டும் என்றும், அதன் பின்னர் பயணிகள் இடையே நல்ல வரவேற்பு இருக்கும் பட்சத்தில் தொடர்ந்து இந்த சேவைகளை இயக்க வலியுறுத்த வேண்டும் என்று பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இடிக்கப்பட்ட கோவில்களும் மீண்டும் கட்டித் தரப்படும் என்று அப்போதைய கமிஷனர் உறுதி அளித்தார்.
- பாளையங்கால்வாயில் துவைத்த துணிகளை மாநகராட்சியில் கொண்டு வந்து காண்பித்தார்.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்து முன்னணி நெல்லை மாவட்ட செயலாளர் சங்கர் தலைமையில் நிர்வாகிகள் கிருஷ்ணகுமார், பிரம்ம நாயகம் மற்றும் பலர் திரண்டு வந்து அளித்த மனுவில், நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இடிக்கப்பட்ட போது அங்கு இருந்த 2 விநாயகர் கோவில்களும் மீண்டும் அதே இடத்தில் கட்டித் தரப்படும் என்று அப்போதைய கமிஷனர் உறுதி அளித்தார்.
இதனை மீண்டும் கட்டித்தருமாறு கடந்த ஏப்ரல் மாதம் முதல் தொடர்ந்து மனு அளித்து வருகிறோம். ஆனால் இதுவரை கட்டப்படவில்லை. அதனை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். அப்போது அவர்களுடன் வந்த நிர்வாகி ஒருவர் துதிக்கையுடன் கூடிய விநாயகர் வேடத்தில் வந்திருந்தார்.
தொடர்ந்து நெல்லையைச் சேர்ந்த சிராஜ் என்ற சமூக ஆர்வலர் பாளையங்கால் வாயை தூய்மைப்படுத்தி பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மனு அளித்தார். முன்னதாக அவர் 10,15 வருடங்களுக்கு முன்பாக இருந்த பாளையங்கால்வாயில் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் எவ்வாறு தங்களது உடைமைகளையும், தங்களையும் அந்த கால்வாயின் நீரினால் தூய்மைப்படுத்தி கொண்டார்களோ, அதனைப் போன்றே பாளை முருகன் குறிச்சி பகுதியில் உள்ள பாளையங்கால்வாயில் துணிகளை துவைத்து, அந்த துணிகளின் நிலையை மாநகராட்சியில் கொண்டு வந்து காண்பித்தார். தொடர்ந்து அவர் பாளையங்கால்வாயை சுத்தப்படுத்திடவும், நெல்லையில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை மிக விரைந்து நடத்தி முடித்திட வேண்டியும் மனு அளித்தார்.
- மாணவர்கள், பெண் தொழில் முனைவோர்கள் தங்களது தொழில் உக்தி யோசனைகளை வழங்கவேண்டும்.
- போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நெல்லை:
நெல்லை வண்ணார்பேட்டை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் தொழில் முனைவோருக்கான எம்.எஸ்.எம்.இ. இன்குபேஷன் மையம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் தொழில் முனை வோர்களுக்கு ஆலோசனைகள் அளிக்கப்ப டுகின்றன.
புதிய கட்டிட திறப்பு விழா
இந்நிலையில் கல்லூரியில் நடந்த எம்.எஸ்.எம்.இ. மைய புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. இதில் ஸ்காட் கல்வி குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு அறிவுறுத்தலின் படி கல்லூரி முதல்வர் வேல்முருகன் கலந்து கொண்டார். விழாவில் சென்னை தலைமையக எம்.எஸ்.எம்.இ. இணை இயக்குநர் சுரேஷ்பாபு, உதவி இயக்குநர்கள் (நெல்லை) சிமியோன், ஜெரினாபபி மற்றும் அதிகாரி கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற னர்.
நிகழ்ச்சியில் சுரேஷ்பாபு பேசுகையில், எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் எம்.எஸ்.எம்.இ. செயல்பாடுகள் நன்றாக உள்ளது. மாணவர்கள், பெண் தொழில் முனைவோர்கள் தங்களது தொழில் உக்தி யோசனைகளை வழங்கவேண்டும் என்றார்.
கல்லூரி பொதுமேலாளர் ஜெயக்குமார் பேசுகையில், மத்திய, மாநில அரசுகள் ஆதரவுடன் இன்குபேஷன் மையத்தில் பல்வேறு வசதிகள் செய்யப்பட உள்ளன. மாணவர்கள் தங்களது திறன்மிக்க யோசனைகளை வழங்க முன்வர வேண்டும் என்றார். தொடர்ந்து மாணவர்களுடன் கலந்துரை யாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவர்களுக்கு ஆலோசனை கள் வழங்கப்பட்டன.
மேலும் மத்திய அரசு நடத்தும் ஹேக்கத்தான் போட்டிகள், தமிழக அரசின் ஸ்டார்ட்-அப் போட்டிகளில் எப்.எக்ஸ். கல்லூரி சார்பில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இதில் பொதுமேலாளர் ஜெயக்குமார், கிருஷ்ணகுமார், கல்லூரி முதல்வர் வேல்முருகன், இயக்குநர் ஜான்கென்னடி, தொழில் முனைவோர்துறை இயக்குநர் லூர்தஸ் பூபாலராயன், எம்.எஸ்.எம்.இ. இன்குபேஷன் மைய தலைவர் லக்ஷ்மி நாராயணன் மற்றும் மதுரை எம்.எஸ்.எம்.இ. உதவி இயக்குநர்கள் உமா சந்திரிகா, ஜெயசெல்வம், தமிழ்நாடு ஸ்டார்ட்-அப் மிஷன் திட்ட தலைவர் ராகுல், பயிற்றுவிப்பாளர்கள் ராஜ், முத்துக்குமார் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பேராசிரியர் பிரியா நன்றி கூறினார்.







