என் மலர்
- தென்காசி மாவட்டத்தில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுகிறதா என்பது குறித்து தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- கேரள லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்த மாரிமுத்துவை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி:
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் தென்காசி மாவட்டத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறதா என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தென்காசி ஒப்பனை விநாயகர் கோவில் அருகே கேரளாவில் இருந்து கொண்டு வந்த லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்த இலத்தூர் கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து (வயது 53) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.3,840 மதிப்பிலான 96 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
- ஒரு கிலோ தக்காளி ரூ.150 வரை சந்தைகளில் விற்கப்பட்டு வருகிறது.
- தென்காசி, சங்கரன்கோவில் உழவர் சந்தைகளில் தக்காளி வரத்தினை அதிகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
தென்காசி:
தக்காளி விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ள நிலையில் ஒரு கிலோ தக்காளி ரூ.150 வரை பொது சந்தைகளில் விற்கப்பட்டு வருகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு நியாய விலையில் தக்காளி கிடைக்கும் வகையிலும், தக்காளி பயிர் செய்த விவசாயிகளுக்கு இடைத்தரகர் இன்றி நியாயமான விலை கிடைக்கும் வகையிலும் உழவர் சந்தைகளில் தக்காளி விற்பனையை அதிகப்படுத்தி விலையை கண்காணிக்க தென்காசி மாவட்ட கலெக்டர் தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண் வணிகத்துறைக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து தென்காசி மற்றும் சங்கரன்கோவில் உழவர் சந்தைகளில் தக்காளி வரத்தினை அதிகப்படுத்தவும், நியாயமான விலையில் தக்காளி கிடைக்கவும் அனைத்து வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்கள் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையினரோடு இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு அரசின் உன்னத திட்டமான உழவர் சந்தைகளை தக்காளி விவசாயிகளும், பொதுமக்களும் பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என தென்காசி, மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- குற்றாலம் அருவிகளில் குளிக்க சீசன் காலத்தின்போது லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வருவார்கள்.
- பாலருவியானது செங்கோட்டை, புளியரை, கோட்டைவாசல் கடந்து ஆரியங்காவு சோதனை சாவடி அருகில் அமைந்துள்ளது.
செங்கோட்டை:
தமிழகம் மற்றும் கேரளாவுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கும் எல்லைப் பகுதி மேற்குத்தொடர்ச்சி மலையாகும். இதில் இருந்து உற்பத்தியாகும் குற்றாலம் அருவிகளில் குளிக்க லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஒவ்வொரு சீசன் காலத்தின்போதும் குடும்பத்துடன் வருவார்கள்.
சீசன் குறையும் போது தமிழக -கேரளா எல்லை பகுதியில் அமைந்துள்ள பாலருவிக்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் படை யெடுக்கும். இந்த பாலருவி யானது செங்கோட்டை, புளியரை, கோட்டைவாசல் கடந்து ஆரியங்காவு சோதனை சாவடி அருகில் அமைந்துள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் சுமார் 300 அடி உயரம் உள்ள இந்த நீர்வீழ்ச்சியில் தொடர் மழை யால் காய்ச்சிய வெள்ளி யை உருக்கியது போல் விழும் நீர், பார்போரை பிரமிக்க வைக்கும்.
செங்கோட்டையில் இருந்து பாலருவிக்கு சுமார் 30 கிலோமீட்டர் தூரம் உள்ளது. தற்போது தென்மேற்கு பருவ மழை காலதாமதம் உள்ளிட்ட பல காரணங்களால் கடந்த மாத இறுதியில் மக்கள் பயன் பாட்டிற்கு திறக்கப்பட வேண்டிய பாலருவி இதுவரை திறக்கப்பட வில்லை. இந்நிலையில் தற்போது பாலருவியில் குளிக்க சுற்றுலா பயணி களுக்கு கேரளா அரசு அனுமதியளி வழங்கி உள்ளது. இது சுற்றுலா பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- நாய்கள், காட்டுப்பன்றிகள் இறந்து கிடந்த நபரின் உடலை கடித்திருந்தது.
- இறந்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி:
குற்றாலத்தில் மரங்களுக்கு இடையில் அழுகிய நிலையில் 45 வயது முதல் 50 வயது வரை மதிக்கத்தக்க ஆண் நபர் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த குற்றாலம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
அப்போது அந்த நபரின் உடலை நாய்கள், காட்டுப்பன்றிகள் கடித்திருந்தது. இதையடுத்து அவரது உடலை போலீசார் மீட்டு நெல்லை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த நபர் இறந்து 4 நாட்களுக்கு மேல் ஆகியிருக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த நபரின் முழு தகவல் குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
- கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த சில நாட்களாக சாலையில் தண்ணீர் வீணாகி செல்கிறது.
- குழாய் உடைப்பால் தேவையான அளவு தண்ணீர் கிடைக்காமல் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
செங்கோட்டை:
செங்கோட்டையில் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் பல்வேறு கிராமங்கள் பயன்பெற்று வருகிறது. இந்நிலையில் மேலபஜார் சாலையையொட்டி கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த சில நாட்களாக சாலையில் தண்ணீர் வீணாகி செல்கிறது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
அதேபோல் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருவதாகவும், இதனால் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெரும் கிராமங்கள், நகர்புற பகுதிகளுக்கு தேவையான அளவு தண்ணீர் கிடைக்காமல் மக்கள் அவதி அடைந்து வருவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றன்.
ஏற்கனவே குடிநீர் பற்றாக்குறை நிலவும் சூழ்நிலையில் தற்போது பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி வருவதாகவும், எனவே சம்பந்தபட்ட அரசு அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு உடைப்பு ஏற்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு குடிநீர் குழாயினை சரி செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வளர்மதி தென்காசி அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.
- ஜெயபிரகாஷ் நேற்று இரவு தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.
தென்காசி:
தென்காசி அருகே உள்ள குத்துக்கல்வலசை பாரதி நகர் 4-வது தெருவில் வசித்து வருபவர் ஜெயபிரகாஷ் (வயது 39). இவருக்கு திருமணமாகி வளர்மதி என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர்.
வளர்மதி தென்காசி அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவில் ஜெயபிரகாஷ் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு சரியாக தூக்கம் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் எழுந்து வீட்டின் முன் பகுதியில் இருந்த பால்கனியில் அமர்ந்துள்ளார். காலையில் வீட்டில் இருந்தவர்கள் எழுந்து பார்த்தபோது ஜெயபிரகாஷ் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.
தகவல் அறிந்து தென்காசி போலீசார் அங்கு விரைந்து சென்று, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது சாவு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தென்காசி அரசு மருத்துவமனை டாக்டரின் கணவர் உடல்நலக்குறைவால் இறந்தாரா?, அல்லது அவரது சாவுக்கு காரணம் என்ன? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சி.சி.டி.வி. காமிராக்கள், நீரில் தவறி விழுந்தவரை மீட்கும் உபகரணங்கள் போதுமான அளவில் உள்ளதா? என்பது குறித்து எஸ்.பி. ஆய்வு மேற்கொண்டார்.
- போக்குவரத்து முறையாக செல்கிறதா என்பது குறித்தும் போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் ஆய்வு செய்தார்.
தென்காசி:
தென்காசி மாவட்டம், குற்றாலம் சீசனை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வரும் நிலையில் அவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது சி.சி.டி.வி. காமிராக்கள், நீரில் தவறி விழுந்தவரை மீட்கும் உபகரணங்கள் போதுமான அளவில் உள்ளதா? அவை சரியான நிலையில் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்தார். மேலும் ஒலிபெருக்கியில் தொடர் விழிப்புணர்வு, ஆண் மற்றும் பெண் காவலர்கள் போதுமான அளவில் பணியில் உள்ளனரா, போக்குவரத்து முறையாக செல்கிறதா என்பது குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து அருவிகளில் குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் அனைவரையும் பாதுகாப்பாக குளித்து மகிழ்ந்து செல்லுமாறும் அறிவுறுத்தினார்.
- விழாவிற்கு மாணவர்களின் பெற்றோர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டனர்.
- மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என அனைவரும் மரங்களை பாதுகாப்போம் என உறுதிமொழி ஏற்றனர்.
தென்காசி:
செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் வனப்பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் இத்தினம் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் மாணவி தஸ்னிமா வரவேற்று பேசினார். விழாவிற்கு பெற்றோர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டனர். பள்ளியின் தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி, பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் மாணவ-மாணவிகளுக்கு மரங்கள் வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து எடுத்து கூறினார். மாணவிகள் மீனா சுல்பியா மற்றும் ஹன்சுல் லுபைனா மரங்களை பேணி பாதுகாப்பதன் அவசியத்தை எடுத்துரைத்தனர்.
மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என அனைவரும் மரங்களை பாதுகாப்போம் என உறுதிமொழி ஏற்றனர். மேலும் மாணவ-மாணவிகள் பல்வேறு வகையான மரக்கன்றுகளை பள்ளிக்கு கொண்டு வந்திருந்தனர் . பள்ளியின் தாளாளர், முதல்வர், பெற்றோர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் இணைந்து மரக்கன்றுகளை பள்ளி வளாகத்தில் நட்டனர். மாணவி ஹனா பாத்திமா நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் துணை முதல்வர் அருள் வர்ஷலா செய்திருந்தார்.
- வக்கீல் ஆபத்துக்காத்தான் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ஷெரிப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செங்கோட்டை:
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவராக, செங்கோட்டையை சேந்த முன்னாள் நகர தி.மு.க. செயலாளரான முத்தையா தேவரின் மகனும், கலைஞர் தமிழ்ச்சங்க செயலாளர் வக்கீல் ஆபத்துக்காத்தான் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் வாகை சந்திரசேகர் அறிவித்தார். இதனைத்தொடர்ந்து அவர் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ஷெரிப், தென்காசி தெற்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் மாரியப்பன், செங்கோட்டை நகர துணைச்செயலாளர் ஜோதிமணி, பெர்னாட்ஷா, நாட்டாமை ஆறுமுகம், வேலுமணி, ஓம் சக்தி அய்யப்பன், ராமகிருஷ்ணன், திருமால், டைல்ஸ் மாரியப்பன், ஆசிரியர் மணிகண்டன், ரமேஷ், வேல் சாமி, கண்ணன், பட்டையா, அண்ணாதுரை, நடராஜன், சரவணன், கணேசன், ரெங்கன், செங்கோட்டை வார்டு நிர்வாகிகள், கலைஞர் தமிழ்ச்சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- போட்டிகளில் 6 முதல் பிளஸ்-2 வரை பயிலும் மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.
- வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசுத் தொகை ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டிகள் தென்காசி இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாளை மறுநாள்( செவ்வாய்கிழமை) காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பயிலும் மாணவர்கள் கலந்து கொள்ளலாம். போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பெற உள்ளது. ஒரு போட்டிக்கு ஒரு மாணவர் வீதம் பங்கு பெறலாம்.
போட்டிக்கான தலைப்புகள்.
கட்டுரை போட்டி - தமிழ் இலக்கிய வரலாற்றில் முத்தமிழறிஞர் கலைஞரின் சுவடுகள்.
பேச்சுப் போட்டி - தமிழ்த் திரை உலகத்தை புரட்டி ப்போட்ட முத்தமிழறிஞர் கலைஞரின் எழுதுகோல், கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசுத் தொகை ரூ.10 ஆயிரம், 2-வது பரிசு ரூ.7 ஆயிரம்,3-வது பரிசு ரூ.5 ஆயிரம் என பரிசுதொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.
போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் தங்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் பரிந்துரை கடிதம் பெற்று போட்டி நடைபெறும் நாளன்று நேரில் அளிக்க வேண்டும். மேலும் விவரங்க ளுக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மண்டலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ, 0462- 2502521 என்ற தொலைபேசி எண்ணி லோ தொடர்பு கொள்ளலாம்.இந்த போட்டிகளில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- முகாமில் மகப்பேறு மருத்துவம், சித்த மருத்துவம் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.
- கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஸ்கேன், இ.சி.ஜி. போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
செங்கோட்டை:
செங்கோட்டை அருகே புளியரை அரசு ஆரம்ப சுகா தார நிலையத்திற்குட்பட்ட தெற்குமேடு ஊராட்சி அரசு நடுநிலைப்பள்ளியில் வளாகத்தில் தென்காசி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் பி.ஆர்.முரளி சங்கர் அறிவுறு த்தலின்படி தமிழக அரசின் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு செங்கோட்டை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் திருமலைச்செல்வி மற்றும் தெற்குமேடு ஊராட்சி மன்ற தலைவர் அனு கண்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர்.வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் தமிழ்ச்செல்வி மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பி னா்கள் முருகன் வசந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் மகப்பேறு மருத்துவம், பொது மருத்துவம், குழந்தைகள் நலமருத்துவம் காது, மூக்கு, தொண்டை மருத்துவம், பல்மருத்துவம், தோல் மருத்துவம், எலும்பு மருத்துவம், மனநல மருத்துவம், கண் மற்றும் சித்த மருத்துவம் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.
மேலும் ரத்த பரிசோதனை, சளி பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோ தனை, கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஸ்கேன், பரிசோதனை மற்றும் இ.சி.ஜி. போன்ற ஆய்வு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த முகாமில் புளியரை மருத்துவ அலுவலர் மருத்துவர் மணிபிரசாத் மற்றும் ஏனைய மருத்துவ அலுவலர்கள் மற்றும் மருத்து வமல்லா மேற் பார்வையாளர் சீதாராமன் ஆகியோர் சிகிச்சை அளித்தனர்.
சுகாதார ஆய்வாளர்கள் மாரியப்பன்,ராஜேந்திரன், வெங்கடேசன், செந்தில்குமார்,கல்யாண சுந்தரம் ஆகியோர் ஏற்பாடுகள் செய்திருந்தனர். தெற்குமேடு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
செங்கோட்டை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கதிரவன் நன்றி கூறினார்.இந்த மருத்துவ முகாமில் தெற்குமேடு மற்றும் புளியரை அதன் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை மற்றும் மருந்து மாத்திரைகள், மருத்துவ ஆலோசனைகள் பெற்று சென்றனர்.
- அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது தடை விதிப்பதும், பின்னர் தண்ணீரின் அளவு சீராகும் போது அனுமதிப்பதும் தொடர்ந்து வருகிறது.
- நேற்று நள்ளிரவு முதல் பெய்து வந்த சாரல் மழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தென்காசி:
குற்றால சீசன் இந்த ஆண்டு தாமதாக தொடங்கிய நிலையில், தென்காசி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. அதேநேரம் சீசன் தொடங்கி இருப்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் கணிசமாக உயர்ந்து வந்தது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைகளின் உட்பகுதிகளில் பெய்து வரும் மழையினால் அருவிகளில் சில நேரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. அப்போது சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை விதிப்பதும், பின்னர் தண்ணீரின் அளவு சீராகும் போது அனுமதிப்பதும் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் பெய்து வந்த சாரல் மழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து இன்று காலை முதல் சுற்றுலா பயணிகள் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் கேரளா மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து குற்றாலம் வந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். பின்னர் அவர்கள் பழைய குற்றால அருவிக்கு சென்று குளித்து மகிழ்ந்தனர். நேரம் செல்ல செல்ல பழைய குற்றாலத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.







