என் மலர்
- முதலில் ஆடிய லக்னோ அணி 3 விக்கெட்டுக்கு 177 ரன்கள் குவித்தது.
- அந்த அணியின் மார்கஸ் ஸ்டோய்னிஸ் 47 பந்தில் 4 பவுண்டரி, 8 சிக்சர்களுடன் 89 ரன்கள் விளாசினார்.
லக்னோ:
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று லக்னோவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 177 ரன்கள் சேர்த்தது. கேப்டன் குருணால் பாண்டியா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 49 ரன்கள் சேர்த்தார்.
மும்பை இந்தியன்ஸ் சார்பில் ஜேசன் பெஹ்ரன்டாப் 2 விக்கெட்டும், பியூஷ் சாவ்லா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 178 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான இஷான் கிஷன், கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக ஆடினர். முதல் விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்த நிலையில் ரோகித் சர்மா 37 ரன்னில் அவுட்டானார்.
இஷான் கிஷன் அரை சதமடித்து 59 ரன்னில் வெளியேறினார். சூர்யகுமார் யாதவ் 7 ரன்னிலும், வதேரா 16 ரன்னிலும் அவுட்டாகினர்.
கடைசி கட்டத்தில் டிம் டேவிட் அதிரடியில் மிரட்டினார். அவர் 32 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில், மும்பை அணி 172 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் லக்னோ அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
லக்னோ அணி சார்பில் ரவி பிஷ்னோய், யாஷ் தாக்குர் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
- உலகிலேயே அதிகமான ரெயில் நிலையங்களை இந்தியா கொண்டுள்ளது.
- அனைத்து ரெயில் நிலையங்களிலும் ஒரே மாதிரியான பெயர் பலகைகள் வைக்கப்படும் என்றார் ரெயில்வே மந்திரி.
புதுடெல்லி:
நாடு முழுவதும் அனைத்து ரெயில் நிலையங்களிலும் பெயர் பலகைகள் மற்றும் அடையாள சின்னங்களை ஒரே மாதிரியாக வைப்பது தொடர்பான புத்தக கையேட்டை ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
உலகிலேயே அதிகமான ரெயில் நிலையங்களை இந்தியா கொண்டுள்ளது. பெண்கள், முதியோர், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் என அனைத்து தரப்பினரும் எளிதில் அடையாளம் காணும் வகையில், பெயர் பலகைகளையும், அடையாள சின்னங்களையும் ஒரே மாதிரி இடம்பெற செய்யவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
வண்ணம், எழுத்தின் அளவு, உருவங்கள் என அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்கும். மாற்றுத்திறனாளி பயணிகளுக்கு வசதியான அடையாள சின்னங்களை வைப்போம். எளிமையான வார்த்தைகள், தெளிவாக தெரியும் நிறம் ஆகியவற்றை பின்பற்றுவோம். மூவர்ணத்தின் பின்னணியில் ரெயில் நிலைய பெயரை குறிப்பிடும் புதிய பலகைகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன என தெரிவித்தார்.
- துருக்கி அதிபர் தேர்தலில் எந்த கட்சியும் பெரும்பான்மை பெறவில்லை.
- இதனால் வரும் 28-ம் தேதி அதிபர் தேர்தலின் 2-வது சுற்று நடைபெற உள்ளது.
அங்காரா:
துருக்கியில் அதிபர் மற்றும் பாராளுமன்ற தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இதில் தற்போதைய அதிபர் எர்டோகனும், எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் கெமால் கிலிக்டரோக்லுவும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் மொத்தம் 91 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
துருக்கியை பொறுத்தவரை அதிபர் தேர்தலில் வெற்றி பெற 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற வேண்டும். இதில் அதிபர் எர்டோகன் சுமார் 49.50 சதவீதம் வாக்குகளைப் பெற்றுள்ளார். எதிர்க்கட்சி சார்பில் போட்டியிட்ட கெமால் கிலிக்டரோக்லு 44.79 சதவீதம் வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இந்நிலையில், அதிபர் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் வரும் 28-ம் தேதி அதிபர் தேர்தலின் 2-வது சுற்று நடைபெறும் என அந்நாட்டின் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
- இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
- பெண்கள் ஒற்றையர் பிரிவில் ரிபாகினா காலிறுதிக்கு முன்னேறினார்.
ரோம்:
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற 3-வது சுற்றில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, செக் குடியரசு வீராங்கனை மார்கெடா வாண்ட்ரூசோவாவுடன் மோதினார்.
இந்தப் போட்டியில் ரிபாகினா 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
- வெலிங்டனில் 4 மாடிகள் கொண்ட ஹாஸ்டல் செயல்பட்டு வருகிறது.
- இந்த ஹாஸ்டலில் இன்று திடீரென தீ பற்றியது.
வெலிங்டன்:
நியூசிலாந்து தலைநகரம் வெலிங்டனில் 4 மாடிகள் கொண்ட ஹாஸ்டல் அமைந்துள்ளது. இந்த ஹாஸ்டலில் இன்று திடீரென தீ பற்றியது.
இந்த தீ விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது. மேலும் பலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை உயரலாம் என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.
பிரதம மந்திரி கிறிஸ் ஹாப்கின்ஸ் தீ விபத்தில் பலியானோருக்கு இரங்கல் தெரிவித்தார். தகவலறிந்து வந்த போலீசார் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹாஸ்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 பேர் பலியானது அப்பகுதியில் சோகட்தை ஏற்படுத்தியுள்ளது.
- திரிணாமுல் காங்கிரசின் கணக்கீட்டின்படி காங்கிரஸ் 200 இடங்களில் வலுவாக உள்ளது.
- எந்தப் பிராந்தியத்திலும் யார் வலுவாக இருந்தாலும் ஆதரிக்கப்பட வேண்டும் என்றார் மம்தா பானர்ஜி.
கொல்கத்தா:
சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. 36 ஆண்டுக்கு பின் அங்கு 137 இடங்களைக் கைப்பற்றி காங்கிரஸ் கட்சி பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்காள முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி வலுவாக உள்ள இடங்களில் அவர்களை மாநில கட்சிகள் ஆதரிப்பதில் தவறில்லை. அதேபோல் மாநில கட்சிகள் வலுவாக உள்ள இடங்களில் காங்கிரஸ் கட்சியும் ஆதரவு அளிக்க வேண்டும்.
கர்நாடகாவில் திரிணாமுல் காங்கிரஸ் உங்களை ஆதரிப்பது போலவும், வங்காளத்தில் எனக்கு எதிராகப் போவது போலவும் கொள்கை செல்ல முடியாது. நீங்கள் ஏதாவது நல்லதை அடைய விரும்பினால், சில பகுதிகளில் தியாகம் செய்ய வேண்டும்.
திரிணாமுல் காங்கிரசின் கணக்கீட்டின்படி காங்கிரஸ் 200 இடங்களில் வலுவாக உள்ளது. எந்தப் பிராந்தியத்திலும் யார் வலுவாக இருந்தாலும் ஆதரிக்கப்பட வேண்டும். உதாரணமாக, டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி, மேற்கு வங்காளத்தில் டிஎம்சி, பீகாரில் ஜேடியு-ஆர்ஜேடி கூட்டணி மற்றும் பிறராலும் ஆதரிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
- உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பாரீஸ் நகருக்குச் சென்று அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்தார்.
- அதன்பின், உக்ரைனுக்கு வேண்டிய ஆயுதங்களை வழங்கும் அறிவிப்பை பிரான்ஸ் அதிபர் வெளியிட்டார்.
பாரீஸ்:
ரஷியாவின் ஆதிக்கத்தில் இருந்து மக்களைக் காப்பாற்றும் நோக்கில் பல்வேறு நாடுகளிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உதவிகளை கோரி வருகிறார். இதன் ஒரு பகுதியாக, ஐரோப்பிய யூனியனில் உள்ள பல்வேறு பெரிய நாடுகளுக்கு அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இதற்கிடையே, பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகருக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சென்றார். அவர், அந்நாட்டு அதிபர் இம்மானுவல் மேக்ரானை எலிசீ அரண்மனையில் சந்தித்துப் பேசினார். அதன்பின் இரவு விருந்திலும் கலந்து கொண்டார்.
இந்நிலையில், உக்ரைனுக்கு வேண்டிய ஆயுதங்களை வழங்கும் அறிவிப்பை பிரான்ஸ் அதிபர் வெளியிட்டார். உக்ரைன் நாட்டுக்கு ஆதரவாக போர் புரிவதற்காக, கூடுதலாக இலகுரக பீரங்கிகள் மற்றும் கவச வாகனங்களை அனுப்ப பிரான்ஸ் அரசு முடிவு செய்து உள்ளது. இவற்றில், ஏ.எம்.எக்ஸ்.-10ஆர்.சி. ரக பீரங்கிகளும் அடங்கும். அவை போர்க்களத்தில் விரைவாக இயங்கக்கூடியவை. ஓரிடத்தில் இருந்து தனது நிலையை எளிதில் மாற்றும் திறன் பெற்றவை. உக்ரைனிய படைகளுக்கு அவற்றை எப்படி இயக்க வேண்டும் என்பதற்கான பயிற்சிகளையும் பிரான்ஸ் வழங்க இருக்கிறது.
இரு நாட்டு தலைவர்களும் 3 மணிநேர பேச்சுவார்த்தைக்கு பின் அளித்த கூட்டறிக்கையில் மேற்கூறிய தகவலை வெளியிட்டனர்.
உக்ரைனுக்கு அரசியல், நிதி, மனிதநேய மற்றும் ராணுவ உதவிகளை எவ்வளவு காலத்திற்கு தேவைப்படுமோ அதுவரையில் பிரான்ஸ் அரசு தொடர்ந்து வழங்கி ஆதரவளிக்கும் என மேக்ரான் மீண்டும் வலியுறுத்தினார்.
- இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீரர் கார்லோஸ் அல்காரஸ் 2வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
ரோம்:
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 2-வது சுற்றில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், ஹங்கேரி வீரர் பேபியன் மரோசனுடன் மோதினார்.
இந்தப் போட்டியில் பேபியன் 6-3, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்றார். உலகின் நம்பர் 2 வீரரான கார்லோஸ் அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- முதலில் ஆடிய குஜராத் 9 விக்கெட்டுக்கு 188 ரன்களை குவித்தது.
- தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில் அதிரடியாக ஆடி சதமடித்தார்.
அகமதாபாத்:
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச முடிவு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 188 ரன்களை குவித்தது.
தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய ஷுப்மன் கில் 58 பந்துகளில் 13 பவுண்டரிகள், 1 சிக்சர் என 101 ரன்களை விளாசினார். சாய் சுதர்சன் 36 பந்துகளில் 6 பவுண்டரிகள், 1 சிக்சர் அடித்து 47 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஐதராபாத் சார்பில் புவனேஷ்வர் குமார் அசத்தலாக பந்து வீசி 5 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதையடுத்து, 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் களமிறங்கியது. குஜராத் அசத்தலாக பந்துவீச, முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர்.
இதனால் ஐதராபாத் அணி 59 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட் இழந்து தத்தளித்தது. கிளாசன் மட்டும் தனியாகப் போராடி அரை சதம் கடந்தார்.
8-வது விக்கெட்டுக்கு கிளாசனுடன் புவனேஷ்வர் குமார் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடியது. பின்னர் கிளாசன் பவுண்டரி, சிக்சர்களை விளாசினார். கிளாசன் 64 ரன்னில் அவுட்டானார். புவனேஷ்வர் குமார் 27 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், ஐதராபாத் அணி 154 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 34 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது. அத்துடன் பிளே ஆப் சுற்றுக்குள் முதல் அணியாக நுழைந்தது.
குஜராத் சார்பில் முகமது ஷமி, மோகித் சர்மா ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.







