என் மலர்
- தமிழகத்தில் கட்டுப்பாடற்ற சாராய விற்பனையும், கஞ்சா விற்பனையும் பெருகி இருக்கிறது.
- அரசு எந்திரம் ஒட்டுமொத்தமாக செயலிழந்து கிடக்கிறது.
சென்னை :
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் அருந்தியதால் பலர் உயிரிழந்தும், 30-க்கும் மேற்பட்டவர்கள் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்றும் வருகின்றனர். உயிரிழப்புகள் மேலும் அதிகரித்து வருவது கவலைக்குரியது.
'டாஸ்மாக்' சாராயக் கடைகள் மூலம் ஒரு தலைமுறையையே குடிக்கு அடிமையாக்கியதோடு மட்டுமல்லாமல் இன்று கள்ளச்சாராய விற்பனையையும் கட்டுப்படுத்த இயலாமல் செயலிழந்து நிற்கிறது திறனற்ற தி.மு.க. அரசு. போலீஸ்துறை அதிகாரிகளை பலிகடாவாக்கிவிட்டு முழு பிரச்சினையையும் பூசி மெழுக பார்க்கிறார் முதல்-அமைச்சர்.
தமிழகத்தில் கட்டுப்பாடற்ற சாராய விற்பனையும், கஞ்சா விற்பனையும் பெருகி இருக்கிறது. இவற்றை கட்டுப்படுத்த வேண்டிய போலீஸ்துறையின் கைகள் கட்டப்பட்டு இருக்கின்றன.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் இந்த ஆண்டு கொள்கை விளக்க அறிவிப்பில் தமிழகத்தில் கடந்த 14 ஆண்டுகளாக கள்ளச்சாராய மரணங்கள் நடைபெறவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது மீண்டும் தி.மு.க. ஆட்சியில் கள்ளச்சாராய மரணங்கள் நடந்திருப்பது தமிழக ஆட்சியாளர்களின் கையாலாகாத தனத்தையே காட்டுகிறது.
10-க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியான பின்னரே நடவடிக்கை என்ற பெயரில் நாடகமாடுகிறது. தமிழகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட கள்ளச்சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. இதன் மூலம் இத்தனை நாட்கள் இவர்கள் அனைவரும் அரசுக்கு தெரிந்தே கள்ளச்சாராயம் விற்பனை செய்துக் கொண்டிருந்தார்கள் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறது தி.மு.க. அரசு.
அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து தராமல் அலட்சியப்படுத்தி வெறும் விளம்பர ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு சட்டம்-ஒழுங்கையும் காப்பாற்ற இயலாமல் பொதுமக்களின் உயிருடன் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறது. அரசு எந்திரம் ஒட்டுமொத்தமாக செயலிழந்து கிடக்கிறது.
தமிழக அரசு உடனடியாக இந்த துயர சம்பவத்துக்கு காரணமான அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் இது போன்ற நிகழ்வுகள் தமிழகத்தில் எங்கும் நடக்காமல் இருக்க தொடர் கண்காணிப்பை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நல்ல நாளில் காங்கிரஸ் அரசு அமைக்கப்படும்.
- காங்கிரஸ் மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும்.
பெங்களூரு :
முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் உள்ள கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
எனக்கு முதல்-மந்திரி பதவி கிடைக்குமா? என்று எனக்கு தெரியாது. எனக்கு கொடுத்த பணியை நான் செய்து முடித்துள்ளேன். முதல்-மந்திரி யார் என்பதை முடிவு செய்யும் அதிகாரத்தை கட்சி மேலிடத்திற்கு வழங்கி ஒரு வரியில் தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பி வைத்துள்ளோம். நல்ல நாளில் காங்கிரஸ் அரசு அமைக்கப்படும். எனது தலைமையில் 135 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
முதல்-மந்திரி யார் என்பதை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முடிவு செய்வார். எனக்கு எத்தனை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது என்பது முக்கியம் அல்ல.
கர்நாடகத்தில் நடைபெற்ற இரட்டை என்ஜின் அரசு, ஊழல் அரசு, தவறான ஆட்சி நிர்வாகத்திற்கு எதிராக காங்கிரசுக்கு வெற்றி கிடைத்துள்ளது. தேர்தலில் காங்கிரஸ் மேற்கொண்ட பிரசாரம், ஒற்றுமையாக பணியாற்றியதை நாடு முழுவதும் உள்ள கட்சிகளின் தலைவர்கள் பாராட்டுகிறார்கள். ஆனால் நேரம் போதவில்லை. உள்ளூர் தலைவர்களின் ஒத்துழைப்பு இன்னும் அதிகமாக கிடைத்திருந்தால், இன்னும் அதிக தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்று இருக்கும்.
ஆனால் தற்போது காங்கிரசுக்கு கிடைத்துள்ள வெற்றி எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு இன்று (நேற்று) பிறந்த நாள் என்பதால் ஏராளமானோர் வாழ்த்து கூற வருகிறார்கள். தனிப்பட்ட முறையில் என்னிடம் எண்ணிக்கை (எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு) இல்லை. 135 எம்.எல்.ஏ.க்களும் ஒரே குரலில் முதல்-மந்திரி யார் என்பது குறித்து முடிவு எடுக்கும் அதிகாரத்தை கட்சி மேலிடத்திற்கு வழங்கியுள்ளனர். எனது எண்ணிக்கை என்பது 135 எம்.எல்.ஏ.க்களையும் உள்ளடக்கியது.
காங்கிரஸ் மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும். முதல்-மந்திரி, மந்திரிகள் யார் என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும். நான் தனி ஆள். இந்த தனி ஆள் தான் தைரியத்துடன் பெரும்பான்மையை உருவாக்குகிறார். அதை நான் நிரூபித்துள்ளேன். கடந்த 5 ஆண்டுகளில் என்ன நடந்தது என்பதை பகிரங்கப்படுத்த விரும்பவில்லை.
எதிர்காலத்தில் அதை பகிரங்கப்படுத்துவேன். தோற்கும்போது தைரியமான இதயத்துடன் இருக்க வேண்டும் என்றும், வெற்றி பரந்த இதயத்துடன் இருக்க வேண்டும் என்றும் மகாத்மா காந்தி கூறியுள்ளார். கூட்டணி ஆட்சியில் 15 எம்.எல்.ஏ.க்கள் கட்சியை விட்டு விலகி சென்றபோது, நான் தைரியத்தை இழக்கவில்லை. தைரியத்துடன் கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்றேன்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
- கூட்டம் முடிந்து வெளியே வந்த டி.கே.சிவக்குமார் உற்சாகத்துடன் காணப்பட்டார்.
- சித்தராமையா கொஞ்சம் இறுக்கமாக முகத்தை வைத்திருந்தார்.
பெங்களூரு :
கர்நாடக சட்டசபையை கைப்பற்றப்போவது யார் என்று கடந்த 6 மாதங்களாக நடந்து வந்த போர் முடிவுக்கு வந்துவிட்டது. காங்கிரஸ் கட்சி 135 இடங்களை கைப்பற்றி ஆட்சிக்கு வந்துவிட்டது. இருப்பினும் முதல்-மந்திரி பதவி யாருக்கு என்பதில் காங்கிரஸ் தலைவர்கள் டி.கே.சிவக்குமார், சித்தராமையா இடையே கடும் போட்டி நிலவியது. இதைத்தொடர்ந்து முதல்-மந்திரியை தேர்வு செய்ய நேற்று முன்தினம் மாலை 5.30 மணி அளவில் புதியதாக தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் பெங்களூருவில் உள்ள ஓட்டலில் நடந்தது.
இதில் முதல்-மந்திரியை தேர்வு செய்ய காங்கிரஸ் மேலிடம் அமைத்த குழுவை சேர்ந்த மராட்டிய முதல்-மந்திரி சுஷில்குமார் ஷிண்டே, அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் ஜிதேந்திர சிங், தீபக் பபாரியா ஆகியோர் தலைமையில் இந்த கூட்டம் நடந்தது. இதில் டி.கே.சிவக்குமார், ஒக்கலிக சமுதாய மக்கள் காங்கிரஸ் கட்சியை இந்த முறை ஆதரித்துள்ளனர். எனவே தனக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று கூறினார். மேலும் சித்தராமையா- டி.கே.சிவக்குமாருக்கு தலா 2½ ஆண்டுகள் முதல்-மந்திரி பதவியை பகிர்ந்தளிக்கும் காங்கிரஸ் மேலிடத்தின் முடிவுக்கு அவர் ஆட்சேபனை தெரிவித்தார்.
அதுபோல் சித்தராமையா, புதியதாக தேர்வான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பவரை முதல்-மந்திரியாக ஆக்கும்படி வலியுறுத்தினார். சட்டசபை தேர்தலில் அதிரடியான வேலைகளை செய்து காங்கிரசின் வெற்றிக்குவித்திட்டவர் டி.கே.சிவக்குமார் என்பதாலும், மக்கள் ஆதரவு பெற்ற தலைவர் சித்தராமையா என்பதாலும் யாருக்கு முதல்-மந்திரி பதவி வழங்குவது என்பதில் காங்கிரஸ் மேலிட தலைவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர்கள் ஒவ்வொரு எம்.எல்.ஏ.வாக தனித்தனியாக அழைத்து கருத்துக்களை கேட்டனர். ஆனால் எம்.எல்.ஏ.க்கள் பகிரங்கமாக கருத்து கூற விரும்பவில்லை என்றனர். இதையடுத்து அவர்களின் கருத்துக்களை காகிதங்களில் எழுதி ஒரு பெட்டியில் போட்டனர். இந்த ரகசிய ஓட்டெடுப்பால் இந்த கூட்டம் நள்ளிரவை தாண்டி நடந்தது.
பின்னர் டி.கே.சிவக்குமாரும், சித்தராமையாவும் முதல்-மந்திரி பதவி விவகாரத்தில் கட்சி மேலிடம் முடிவுக்கு கட்டுப்படுவதாக கூறினர். இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கருத்துக்கள், எம்.எல்.ஏ.க்கள் கூறிய கருத்துக்களை அறிக்கையாக தயாரித்த மேலிட பார்வையாளர்கள், அதனை நேற்று டெல்லிக்கு எடுத்துச் சென்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி,ராகுல்காந்தியிடம் ஆலோசனை நடத்தி புதிய முதல்-மந்திரியை தேர்வு பற்றி விவாதித்தனர்.
பெங்களூருவில் நடந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அதிகாலை 1.30 மணி அளவில் நிறைவடைந்தது. கூட்டம் முடிந்து வெளியே வந்த டி.கே.சிவக்குமார் உற்சாகத்துடன் காணப்பட்டார். அவர் சிரித்த முகத்துடன் புறப்பட்டு சென்றார். சித்தராமையா கொஞ்சம் இறுக்கமாக முகத்தை வைத்திருந்தார். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு பற்றி நிருபர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். ஆனால் எந்த பதிலும் கூறாமல் சித்தராமையா அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவர் சதீஷ் ஜார்கிகோளி கூறுகையில், "முதல்-மந்திரி யார் என்பது பற்றி விவாதிக்கப்பட்டது. அனைத்து எம்.எல்.ஏ.க்களிடமும் தனித்தனியாக கருத்து கேட்கப்பட்டது. அதுபோல் நானும் எனது கருத்தை மேலிட பார்வையாளர்களிடம் தெரிவித்தேன். முதல்-மந்திரி யார் என்பதை மேலிடம் இறுதி செய்யும். அனைத்து எம்.எல்.ஏ.க்களும் மந்திரி பதவியை எதிர்பார்க்கிறார்கள். அதுபோல் எனக்கும் மந்திரி பதவி மீது ஆசை உள்ளது. கட்சி மேலிடம் என்ன முடிவு எடுக்கிறதோ அதுபடி செயல்படுவோம்" என்றார்.
இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் எம்.எல்.ஏ. கூறுகையில், "முதல்-மந்திரி யார் என்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினோம். எம்.எல்.ஏ.க்களிடம் தனித்தனியாக கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளது. இந்த கருத்துக்கள் மேலிடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது. அதன்படி கட்சி மேலிடம் இறுதி முடிவு எடுக்கும்" என்றார்.
மற்றொரு எம்.எல்.ஏ.வும், காங்கிரஸ் மூத்த தலைவருமான செலுவராயசாமி நிருபர்களிடம் கூறுகையில், "அனைத்து எம்.எல்.ஏ.க்களும் மேலிட பார்வையாளர்களிடம் தங்களது கருத்துக்களை எடுத்து கூறியுள்ளனர். முதல்-மந்திரி யார் என்பது பற்றி மேலிடம் தான் முடிவு செய்ய இருக்கிறது" என்றார்.
- கர்நாடக சட்டசபை தேர்தலில் 135 இடங்களை கைப்பற்றிய காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது.
- டி.கே.சிவக்குமார் தனது 61-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
பெங்களூரு :
கர்நாடக சட்டசபை தேர்தலில் 135 இடங்களை கைப்பற்றிய காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது. தற்போது முதல்-மந்திரி பதவி யாருக்கு என்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே.சிவக்குமார், மூத்த தலைவர் சித்தராமையா ஆகியோர் இடையே கடும் போட்டி எழுந்துள்ளது. இந்த நிலையில் நேற்று டி.கே.சிவக்குமார் தனது 61-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது வீட்டுக்கு பிரபல ஜோதிடரான விஜயராஜ் குருஜி அதிகாலை 4.15 மணிக்கு வந்தார். அவரிடம் டி.கே.சிவக்குமார் ஆசிபெற்றார்.
அப்போது எதிர்காலத்தை துல்லியமாக கணிப்பதில் நிபுணரான விஜயராஜ் குருஜி, புதன் மற்றும் ஆதித்ய பஞ்சமயோகம் உங்களுக்கு இருக்கிறது. உங்கள் ஜாதகத்தில் வியாழக்கிழமை நல்ல நாள். அன்றே நல்ல வேலையை தொடங்குங்கள். (அதாவது முதல்-மந்திரியாக பொறுப்பு ஏற்றுக்கொள்ளுங்கள்) என்று கூறியுள்ளார். பின்னர் அங்கிருந்து விஜயராஜ் குருஜி புறப்பட்டு சென்றார். டி.கே.சிவக்குமாருக்கு கட்சி மேலிடம் முதல்-மந்திரி பதவி வழங்கினால், அவர் வியாழக்கிழமை முதல்-மந்திரியாக பதவி ஏற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
- அசோக் கெலாட் அரசுக்கு எதிராக கடந்த 5 நாட்களாக நடைபயணம் மேற்கொண்டார்.
- எனது போராட்டம் யாருக்கும் எதிரானது அல்ல.
ஜெய்ப்பூர் :
காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் ராஜஸ்தானில் முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கும், முன்னாள் துணை முதல்-மந்திரியும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.
முந்தைய பா.ஜ.க. அரசுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளில் தற்போதைய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டி கடந்த மாதம் ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார் சச்சின் பைலட்.
அதன் தொடர்ச்சியாக இந்த விவகாரத்தில் அசோக் கெலாட் அரசுக்கு எதிராக கடந்த 5 நாட்களாக நடைபயணம் மேற்கொண்டார். ராஜஸ்தானின் அஜ்மீரில் கடந்த 11-ந் தேதி நடைபயணத்தை தொடங்கிய அவர், தலைநகர் ஜெய்ப்பூரில் நேற்று நிறைவு செய்தார்.
ராஜஸ்தான் அரசு தேர்வாணையத்தை மறுசீரமைக்க வேண்டும், அரசு பணி தேர்வு தாள் கசிவு வழக்குகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், முந்தைய பா.ஜ.க. அரசுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் ஆகிய 3 கோரிக்கைகளை வலியுறுத்தி அவர் இந்த நடைபயணத்தை மேற்கொண்டார்.
நடைபயணத்தின் இறுதி நாளான நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சச்சின் பைலட், "எனது கோரிக்கைகள் இம்மாத இறுதிக்குள் ஏற்கப்படாவிட்டால், மாநிலம் தழுவிய மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.
நான் எந்த பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் எனது கடைசி மூச்சு வரை ராஜஸ்தான் மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்வேன் என்று உறுதி அளிக்கிறேன். யாரும் என்னை அச்சுறுத்த முடியாது.
எனது போராட்டம் யாருக்கும் எதிரானது அல்ல. ஊழலுக்கு எதிராகவும், இளைஞர்களின் நலனுக்காகவும் நடத்தப்படுகிறது" என்றார்.
- உலகம் அதிவேக மாற்றத்தை கண்டு வருகிறது.
- பாதுகாப்பு துறையும் மாறி வருகிறது.
புனே :
2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் என்று ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பேசினார்.
மராட்டிய மாநிலம் புனேயில் 'டெபன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் அட்னான்ஸ்டு டெக்னாலஜி'யின் பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கி பேசியதாவது:-
உலகம் அதிவேக மாற்றத்தை கண்டு வருகிறது. பாதுகாப்பு துறையும் மாறி வருகிறது. இந்த துறையில் பல தொழில்நுட்ப மாற்றங்களை காண்கிறோம். மேலும் பாதுகாப்பு துறையில் பல பிரச்சினைகள் எழுகின்றன. குறிப்பாக சைபர்பேஸ் மிரட்டல்கள் அதிகரிக்கின்றன.
மாற்றத்துக்கு ஏற்ப தொழில்நுட்பத்தில் நாம் முன்னேற வேண்டும். தொழில்நுட்பத்தை மேம்படுத்த முயற்சிகள் முன்வைக்கப்பட வேண்டும்.
பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்றுமதி அதிகரித்து உள்ளது. 2014-ம் ஆண்டுக்கு முன்பு இந்த துறையில் ரூ.900 கோடியாக ஏற்றுமதி இருந்தது. அது தற்போது ரூ.16 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.
பொருளாதார நிபுணர்களின் கணிப்பின்படி, 2027-ம் ஆண்டுக்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடத்தை பிடித்து சாதனை படைக்கும். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும். நமது நாடு தற்போது சுயசார்பு தன்னிறைவு பெற்று வருகிறது. உலக பொருளாதாரத்தில் இந்தியா முதல் இடத்தை பிடிப்பதையும் மறுக்க முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
- காரைக்குடி கொப்புடையம்மன் ரதோற்சவம்.
- வீரபாண்டி கவுமாரியம்மன் பொங்கல் பெருவிழா.
சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல், திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் விடையாற்று உற்சவம். காரைக்குடி கொப்புடையம்மன் ரதோற்சவம். வீரபாண்டி கவுமாரியம்மன் பொங்கல் பெருவிழா. சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை தலங்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, வைகாசி-02 (செவ்வாய்க்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: துவாதசி நள்ளிரவு 12.17 மணி வரை பிறகு திரயோதசி
நட்சத்திரம்: உத்திரட்டாதி காலை 9.02 மணி வரை பிறகு ரேவதி
யோகம்: அமிர்த/சித்தயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஜெயம்
ரிஷபம்-திடம்
மிதுனம்-துணிவு
கடகம்-நட்பு
சிம்மம்-சுகம்
கன்னி-சுபம்
துலாம்- செலவு
விருச்சிகம்-அமைதி
தனுசு- தனம்
மகரம்-ஆர்வம்
கும்பம்-தெளிவு
மீனம்-வாழ்வு
ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional







