என் மலர்tooltip icon

    செய்திகள்

    • இந்த வருடம் மக்களின் curiosity எங்கே இருந்தது என்பதை கூகுள் நமக்கு எடுத்து காட்டுகிறது
    • இந்தியர்கள் அதிகம் தேடிய படங்கள் தான் 2025-ன் உண்மையான ட்ரெண்ட் படங்கள்.

    திரையரங்குகளில் வசூல் எவ்வளவு, எத்தனை நாட்கள் ஓடியது என்ற கணக்குகளை விட, இந்த வருடம் மக்களின் curiosity எங்கே இருந்தது என்பதை கூகுள் நமக்கு எடுத்து காட்டுகிறது

    "இந்த படம் என்ன?", "யார் நடித்திருக்காங்க?", "கதை உண்மையா?" – இப்படிப் பல கேள்விகளோடே இந்தியர்கள் அதிகம் தேடிய படங்கள் தான் 2025-ன் உண்மையான ட்ரெண்ட் படங்கள்.

    2025 REWIND-ல், கலெக்சனை ஒதுக்கி விட்டு, கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்திய படங்கள் எவை?

    ஹிட்–ஃப்ளாப் எல்லையை தாண்டி மக்கள் மனசை கலக்கிய படங்கள் யாவை? இந்த லிஸ்ட், சினிமாவின் இன்னொரு பக்கமான Search Engine சொன்ன மக்கள் தீர்ப்பை வெளிப்படுத்துகிறது. அவ்வகையில் இந்த ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களின் பட்டியலை இந்த தொகுப்பில் காணலாம்

     1. சயாரா

    அஹான் பாண்டே மற்றும் அனீத் பத்தா நடிப்பில் உருவான காதல் படம் சயாரா. குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் இப்படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி ரூ.500 கோடி வசூலை கடந்தது. வெறும் 50 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.550 கோடிக்கும் மேல் வசூலித்து அனைவரையும் வாய்பிளக்க வைத்தது. அறிமுக நடிகர்கள் நடிப்பில் வெளியான ஒரு படம் இவ்வளவு வசூலை குவிப்பது இதுவே முதல்முறையாகும்.

    இளைஞர்கள் பெரும் ஆதரவை பெற்ற இப்படம் கூகுள் Search-லும் முதல் இடத்தை பிடித்துள்ளது.


    2. காந்தாரா - சாப்டர் 1

    காந்தாரா படத்தின் வெற்றியை தொடர்ந்து ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த 'காந்தாரா சாப்டர் 1' திரைப்படம் காந்தி ஜெயந்தியை தினத்தன்று வெளியாகியது. 2022 ஆம் ஆண்டு வெளியான 'காந்தாரா' படத்தின் முன்கதையாக 4 ஆம் நூற்றாண்டில் நடக்கும் கதையாக இந்த படம் அமைந்தது.

    இப்படம் உலகளவில் ரூ. 852 கோடி வசூலித்து புதிய சாதனை படைத்தது. சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் 800 கோடிக்கும் மேல் வசூல் செய்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்ததால் இணையத்திலும் இப்படம் பேசுபொருளாகி இந்த பட்டியலில் 2 ஆம் இடம் பிடித்துள்ளது.


    3. கூலி

    நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான கூலி படம் இந்தாண்டில் அதிக எதிர்பார்ப்போடு வெளியான படமாகும்.

    அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

    பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் முதல் 4 நாட்களில் உலகளவின் மொத்தம் ரூ.404 கோடிகளுக்கு மேல் வசூல் குவித்தது. தமிழ் சினிமாவில் ரூ.1000 கோடி வசூலை குவித்த முதல் படம் என்ற சாதனையை கூலி படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்மறை விமர்சனங்களால் இப்படத்தின் வசூல் வெகுவாக குறைந்தது. மொத்தத்தில் இப்படம் உலக அளவில் 518 கோடி ரூபாய் தான் வசூல் செய்தது. எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்திருந்தால் இந்த பட்டியலில் முதல் இடத்தை கூட இப்படம் பெற்றிருக்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.


    4. வார் 2

    ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான வார் 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றதால் மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

    ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடித்தது மற்றும் கியாரா அத்வானியின் பிகினி காட்சிகள் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்த நிலையில், அந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யவில்லை. திரையரங்குகளில் இப்படம் மீதான வரவேற்பு குறைந்தாலும் இணையத்தில் இப்படம் பெரும் பேசுபொருளாகி இப்பட்டியலில் 4 ஆம் இடத்தை பிடித்துள்ளது.


    5. சனம் தேரி கசம்

    சனம் தேரி கசம் இந்தாண்டு வெளியான படம் கிடையாது. 2016 ஆம் ஆண்டு வெளியான படம். அப்படியிருக்க இந்த படம் பட்டியலில் இடம்பெற காரணம் ரீரிலீஸ் தான்.

    2016-ம் ஆண்டு ரூ.15 கோடி பட்ஜெட்டில் உருவான சனம் தேரி கசம் படம் ரூ.7 கோடி வசூலை ஈட்டி தோல்வி அடைந்தது. விமர்சன ரீதியாக வெற்றி பெற்ற இப்படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்தது.

    9 ஆண்டுகளுக்குப் பிறகு பிப்ரவரி 7-ம் தேதி இந்தப் படம் தற்போது ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. காதல் கதையை அடிப்படையாக கொண்ட இந்தப் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுது. இந்தப் படம் ரூ.50 கோடி வசூலை கடந்து சாதனை படைத்தது.

    தற்போது ரீரிலீஸ் கலாச்சாரம் இந்தியா முழுவதும் வைரஸ் போல பரவியுள்ளது. அதன் காரணமாக இப்படம் இந்த பட்டியலில் 5 ஆம் இடம் பிடித்துள்ளது.


    6. மார்கோ

    மலையாள நடிகரான உன்னி முகுந்தன் நடிப்பில் ஹனீஃப் அதேனி இயக்கத்தில் மார்கோ திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்திய சினிமாவில் இப்படி ஒரு ஆக்ஷன் திரைப்படம் வரவில்லை என மக்கள் படத்தை பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

    இந்தி மொழியில் அதிக வசூலித்த மலையாள திரைப்படம் என்ற சாதனையை படைத்த இப்படம் மொத்தமாக 100 கோடி வசூலை கடந்தது. இந்தி பேசும் மக்களிடையே பெட்ரா வரவேற்பால் இந்த பட்டியலில் இப்படம் 6 ஆம் இடம் பிடித்துள்ளது.


    7. ஹவுஸ்புல் 5

    அக்ஷய் குமார், அபிஷேக் பச்சன், அர்ஜூன் ராம்பால் மற்றும் தர்மேந்திரா என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள ஹவுஸ்புல் 5 படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது

    ஹவுஸ்புல் 4 பாகங்கள் பெற்ற வெற்றியால் ஹவுஸ்புல் 5 படத்தின் மீது நிறைய எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த எதிர்பார்ப்பினால் தான் இப்படம் இந்த பட்டியலில் 7 அம இடம் பிடித்துள்ளது.


    8. கேம் சேஞ்சர்

    இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகான நடித்து வெளியான திரைப்படம் 'கேம் சேஞ்சர்'. இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாக தோல்வியடைந்தது.

    இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு காரணமாக இந்த பட்டியலில் இப்படம் 8 ஆம் பிடித்துள்ளது.


    9. மிசஸ்

    Mrs' என்பது 2025-ல் அதிகம் பேசப்பட்ட இந்திய படங்களில் ஒன்று. மலையாளத்தில் வெளியான The Great Indian Kitchen படத்தின் ஹிந்தி ரீமேக் ஆன இந்த படம், திருமணத்துக்குப் பிறகு ஒரு பெண் சந்திக்கும் அதிகாரம், அடக்குமுறை மற்றும் அடையாள இழப்பு போன்ற பிரச்சினைகளை நுணுக்கமாக பேசுகிறது.

    இப்படத்தில் நாயகியாக நடித்துள்ள சன்யா மல்ஹோத்ரா, பாரம்பரிய குடும்ப அமைப்பில் சிக்கிக் கொள்ளும் ஒரு பெண்ணின் மனஅழுத்தத்தையும், அவளின் மௌன எதிர்ப்பையும் மிக யதார்த்தமாக வழிபடுத்தியுள்ளார்.

    பெரிய ட்விஸ்ட், அதிக வசனங்கள் இல்லாமல், அன்றாட வாழ்க்கையின் சின்னச் சின்ன விஷயங்களின் மூலம் சமூக உண்மைகளை சொல்வதே 'Mrs' படத்தின் பலம். பெண்களின் உழைப்பு, சமத்துவம், திருமண வாழ்க்கையில் உள்ள மறைமுக வன்முறை போன்ற விஷயங்களை நேர்மையாக பேசும் இந்த படம், வசூலை விட விவாதத்திலும், தேடலிலும் அதிக கவனம் பெற்றது.


    10. மகாவதார் நரசிம்மா

    அஷ்வின் குமார் இயக்கத்தில் அனிமேஷன் திரைப்படமாக வெளியான மகாவதார் நரசிம்மா மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் விஷ்ணுவின் தீவிர பக்தனான பிரகலாதானின் கதையாகும்.

    வெறும் ரூ.15 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் ரூ.300 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன்மூலம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு அதிக வசூல் செய்த அனிமேஷன் திரைப்படம் என்ற சாதனையையும் இப்படம் படைத்தது.

    வட இந்தியாவில் இப்படம் பெற்ற பெரிய வெற்றியால் இந்த பட்டியலில் இப்படம் 10 ஆம் இடம் பிடித்துள்ளது.

    • வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
    • தங்கத்துக்கு போட்டியாக வெள்ளி விலையும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.

    தங்கம் விலை மீண்டும் கட்டுக்கடங்காத காளையாய் துள்ளிக்குதித்து எகிறி வருகிறது. இதனால் ஒவ்வொரு நாளும் உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விற்பனையாகிறது. தங்கத்துக்குப் போட்டியாக வெள்ளி விலையும் உயர்ந்து வருகிறது.

    இந்த நிலையில், வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.12,460-க்கும் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.99,680-க்கும் விற்பனையானது.

    இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தக்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.1,00,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ரூ.12,515-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இதனால், தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1160 உயர்ந்துள்ளது. சென்னையில் தங்கம் விலை வரலாற்றில் முதன்முறையாக சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டியதால், பெண்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    இதனை தொடர்ந்து, தங்கத்துக்கு போட்டியாக வெள்ளி விலையும் இன்று காலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 213 ரூபாய்க்கும் கிலோவுக்கு மூவாயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 2 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    காலை ரூ. 3 உயர்ந்த நிலையில் இன்று மாலை மேலும் ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.215-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    • ஹிந்தியை மறைமுகமாக தமிழ்நாட்டின் மீது மத்திய அரசு திணிக்க முற்படுகிறது
    • 'இந்திய உயர்கல்வி ஆணைய மசோதா' என்று அழைக்கப்பட்ட இது, தற்போது 'விக்ஸித் பாரத்' என்ற பெயருடன் மறுஅறிமுகம் செய்யப்படுகிறது

    விக்ஷித் பாரத் சிக்ஷா ஆதிக்ஷன் மசோதாவை பாராளுமன்ற கூட்டுக்குழு விவாதத்திற்கு அனுப்பி வைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. 

    நாட்டில் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களையும் கலைத்துவிட்டு, அவை அனைத்தையும் ஒரே ஆணையத்திற்கு கீழ் கொண்டு வருவதற்கான இந்த புதிய மசோதாவை இன்று மக்களவையில் மத்திய கல்வித் துறை அமைச்சர் அறிமுகம் செய்து வைத்தார். இந்த மசோதாவை அறிமுகப்படுத்துவது சம்பந்தமான விவாதம் மக்களவையில் நடைபெற்ற போது திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த மசோதா மூலம் ஹிந்தியை மறைமுகமாக தமிழ்நாட்டின் மீது மத்திய அரசு திணிக்க முற்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர். இதனைத்தொடர்ந்து மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழு விவாதத்திற்கு அனுப்பி வைக்க முடிவு செய்திருப்பதாக மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார். இதுகுறித்து சபாநாயகர் முடிவெடுப்பார் எனவும் அவர் கூறியுள்ளார். 

    அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள இந்த புதிய மசோதா இந்திய கல்வித்துறையில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும். தற்போது உள்ள பல்கலைக்கழக மானியக் குழு (UGC), அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE) மற்றும் தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (NCTE) ஆகியவற்றுக்குப் பதிலாக, ஒரே ஒரு உயர்கல்வி ஆணையம் உருவாக்கப்படும். இருப்பினும், மருத்துவ மற்றும் சட்டப் படிப்புகள் இந்த புதிய அமைப்பின் வரம்பிற்குள் வராது. இந்த மசோதா எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி பொதுமக்கள் பலரிடமிருந்தும் எதிர்ப்புகளை பெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

    முன்பு 'இந்திய உயர்கல்வி ஆணைய மசோதா' என்று அழைக்கப்பட்ட இது, தற்போது 'விக்ஸித் பாரத்' என்ற பெயருடன் மறுஅறிமுகம் செய்யப்படுகிறது. தேசிய கல்விக் கொள்கை 2020யின் (NEP) பரிந்துரைப்படியே இந்த மாற்றம் கொண்டுவரப்படுகிறது.

    • இவற்றுடன் கூகுள் ஜெமினி ப்ரோ திட்டத்திற்கான 18 மாத இலவச சந்தாவும் வழங்கப்படுகிறது.
    • ரூ. 103 விலையில் கிடைக்கும் ஃப்ளெக்ஸி பேக் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது.

    ரிலையன்ஸ் ஜியோ தனது புதிய பிரீபெய்ட் ஆஃபரை " ஹேப்பி நியூ இயர் 2026 " என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது. இந்த புதுப்பிப்பு டேட்டா ஆட்-ஆன்கள் முதல் வருடாந்திர சந்தாக்கள் வரை மூன்று புதிய ரீசார்ஜ் ஆப்ஷன்களை கொண்டு வருகிறது. இத்துடன் ஓடிடி பலன்கள் மற்றும் ஏஐ சேவை பலன்களை வழங்குகிறது.

    புதிய திட்டங்கள் கூகுள் உடனான குறிப்பிடத்தக்க கூட்டாண்மையை அறிமுகப்படுத்துகின்றன. ஜெமினி ப்ரோ AI சேவையை தேர்ந்தெடுக்கப்பட்ட உயர்நிலை ரீசார்ஜ்களுடன் இணைக்கின்றன.

     

    1. ஹீரோ வருடாந்திர ரீசார்ஜ் (ரூ.3,599)

    ரூ.3,599 வருடாந்திர ரீசார்ஜ் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இத்துடன் தினமும் 2.5 ஜிபி (வரம்பற்ற 5ஜி டேட்டா அணுகலுடன்) டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இவற்றுடன் கூகுள் ஜெமினி ப்ரோ திட்டத்திற்கான 18 மாத இலவச சந்தாவும் வழங்கப்படுகிறது. இந்த சந்தாவின் மதிப்பு ரூ.35,100 ஆகும்.

    2. சூப்பர் செலபிரேஷன் மாதாந்திர திட்டம் (ரூ.500)

    28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த ரீசார்ஜ் தினமும் 2 ஜிபி (வரம்பற்ற 5ஜி டேட்டா அணுகலுடன்) டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது. இத்துடன் யூடியூப் பிரீமியம், ஜியோ ஹாட்ஸ்டார், அமேசான் PVME, சோனி லிவ், ஜீ5, லயன்ஸ்கேட் பிளே, டிஸ்கவரி பிளஸ், சன் நெக்ஸ்ட், கன்ச்சா லன்கா, பிளானட் மராத்தி, சௌபல், ஃபேன் கோடு மற்றும் ஹொய்சொய் ஆகிய ஓடிடி பலன்களும் அடங்கும். வருடாந்திர திட்டத்தைப் போலவே, இதில் இலவச 18 மாத கூகுள் ஜெமினி ப்ரோ திட்டம் அடங்கும்.

    3. ஃப்ளெக்ஸி பேக் (ரூ.103)

    ரூ. 103 விலையில் கிடைக்கும் ஃப்ளெக்ஸி பேக் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இதில் பயனர்களுக்கு 5 ஜிபி (மொத்த தொகை) டேட்டா, கீழ்வரும் மூன்று பேக்குகளில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.

    இந்தி பேக்: ஜியோ ஹாட்ஸ்டார், ஜீ5 மற்றும் சோனிலிவ்

    சர்வதேச தொகுப்பு: ஜியோ ஹாட்ஸ்டார், ஃபேன்கோட், லயன்ஸ்கேட் மற்றும் டிஸ்கவரி+

    பிராந்திய பேக்: ஜியோ ஹாட்ஸ்டார், சன் நெக்ஸ்ட், கன்ச்சா லங்கா மற்றும் ஹொய்சொய்

    இந்த புதிய ப்ரீபெய்ட் பேக்குகள் ஜியோவின் வலைத்தளம் , மைஜியோ செயலியில் கிடைக்கும்.

    • காசிமாவை வாழ்த்தி, ரூ.50 லட்சத்துக்கான ஊக்கத் தொகையை முதலமைச்சர் வழங்கினார்.
    • கீர்த்தனாவுக்கு ரூ.1 கோடி ஊக்கத் தொகை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார்.

    உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் மாலத்தீவில் நடைபெற்றது. இதில் தமிழக வீராங்கனைகள் தங்கம் வென்று அசத்தினர்.

    சென்னை காசிமேட்டை சேர்ந்த முன்னாள் சாம்பியன் காசிமா கேரம் உலக கோப்பை ஒற்றையர் பிரிவில் வெண்கல பதக்கம் வென்றார். மேலும், இரட்டையர் பிரிவில் வெள்ளியும், அணியாக தங்கமும் காசிமா வென்றார்.

    அதே சமயம் சென்னை காசிமேட்டைச் சேர்ந்த கீர்த்தனா கேரம் உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    மகளிர் ஒற்றையர், இரட்டையர், அணி என 3 பிரிவுகளிலும் கீர்த்தனா தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்

    இந்நிலையில் கேரம் உலக கோப்பை போட்டியில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை காசிமாவை வாழ்த்தி, ரூ.50 லட்சத்துக்கான ஊக்கத் தொகை காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.


    கேரம் உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னையைச் சேர்ந்த கீர்த்தனாவுக்கு ரூ.1 கோடி ஊக்கத் தொகை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார்.



     


    • மெஸ்சி இன்று காலை மும்பையில் இருந்து டெல்லி செல்வதாக இருந்தது.
    • பிற்பகலில் மெஸ்சி டெல்லி சென்றடைவார் என்று தகவல் வெளியானது.

    அர்ஜென்டினா கால்பந்து அணியின் ஜாம்பவான் லியோனல் மெஸ்சி 3 நாள் பயணமாக நேற்று முன்தினம் இந்தியா வந்தார். கொல்கத்தா, ஐதராபாத் ஆகிய நகரங்களில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு நேற்று அவர் மும்பை சென்றார்.

    அங்கு காட்சிப் போட்டியில் விளையாடினார். இதில் டெண்டுல்கர் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர்.

    மெஸ்சி இன்று காலை மும்பையில் இருந்து டெல்லி செல்வதாக இருந்தது. டெல்லியில் கடும் பனி மூட்டம் காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டது. இதனால் அவர் டெல்லி செல்வதில் தாமதம் ஏற்பட்டது. பிற்பகலில் மெஸ்சி டெல்லி சென்றடைவார் என்று கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மெஸ்ஸியின் வருகைக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.




    • ஜெயக்குமார் ராயபுரம் தொகுதியில் போட்டியிட்டு 5 முறை வெற்றி பெற்றுள்ளார்.
    • கடந்த தேர்தலில் திமுக வேட்பாளர் ஐட்ரீம் மூர்த்தியிடம் ஜெயக்குமார் தோல்வியடைந்தார்.

    அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரம் தொகுதியில் போட்டியிட்டு 5 முறை வெற்றி பெற்றுள்ளார். கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் அந்த தொகுதியின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த ஜெயக்குமார் கடந்த தேர்தலில் திமுக வேட்பாளர் ஐட்ரீம் மூர்த்தியிடம் தோல்வியடைந்தார்.

    அதிமுக தலைமை மீது ஜெயக்குமார் விரக்தியில் இருப்பதாகவும் விரைவில் அதிமுகவிலிருந்து ஜெயக்குமார் விலகுவார் என்று கூறப்பட்டது. இந்த தகவல் ஜெயக்குமார் மறுத்தார். மூச்சு உள்ளவரை அதிமுகவில் இருப்பேன் என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜெயக்குமார், "2026 சட்டமன்றத் தேர்தலிலும் ராயபுரம் தொகுதியில்தான் போட்டியிடுவேன். இதில் NO DOUBT. 25 ஆண்டுகள் எனக்கு வெற்றியைக் கொடுத்த ராயபுரம் மக்களை விட்டுவிட்டு வேறு தொகுதிக்கு மாற மாட்டேன்" என்று உறுதியுடன் தெரிவித்தார்.

    • பொருளாதார மற்றும் வர்த்தக போரின் காரணமாக உலகளவில் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது.
    • தங்கத்திற்கு நிகரான மாற்று முதலீடாக ஒவ்வொரு நாட்டின் கரன்சியும் இல்லை.

    சென்னை:

    தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிக்கும் என்று தமிழ்நாடு தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க மாநில தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியுள்ளார்.

    புதிய ஆண்டிலும் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அவர் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:-

    தங்கத்தின் விலை தினமும் கூடும் என்று சொல்ல முடியாது. ஆனால் ஒட்டுமொத்தமாக உயரக்கூடும். ஒருநாள் கூடினால் மற்றொரு நாள் குறைகிறது. ஆனால் விலை உயர்வுக்கு ஏற்ற அளவு குறையாது.

    ஒட்டுமொத்தமாக பார்த்தால் தற்போது போர் பதட்டம் இல்லாத சூழலிலும் தங்கம் விலை உயருகிறது. பொருளாதார மற்றும் வர்த்தக போரின் காரணமாக உலகளவில் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது.

    மேலும் டாலருக்கு நிகரான இந்திய பணத்தின் மதிப்பு வீழ்ச்சியும் தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகும்.

    சர்வதேச அளவில் பொருளாதார போட்டி அதிகரித்து வருவதால் மற்ற பொருட்களில் முதலீடு செய்வதை விட தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானதாகவும், லாபகரமாகவும் இருப்பதால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது அதிக அளவில் முதலீடு செய்து வருகிறார்கள். இதனால் விலை உயர்ந்து வருகிறது.

    தங்கத்திற்கு நிகரான மாற்று முதலீடாக ஒவ்வொரு நாட்டின் கரன்சியும் இல்லை. அதனால் எல்லா நாடுகளும் தங்கத்தை வாங்கி குவித்து வருகிறது. இதனால் வரும் காலங்களில் தங்கம், பண்டம் மாற்று பொருளாக மாறவும் வாய்ப்பு உள்ளது.

    தங்கத்தின் விலை கூடினாலும் வியாபாரம் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. சுபகாரியங்களுக்கு மக்கள் மொத்தமாக வாங்கி செல்கிறார்கள். வாங்கும் அளவு குறைந்துள்ளது. தங்கம் விலை உயர்ந்த போதிலும் மக்களின் தனிநபர் வருமானம் அதிகரித்து பொருளாதாரமும் உயர்ந்து உள்ளது.

    இதனால் மக்களிடம் வாங்கும் சக்தி கூடி உள்ளது. தங்கம் கிராம் 250 ரூபாய் முதல் ரூ.12,500 வரை உயர்ந்து வந்துள்ளதை நான் அறிந்துள்ளேன் என்றார்.

    • மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு சபாநாயகர் ஓம்பிர்லா இரங்கல் தெரிவித்தார்.
    • காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 1-ந்தேதி தொடங்கியது. கூட்டத் தொடரின் கடைசி வாரத்தின் முதல் அமர்வு இன்று தொடங்கியது.

    டெல்லியில் நேற்று வாக்குத் திருட்டுக்கு எதிராக காங்கிரஸ் நடத்திய போராட்டத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்கள். அதோடு அவருக்கு அச்சுறுத்தல்களையும் விடுத்தனர்.

    இந்த விவகாரத்தை ஆளும் பா.ஜ.ஜக உறுப்பினர்கள் எழுப்பினார்கள். காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

    பாராளுமன்ற மக்களவை இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. அப்போது மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு சபாநாயகர் ஓம்பிர்லா இரங்கல் தெரிவித்தார்.

    அதைத் தொடர்ந்து பா.ஜ.கா எம்.பி.க்கள் சபையின் மையப் பகுதிக்கு வந்து காங்கிரஸ் தொண்டர்கள் பிரதமருக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பான பிரச்சினையை கிளப்பினார்கள்.

    இதற்கு பதிலடியாக எதிர்க்கட்சி எம்.பி.க்களும் கோஷங்களை எழுப்பினார்கள். இந்த அமளியால் 12 மணி வரை அவை ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியதும் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சினை கிளப்பியதால் 2 மணி வரை அைவ ஒத்தி வைக்கப்பட்டது.

    இதே பிரச்சினையை மேல்சபையிலும் பா.ஜ.க உறுப்பினர்கள் கிளப்பினார்கள். மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா பேசியதாவது:-

    காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

    இது காங்கிரஸ் கட்சியின் சிந்தனையையும், மனநிலையையும் காட்டுகிறது. ஒரு பிரதமருக்கு எதிராக இது போன்று பேசுவது கண்டிக்கத்தக்கது. இதற்காக எதிர்க்கட்சி தலைவர் மல்லி கார்ஜூன கார்கே, மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

    காங்கிரஸ் அரசியல் மிகவும் கீழ்த்தரமான நிலைக்கு சென்றுவிட்டது. இது கற்பனை செய்ய முடியாதது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பா.ஜனதா எம்.பி.க்களின் அமளியால் அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    • மலேசியாவில் நடைபெற்று வரும் கார் பந்தய போட்டியில் அஜித்குமார் ரேசிங் அணி பங்கேற்றுள்ளது.
    • அஜித்குமாரை நடிகர் சிம்பு, நடிகை ஸ்ரீ லீலா, இயக்குனர் சிறுத்தை சிவா ஆகியோர் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர் அஜித் குமார். சினிமா தாண்டி கார் பந்தயத்திலும் கலக்கி வரும் நடிகர் அஜித் குமார், சமீபத்தில் ஸ்பெயினில் நடந்த 24 மணி நேர கார் பந்தயத்தில் 3-வது இடம் பிடித்தார்.

    இதனை தொடர்ந்து அடுத்த ஆண்டு (2026) அபுதாபியில் நடைபெறும் கார் பந்தய போட்டிகளிலும் அஜித்குமார் ரேசிங் அணி கலந்து கொள்கிறது. இதற்கு முன்னதாக மலேசியாவில் நடைபெற்று வரும் கார் பந்தய போட்டியில் அஜித்குமார் ரேசிங் அணி பங்கேற்றுள்ளது.

    இந்நிலையில் அங்கு அஜித்குமாரை நடிகர் சிம்பு, நடிகை ஸ்ரீ லீலா, இயக்குனர் சிறுத்தை சிவா ஆகியோர் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகியது.

    அந்த வகையில் தமிழக முதல்வரின் மருமகனான சபரீசன் அஜித் குமாரை நேரில் பார்த்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

    • இவை மிடில் வெயிட் பிரிவில் நிறுவனத்தின் என்ட்ரி லெவல் மாடல்களாக நிலைநிறுத்தப்பட்டன.
    • ஜிஎஸ்டி திருத்தங்களுக்குப் பிறகு ரூ. 20,000 குறைக்கப்பட்டது.

    யமஹா இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் YZF-R3 மற்றும் MT-03 மோட்டார்சைக்கிள்களின் விற்பனையை சத்தமின்றி நிறுத்தியது. யமஹா நிறுவனம் இரண்டு மோட்டார்சைக்கிள்களின் இறக்குமதியை நிறுத்தியுள்ளது. மேலும் நாடு முழுவதும் உள்ள பல யமஹா டீலர்ஷிப்கள் தங்களிடம் இரண்டு மாடல்களின் ஸ்டாக் இல்லை என உறுதிப்படுத்தியுள்ளன.

    யமஹா R3 மற்றும் MT-03 ஆகியவை இந்தியாவில் CBU (முற்றிலும் கட்டமைக்கப்பட்ட) யூனிட்களாக அறிமுகம் செய்யப்பட்டன. இவை மிடில் வெயிட் பிரிவில் நிறுவனத்தின் என்ட்ரி லெவல் மாடல்களாக நிலைநிறுத்தப்பட்டன. இருப்பினும், அவற்றின் அதிக விலை காரணமாக, எதிர்பார்த்த விற்பனையை பதிவு செய்யவில்லை.

    இரண்டு மோட்டார்சைக்கிள்கள் R3 ரூ. 4.65 லட்சமாகவும், MT-03 ரூ. 4.60 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த ஆண்டின் தொடக்கத்தில், யமஹா அதன் மாடல்களை மிகவும் போட்டித்தன்மையுடன் மாற்றும் முயற்சியாக ரூ. 1.10 லட்சம் குறிப்பிடத்தக்க விலை குறைப்பை அறிவித்தது.

    இதைத் தொடர்ந்து ஜிஎஸ்டி திருத்தங்களுக்குப் பிறகு ரூ. 20,000 குறைக்கப்பட்டது. இந்த முயற்சிகள் இருந்தபோதிலும், மோட்டார்சைக்கிள்கள் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனையாகவில்லை என்றே தெரிகிறது. இந்த வரிசையில் தற்போது இரு மாடல்களும் இந்திய சந்தையில் நிறுத்தப்பட்டன.

    தற்போது, யமஹா நிறுவனம் R15, MT-15 மற்றும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட XSR 155 ஆகியவற்றை மட்டுமே கொண்டுள்ளது. இருப்பினும், யமஹா 2026 ஆம் ஆண்டின் மத்தியில் புதிய R3 மற்றும் MT-03 மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய யமஹா R3 புதுப்பிக்கப்பட்ட ஸ்டைலிங் மற்றும் கூடுதல் அம்சங்களைப் பெறுகிறது.

    • அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
    • வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    நாளை முதல் நாளை மறுநாள் வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    18-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 20-21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    இன்று முதல் 18-ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    ×