என் மலர்
செய்திகள்
- இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களின் டிரெய்லர்கள், ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
- சூப்பர்ஸ்டார்கள் முதல் இளம் நட்சத்திரங்கள் வரை, அனைவரின் படங்களும் யூடியூப்பில் வியூஸ்களை அள்ளின
2025 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு ஒரு திருப்புமுனை ஆண்டாக அமைந்தது. கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு திரையரங்குகள் மீண்டும் உயிர்பெற்று, டிஜிட்டல் தளங்களின் ஆதிக்கம் அதிகரித்த காலகட்டத்தில், யூடியூப் போன்ற தளங்கள் சினிமா ரசிகர்களின் முதல் தேர்வாக மாறின.
இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களின் டிரெய்லர்கள், ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. சூப்பர்ஸ்டார்கள் முதல் இளம் நட்சத்திரங்கள் வரை, அனைவரின் படங்களும் யூடியூப்பில் கோடிக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்தன.
இந்தக் கட்டுரையில், 2025 ஆம் ஆண்டு யூடியூப்பில் அதிகம் பார்க்கப்பட்ட 10 தமிழ் சினிமா டிரெய்லர்களைப் பார்க்கலாம்
1. கூலி (Coolie) – 54 மில்லியன் பார்வைகள் (அனைத்து மொழிகளிலும் - 28M + 10M +16M)
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர்.
இந்தபெரும் எதிரிபார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் அதிக பார்வைகளை பெற்று இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
2. தக் லைஃப் (Thug Life) - 50 மில்லியன் பார்வைகள் (அனைத்து மொழிகளிலும் - 35M + 6.5M +8.8M)
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் 'தக் லைஃப்'. நாயகன் படத்திற்கு பிறகு மணிரத்னம் - கமல் கூட்டணியில் இப்படம் உருவானதால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக இப்படத்தின் டிரெய்லர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் அதிக பார்வைகளை பெற்று இப்பட்டியலில் 2 ஆம் இடம் உள்ளது.
3. குட் பேட் அக்லி (Good Bad Ugly) – 39 மில்லியன் பார்வைகள் (டீசர்)
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான 'குட் பேட் அக்லி' திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இப்படத்தின் மீதான பெரும் எதிர்பார்ப்பினால் இப்படத்தின் டீசர் தமிழில் மட்டும் 39 மில்லியன் பார்வைகளை பெற்று இப்பட்டியலில் 3 ஆம் இடம் உள்ளது.
4. ரெட்ரோ (Retro) 32 மில்லியன் பார்வைகள் (அனைத்து மொழிகளிலும் - 24M + 4.6M + 3.3M)
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான படம் ரெட்ரோ. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். கார்த்திக் சுப்பராஜ் - சூர்யா கூட்டணியில் உருவான இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக இப்படத்தின் டிரெய்லர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் அதிக பார்வைகளை பெற்று இப்பட்டியலில் 4 ஆம் இடம் உள்ளது.
5. டிராகன் (dragon) - 26 மில்லியன் பார்வைகள் (அனைத்து மொழிகளிலும் - 21M + 5M )
இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் வெளியான டிராகன் திரைப்படம் 10 நாட்களில் 100 கோடி ரூபாயை உலகளவில் வசூலித்து சாதனை படைத்தது.
லவ் டுடே படத்தின் வெற்றிக்கு பின்பு வெளியான பிரதீப் ரங்கநாதன் படம் என்பதால் இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக இப்படத்தின் டிரெய்லர் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் அதிக பார்வைகளை பெற்று இப்பட்டியலில் 5 ஆம் இடம் உள்ளது.
6. விடாமுயற்சி (Vidaamuyarchi) – 20 மில்லியன் பார்வைகள்
நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவான திரைப்படம் விடாமுயற்சி. இந்தப் படத்தில் அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
நீண்ட நாட்களாக உருவாகி வந்த இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பினால் இப்படத்தின் டிரெய்லர் தமிழில் மட்டும் 20 மில்லியன் பார்வைகளை பெற்று இப்பட்டியலில் 6 ஆம் இடம் உள்ளது.
7. இட்லி கடை (Idli Kadai) – 20 மில்லியன் பார்வைகள் (அனைத்து மொழிகளிலும் - 16M + 4M)
தனுஷ் இயக்கி நடித்த படம் இட்டலி கடை. இப்படத்தில் நித்யா மேனன், அருண் விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ராயன் வெற்றிக்கு பிறகு தனுஷ் இயக்கி நடிக்கும் படம் என்பதால் இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. இதன் காரணமாக இப்படத்தின் டிரெய்லர் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் அதிக பார்வைகளை பெற்று இப்பட்டியலில் 7 ஆம் இடம் உள்ளது.
8. மதராசி (Madharasi) – 20 மில்லியன் பார்வைகள் (அனைத்து மொழிகளிலும் - 19M + 1M)
பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான படம் 'மதராஸி'. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்திருந்தார். மேலும், விக்ராந்த், வித்யூத் ஜம்வல், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார்.
அமரன் படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து மதராஸி படம் வெளியானதால் இப்படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் எழுந்தது. இதன் காரணமாக இப்படத்தின் டிரெய்லர் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் அதிக பார்வைகளை பெற்று இப்பட்டியலில் 8 ஆம் இடம் உள்ளது.
9. பைசன் காலமாடன் (Bison Kaalamaadan) – 17 மில்லியன் பார்வைகள் (அனைத்து மொழிகளிலும் - 15M + 2M)
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த ஸ்போர்ட்ஸ்-டிராமா படம் பைசன் காளமாடன். கபடி வீரரின் வாழ்க்கையை வெளிப்படுத்திய இப்படத்தில் பசுபதி, அமீர், லால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு காரணமாக இப்படத்தின் டிரெய்லர் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் அதிக பார்வைகளை பெற்று இப்பட்டியலில் 9 ஆம் இடம் உள்ளது.
10. காந்தா (Kaantha) – 14 மில்லியன் பார்வைகள் (அனைத்து மொழிகளிலும் - 6M + 7M + 1M)
துல்கர் சல்மான், ராணா டகுபதி நடித்த பீரியட்-டிராமா படம் காந்தா. இப்படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்கியிருந்தார். இப்படம் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே. தியாகராஜா பாகவதரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாகும்.
இப்படத்தில் மிஸ்டர் பச்சன் திரைப்பட புகழ் பாக்யஸ்ரீ, துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பினால் இப்படத்தின் டிரெய்லர் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் அதிக பார்வைகளை பெற்று இப்பட்டியலில் 10 ஆம் இடம் உள்ளது.
முடிவுரை:
2025 தமிழ் சினிமாவுக்கு யூடியூப் ஒரு பெரிய ஆயுதமாக மாறியது. இந்த டிரெய்லர்கள் வெறும் ப்ரோமோக்கள் அல்ல; அவை ரசிகர்களின் உற்சாகத்தை அளவிடும் அளவுகோல்கள். சூப்பர் ஸ்டார்களின் படங்கள் டாப்பில் இருந்தாலும், இளம் இயக்குநர்களின் படங்களும் தங்கள் இடத்தைப் பிடித்தன. இது தமிழ் சினிமாவின் பன்முகத்தன்மையை காட்டுகிறது. அடுத்த ஆண்டு இன்னும் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்!
- இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வியாழக்கிழமை வருவதால் அரையாண்டு விடுமுறை கூடுதலாக விடப்பட்டுள்ளது.
- மாதவரத்தில் இருந்து 20 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளது.
சென்னை:
பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நாளை (23-ந் தேதி)யுடன் முடிகிறது. அதைத் தொடர்ந்து விடுமுறை விடப்படுகிறது. அனைத்து பள்ளிகளும் மீண்டும் ஜனவரி 5-ந்தேதி திறப்படுகிறது. இதனால் மாணவ-மாணவிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.
இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வியாழக்கிழமை வருவதால் அரையாண்டு விடுமுறை கூடுதலாக விடப்பட்டுள்ளது. ஒரு சில தனியார் பள்ளிகள் நாளை முதல் விடுமுறை அளித்துள்ளது.
கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை கொண்டாட செல்லும் பொதுமக்கள் வெளியூர் பயணத்தை நாளை முதல் தொடங்குகிறார்கள். விடுமுறை நாட்களை கணக்கிட்டு ரெயில்களில் முன்பதிவு செய்து உள்ள தால் அனைத்து ரெயில்களும் நிரம்பிவிட்டன.
கோவை மார்க்கமாக கேரளா செல்லும் ரெயில்கள், பெங்களூரு மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்கள் அனைத்திலும் எல்லா வகுப்புகளும் நிரம்பி விட்டதால் ஆம்னி பஸ் ஆபரேட்டர்கள் வழக்கம் போல் கூடுதல் கட்டணத்தை வசூலிக்கிறார்கள்.
இந்த நிலையில் பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் பயணம் மேற்கொள்ள வசதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சிறப்பு பஸ்களை இயக்குகிறது.
சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை முதல் 325 பஸ்களும் 24-ந் தேதி 525 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 23, 24-ந் தேதியில் மொத்தம் 91 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் மாதவரத்தில் இருந்து 20 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளது. வழக்கமாக தினமும் இயக்கப்படும் 2025 பஸ்களுடன் கூடுதலாக 800 சிறப்பு பஸ்கள் இயக்கப்படு கின்றன.
அரசு பஸ்களில் நெரிசல் இல்லாமல் பயணம் செய்ய www.tnstc.in மற்றும் மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்று அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் மோகன் தெரிவித்துள்ளார்.
- இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100% வரி விலக்கு அளிக்கப்படும்.
- நியூசிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி 95% வரை குறையும்
சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் உடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில், இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இறுதிசெய்யப்பட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்தார்.
இந்த ஒப்பந்தம் குறித்து பேசிய தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், "இந்தியா-நியூசிலாந்துக்கு இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்போது, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100% வரி விலக்கு அளிக்கப்படும். இது முதலீடுகளை ஊக்குவிக்கும்.
நியூசிலாந்து அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் உற்பத்தி, உள்கட்டமைப்பு, சேவைகள், புத்தாக்கம் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகிய துறைகளை இலக்காகக் கொண்டு, 20 பில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீட்டை எளிதாக்க உறுதியளித்துள்ளது
அடுத்த 20 ஆண்டுகளில் நியூசிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் மதிப்பு 1.1 முதல் 1.3 பில்லியன் அமெரிக்க டாலர் வரை உயர்த்த இலக்கு என்பது நிர்ணயிக்கப்பட்டுள்ளது இந்தியா நியூசிலாந்து இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் வாயிலாக நியூசிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி 95 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது" என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக பேசிய நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன், "நாங்கள் இந்தியாவுடன் ஒரு தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை முடித்துள்ளோம். இது நியூசிலாந்து விவசாயிகள், உற்பத்தியாளர்கள் மற்றும் வணிகங்களுக்கு வாய்ப்புகளைத் திறந்து, ஏற்றுமதியை அதிகரித்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கி, வருமானத்தை உயர்த்தி, அனைத்து நியூசிலாந்து மக்களும் முன்னேற உதவும்" என்று கூறினார்.
- வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.
- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் பாகிஸ்தானுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது.
நியூசிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆனது. 2-வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மவுண்ட் மாங்கானுவில் நடைபெற்றது.
இந்த போட்டியிலும் நியூசிலாந்து அணி 323 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில் இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் நியூசிலாந்து அணி 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. நியூசிலாந்து அணி மொத்தமாக 3 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி 1 டிராவுடன் 77.78 சதவீதம் பெற்றுள்ளது. 100 சதவீததுடன் ஆஸ்திரேலியா முதல் இடத்தில் தொடர்கிறது.
3 முதல் 9 இடங்கள் முறையே தென் ஆப்பிரிக்கா, இலங்கை பாகிஸ்தான், இந்தியா, இங்கிலாந்து, வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் உள்ளது.
- மதுரை திருப்பரங்குன்றம் பெரிய ரதவீதியில் உள்ள பள்ளிவாசல் மற்றும் மலையில் உள்ள தர்காவில் சந்தனக்கூடு திருவிழா நடைபெற உள்ளது.
- கடந்த 19 நாட்களாக அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இன்று பிற்பகல் 12.30 மணி முதல் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை திருப்பரங்குன்றம் பெரிய ரதவீதியில் உள்ள பள்ளிவாசல் மற்றும் மலையில் உள்ள தர்காவில் வருகிற 6-ந் தேதி சந்தனக்கூடு திருவிழா நடைபெற உள்ளது.
நேற்று இரவு 8.30 மணியளவில் திருப்பரங்குன்றம் பெரிய ரதவீதியில் உள்ள பள்ளிவாசலில் இருந்து மின்னொளியுடன் கூடிய அலங்கார வண்டியில் பிறை கொடி எடுத்து வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மற்றொரு பிறை கொடியும் எடுத்து செல்லப்பட்டது. பெரிய ரதவீதி, கோட்டை தெரு வழியாக அந்த கொடி மலைக்கு எடுத்து செல்லப்பட்டு தர்காவில் அமைத்த கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.
இந்நிலையில் மதுரை திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி தரப்பட்டது.
ஆதார் அட்டை, செல்போன் எண்ணை கொடுத்துவிட்டு திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லலாம் என்று காவல் உதவி ஆணையர் சசிபிரியா தெரிவித்துள்ளார்.
கடந்த 19 நாட்களாக அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இன்று பிற்பகல் 12.30 மணி முதல் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.
மலையில் உள்ள தர்காவில் நடக்கும் சந்தனக்கூடு விழாவிற்கு இஸ்லாமியர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது அனைவருக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- வித் லவ் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
- அபிஷன் ஜீவின்ந்துக்கு ஜோடியாக அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார்.
சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியான படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'. கடந்த மே மாதம் வெளியான இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கி இருந்தார். இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் குடும்பம் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து சந்திக்கும் சவால்களை காமெடி கலந்து சொல்லப்பட்டு இருந்ததால் அனைவராலும் ரசிக்கப்பட்டது.
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை தொடர்ந்து அபிஷன் ஜீவின்ந்த் வித் லவ் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில், அபிஷன் ஜீவின்ந்துக்கு ஜோடியாக கேரளாவில் வளர்ந்து வரும் நட்சத்திரமான அனஸ்வர ராஜன் நடித்துள்ளார்.
இப்படத்தை 'டூரிஸ்ட் ஃபேமிலி', 'லவ்வர்' படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன் இயக்கியுள்ளார். MRP என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், வித் லவ் படத்தில் இடம்பெற்றுள்ள முதல் பாடலான 'அய்யோ காதலே' பாடலை இன்று மாலை 6 மணிக்கு இசையமைப்பாளர் அனிருத் வெளியிடுவார் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்பாடலின் ப்ரோமோ நேற்று வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது.
- வாழ்க்கை முறை, வழிபாட்டு முறை வேறு வேறு என்றாலும் நாம் அனைவரும் சகோதரர்கள்.
- மற்றவர்கள் நம்பிக்கையை மதிக்க கற்றுக்கொடுக்க வேண்டும்.
த.வெ.க. சார்பில் மாமல்லபுரத்தில் நடைபெறும் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* இது ஒரு அன்பான தருணம். அழகான தருணம். அன்பும் கருணையும் தான் அனைத்திருக்கும் அடிப்படை.
* தமிழ்நாடு மண்ணும் தாய் அன்பு கொண்ட மண் தான். தாய்க்கு எல்லா பிள்ளைகளும் ஒன்று தான்.
* வாழ்க்கை முறை, வழிபாட்டு முறை வேறு வேறு என்றாலும் நாம் அனைவரும் சகோதரர்கள்.
* உண்மையான நம்பிக்கை தான் நல்லிணக்கத்தை விதைக்கும்.
* மற்றவர்கள் நம்பிக்கையை மதிக்க கற்றுக்கொடுக்க வேண்டும்.
* ஒரு இளைஞருக்கு எதிராக உடன் இருந்தவர்களே கிணற்றில் தள்ளிவிட்ட பின்னரும் மீண்டும் வந்து அரசனாகும் கதை பைபிளில் உள்ளது.
* தன்னை கிணற்றில் தள்ளிவிட்ட உடன் பிறந்த சகோதரர்களை, அந்த நாட்டு மக்களை அரசன் எப்படி காப்பாற்றினான் என படியுங்கள்.
* எப்படிப்பட்ட எதிரிகளையும் நாம் ஜெயிக்கலாம் என்பதை இதுபோன்ற கதைகள் நமக்கு கற்றுத்தருகிறது.
* நானும் த.வெ.க.வும் சமூக நல்லிணக்கத்தை பாதுகாப்பதில் 100 சதவீதம் உறுதியாக உள்ளது.
* ஒளி ஒன்று பிறக்கும் அந்த ஒளி நமக்கு வழிகாட்டும். அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.
* நம்பிக்கையுடன் காத்திருங்கள், நல்லதே நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- U19 ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின.
- இந்த போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்தது.
துபாயில் நடந்த U19 ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 347 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்தியா 156 ரன்களில் சுருண்டு 191 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
இந்தியா அணி பேட்டிங் செய்த போது 5-வது ஓவரை பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் அலி ராசா வீசினார். அந்த ஓவரில் வைபவ் சூர்யவன்ஷி ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர் என பறக்கவிட்டார். ஆனால், அதே ஓவரில் வைபவ் 26 ரன்களில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
விக்கெட் விழுந்த உற்சாகத்தில் பந்துவீச்சாளர் அலி ராசா, வைபவ் சூர்யவன்ஷிக்கு மிக அருகில் சென்று, அவர் முகத்திற்கு நேராக ஆக்ரோஷமாக கத்தி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இது வைபவ்விற்கு கோபத்தை ஏற்படுத்தியது.
பெவிலியன் திரும்பும் போது கடுப்பான வைபவ் சூர்யவன்ஷி, அலி ராசாவை பார்த்து முறைத்தபடியே, திடீரென தனது காலை கையால் சுட்டிக்காட்டி ஏதோ சைகை செய்தார். "நீ என் காலில் இருக்கும் ஷூ.." என்பது போல அவர் சைகை செய்தார்.
மைதானத்தில் அவுட் ஆகி வெளியேறும் போது, எதிரணி வீரரை பார்த்து ஷூவை சுட்டிக்காட்டி வம்பிழுத்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களிடையே விவாதத்தை கிளப்பி உள்ளது. வெறும் 14 வயதான வைபவ் களத்தில் இப்படியா நடந்து கொள்வது? என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தனது ஓவரில் 3 சிக்சர் அடித்த பேட்டரின் விக்கெட்டை வீழ்த்தும் போது எந்தவொரு பந்து வீச்சாளரும் ஆக்ரோஷமாக கொண்டாடுவார்கள் அதைதான் அவரும் செய்திருக்கிறார் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
- 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
- அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் உடன் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பழைய ஓய்வூதிய திட்டம், காலிப் பணியிடங்களை நிரப்புவது என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் உடன் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள், இடைநிலை, முதுநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊழியம், சமவேலை சம ஊதியம், பதவி உயர்வு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கை தொடர்பாக அமைச்சர்களுடன் அரசு ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
- சிவகார்த்திகேயன் படத்தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்.
- சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் என்கிற நிறுவனத்தின் மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் சிவகார்த்திகேயன் படத்தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் என்கிற நிறுவனத்தின் மூலம் ஏராளமான படங்களை தயாரித்து வருகிறார்.
சிவகாத்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த கனா, அருவி, டாக்டர், டான், கொட்டுக்காளி, ஹவுஸ்மேட்ஸ் போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற்றன.
இந்நிலையில் அவருடைய தயாரிப்பில் வெளியாகும் புதிய படம் தொடர்பான அறிவிப்பை சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் அடுத்தப் படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து சிறப்பான திரைப்படங்களை சிவகார்த்திகேயன் தயாரித்து வருவதால், அவரின் அடுத்த படம் தொடர்பான அறிவிப்பும் மக்களிடையே கவனம் பெற்றுள்ளது.
- தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி 150 நாட்கள் வேலை கொடுத்ததா?
- இறந்தவர்கள் எல்லாம் தேர்தல் நேரத்தில் உயிர்பெற்று வந்து தி.மு.க.வுக்கு வாக்களித்தனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் அ.தி.மு.க.வுடன் கூட்டணிக்கு வரலாம்.
* பொங்கலுக்கு ரேசன் அட்டைக்கு ரூ.5000 வழங்க வேண்டும்.
* எதிர்க்கட்சியாக இருந்தபோது தி.மு.க. வைத்த கோரிக்கையை தான் அ.தி.மு.க. தற்போது வைக்கிறது.
* தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி 150 நாட்கள் வேலை கொடுத்ததா?
* காவிரி விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் தி.மு.க. பேசி இருக்க வேண்டும்.
* 100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயர் தொடர வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.
* ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தின் கடன் அதிகரித்து கொண்டிருக்கிறது.
* தமிழக அரசு பொருளாதார நிபுணர் குழுவை அமைத்த பின்னர் தான் கடன் அதிகரித்துள்ளது.
* த.வெ.க. நயினார் நாகேந்திரன் கூட்டணிக்கு அழைத்தது பா.ஜ.க.வின் நிலைப்பாடு.
* கொரோனா காலத்திலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினோம்.
* இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் தமிழ்நாடு முதல் மாநிலமாக உள்ளது.
* ரெயில் கட்டண உயர்வை திரும்ப பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* த.வெ.க. தூய சக்தியா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
* கொடுத்த வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை.
* த.வெ.க. தூய சக்தி என்ற விஜயின் பேச்சிற்கு கே.பி.முனுசாமி பதில் அளித்து விட்டார்.
* இறந்தவர்கள் எல்லாம் தேர்தல் நேரத்தில் உயிர்பெற்று வந்து தி.மு.க.வுக்கு வாக்களித்தனர்.
* அ.தி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு விரைவில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 3-வது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 138 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
- 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி கைப்பற்றியது.
நியூசிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மவுண்ட் மாங்கானுவில் நடைபெற்றது.
நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 575 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. தொடக்க வீரர்களான கான்வே இரட்டை சதமும் (227 ரன்), கேப்டன் டாம் லாதம் சதமும் (137) அடித்தனர். ரச்சின் ரவீந்திரா 72 ரன் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் ஷீல்ஸ் , ஆண்டர்சன் பிலிப், ஜஸ்டின் கிரீவ்ஸ் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.
பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 420 ரன்கள் அடித்து ஆல் அவுட்டானது. இதையடுத்து 156 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சில் விளையாடிய நியூசிலாந்து 2 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது.
இதனையடுத்து 462 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறங்கியுள்ள வெஸ்ட் இண்டீஸ் 4 ஆம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் அடித்தது.
கடைசி நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. மிகவும் பொறுமையுடன் விளையாடிய இந்த தொடக்க ஜோடியை ஜேக்கப் டஃபி பிரித்தார். பிரெண்டன் கிங் 67 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 87 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து ஜான் கேம்பல் 105 பந்துகளை சந்தித்து 16 ரன்னில் அவுட் ஆனார்.
அதனை தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 138 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. 87 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்த 51 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது.
இதனால் நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.







