என் மலர்tooltip icon

    செய்திகள்

    • சிலிண்டரில் ஆக்ஸிஜன் தீர்ந்த பிறகு, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அவர்களை வேறொரு மருத்துவமனையில் கைவிட்டுச் சென்றார்.
    • இந்தச் சம்பவம் குறித்து இதுவரை யாரும் எந்த புகாரும் அளிக்கவில்லை.

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் பிறந்து ஒரு நாளே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று ஆம்புலன்சிலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    நேற்று மாலை பஸ்ஸி பகுதி அருகே மூச்சு விடுவதில் சிரமப்பட்ட குழந்தையை, பரத்பூர் மாவட்டத்தின் பயானா மருத்துவமனையில் இருந்து எஸ்.எம்.எஸ். மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டதையடுத்து, குழந்தையை அதன் தந்தையும் மாமாவும் ஒரு தனியார் ஆம்புலன்ஸில் ஜெய்ப்பூருக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

    பான்ஸ்கோ என்ற இடத்திற்கு அருகில் வந்தபோது, ஆக்ஸிஜன் சிலிண்டரில் உள்ள வாயு தீர்ந்துவிட்டதை குழந்தையின் தந்தை கவனித்துள்ளார். ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அவர்களை அருகில் உள்ள பஸ்ஸி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

    பஸ்ஸி மருத்துவமனையில் குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை இறந்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.

    சிலிண்டரில் ஆக்ஸிஜன் தீர்ந்த பிறகு, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தங்களை பஸ்ஸி அரசு மருத்துவமனையில் கைவிட்டுச் சென்றுவிட்டதாக குழந்தையின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.

    ஆம்புலன்ஸில் எந்த ஒரு செவிலியரும் இல்லை. ஆக்ஸிஜன் சிலிண்டரை குழந்தையின் தந்தைதான் இயக்கிக்கொண்டிருந்தார். சிலிண்டரில் ஆக்ஸிஜன் தீர்ந்ததாலேயே இந்தச் சம்பவம் நடந்துள்ளது என்று பஸ்ஸி காவல் ஆய்வாளர் தர்மேந்திர குமார் தெரிவித்தார்.

    இந்தச் சம்பவம் குறித்து இதுவரை யாரும் எந்த புகாரும் அளிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.   

    • அவரை சரியாக பார்க்கக் கூட முடியாத வகையில் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் அவரை முழுவதுமாக சூழ்ந்துகொண்டதாக ரசிகர்கள் கூறினர்.
    • மெஸ்ஸியை காண ரூ.5,000 முதல் ரூ.12,000 வரை டிக்கெட் எடுத்து ரசிகர்கள் வந்துள்ளனர்.

    அர்ஜென்டினா அணியின் கேப்டனான பிரபல கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு வந்துள்ளார். அவரை காண்பதற்காக ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த கால்பந்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கோஷம் எழுப்பி மகிழ்ச்சி ஆரவாரம் எழுப்பினர்.

    இதனையடுத்து கொல்கத்தாவில் லேக் டவுன் பகுதியில் ஸ்ரீபூமி விளையாட்டு கிளப் சார்பில் 70 அடி உயரத்தில் நிறுவப்பட்ட தனது உருவச்சிலையை மெஸ்ஸி காணொலி மூலம் திறந்து வைத்தார்.

    அதனை தொடர்ந்து சால்ட்லேக் ஸ்டேடியத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த மைதானத்தில் வருகை தந்த மெஸ்ஸிக்கு ரசிகர்கள் உற்சாகத்துடன் கோஷம் எழுப்பி மகிழ்ச்சி ஆரவாரம் எழுப்பினர். மைதானதிற்கு வந்த மெஸ்ஸி வெகு சில நிமிடங்களே களத்தில் இருந்ததாகவும், அப்போதும் அவரை சரியாக பார்க்கக் கூட முடியாத வகையில் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் அவரை முழுவதுமாக சூழ்ந்துகொண்டதாகவும் ரசிகர்கள் கூறினர்.

    மெஸ்ஸியை காண ரூ.5,000 முதல் ரூ.12,000 வரை டிக்கெட் எடுத்து ரசிகர்கள் வந்துள்ளனர். ஆனால் உடனே கிளம்பியதால் ரசிகர்கள் ஆத்திரமடைந்தனர். இதனால் மைதானத்தில் தண்ணீர் பாட்டில்களை எறிந்தும் மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையை அடித்தும் ரசிகர்கள் வன்முறையில் ஈடுப்பட்டனர். இதனால் ரசிகர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனையடுத்து இந்த சம்பவத்திற்கு அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி மன்னிபு கேட்டார்.

    இந்நிலையில் மெஸ்ஸி கலந்துகொண்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளரை போலீசார் கைது செய்தனர். மேலும் டிக்கெட்டிற்கான பணத்தை திருப்பித் தருவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உறுதியளித்துள்ளதாக காவல்துறை கூறியுள்ளது.

    சௌந்தர்யன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.

    அரசு பள்ளி ஆசிரியரான நாயகன் பிரபாகரன், மாணவர்களுக்கு படிப்பை மட்டும் சொல்லிக் கொடுக்காமல், சமூகப் பணி மற்றும் அரசியல் பற்றியும் கற்றுக் கொடுத்து, அநீதிகளுக்கு எதிராக போராடும் எண்ணத்தையும் மனதில் விதைக்கிறார். தொடர்ந்து ஆசிரியர் பிரபாகரனின் அதிரடி நடவடிக்கையால், சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடும் லெனின் வடமலை பாதிக்கப்படுகிறார்.

    இதனால், ஆசிரியர் பிரபாகரனை பழிவாங்குவதற்கு சரியான நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார் லெனின் வடமலை. இந்த நிலையில், பள்ளியில் புதிதாக வேலைக்கு சேரும் ஆசிரியை மேஹாலி மீனாட்சியும், பிரபாகரனும் காதலிக்கிறார்கள். மேஹாலி மீனாட்சி ஏற்கனவே திருமணமானவராக இருக்கிறார்.

    இறுதியில் திருமணமான மேஹாலி மீனாட்சி பிரபாகரனை காதலிப்பது ஏன்? வில்லன் லெனின் வடமலை, பிரபாகரனை பழி வாங்கினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    கதாநாயகனாக நடித்திருக்கும் பிரபாகரன், கிராமத்து ஆசிரியர் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். கதாநாயகியாக நடித்திருக்கும் மேஹாலி மீனாட்சி, குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து கவர்ந்து இருக்கிறார்.

    வில்லனாக நடித்திருக்கும் இயக்குநர் லெனின் வடமலை, தோற்றம் மற்றும் நடிப்பு இரண்டிலும் மறைந்த டேனியல் பாலாஜியை நினைவுப்படுத்துகிறார். வில்லன் லெனின் வடமலையின் மகனாக நடித்திருக்கும் சிறுவன் துகின் சே குவேரா, வியக்க வைக்கும் விதத்தில் வசன உச்சரிப்பு, உடல் மொழி என்று நடிப்பில் மிரட்டுகிறார்.

    இயக்கம்

    சாதி பாகுபாடு மற்றும் மூடநம்பிக்கையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் லெனின் வடமலை. தற்போதைய காலக்கட்டத்தில், அறிவியலும், தொழில்நுட்பமும் மிகப்பெரிய வளர்ச்சியடைந்தாலும், இன்னமும் சாதி பாகுபாடு மற்றும் மூடநம்பிக்கையில் மூழ்கியிருக்கும் மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். விறுவிறுப்பான காட்சிகள் இருந்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.

    இசை

    சௌந்தர்யன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.

    ஒளிப்பதிவு

    ஒளிப்பதிவாளர் ஜான்ஸ் வி.ஜெரின், தனது பணியை சிறப்பாக செய்து இருக்கிறார்.

    ரேட்டிங்- 2/5

    • தொடர்ச்சியாக ஏழு முறை அதே இடத்திலிருந்து எம்.பி.யாக வெற்றி பெற்று சாதனை படைத்தார்.
    • மும்பையில் நடந்த 26/11 பயங்கரவாதத் தாக்குதலுக்கு தார்மீகப் பொறுப்பேற்று 2008 ஆம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய உள்துறை அமைச்சருமான சிவராஜ் பாட்டீல் (90) காலமானார்.

    வயது மூப்பு மற்றும் உடல்குறைவு காரணமாக நீண்ட காலமாக மகாராஷ்டிராவின் லாத்தூரில் வீட்டு பராமரிப்பில் இருந்த அவர், நேற்று காலை 6.30 மணியளவில் உயிரிழந்தார்.

    தனது நீண்ட அரசியல் வாழ்க்கையில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார் சிவராஜ் பாட்டீல்.

    1980 ஆம் ஆண்டு முதல் முறையாக லத்தூரில் இருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் தேசிய அரசியலில் நுழைந்தார். தொடர்ச்சியாக ஏழு முறை அதே இடத்திலிருந்து எம்.பி.யாக வெற்றி பெற்று சாதனை படைத்தார்.

    அன்றிலிருந்து 1999 வரை, இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி அரசாங்கங்களில் பாதுகாப்பு, வணிகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து போன்ற பல முக்கிய துறைகளில் அமைச்சராகப் பணியாற்றினார்.

    2004 ஆம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தில் மத்திய உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற சிவராஜ் பாட்டீல், மும்பையில் நடந்த 26/11 பயங்கரவாதத் தாக்குதலுக்கு தார்மீகப் பொறுப்பேற்று 2008 ஆம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    பின்னர் 2010 முதல் 2015 வரை பஞ்சாப் ஆளுநராகவும் அவர் பணியாற்றினார்.

    இந்நிலையில் அவரது மறைவுக்கு பிரதமர் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்தனர். இன்று, சிவராஜ் பாட்டீலின் உடல் அவரது சொந்த ஊரான வர்வந்தி கிராமத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

    வர்வந்தி கிராமத்தில் அவருக்கு சொந்தமான பண்ணையில் சிவராஜ் பாட்டீலின் உடல் அமர்ந்து தியானம் செய்யும் நிலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

    இந்த இறுதிச் சடங்கில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, முன்னாள் மகாராஷ்டிர முதல்வர் அசோக் சாவன் உள்ளிட்டோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.  

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது.
    • இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஏராளமான அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத்தொகை (டிஏ) சரண்டா், உயா்க்கல்விக்கான ஊக்கத்தொகை ஆகியவற்றை வழங்க வேண்டும்.

    தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் ஆசிரியா்கள், சத்துணவு ஊழியா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், செவிலியா்கள், வருவாய் கிராம உதவியாளா்கள் மற்றும் ஊா்ப்புற நூலகர்கள் உள்ளிட்டோருக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும்.

    சாலைப்பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை முறைப்படுத்த வேண்டும். 7-வது ஊதிய குழுவின் 21 மாத நிலுவைத்தொகையை வழங்க வேண்டும். ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் பணியாளா்கள், ஆசிரியா்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியா்கள் ஆகியோா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ராஜேந்திரன், பாலசுப்பிரமணியன், பாண்டியம்மாள், வேலுமணி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஏராளமான அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • தேர்தலை குறி வைத்து கூடுதல் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
    • இந்துக்களின் பாதுகாவலர்கள் என பா.ஜ.க. அரசியல் செய்கிறது.

    திருச்சி:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தின் கடன் சுமை ரூ.10 லட்சம் கோடியை தொடுவதாக உள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் ஒரு கோடி மகளிர்க்கு உரிமை தொகை வழங்கி வந்ததாகவும், தற்போது 36 லட்சம் பேரை கூடுதலாக இணைத்து வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர். இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது?

    60 வருடங்களாக இந்த இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்து இருக்கிறார்கள். ஆனால் பெண்கள் தினமும் ரூ.30 சம்பாதிக்க முடியாத ஒரு நிலையைத் தான் இந்த ஆட்சியாளர்கள் ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்பது தானே உண்மை. இன்னும் இரண்டு மாதத்தில் தேர்தல் வருகிறது. ஆகவே தேர்தலை குறி வைத்து கூடுதல் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

    செய்தி மற்றும் விளம்பர அரசியலைத் தாண்டி இவர்கள், சேவை மற்றும் மக்கள் அரசியலுக்கு வரவில்லை, வரமாட்டார்கள். மக்கள் அரசியல் வந்தால் இந்த மக்கள் உழைத்து சம்பாதிப்பதற்கு வசதியை ஏற்படுத்தி இருப்பார்கள். இந்தக் கூடுதல் பேருக்கு மகளிர் உரிமை தொகையை ஏன் கடந்த ஆண்டு கொடுக்கவில்லை?

    அதேபோன்று மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினியையும் பிப்ரவரி மாதத்தில் கொடுக்க இருப்பதாக சொல்கிறார்கள். இந்த மக்கள் எப்போது விழிக்க போகிறார்கள் என தெரியவில்லை. பத்து லட்சம் கோடி கடனை ஏற்படுத்தியிருக்கும் தி.மு.க. அரசாங்கம், ஒரு நலத்திட்டத்தை கொண்டு வந்து செயல்படுத்தி இருக்கிறது என சொல்லுங்கள்.

    பஸ்சில் மகளிருக்கு இலவச கட்டணம், அந்த பணத்தை அவரது தந்தை, சகோதரனிடம் வாங்கிக் கொள்கிறார்கள். தன்மானம் மிக்க தமிழன் தனது தாய் ரூ.ஆயிரத்துக்கு கையேந்தி நிற்பதை ஏற்கமாட்டான்.

    இவர்களுக்கு தேர்தலுக்கு முன்பாக ஏன் அக்கறை வரமாட்டேன் என்கிறது. தமிழகத்தில் எந்த அமைச்சர் துறையில் ஊழல் நடக்கவில்லை? இடி வந்தால் டாடி, மோடியை பார்க்க ஓடுகிறார். மூன்று நிதி ஆயோக் கூட்டங்களில் கலந்து கொள்ளாத முதல்வர் ஏன் ஓடிச் சென்றார்.

    நாட்டின் வளர்ச்சியை பற்றி சிந்திப்பவர்கள் ஜாதி, மதம், கடவுளை பற்றி சிந்திக்க மாட்டார்கள். இதுவரை முருகன் மீது வராத பாசம் ஏன் இப்போது அவர்களுக்கு வருகிறது. காவிரி நீர் பிரச்சனைக்காக இவர்கள் போராட்டம் நடத்தினார்களா?

    அயோத்தி பிரச்சனையை வைத்து அரசியல் செய்தார்கள். இப்போது அங்கு ராமர் கோவில் கட்டி விட்டதால் சர்ச்சை நீங்கி அந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததால் முருகனை கையில் எடுத்திருக்கிறார்கள். அதன் மூலம் திருப்பரங்குன்றம் விவகாரத்தை பிரச்சனையாக்க முயற்சி நடக்கிறது.

    இந்தியாவில் ஐந்து ஆண்டுகள் நிலையான ஆட்சிக்கு வித்திட்டது பா.ஜ.க. என கருணாநிதி பாராட்டி பேசி உள்ளார். பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு தி.மு.க.வே காரணம்.

    பா.ஜ.க.வுக்கு சதி திட்டம் தீட்டி கொடுப்பது தி.மு.க. தான். அவர்கள் வந்து விடுவார்கள் வந்து விடுவார்கள் என பயமுறுத்தி சிறுபான்மை வாக்குகளை தக்க வைக்க தி.மு.க. அரசியல் செய்கிறது.

    இந்துக்களின் பாதுகாவலர்கள் என பா.ஜ.க. அரசியல் செய்கிறது. ஆர்எஸ்எஸ் நடத்திய நிகழ்வில் பாரதி குறித்து நான் பேசினேன். தி.மு.க. மேடையிலும் பாரதி குறித்து பேச சொன்னால் பேசுவேன்.

    தமிழ் என் தாய். தாய் இருக்கும் இடத்தில் மகன் இருப்பான். திராவிட மேடைகளில் 12 ஆண்டுகள் நான் பேசியது அப்போது இனித்ததா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மைதானத்திற்கு வந்த மெஸ்ஸியை சுற்றி அதிகாரிகள் இருந்ததால் ரசிகர்கள் அவரை சரியாக பார்க்க முடியவில்லை.
    • மேலும் அவர் உடனே கிளம்பியதால் ரசிகர்கள் ஆத்திரமடைந்தனர்.

    அர்ஜென்டினா அணியின் கேப்டனான பிரபல கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு வந்துள்ளார். அவரை காண்பதற்காக ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த கால்பந்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கோஷம் எழுப்பி மகிழ்ச்சி ஆரவாரம் எழுப்பினர்.

    இதனையடுத்து கொல்கத்தாவில் லேக் டவுன் பகுதியில் ஸ்ரீபூமி விளையாட்டு கிளப் சார்பில் 70 அடி உயரத்தில் நிறுவப்பட்ட தனது உருவச்சிலையை மெஸ்ஸி காணொலி மூலம் திறந்து வைத்தார்.

    அதனை தொடர்ந்து சால்ட்லேக் ஸ்டேடியத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த மைதானத்தில் வருகை தந்த மெஸ்ஸிக்கு ரசிகர்கள் உற்சாகத்துடன் கோஷம் எழுப்பி மகிழ்ச்சி ஆரவாரம் எழுப்பினர். மைதானத்திற்கு வந்த மெஸ்ஸியை சுற்றி அதிகாரிகள் இருந்ததால் அவரை சரியாக பார்க்க முடியவில்லை.

    மேலும் அவர் உடனே கிளம்பியதால் ரசிகர்கள் ஆத்திரமடைந்தனர். இதனால் மைதானத்தில் தண்ணீர் பாட்டில்களை எறிந்தும் மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையை அடித்தும் ரசிகர்கள் வன்முறையில் ஈடுப்பட்டனர். இதனால் ரசிகர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

    இந்நிலையில் நிர்வாக குறைபாடு காரணமாக நிகழ்ந்த இந்த சம்பவத்திற்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியிடமும் ரசிகர்களிடமும் மன்னிப்பு கோரியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    சால்ட் லேக் மைதானத்தில் இன்று நடந்த நிர்வாகக் குறைபாட்டுக்கு நான் மிகவும் வருத்தமடைந்து அதிர்ச்சியடைந்துள்ளேன். இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்காக லியோனல் மெஸ்ஸி மற்றும் அனைத்து விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் அவரது ரசிகர்களிடம் நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைப்பதாக அவர் அறிவித்துள்ளார்.

    • 26 பாராளுமன்ற தொகுதிகளில் கடந்த தேர்தலின்போது பா.ஜ.க. குறிப்பிட்ட சட்டமன்ற தொகுதிகளில் அதிக வாக்குகளை பெற்று உள்ளது.
    • அ.தி.மு.க.விடம் இருந்து 70 தொகுதிகளை கேட்டு பெற்று 50 இடங்களில் களம் இறங்க பா.ஜ.க. முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

    அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க. தமிழகத்தில் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் விவரங்களை பட்டியலிட்டு வைத்து உள்ளது. இந்த பட்டியல் தமிழகத்தில் அமித்ஷா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது அ.தி.மு.க. தலைமையிடம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    26 பாராளுமன்ற தொகுதிகளில் கடந்த தேர்தலின்போது பா.ஜ.க. குறிப்பிட்ட சட்டமன்ற தொகுதிகளில் அதிக வாக்குகளை பெற்று உள்ளது. அந்த தொகுதிகளில் 20 முதல் 40 சதவீதம் வரையில் பா.ஜ.க. கட்சிக்கு வாக்குகள் கிடைத்து உள்ளன.

    அதனை மையமாக வைத்தே சென்னை முதல் குமரி வரை 50 சட்டமன்ற தொகுதிகளை பா.ஜ.க. கட்சி அடையாளம் கண்டுள்ளது. அது தொடர்பான விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.

    அரக்கோணம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சோளிங்கர், மத்திய சென்னையில் எழும்பூர், துறைமுகம், ஆயிரம்விளக்கு, வடசென்னையில் கொளத்தூர், தென்சென்னையில் மயிலாப்பூர், தி.நகர், வேளச்சேரி, விருகம்பாக்கம் ஆகிய தொகுதிகள் முதன்மையானவையாக இடம் பெற்றுள்ளன.

    கோவை பாராளுமன்ற தொகுதியில் கோவை வடக்கு, கோவை தெற்கு, கவுண்டன்பாளையம், பல்லடம், சிங்காநல்லூர், சூலூர், தர்மபுரி தொகுதியில் பாலக்கோடு, திண்டுக்கல்லில் ஒட்டன்சத்திரம், ஈரோட்டில் பவானி, கள்ளக்குறிச்சியில் சங்கராபுரம், கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் குளச்சல், கன்னியாகுமரி, கிள்ளியூர், நாகர்கோவில், பத்மநாபபுரம், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிகளும் இதில் அடங்கி உள்ளன.

    கரூரில் குளித்தலை, கிருஷ்ணகிரியில் ஓசூர், தளி, மதுரையில் மதுரை தெற்கு, நாமக்கல்லில் ராசிபுரம், நீலகிரியில் குன்னூர், மேட்டுப்பாளையம், ஊட்டி சட்டமன்ற தொகுதிகளும் பெரம்பலூர் தொகுதியில் பெரம்பலூர், பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் கிணத்துகடவு, தொண்டா முத்தூர், வால்பாறை, ராமநாதபுரம் தொகுதியில் பரமக்குடி, தென்காசி எம்.பி. தொகுதியில் தென்காசி, தேனி பாராளுமன்ற தொகுதியில் போடி, தூத்துக்குடி தொகுதிக்குட்பட்ட ஒட்டபிடாரம், திருச்சி தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம் ஆகிய தொகுதிகளும் நெல்லை பாராளுமன்ற தொகுதியில் ஆலங்குளம், அம்பை, நாங்குநேரி, பாளையங்கோட்டை, ராதாபுரம், வேலூரில் ஆம்பூர், அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம், வேலூர், விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அருப்புக்கோட்டை ஆகிய தொகுதிகளும் இடம் பெற்றுள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

    இது தவிர கடந்த பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகள் 13 தொகுதிகளிலும் கூடுதல் வாக்குகளை பெற்று இருப்பதாகவும் அது தொடர்பான பட்டியலை தனியாகவும் பா.ஜ.க. கட்சி தயாரித்து வைத்துள்ளது.

    மொத்தமாக அ.தி.மு.க.விடம் இருந்து 70 தொகுதிகளை கேட்டு பெற்று 50 இடங்களில் களம் இறங்க பா.ஜ.க. முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது. மீதம் உள்ள 20 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு பிரித்து கொடுப்பதற்கும் அந்த கட்சி முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

    இப்படி 50 தொகுதிகளில் களம் இறங்கும் பா.ஜ.க. கட்சி நிச்சயம் 20 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற அமித்ஷா வியூகம் வகுத்து இருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.

    வருகிற 15-ந்தேதி முதல் அ.தி.மு.க.வினர் விருப்ப மனுக்களை வாங்கி பூர்த்தி செய்து தலைமை அலுவலகத்தில் அளிக்கலாம் என்று அ.தி.மு.க. அறிவித்துள்ள நிலையில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட விரும்பும் தொகுதிகள் பட்டியல் வெளியாகி இருப்பது அ.தி.மு.க.வை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

    • மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு வருகின்றன.
    • காங்கிரஸ் தலைமையிலான UDF அதிக இடங்களில் முன்னிலை பெற்று காணப்படுகிறது.

    கேரள மாநிலத்தில் உள்ள 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 9 மற்றும் 11 தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது.

    இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி, கம்யூனிஸ்டு கட்சிகள் அடங்கிய இடதுசாரி ஜனநாயக முன்னணி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளிட்டவைகள் போட்டியிட்டன.

    இன்று வாக்கு எண்ணிக்கை மொத்தம் 244 மையங்களிலும் சரியாக காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.  முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு வருகின்றன.

    12 மணி நிலவரப்படி, காங்கிரஸ் தலைமையிலான UDF அதிக இடங்களில் முன்னிலை பெற்று காணப்படுகிறது.

    மொத்த கிராம பஞ்சாயத்துகளில் காங்கிரசின் UDF, 445 இடங்களிலும், ஆளும் இடது முன்னணியான LDF, 370 இடங்களிலும் முன்னிலை வகித்தன. மேலும், நகராட்சிகளிலும் UDF 55 இடங்களைப் பிடித்து முன்னிலை வகிக்கிறது. 87 நகராட்சிகளில் UDF - 55 இடங்களிலும் LDF 28 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. கோழிக்கோட்டில் இடது முன்னணியான LDF முன்னிலை வகிக்கிறது. 

    அதே சமயம் கேரளாவில் பெரிய செல்வாக்கு இல்லாத பாஜக இந்த தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியில் 45 வார்டுகளில் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் 6 இடங்களில் வெற்றி பெற்றால், மேயர் பதவியைப் பிடிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

    கேரள உள்ளாட்சி தேர்தல் அடுத்தாண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படும் நிலையில் ஆளும் இடது முன்னணி பின்னடைவை சந்தித்துள்ளது கவனம் பெற்றுள்ளது. 

    • ரெட்மி நோட் 14 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ.17,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • 45W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5110mAh பேட்டரியை வழங்கியுள்ளது.

    இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு, ரெட்மி நோட் 14 5ஜி விலை குறைக்கப்பட்டுள்ளது. இது ரெட்மி நோட் 15 சீரிசின் இந்திய வெளியீட்டுக்கு முன் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் ரெட்மி நோட் 15 சீரிஸ் வருகிற ஜனவரி 6ஆம் தேதி அறிமுகமாகும் என்று சியோமி உறுதிப்படுத்தியது.

    நாட்டில் தனது சந்தைப் பங்கை வளர்த்துக் கொள்ளும் நோக்கில் சியோமி நிறுவனத்திற்கு இது ஒரு முக்கியமான ஸ்மார்ட்போன் சீரிசாக இருக்கும்.

    புதிய விலை விவரங்கள்:

    ரெட்மி நோட் 14 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ.17,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது 2024ஆம் ஆண்டில் ரெட்மி நோட் 14 5ஜி சீரிசின் ஆரம்ப விலையாகும். தற்போது, இந்த விலை ரூ.1,500 குறைக்கப்பட்டு ரூ.16,499 ஆக மாறியுள்ளது.

    இத்துடன் HDFC வங்கி கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும் போது, நீங்கள் ரூ.1,000 கூடுதல் தள்ளுபடியைப் பெறலாம். இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.15,499 ஆகக் குறையும். இவைதவிர மாத தவணை சலுகைகளும் உள்ளன. பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனினை சியோமி இந்தியா வலைத்தளத்தில் இருந்து நேரடியாக வாங்கலாம்.

    அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில், இந்த ஸ்மார்ட்போன் அதன் பிரிவில் அதிக பிரைட்னஸ் கொண்டிருந்தது. இத்துடன் சோனி நிறுவனத்தின் மூன்று கேமரா சென்சார்களை கொண்டிருந்தது. இதில் 50MP சோனி பிரைமரி கேமரா, 8MP அல்ட்ராவைடு லென்ஸ் மற்றும் 2MP மேக்ரோ சென்சார் வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்பிற்கு, முன்புறத்தில் 20MP சென்சார் உள்ளது.

    இந்த நிறுவனம் 45W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5110mAh பேட்டரியை வழங்கியுள்ளது. பாதுகாப்பிற்காக, திரையின் மேல் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 7025 பிராசஸரால் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் சியோமியின் ஹைப்பர்ஓஎஸ் கொண்டிருக்கிறது.

    • ரஜினிகாந்த் = வயதை வென்ற வசீகரம்!
    • பிறந்தநாளை ரஜினி ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடினர்.

    நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளை ரஜினி ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடினர்.

    இந்த நிலையில், தி.முக. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ரஜினிக்கு எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

    அந்த பதிவில் அவர்,"ரஜினிகாந்த் = வயதை வென்ற வசீகரம்!

    மேடையில் ஏறினால் அனைவரையும் மகிழ்விக்கும் சொல்வன்மை!

    உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத கள்ளம் கபடமற்ற நெஞ்சம்!

    ஆறிலிருந்து அறுபதுவரைக்கும் அரைநூற்றாண்டாகக் கவர்ந்திழுக்கும் என் நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு உளம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!

    மென்மேலும் பல வெற்றிப் படைப்புகளை அளித்து, மக்களின் அன்போடும் ஆதரவோடும் தங்கள் வெற்றிக்கொடி தொடர்ந்து பறக்கட்டும்! என்று குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து ரஜினிகாந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறுகையில்,"என் பிறந்த நாளுக்கு வாழ்த்துத் தெரிவித்த என்னுடைய அன்பு நண்பர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி" என்றார்.

    இதேபோல், பிறந்த நாள் வாழ்த்து கூறிய எனது அருமை நண்பர் கமல்ஹாசனுக்கும் எனது நன்றி என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து எக்ஸ் தள பக்கத்தில், "என் பிறந்த நாளில் வாழ்த்துத் தெரிவித்த என்னுடைய அருமை நண்பர் திரு கமல்ஹாசன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி" என்றார்.

    • பாசன திட்டத்தின் கீழ் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
    • அணையில் இருந்து வினாடிக்கு 356 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமராவதி அணை உள்ளது. இந்த அணை மூலம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசன திட்டத்தின் கீழ் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    கடந்த சில நாட்களாக, அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்தது. இதன் எதிரொலியாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்தது.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் அணைக்கு வினாடிக்கு 534 கன அடி தண்ணீர் வந்தது. இன்று காலை 90 அடி உயரம் கொண்ட அணையில் 87.11 அடி உயரத்துக்கு தண்ணீர் உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 356 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    முழு கொள்ளளவை நெருங்கும் நிலையில் உள்ள அமராவதி அணை தற்போது கடல் போல் காட்சி அளிக்கிறது. அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

    ×