என் மலர்
செய்திகள்
- இளம்பெண்கள் அதிக மதுபோதையில் சாலைகளில் தடுமாறி விழுவதும், மயக்க நிலையில் இருப்பதும் பதிவாகியுள்ளது.
- இந்திய நகரங்களின் இரவு நேரக் கலாச்சாரம் குறித்து காரசாரமான விவாதம் நடந்து வருகிறது.
புத்தாண்டு கொண்டாட்டத்துடன் 2026 ஆண்டு ஆண்டு நேற்று இனிதே தொடங்கியது. டிசம்பர் 31 இரவில் புத்தாண்டை வரவேற்க இந்தியாவெங்கும் பலர் வீதிகளில் திரண்டனர்.
அதே சமயம் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இளைஞர்கள், பாட்டு, கச்சேரி, பார்ட்டி என அன்றைய இரவு புத்தாண்டை கொண்டாடித் தீர்த்தனர்.
அந்த வகையில் நாடு முழுவதிலுமிருந்து வந்து, இளைஞர்கள் அதிகம் பணியாற்றும் கர்நாடக தலைநகர் பெங்களூருவிலும் இரவில் கொண்டாட்டம் களைகட்டியது.
ஆனால் பல இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் அன்றைய இரவு மது மற்றும் போதையின் பிடியில் வீதிகளில் தள்ளாடிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இளைஞர்கள் மத்தியில் வளர்த்து வரும் போதைக் கலாச்சாரம் குறித்த கவலையை இவை ஏற்படுத்தி உள்ளன. பலரும் இந்த வீடியோக்களை தங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த வீடியோக்களில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் அதிக மதுபோதையில் சாலைகளில் தடுமாறி விழுவதும், சிலர் மயக்க நிலையில் இருப்பதும் பதிவாகியுள்ளது.
குறிப்பாக, பெங்களூருவின் புகழ்பெற்ற எம்.ஜி. சாலைமற்றும் இந்திரா நகர் பகுதிகளில் இதுபோன்ற காட்சிகள் அதிகமாகக் காணப்பட்டன. அதேபோல டெல்லி அருகே உள்ள குரேகானிலும் இதுபோன்ற காட்சிகள் பதிவாகி உள்ளன.
இந்த வீடியோக்கள் பகிரப்பட்டு, இந்திய நகரங்களின் இரவு நேரக் கலாச்சாரம் குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
- நான் பள்ளியில் இருந்தபோது, உலக கோப்பை சிறப்பு வாய்ந்ததாக உணர்ந்தோம்.
- இந்தியா முதல் சுற்றில் இங்கிலாந்து, இலங்கை போன்ற அணிகளை எதிர்கொள்ளும்.
10-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்த முறை ஐசிசி டி20 உலக கோப்பையை யாரும் பார்க்கப் போவதில்லை என தமிழக வீரர் அஸ்வின் கூறியுள்ளார்.
இது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியதாவது:-
இந்த முறை ஐசிசி டி20 உலக கோப்பையை யாரும் பார்க்கப் போவதில்லை. இந்தியா மற்றும் அமெரிக்கா மற்றும் இந்தியா மற்றும் நமீபியா போன்ற போட்டிகள் உங்களை டி20 உலக கோப்பையிலிருந்து உண்மையில் விலக்கி வைக்கின்றன.
1996, 1999 மற்றும் 2003 -ம் ஆண்டுகளில், நான் பள்ளியில் இருந்தபோது, உலக கோப்பை சிறப்பு வாய்ந்ததாக உணர்ந்தோம். உலகக் கோப்பை அட்டைகளைச் சேகரித்து அட்டவணையை அச்சிட்டோம். ஏனெனில் போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வந்தது. அந்த எதிர்பார்ப்பு இயல்பாகவே உருவாகும்.
இந்தியா முதல் சுற்றில் இங்கிலாந்து, இலங்கை போன்ற அணிகளை எதிர்கொள்ளும். அது அதை இன்னும் உற்சாகப்படுத்தியது. இன்றைய காலகட்டத்தில், அந்த எதிர்பார்ப்பு உணர்வு இல்லை.
- இது WP Apex அப்சைடு டவுன் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் சஸ்பென்ஷன் கொண்டிருக்கும்.
- கேடிஎம்160 டியூக்கைப் போலவே அதே இலகுவான அலாய் வீல்களையும் கொண்டிருக்கும்.
கேடிஎம் நிறுவனம் வரும் வாரங்களில் இந்திய சந்தையில் தனது RC 160 பைக்கை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக்கின் விலை சுமார் ரூ. 1.85 லட்சம் முதல் ரூ. 1.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முந்தைய ஸ்பை புகைப்படங்களின் படி, வரவிருக்கும் RC 160, அதிக திறன் கொண்ட கேடிஎம் RC 200 இன் அதே வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என தெரிகிறது.
இந்த பைக்கில் கேடிஎம்160 டியூக் மாடலில் உள்ள அதே 164.2cc, லிக்விட் கூல்டு, சிங்கில்-சிலிண்டர் என்ஜின் வழங்கப்படலாம். இந்த யூனிட் 18.7hp பவர், 15.5Nm டார்க் திறனை உற்பத்தி செய்யும். இருப்பினும், சிறந்த டாப்-எண்ட் செயல்திறனுக்காக கேடிஎம் இந்த பைக்கில் டியூனிங்கை மாற்றலாம்.
இது தவிர, இந்த பைக் அதன் பெரும்பாலான பாகங்களை கேடிஎம்160 டியூக்குடன் பொதுவானதாகப் பகிர்ந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது WP Apex அப்சைடு டவுன் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் சஸ்பென்ஷன் கொண்டிருக்கும். மேலும் கேடிஎம்160 டியூக்கைப் போலவே அதே இலகுவான அலாய் வீல்களையும் கொண்டிருக்கும்.
பிரேக்கிங்கை பொருத்தவரை முன்புறம் 320mm, பின்புறம் 230mm டிஸ்க் பிரேக், டூயல் சேனல் ABS வழங்கப்படலாம். கேடிஎம் நிறுவனம், 160 டியூக் பைக்கை முதன்முதலில் அறிமுகப்படுத்தியதைப் போலவே, LCD கன்சோலுடன் கூடிய மோட்டார்சைக்கிளை வழங்க வாய்ப்புள்ளது.
இந்திய சந்தையில் புது கேடிஎம் பைக் 150-160cc பிரிவில் செயல்திறன் சார்ந்த சூப்பர்ஸ்போர்ட் மாடலான யமஹா R15 4V மாடலுக்கு போட்டியாக இருக்கும்.
- கழிவுநீர் கலந்த மாசுபட்ட குடிநீரை குடித்தது தான் இதற்கு காரணம் என்பது தெரிய வந்துள்ளது.
- குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
இந்தூர்:
மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் தூய்மையான நகரங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இங்குள்ள பாகிரத்புரா பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் கடந்த 24-ந்தேதி முதல் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கழிவுநீர் கலந்த மாசுபட்ட குடிநீரை குடித்தது தான் இதற்கு காரணம் என்பது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தில் முதல்கட்டமாக 7 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த மேலும் 4 பேர் தற்போது பலியாகி உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மத்திய பிரதேச முதல்-மந்திரி மோகன் யாதவ், 3 நகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். ஒரு மண்டல அதிகாரி மற்றும் ஒரு உதவி பொறியாளர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்-மந்திரி மோகன் யாதவ் அறிவித்தார்.
குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இந்த பிரச்சனை கடந்த 6 மாதங்களாக நீடித்து வருவதாகவும், இதன் விளைவாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டு இருப்பதாகவும் மாவட்ட நிர்வாகம் மீது பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தொடர்ந்து குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் அந்த பகுதியில் வசிக்கும் 1,400-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- படத்தின் பாடல்களை பாடலாசிரியர்கள் விவேகா மற்றும் பத்மாவதி ஆகியோர் எழுதியுள்ளனர்.
- இப்படத்தின் போஸ்டரை இயக்குநர் சுந்தர்.சி வெளியிட்டு, படத்தின் ஒரு பாடலையும் பார்த்துவிட்டு படக்குழுவை பாராட்டி இருந்தார்.
செல்ஃப் ஸ்டார்ட் புரொடக்சன்ஸ் (Self Start Productions) சார்பில், KJ சுரேந்தர் தயாரித்து, இயக்கியிருக்கும் படம் 'மாயபிம்பம்'. புதுமுகங்கள் ஜானகி, ஆகாஷ் பிரபு, ஹரி கிருஷ்ணன், ராஜேஷ், அருண் குமார் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
புதுமுக நடிகர் - நடிகைகள் மட்டுமில்லாமல் இசையமைப்பாளர் நந்தா, படத்தொகுப்பாளர் வினோத், ஒளிப்பதிவாளர் எட்வின் என தொழில்நுட்ப கலைஞர்களும் முழுக்க முழுக்க புதுமுகங்களே. படத்தின் பாடல்களை பாடலாசிரியர்கள் விவேகா மற்றும் பத்மாவதி ஆகியோர் எழுதியுள்ளனர்.
2005-ல் நடக்கும் காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தின் போஸ்டரை இயக்குநர் சுந்தர்.சி வெளியிட்டு, படத்தின் ஒரு பாடலையும் பார்த்துவிட்டு படக்குழுவை பாராட்டி இருந்தார்.

இந்த நிலையில், 'மாயபிம்பம்' வருகிற 23-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
- நயன்தாரா தானாக முன்வந்து, 'என்ன அனில், படத்துக்கு புரோமோஷன் இல்லையா?' எனக் கேட்கிறார்.
- இதைக் கேட்டு அனில் ரவிபுடி மயங்கி விழுவது போன்ற காட்சி காமெடியாக காட்டப்பட்டுள்ளது.
தெலுங்கில் அனில் ரவிபுடி இயக்கத்தில் சிரஞ்சீவி தனது 157 படத்தில் நடித்து முடித்துள்ளார்.
படத்திற்கு 'மன ஷங்கர வரபிரசாத் காரு' என தலைப்பு வைத்துள்ளனர். படத்தின் நாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். கேத்ரீன் தெரேசா முக்கிய கதாப்பாத்திரம் ஏற்றுள்ளார்.
படத்தை சாகு கரபதி மற்றும் சுஷ்மிதா கொனிடேலா தயாரிக்கின்றனர். இந்த படத்தின் முதல் பாடல் "மீசால பில்லா" பாடல் வைரலானது.
இப்படம் பொங்கலை ஒட்டி வரும் ஜனவரி 12 அன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. படத்தின் பு ரோமோஷன் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்த படத்தின் புரோமோஷனில் நயன்தாரா கலந்துகொண்டுள்ளார்

பொதுவாக நயன்தாரா தான் நடிக்கும் படங்களில் புரோமோஷனில் கலந்துகொள்ளவே மாட்டார். இதை ஒரு ரூல் ஆகவே அவர் கடைபிடித்து வந்தார். இது பலமுறை விமர்சனத்துக்கும் உள்ளானது.
ஒரு படத்திற்கு புரோமோஷன் என்பது இன்றைய காலகட்டத்தில் அத்தியாவசிய தேவகையாகவே மாறிவிட்டது.
ஆனால் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கினாலும் தான் நடித்த படத்திற்கு நயன்தாரா புரோமோஷன் செய்யாதது தயாரிப்பாளர்களை முகம் சுழிக்க வைத்தது. அவர் சமீபமாக நடித்த எனது தமிழ் படங்களின் புரோமோஷனிலும் கலந்துகொள்ளவில்லை.
ஆனால் தற்போது தெலுங்கு படத்திற்காக நயன்தாரா தனது பிடிவாதத்தை தளர்த்தியுள்ளது மேலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. 'மன ஷங்கர வரபிரசாத் காரு' படத்தில் புரோமோஷனில் ஆரம்பம் முதலே நயன்தாரா பங்கேற்று வருகிறார்.
இதற்கிடையே 'மன ஷங்கர வரபிரசாத் காரு' படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நயன்தாரா தானாக முன்வந்து, 'என்ன அனில், படத்துக்கு புரோமோஷன் இல்லையா?' எனக் கேட்கிறார். இதைக் கேட்டு அனில் ரவிபுடி மயங்கி விழுவது போன்ற காட்சி காமெடியாக காட்டப்பட்டுள்ளது.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் தமிழ் ரசிகர்கள், விமர்சகர்கள் நயன்தாராவின் பாரபட்சமான செயலுக்கு கண்டனம் தெரிவித்தும் ட்ரோல் செய்தும் வருகின்றனர்.
தமிழ் சினிமா மூலமே லேடி சூப்பர்ஸ்டார் என்ற அளவுக்கு வளர்ந்த நயன்தாரா தமிழ் சினிமா மீது பாரபட்சம் காட்டுவது பலரிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.
- அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு பேச்சுவார்த்தை நடத்தினர்.
- ஆலோசனையின்போது பழைய ஓய்வூதிய திட்டம், காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது.
சென்னை தலைமைச் செயலகத்தில் போட்டா ஜியோ, ஜாக்டோ-ஜியோ அமைப்பினருடன் அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை நடத்தினர்.
போட்டா ஜியோ, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வரும் 6-ந்தேதி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவித்துள்ள நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆலோசனையின்போது பழைய ஓய்வூதிய திட்டம், காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது.
அமைச்சர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை அடுத்து கோரிக்கை ஏற்கப்பட்டதாக போட்டா ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போட்டா ஜியோ நிர்வாகிகள் கூறுகையில்,
பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளார் என்று தெரிவித்தனர்.
- சாதி, மத மோதல்களை உருவாக்கும் வகையில் பொறுப்புகளில் உள்ளவர்களே பேசுகிறார்கள்.
- கிறிஸ்துமஸ் விழாவின் போது நாட்டின் பல பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டது.
திருச்சியல் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் சமத்துவ நடைபயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்பின் அவர் விழாவில் பேசியதாவது:-
* இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் போதைப்பொருளை நாம் நிச்சயமாக ஒழிக்க வேண்டும்.
* போதையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
* போதைப்பொருளை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஓரளவு பலன் கிடைத்துள்ளது.
* போதைப்பொருள் பழக்கம் என்பது மிகப்பெரிய நெட்ஒர்க். மத்திய, மாநில அரசுகள் இணைந்துதான் ஒழிக்க முடியும்.
* நாட்டின் எல்லைகள் வழியாக போதைப்பொருள் நாட்டிற்குள் நுழைவதை மத்திய அரசு தடுக்க வேண்டும்.
* திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 1 லட்சத்திற்கும் அதிகமான போதைமாத்திரைகள் பிடிப்பட்டுள்ளது.
* போதை ஒழிப்பில் கலைத்துறையை சேர்ந்தவர்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
* போதையை புகழ்வது போன்ற காட்சிகளை எடுப்பதை ஏற்க முடியாது.
* இளைஞர்கள் வழித்தவறி போகாமல் பெற்றோர், சகோதரர்கள் கண்காணிக்க வேண்டும்.
* பிள்ளைகளை பொறுப்புடன் வளர்க்க வேண்டும்.
* பிள்ளைகள் வழித்தவறி செல்லாமல் தடுக்க வேண்டும், பிள்ளைகளிடம் மனம் விட்டு பேசுங்கள்.
* சாதி, மத மோதல்களை உருவாக்கும் வகையில் பொறுப்புகளில் உள்ளவர்களே பேசுகிறார்கள்.
* கிறிஸ்துமஸ் விழாவின் போது நாட்டின் பல பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டது.
* ஊரே ஒற்றுமையாக இருந்த காலம் போய், மத மோதல்களை உருவாக்க சிலர் திட்டம் தீட்டுகிறார்கள்.
* மது போதையையும், மத போதையையும் தமிழகத்திற்குள் நுழைவதை தடுக்க வேண்டும்.
* வைகோவின் நோக்கம் பெரிது என்றாலும், அவரது உடல் நிலை எங்களுக்கு பெரிது என்றார்.
- கடந்த ஆண்டு ஏலத்திற்கு முன்பாக லக்னோ அணி ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக அர்ஜூன் டெண்டுல்கரை வாங்கியது.
- அர்ஜுன் டெண்டுல்கர் பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும் என யோகராஜ் கூறியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர். இவர் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்து விட்டார். ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் ஆலோசகராக உள்ளார். இவரது மகனாக அர்ஜூன் டெண்டுல்கர் இடதுகை வேகப்பந்து வீச்சாளராக உள்ளார்.
ஐபிஎல் தொடரில் கடந்த 2 ஆண்டுகளாக இருந்தார். அவருக்கு பெரும்பாலான போட்டிகளில் விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை. குறிப்பாக கடந்த ஆண்டு ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. இதனையடுத்து கடந்த ஆண்டு ஏலத்திற்கு முன்பாக லக்னோ அணி ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக அர்ஜூன் டெண்டுல்கரை வாங்கியது.
அவர் தற்போது ஐபிஎல் தொடருக்காக பந்து வீச்சு மட்டும் பேட்டிங்கில் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகிறார். இந்த நிலையில் இவரது பேட்டிங்கை பார்த்த இந்திய அணியின் முன்னாள் வீரரும் யுவராஜ் சிங் தந்தையுமான யோகராஜ் பாராட்டி உள்ளார்.
அதில், "அர்ஜுன் டெண்டுல்கர் பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும், அவர் ஒரு தரமான பேட்ஸ்மேன், அவர் சச்சினைப் போலவே பேட்டிங் செய்கிறார்" என்றார்.
- கலைஞர் கருணாநிதிக்கு அருகில் இருந்து அரசியல் கற்றுக்கொண்டவர் வைகோ.
- கலைஞர் கருணாநிதி நடைபயணம் மேற்கொண்ட போது அவருக்கு பாதுகாப்பாக நடந்தவர் வைகோ.
திருச்சியல் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் சமத்துவ நடைபயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்பின் அவர் விழாவில் பேசியதாவது:-
* 2026-ம் ஆண்டில் நான் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி இதுதான்.
* தனது பொதுவாழ்வில் தமிழ்நாட்டில் தனது காலடி படாத இடமே இல்லை என மக்கள் பிரச்சனைக்காக நடைபயணம் சென்றவர் வைகோ.
* வைகோவிற்கு 82 வயதா? 28 வயதா? என ஆச்சரியப்பட தோன்றுகிறது.
* வைகோவின் நெஞ்சுரத்தை பார்க்கும் போது அவரது வயதே நமக்கு கேள்வியாகிறது.
* தள்ளாத வயதிலும் தளராமல் தொண்டு செய்தவர் தந்தை பெரியார்.
* 83 வயதிலும் சமூக வலைதளங்கள் மூலம் இளைஞர்களுடன் அரசியல் பேசியவர் கலைஞர்.
* கலைஞர் கருணாநிதிக்கு அருகில் இருந்து அரசியல் கற்றுக்கொண்டவர் வைகோ.
* கலைஞர் கருணாநிதி நடைபயணம் மேற்கொண்ட போது அவருக்கு பாதுகாப்பாக நடந்தவர் வைகோ.
* திராவிட இயக்க பல்கலைக் கழகத்தில் பயின்றவர்கள் நானும், வைகோவும்.
* இளைஞர்களுக்கு உரிய உத்வேகத்தை வைகோவிடம் பார்க்க முடிகிறது.
* சமத்துவ நடைபயணத்தில் பங்கேற்கும் ஒவ்வொருவரையும் வைகோ தேர்வு செய்து வந்துள்ளார்.
* முதுமையை முற்றிலும் தூக்கி எறிந்துவிட்டு நடைபயணத்தை வைகோ தொடங்கி உள்ளார்.
* நடைபயணத்தால் என்ன பயன் எனக்கேட்கிறார்கள், காந்தியின் நடைபயணம்தான் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
* இதுபோன்ற நடைபயணங்கள் தான் நமது கருத்தை எளிதாக மக்களிடம் கொண்டு செல்லும்.
* இளைஞர்களுக்கு நல்வழி காட்டிட இளைஞர்களுடன் சமத்துவ பயணம் மேற்கொள்ளும் வைகோவிற்கு வாழ்த்துகள், பாராட்டுகள் என்றார்.
- பிஜாப்பூர் மாவட்டத்தில் சாலைத் திட்ட ஊழல் குறித்து செய்தி சேகரித்த பத்திரிகையாளர் முகேஷ் சந்திராகர் கொல்லப்பட்டார்.
- உலகம் முழுவதும் 533 பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சர்வதேச பத்திரிகையாளர் கூட்டமைப்பு (IFJ), 2025 ஆம் ஆண்டு உலகளவில் பத்திரிகையாளர்கள் கொலைகள் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதன்படி 2025 இல் உலகம் முழுவதும் 128 பத்திரிகையாளர்கள் தங்கள் பணியின் போது கொல்லப்பட்டுள்ளனர். 2024 இல் 122 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கொல்லப்பட்ட பத்ரிக்கையாளர்களில் 118 பேர் ஆண்கள் மற்றும் 10 பேர் பெண்கள் ஆவர்.
கொல்லப்பட்டவர்களில் 74 பேர மேற்காசிய நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர். இதில் குறிப்பாக 56 பத்திரிகையாளர்கள் காசாவில் இஸ்ரேல் - ஹமாஸ் போரின் போது கொல்லப்பட்டுள்ளனர்.

காசா
தொடர்ந்து ஆப்பிரிக்காவில் 18 பேர், சீனா உள்ளிட்ட ஆசியா-பசிபிக் நாடுகளில் 15 பேர், அமெரிக்காவில் 11 பேர், ஐரோப்பிய நாடுகளில் 10 பேர் பணியின்போது கொல்லப்பட்டனர்.
இந்தியாவில் கடந்த ஆண்டில் 4 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக இதில் பாஜக ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூர் மாவட்டத்தில் சாலைத் திட்ட ஊழல் குறித்து செய்தி சேகரித்த பத்திரிகையாளர் முகேஷ் சந்திராகர் கொல்லப்பட்டதை அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

முகேஷ் சந்திராகர்
இதுதவிர்த்து உலகளவில் பணியின்போது விபத்துகளில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொலைகளுக்கு மேலாக, உலகம் முழுவதும் 533 பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதில் ஆசியா-பசிபிக் பிராந்தியம் முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக சீனாவில் 143 பேரும், மியான்மரில் 49 பேரும் சிறையில் உள்ளனர்.
- ஆண்டிபட்டியில் இருந்து நேற்று இரவு பாதயாத்திரையாக சபரிமலைக்கு புறப்பட்டனர்.
- விபத்தில் பலியான குமார் என்ற மாரிச்சாமி ஆண்டிபட்டியில் மருந்து கடை வைத்துள்ளார்.
சின்னமனூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மேலத்தெருவை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் வருடம் தோறும் அதே பகுதியை சேர்ந்த மாரிச்சாமி என்ற குருசாமி தலைமையில் சபரிமலைக்கு பாதயாத்திரையாக செல்வது வழக்கம். அதன்படி மாரிச்சாமி (வயது55) தலைமையில் ராம்கி (35) மற்றும் 7 பேருடன் ஆண்டிபட்டியில் இருந்து நேற்று இரவு பாதயாத்திரையாக சபரிமலைக்கு புறப்பட்டனர்.
இன்று அதிகாலை அவர்கள் சின்னமனூர் அருகில் உள்ள கோட்டூர்-சீலையம்பட்டி சத்தியா கார்டன் பகுதியில் வந்து கொண்டிருந்தனர். அப்போது திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா மேலப்பாடியூரை சேர்ந்த சிவக்குமார் (34) என்பவர் வேனில் ஐயப்ப பக்தர்களுடன் சபரிமலைக்கு சென்று கொண்டிருந்தார். அதிகாலை 4.30 மணி அளவில் மற்றவர்கள் முன்னே சென்று விட மாரிச்சாமி, ராம்கி மட்டும் பின்னால் வந்துகொண்டிருந்தனர். இவர்கள் மீது அந்த வேன் பயங்கரமாக மோதியது. இதில் மாரிச்சாமி மற்றும் ராம்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதை பார்த்ததும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சின்னமனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உயிரிழந்த 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சின்னமனூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ஈஸ்வரன், மோகன்தாஸ், காந்தி ஆகியோர் வழக்குப்ப திவு செய்து விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் பலியான குமார் என்ற மாரிச்சாமி ஆண்டிபட்டியில் மருந்து கடை வைத்துள்ளார். இவரது மனைவி கல்பனாதேவி அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். மகள் கல்லூரியிலும், மகன் 12-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
இதேபோல் விபத்தில் பலியான ராம்கி சலவை தொழில் செய்து வருகிறார். இவருக்கு ஜோதி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். ஒரு மகன் 3-ம் வகுப்பும் மற்றொரு மகன் 1-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
சபரிமலைக்கு சென்ற பக்தர்கள் மீது சபரிமலைக்கு சென்ற வேன் மோதியதில் 2 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






