என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
வி (வோடபோன் ஐடியா) நிறுவனம் இந்தியாவில் நான்கு புதிய பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
வி நிறுவனம் நான்கு புதிய பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவற்றின் விலை ரூ. 155, ரூ. 239, ரூ. 666 மற்றும் ரூ. 699 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புது சலுகைகள் வி நிறுவன வலைதளம் மற்றும் மொபைல் செயலியில் ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டது.
புதிய சலுகைகளில் ரூ. 155 மற்றும் ரூ. 239 சலுகைகள் சமீபத்திய விலை உயர்வுக்கு பின் ஓரளவு குறைந்த விலையில் கிடைக்கின்றன. பலன்களை பொருத்தவரை வி ரூ. 155 சலுகையில் 1 ஜி.பி. டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், 300 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 24 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

வி ரூ. 239 சலுகையில் தினமும் 1 ஜி.பி. டேட்டா, வாய்ஸ் காலிங், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 24 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ரூ. 666 சலுகையில் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, அன்லிமிடெட் காலிங், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 77 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் பல்வேறு பலன்களும் வழங்கப்படுகிறது.
வி ரூ. 699 சலுகையில் தினமும் 3 ஜி.பி. டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 56 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் கூடுதல் பலன்களும் வழங்கப்படுகிறது.
சியோமி நிறுவனம் உருவாக்கி வரும் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் சாம்சங் டிஸ்ப்ளே பேனல் வழங்கப்பட இருக்கிறது.
சியோமி நிறுவனம் தனது மிக்ஸ் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் சாம்சங் நிறுவனத்தின் யு.டி.ஜி. பேனலை பயன்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சாம்சங் மற்றும் கார்னிங் நிறுவனங்கள் இணைந்து யு.டி.ஜி. (அல்ட்ரா தின் கிளாஸ்) மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே பேனலை கடந்த ஆண்டு உருவாக்கின.
கேலக்ஸி போல்டு/ப்ளிப் சீரிஸ் மாடல்களில் யு.டி.ஜி. பேனல்களே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சில சீன நிறுவனங்கள் சி.பி.ஐ. (கலர்லெஸ் பாலிமைடு) பேனல்களை பயன்படுத்துகின்றன. ஹூவாய் மேட் எக்ஸ் மாடலிலும் இதே பேனல் வழங்கப்பட்டு இருக்கிறது.

சாம்சங் டிஸ்ப்ளேவின் யு.டி.ஜி. பேனல் விரைவில் அறிமுகமாக இருக்கும் சியோமி மிக்ஸ் போல்டு 2 மாடலில் வழங்கப்பட இருக்கிறது. இந்த மாடலில் சாம்சங் டிஸ்ப்ளேவின் 8.01 இன்ச் ஒ.எல்.இ.டி. பேனல், முன்புறம் டி.சி.எல். சி.எஸ்.ஒ.டி. 6.52 இன்ச் பேனல் வழங்கப்படுகிறது.
முன்னணி ஓ.டி.டி. தளமான நெட்ப்ளிக்ஸ் இந்தியாவில் தனது சேவை கட்டணத்தை குறைப்பதாக திடீரென அறிவித்து இருக்கிறது.
நெட்ப்ளிக்ஸ் இந்தியா சேவை கட்டணம் குறைக்கப்பட்டது. இதனால் நெட்ப்ளிக்ஸ் சந்தா கட்டணம் முன்பை விட 18 முதல் 60 சதவீதம் வரை குறைந்துள்ளது. புதிய விலை குறைப்பு காரணமாக இந்தியாவில் நெட்ப்ளிக்ஸ் சந்தா துவக்க விலை ரூ. 149 என துவங்குகிறது.
முன்னதாக ரூ. 199 விலையில் வழங்கப்பட்டு வந்த நெட்ப்ளிக்ஸ் மொபைல் சந்தா தற்போது ரூ. 149 என மாறி இருக்கிறது. இதேபோன்று நெட்ப்ளிக்ஸ் பேசிக் சந்தா விலை ரூ. 499 இல் இருந்து தற்போது ரூ. 199 என மாறியுள்ளது.

இத்துடன் நெட்ப்ளிக்ஸ் ஸ்டாண்டர்டு சந்தா விலை ரூ. 649-இல் இருந்து ரூ. 499 என மாறி இருக்கிறது. நெட்ப்ளிக்ஸ் பிரீமியம் சந்தா விலை ரூ. 799-இல் இருந்து தற்போது ரூ. 649 என குறைக்கப்பட்டுள்ளது. அனைத்து சந்தாவும் ஒரு மாத வேலிடிட்டி கொண்டவை ஆகும்.
சமீபத்தில் அமேசான் பிரைம் சந்தா விலை இந்தியாவில் உயர்த்தப்பட்டதை அடுத்த நெட்ப்ளிக்ஸ் தனது சந்தா கட்டணங்களை குறைத்து இருக்கிறது. விலை குறைப்பு பற்றிய அறிவிப்பு நெட்ப்ளிக்ஸ் இந்தியா அதிகாரப்பூர்வ டுவிட்டர் அக்கவுண்டில் வெளியிடப்பட்டு உள்ளது.
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி நிறுவனம் இரண்டாவது இடத்தை பிடித்து அசத்தி இருக்கிறது.
ரியல்மி நிறுவனத்தின் அக்டோபர் மாத ஸ்மார்ட்போன் விற்பனை குறித்த விவரங்களை கவுண்ட்டர்பாயிண்ட் எனும் தனியார் ஆய்வு நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அதன்படி அக்டோபர் மாதத்தில் ரியல்மி நிறுவனம் இந்தியாவின் இண்டாவது மிகப்பெரும் ஸ்மார்ட்போன் பிராண்டாக உருவெடுத்து இருக்கிறது. ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி 18 சதவீதம் பங்குகளை பெற்று அசத்தியிருக்கிறது.
ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெற்ற பண்டிகை கால சிறப்பு விற்பனையில் ரியல்மி 52 சதவீத பங்குகளுடன் முதலிடம் பிடித்தது. மற்ற ஆன்லைன் வலைதளங்களை சேர்க்கும் போது ரியல்மி 27 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது.

ரியல்மி 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்கள் சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கின்றன. ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரையிலான 5ஜி போன் பிரிவில் ரியல்மி 8எஸ் 5ஜி அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் முதலிடத்தை சியோமி பிடித்து இருக்கிறது. இந்நிறுவனம் சந்தையில் 20 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது.
சியோமி, ரியல்மி நிறுவனங்களை தொடர்ந்து 16 சதவீத பங்குகளுடன் சாம்சங் மூன்றாவது இடத்திலும், 13 சதவீத பங்குகளுடன் விவோ நான்காவது இடத்தையும் பிடித்துள்ளது. முன்னதாக ரியல்மி நிறுவனம் உலகம் முழுக்க 10 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனை எனும் மைல்கல்லை எட்டியது.
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ எட்ஜ் எக்ஸ்30 ஸ்மார்ட்போன் முன்பதிவில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.
மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ எட்ஜ் எக்ஸ்30 பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை சில நாட்களுக்கு முன் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.
அறிமுகம் செய்யப்பட்டதும், ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு சீன சந்தையில் துவங்கியது. இந்த நிலையில், மோட்டோ எட்ஜ் எக்ஸ்30 முன்பதிவு நிறுத்தப்பட்டதாக லெனோவோ மொபைல் வியாபார பிரிவு பொது மேலாளர் சென் ஜின் தெரிவித்துள்ளார்.

ஐந்து இலக்க யூனிட்கள் இதுவரை விற்றுத்தீர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார். முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மோட்டோ எட்ஜ் எக்ஸ்30 விற்பனை டிசம்பர் 15 ஆம் தேதி துவங்குகிறது. சீனாவில் இந்த ஸ்மார்ட்போனின் விலை 2999 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 35,683 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அம்சங்களை பொருத்தவரை மோட்டோ எட்ஜ் எக்ஸ்30 மாடலில் 6.7 இன்ச் பிளெக்சிபில் ஒ.எல்.இ.டி. ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர், 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி, 50 எம்.பி. வைடு ஆங்கில் பிரைமரி கேமரா, 50 எம்.பி. சூப்பர் வைடு ஆங்கில் மேக்ரோ கேமரா, 2 எம்.பி. டெப்த் கேமரா, 60 எம்.பி. செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் பிளாக்ஷிப் கேலக்ஸி எஸ்21 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன.
தென் கொரியாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங் தனது கேலக்ஸி எஸ்21 சீரிஸ் மாடல்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இந்த சலுகைகள் சாம்சங் பிரத்யேக விற்பனை மையங்கள், சாம்சங் வலைதளம் மற்றும் முன்னணி ஆப்லைன் விற்பனை மையங்களில் வழங்கப்படுகின்றன. இந்த சலுகைகள் டிசம்பர் 22 ஆம் தேதி வரை வழங்கப்படுகின்றன.
சிறப்பு சலுகையின் படி கேலக்ஸி எஸ்21 பிளஸ் வாங்குவோருக்கு ரூ. 10 ஆயிரம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டு கொண்டு பணம் செலுத்தும் போது ரூ. 10 ஆயிரம் கூடுதல் கேஷ்பேக் அல்லது ரூ. 5 ஆயிரம் அப்கிரேடு போனஸ் வழங்கப்படுகிறது.

இத்துடன் கேலக்ஸி எஸ்21 வாங்கும் போது ரூ. 10 ஆயிரம் உடனடி தள்ளுபடி, வங்கி கார்டு பயன்படுத்தும் போது ரூ. 5 ஆயிரம் கூடுதல் கேஷ்பேக் மற்றும் ரூ. 5 ஆயிரம் அப்கிரேடு போனஸ் வழங்கப்படுகிறது.
இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஸ்21 பிளஸ் ரூ. 81,999 துவக்க விலையில் விற்பனைக்கு அறிவிக்கப்பட்டது. இதன் 8 ஜி.பி. + 256 ஜி.பி. மாடல் விலை ரூ. 85,999 ஆகும். கேலக்ஸி எஸ்21 ஸ்டாண்டர்டு வேரியண்ட் ரூ. 61,999 விலையிலும், டாப் எண்ட் மாடல் ரூ. 65,999 விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டது.
கூகுள் நிறுவனம் மடிக்கக்கூடிய சாதனங்களுக்கென உருவாக்கிய ஆண்ட்ராய்டு 12எல் முதல் பீட்டா வெளியிடப்பட்டு இருக்கிறது.
பெரிய டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களுக்கு ஏற்ற வகையில் புதிய ஆண்ட்ராய்டு 12 வெர்ஷனை அக்டோபர் மாதம் அறிவித்தது. இந்த ஓ.எஸ். ஆண்ட்ராய்டு 12எல் என அழைக்கப்படுகிறது.
சிறப்பான மல்டி-டாஸ்கிங் அனுபவத்தை வழங்கும் நோக்கில் ஆண்ட்ராய்டு 12எல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய ஆண்ட்ராய்டு 12எல் மடிக்கக்கூடிய சாதனங்களுக்கு ஏற்ப பல மாற்றங்களை கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு 12எல் ஓ.எஸ். முதல் பீட்டா வெளியிடப்பட்டு இருக்கிறது.

மடிக்கக்கூடிய சாதனங்களுக்காக உருவாக்கப்பட்டு இருக்கும் போதிலும், இந்த அப்டேட் சாம்சங்கின் எந்த மாடலுக்கும் இதுவரை வெளியிடப்படவில்லை. முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட பிக்சல் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 12எல் பீட்டா வெளியிடப்பட்டு உள்ளது.
முழுமையான ஓ.எஸ். வெளியீட்டுக்கு முன் மூன்று பீட்டா வெர்ஷன்கள் வெளியிடப்பட இருக்கின்றன. வரும் வாரங்களில் லெனோவோ டேப் பி12 ப்ரோ மாடலுக்கு ஆண்ட்ராய்டு 12எல் அப்டேட் வெளியிடப்பட இருக்கிறது. தற்போது வெளியிடப்படவில்லை என்ற போதிலும், எதிர்காலத்தில் சாம்சங் சாதனங்களுக்கும் இந்த அப்டேட் வழங்கப்படலாம்.
விண்டோஸ் 11 அப்டேட் மூலம் மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது பிரபல நோட்பேட் செயலியில் டார்க் மோட் வசதியை வழங்கி இருக்கிறது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய விண்டோஸ் 11 ஓ.எஸ். அந்நிறுவனத்தின் முந்தைய ஓ.எஸ்.-ஐ விட முற்றிலும் வித்தியாசமாகவும், புதிதாகவும் காட்சியளிக்கிறது. ஓ.எஸ். வெளியீட்டை தொடர்ந்து விண்டோஸ் 11 இன்சைடர் பில்டு வெர்ஷன்களை மைக்ரோசாப்ட் உருவாக்கி வருகிறது.
சமீபத்திய இன்சைடர் பில்டு வெர்ஷன் நோட்பேட் செயலியில் டார்க் மோட் வசதியை வழங்குகிறது. விண்டோஸ் 11 கணினியில் டார்க் மோட் ஆக்டிவேட் ஆகி இருப்பின், நோட்பேட் செயலியை திறந்தால் தானாக அது டார்க் மோடில் இயங்கும். இத்துடன் நோட்பேட் செயலியின் ரைட் க்ளிக் மெனுவில் ஃபைண்ட் அண்ட் ரீப்ளேஸ் அம்சம் வழங்கப்படுகிறது.

செயலியை தொடர்ந்து மிக எளிமையான ஒன்றாகவே வழங்க மைக்ரோசாப்ட் திட்டமிட்டு இருக்கிறது. இதன் காரணமாக நோட்பேட் செயலியில் அதிகளவு மாற்றங்களை ஏற்படுத்தவில்லை. மாறாக பெருமளவு அம்சங்கள் நிறைந்த டெக்ஸ்ட் எடிட்டர் தேவைப்படும் பட்சத்தில் மைக்ரோசாப்ட் வொர்ட் செயலியை பயன்படுத்தலாம்.
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய எட்ஜ் எக்ஸ்30 ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
மோட்டோரோலா நிறுவனம் டிசம்பர் 9 ஆம் தேதி ஸ்னாப்டிராகன் 8 சீரிஸ் ஜென் 1 பிராசஸர் கொண்ட புது ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மோட்டோ எட்ஜ் எக்ஸ்30 மாடலில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இதனிடையே மோட்டோரோலா நிறுவனம் அண்டர் ஸ்கிரீன் கேமரா கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி வந்தன. லெனோவோ நிறுவன மொபைல் பிரிவுக்கான பொது மேலாளர் மோட்டோ எட்ஜ் எக்ஸ்30 ஸ்மார்ட்போனின் ஸ்பெஷல் எடிஷன் அண்டர் ஸ்கிரீன் கேமரா கொண்டிருக்கும் என தெரிவித்து இருக்கிறார்.

இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் கொண்ட முதல் அண்டர் ஸ்கிரீன் கேமரா ஸ்மார்ட்போனாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடலில் 60 எம்.பி. செல்பி கேமரா வழங்கப்பட இருக்கிறது. எட்ஜ் எக்ஸ்30 ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் அசத்தலான புல்-ஸ்கிரீன் அனுபவத்தை வழங்குகிறது.
இதில் வழங்கப்பட இருக்கும் மற்ற அம்சங்கள் ரகசியமாகவே உள்ளன. எனினும், தோற்றத்தில் இந்த ஸ்மார்ட்போன் பார்க்க எட்ஜ் எக்ஸ்30 போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வழங்கும் சலுகைகளின் விலையை மாற்றியிருக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வழங்கும் ஐந்து பிரீபெயிட் சலுகை விலைகளை மாற்றியமைத்து இருக்கிறது. கடந்த வாரம் ஜியோ விலை உயர்வு அறிவிப்பில் இந்த சலுகைகள் இடம்பெறாமல் இருந்தது.
புது மாற்றத்தின் படி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ சலுகைகளின் விலை ரூ. 601 என துவங்குகிறது. முன்னதாக இதன் விலை ரூ. 499 என இருந்தது குறிப்பிடத்தக்கது. ஜியோ சலுகைகளின் விலை தற்போது 20 சதவீதம் அதிகம் ஆகும்.

ரூ. 601 பிரீபெயிட் சலுகையில் தினமும் 3 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வழங்கப்படுகிறது. இத்துடன் கூடுதலாக 6 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
ஜியோ ரூ. 799 சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா, 100 எஸ்.எம்.எஸ். மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வழங்கப்படுகிறது. இத்துடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. இந்த சலுகை 56 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. ஜியோ ரூ. 888 சலுகையின் விலை தற்போது ரூ. 1,066 என மாறி இருக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பிரீபெயிட் சலுகைகளை தொடர்ந்து ஜியோபோன் சலுகை கட்டணங்களையும் உயர்த்தி இருக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஜியோபோன் சலுகை கட்டணங்களையும் மாற்றியமைத்திருக்கிறது. முன்னதாக ஜியோ பிரீபெயிட் சலுகைகளின் விலை உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மூன்று ஜியோபோன் சலுகைகளின் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. இத்துடன் புதிய சலுகை ஒன்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஜியோபோன் பயனர்களுக்கு ரூ. 152 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சலுகை வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். இதில் தினமும் 0.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் மற்றும் 300 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் ஜியோ செயலிகளுக்கான சந்தாவும் வழங்கப்படுகிறது.
ஜியோபோன் ரூ. 155 சலுகையின் விலை தற்போது ரூ. 186 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதில் தினமும் 1 ஜிபி டேட்டா, 100 எஸ்.எம்.எஸ்., அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் ஜியோ செயலிகளுக்கான சந்தா வழங்கப்படுகிறது.

முன்னதாக ரூ. 186 விலையில் வழங்கப்பட்டு வந்த ஜியோபோன் சலுகை ரூ. 222 விலைக்கு வழங்கப்படுகிறது. இந்த சலுகையும் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இதில் தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், 100 எஸ்.எம்.எஸ். மற்றும் ஜியோ செயலிகளுக்கான சந்தா வழங்கப்படுகிறது.
இத்துடன் 336 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ஜியோபோன் ரூ. 749 சலுகையின் விலை தற்போது ரூ. 899 என மாறி இருக்கிறது. இதில் 28 நாட்களுக்கு 2 ஜிபி டேட்டாவும், 336 நாட்களுக்கு 24 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது. இத்துடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால், ஜியோ செயலிகளுக்கான சந்தா வழங்கப்படுகிறது.
பி.எஸ்.என்.எல். நிறுவனம் நாடு முழுக்க 4ஜி சேவைகளை எப்போது வெளியிடும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
பி.எஸ்.என்.எல். நிறுவனம் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் நாடு முழுக்க 4ஜி சேவைகளை வழங்க இருக்கிறது. 4ஜி சேவை வெளியீட்டை அடுத்த, முதல் ஆண்டில் பி.எஸ்.என்.எல். நிறுவன வருவாய் ரூ. 900 கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றிய அறிவிப்பு பாராளுமன்றத்தில் வெளியானது.
பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். இணைப்பு பற்றி வெளியான தகவல்கள் குறித்த கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த தகவல் தொடர்பு துறை அமைச்சர் தேவ் சிங் சவுகான், அந்த தகவல்களில் உண்மையில்லை என தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 30, 2021 வரையிலான காலக்கட்டத்தில் பி.எஸ்.என்.எல். சொத்து மதிப்பு ரூ. 1,33,952 கோடி, எம்.டி.என்.எல். நிறுவன சொத்து மதிப்பு ரூ. 3,556 கோடி ஆகும். பட்ஜெட் ஒதுக்கீட்டில் பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். நிறுவனங்களுக்கு 4ஜி ஸ்பெக்ட்ரம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து இருக்கிறது.






