search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விடிய விடிய மழை"

    • தடியன்குடிசை கானல்காடு இடையே பழமையான மரம் தார் சாலையின் குறுக்கே வேரோடு சாய்ந்து விழுந்தது.
    • பொதுமக்கள் உதவியுடன் 2 அறுவை இயந்திரம் மூலம் மரத்தை அறுத்து அப்புறப்படுத்தினர்.

    பெரும்பாறை :

    கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. நேற்று மாலை சாரலுடன் தொடங்கிய மழை இரவு வரை விட்டு விட்டு கன மழையாக பெய்தது. இதே போல் மேல்மலை கிராமங்களிலும் தொடர் மழை பெய்ததால் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    பெரும்பாறை, தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, பண்ணைக்காடு, கே.சி.பட்டி உள்ளிட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்து வந்தது. மேலும் பலத்த காற்றும் சுழன்று அடித்தது. இந்த நிலையில் நேற்று மாலை தடியன்குடிசை கானல்காடு பகுதியில் காற்றுடன் மழை பெய்தது.

    இதனால் பெரும்பாறை - தாண்டிக்குடி மலைபாதையில் உள்ள தடியன்குடிசை கானல்காடு இடையே நேற்று இரவு சுமார் 11.30 மணி அளவில் சாலைக்கு மேல்புறம் தனியார் தோட்டத்தில் இருந்த பழமையான மரம் தார் சாலையின் குறுக்கே வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் சாலையின் இருபுறமும் பஸ், லாரி, கார் போன்ற வாகனங்கள் அணிவகுத்து நின்றது. மேலும் மின் கம்பி அறுந்து விழுந்ததால் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த தாண்டிக்குடி போலீஸ் ஏட்டு செந்தில்குமார் தலைமையில் காலை 8.30 மணிக்கு அப்பகுதி பொதுமக்கள் உதவியுடன் 2 அறுவை இயந்திரம் மூலம் மரத்தை அறுத்து அப்புறப்படுத்தினர். அதன் பின்னர் போக்குவரத்து தொடங்கின. இதனால் 9 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    தற்போது கொடைக்கானல் மற்றும் மலை கிராமங்களில் தொடர் மழை பெய்து வரும் நிலையில் நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக பாதிப்பு குறித்து ஆய்வு செய்து மீட்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கொடைக்கானல், பெரியகுளம் பகுதியில் விடிய விடிய கன மழை பெய்தது. இதனால் கும்பக்கரை அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    • இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி தடை விதிக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடி வாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக கொடைக்கானலில் கன மழை பெய்து வருகிறது. இதனால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மழை குறைந்து நீர்வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று இரவு கொடைக்கானல், பெரியகுளம் பகுதியில் விடிய விடிய கன மழை பெய்தது. இதனால் கும்பக்கரை அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி தடை விதிக்கப்படுவதாக வனச்சரகர் அலுவலர் டேவிட்ராஜா தெரிவித்துள்ளார். நீர்வரத்து சீரான பின்னர் அனுமதி வழங்கப்படும். அருவியில் நீர்வரத்தை கண்காணித்து வருகிறோம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கும்பக்கரை அருவிக்கு குளிக்க சென்றனர். தடை விதிக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

    இதேபோல் ஆண்டிபட்டி, போடி, உத்தமபாளையம், தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழைபெய்தது. இதனால் வெப்பத்தில் தவித்துக் கொண்டிருந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    குளிர்ச்சியான சூழல் நிலவியதால் அவர்கள் நிம்மதி அடைந்தனர். முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 122 அடியை எட்டியது. அணைக்கு 866 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 400 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. தொடர் மழையால் வைகை அணை நீர்மட்டமும் சீராக உயர்ந்து வருகிறது. 52.36 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. 490 கன அடி நீர் வருகிறது.

    மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.40 அடியாக உள்ளது. விரைவில் 55 அடியை எட்டும் பட்சத்தில் 3-வது வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அணைக்கு 93 கனஅடி நீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 93.43 அடியாக உள்ளது. 47 கன அடி நீர் வருகிறது. 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    கூடலூர் 10.2, உத்தமபாளையம் 1.3, சண்முகாநதி அணை 47, போடி 14.2, வீரபாண்டி 7.2, மஞ்சளாறு 42, ேசாத்துப்பாறை 55, பெரியகுளம் 85, வீரபாண்டி 5.4, ஆண்டிபட்டி 12.8 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • வீடுகளில் மழை நீர் புகுந்ததால் மக்கள் அவதி
    • விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி

    வேலூர்:

    வேலூரில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

    இந்த நிலையில் பிற்பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 4 மணி அளவில் வேலூரில் சில இடங்களில் சாரல் மழை பெய்தது. தொடர்ந்து பலத்த மழையாக உருவெடுத்தது. சுமார் ஒரு மணி நேரம் மழை வெளுத்து வாங்கியதால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு சென்றனர்.

    அவர்கள் சாலையோரம் இருந்த கடைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் கீழ் ஒதுங்கி நின்றனர். தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. தொடர்ந்து இரவு முதல் விடியும் வரை சாரல் மழையாகவும், பலத்த மழையாகவும் இடி, மின்னலுடன் மாறி மாறி பெய்தது.

    சத்துவாச்சாரி வசந்தம் நகர் பகுதியில் உள்ள முதல் தெருவில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அவர்கள் மிகவும் பாதிக்க ப்பட்டனர். பாத்திரங்களை வைத்து தண்ணீரை வெளியேற்றினர்.

    அந்த தெருவில் போதிய கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை என்று அவர்கள் குற்றம் சாட்டினர். வேலூர் கிரீன் சர்க்கிள் உள்ளிட்ட இடங்களிலும் மழை நீர் சாலைகளை குளம் போல் தேங்கியது. இதேபோல் திருப்பத்தூர், ராணிப்பே ட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது.

    இதனைத் தொடர்ந்து இன்று காலை சத்துவாச்சாரி வசந்தம் நகரில் தெருக்களில் தேங்கிய மழை நீரை, மோட்டார் மூலம் அகற்றும் இறைக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். வீடுகளில் மழைநீர் தேங்கியதால் அந்த பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்ததோடு, இரவு முழுவதும் தூக்கமின்றி தவித்தனர்.

    வேலூரில் அதிகபட்சமாக சத்துவாச்சாரியில் 52.7 மில்லி மீட்டர் மழை பதிவானது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர், கண்ணமங்கலம், செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. செங்கம் மற்றும் அதன் அருகே உள்ள ஜமுனாமரத்தூர் மலை மற்றும் அடிவாரப் பகுதிகள் உள்பட செங்கம் சுற்று வட்ட பகுதிகளில் உள்ள கிராம பகுதிகளிலும் நேற்று இரவு கன மழை பெய்தது.

    இரவு முழுவதும் பெய்த கன மழையின் காரணமாக செங்கம் - ஜவ்வாதுமலை தொடரில் உருவாகி செங்கத்தை ஒட்டி செல்லும் செய்யாற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

    இதில் திருவண்ணாமலையில் 56 மில்லி மீட்டர் மழை பதிவானது. அதேபோல் செங்கத்தில் 42.60, போரூரில் 62.80, ஜமுனாமரத்தூரில் 26, கலசபாக்கத்தில் 89, தண்டராம்பட்டில் 30.40, ஆரணியில் 47.40, செய்யாறில் 78, வந்தவாசியில் 26, கீழ்பெண்ணாத்தூரில் 84, வெம்பாக்கத்தில் 53, சேத்துப்பட்டு 37.60 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    ராணிப்பேட்டையில் நேற்று பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து திடீரென மழை பெய்தது. பின்னர் நள்ளிரவு வரை மழை தூரல் போட்ட வண்ணம் இருந்தது.

    திருப்பத்தூரில் நேற்று மாலை முதல் விடியும் வரை பலத்த கன மழை பெய்தது. இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ×