search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாமனார் கொலை"

    திருத்தணி அருகே கணவருக்கு 2-வது திருமணம் செய்து வைத்ததால் ஆத்திரம் அடைந்து மாமனாரை உயிரோடு எரித்துக்கொன்ற மருமகளை போலீசார் கைது செய்தனர்.
    சென்னை:

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகில் உள்ள நெமிலிகாலனி ராஜாத்தி தெருவை சேர்ந்தவர் சபாபதி (வயது 68). விவசாய கூலித்தொழிலாளி. இவரது மகன் பிரபாகரன் (38). இவருக்கும், சென்னை மாதவரத்தை சேர்ந்த சுப்பிரமணி - கலைவாணி தம்பதியின் மகள் காயத்திரி (34) என்பவருக்கும் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இந்த தம்பதிக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் கடந்த 4 வருடங்களுக்குமுன்பு பிரபாகரன் விபத்துக்குள்ளானார். இதைத்தொடர்ந்து ஏற்பட்ட குடும்பத்தகராறில் காயத்திரி கணவரை விட்டு பிரிந்து சென்னையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இந்தநிலையில் பிரபாகரனுக்கு அவரது தந்தை சபாபதி, கடந்த சில மாதங்களுக்குமுன்பு வேறு ஒரு பெண்ணுடன் 2-வது திருமணம் செய்து வைத்தார். இதனை அறிந்த காயத்திரி தன் தாய் கலைவாணியுடன் நெமிலிக்கு வந்து அங்கேயே குடிசை அமைத்து தங்கினார். பின்னர் கணவர் மற்றும் மாமனாருடன் சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் கடந்த திங்கட்கிழமை வீட்டின் முன்பகுதியில் கட்டிலில் சபாபதி தூங்கிக்கொண்டிருந்தார். திடீரென அவர் மீது தீப்பிடித்து எரிந்தது. தீயில் கருகிய சபாபதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சபாபதி போலீசார் மற்றும் நீதிபதியிடம் அளித்த வாக்குமூலத்தில், ‘கட்டிலில் தூங்கிக் கொண்டு இருந்தபோது மருமகள் காயத்திரியும், அவரது தாயார் கலைவாணியும் தன் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொளுத்தினார்கள்’ என்று தெரிவித்தார். பின்னர் அவர் இறந்து விட்டார்.

    இதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி உத்தரவின்பேரில் திருத்தணி துணை சூப்பிரண்டு சேகர் தலைமையில் கனகம்மாசத்திரம் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குபதிவு செய்து காயத்திரி மற்றும் அவரது தாயார் கலைவாணி ஆகியோரை கைது செய்து திருத்தணி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    பின்னர் இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். கணவருக்கு 2-வது திருமணம் செய்து வைத்த மாமனாரை பெண் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஒட்டன்சத்திரத்தில் மாமனாரை குத்திக் கொன்ற மருமகனை போலீசார் கைது செய்தனர்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகே உள்ள அரசபிள்ளை பட்டியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 49). இவர் குடும்ப தகராறு காரணமாக தனது மனைவி கலைச் செல்வியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். கலைச் செல்வி தனது தந்தை வீட்டில் வசித்து வருகிறார்.

    சம்பவத்தன்று கலைச் செல்வி நடந்து சென்று கொண்டு இருந்தபோது இரு சக்கர வாகனத்தில் வந்த வேலுச்சாமி அவர் மீது மோதினார். இதனால் கலைச் செல்வி கீழே விழுந்து காயமடைந்தார். இதனால் கலைச் செல்வியின் தந்தை கருப்பணகவுண்டர் சம்பவ இடத்துக்கு வந்து மருமகன் வேலுச்சாமியை கத்தியால் குத்தினார். இதனால் ஆத்திரமடைந்த வேலுச்சாமி தனது மாமனார் வைத்திருந்த கத்தியை பறித்து அவரையே குத்தினார்.

    படுகாயமடைந்த 2 பேரும் ஒட்டன்சத்திரம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் கருப்பணகவுண்டர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து வேலுச்சாமியை கைது செய்தனர்.

    தூத்துக்குடியில் குடும்ப தகராறு காரணமாக மனைவியை அனுப்பாத ஆத்திரத்தில் மாமனாரை கழுத்தை நெரித்து கொன்ற மருமகனை போலீசார் கைது செய்தனர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி பாக்கிய நாதன்விளையை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 52). சுமை தூக்கும் தொழிலாளி. இவருடைய மனைவி லீலாவதி. இவர்களுக்கு மாரியம்மாள், வெள்ளையம்மாள் என்ற மகள்கள் உள்ளனர். 2 பேருக்கும் திருமணம் ஆகி விட்டது.

    மாரிமுத்துவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனால் அவரது மனைவி லீலாவதி தூத்துக்குடியில் உள்ள ஒரு ஓட்டலில் கூலி வேலைக்கு சென்று வந்தார்.

    மகள் மாரியம்மாளின் கணவர் காளிராஜ் (43). இவரது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள டானா பகுதி ஆகும். மீன் வியாபாரியான காளிராஜிக்கும், மாரியம்மாளுக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது.

    தகராறு நடக்கும் போதெல்லாம் மாரியம்மாள் தனது 4 குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டுக்கு வந்து விடுவார். அதேபோல் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் குடும்பத் தகராறு ஏற்பட்டது.

    இதனால் கணவரிடம் கோபித்துக் கொண்டு மாரியம்மாள் தனது குழந்தைகளுடன் பாக்கியநாதன்விளையில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார். பின்னர் குழந்தைகளை அதே பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் சேர்த்தார். குடும்பத்தை காப்பாற்றுவதற்காக தூத்துக்குடியில் உள்ள இரும்பு குடோனுக்கு மாரியம்மாள் வேலைக்கு சென்று வந்தார்.

    இந்தநிலையில் நேற்று காலையில் லீலாவதி, மாரியம்மாள் ஆகியோர் குழந்தைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி விட்டு வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் மாரிமுத்து மட்டும் தனியாக இருந்தார். மதியம் பக்கத்து தெருவில் வசித்து வரும் மற்றொரு மகள் வெள்ளையம்மாள் தனது தந்தை வீட்டுக்கு வந்தார்.

    அப்போது வீட்டில் மாரிமுத்து இறந்த நிலையில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து உடனடியாக தாளமுத்துநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாரிமுத்துவின் கழுத்து பகுதியில் கயிற்றை கொண்டு நெரித்த தடம் மற்றும் பின் தலையில் ரத்த காயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுகுறித்து தாள முத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார்கள். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், நேற்று காலையில் காளிராஜ் தனது மனைவியை அழைத்து செல்ல பாக்கியநாதன்விளைக்கு வந்தார். ஆனால் வீட்டில் மாரிமுத்து மட்டும் இருந்துள்ளார்.

    அப்போது மாரியம்மாளை தன்னுடன் அனுப்பி வைக்கும்படி காளிராஜ் தெரிவித்தார். ஆனால் மாரிமுத்து மறுத்துவிட்டார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த காளிராஜ் வீட்டில் இருந்த கயிற்றை எடுத்து மாரிமுத்து கழுத்தை நெரித்து கீழே தள்ளி கொடூரமாக கொலை செய்துள்ளார். கீழே விழுந்ததில் அவரது தலையில் காயம் ஏற்பட்டு ரத்த வழிந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து காளிராஜ் அங்கு இருந்து தப்பி சென்றுவிட்டார்.

    இதுகுறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய காளிராஜை வலைவீசி தேடினர். அவருக்கு சொந்தஊர் வி.கே.புரம் என்பதால் அங்கு அவர் பதுங்கி இருக்கலாம் என போலீசார் கருதினர்.

    அவரை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர் சங்கர், போலீஸ்காரர்கள் சுடலை, செல்வகுமார், சந்திரமோகன் ஆகியோர் அடங்கி தனிப்படை போலீசார் வி.கே. புரத்திற்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது நண்பர் வீட்டில் பதுங்கியிருந்த காளிராஜை கைது செய்தனர்.

    திருவண்ணாமலையில் மருமகளை கிண்டல் செய்த தகராறில் தாக்கப்பட்ட மாமனார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை காந்தி நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 52). இவரது மகன் சுரேஷ் (29), மருமகள் தாமரைச் செல்வி (22). கடந்த 14-ந்தேதி மாமனார் ஆறுமுகத்துடன் தாமரைச்செல்வி, மாட்டிற்கு புல் அறுத்து தூக்கி கொண்டு வந்தார்.

    அப்போது, 6 பேர் கும்பல் தாமரைச்செல்வியை கிண்டல் செய்தனர். இதனை ஆறுமுகம் தட்டிக்கேட்டார். ஆத்திரமடைந்த கும்பல் உருட்டுக்கட்டை, கல்லால் ஆறுமுகத்தை பயங்கரமாக தாக்கினர். இதனை தடுக்க வந்த மகன் சுரேசையும் அந்த கும்பல் தாக்கியது.

    இதில் தந்தையும், மகனும் பலத்த காயமடைந்தனர். 2 பேரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் வினோத் (20) மற்றும் பார்த்தீபன் (30), நவ அரசு (20), சந்திரகுமார் (21), அருண்குமார் (20) மற்றும் 17 வயது சிறுவன் என 6 பேரை திருவண்ணாமலை கிழக்கு போலீசார் கைது செய்தனர்.

    இவர்கள் 6 பேர் மீதும் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கைதான சிறுவன், கடலூர் சிறுவர் சீர்த்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார். மற்ற 5 பேரும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    இதற்கிடையே, சிகிச்சை பெற்று வந்த ஆறுமுகத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக மாறியது. இதனால் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் உயிரிழந்தார்.

    பின்னர், இந்த வழக்கில் தொடர்புடைய 6 பேர் மீதும் கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஊத்துக்குளி அருகே மாமனாரை குத்தி கொன்ற மருமகன் கைது கடனை திருப்பி தராததால் கொன்றதாக வாக்கு மூலம்

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள மொலக் கவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் சுந்தரேசன் (54) சத்துணவு ஊழியர். இவரது மகள் வனிதா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாலச்சந்தருக்கும் திருமணம் நடைபெற்றது. கணவன் -மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இது குறித்து வனிதா தனது தந்தை சுந்தரேசனுக்கு தகவல் தெரிவித்தார்.அவர் தகராறை தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த பாலசந்தர் கத்தியால் சுந்தரேசனை குத்தினார். இதில் அவர் அதே இடத்தில் இறந்தார்.

    இது குறித்து ஊத்துக்குளி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து பாலசந்தரை கைது செய்தனர். அவர் போலீசாரிடம் கொடுத்த வாக்கு மூலத்தில் கூறி இருப்பதாவது-

    எனது மாமனார் சுந்தரேசன் என்னிடம் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். அதில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்தை மட்டும் திருப்பி கொடுத்தார். மீதமுள்ள ரூ. 30 ஆயிரத்தை வாங்கி தரும்படி மனைவியிடம் தெரிவித்தேன். அவர் வாங்கி தர மறுத்தார். இதனால் மனைவியிடம் தகராறு செய்தேன். அவர் தனது தந்தைக்கு போன் செய்தார். இதனை தொடர்ந்து சுந்தரேசன் எனது வீட்டுக்கு வந்தார். அப்போது அவருக்கும் எனக்கும் தகராறு உருவானது. அவரை கத்தியால் குத்தினேன். இதில் இறந்து விட்டார்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ஆற்காடு அருகே மாமனாரை கொடூரமாக அடித்துக்கொன்ற மருமகனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஆற்காடு:

    வேலூர் மாவட்டம் ஆற்காடு கலவை அடுத்த மேல்புதுப்பாக்கம் புளியந்தோப்பு தெருவை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 55). இவர், போளூரை சேர்ந்த சுப்பிரமணி மகன் சங்கர் (35) என்பவருக்கு தனது மகள் மலரை திருமணம் செய்து கொடுத்தார்.

    திருமணத்திற்கு பிறகு, சங்கர் மாமனார் வீட்டிலேயே தங்கிவிட்டார். இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இந்தநிலையில், சங்கர் சில நாட்களாக சென்னையில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். வாரம் ஒருமுறை வீட்டிற்கு வந்து சென்றார்.

    இதற்கிடையே மாமனார், மருமகனிடையே சொத்து தகராறு ஏற்பட்டது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு மருமகன் மீதான ஆத்திரத்தில் மனைவி மற்றும் மகளை ஏழுமலை வீதியில் விரட்டி விரட்டி தாக்கினார்.

    ஊருக்கு வந்த சங்கர், நேற்று இரவு மாமனாரிடம் மோதலில் ஈடுபட்டார். உருட்டுக்கட்டையால் மாமனார் என்றும் பார்க்காமல் கொடூரமாக தாக்கினார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டத்தில் ஏழுமலை சுருண்டு விழுந்தார்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஏழுமலை மீட்கப்பட்டு ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நள்ளிரவு சிகிச்சை பலனின்றி ஏழுமலை பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுதொடர்பாக வாழபந்தல் போலீசார், கொலை வழக்குப்பதிந்தனர். மாமனார் இறந்ததையறிந்த சங்கர் தலைமறைவானார். போலீசார் அவரை பிடிக்க தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர்.

    இன்று காலை திமிரியில் இருந்து வெளியூருக்கு தப்பி செல்வதற்காக கலவை செல்லும் சாலையில் உள்ள கனியனூர் பஸ் நிறுத்தம் அருகே பதுங்கியிருந்த சங்கரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

    முதற்கட்ட விசாரணையில், கள்ளத்தொடர்பு விவகாரத்தில் ஏற்கனவே, மாமனார், மருமகனிடையே முன்விரோதம் இருந்ததும் தெரியவந்துள்ளது. இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார், சங்கரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    ×