search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "father in law murder"

    தூத்துக்குடியில் குடும்ப தகராறு காரணமாக மனைவியை அனுப்பாத ஆத்திரத்தில் மாமனாரை கழுத்தை நெரித்து கொன்ற மருமகனை போலீசார் கைது செய்தனர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி பாக்கிய நாதன்விளையை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 52). சுமை தூக்கும் தொழிலாளி. இவருடைய மனைவி லீலாவதி. இவர்களுக்கு மாரியம்மாள், வெள்ளையம்மாள் என்ற மகள்கள் உள்ளனர். 2 பேருக்கும் திருமணம் ஆகி விட்டது.

    மாரிமுத்துவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனால் அவரது மனைவி லீலாவதி தூத்துக்குடியில் உள்ள ஒரு ஓட்டலில் கூலி வேலைக்கு சென்று வந்தார்.

    மகள் மாரியம்மாளின் கணவர் காளிராஜ் (43). இவரது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள டானா பகுதி ஆகும். மீன் வியாபாரியான காளிராஜிக்கும், மாரியம்மாளுக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது.

    தகராறு நடக்கும் போதெல்லாம் மாரியம்மாள் தனது 4 குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டுக்கு வந்து விடுவார். அதேபோல் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் குடும்பத் தகராறு ஏற்பட்டது.

    இதனால் கணவரிடம் கோபித்துக் கொண்டு மாரியம்மாள் தனது குழந்தைகளுடன் பாக்கியநாதன்விளையில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார். பின்னர் குழந்தைகளை அதே பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் சேர்த்தார். குடும்பத்தை காப்பாற்றுவதற்காக தூத்துக்குடியில் உள்ள இரும்பு குடோனுக்கு மாரியம்மாள் வேலைக்கு சென்று வந்தார்.

    இந்தநிலையில் நேற்று காலையில் லீலாவதி, மாரியம்மாள் ஆகியோர் குழந்தைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி விட்டு வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் மாரிமுத்து மட்டும் தனியாக இருந்தார். மதியம் பக்கத்து தெருவில் வசித்து வரும் மற்றொரு மகள் வெள்ளையம்மாள் தனது தந்தை வீட்டுக்கு வந்தார்.

    அப்போது வீட்டில் மாரிமுத்து இறந்த நிலையில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து உடனடியாக தாளமுத்துநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாரிமுத்துவின் கழுத்து பகுதியில் கயிற்றை கொண்டு நெரித்த தடம் மற்றும் பின் தலையில் ரத்த காயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுகுறித்து தாள முத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார்கள். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், நேற்று காலையில் காளிராஜ் தனது மனைவியை அழைத்து செல்ல பாக்கியநாதன்விளைக்கு வந்தார். ஆனால் வீட்டில் மாரிமுத்து மட்டும் இருந்துள்ளார்.

    அப்போது மாரியம்மாளை தன்னுடன் அனுப்பி வைக்கும்படி காளிராஜ் தெரிவித்தார். ஆனால் மாரிமுத்து மறுத்துவிட்டார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த காளிராஜ் வீட்டில் இருந்த கயிற்றை எடுத்து மாரிமுத்து கழுத்தை நெரித்து கீழே தள்ளி கொடூரமாக கொலை செய்துள்ளார். கீழே விழுந்ததில் அவரது தலையில் காயம் ஏற்பட்டு ரத்த வழிந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து காளிராஜ் அங்கு இருந்து தப்பி சென்றுவிட்டார்.

    இதுகுறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய காளிராஜை வலைவீசி தேடினர். அவருக்கு சொந்தஊர் வி.கே.புரம் என்பதால் அங்கு அவர் பதுங்கி இருக்கலாம் என போலீசார் கருதினர்.

    அவரை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர் சங்கர், போலீஸ்காரர்கள் சுடலை, செல்வகுமார், சந்திரமோகன் ஆகியோர் அடங்கி தனிப்படை போலீசார் வி.கே. புரத்திற்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது நண்பர் வீட்டில் பதுங்கியிருந்த காளிராஜை கைது செய்தனர்.

    திருவண்ணாமலையில் மருமகளை கிண்டல் செய்த தகராறில் தாக்கப்பட்ட மாமனார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை காந்தி நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 52). இவரது மகன் சுரேஷ் (29), மருமகள் தாமரைச் செல்வி (22). கடந்த 14-ந்தேதி மாமனார் ஆறுமுகத்துடன் தாமரைச்செல்வி, மாட்டிற்கு புல் அறுத்து தூக்கி கொண்டு வந்தார்.

    அப்போது, 6 பேர் கும்பல் தாமரைச்செல்வியை கிண்டல் செய்தனர். இதனை ஆறுமுகம் தட்டிக்கேட்டார். ஆத்திரமடைந்த கும்பல் உருட்டுக்கட்டை, கல்லால் ஆறுமுகத்தை பயங்கரமாக தாக்கினர். இதனை தடுக்க வந்த மகன் சுரேசையும் அந்த கும்பல் தாக்கியது.

    இதில் தந்தையும், மகனும் பலத்த காயமடைந்தனர். 2 பேரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் வினோத் (20) மற்றும் பார்த்தீபன் (30), நவ அரசு (20), சந்திரகுமார் (21), அருண்குமார் (20) மற்றும் 17 வயது சிறுவன் என 6 பேரை திருவண்ணாமலை கிழக்கு போலீசார் கைது செய்தனர்.

    இவர்கள் 6 பேர் மீதும் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கைதான சிறுவன், கடலூர் சிறுவர் சீர்த்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார். மற்ற 5 பேரும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    இதற்கிடையே, சிகிச்சை பெற்று வந்த ஆறுமுகத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக மாறியது. இதனால் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் உயிரிழந்தார்.

    பின்னர், இந்த வழக்கில் தொடர்புடைய 6 பேர் மீதும் கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×