search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மல்யுத்த வீராங்கனை"

    • பிரிஜ் பூஷனும், அவரது விசுவாசியான சஞ்சய் சிங்கும் இணைந்து நான் ஒலிம்பிக்கில் பங்கேற்பதை தடுக்க எல்லா வழியிலும் முயற்சிக்கிறார்கள்.
    • தவறுக்கு எதிராக குரல் கொடுத்தால் நம் நாட்டில் இதுதான் தண்டனையா?

    இந்திய முன்னாள் மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜனதா எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அச்சுறுத்துவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் இந்திய மல்யுத்த நட்சத்திரங்கள் பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் உள்ளிட்டோர் மாதக்கணக்கில் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து பிரிஜ் பூஷன் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவர் பொறுப்பில் இருந்தும் ஒதுங்கினார்.

    மல்யுத்த சம்மேளனத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தலில் தலைவராக சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டார். பிரிஜ் பூஷனின் கூட்டாளியான இவருக்கும் சில வீரர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது.

    இந்த நிலையில் முன்னணி மல்யுத்த வீராங்கனை 29 வயதான வினேஷ் போகத், தன்னை ஊக்கமருந்து வலையில் சிக்கவைக்க சதி நடப்பதாக பரபரப்பான புகார் கூறியுள்ளார். வினேஷ் போகத், உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப்பதக்கம் வென்றவர். ஆசிய விளையாட்டு மற்றும் காமன்வெல்த் விளையாட்டிலும் சாம்பியன். 50 கிலோ எடைப்பிரிவில் ஒலிம்பிக் இடத்தை உறுதி செய்யும் இலக்குடன் அடுத்த வாரம் கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக் நகரில் நடைபெறும் ஆசிய ஒலிம்பிக் தகுதி சுற்றில் பங்கேற்க உள்ளார்.

    வினேஷ் போகத் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'பிரிஜ் பூஷனும், அவரது விசுவாசியான சஞ்சய் சிங்கும் இணைந்து நான் ஒலிம்பிக்கில் பங்கேற்பதை தடுக்க எல்லா வழியிலும் முயற்சிக்கிறார்கள். அணியில் நியமிக்கப்பட்டுள்ள எல்லா பயிற்சியாளர்களும் அவர்களது ஆதரவாளர்கள். எனவே எனக்குரிய போட்டியின்போது அவர்கள் நான் குடிக்கும் தண்ணீரில் ஏதாவது கலந்து கொடுக்க வாய்ப்புள்ளது. என் மீது ஊக்கமருந்து மோசடி பேர்வழி என்ற முத்திரை குத்துவதற்கு சதிவேலை நடக்கிறது.

    கடந்த ஒரு மாத காலமாக எனது பயிற்சியாளர் மற்றும் பிசியோவுக்கு அங்கீகார அட்டை வழங்கும்படி இந்திய விளையாட்டு ஆணையத்திடம் (சாய்) முறையிட்டு வருகிறேன். அங்கீகார அட்டை இல்லாவிட்டால் அவர்களால் என்னுடன் போட்டி நடக்கும் இடத்திற்கு வர முடியாது. பல முறை கேட்டும் அவர்களிடம் இருந்து எனக்கு முறையான பதில் வரவில்லை. உதவி செய்வதற்கு யாரும் தயாராக இல்லை. விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையில் இப்படி தான் விளையாடுவதா?

    போட்டிக்கு முன்பாக எங்களை மனரீதியாக துன்புறுத்துகிறார்கள். தவறுக்கு எதிராக குரல் கொடுத்தால் நம் நாட்டில் இதுதான் தண்டனையா? தேசத்துக்காக விளையாட செல்லும் முன்பு எங்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்' என்றார்.

    இதற்கிடையே வினேஷ் போகத்தின் குற்றச்சாட்டை இந்திய மல்யுத்த சம்மேளனம் மறுத்துள்ளது. பெயர் வெளியிட விரும்பாத மல்யுத்த சம்மேளன அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தனது தனிப்பட்ட பயிற்சியாளர் மற்றும் பிசியோவுக்கு அங்கீகார அனுமதி அட்டை கேட்டு கடந்த மார்ச் 18-ந்தேதி வினேஷ் போகத் இ-மெயில் அனுப்பினார். ஆனால் அதற்கு முன்பாகவே (மார்ச் 11) உலக மல்யுத்த சம்மேளனத்திற்கு அனுப்புவதற்கான காலக்கெடு முடிந்து விட்டது. அவர் தாமதமாக விண்ணப்பித்ததால் எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஏற்கனவே 9 பயிற்சியாளர்கள் அணியினருடன் செல்லும் நிலையில் கூடுதல் பயிற்சியாளர் தேவையா?, வினேஷ் போகத் தனிப்பட்ட பயிற்சியாளர் வேண்டும் என்று நினைத்தால், உலக மல்யுத்த சம்மேளனத்தை அணுகி முயற்சித்து பார்க்கலாம். அதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை' என்றார்.

    • நாங்கள் ஆசிய விளையாட்டு போட்டிக்கு தயாராவதற்கு அரசாங்கத்திடம் கூடுதல் அவகாசம் கேட்டு இருந்தோம்.
    • தகுதி தேர்வில் பங்கேற்காமல் நேரடியாக போட்டிக்கு தகுதி பெற நான் விரும்பவில்லை.

    புதுடெல்லி:

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா. ஜனதா எம்.பி.யுமான பிரிஜ்பூஜன் சரண் சிங் மீது வீராங்கனைகள் பாலியல் புகார்களை தெரிவித்து டெல்லியில் மல் யுத்த வீரர்-வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    முன்னணி வீரர்-வீராங்கனைகள் நடத்தி வரும் இப்போராட்டம் தொடர்ந்தபடி இருந்து வருகிறது. இந்நிலையில் சீனாவில் செப்டம்பர் மாதம் தொடங்கும் ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்று பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் ஆகியோருக்கு தகுதி தேர்வில் இருந்து விதி விலக்கு அளிக்கப்பட்டு நேரடியாக கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.

    டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் இருவருக்கும் இந்த சலுகையை இந்திய மல்யுத்த சம்மேளனத்தை நிர்வகிக்கும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் இடைக்கால கமிட்டி வழங்கியது. இதற்கு இளம் வீரர், வீராங்கனைகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

    அவர்கள் டெல்லியில் உள்ள இந்திய ஒலிம்பிக் சங்க அலுவலகம் முன்பு நேற்று போராட்டம் நடத்தினார்கள். இந்த நிலையில் போராட்டத்தில் பங்கேற்றுள்ள மற்றொரு வீராங்கனையான சாக்ஷி மாலிக் கூறியதாவது:-

    நாங்கள் ஆசிய விளையாட்டு போட்டிக்கு தயாராவதற்கு அரசாங்கத்திடம் கூடுதல் அவகாசம் கேட்டு இருந்தோம். ஆகஸ்டு 10-ந் தேதிக்கு பிறகு தகுதியை சோதிக்குமாறு கோரியிருந்தோம். இதையடுத்து அரசாங்கம் கால அவகாசம் வழங்கியது.

    வினேஷ் போகத், பஜ்ரங் புனியா ஆகியோருக்கு ஆசிய விளையாட்டு தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் அரசாங்கத்தின் முடிவு, மல்யுத்த வீரர்களின் ஒற்றுமையை உடைக்கும் முயற்சியாகும். ஒலிம்பிக் பதக்கம் வென்றவர் என்ற காரணத்திற்காக எனது பெயரும் பரிசீலிக்கப்படும் என்று எனக்கு மின்னஞ்சல் வந்தது. ஆனால் நான் மறுத்து விட்டேன். தகுதி தேர்வில் பங்கேற்காமல் நேரடியாக போட்டிக்கு தகுதி பெற நான் விரும்பவில்லை.

    அனைவருக்கும் நீதியும் நியாயமான தேர்வுக்கான வாய்ப்பும் கிடைக்க வேண்டும். மல்யுத்த வீரர்களின் பெயர்களை நேரடியாக அனுப்புவதன் மூலம் அவர்களுக்கு இடையிலான ஒற்றுமையை உடைக்க அரசாங்கம் முயற்சித்துள்ளது.

    அரசாங்கத்தின் இந்த செயலுக்கு பின்னால் உள்ள நோக்கங்கள் குறித்து நான் கவலைப்படுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டெல்லி போலீசார் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்து உள்ளனர்.
    • வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஜூலை 4-ந் தேதி நடக்கிறது.

    புதுடெல்லி:

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜனதா எம்.பி.யுமான பிரிஜ்பூஷன் சரண்சிங் மீது 7 மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் அளித்திருந்தனர். இதில் ஒருவர் மைனர் ஆவார்.

    இந்த பாலியல் புகார் தொடர்பாக பிரிஜ்பூஷன் சிங் மீது டெல்லி போலீசார் கடந்த ஏப்ரல் 28-ந் தேதி 2 வழக்குகளை பதிவு செய்தனர். 18 வயதுக்குட்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில் அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவாகி இருந்தது.

    பிரிஜ் பூஷன் சிங் மீது வழக்குப் பதிவு செய்திருந்தாலும் அவர் கைது செய்யப்படவில்லை. அவரை கைது செய்யக்கோரி மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சு வார்த்தையை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில் மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ்பூஷன் சிங் மீதான பாலியல் புகாரில் டெல்லி போலீசார் இன்று குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர்.

    அதில் 18 வயதுக்குட்பட்ட சிறுமி பிரிஜ்பூஷன் சிங் மீது அளித்த பாலியல் புகாரில் போதுமான ஆதாரம் இல்லையென்று டெல்லி போலீசார் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்து உள்ளனர். இதனால் அவர் மீதான முதல் தகவல் அறிக்கையை (எப்.ஐ.ஆர்.) ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    பாலியல் புகாரில் சிறுமியின் தந்தை முன்னுக்குப் பின் முரணாக கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

    இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஜூலை 4-ந் தேதி நடக்கிறது. மற்ற மல்யுத்த வீராங்கனைகள் அளித்த புகார் குறித்து அப்போது விசாரணையில் தெரியவரும்.

    • மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று 15-ந்தேதி வரை போராட்டத்தை மல்யுத்த வீராங்கனைகள் ஒத்தி வைத்தனர்.
    • பிரிஜ்பூஷன் சிங் தனது செல்வாக்கை பயன்படுத்தி விசாரணையில் தலையிடுகிறார்.

    புதுடெல்லி:

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜனதா எம்.பி.யுமான பிரிஜ்பூஷன் சரண்சிங் மீது 7 மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் கூறி உள்ளனர். அவர் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்தாலும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

    இதனால் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங்புனியா, வீராங்கனை சாக்ஷி மாலிக் மற்றும் ஆசிய, காமன் வெல்த்தில் பதக்கம் வென்ற வினேஷ் போகத் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களுடன் மத்திய விளையாட்டுத் துறை மந்திரி அனுராக் தாக்கூர் கடந்த 7-ந்தேதி நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று 15-ந்தேதி வரை போராட்டத்தை மல்யுத்த வீராங்கனைகள் ஒத்தி வைத்தனர்.

    அன்றைய தேதியில் பாலியல் புகார் விவகாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதனால் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

    இந்நிலையில் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காவிட்டால் ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்கமாட்டோம் என்று சாக்ஷி மாலிக் மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்தால் தான் நாங்கள் ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்போம். தீர்வு கிடைக்காவிட்டால் புறக்கணிப்போம். இது எவ்வளவு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியாது.

    நான், பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் ஆகியோர் ஒன்றாகவே இணைந்து நிற்கிறோம். ஒன்றாகவே இணைந்து நிற்போம். 15-ந் தேதிக்கு பிறகு போராட்டத்தை எங்கிருந்து தொடங்குவது என்பது குறித்து முடிவு செய்வோம். எங்களை சமாதானப்படுத்த தொடர்ந்து நெருக்கடி கொடுக்கப்படுகிறது.

    இவ்வாறு சாக்ஷி மாலிக் கூறியுள்ளார்.

    பஜ்ரங் புனியா நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரிஜ்பூஷன் சிங்கை வருகிற 15-ந்தேதிக்குள் கைது செய்யாவிட்டால் எங்களது போராட்டம் மீண்டும் நடைபெறும் ஜந்தர்மந்தரில் இருந்து 17-ந்தேதி போராட்டத்தை மீண்டும் தொடங்குவோம். புகார் கொடுத்தவர்களுக்கு நெருக்கடி அளிக்கப்படுகிறது. பிரிஜ்பூஷன் சிங் தனது செல்வாக்கை பயன்படுத்தி விசாரணையில் தலையிடுகிறார். மிரட்டல் காரணமாக புகார் கொடுத்த மல்யுத்த வீராங்கனைகள் அச்சத்தில் உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர், தமிழ்நாடு நெடுஞ்சாலை பணியாளர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் நகராட்சி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்டக்கிளை துணைத் தலைவர் ரவி தலைமையில் இணைச் செயலாளர் சக்திவேல் முன்னிலையில் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாகவும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட இனைச்செயலாளர் ராணி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர், தமிழ்நாடு நெடுஞ்சாலை பணியாளர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

    • பிரிஜ்பூஷன் சரண்சிங் இல்லாத சமயத்தில் தான் அவரது இல்லத்துக்கு சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    • பிரிஜ்பூஷன் மீதான பாலியல் புகாரில் இதுவரை சிறப்பு புலனாய்வு குழு 137 பேரிடம் வாக்குமூலங்களை பெற்றுள்ளது.

    புதுடெல்லி:

    பா.ஜனதா எம்.பி.யான பிரிஜ்பூஷன் சரண்சிங் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக பணியாற்றி வந்தார்.

    பிரிஜ்பூஷன் சிங் பாலியல் தொல்லை கொடுத்ததாக 18 வயதுக்குட்பட்ட வீராங்கனை உள்பட 7 மல்யுத்த வீராங்கனைகள் டெல்லி போலீசில் புகார் அளித்தனர்.

    போலீசார் வழக்குப் பதிவு செய்து இருந்தும் இதுவரை அவரை கைது செய்யவில்லை. இதனால் பிரிஜ்பூஷன் சிங்கை கைது செய்யக்கோரி ஒலிம்பிக் மற்றும் சர்வதேச போட்டியில் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்ட வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர்மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஒலிம்பிக்கில் வென்ற பதக்கங்களை அவர்கள் கங்கை ஆற்றில் வீச போவதாக அறிவித்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதற்கிடையே மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நேற்று முன்தினம் மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்தனர். 2 மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது. இதை தொடர்ந்து மல்யுத்த வீரர்கள் சிலர் போராட்டத்தை கைவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால் உடனடியாக அவர்கள் மறுத்தனர்.

    இந்நிலையில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பா.ஜனதா எம்.பி. பிரிஜ்பூஷன் சரண்சிங் வீட்டில் டெல்லி போலீசார் இன்று விசாரணை நடத்தினார்கள்.

    உத்தரபிரதேச மாநிலம் ஹோண்டாவில் அவரது வீடு உள்ளது. இன்று காலை அவரது வீட்டுக்கு போலீசார் சென்றனர். பிரிஜ்பூஷன் சரண்சிங் இல்லாத சமயத்தில் தான் அவரது இல்லத்துக்கு சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    வீட்டில் உள்ள வேலைக்காரர்கள் உள்பட 12 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.

    பிரிஜ்பூஷன் மீதான பாலியல் புகாரில் இதுவரை சிறப்பு புலனாய்வு குழு 137 பேரிடம் வாக்குமூலங்களை பெற்றுள்ளது.

    • பிரிஜ் பூஷன் சிங் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசார் காலம் தாழ்த்தியதால் மல்யுத்த நட்சத்திரங்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்தனர்.
    • விசாரணை தொடர்பான அனைத்து தொழில்நுட்ப ஆதாரங்களையும் போலீசார் ஆய்வு செய்கின்றனர்.

    புதுடெல்லி:

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக பிரிஜ் பூஷன் சரண் சிங் உள்ளார். பா.ஜனதா எம்.பி.யான அவர் 12 ஆண்டுகள் அந்த பொறுப்பில் இருந்து வருகிறார்.

    இந்நிலையில் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பிரிஜ் பூஷன் சிங் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக 18 வயதுக்கு கீழுள்ள வீராங்கனை உள்பட 7 மல்யுத்த வீராங்கனைகள் குற்றம் சாட்டினர்.

    இது தொடர்பாக டெல்லி போலீசாரிடம் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் புகார் அளித்தனர். பிரிஜ் பூஷன் சிங் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசார் காலம் தாழ்த்தியதால் மல்யுத்த நட்சத்திரங்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்தனர்.

    டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் பஜ்ரங்புனியா, சாக்ஷி மாலிக், வினேஷ் போகட் உள்ளிட்ட மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கடந்த 23-ந் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த நட்சத்திரங்களை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் மற்றும் மற்ற விளையாட்டு பிரபலங்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

    பிரிஜ் பூஷன் சிங் மீது வழக்குப்பதிவு செய்யாதது தொடர்பாக அவர் மீது குற்றம் சாட்டிய 7 மல்யுத்த வீராங்கனைகளும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் பேரில் அவர் மீது டெல்லி போலீசார் 2 வழக்குகள் பதிவு செய்தனர்.

    வழக்குப் பதிவு செய்யப்பட்டதும் பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று மல்யுத்த வீரர்கள் அறிவித்தனர்.

    தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அவர்கள் குடிநீர், உணவு இல்லாமல் அவதிப்பட்டனர். இது தொடர்பாக போலீசார் மீது அவர்கள் குற்றம் சாட்டினர்.

    இந்நிலையில் டெல்லி ஜந்தர் மந்தரில் போராடி வரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளை போராட்டம் இன்று 9-வது நாளாக நீடித்தது.

    இதற்கிடையே மல்யுத்த நட்சத்திரங்களின் போராட்டம் தீவிர மடைவதால் பிரிஜ் பூஷன் சிங்கை விசாரிக்க டெல்லி போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக அவருக்கு சம்மன் அனுப்பப்பட உள்ளது.

    இதே போல அவர் மீது குற்றம் சுமத்திய மல்யுத்த வீராங்கனைகளிடம் வாக்குமூலம் பெறவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை தொடர்பான அனைத்து தொழில்நுட்ப ஆதாரங்களையும் போலீசார் ஆய்வு செய்கின்றனர்.

    குற்றச்சாட்டுக்கு உள்ளான பிரிஜ் பூஷன் சிங் தான் மல்யுத்த சம்மேளன தலைவர் பதவியில் இருந்து விலகமாட்டேன் என்றும் விசாரணையை எதிர் கொள்ள தயார் என்றும் ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.

    ×