search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலியல் குற்றச்சாட்டு"

    • குற்றச்சாட்டை மறுத்த டிரம்ப், ஜீன் கரோலை கடுமையாக விமர்சித்தார்.
    • தனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி டிரம்ப் மீது ஜீன் கரோல், நியூயார்க் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

    நியூயார்க்:

    அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது பெண் எழுத்தாளர் ஜீன் கரோல் என்பவர் பாலியல் துன்புறுத்தல் புகார் கூறினார்.

    1990-ம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள வணிக வளாகத்தில் ஒரு அறையில் தன்னை டிரம்ப் பாலியல் பலாத்காரம் செய்ததாக கடந்த 2019-ம் ஆண்டு ஜீன் கரோல் கூறினார். இந்த குற்றச்சாட்டை மறுத்த டிரம்ப், ஜீன் கரோலை கடுமையாக விமர்சித்தார். அவர் ஒரு பொய்யர், அவரை தான் சந்தித்ததில்லை என்று டிரம்ப் கூறினார்.

    இதையடுத்து தனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி டிரம்ப் மீது ஜீன் கரோல், நியூயார்க் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

    இந்த நிலையில் அவதூறு வழக்கில் ஜீன் கரோலுக்கு 83.3 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.690 கோடி) நஷ்டஈட்டை டிரம்ப் வழங்க வேண்டும் என்று கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

    அதில், 2019-ம் ஆண்டு டிரம்ப் தனது தவறான மற்றும் தீங்கு இழைக்கும் கருத்துக்களால் ஜீன் கரோலின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததற்காக 18.3 மில்லியன் அமெரிக்க டாலரும் தண்டனைக்குரிய சேதமாகவும், மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக 65 மில்லியன் அமெரிக்க டாலரும் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தீர்ப்பு முற்றிலும் அபத்தானமானது என்று தெரிவித்த டிரம்ப், தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்முறையீடு செய்யப்படும். நமது சட்ட அமைப்பு கட்டுப்பாட்டில் இல்லை. அது அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது. அனைத்து உரிமைகளையும் மறித்து விட்டனர். இது அமெரிக்கா அல்ல என்றார்.

    ஏற்கனவே பாலியல் துன்புறுத்தல் வழக்கில் ஜீன் கரோலுக்கு 5 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட டிரம்ப் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். குடியரசு கட்சி வேட்பாளராக தேர்ந்தெடுக்க அவருக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இத்தீர்ப்பு வெளியாகி உள்ளது.

    • வேட் ராப்ஸன் (Wade Robson) மற்றும் ஜேம்ஸ் ஸேஃப்ச்க் (James Safechuck) ஆகிய இருவர் குற்றம் சாட்டினர்
    • 2009ல் மைக்கேல் ஜாக்ஸன் 50வது வயதில் எதிர்பாராதவிதமாக காலமானார்

    "பாப் பாடல் உலகின் ராஜா" என வர்ணிக்கப்பட்டவர் அமெரிக்கவை சேர்ந்த மைக்கேல் ஜாக்சன். பாடகர், நடன கலைஞர் மற்றும் பாடலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவராக இருந்த மைக்கேல் ஜாக்சன் பெருமளவில் நன்கொடைகளை வழங்குவதிலும் புகழ் பெற்றிருந்தார்.

    இந்தியா உட்பட பல நாடுகளில் அவரது இசைக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்திய திரையுலகில், மேற்கத்திய நடனங்களில் இவர் பாணியை இன்றளவும் பலர் பயன்படுத்தி நடன காட்சிகளை அமைத்து வருகின்ற பிரபலங்கள் உள்ளனர்.

    2000 வருடங்களின் தொடக்கத்தில் அப்போது சிறுவர்களாக இருந்த வேட் ராப்சன் மற்றும் ஜேம்ஸ் சேஃப்சக் ஆகிய இருவர், 1980-களின் கடைசியிலும், 1990-களின் தொடக்கத்திலும், தனது பண்ணை வீட்டிற்கு அழைத்து சென்று ஜாக்சன் பாலியல் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டுகளை வைத்தனர்.

    இச்செய்தியை கேட்டு அவரது ரசிகர்கள் உட்பட அனைவரும் அதிர்ந்து போனார்கள். ஆனால் இந்த குற்றச்சாட்டுக்களை ஜாக்சன் முழுவதுமாக மறுத்தார். வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில் 2009-ம் வருடம், தனது 50-வது வயதில் மைக்கேல் ஜாக்சன் எதிர்பாராதவிதமாக காலமானார்.

    தொடர்ந்து ஜாக்சனின் வியாபார நிறுவனங்களின் மீது சிறுவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் கடமையில் இருந்து தவறி விட்டதாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.

    ஆனால் 2020-ம் வருடம், ஜாக்சன் மீதான பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டிற்காக, ஜாக்சன் தொடங்கி நடத்திய வர்த்தக நிறுவனங்களின் மீது குற்றம்சாட்ட முடியாது என லாஸ் ஏஞ்சல்ஸ் நகர கவுன்டி நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது.

    இந்த தீர்ப்பிற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு கலிபோர்னியா நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்தது. இந்நிலையில் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இவ்வழக்கின் தீர்ப்பில், "ஒரு நிறுவனத்தின் கீழ் பணிபுரியும் ஊழியர்களின் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளுக்கு எதிரான கேடயமாக அந்நிறுவனத்தின் கட்டமைப்பை காரணமாக கருத முடியாது. பாலியல் தாக்குதலுக்கு மறைமுகமாக துணை போவதை மன்னிக்க முடியாது."

    "தாக்குதல் நடத்தியவர் நிறுவனத்தின் முழு பங்கையும் வைத்திருந்தார் என்பதாலும், தாக்குதலை அவர்தான் செய்தார் என்பதாலும், குழந்தைகளை காக்கும் ஆணித்தரமான கடமை நிறுவனத்திற்கு இல்லையென கூற முடியாது. ஒப்பிட்டு கூற இது போல ஒரு வழக்கு இல்லை என்பது உண்மைதான். ஆனால் நிறுவனத்திற்கு எந்த பொறுப்பும் இல்லையென முடிவுக்கு வருவது வக்ரமான முடிவாக இருக்கும்," என்று கூறப்பட்டிருக்கிறது. இதனையடுத்து இந்த வழக்கு மீண்டும் புத்துயிர் பெறப்போகிறது.

    • நியூயார்க்கில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வைத்து தன்னை டிரம்ப் கற்பழித்ததாக ஜீன் கரோல் கூறினார்.
    • டிரம்பின் அவதூறு வழக்கை நீதிபதி லூயிஸ் கப்லான் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது பெண் எழுத்தாளர் ஜீன் கரோல் பாலியல் குற்றச்சாட்டை கூறினார். 1990-ம் ஆண்டுகளில் நியூயார்க்கில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வைத்து தன்னை டிரம்ப் கற்பழித்ததாக ஜீன் கரோல் கூறினார்.

    இது தொடர்பான வழக்கில், கற்பழிப்பு குற்றச்சாட்டை நிராகரித்து கோர்ட்டு, ஜீன் கரோலை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததற்காக டிரம்ப் பொறுப்பேற்க வேண்டும் என்று கடந்த மே மாதம் அறிவித்தது. மேலும் கரோலுக்கு டிரம்ப் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டது.

    ஆனால் அதை திட்டவட்டமாக டிரம்ப் மறுத்தார். மேலும் ஜீன் கரோல் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு விசாரணை நியூயார்க்கில் உள்ள பெடரல் கோர்ட்டில் நடந்தது. இதில் டிரம்பின் அவதூறு வழக்கை நீதிபதி லூயிஸ் கப்லான் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். டிரம்ப் மீதான ஜீன் கரோலின் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் கணிசமான உண்மை இருக்கிறது என்று நீதிபதி தெரிவித்தார்.

    • மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டம் 9வது நாளாக நீடிக்கிறது.
    • பாலியல் புகார் தொடர்பாக பிரிஜ் பூஷன் சிங்கை விசாரிக்க டெல்லி போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    கோண்டா:

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரான பிரிஜ் பூஷன் சரண் சிங் எம்.பி., இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக 18 வயதுக்கு கீழுள்ள வீராங்கனை உள்பட 7 மல்யுத்த வீராங்கனைகள் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக டெல்லி போலீசாரிடம் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் புகார் அளித்தனர். பிரிஜ் பூஷன் சிங் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசார் காலம் தாழ்த்தியதால் மல்யுத்த நட்சத்திரங்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் போராட்டம் இன்று 9வது நாளாக நீடிக்கிறது. பிரிஜ் பூஷன் சரண் சிங் கைது செய்யப்படும்வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.

    போராட்டம் தீவிர மடைவதால் பிரிஜ் பூஷன் சிங்கை விசாரிக்க டெல்லி போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக அவருக்கு சம்மன் அனுப்பப்பட உள்ளது.

    இந்நிலையில், குற்றச்சாட்டுக்கு ஆளான பிரிஜ் பூஷன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

    போராட்டம் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக அனைத்து மல்யுத்த நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. என்னை தூக்கில் வேண்டுமானாலும் போடுங்கள், ஆனால் மல்யுத்த செயல்பாடுகளை நிறுத்தக்கூடாது என சொல்கிறேன். குழந்தைகளின் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாம். மகாராஷ்டிரா, தமிழ்நாடு, திரிபுரா என யார் ஏற்பாடு செய்தாலும், போட்டிகளை நடத்த அனுமதிக்கவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வரும் 7ம் தேதி மல்யுத்த கூட்டமைப்பு தேர்தல் நடைபெறவிருந்த நிலையில், அந்த தேர்தலை விளையாட்டு அமைச்சகம் நிறுத்தி வைத்துள்ளது. அத்துடன், 45 நாட்களுக்குள் தேர்தலை நடத்துவதற்கும், மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிப்பதற்கும் ஒரு தற்காலிக குழுவை அமைக்கும்படி இந்திய ஒலிம்பிக் சங்கத்தை விளையாட்டு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

    இதையடுத்து, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் முன்னாள் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை சுமா ஷிரூர், இந்திய வுஷூ சங்க தலைவர் பூபேந்திர சிங் பஜ்வா ஆகியோர் கொண்ட தற்காலிக குழுவை ஒலிம்பிக் சங்கம் அமைத்துள்ளது.

    போட்டிகளை யார் நடத்தினாலும் மல்யுத்த கூட்டமைப்புக்கு பிரச்சனையில்லை, வழக்கம்போல் போட்டிகளை நடத்தவேண்டும் என்று மல்யுத்த வீரர்கள், ஒலிம்பிக் சங்கம் மற்றும் அரசாங்கத்தை பிரிஜ் பூஷன் கேட்டுக்கொண்டுள்ளார். இல்லையெனில் மல்யுத்த கூட்டமைப்பு அதற்கான ஏற்பாட்டை செய்யமுடியும் என்றார்.

    • திமுக எம்.பி. அப்துல்லா ஜந்தர் மந்தர் சென்று திமுக சார்பில் ஆதரவு தெரிவித்தார்.
    • போராடும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதை காண நெஞ்சம் பதைக்கிறது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், திமுக எம்.பி. அப்துல்லா இன்று ஜந்தர் மந்தர் சென்று போராடும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு திமுக சார்பில் ஆதரவு தெரிவித்தார்.

    டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்களுக்கு நீதி கிடைக்க உறுதுணையாக நிற்போம் என திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

    இந்தியாவுக்கே பெருமை தேடித்தந்த நமது மற்போர் வீரர்கள் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகி, சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதைக் காண நெஞ்சம் பதைக்கிறது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    • எனக்கு எதிராக தர்ணா போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். எனக்கு எதிராக சதி நடக்கிறது.
    • பிரதமர் அலுவலகம் உள்துறை அமைச்சருடன் நான் பேசவில்லை.

    புதுடெல்லி:

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜனதா எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண்சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு சுமத்தி உள்ளனர்.

    அவர் பதவி விலக கோரி முன்னணி வீராங்கனைகள் வினேஷ் போகத், சரிதா, சாக்ஷி, மாலிக், சங்கீதா, போகத் உள்ளிட்ட பலர் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு போராட்டத்தை தொடங்கினார். இவர்களுடன் முன்னணி வீரரான பஜ்ரங் புனியாவும் போராட்டம் நடத்தினார்.

    இந்த போராட்டம் நேற்று 3-வது நாளாக நீடித்தது. போராட்டம் நடத்தியவர்களில் இருந்து பஜ்ரங் புனியா, ரவி தகித்யா, சாக்ஷி மாகி, வினேஷ் போகத் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு மத்திய விளையாட்டு துறை மந்திரி அனுராக் தாக்கூரை நேரில் சந்தித்து பேசினர்.

    அப்போது இந்திய மல்யுத்த சம்மேளனத்தை உடனடியாக கலைக்க வேண்டும் என வீராங்கனைகள் கோரிக்கை வைத்தனர். இதை தொடர்ந்து நேற்று இந்த விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்திய வீராங்கனைகள் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி. உஷாவுக்கு கடிதம் அனுப்பினர்.

    அதில் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை செய்ய ஒரு குழு அமைக்க வேண்டும். இந்திய மல்யுத்த சம்மேளனம் கலைக்கப்பட வேண்டும், அதன் தலைவர் நீக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர்.

    இந்த கடிதம் தொடர்பாக இந்திய ஒலிம்பிக் சங்கம் செயற்குழு ஆலோசனை செய்தது. பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்த விசாரிக்க 7 பேர் கொண்ட குழு அமைக்க இந்த கூட்டத் தில் முடிவு செய்யப்பட்டது.

    இந்த குழுவில் மேரிகோம், டோலா பானர்ஜி, அலக் நந்தா அசோக், யோகேஷ் வர்தத், சஹ்தேவ் யாதவ் மற்றும் 2 வக்கீல்கள் இடம் பெற்று உள்ளனர்.

    இதற்கிடையே மல்யுத்த வீராங்கனைகளுடன் மத்திய விளையாட்டு துறை மந்திரி அனுராக் தாக்கூர் நடத்திய பேச்சுவார்த்தையில் சமூக உடன்பாடு ஏற்பட்டது. வீராங்கனைகள் கோரிக்கைகளை ஏற்பதாக அவர் உறுதியளித்தார்.

    இதைத்தொடர்ந்து மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். வீரர், வீராங்கனைகள் மத்தியில் அனுராஜ் தாகூர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் துன்புறுத்தல், நிதி முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த குழு 4 வாரங்களில் விசாரணை நடத்தி அறிக்கையை சமர்பிக்கும். விசாரணை முடியும் வரை 4 வாரம் அவர் மல்யுத்த சம்மேளன தலைவர் பதவியில் இருந்து ஒதுங்கி இருப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்ட இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பரிஜ் பூஷன்சிங் பதவி விலக மீண்டும் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    எனக்கு எதிராக தர்ணா போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். எனக்கு எதிராக சதி நடக்கிறது. நான் ஒரு அறிக்கை வெளியிட்டால் சுனாமி ஏற்படும். நான் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி ஆவேன். நான் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை. பிரதமர் அலுவலகம் உள்துறை அமைச்சருடன் நான் பேசவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். பிரிஜ் பூசன் சிங் 6 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் மீது வீரர், வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினர்.
    • இந்தக் குற்றச்சாட்டை விசாரிக்க 7 பேர் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஷ் பூஷன் ஷரண் சிங் மற்றும் பயிற்சியாளர்கள் மீது மல்யுத்த வீரர்-வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கூட்டமைப்பின் தலைவரை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே, மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷன் ஷரண் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டை விசாரிப்பதற்கு 7 பேர் கொண்ட குழுவை இந்திய ஒலிம்பிக் சங்கம் அமைத்துள்ளது. இந்த குழுவில் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத், வில்வித்தை வீராங்கனை டோலா பானர்ஜி, பளுதூக்குதல் கூட்டமைப்பு தலைவர் சதேவ் யாதவ், அலாக்நந்தா அசோக் மற்றும் இரண்டு வழக்கறிஞர்கள் இடம்பெற்றுள்ளனர்.

    ஏற்கனவே மல்யுத்த வீரர்கள், இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷாவுக்கு கடிதம் அனுப்பினர். அதில், பல்வேறு இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறியிருந்தனர். 4 கோரிக்கைகளையும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர்.

    இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்களுடன் நேற்று நள்ளிரவு விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் அளித்த உறுதிமொழியை ஏற்று போராட்டத்தை கைவிடுவதாக மல்யுத்த வீரர்கள் அறிவித்தனர்.

    கண்காணிப்பு குழு அமைக்கப்படும். அதற்கான பெயர்கள் நாளை அறிவிக்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் குழு 4 வாரங்களுக்குள் விசாரணையை முடித்துவிடும். இந்திய மல்யுத்த கூட்டமைப்பு மற்றும் அதன் தலைவர் மீது சுமத்தப்பட்ட நிதி அல்லது பாலியல் துன்புறுத்தல் என அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் இது முழுமையாக விசாரிக்கும்.

    விசாரணை முடியும் வரை அவர் (சிங்) ஒதுங்கி விசாரணைக்கு ஒத்துழைப்பார். மேற்பார்வைக் குழு மல்யுத்த கூட்டமைப்பின் அன்றாட விவகாரங்களை நடத்தும் என மந்திரி அனுராக் தாக்கூர் உறுதி அளித்தார்.

    • மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
    • மல்யுத்த வீரர்கள், இந்திய ஒலிம்பிக் சங்க தலைவத் பி.டி.உஷாவுக்கு கடிதம் அனுப்பினர்.

    புதுடெல்லி:

    இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஷ் பூஷன் ஷரண் சிங் மற்றும் பயிற்சியாளர்கள் மீது மல்யுத்த வீரர்-வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கூட்டமைப்பின் தலைவரை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷன் ஷரண் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டை விசாரிப்பதற்கு 7 பேர் கொண்ட குழுவை இந்திய ஒலிம்பிக் சங்கம் அமைத்துள்ளது. இந்த குழுவில் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத், வில்வித்தை வீராங்கனை டோலா பானர்ஜி, பளுதூக்குதல் கூட்டமைப்பு தலைவர் சதேவ் யாதவ், அலாக்நந்தா அசோக் மற்றும் இரண்டு வழக்கறிஞர்கள் இடம்பெற்றுள்ளனர்.

    முன்னதாக, மல்யுத்த வீரர்கள், இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷாவுக்கு கடிதம் அனுப்பினர். அதில், பல்வேறு இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறியிருந்தனர். 4 கோரிக்கைகளையும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர்.

    • பிரிஜ்பூஷனை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வீராங்கனைகள் தெரிவித்தனர்.
    • 200-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் திரண்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    புதுடெல்லி:

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் புஷன் ஷரன் சிங் மற்றும் சில பயிற்சியாளர்கள் இளம் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறி முன்னணி மல்யுத்த வீரர்-வீராங்கனைகள் நேற்று முன்தினம் டெல்லி ஜந்தர்மந்தரில் தர்ணா போராட்டத்தை தொடங்கினர்.

    போராட்டகளத்துக்கு முன்னாள் வீரர்-வீராங்கனைகள் வந்து ஆதரவு தெரிவித்து பேசினார்கள். அங்கு பல வீரர்-வீராங்கனைகள் குவிந்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இவ்விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததையடுத்து இந்திய மல்யுத்த சம்மேளனத்திடம் மத்திய விளையாட்டு அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது. 72 மணி நேரத்துக்குள் விளக்கம் அளிக்கும்படி கெடுவிதித்துள்ளது.

    இதற்கிடையே போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்-வீராங்கனைகளுடன் நேற்று இரவு மத்திய மந்திரி அனுராக்தாகூர் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    இந்த பேச்சுவார்த்தை அனுராக்தாகூரின் இல்லத்தில் நடந்தது. இதில் சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா, வினேஷ் போகத், ரவி தகியா உள்ளிட்ட வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர். இரவு 10 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை இன்று அதிகாலை 2 மணிக்கு முடிவடைந்தது.

    பேச்சுவார்த்தையின் போது இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பதவியில் இருந்து பிரிஜ்பூஷன் ஷரன்சிங்கை நீக்க வேண்டும், அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும், மல்யுத்த சம்மேளனத்தை கூண்டோடு கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வீரர்-வீராங்கனைகள் முன் வைத்தனர்.

    மல்யுத்த சம்மேளனத்திடம் விளையாட்டு அமைச்சகம் விளக்கம் கேட்டு இருப்பதால் காத்திருக்குமாறு மத்திய மந்திரி அனுராக்தாகூர் தெரிவித்தார்.

    மேலும் இவ்விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க அவகாசம் தேவைப்படும் என்றும் விசாரணை குழுவை அமைக்க அரசு தயாராக இருப்பதாகவும் மந்திரி தெரிவித்தார்.

    ஆனால் பிரிஜ்பூஷனை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வீராங்கனைகள் தெரிவித்தனர். இதனால் இந்த பேச்சு வார்த்தையில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் தோல்வியில் முடிந்தது. இன்று மதியம் மீண்டும் வீரர்-வீராங்கனைகளுடன் மந்திரி அனுராக் தாகூர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

    டெல்லி ஜந்தர்மந்தரில் இன்று 3-வது நாளாக மல்யுத்த வீரர்-வீராங்கனைகளின் போராட்டம் தொடர்ந்தது. அங்கு 200-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் திரண்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    போராட்டக்காரர்கள் கூறும்போது, 5 முதல் 6 வீராங்கனைகள், சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் மீது போலீசில் புகார் கொடுக்க தயாராக இருப்பதாக தெரிவித்தனர். வீராங்கனை வினேத்போகத் கூறும்போது, எங்களுக்கு நீதி கிடைக்கும்வரை போராட்டம் தொடரும். பிரிஜ்பூஷனை சிறைக்கு அனுப்பும் வரை போராட்டம் நீடிக்கும் என்றார்.

    தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள பிரிஜ்பூஷன், தனக்கு எதிராக அரசியல் சதி நடக்கிறது என்றும் இது மல்யுத்த வீராங்கனைகளையும், விளையாட்டையும் கேவலப்படுத்த நடக்கும் முயற்சி என்றும் தெரிவித்தார். இவ்விவகாரம் தொடர்பாக இன்று பேட்டி அளிப்பதாக அவர் தெரிவித்தார்.

    இதற்கிடையே பிரிஜ்பூஷனிடம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • புகார் குறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக பாஜக தலைவர் பபிதா போகத் உறுதி அளித்தார்.
    • மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

    புதுடெல்லி:

    ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர் பஜ்ரங் பூனியா மற்றும் வீராங்கனைகள் சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்ட சுமார் 200 மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் மற்றும் பயிற்சியாளர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி உள்ள இவர்கள், முறைகேடுகள் நடப்பதாகவும் குற்றம்சாட்டினர். அவர்களின் போராட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடர்கிறது.

    இந்த போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், பாஜக தலைவரும் மல்யுத்த வீராங்கனையுமான பபிதா போகத் இன்று ஜந்தர் மந்தர் சென்று போராடும் மல்யுத்த வீராங்கனைகளை சந்தித்து பேசினார். அவர்களின் புகார் குறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான பிருந்தா காரத், மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்தார். அப்போது, இந்த போராட்டத்தை அரசியலாக்க வேண்டாம் என்றுகூறி அவரை அங்கிருந்து செல்லும்படி கைகூப்பி கேட்டுக்கொண்டனர்.

    "தயவுசெய்து மேடையில் இருந்து கீழே இறங்குங்கள். தயவு செய்து இதை அரசியலாக்க வேண்டாம், இது விளையாட்டு வீரர்களின் போராட்டம்" என பஜ்ரங் புனியா கேட்டுக்கொண்டார்.

    இதுபற்றி பேசிய பிருந்தா காரத், "மல்யுத்த வீரர்கள் இங்கு தர்ணா போராட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. எந்த அரசாங்கமாக இருந்தாலும் சரி, பெண்கள் கொடுக்கும் புகார் மீது நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்யவேண்டும். விசாரணை முடிவடையும் வரை குற்றம்சாட்டப்பட்ட நபர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும்" என்றார்.

    • மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக பாஜக அரசு உள்ளதாக பபிதா போகத் கூறினார்.
    • மல்யுத்த சம்மேளனத்திடம் மத்திய விளையாட்டு அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது.

    ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர் பஜ்ரங் பூனியா மற்றும் வீராங்கனைகள் சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்டோர் டெல்லி ஜந்தர் மந்தரில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் மற்றும் பயிற்சியாளர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி உள்ள இவர்கள், முறைகேடுகள் நடப்பதாகவும் குற்றம்சாட்டினர். அவர்களின் போராட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடர்கிறது.

    இந்த போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இன்று பாஜக தலைவரும் மல்யுத்த வீராங்கனையுமான பபிதா போகத் இன்று ஜந்தர் மந்தர் சென்று போராடும் மல்யுத்த வீராங்கனைகளை சந்தித்து பேசினார். அவர்களின் புகார் குறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    பபிதா போகத் பேசும்போது, 'நான் முதலில் மல்யுத்த வீராங்கனை. மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக பாஜக அரசு உள்ளது. இன்றே நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வேன். மேலும் நான் ஒரு மல்யுத்த வீராங்கனை மட்டுமல்லாமல் அரசாங்கத்திலும் இருக்கிறேன், எனவே மத்தியஸ்தம் செய்வது எனது பொறுப்பு. நான் போட்டிகளில் பங்கேற்ற காலத்திலும் இதுபோன்று பாலியல் அத்துமீறல் தொடர்பான சம்பவங்களை கேள்விப்பட்டிருக்கிறேன். நெருப்பில்லாமல் புகையாது. எனவே, வீராங்கனைகளின் புகார்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்' என்றார்.

    மல்யுத்த வீராங்கனைகள் கூறும் பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, மல்யுத்த சம்மேளனத்திடம் மத்திய விளையாட்டு அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது. 72 மணி நேரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    • ஒலிம்பிக் போட்டிகளுக்கு நாங்கள் போகும்போது, ஒரு பயிற்சியாளரோ, மருத்துவரோ உடன் வருவதில்லை.
    • அமைப்பின் தலைவர் பல பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார்.

    புதுடெல்லி:

    உலக அரங்கில் மூவர்ண கொடியின் பெருமையை உயர செய்து, இந்தியாவை மிக பெரும் உச்சத்திற்கு கொண்டு சென்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் ஆவர். ஒலிம்பிக், காமன்வெல்த் மற்றும் உலக சாம்பியன்ஷிப் உள்ளிட்ட போட்டிகளில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்று தந்து பெருமை தேடி தந்தவர்கள்.

    இந்த நிலையில், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர் பஜ்ரங் பூனியா மற்றும் வீராங்கனைகள் சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்டோர் டெல்லியில் திடீரென நேற்று மதியம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி பூனியா கூறும்போது, இந்திய மல்யுத்த கூட்டமைப்பில் காணப்படும் சர்வாதிகார போக்கை, மல்யுத்த வீரர்கள் சகித்து கொள்ள விரும்பவில்லை.

    பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அதுபற்றி விளக்குவோம் என கூறினார்.

    இதன்பின் நேற்று மாலை, அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, இந்திய மல்யுத்த கூட்டமைப்பினரால் வீரர்கள் தொடர்ந்து துன்புறுத்தப்படுகிறோம். மல்யுத்த விளையாட்டு என்றால் என்னவென்று கூட தெரியாதவர்கள் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர் என்று பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார்.

    இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் நிர்வாகம் மாற்றப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எங்களுக்கு பிரதமர் மற்றும் உள்துறை மந்திரி ஆதரவளிப்பார்கள் என்று நம்புகிறோம் என்றும் கூறினார். இந்த நிலையில், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் கூறும்போது, டோக்கியோ ஒலிம்பிக்கில் தோல்வி அடைந்தபோது, மனதளவில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் என்னை கொடுமைப்படுத்தினார்.

    ஒவ்வொரு நாளும் எனது வாழ்வை முடித்து கொள்ளலாம் என நான் நினைத்தேன். எந்தவொரு வீரர், வீராங்கனைக்கும் ஏதேனும் நடந்து விட்டால், அதற்கு தலைவரே பொறுப்பாவார். பயிற்சியாளர்கள் பெண்களை துன்புறுத்துகின்றனர். கூட்டமைப்புக்கு சாதகமுடன் நடந்து கொள்ளும் சில ஆண் பயிற்சியாளர்கள், பெண் பயிற்சியாளர்களிடம் தவறாக அணுகுகிறார்கள். அவர்கள் வீராங்கனைகளை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளனர்.

    அமைப்பின் தலைவர் பல பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார். அவர்கள் (கூட்டமைப்பு) எங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடுகின்றனர். எங்களை சுரண்டுகின்றனர். ஒலிம்பிக் போட்டிகளுக்கு நாங்கள் போகும்போது, ஒரு பயிற்சியாளரோ, மருத்துவரோ உடன் வருவதில்லை. நாங்கள் இதுபற்றி கேட்டால் பதிலுக்கு மிரட்டப்படுகிறோம் என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினார். இதனால், போராட்ட பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் மற்றும் பா.ஜ.க. எம்.பி.யான பிரிஜ் பூஷண் சிங் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசும்போது, எந்த வீரரையாவது கூட்டமைப்பு துன்புறுத்தியது என கூற யாரேனும் முன்னே இருக்கிறார்களா? என கேட்டார். அதன்பின் அவர் கூறும்போது, பாலியல் துன்புறுத்தல் சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. அப்படி எதுவும் நடந்திருந்தால் தூக்கில் தொங்க தயார். வினேஷ் போகத்திடம் நான் ஒன்றை கேட்க விரும்புகிறேன்.

    அவர் ஏன் ஒலிம்பிக்கின்போது, நிறுவனத்தின் லோகோ (அடையாள சின்னம்) தெரியும்படியான உடையை அணிகிறார்? அவர் போட்டியில் தோல்வி அடைந்தபோது கூட, நான் அவரை ஊக்கப்படுத்த மட்டுமே செய்தேன். பாலியல் துன்புறுத்தல் என்பது மிக பெரிய குற்றச்சாட்டு. எனது பெயர் இதில் இழுக்கப்பட்டு இருக்கும்போது, நான் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? விசாரணைக்கு தயாராக இருக்கிறேன் என்று அவர் கூறினார். இந்த நிலையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு, இந்தியாவின் உச்சப்பட்ச தேசிய விளையாட்டு கழகம் என கூறப்படும் இந்திய விளையாட்டு கழகம் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.

    அதில், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மற்றும் பிற வீரர், வீராங்கனைகள் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு விரிவான விளக்கம் கொண்ட அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கும்படி அதில் வலியுறுத்தி உள்ளது. டெல்லியில் நடந்து வரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டத்திற்கு வழிவகுத்த விசயங்கள் மற்றும் காரணங்கள் பற்றியும் விளக்கம் அளிக்க கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.

    அதேவேளையில், 41 மல்யுத்த வீரர், வீராங்கனைகள், 13 பயிற்சியாளர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ளும், மகளிர் தேசிய மல்யுத்த பயிற்சி முகாம் லக்னோவில் ஜனவரி 18-ந்தேதி (நேற்று) தொடங்க இருந்தது. எனினும், இந்த விவகாரம் சூடு பிடித்ததும் பயிற்சி முகாம் ரத்து செய்யப்படுகிறது என இந்திய விளையாட்டு கழகத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டு பற்றி 72 மணி நேரத்தில் பதிலளிக்க மல்யுத்த கூட்டமைப்புக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

    இதேபோன்று, டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டத்தின்போது, டெல்லி மகளிரணி தலைவர் ஸ்வாதி மாலிவல் சம்பவ பகுதிக்கு சென்று அவர்களை சந்தித்து பேசினார். இந்திய மூவர்ண கொடியின் பெருமையை உயர செய்தவர்கள், நாட்டை மிக பெரும் உச்சத்திற்கு கொண்டு சென்றவர்கள் நீதி கேட்டு, ஒன்று கூடி, கடும் குளிரில் போராட்டம் நடத்தியது கண்டு அதிர்ச்சி அடைந்தேன் என டுவிட்டரில் அவர் தெரிவித்து உள்ளார்.

    ×