search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மல்யுத்த வீரர்-வீராங்கனைகளுடன் மத்திய மந்திரி பேச்சுவார்த்தை தோல்வி- 3வது நாளாக போராட்டம் நீடிப்பு
    X

    மல்யுத்த வீரர்-வீராங்கனைகளுடன் மத்திய மந்திரி பேச்சுவார்த்தை தோல்வி- 3வது நாளாக போராட்டம் நீடிப்பு

    • பிரிஜ்பூஷனை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வீராங்கனைகள் தெரிவித்தனர்.
    • 200-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் திரண்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    புதுடெல்லி:

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் புஷன் ஷரன் சிங் மற்றும் சில பயிற்சியாளர்கள் இளம் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறி முன்னணி மல்யுத்த வீரர்-வீராங்கனைகள் நேற்று முன்தினம் டெல்லி ஜந்தர்மந்தரில் தர்ணா போராட்டத்தை தொடங்கினர்.

    போராட்டகளத்துக்கு முன்னாள் வீரர்-வீராங்கனைகள் வந்து ஆதரவு தெரிவித்து பேசினார்கள். அங்கு பல வீரர்-வீராங்கனைகள் குவிந்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இவ்விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததையடுத்து இந்திய மல்யுத்த சம்மேளனத்திடம் மத்திய விளையாட்டு அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது. 72 மணி நேரத்துக்குள் விளக்கம் அளிக்கும்படி கெடுவிதித்துள்ளது.

    இதற்கிடையே போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்-வீராங்கனைகளுடன் நேற்று இரவு மத்திய மந்திரி அனுராக்தாகூர் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    இந்த பேச்சுவார்த்தை அனுராக்தாகூரின் இல்லத்தில் நடந்தது. இதில் சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா, வினேஷ் போகத், ரவி தகியா உள்ளிட்ட வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர். இரவு 10 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை இன்று அதிகாலை 2 மணிக்கு முடிவடைந்தது.

    பேச்சுவார்த்தையின் போது இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பதவியில் இருந்து பிரிஜ்பூஷன் ஷரன்சிங்கை நீக்க வேண்டும், அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும், மல்யுத்த சம்மேளனத்தை கூண்டோடு கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வீரர்-வீராங்கனைகள் முன் வைத்தனர்.

    மல்யுத்த சம்மேளனத்திடம் விளையாட்டு அமைச்சகம் விளக்கம் கேட்டு இருப்பதால் காத்திருக்குமாறு மத்திய மந்திரி அனுராக்தாகூர் தெரிவித்தார்.

    மேலும் இவ்விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க அவகாசம் தேவைப்படும் என்றும் விசாரணை குழுவை அமைக்க அரசு தயாராக இருப்பதாகவும் மந்திரி தெரிவித்தார்.

    ஆனால் பிரிஜ்பூஷனை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வீராங்கனைகள் தெரிவித்தனர். இதனால் இந்த பேச்சு வார்த்தையில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் தோல்வியில் முடிந்தது. இன்று மதியம் மீண்டும் வீரர்-வீராங்கனைகளுடன் மந்திரி அனுராக் தாகூர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

    டெல்லி ஜந்தர்மந்தரில் இன்று 3-வது நாளாக மல்யுத்த வீரர்-வீராங்கனைகளின் போராட்டம் தொடர்ந்தது. அங்கு 200-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் திரண்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    போராட்டக்காரர்கள் கூறும்போது, 5 முதல் 6 வீராங்கனைகள், சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் மீது போலீசில் புகார் கொடுக்க தயாராக இருப்பதாக தெரிவித்தனர். வீராங்கனை வினேத்போகத் கூறும்போது, எங்களுக்கு நீதி கிடைக்கும்வரை போராட்டம் தொடரும். பிரிஜ்பூஷனை சிறைக்கு அனுப்பும் வரை போராட்டம் நீடிக்கும் என்றார்.

    தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள பிரிஜ்பூஷன், தனக்கு எதிராக அரசியல் சதி நடக்கிறது என்றும் இது மல்யுத்த வீராங்கனைகளையும், விளையாட்டையும் கேவலப்படுத்த நடக்கும் முயற்சி என்றும் தெரிவித்தார். இவ்விவகாரம் தொடர்பாக இன்று பேட்டி அளிப்பதாக அவர் தெரிவித்தார்.

    இதற்கிடையே பிரிஜ்பூஷனிடம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    Next Story
    ×