search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கறிவிருந்து"

    • திருவிழாவில் பலியிடப்படும் ஆடுகள் நேர்த்திக் கடனாக விடப்பட்டு, கோவிலிலேயே வளர்க்கப்படுகின்றன.
    • சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை ஆர்வமுடன் விருந்தை ருசி பார்த்தனர்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திரு மங்கலம் கரடிக்கல் அருகே அனுப்பப்பட்டியில் உள்ளது கரும்பாறை முத்தையா கோவில். இந்த கிராமத்தின் காவல் தெய்வமாக கரும் பாறை முத்தையாவை வழிபட்டு வருகின்றனர். இங்கு மார்கழி மாதத்தில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் அசைவ விருந்து திருவிழா பாரம்பரியமாக நடந்து வருகிறது.

    இந்த விழாவுக்கு, பிறந்த பச்சிளம் பெண் குழந்தை முதல் வயதான மூதாட்டி வரை பங்கேற்க அனுமதி கிடையாது. ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளலாம்.திருவிழாவில் பலியிடப்படும் ஆடுகள் நேர்த்திக் கடனாக விடப்பட்டு, கோவிலிலேயே வளர்க்கப்படுகின்றன.

    கரடிக்கல், குன்னம்பட்டி, அனுப்பப்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறிய பின்னர், கிடாய்களை இந்த கோவி லில் விட்டுச் செல்வார்கள். அப்படி விடப்பட்ட கிடாய்கள் இந்த கோவிலை சுற்றியுள்ள கிராமங்களில் வயல்வெளிகளில் மேயும். கோவில் கிடாய்களை யாரும் விரட்டமாட்டார்கள். முத்தையா சாமியே தங்களது வயலில் இரை தேடுகிறார் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.


    இந்த ஆண்டு திருவிழாவில் நேர்த்திக்கடனாக விடப்பட்டு 62 ஆடுகள் கோவிலில் பலியிடப்பட்டன. பின்னர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்ட 85 மூடை அரிசியை கொண்டு 2 ஆயிரம் கிலோ சாதம் சமைத்து பிரமாண்ட அசைவ விருந்து தயாரானது. கம கம கறி வாசனையுடன் அனைவருக்கும் விருந்து பரிமாறப்பட்டது.

    சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை ஆர்வமுடன் விருந்தை ருசி பார்த்தனர்.

    கறிவிருந்தில் திருமங்கலம், கரடிக்கல், மாவி லிபட்டி, செக்கானூரணி, சோழவந்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    இந்த அசைவ விருந்தை சாப்பிட்ட பிறகு இலையை எடுக்காமல் அப்படியே விட்டுச் செல்வது வழக்கம். இந்த இலைகள் காய்ந்து, அந்தப் பகுதியில் இருந்து கலைந்த பிறகே பெண்கள் கோவிலில் சாமி கும்பிட வருவது வழக்கமாக .

    மேலும் அடுத்த ஆண்டு நடைபெறும் திருவிழா விற்காக சிறிய கிடாய்கள் கோவில் வளாகத்தில் நேர்த்திக்கடனாகவும் விடப்பட்டன. 

    • சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பாத சிறுகுடி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பாதசிறுகுடியில் பொன்னர்சங்கர் கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட கறிவிருந்து நடைபெற்றது. இதற்காக பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய கிடாய்கள் வெட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொன்னர்சங்கர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. கோவில் முன்பு ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட படையல் கறி விருந்து விமர்சையாக நடைபெற்றது.

    இந்த திருவிழாவில் புதுப்பட்டி, புதூர், நடுவனூர், சிறுகுடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான ஆண்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் கிடாய் வெட்டு அன்னதானத்தில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பாத சிறுகுடி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • ஒவ்வொரு ஆண்டும் சுமார் 100 முதல் 200-க்கும் மேற்பட்ட கிடாய்களை பக்தர்கள் கோவிலில் நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர்.
    • கிடாய் விருந்தில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து சுமார் 5,000-க்கும் கலந்து கொண்டு உணவருந்தினர்.

    திருச்சுழி:

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள தமிழ்பாடி கிராமத்தில் மந்தகுமாரன் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் களரி திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.

    மேலும் இந்தத் திருவிழாவில் அதிகாலை முதல் மாலை வரை இடைவெளியின்றி தொடர்ச்சியாக நடைபெறும் சமபந்தி கிடாய் கறி விருந்து நிகழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றது.

    கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த திருவிழாவின் சமபந்தி கிடாய் விருந்தில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்வது தனிச்சிறப்பாகும். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 100 முதல் 200-க்கும் மேற்பட்ட கிடாய்களை பக்தர்கள் கோவிலில் நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர்.

    இந்த ஆண்டு நடைபெற்ற திருவிழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக கொண்டு வந்திருந்த 196 ஆடுகள் கோவில் சன்னதி முன்பாக பலியிடப்பட்டது. இதனையடுத்து பலியிடப்பட்ட ஆடுகளை சமைத்து அனைவருக்கும் சமபந்தி கறி விருந்தாக பரிமாறப்பட்டது. இந்த கிடாய் விருந்தில் பெண்கள் பங்கேற்க கூடாது என்பதால், ஆண்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

    இதில் பங்கேற்பதற்காக தமிழ்ப்பாடி, திருச்சுழி, அருப்புக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு மேல் நீண்ட வரிசையில் காத்திருந்து சமபந்தி கிடாய் விருந் தில் பங்கேற்று பசியாறினர்.

    முன்னதாக மந்தகுமாரன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. அதன் பின்னர் காலை 9 மணி அளவில் சமபந்தி கிடாய் விருந்து தொடங்கியது. கிடாய் விருந்தில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து சுமார் 5,000-க்கும் கலந்து கொண்டு உணவருந்தினர்.

    மேலும் இந்த சமபந்தி விருந்தில் கலந்துகொள்ளும் ஆண்கள் மது அருந்தி பங்கேற்கக் கூடாது எனவும், அவ்வாறு மது அருந்தி விருந்தில் கலந்துகொண்டால் சுவாமியின் கடுமையான தண்டனைக்கு ஆளாக நேரிடும் என்பது காலங்காலமாக தமிழ்பாடி கிராம மக்களின் இன்றளவும் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • ஆடி முதல் நாளான இன்று புதுமணத் தம்பதிகளுக்கு விருந்து வழங்கும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.
    • சந்தையில் ஆட்டு இறைச்சி மற்றும் கோழி விற்பனை அமோகமாக நடைபெற்றது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு உள்ளிட்ட பகுதிகளில் தினசரி மற்றும் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்குள்ள பல்வேறு பகுதிகளில் இன்று இறைச்சி விற்பனை அமோகமாக நடைபெற்றதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    ஆடி மாதத்தில் புதிதாக திருமணம் செய்த தம்பதியை தங்கள் வீட்டுக்கு அழைத்து விருந்து வைப்பது தொன்று தொட்டு கடைபிடிக்கும் பழக்கமாக இருந்து வருகிறது. நகரங்களில் இது போன்ற பழக்கம் மறந்து விட்டாலும் கிராமங்களில் இன்றளவும் தவறாமல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி புதிதாக திருமணம் செய்த மகள் மற்றும் மருமகனை ஆடி முதல் நாளில் வரவழைத்து அவர்களுக்கு புத்தாடை வழங்கி கறி விருந்து சமைத்து பரிமாறுவார்கள். மேலும் அவர்களுக்கு சீர் வரிசையும் வழங்கி ஒரு வாரம் தங்கள் வீட்டில் வைத்து உபசரிப்பார்கள்.

    ஆடி விருந்து என்பது தலை ஆடி, நடு ஆடி, கழிவு ஆடி என 3 வகைகளில் விருந்து அளிக்கப்படுகிறது. ஆடி முதல் நாளில் அளிக்கப்படும் விருந்து தலை ஆடி என்றும் 2 வாரங்கள் கழித்து அளிக்கப்படும் விருந்து நடு ஆடி என்றும், கடைசி நாளில் அளிக்கப்படும் விருந்து கழிவு ஆடி என அழைக்கப்படுகிறது.

    பெரும்பாலும் புதுமணத் தம்பதிகளுக்கு தலை ஆடி மற்றும் நடு ஆடியிலேயே விருந்து வைப்பது வழக்கமாக உள்ளது. கழித்து கட்டிய மருமகனுக்கு கழிவு ஆடி என்ற பழமொழி உள்ளது. இதனால் கடைசி ஆடியில் மருமகனை அழைத்தால் அது கவுரவ குறைச்சலாக இன்று வரை கிராமங்களில் கருதப்படுகிறது. இதனால் அவரவர் வசதிக்கேற்றபடி புதுமணத்தம்பதிகளுக்கு விருந்து அளித்து வருவது வழக்கமாக உள்ளது.

    அதன்படி ஆடி முதல் நாளான இன்று புதுமணத் தம்பதிகளுக்கு விருந்து வழங்கும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. இதனால் சந்தையில் ஆட்டு இறைச்சி மற்றும் கோழி விற்பனை அமோகமாக நடைபெற்றது. வழக்கமாக பண்டிகை நாட்களில் கொண்டாடப்படுவதைப் போல ஆடியிலும் இந்த நிகழ்ச்சி நடைபெறுவதால் ஏராளமான ஆடுகள், கோழிகள் அறுக்கப்பட்டு விற்பனைக்கு வந்தன.

    அதிகாலை முதல் ஏராளமான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து இதனை வாங்கிச் சென்றனர். இதே போல காய்கறிகள் விற்பனையும், ஜவுளி உள்ளிட்ட விற்பனையும் அதிகமாக நடந்ததால் பெரும்பாலான வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    ×