search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடல் நீர்"

    • கோவா கடற்கரைக்கு அடுத்தபடியாக சுற்றுலா பயணிகள் பெரிதும் விரும்புவது புதுவை கடற்கரையைதான்.
    • கடல் நீரைவிட செம்மண் நீரின் அடர்த்தி அதிகம் என்பதால் கடலில் தனியாக தெரிகிறது.

    புதுச்சேரி:

    புதுவை கடற்கரைக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து அதன் அழகை ரசித்து செல்வது வழக்கம்.

    கோவா கடற்கரைக்கு அடுத்தபடியாக சுற்றுலா பயணிகள் பெரிதும் விரும்புவது புதுவை கடற்கரையைதான்.

    இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல புதுவை கடற்கரையில் சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் வந்திருந்தனர்.

    அப்போது திடீரென பழைய வடிசாராய ஆலையின் பின்புறம் உள்ள குறிப்பிட்ட பகுதியில் கடல் நீரின் நிறம் மாறியிருந்தது. பிற பகுதிகளில் நீல வண்ணத்தில் இருக்கும்போது, அந்த பகுதி மட்டும் செம்மண் நிறத்தில் மாறியிருந்தது. ஒரு கிலோ மீட்டர் அளவில் குருசுகுப்பம் பகுதி வரை செம்மண் நிறமாக காட்சியளித்தது.

    இதனால் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்த சுற்றுலா பயணிகள் தலைமை செயலகம் எதிரே உள்ள மணல் பரப்பில் இறங்கி, நிறம் மாறியிருந்த கடலின் அழகை புகைப்படம் எடுத்தனர்.

    இது தொடர்பாக மீனவர்களிடம் கேட்டபோது ஆரோவில் பகுதியில் மழை பெய்தால், அங்குள்ள செம்மண் மேட்டு பகுதிகளில் உள்ள மணல் சரிந்திருக்கும், இதனால் அந்த செம்மண் நீர் நகர்ந்து கடலுக்கு வந்திருக்கும் என்றனர்.

    கடல் நீரைவிட செம்மண் நீரின் அடர்த்தி அதிகம் என்பதால் கடலில் தனியாக தெரிகிறது. அலையில் செம்மண் கடற்கரையில் தேங்கியதும் நிறம் மீண்டும் நீலமாக மாறும் என்றனர். 

    • நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் செயல்பட்டு வருகிறது.
    • சென்னை மக்களுக்கு நாளொன்றுக்கு வழங்கப்பட வேண்டிய குடிநீரின் தரம் மற்றும் அளவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்

    பொன்னேரி:

    சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில் மீஞ்சூர், காட்டுப்பள்ளியில் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் செயல்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், இந்த கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் நேற்று மாலை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில், கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை பார்வையிட்ட அமைச்சர் கே.என்.நேரு தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகளை எவ்வித தொய்வுமின்றி மேற்கொள்ள வேண்டும் எனவும், சென்னை மக்களுக்கு நாளொன்றுக்கு வழங்கப்பட வேண்டிய குடிநீரின் தரம் மற்றும் அளவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வின் போது, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந், சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் டி.ஜி.வினய், செயல் இயக்குநர் செ.சரவணன், திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், திருவள்ளூர் எம்.பி.கே.ஜெயகுமார், எம்.எல்.ஏ.க்கள் கிருஷ்ணசாமி, டி.ஜெ.கோவிந்த ராஜன், துரை சந்திரசேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • கடல்சார் பணிகள், இயந்திரவியல் மற்றும் மின்சாரம் கருவிகள் நிறுவும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
    • 9 இலட்சம் மக்கள் பயனடைவார்கள் என தலைமை செயலாளர் தெரிவித்தார்.

    மாமல்லபுரம்:

    சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில் 1516.82 கோடி ரூபாய் செலவில் மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி கிழக்கு கடற்கரை சாலையில், அமைக்கப்பட்டு வரும் நாள் ஒன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் புதிய ஆலையின் கட்டுமானப் பணிகளை நேற்று தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு செய்தார்.

    கடல்சார் பணிகள், இயந்திரவியல் மற்றும் மின்சாரம் கருவிகள் நிறுவும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும், கடல்நீரை நிலையத்திற்கு உள் கொண்டு வரும் குழாய் மற்றும் நிராகரிக்கப்பட்ட உவர்நீரை கடலுக்கு வெளியேற்றும் குழாய், கடல்நீரை உள் வாங்கும் ஆழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, காற்றழுத்தம் மூலம் எண்ணெய் மற்றும் கசடுகளை அகற்றும் தொட்டி, வடிகட்டப்பட்ட கடல் நீர்த்தேக்கத் தொட்டி, வடிகட்டப்பட்ட கடல்நீர் உந்து நிலையம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

    இந்த ஆலையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் குடிநீரை, விநியோகம் செய்வதற்காக, 48.10 கி.மீ நீளத்திற்கு குழாய் பதிக்கும் பணிகள் மற்றும் சோழிங்கநல்லூரில் இடைநிலை நீரேற்று நிலையம் அமைப்பதற்கான அனைத்து கட்டுமானப் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளது., இப்பணிகளை ஆய்வு செய்த தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அனைத்து பணிகளையும் நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்குள் முடிக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    இந்த ஆலையில் இருந்து பெறப்படும் குடிநீர், தென் சென்னை பகுதிகளான வேளச்சேரி, ஆலந்தூர், பரங்கிமலை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கீழ்கட்டளை, மூவரசன்பேட்டை, சோழிங்கநல்லூர், உள்ளகரம், புழுதிவாக்கம், மடிப்பாக்கம். தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்லாவரம் மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ள தகவல் தொழில் நுட்ப பகுதிகளுக்கு வழங்கப்படும்.

    இதனால் 9 இலட்சம் மக்கள் பயனடைவார்கள் என தலைமை செயலாளர் தெரிவித்தார்.

    இந்த ஆய்வின்போது, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் இரா.கிர்லோஷ் குமார், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத், சென்னை குடிநீர் வாரிய தலைமைப் பொறியாளர் கந்தசாமி, கண்காணிப்புப் பொறியாளர் வைதேகி, செயற்பொறியாளர் கிருபாகரவேல் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • விவேகானந்தர் மண்டபத்திற்கு 2 மணி நேரம் தாமதமாக படகு போக்குவரத்து தொடக்கம்
    • பொதிகை படகு சின்னமுட்டம் துறைமுகத்தில் கரை ஏற்றப்பட்டு பழுது பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள இன்னொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது.

    இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். இவற்றை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது. இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இதில் பொதிகை படகு சின்னமுட்டம் துறைமுகத்தில் கரை ஏற்றப்பட்டு பழுது பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இதனால் தற்போது குகன், விவேகானந்தா ஆகிய 2 படகுகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது ஈஸ்டர் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலையில் கன்னியாகுமரி கடலில் இன்று காலை நீர்மட்டம் திடீரென்று தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது. இதனால் இன்று காலை 8 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை. தற்காலிகமாக படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு இருந்தது. இதனால் கன்னியாகுமரிக்கு வந்து சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதற்கிடையில் காலை 10 மணிக்கு கடலின் தன்மை சகஜ நிலைமைக்கு திரும்பியதை தொடர்ந்து காலை 10 மணிக்கு பிறகு 2 மணி நேரம் தாமதமாக படகு போக்குவரத்து தொடங்கியது. அதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் படகில் ஆர்வத்து டன் சென்று விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர். ஆனால் திருவள்ளுவர் சிலைக்கு இதுவரை படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை.

    • திடீரென மேகங்கள் வானில் இருந்து தாழ்வாக கடல் அருகே இறங்கியது.
    • சுமார் அரை மணிநேரம் கடல் நீரை மேகக்கூட்டங்கள் உறிஞ்சிய இந்த அரிய காட்சியை மீனவர்கள் தங்களது செல்போனில் படம் மற்றும் வீடியோ எடுத்தனர்.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே ஆலம்பாறை என்ற இடத்தில் இருந்து கடலுக்குள் 5 கிலோ மீட்டர் தொலைவில் விசைப்படகில் மரக்காணம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் தங்கியிருந்து மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர்.

    அப்போது, திடீரென மேகங்கள் வானில் இருந்து தாழ்வாக கடல் அருகே இறங்கியது. சற்று நேரத்தில் கடல்நீர் சுழல் போல் மேலெழுந்து மேகங்களுக்குள் இழுக்கப்பட்டது. இந்த வினோத காட்சியை மீனவர்கள் கண்டு ஆச்சரியம் அடைந்தனர்.

    சுமார் அரை மணிநேரம் கடல் நீரை மேகக்கூட்டங்கள் உறிஞ்சிய இந்த அரிய காட்சியை மீனவர்கள் தங்களது செல்போனில் படம் மற்றும் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இது குறித்து துறைமுக அதிகாரியிடம் கேட்டபோது, 'கடலின் மேல் வீசும் காற்று குளிர்ந்த காற்றாகவும், கடல் காற்று சற்று வெப்பமாகவும் இருந்தால், கடலில் 'நீர்த்தாரைகள்' எனப்படும் இந்த அதிசய நிகழ்வு ஏற்படும். பொதுவாக பருவநிலை மாற்றம் ஏற்படும் போது இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறும். மீண்டும் இரண்டு காற்றுகளின் வெப்பநிலையும் சமமாக மாறும் போது, நீர்த்தாரைகள் மறைந்து விடும். இந்த வினோத நிகழ்வின்போது கடலின் நீர் அதிவேகமாக உறிஞ்சப்பட்டு மேகமாக மாறி விடும். இந்த நிகழ்விற்கு ஆங்கிலத்தில் "டோர்னடோ" என்று பெயர். இதுபோன்ற நிகழ்வுகள் ஐரோப்பா போன்ற பகுதிகளில் அதிக அளவில் தோன்றும்' என்றார்.

    மரக்காணம் கடல் பகுதியில் நடந்த இந்த அதிசயம் நிகழ்வு மீனவர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×