search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Uthukkottai"

    ஊத்துக்கோட்டை அருகே வெயில் கொடுமையால் மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊத்துக்கோட்டை:

    தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. 10-க்கும் மேற்பட்ட நகரங்களில் வெயிலின் அளவு 100 டிகிரியை தாண்டி கொளுத்தி வருகிறது.

    இதேபோல் ஊத்துக்கோட்டை பகுதியிலும் வெயில் வறுத்தெடுக்கிறது. இதனால் பொது மக்களும் வாகன ஓட்டிகளும் வெப்பத்தின் தாக்கத்தால் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் ஊத்துக்கோட்டை அருகே வெயிலின் கொடுமையால் மூதாட்டி ஒருவர் பலியாகி உள்ளார். ஊத்துக்கோட்டை அருகே உள்ள ராஜபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமய்யா. இவரது மனைவி செங்கம்மாள் (வயது 70). நேற்று சுட்டெரிக்கும் வெயிலில் அல்லிகுழியில் உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார்.

    அப்போது வெயில் கொடுமை தாங்காமல் சாலையில் சுருண்டு விழுந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செங்கம்மாள் இறந்தார். இது குறித்து பென்னாலூர்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் அமுதா விசாரணை நடத்தி வருகிறார்.

    ஊத்துக்கோட்டை அருகே உடைந்து கிடக்கும் கிருஷ்ணா கால்வாய் கரை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற தமிழக அரசு 1983-ம் ஆண்டு ஆந்திர அரசுடன் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்ட ஒப்பந்தம் செய்து கொண்டது.

    அதன்படி வருடந்தோரும் 12 டி.எம்.சி. தண்ணீரை ஆந்திர அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 8 டி.எம்.சி.யும், ஜூலை முதல் அக்டோபர் வரை 4 டி.எம்.சி. தண்ணீரை ஆந்திராவில் உள்ள கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு திறக்க வேண்டும்.

    இதற்காக 1983-ம் ஆண்டு கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரி வரை 177 கிலோ மீட்டர் தூரத்துக்கு திறந்தவெளி கால்வாய் வெட்டப்பட்டது. இதில் ஆந்திராவில் 152 கிலோ மீட்டர் தூரத்துக்கும், தமிழகத்தில் தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டில் இருந்து பூண்டி ஏரி வரை 25 கிலோ மீட்டர் தூரத்துக்கு கால்வாய் அமைக்கப்பட்டது. 1983-ல் துவங்கிய இப்பணிகள் 1995-ல் முடிக்கப்பட்டன. 1996-ல் முதல் முதலாக கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

    கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் கரை புரண்டு ஓடும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் கரைகள் சேதமடைவது தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    இதனை தடுக்க கடந்த 8 வருடங்களுக்கு இஸ்ரேல் நாட்டு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கரைகளை பலப்படுத்தும் பணிகளை பொதுப்பணித் துறை அதிகாரிகள் மேற் கொண்டனர். எனினும் கரைகள் சேதமடையும் சம்பவம் தொடர்ந்து நடை பெற்று வருகிறது.

    கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின்படி கடந்த ஜனவரி முதல் மார்ச் வரை கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

    அப்போது ஊத்துக்கோட்டை அருகே உள்ள தொம்பரம்பேடு, அம்பேத்கார் நகர், சிற்றபாக்கம், அனந்தேரி, போந்தவாக்கம், கரகம்பாக்கம், தேவந்த வாக்கம் உட்பட 25 பகுதிகளில் கால்வாய் கரை சேதமடைந்தது.

    இவற்றை சீர் செய்ய வில்லை என்றால் கால்வாயில் தண்ணீர் வரும் போது கரைகள் உடைந்து அருகில் உள்ள தண்ணீர் கிராமங்களில் பாயும் அபாயம் உள்ளது.

    இதனை கருத்தில் கொண்டு சேதமடைந்த கரைகளை சீர் செய்ய பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ஊத்துக்கோட்டை அருகே மாடியில் இருந்து விழுந்து காவலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊத்துக்கோட்டை:

    திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரம் அருகே உள்ள புதூர் எல்லப்பநாயுடுபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் எல்லப்பன் (40).

    இவர் ஊத்துக்கோட்டை அருகே ஒதப்பை பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை செய்தார். இதே கம்பெனியில் காவலாளியாக வேலை செய்து வரும் திம்மபு பாலபுரம் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் புதிதாக வீடு கட்டினார்.

    இதன் புதுமனை புகுவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் எல்லப்பனும் அவருடன் பணிபுரியும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

    புதிய வீட்டின் மொட்டை மாடியில் அனைவரும் ஜாலியாக ஆடிபாடிக் கொண்டிருந்தனர். அப்போது எல்லப்பன் கால் தவறி கீழே விழுந்தார். படுகாயம் அடைந்த அவரை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி எல்லப்பன் இறந்தார்.

    இது குறித்து பென்னாலூர்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் உதயபிரகாஷ் விசாரணை நடத்தி வருகிறார். இறந்த எல்லப்பனுக்கு ரேகா என்ற மனைவியும், முனிகுமார் என்ற மகனும், அக்ஷிதா என்ற மகளும் உள்ளனர்.

    ஊத்துக்கோட்டை அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தொழிலாளி பலியானார்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள வெங்கடாபுரம் கிராமம் ஆதி திராவிட காலனி கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் மோகன் (வயது 24), கூலித் தொழிலாளி. இவரது மனைவி அமராவதி (21), மகன் கவுதம் (3).

    மோகன் மனைவி, மகனுடன் மோட்டார் சைக்கிளில் கட்சூருக்கு புறப்பட்டார். வெங்கடாபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீர் என்று கட்டுப்பாடு இழந்த மோட்டார் சைக்கிள் சாலை ஒரமாக உள்ள மின் கம்பத்தில் மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு கட்சூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையில் அனுமத்தித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி மோகன் உயிரிழந்தார். அவரது மனைவி அமராவதி, மகன் கவுதம் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து பென்னாலூர் பேட்டை இன்ஸ்பெக்டர் பாலு விசாரணை நடத்தி வருகிறார்.

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள பாலவாக்கத்தில் திருமண விழா விருந்தில் பிரியாணி சாப்பிட்ட வாலிபர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ஊத்துக்கோட்டை:

    சீர்காழி அருகே உள்ள கன்னியாகுடி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன்கள் கார்த்திக் (25), பிரபாகரன். இவர்கள் சென்னையில் தங்கி தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஊத்துக்கோட்டை அருகே உள்ள பாலவாக்கத்தில் நேற்று இரவு நடைபெற்ற நண்பரின் திருமண நிகழ்ச்சியில் கார்த்திக்கும், பிரபாகரனும் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பிரியாணி மற்றும் அசைவ உணவுகள் விருந்தில் பரிமாறப்பட்டது.

    பிரியாணி சாப்பிட்டு கொண்டிருந்த கார்த்திக்கிற்கு திடீர் என்று நெஞ்சுவலி ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர் வாந்தி எடுத்து கீழே சாய்ந்தார். உடனடியாக அவரை செங்குன்றத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். கார்த்திக்கை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இச்சம்பவம் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. மாரடைப்பால் உயிரிழந்த கார்த்திக்கிற்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. #Tamilnews
    ஊத்துக்கோட்டை அருகே சேதமடைந்துள்ள சிற்றம்பாக்கம் தடுப்பணை கரைகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள சிற்றபாக்கம் பகுதியில் 1983-ம் ஆண்டு ஆரணி ஆற்றின் குறுக்கே 480 மீட்டர் தூரத்துக்கு தடுப்பு அணை கட்டப்பட்டது. 10 அடி உயரம் கொண்ட இந்த அணையில் சேமித்து வைக்கும் தண்ணீரை தேவைப்படும்போது கிருஷ்ணா நதி கால்வாய் மூலம் பூண்டி ஏரிக்கு திறந்து விடுவது வழக்கம்.

    வெள்ளம் ஏற்பட்டால் உபரிநீர் ஆரணி ஆற்றில் பாய்ந்து செல்லும். உபரி நீர் தானாக ஆற்றில் பாய்வதால் தடுப்பு அணைக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க 480 மீட்டர் தூரத்துக்கு கரைகள் அமைக்கப்பட்டது.

    கடந்த 2015-ம் ஆண்டு பெய்த பேய் மழைக்கு ஆரணி ஆற்றில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது. இதில் தடுப்பு அணைக்கு ஒட்டி அமைக்கப்பட்ட கரைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

    இதையடுத்து 2016-ம் ஆண்டு ரூ.1 கோடி செலவில் பெரிய பெரிய பாறாங்கற்களை கொண்டு கரைகள் சீரமைக்கப்பட்டது.

    இந்நிலையில் கடந்த செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெய்த பலத்த மழைக்கு ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தடுப்பு அணை முழுவதுமாக நிரம்பியது. இதனால் உபரி நீர் ஆரணி ஆற்றில் பாய்ந்தது.

    தண்ணீர் கரை புரண்டு ஓடியதால் தடுப்பு அணைக்கு ஒட்டி உள்ள கரைகள் மீண்டும் சேதமடைந்து உள்ளன. இது இன்னும் சரி செய்யப்படாமல் உள்ளது.

    கோடை வெயில் காரணமாக தடுப்பு அணை தற்போது முழுவதும் வறண்டு காணப்படுகிறது. எனவே இப்போது கரைகளை சீர்செய்யும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


    ×