search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊத்துக்கோட்டை அருகே உடைந்து கிடக்கும் கிருஷ்ணா கால்வாய் கரை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
    X

    ஊத்துக்கோட்டை அருகே உடைந்து கிடக்கும் கிருஷ்ணா கால்வாய் கரை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

    ஊத்துக்கோட்டை அருகே உடைந்து கிடக்கும் கிருஷ்ணா கால்வாய் கரை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற தமிழக அரசு 1983-ம் ஆண்டு ஆந்திர அரசுடன் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்ட ஒப்பந்தம் செய்து கொண்டது.

    அதன்படி வருடந்தோரும் 12 டி.எம்.சி. தண்ணீரை ஆந்திர அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 8 டி.எம்.சி.யும், ஜூலை முதல் அக்டோபர் வரை 4 டி.எம்.சி. தண்ணீரை ஆந்திராவில் உள்ள கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு திறக்க வேண்டும்.

    இதற்காக 1983-ம் ஆண்டு கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரி வரை 177 கிலோ மீட்டர் தூரத்துக்கு திறந்தவெளி கால்வாய் வெட்டப்பட்டது. இதில் ஆந்திராவில் 152 கிலோ மீட்டர் தூரத்துக்கும், தமிழகத்தில் தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டில் இருந்து பூண்டி ஏரி வரை 25 கிலோ மீட்டர் தூரத்துக்கு கால்வாய் அமைக்கப்பட்டது. 1983-ல் துவங்கிய இப்பணிகள் 1995-ல் முடிக்கப்பட்டன. 1996-ல் முதல் முதலாக கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

    கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் கரை புரண்டு ஓடும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் கரைகள் சேதமடைவது தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    இதனை தடுக்க கடந்த 8 வருடங்களுக்கு இஸ்ரேல் நாட்டு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கரைகளை பலப்படுத்தும் பணிகளை பொதுப்பணித் துறை அதிகாரிகள் மேற் கொண்டனர். எனினும் கரைகள் சேதமடையும் சம்பவம் தொடர்ந்து நடை பெற்று வருகிறது.

    கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின்படி கடந்த ஜனவரி முதல் மார்ச் வரை கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

    அப்போது ஊத்துக்கோட்டை அருகே உள்ள தொம்பரம்பேடு, அம்பேத்கார் நகர், சிற்றபாக்கம், அனந்தேரி, போந்தவாக்கம், கரகம்பாக்கம், தேவந்த வாக்கம் உட்பட 25 பகுதிகளில் கால்வாய் கரை சேதமடைந்தது.

    இவற்றை சீர் செய்ய வில்லை என்றால் கால்வாயில் தண்ணீர் வரும் போது கரைகள் உடைந்து அருகில் உள்ள தண்ணீர் கிராமங்களில் பாயும் அபாயம் உள்ளது.

    இதனை கருத்தில் கொண்டு சேதமடைந்த கரைகளை சீர் செய்ய பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×