search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ulundurpettai accident"

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    உளுந்தூர்பேட்டை:

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை மாம்பாக்கம் பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள பள்ளிபுதுப்பட்டு பகுதியை சேர்ந்த கருணாகரன்(வயது 40) சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார்.

    இதேகடையில் உதவியாளராக உளுந்தூர் பேட்டை அன்னை சத்யா தெருபகுதியை சேர்ந்த சுரேஷ்(30) என்பவரும் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு வழக்கம்போல் டாஸ்மாக் கடையில் வியாபாரம் முடிந்த பின்னர் கடையை பூட்டி விட்டு 2 பேரும் ஒரு மோட்டார்சைக்கிளில் புறப்பட்டனர்.

    பின்னர் அவர்கள் சாப்பிடுவதற்காக உளுந்தூர்பேட்டை பகுதியில் எம்.எஸ்.தக்கா என்ற இடத்திற்கு மோட்டார்சைக்கிளில் சென்றனர். அந்த பகுதியில் உள்ள சாலையை மோட்டார்சைக்கிளில் கடக்க முயன்றனர்.

    அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. மோட்டார்சைக்கிளில் இருந்து கருணாகரன், சுரேஷ் ஆகியோர் தூக்கிவீசப்பட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த கருணாகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சுரேஷ் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த உளுந்தூர் பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் விபத்தில் படுகாயம் அடைந்த சுரேசை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சுரேஷ் பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே இன்று அதிகாலை நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் தாய் மற்றும் மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    உளுந்தூர்பேட்டை:

    திருச்சி அருகே உள்ள நாச்சிக்குறிச்சியை சேர்ந்தவர் பாபு (வயது 52). இவரது மனைவி ராதா (45). இவர்களுக்கு அஜன் (28), அம்ரிஸ்ராமச்சந்திரன் (22) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    பாபு சென்னை சிட்லப்பாக்கத்தில் உள்ள இந்தியன் வங்கியில் கேஷியராக வேலைப்பார்த்து வந்தார். பாபு குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டது. நேற்று அவர் இறந்து விட்டார்.

    இதைத்தொடர்ந்து அவரது உடலை சொந்த ஊரான திருச்சி நாச்சிக்குறிச்சிக்கு கொண்டு சென்று அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. பாபுவின் உடலை ஒரு ஆம்புலன்சில் ஏற்றி சென்னையில் இருந்து கொண்டு சென்றனர்.

    ஒரு காரில் ராதா, அம்ரிஸ்ராமச்சந்திரன் மற்றும் பாபுவின் தாய் தங்கம் (65), உறவினர் புவானியா (25) ஆகியோர் வந்தனர். இந்த காரை சென்னையை சேர்ந்த கோகுல் என்பவர் ஓட்டி சென்றார்.

    மற்றொரு காரில் அஜன் மற்றும் உறவினர்கள் சென்றனர். இந்த கார்கள் ஆம்புலன்சை தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டிருந்தன.

    இன்று காலை 6 மணிக்கு அவர்கள் சென்ற கார்கள் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் உள்ள ரவுண்டானாவை கடந்து சென்றது.

    லாரி மீது மோதிய கார் அப்பளம் போல் நொறுங்கியது. காருக்குள் அம்ரிஸ் ராமச்சந்திரன் பிணமாக கிடக்கும் காட்சி.

    அப்போது சாலையோரம் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரி மீது கோகுல் ஓட்டி சென்ற கார் பயங்கரமாக மோதியது. இதில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. உள்ளே இருந்தவர்கள் கூச்சலிட்டனர்.

    இந்த விபத்தில் காரில் இருந்த ராதா, அவரது மகன் அம்ரிஸ் ராமச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

    மேலும் அந்த காரில் இருந்த தங்கம், புவானியா, கார் டிரைவர் கோகுல் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் உளுந்தூர் பேட்டை இன்ஸ்பெக்டர் சாகுல்அமீது, சப்- இன்ஸ்பெக்டர் செல்வ நாயகம், எடைக்கல் சப்- இன்ஸ்பெக்டர் அகிலன் மற்றும் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    விபத்தில் காயம் அடைந்த 3 பேரை மீட்டு புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்தில் இறந்த ராதா, அம்ரிஸ்ராமச்சந்திரன் ஆகியோரது உடல்கள் உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இவர்களது உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். இதைப்பார்க்க பரிதாபமாக இருந்தது. விபத்தில் இறந்த அம்ரிஸ் ராமச்சந்திரன் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதற்குள் விபத்தில் சிக்கி அவர் பரிதாபமாக இறந்து விட்டார்.

    இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே லாரி மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பயணிகள் 7 பேர் படுகாயமடைந்தனர்.
    திருவெண்ணைநல்லூர்:

    சென்னையில் இருந்து நெல்லைக்கு ஒரு தனியார் ஆம்னி பஸ் புறப்பட்டது. இந்த பஸ்சில் 40 பயணிகள் பயணம் செய்தனர்.

    பஸ்சில் நெல்லை மாவட்டம் மாறாந்தையை சேர்ந்த பிச்சைமணி (வயது 30) உள்பட 2 டிரைவர்கள் இருந்தனர். இதில் பிச்சைமணி முன்பக்க இருக்கையில் அமர்ந்திருந்தார். மற்றொரு டிரைவர் பஸ்சை ஓட்டி சென்றார். அந்த பஸ் நள்ளிரவு 1 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த பாதூர்காந்திநகர் பகுதியில் சென்னை-திருச்சி சாலையில் வந்து கொண்டிருந்தது. பஸ்சுக்கு முன்னால் ஒரு லாரி கம்பிகளை ஏற்றி கொண்டு சென்றது. அப்போது பஸ் திடீரென அந்த லாரியின் பின்புறம் மீது மோதியது.

    இதில் லாரியில் இருந்த கம்பிகள் பஸ் கண்ணாடியை உடைத்து கொண்டு உள்ளே புகுந்தன. அப்போது பஸ்சின் முன்பக்க சீட்டில் அமர்ந்திருந்த மாற்று டிரைவர் பிச்சைமணியின் உடல் மீது கம்பிகள் குத்தின. இதில் பிச்சைமணி பஸ்சில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார். மேலும் பஸ்சில் இருந்த பயணிகள் 7 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

    விபத்து பற்றி தகவல் அறிந்த திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பலத்த காயம் அடைந்த 7 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து அவர்கள் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    உளுந்தூர்பேட்டை சுங்கசாவடி அருகே இன்று சாலையோரம் கவிழ்ந்த டேங்கர் லாரியில் இருந்து பெட்ரோல்-டீசலை பொதுமக்கள் கேன்களில் பிடித்து சென்றனர்.
    உளுந்தூர்பேட்டை:

    சென்னை மணலியில் இருந்து 24 ஆயிரம் லிட்டர் பெட்ரோல், டீசலுடன் டேங்கர் லாரி ஒன்று மதுரை நோக்கி புறப்பட்டது.

    இந்த லாரியை கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை சேர்ந்த காளியப்பன் (வயது 29) ஓட்டி வந்தார். அவருடன் கீளினர் ஒருவரும் லாரியில் வந்தார்.

    அந்த டேங்கர் லாரி இன்று காலை 5 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகில் உள்ள செங்குறிச்சி சுங்கசாவடி அருகே வந்து கொண்டிருந்தது.

    அப்போது டிரைவர் காளியப்பனின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி திடீரென்று தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் லாரியின் இடுபாட்டுக்குள் சிக்கி டிரைவர் காளியப்பன், லாரி கிளீனர் ஆகிய 2 பேரும் காயம் அடைந்தனர்.

    தலைக்குப்புற கவிழ்ந்து கிடந்த டேங்கர் லாரியில் இருந்து பெட்ரோல், டீசல் வெளியேறி அங்கிருந்த ஓடையில் ஆறு போல் ஓடியது.

    இந்த தகவல் செங்குறிச்சி பகுதியில் காட்டு தீ போல பரவியது. உடனே அந்த பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் சம்பவ இடத்துக்கு திரண்டு வந்தனர்.

    டேங்கர் லாரியில் வெளியேறிய பெட்ரோல், டீசலை போட்டி போட்டு அவர்கள் கொண்டு வந்திருந்த பாத்திரங்கள் மற்றும் கேன்களில் பிடித்து சென்றனர்.

    இந்த விபத்து குறித்து உளுந்தூர் பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீசாரை கண்டதும் லாரியில் டீசல், பெட்ரோல் பிடித்து கொண்டிருந்த பொது மக்கள் அனைவரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

    இடிபாடுக்குள் சிக்கி காயம் அடைந்த லாரி டிரைவர் காளியப்பன் மற்றும் கிளீனரை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜமுனா ராணி தலைமையிலான தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    விபத்துக்குள்ளான டேங்கர் லாரியிலிருந்து பெட்ரோல், டீசல் வெளியேறுவதை தடுத்து நிறுத்தினர். கவிழ்ந்து கிடந்த லாரியை பொக்லைன் எந்திரம் மூலம் மீட்கும் பணியில் தீயணைப்பு படையினரும், போலீசாரும் ஈடுபட்டனர்.

    பெட்ரோல், டீசல் கீழே கொட்டி கிடந்ததால் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடந்து விடக்கூடாது என்பதற்காக முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது.
    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே 15 அடி பள்ளத்தில் ஆம்னி பஸ் கவிழ்ந்த விபத்தில் 20 பயணிகள் படுகாயமடைந்தனர்.
    உளுந்தூர்பேட்டை:

    மதுரையில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு தனியார் ஆம்னி பஸ் ஒன்று சென்றது. இதில் மொத்தம் 36 பயணிகள் இருந்தனர்.

    இந்த பஸ் நள்ளிரவு 1 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே புறவழிச்சாலை திருச்சி- சென்னை மேம்பாலத்தை கடந்து சென்றது. அப்போது திடீரென்று டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து பஸ் 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இதில் உள்ளே இருந்த பயணிகள் கூச்சல்போட்டு அலறினர். இந்த விபத்தில் பஸ்சில் இருந்த மதுரையை சேர்ந்த பிரபாகரன்(45), முத்துக்குமார்(50), சென்னையை சேர்ந்த கிருத்திகா(24), லட்சுமி பிரியா(23), பாலுசாமி(52), நெல்லையை சேர்ந்த கணேசமூர்த்தி(52) உள்பட 20 பேர் இடிபாடுக்குள் சிக்கி படுகாயம் அடைந்தனர்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் உளுந்தூர் பேட்டை போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உளுந்தூர்பேட்டை அருகே பயணிகள் கூட்டத்தில் ஆம்னி பஸ் புகுந்த விபத்தில் வாலிபர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானர். மேலும் இந்த விபத்தில் சிக்கி 5 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
    உளுந்தூர்பேட்டை:

    சென்னையில் இருந்து திருச்சி நோக்கி அரசு விரைவு பஸ் ஒன்று நேற்று இரவு புறப்பட்டு வந்தது. அந்த பஸ் நள்ளிரவு 1 மணி அளவில் உளுந்தூர்பேட்டை அருகே செக்குறிச்சி என்ற இடத்தில் வந்தபோது திடீரென்று பழுதானது.

    உடனே டிரைவர் அந்த பஸ்சை சாலையோரம் நிறுத்தினார். பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறங்கி சாலையோரம் நின்று கொண்டிருந்தனர்.

    அப்போது சென்னையில் இருந்து கொடைக்கானல் நோக்கி தனியார் ஆம்னி பஸ் ஒன்று வேகமாக வந்தது. அந்த பஸ் திடீரென்று பழுதாகி நின்ற அரசு பஸ் மீது மோதி விட்டு அருகில் நின்று கொண்டிருந்த பயணிகளின் கூட்டத்தில் புகுந்தது.

    இதில் விக்னேஷ்குமார் (வயது 19) என்ற வாலிபர் அதே இடத்தில் உடல் நசுங்கி இறந்தார். அவர் யார்? எந்த ஊர்? என்ற விவரம் தெரியவில்லை. மேலும் இந்த விபத்தில் சிக்கி 5 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் உளுந்தூர்பேட்டை போலீசார் விரைந்து சென்று விபத்தில் காயம் அடைந்த 5 பேரை மீட்டு முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    ×