search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்தில் சேதம் அடைந்த தனியார் ஆம்னி பஸ்.
    X
    விபத்தில் சேதம் அடைந்த தனியார் ஆம்னி பஸ்.

    உளுந்தூர்பேட்டை அருகே விபத்து- டிரைவர் பலி

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே லாரி மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பயணிகள் 7 பேர் படுகாயமடைந்தனர்.
    திருவெண்ணைநல்லூர்:

    சென்னையில் இருந்து நெல்லைக்கு ஒரு தனியார் ஆம்னி பஸ் புறப்பட்டது. இந்த பஸ்சில் 40 பயணிகள் பயணம் செய்தனர்.

    பஸ்சில் நெல்லை மாவட்டம் மாறாந்தையை சேர்ந்த பிச்சைமணி (வயது 30) உள்பட 2 டிரைவர்கள் இருந்தனர். இதில் பிச்சைமணி முன்பக்க இருக்கையில் அமர்ந்திருந்தார். மற்றொரு டிரைவர் பஸ்சை ஓட்டி சென்றார். அந்த பஸ் நள்ளிரவு 1 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த பாதூர்காந்திநகர் பகுதியில் சென்னை-திருச்சி சாலையில் வந்து கொண்டிருந்தது. பஸ்சுக்கு முன்னால் ஒரு லாரி கம்பிகளை ஏற்றி கொண்டு சென்றது. அப்போது பஸ் திடீரென அந்த லாரியின் பின்புறம் மீது மோதியது.

    இதில் லாரியில் இருந்த கம்பிகள் பஸ் கண்ணாடியை உடைத்து கொண்டு உள்ளே புகுந்தன. அப்போது பஸ்சின் முன்பக்க சீட்டில் அமர்ந்திருந்த மாற்று டிரைவர் பிச்சைமணியின் உடல் மீது கம்பிகள் குத்தின. இதில் பிச்சைமணி பஸ்சில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார். மேலும் பஸ்சில் இருந்த பயணிகள் 7 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

    விபத்து பற்றி தகவல் அறிந்த திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பலத்த காயம் அடைந்த 7 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து அவர்கள் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×