என் மலர்
நீங்கள் தேடியது "தமிழக சட்டசபை"
- கடந்தாண்டு 118 கோவில்கள் திருப்பணிகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
- நன்னிலம் தொகுதி வாஞ்சிநாதசுவாமி கோவிலில் 21 கோடி ரூபாய் செலவில் 23 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை:
கடந்த 2 ஆண்டுகளில் 7 கோவில்களில் ராஜகோபுரம் கட்ட ரூ.36 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார்.
சட்டசபையில் கேள்வி நேரத்தில், நன்னிலம் தொகுதி வாஞ்சிநாதசுவாமி கோவில் குடமுழுக்கு பணிகளை விரைவாக முடிக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் முதலமைச்சரின் அறிவுரைப்படி 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த 509 கோவில்களில் திருப்பணிகள் செய்வதற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், 47 கோவில்களில் குடமுழுக்குக்கான திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.
மேலும், கடந்தாண்டு 118 கோவில்கள் திருப்பணிகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக கூறிய அவர், நன்னிலம் தொகுதி வாஞ்சிநாதசுவாமி கோவிலில் 21 கோடி ரூபாய் செலவில் 23 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், குடமுழுக்கு திருப்பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் எனவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
- கலாஷேத்ரா விவகாரம் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டவுடன், மாவட்ட ஆட்சித் தலைவரோடு தொடர்பு கொண்டு, விவரங்களை அறிந்தேன்.
- குற்றச்சாட்டு உறுதியானால் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய சட்டரீதியான நடவடிக்கை கட்டாயம் எடுக்கப்படும்.
சென்னை:
சென்னை திருவான்மியூர் கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் கலாஷேத்ரா ருக்மணி தேவி கவின் கலை கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இங்கு படிக்கும் மாணவிகளுக்கு பேராசிரியர்கள் சிலர் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்தது.
சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அங்கு படிக்கும் மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த பிரச்சினை இன்று தமிழக சட்டசபையிலும் கிளப்பப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர்கள் வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி), எஸ்.எஸ்.பாலாஜி (விடுதலை சிறுத்தைகள் கட்சி), செல்வப் பெருந்தகை (காங்கிரஸ்), அருள் (பா.ம.க.), ராமச்சந்திரன் (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு) ஆகியோர் பேசினார்கள்.
பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடும் பேராசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டு உள்ள மாணவிகளுக்கு நீதி வழங்க வேண்டும். மத்திய அரசு கட்டுப்பாட்டில் செயல்படும் இந்த கலாஷேத்ரா கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு நீண்ட நாட்களாக பாலியல் தொல்லை நடைபெறுவதாக தகவல் வெளியாகி வருகிறது.
எனவே இதில் தமிழக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் பேசினார்கள்.
இதற்கு பதில் அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
கலாஷேத்ரா பவுண்டேஷன் விவகாரம் குறித்து உறுப்பினர்கள் எஸ்.எஸ்.பாலாஜி, தி.வேல்முருகன், கு.செல்வப்பெருந்தகை, ராமச்சந்திரன் ஆகியோர் அவையினுடைய கவனத்தை ஈர்க்கக்கூடிய வகையிலே இங்கே உரையாற்றி இருக்கிறார்கள். அதற்குரிய விளக்கத்தை உங்கள் அனுமதியோடு நான் தெரிவிக்க விரும்புகிறேன்.
ஒன்றிய அரசினுடைய கலாச்சாரத் துறையின்கீழ் இயங்கிக் கொண்டிருக்கக்கூடிய, கலாஷேத்ரா பவுண்டேஷன் விவகாரத்தைப் பொறுத்தவரைக்கும், தேசிய மகளிர் ஆணையம் முதலில் தானாக முன்வந்து "பாலியல் தொல்லை" என டுவிட்டர் செய்தி போட்டு, 21-3-2023 அன்று நடவடிக்கை எடுக்கக் கோரி டி.ஜி.பி.-க்கு கடிதம் எழுதியது. இது தொடர்பாக, கலாஷேத்ரா பவுண்டேஷன் இயக்குநர், நமது மாநில காவல்துறைத் தலைவரை சந்தித்து, தங்களது நிறுவனத்தில் பாலியல் புகார் ஏதும் இல்லை என்று தெரிவித்தார்.
பிறகு தேசிய மகளிர் ஆணையமே செய்தியின் அடிப்படையில் விசாரித்தோம்; அந்த விசாரணையை முடித்து வைத்து விட்டோம்" என 25-3-2023 அன்று டி.ஜி.பி.-க்குக் கடிதம் எழுதி தெரிவித்து இருக்கிறார்கள்.
பின்னர், கடந்த 29-3-2023 அன்று மீண்டும் தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவரே வந்து கலாஷேத்ராவில் இருக்கக்கூடிய 210 மாணவிகளிடம் விசாரித்து விட்டுச் சென்று உள்ளார். அப்போது காவல்துறை தங்களுடன் வரத் தேவையில்லை என்றும் கூறியிருக்கிறார். இந்த விவகாரத்தில் காவல்துறைக்கு இதுவரை எழுத்துப்பூர்வமான புகார் ஏதும் கிடைக்கப் பெறவில்லை.
இந்த நிலையில், மாணவிகள் நடத்திய உள்ளிருப்புப் போராட்டத்தின் விளைவாக, கலாஷேத்ரா பவுண்டேஷனில் உள்ள கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, விடுதிகளை விட்டு மாணவிகள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறார்கள்.
இந்த விவகாரம் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டவுடன், மாவட்ட ஆட்சித் தலைவரோடு தொடர்பு கொண்டு, விவரங்களை அறிந்தேன். இந்த விஷயத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பாக மேலும் விவரங்களை அறிவதற்காக, வருவாய்க்கோட்ட அலுவலர், வட்டாட்சியர், காவல் இணை ஆணையர், துணை ஆணையர் மற்றும் அலுவலர்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டு, விசாரணை மேற்கொண்டார்கள்.
இன்று காலையில், மீண்டும் வருவாய்த் துறை மற்றும் காவல் துறை உயர் அலுவலர்கள் அடங்கிய குழுவினர் அங்கு சென்று, மாணவிகள் மற்றும் நிர்வாகத்தினருடன் பேசி வருகிறார்கள். மேலும், அங்குள்ள மாணவிகளின் பாதுகாப்பிற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு, அங்கு ஒரு பெண் ஆய்வாளர் தலைமையில் காவலர்கள் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
அரசை பொறுத்தவரை, இந்த விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, குற்றச்சாட்டு உறுதியானால் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய சட்டரீதியான நடவடிக்கை கட்டாயம் எடுக்கப்படும் என தெரிவித்து அமைகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- காவல்துறைக்கு இதுவரை எழுத்துப்பூர்வ புகார் அளிக்கப்படவில்லை.
- கலாஷேத்ரா விவகாரத்தில் அரசு உரிய விசாரணை மேற்கொண்டு வருகிறது.
சென்னை:
கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இதையடுத்து கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஒன்றிய அரசின் கலாசார துறையின் கீழ் கலாஷேத்ரா அறக்கட்டளை இயங்கி வருகிறது.
கலாஷேத்ரா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது. 210 மாணவிகளிடம் தேசிய மகளிர் ஆணையம் விசாரணை நடத்தியது.
காவல்துறைக்கு இதுவரை எழுத்துப்பூர்வ புகார் அளிக்கப்படவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவிகளுக்கு காவல்துறை சார்பில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
கலாஷேத்ரா விவகாரத்தில் அரசு உரிய விசாரணை மேற்கொண்டு வருகிறது. தவறு நடந்திருந்தால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
- நகராட்சிகளை மாநகராட்சிகளாகவும், பேரூராட்சிகளை நகராட்சிகளாகவும் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
- சில ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான கோரிக்கைகளும் பரிசீலனையில் உள்ளன.
தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கை விவாத பதிலுரையில் இன்று தமிழக நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-
நகராட்சிகளை மாநகராட்சிகளாகவும், பேரூராட்சிகளை நகராட்சிகளாகவும் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி ஆகிய நகராட்சிகளை, மாநகராட்சிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவை அனைத்தும் முதலமைச்சரின் அனுமதி பெற்று, முயற்சிகள மேற்கொள்ளப்படும்.
இதேபோல், ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், அவிநாசி, பெருந்துறை, கோத்தகிரி, சங்ககிரி, திருவையாறு ஆகிய பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
சில ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான கோரிக்கைகளும் பரிசீலனையில் உள்ளன.
2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு பிறகு எந்தெந்த உள்ளாட்சி அமைப்புகளை எங்கு இணைக்கலாம் என முடிவெடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு 18 மணி நேரம் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்க அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது.
- மேட்டூர் தொகுதியில் குறைபாடுகள் இருக்குமானால், சம்பந்தப்பட்ட இடங்களுக்கு அதிகாரிகளை அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை:
சட்டப்பேரவையில் கீழ்வேளூர் தொகுதி, தெற்கு தெருவில், மின்கம்பத்துடன் கூடிய தெருவிளக்கு அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா எனவும், விவசாயிகளுக்கு ஆறு மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்படுவதாகவும் சட்டமன்ற உறுப்பினர்கள் நாகை மாலி, சதாசிவம் கேள்வி எழுப்பினார்கள்.
இதற்கு பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தெருவிளக்கு மற்றும் குடிநீர் இணைப்பிற்கான மின் இணைப்புகள் அ.தி.மு.க. ஆட்சியை விட தி.மு.க. ஆட்சியில் அதிகமாக கொடுக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 2016-21ம் ஆண்டுகளில் 51 ஆயிரத்து 729 தெருவிளக்கு மற்றும் குடிநீர் மின் இணைப்புகள் கொடுக்கப்பட்ட நிலையில், 2021-23ம் ஆண்டு பிப்ரவரி வரை 48 ஆயிரத்து 779 மற்றும் குடிநீர் மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளதாகவும், தெருவிளக்கு அமைப்பது தொடர்பான கோரிக்கைக்கு ஊரக உள்ளாட்சி மூலம் நிதி ஒதுக்கப்படும் நிலையில் மின் இணைப்புகள் வழங்கப்படும்.
ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு 18 மணி நேரம் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்க அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது.
மேட்டூர் தொகுதியில் குறைபாடுகள் இருக்குமானால், சம்பந்தப்பட்ட இடங்களுக்கு அதிகாரிகளை அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
- கோயம்பேட்டில் 1100 ஆண்டு பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற குறுங்காலீஸ்வரர் கோவிலில் வைகுண்ட பெருமாள் கோபுரம் மொட்டை கோபுரமாக உள்ளது.
- கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் திருக்கோயிலுக்கு திருத்தேர் வழங்க அரசு முன்வருமா? என்று கேள்வி எழுப்பினார்.
சென்னை:
சட்டசபையில் விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி. பிரபாகராஜா எம்.எல்.ஏ. கேள்வி நேரத்தின்போது பேசியதாவது:-
கோயம்பேட்டில் 1100 ஆண்டு பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற குறுங்காலீஸ்வரர் கோவிலில் வைகுண்ட பெருமாள் கோபுரம் மொட்டை கோபுரமாக உள்ளது.
அங்கு ஐந்து நிலை ராஜகோபுரம் அமைத்து தர அரசு ஆவண செய்யுமா? என்றார். மேலும் மகா சிவராத்திரி பங்குனி உத்திரம் கார்த்திகை தீபம் போன்ற நாட்களில் மிகுந்த சிறப்பு கொண்ட கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் திருக்கோயிலுக்கு திருத்தேர் வழங்க அரசு முன்வருமா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதில் அளிக்கையில், இவ்வாண்டு சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்த இரண்டு கோரிக்கையும் நிறைவேற்றும் வகையில் நிதி ஒதுக்கப்பட்டு, ஐந்து நிலை ராஜகோபுரம் அமைக்கப்படுவதுடன், திருத்தேரும் செய்து கொடுக்கப்படும் என்று அறிவித்தார்.
- விவசாயிகளுக்கு ஆதரவாக கலைஞரின் போராட்டம் வரலாற்று சிறப்புமிக்கது.
- கலைஞரின் போராட்டம் வரலாற்றில் குறிப்பிட வேண்டியது.
சென்னை:
சட்டப்பேரவையில் இன்று குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி முதன்முதலில் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வான குளித்தலை தொகுதியில் 1957ல் விவசாயிகளுக்கு ஆதரவாக நங்கவரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு, அங்கேயே 10 நாட்கள் தங்கி விவசாய மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியதாகவும், இன்றும் விவசாயிகள் கலைஞரை தெய்வமாக வழிபட்டு வருகின்றனர் என்றும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நங்கவரத்தில் கலைஞருக்கு நினைவுச்சின்னம் அமைக்க அரசு முன்வருமா எனவும், இதற்கு பதிலளித்த செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், கலைஞரின் போராட்டம் வரலாற்றில் குறிப்பிட வேண்டியது.
விவசாயிகளுக்கு ஆதரவாக கலைஞரின் போராட்டம் வரலாற்று சிறப்புமிக்கது எனவும், நினைவுச்சின்னம் அமைப்பது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
- சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதும், உடனே திரும்பாமல், வைக்கம் சென்று மீண்டும் போராடினார் தந்தை பெரியார்.
- வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நினைவாக சிறப்பு நினைவு அஞ்சல் தலை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை:
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், இன்று 30-3-2023, வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாக்கொண்டாட்டம் குறித்து, விதி 110-ன்கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த அறிக்கை வருமாறு:-
பேரவைத் தலைவரே இன்று வரலாற்றிலே ஒரு முக்கியமான நாள். 1924-ம் ஆண்டு, மார்ச் 30 அன்று, மாபெரும் சமூக சீர்திருத்தத்திற்கு அடையாளமாக விளங்கும் வைக்கம் போராட்டம் தொடங்கியதன் நூற்றாண்டு தொடக்க நாள் இன்று.
அத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நாளில் வைக்கம் போராட்டம் வெற்றி பெற காரணமாக இருந்த பகுத்தறிவுப் பகலவன் வைக்கம் வீரர் தந்தை பெரியாரைப் போற்றும் விதமாக, வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு ஒன்றை இந்த மாமன்றத்தில் வெளியிடுவதை என் வாழ்வில் கிடைத்ததற்கரிய நல்வாய்ப்பாக எண்ணி மகிழ்கிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகம் முதன்முறையாக, 1967-ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது, 'இந்த ஆட்சியே தந்தை பெரியாருக்குக் காணிக்கை' என்றார் பேரறிஞர் அண்ணா. உடனடியாக பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் முதலானோர், திருச்சி சென்று பெரியாரைத்தான் முதன்முதலில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்கள். இப்போது ஆறாவது முறை ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் திராவிட முன்னேற்றக் கழக அரசும், இப்போது தந்தை பெரியார் காட்டிய சமூக முன்னேற்றப் பாதையில்தான் பயணிக்கிறது.
"ஈ.வெ.இராமசாமி என்கிற நான், திராவிட சமுதாயத்தைத் திருத்தி, உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல, மானமும், அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு, அதே பணியாய் இருப்பவன். இதைச் செய்ய எனக்கு யோக்கியதை இருக்கிறதோ, இல்லையோ, இந்த நாட்டில் அந்தப் பணியைச் செய்ய யாரும் வராததினால், நான் அதை மேற்போட்டுக் கொண்டு, தொண்டாற்றி வருகிறேன்" என்று அறிவித்து, 95 வயது வரை, இந்த நாட்டுக்காகவும், இந்த நாட்டு மக்களுக்காக சமூகநீதியை நிலைநிறுத்திடவும் அவர் நடத்திய சுயமரியாதைப் போராட்டங்கள் பற்பல. அவற்றில் மிக முக்கியமான போராட்டம்தான் வைக்கம் போராட்டம்.
1924-25-ம் ஆண்டுகளில் நிகழ்ந்த வைக்கம் போராட்டம் என்பது, இந்தியாவின் சமூக சீர்திருத்த வரலாற்றில் முக்கிய இடம் பெற்றது; இந்தியாவின் கோயில் நுழைவுப் போராட்டங்கள் அனைத்திற்கும் முன்னோடியாகத் திகழ்ந்தது; ஒடுக்கப்பட்டவர்கள் சமத்துவ உரிமையைப் பெறுவதில் முதற்படியாக அமைந்தது என்று சொன்னால், அது மிகையல்ல.
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கத்தில் உள்ள மகாதேவர் கோயிலைச் சுற்றிலும் அமைந்துள்ள தெருக்களில், ஒடுக்கப்பட்டவர்கள் நடப்பதற்கு இருந்த தடைகளை நீக்கக்கோரி நடந்ததுதான் வைக்கம் போராட்டம். 1924 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் நாள், கேரளத் தலைவர் டி.கே.மாதவன் அவர்களால் தொடங்கப்பட்டது அந்தப் போராட்டம்.
அந்தப் போராட்டம் தொடங்கிய சில நாட்களிலேயே, அதே பகுதியைச் சேர்ந்த முக்கியமான காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டார்கள். தலைவர்கள் இன்றி போராட்டம் தவித்தது.
இந்தச் சூழலில், கேரளத் தலைவர்களின் அழைப்பின் பேரில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக அப்போது இருந்த தந்தை பெரியார் அவர்கள், வைக்கம் சென்று, அந்தப் போராட்டத்திற்குத் தலைமை ஏற்றார். பல நாட்கள் அங்கு தங்கியிருந்து போராட்டத்தை ஒருங்கிணைத்தார்.
வெகுமக்களிடம் அந்தப் போராட்டம் குறித்து பரப்புரை செய்து, போராட்டத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். போராட்டக் காலத்தில் இரண்டு முறை பெரியார் கைது செய்யப்பட்டார். முதல்முறை, 'அருவிக் குட்டி' என்ற ஊரின் காவல் நிலையச் சிறையில், ஒருமாத காலம் சிறை தண்டனை அனுபவித்தார். இரண்டாம் முறை வழங்கப்பட்ட நான்குமாதக் கடுங்காவல் தண்டனையை, திருவனந்தபுரம் சிறையில் கழித்தார். மற்றவர்கள் அனைவரும் அரசியல் கைதிகள் போல நடத்தப்பட்டார்கள். ஆனால் தந்தை பெரியார் அவர்களின் கையிலும், காலிலும் விலங்கு போடப்பட்டு, கழுத்தில் மரப்பட்டை அணிவிக்கப்பட்டு வைக்கப்பட்டு இருந்தார். சாதாரண கைதியைப் போலவே தந்தை பெரியார் நடத்தப்பட்டார்.
சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதும், உடனே திரும்பாமல், வைக்கம் சென்று மீண்டும் போராடினார் தந்தை பெரியார். வைக்கம் போராட்டத்தில் ஈடுபட்டு 74 நாட்கள் சிறையில் இருந்தார்; 67 நாட்கள் அங்கேயே தங்கி போராடினார்; மக்களைத் திரட்டினார்.
ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் நடைபெற்ற வைக்கம் போராட்டம், 1925 நவம்பர் 23 ஆம் நாள் முடிவுக்கு வந்தது. 1925 நவம்பர் 29 ஆம் நாள் பெரியார் தலைமையில் வைக்கத்தில் வெற்றி விழாவும் நடைபெற்றது. 'வைக்கம் வீரர்' என்று பெரியாரைப் பாராட்டினார் 'தமிழ்த் தென்றல்' திரு.வி.க.
இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க வைக்கம் போராட்டம் நடந்து 100 ஆண்டுகள் ஆகின்றன. இன்று வரையில் வைக்கம் போராட்டம் என்பது சமூகநீதி வரலாற்றில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
எளிய மக்களுக்காக எல்லைகளைக் கடந்து போராடி, வரலாற்றில் இத்தகைய புரட்சிகளை நிகழ்த்தி வெற்றி கண்ட தந்தை பெரியார் அவர்களின் நினைவைப் போற்றவும், சமூகநீதிக் கருத்துகளைத் தொடர்ந்து வலியுறுத்தவும், "வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா" நிகழ்ச்சிகளை, தமிழ்நாடு அரசு சிறப்பாக நடத்தத் திட்டமிட்டுள்ளது என்பதை இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் உண்மையிலேயே நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
வைக்கம் போராட்டம் தொடங்கிய மார்ச் 30ஆம் நாளில், வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவைத் தமிழ்நாடு அரசு தொடங்கவுள்ளது. வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிகழ்ச்சிகள், 2023 ஆம் ஆண்டு, மார்ச் 30ஆம் நாள் தொடங்கி, ஓராண்டு முழுவதும் நடத்தப்படும்.
போராட்டத்தின் வரலாற்றையும், நோக்கத்தையும், வெற்றியையும் பொதுமக்களும் மாணவர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகள் செய்யப்படும்.
வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா, பின்வரும் நிகழ்ச்சிகளை உள்ளடக்கியதாக இருக்கும் என்பதையும் இந்த மாமன்றத்தில் தெரிவிக்க விரும்புகிறேன்.
வரும் ஏப்ரல் 1, 2023 அன்று, கேரள அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள "வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா" நிகழ்ச்சியில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களோடு நானும் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்கிறேன். வைக்கம் போராட்டம் நடைபெற்ற இடத்தில் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட நினைவுத்தூணுக்கு மரியாதை செலுத்துகிறோம்.
தமிழ்நாட்டில் மிக முக்கியமான ஆய்வாளர்களில் ஒருவரான பழ.அதியமான் அவர்கள் எழுதிய "வைக்கம் போராட்டம்" என்ற தமிழ் நூலின் மலையாள மொழிபெயர்ப்பு வெளியிடப்படுகிறது.
இந்த ஆண்டு நவம்பர் 29 அன்று, தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய இருமாநில முதலமைச்சர்கள் மற்றும் பல்வேறு ஆளுமைகள் பங்கேற்கக்கூடிய வகையில், வெகு சிறப்பான நிகழ்ச்சி ஒன்று தமிழ்நாடு அரசால் நடத்தப்படும்.
எல்லை கடந்து சென்று வைக்கத்தில் போராடிய பெரியார் அவர்களை நினைவுகூரும் வகையில், பிற மாநிலங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்காகப் பாடுபட்டு, குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் ஆளுமைகள் அல்லது நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் "வைக்கம் விருது" சமூகநீதி நாளான செப்டம்பர் 17 ஆம் நாளன்று தமிழ்நாடு அரசால் வழங்கப்படும்.
கேரள மாநிலம் வைக்கத்தில் அமைந்துள்ள பெரியார் நினைவிடத்தை நவீனமுறையில் மறுசீரமைக்கவும், பெரியார் தொடர்பான நினைவுப் பொருட்கள் கூடுதலாக இடம் பெறுவதற்கும் 8 கோடியே 14 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
தந்தை பெரியார் கைது செய்யப்பட்டு முதன்முதலாக சிறை வைக்கப்பட்டிருந்த 'அருவிக்குட்டி' கிராமத்தில் பெரியார் நினைவிடம் ஒன்று புதிதாக உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நினைவாக சிறப்பு நினைவு அஞ்சல் தலை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாட்டின் முக்கிய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் வைக்கம் போராட்டம் தொடர்பான கருத்தரங்குகள் நடத்தப்படும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் வினாடி-வினா உள்ளிட்ட போட்டிகளை நடத்திப் பரிசுகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
வைக்கம் போராட்ட நூற்றாண்டு குறித்த விழிப்புணர்வை மாணவர்களுக்குக் கொண்டு சேர்க்கக்கூடிய வகையில், 64 பக்க நூல் ஒன்று கொண்டுவரப்படும். அது தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மூலமாக வெளியிடப்பட்டு, விற்பனை செய்யப்படும். இந்த நூல், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒலிப்புத்தகமாகவும் வெளியிடப்படும்.
இவை அனைத்தும் வரும் ஓராண்டு காலத்திற்குள் படிப்படியாக நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- காவல் துறையினர் இரவோடு இரவாக இரண்டு மணி நேரத்தில், வழக்கில் தொடர்புடைய 5 குற்றவாளிகளை கைது செய்துள்ளார்கள்.
- கொலை செய்யப்பட்ட இளங்கோ, போதைப்பொருளுக்கு எதிராக இருந்ததாகச் சொல்லப்படுவது குறித்து விசாரணையில் இதுவரையில் தெரியவில்லை.
சென்னை:
சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்து அ.தி.மு.க. பெரம்பூர் தெற்கு பகுதி செயலாளர் இளங்கோவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பேசினார். அவர் கூறியதாவது:-
"கடந்த 27-ந்தேதி அன்று 5 பேர் கொண்ட கும்பல் இளங்கோவனை கொலை செய்துவிட்டு தப்பி ஓடி விட்டதாகவும் கஞ்சா விற்பனை குறித்து அவர் போலீசில் புகார் செய்ததால் அந்த விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டதாகவும் தெரிகிறது.
சென்னையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும் இதுபற்றி போலீசாருக்கு தகவல் சொல்பவர்கள் தாக்கப்படும் சம்பவம் தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
அ.தி.மு.க. பெரம்பூர் தெற்கு பகுதி செயலாளர் இளங்கோவன் என்ற வியாசை இளங்கோ நேற்று முன்தினம் ஐந்து பேர் கொண்ட கும்பலால் கத்தியால் வெட்டப்பட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லும் வழியிலேயே இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டார்.
அவர் மனைவி சுமலதா கொடுத்த புகாரின் அடிப்படையில், செம்பியம் காவல் நிலையத்தில் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், கொலையுண்ட இளங்கோ, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சஞ்சய் என்பவரை பொது வெளியில் வைத்து தாக்கியதாகவும், அந்த முன்விரோதம் காரணமாக சஞ்சய் இந்தக் கொலைத் திட்டத்தை தீட்டியுள்ளதும் தெரிய வந்தது.
காவல் துறையினர் இரவோடு இரவாக இரண்டு மணி நேரத்தில், வழக்கில் தொடர்புடைய சஞ்சய், கணேசன், கவுதம், வெங்கடேசன். அருண்குமார் ஆகிய 5 குற்றவாளிகளை கைது செய்துள்ளார்கள்.
இவர்களில் ஒருவர் இளஞ்சிறார் குற்றவாளி. மேலும், கொலை செய்யப்பட்ட இளங்கோ, போதைப்பொருளுக்கு எதிராக இருந்ததாகச் சொல்லப்படுவது குறித்து விசாரணையில் இதுவரையில் தெரியவில்லை.
இச்சம்பவம் குறித்த புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பதை எதிர்க்கட்சித்தலைவர் உள்ளிட்ட இங்கே உரையாற்றிய உறுப்பினர்கள் அனைவருக்கும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
- அம்பாசமுத்திரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங், சில வழக்குகள் தொடர்பாக விசாரணைக்கு அழைத்து சென்ற 30 பேரின் பற்களை பிடுங்கி கொடூரமாக தாக்கியதாக புகார் எழுந்தது.
- கல்லிடைகுறிச்சி இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் உள்ளிட்ட 10 போலீசார் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அறிவுறுத்தப்பட்டது.
சென்னை:
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங், சில வழக்குகள் தொடர்பாக விசாரணைக்கு அழைத்து சென்ற 30 பேரின் பற்களை பிடுங்கி கொடூரமாக தாக்கியதாக புகார் எழுந்தது.
இதைத்தொடர்ந்து உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
இதுதொடர்பாக விசாரணை நடத்த நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். அதன்படி சேரன்மகாதேவி சப்-கலெக்டர் முகம்மது சபீர் ஆலம் பாதிக்கப்பட்டவர்களிடமும், சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீசாரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் பாதிக்கப்பட்ட 3 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதில் 2 பேர் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
இந்நிலையில் இன்று கல்லிடைகுறிச்சி இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் உள்ளிட்ட 10 போலீசார் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் உள்பட 10 போலீசாரும் இன்று சேரன்மகாதேவியில் உள்ள சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி சப்-கலெக்டர் முகம்மது சபீர் ஆலம் முன்னிலையில் விளக்கம் அளித்தனர்.
இந்த 10 போலீசாரும் சம்பவத்தன்று பணியில் இருந்தவர்கள் ஆவார்கள். இதற்கிடையே பாதிக்கப்பட்டவர்களும், அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்பினரும் உதவி போலீஸ் சூப்பிரண்டு மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர்.
தவறு செய்த போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தினார்கள். இந்த நிலையில் சட்டசபையில் இன்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இசக்கி சுப்பையா, வேல்முருகன் உள்ளிட்ட பல்வேறு எம்.எல்.ஏ.க்கள் இந்த பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பினார்கள்.
இச்சம்பவம் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிக்கு சட்டப்படி தண்டனை வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இங்கு அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உறுப்பினர்கள் இசக்கி சுப்பையா, வேல்முருகன், அருள், ஆளுர் சானவாஸ், நாகை மாலி உள்ளிட்டோர் தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர்.
அம்பாசமுத்திரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு விவகாரத்தை பொறுத்தவரையில் குற்ற செயல்களில் ஈடுபட்டு விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட சிலருடைய பற்களை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு வந்த உடன் சேரன் மகாதேவி சார் ஆட்சியர் (உட்கோட்ட நடுவர்) தலைமையில் விசாரணை தொடங்கப்பட்டது. அந்த ஏ.எஸ்.பி. உடனடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
காவல் நிலையங்களில் மனித உரிமை மீறல் சம்பவங்களில் எந்தவிதமான சமரசங்களும் இந்த அரசு மேற்கொள்ளாது என்பதை இந்த சபையில் நான் ஏற்கனவே தெரிவித்து இருக்கிறேன்.
அந்த வகையில் இந்த விரும்பத்தகாத சம்பவத்தில் ஈடுபட்ட அம்பாசமுத்திரம் கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்ய உத்தரவிட்டு உள்ளேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
முழுமையான விசாரணை அறிக்கை வந்தவுடன் உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதி அளிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.