என் மலர்
சிறப்பு வேட்பாளர்கள்
மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் 227 தொகுதிகளிலும், கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 7 தொகுதிகளிலும் போட்டியிடுகிறார்கள். கூட்டணி கட்சி வேட்பாளர்களும் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடுகிறார்கள். இதன் மூலம் 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னம் களத்தில் உள்ளது.
அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 9-ந்தேதி சென்னையில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். தொடர்ந்து விருத்தாசலம், தர்மபுரி, அருப்புக்கோட்டை, காஞ்சிபுரம், சேலம், திருச்சி ஆகிய இடங்களில் நடந்த பிரச்சார கூட்டங்களில் பேசி அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.
இந்நிலையில், முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தான்போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதற்காக போயஸ் கார்டனில் இருந்து காரில் புறப்பட்ட ஜெயலலிதாவை வழிநெடுக திரண்டிருந்த தொண்டர்களும், பொதுமக்களும் வரவேற்றனர்.
பலத்த வரவேற்புக்கிடையே, பர்மா பஜார், ராயபுரம் வழியாக சுமார் 12.20 மணியளவில் பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தை ஜெயலலிதா வந்தடைந்தார். அங்குள்ள தேர்தல் நடத்தும் அதிகாரி பத்மஜா தேவியிடம் அவர் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
பின்னர், வெளியே வந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அங்கு கூடியிருந்த தொண்டர்களைப் பார்த்து, வெற்றியை குறிப்பிடும் வகையில் இரட்டை விரலை காட்டி கை அசைத்தார்.
தமிழ்நாடு முழுவதும் 226 தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வருகிற 28-ந்தேதி தங்கள் தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்கள்.
வேட்பு மனு தாக்கல் செய்ய வருகிற 29-ந்தேதி கடைசி நாள் ஆகும். மனுக்கள் மீதான பரிசீலனை 30-ந்தேதி தொடங்குகிறது. வேட்பு மனுவை வாபஸ் பெற மே 2-ந்தேதி கடைசி நாள் ஆகும். 16-ம் தேதி வாக்குப்பதிவு முடிந்ததும், 19-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே வெளியாகிறது.
மயிலாடுதுறை :
மயிலாடுதுறையில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:–
கடந்த 5 ஆண்டு காலமாக நடைபெறுகின்ற அ.தி.மு.க. ஆட்சியில் கோளாறுகளை இங்கே அனுபவத்தில் உணர்ந்தீர்கள். இவை எல்லாம் நீங்கி உண்மையான சுதந்திரத்தை உணர கூடிய வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால், அந்த வாய்ப்பை உருவாக்க கூடியவர்கள் இளைஞர்கள் தான் என்பதை நான் தெரிவித்து கொள்ள கடமைபட்டு இருக்கிறேன்.
இங்கே பேசியவர்கள் நான் 6வது முறையாக நான் வெற்றி பெற இருக்கிறேன் என்பதை எல்லாம் சொன்னார்கள். அதற்கு காரணம். என் மீது கொண்ட ஆசை, அக்கறையின் காரணமாகத்தான்.
நமது மக்கள் வாழ வேண்டுமேயானால், தமிழ்நாடு வாழ வேண்டுமேயானால், தமிழ்நாட்டில் தந்தை பெரியார், அண்ணா போன்றவர்களிடம் பாடம் கற்றவர்கள் ஆட்சி பொறுப்பில் இருந்தால் தான் அவர்களால் ஒரு நல்ல நிலையை தமிழ்நாட்டில் உருவாக்க முடியும்.
தி.மு.க. ஒரு அரசியல் கட்சி என்று சொல்வதை விட சமுதாயம் இயக்கம் என்று சொல்வதுதான் பொருந்தும். தி.மு.க.வின் கொள்கை. சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு எல்லோரும் நண்பர்கள் தான் என்ற நிலையில் இருக்கும் இயக்கம். தி.மு.க. எல்லோரையும் அரவணைத்து செல்லும் இயக்கம். இளைஞர் சமுதாயத்தால் நாட்டை வாழ வைக்க முடியும். அந்த பெரும் பொறுப்பை இளைஞர்கள் ஏற்று கொள்ள வேண்டும்.
ஓட்டுக்கு பணம் செலவு செய்து ஆட்சியை பிடிக்க முயல்கின்றனர். தி.மு.க.வை அழித்துவிட சதிசெய்தால் அது நடக்காது. வரும்வழியில் விவசாயிகள் பெருமளவில் கூடிய கூட்டத்தை பார்த்தேன். விவசாயிகளுக்கு என்ன தேவை என்ன என்பதை உணர்ந்து அவர்களுக்கு செய்ய தயாராக இருக்கிறோம்.
தி.மு.க. ஆட்சி இன்றைக்கு நடைபெறவில்லை. அண்ணாவின் பெயரால் ஒரு ஆட்சி இங்கே நடைபெறுகிறது. அண்ணா சமாதான பிரியர். அண்ணா எதையும் தாங்கும் இதயம் படைத்தவர். அந்த அண்ணா பெயரில் நடைபெறும் ஆட்சி எந்த முறையில் நடைபெறுகிறது என்பதை தயவு செய்து நீங்கள் எண்ணி பார்க்க வேண்டும்.
தமிழ்நாட்டில் இன்னொரு பெரிய பிரச்சினை மதுவிலக்கு. அந்த மதுவிலக்கு பிரச்சினையை பொறுத்தவரை தி.மு.க. உறுதியாக இருக்கிறது. தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் முதலில் நான் போடும் கையெழுத்து மதுவிலக்கு கையெழுத்தாக தான் இருக்கும். மது அருந்தும் காரணத்தால் இளைஞர்கள் வீணாகி போகிறார்கள்.
எத்தனை வாலிபர்களின் உயிரை மது குடித்து இருக்கிறது. பெண்களின் கற்புக்கு மதுவினால் சோதனை ஏற்பட்டுள்ளது. இதை களையதான் மது வேண்டாம் என்று காந்தியடிகள் சொன்ன கொள்கையை ஏற்று 1971–ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியில் மதுவிலக்கு கொண்டு வந்தோம்.
மதுவிலக்கு கொண்டு வந்தீர்கள். மறுபடியும் மதுவை வியாபாரம் செய்தீர்களே அது என்ன நியாயம் என்று கேட்கிறார்கள். மதுவிலக்கை ஓராண்டு ஒத்தி வைத்தது உண்மை. அப்படி ஒத்தி வைக்கப்பட்ட மதுவிலக்கை 1974–ம் ஆண்டு அமலுக்கு கொண்டு வந்து மதுவிலக்கை அமல்படுத்தினோம்.
இனியாரும் இனிமேல் கடைகளிலேயே மது விற்கக்கூடாது என்று சட்டத்தை கொண்டுவந்து மதுவிலக்கு திட்டத்தை 1974–ம் ஆண்டு தீவிரமாக்கியது தி.மு.கஅதற்கு பிறகு வந்த அ.தி.மு.க. ஆட்சியிலே கடைக்கு கடை சாராயம், பிராந்தி என்ற முறையில் மது பெருக ஆரம்பித்தது. அரசே மதுவிற்பனையில் ஈடுபட்டது.
ஆனால் இன்றைக்கு படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வருவோம் என்கிறார்கள். அது என்ன படிப்படியாக என்று எனக்கு புரியவில்லை. அதை நாங்கள் ஏற்று கொள்ள தயாராக இல்லை.
ஒரே அடியாக மதுவிலக்கு. யாரும் மது அருந்த கூடாது. மது அருந்துவதை விட விஷத்தை அருந்தலாமே என்று சொல்லும் அளவுக்கு மதுபழக்கத்தினால் மக்கள் கெட்டுபோய்விட்டார்கள். அதை மறப்போம். அதை தடுப்போம். மதுவை ஒழிப் போம் என்று என்னுடைய முழக்கத்தை ஆதரித்து கைதட்டும் இளைஞர்களை பார்க்கிறேன்.
இனி தமிழ்நாட்டிலேயே தி.மு.க. ஆட்சி ஏற்பட்டால் உடனடியாக முதலில் நான் போடும் கையெழுத்து மது விலக்கு திட்டம் தான். அதற்கு இளைஞர்கள் தயாராக இருக்க வேண்டும். நான் மதுவிலக்கில் தீவிரமாக இருப்பேன். மதுவை ஒழிப்போம். மதியை வளர்ப்போம். மனதை பண்படுத்துவோம். அடக்கத்தை கற்போம். தி.மு.க.வை ஒரு சமுதாய இயக்கமாக ஏற்போம். தமிழகத்தை வளப்படுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை :
தமிழக சட்டசபை தேர்தல் மே 16–ந்தேதி நடக்கிறது. இதற்கான மனு தாக்கல் கடந்த 22–ந்தேதி தொடங்கியது.
அன்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் 83 வேட்பாளர் கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இவர்களில் 7 பேர் பெண்கள்.
வேட்பு மனு தாக்கல் தொடங்கிய முதல் நாளில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. சுயேச்சைகள் மட்டுமே மனு தாக்கல் செய்தனர்.
நேற்றும், இன்றும் விடுமுறை என்பதால் மனு தாக்கல் நடைபெறவில்லை. நாளை (25–ந்தேதி) மீண்டும் மனு தாக்கல் தொடங்குகிறது.
அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் நல்ல நாள், நேரம் பார்த்து வேட்புமனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர்.
அந்த வகையில் நாளை சித்தயோகம், சங்கட கர சதுர்த்தியுடன் சுப முகூர்த்த தினம் ஆகும். காலை 10.30 மணி முதல் பகல் 12 மணி வரை எம கண்டம் என்பதால் 12 மணிக்கு மேல் பல்வேறு அரசியல் கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது சொந்த தொகுதியான திருவாரூரில் 2 –வது முறையாக போட்டியிடுகிறார்.
அவர் நாளை (திங்கட் கிழமை) மதியம் மனு தாக்கல் செய்கிறார். திருவாரூர் தெற்கு வீதியில் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. முத்து மீனாட்சியிடம் வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
முன்னதாக காட்டூரில் உள்ள தனது தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.
கருணாநிதி வேட்பு மனு தாக்கல் செய்யும் நாளைய தினம் தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான தி.மு.க. வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்கிறார்கள்.
மற்ற கட்சி வேட்பாளர்களும் நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார்கள். கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நாளை (திங்கட் கிழமை) காலை 11 மணிக்கு, கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.
இதற்காக காலை 9 மணிக்கு, கோவில்பட்டி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள தேர்தல் அலுவலகத்தில் இருந்து தே.மு.தி.க., மக்கள்நல கூட்டணி, த.மா.கா. கூட்டணி தொண்டர்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு உதவி கலெக்டர் அலுவலகம் செல்கிறார்.
விடுதலைசிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோவில் சட்ட சபை தொகுதியில் போட்டியிடுகிறார்.
நாளை அவர் காட்டுமன்னார் கோவில் தாலுகா அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வருகிற 27–ந்தேதி கொளத்தூர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
அயனாவரம் பஸ் டெப்போ அருகில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை இணை கமிஷனர் கார்த்திகாவிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் வருகிற 27–ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அன்று உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகம் சென்று உதவி ஆணையாளர் (கலால்) முகுந்தனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருகிற 26–ந்தேதி வேட்பு மனுதாக்கல் செய்கிறார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற மே 16–ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தேர்தலையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பிரசரத்தில் ஈடுபட்டு உள்ளனர். தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் 3 நாட்கள் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் தேர்தல் பிரசாரம் செய்கிறார். நாளை கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசாரத்தை முடித்துவிட்டு இரவு 8.30 மணிக்கு மு.க.ஸ்டாலின் வள்ளியூரில் பிரசாரம் செய்கிறார்.
தொடர்ந்து 9.30 மணிக்கு நாங்குநேரியில் திறந்தவேனில் நின்று பேசுகிறார். பின்னர் தூத்துக்குடி மாவட்டம் செல்கிறார். ஆறுமுகநேரி விருந்தினர் மாளிகையில் இரவு தங்கும் அவர் மறுநாள் (25–ந்தேதி) தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
அன்று மாலை 3 மணிக்கு திருச்செந்தூர் தேரடித் திடலிலும், மாலை 4.30மணிக்கு பழையகாயல் பஜாரிலும், மாலை 5மணிக்கு தூத்துக்குடி அண்ணாநகரிலும், மாலை 6மணிக்கு ஓட்டப்பிடாரம் பஜாரிலும் திமுக, காங்கிரஸ், புதிய தமிழகம் கட்சி கூட்டணிக்கு வாக்கு சேகரிக்கிறார். தொடர்ந்து இரவு 7.15 மணிக்கு எட்டயபுரம் பஜாரிலும், இரவு 8.30மணிக்கு கோவில்பட்டியிலும் பிரசாரம் மேற்கொள்கிறார்.
பின்னர் இரவு தாழையூத்து விருந்தினர் மாளிகையில் அவர் தங்குகிறார். 26–ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 3 மணிக்கு நெல்லை சந்திப்பில் பிரசாரத்தை தொடங்குகிறார். 3.30 மணிக்கு பாளையிலும், 4 மணிக்கு மேலப்பாளையத்திலும் வாக்கு சேகரிக்கிறார். தொடர்ந்து 5 மணிக்கு அம்பையிலும், 6 மணிக்கு கடையத்திலும், 7 மணிக்கு தென்காசியிலும், 8 மணிக்கு கடையநல்லூரிலும், 9 மணிக்கு சங்கரன்கோவிலிலும் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமை கட்சி கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்தது. தற்போதைய சட்டமன்ற தேர்தலில் அவரது கட்சிக்கு அ.தி.மு.க.வில் தொகுதி ஒதுக்கப்படவில்லை. அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறிய தமிழக வாழ்வுரிமை கட்சி, சட்டமன்றத் தேர்தலை தனித்து எதிர்கொள்கிறது.
நெய்வேலியில் தான் போட்டியிடுவதாக கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிவித்தார். மற்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் குறித்து கட்சியின் செயற்குழு முடிவு செய்யும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், நெய்வேலியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன், தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு கேமரா சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருப்பதாக தெரிவித்தார். இந்த சின்னத்தில் போட்டியிட்டு கட்சியின் அங்கீகாரத்தை பெற அவர் திட்டமிட்டுள்ளார்.
அ.தி.மு.க. தங்களை கடைசி நிமிடத்தில் வெளியேற்றியது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், என்ன நடந்தது என்ற உண்மையை தேர்தலுக்கு பிறகு சொல்வதாக வேல்முருகன் கூறியது குறிப்பிடத்தக்கது.
சேலம் மகுடஞ்சாவடியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா உரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் சேலம், ஈரோடு, கோவை, நீலகிரி, மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 54 வேட்பாளர்களை ஆதரித்து ஜெயலலிதா பிரச்சாரம் மேற்கொண்டார்.
பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா பேசியதாவது:
எனது தலைமையிலான ஆட்சியில் தமிழகம் ஏற்றம் கண்டுள்ளது. நான் சொன்னதையும் செய்துள்ளேன், சொல்லாத பல திட்டங்களையும் செய்துள்ளேன். ஏழை, எளிய மக்களுக்கு எண்ணிலடங்கா திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன்.
தொழில் முனைவோரை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். எனது ஆட்சியில் பெண்கள் மிகவும் பாதுகாப்புடன் உள்ளனர். இந்தியாவிலேயே மகளிர் பாதுகாப்பில் தமிழகம் தான் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.
2011 தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு நான் இட்ட முதல் 7 உத்தரவில் 4 மகளிர் மேம்பாட்டிற்கானது தான். மகப்பேறு கால விடுப்பை 3 மாதங்களில் இருந்து 6 மாதங்களாக நீட்டித்தது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன்.
மகளிருக்கு உள்ளாட்சி தேர்தலில் மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு அளிக்க 1996-ம் ஆண்டு சட்டம் கொண்டு வந்ததாக கருணாநிதி பொய் பரப்புரை செய்கிறார். அது 1994-ம் ஆண்டு எனது தலைமையிலான ஆட்சியில் தான் கொண்டு வரப்பட்டது.
முந்தைய திமுக ஆட்சி ஒரு அராஜக ஆட்சி. காட்டாட்சி என்று கூட சொல்லலாம். திமுக ஆட்சியில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை. மக்களுக்கான நலன்கள் எதுவும் இல்லை. தமிழகத்தையே இருளில் மூழ்கடித்த ஆட்சி.
வேலைக்கு சென்ற கணவர் உயிருடன் திரும்புவானா என்ற அச்சம் இருந்த காலம் திமுக ஆட்சி காலம். பள்ளிக்கு சென்ற குழந்தை வீடு திரும்புமா அல்லது கடத்தப்படுமா என்ற பதற்றம் இருந்த காலம். நிலம் வைத்திருப்பவர் தங்களது நிலம் எப்போது பறிபோகும் என்ற அச்சம் இருந்த காலம் திமுக ஆட்சி காலம்.
அதிமுக ஆட்சியில் நிலங்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தமிழகம் எனது ஆட்சியில் அமைதி பூங்காவாக உள்ளது.
காவல்நிலையத்தில் அரசியல்வாதிகள் செல்வதை தடுக்க கொண்டுவரப்பட்ட பரிந்துரையை கருணாநிதி நிராகரித்தார்.
அதிமுக ஆட்சியில் காவல்துறையின் பணியில் யாரும் தலையிட முடியாது. முந்தைய திமுக ஆட்சியில் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டிருந்தன.
தற்போது உள்ள நலத்திட்டங்கள் நீடித்திட புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்-ன் சின்னமாம் இரட்டை இலை சின்னத்தில் அனைவரும் வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிடும் உளுந்தூர்பேட்டை தொகுதியில் பா.ம.க. சார்பில் வழக்கறிஞர் பாலு போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தலைவர்கள் ஒருபுறம் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். மற்றொரு புறம் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. நேற்று தேமுதிக தரப்பில் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் பா.ம.க. தரப்பில் ஏற்கனவே உளுந்தூர்பேட்டையில் அறிவிக்கப்பட்டிருந்த வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். விஜயகாந்திற்கு போட்டியாக பா.ம.க. தரப்பில் அக்கட்சியின் வழக்கறிஞர் பாலு அறிவிக்கப்பட்டுள்ளார். இங்கு ராமமூர்த்தி என்பவர் ஏற்கனவே உளுந்தூர்பேட்டை தொகுதிக்கு அறிவிக்கப்பட்டிருந்தார்.
உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பாலு சமூக நீதிப்பேரவையின் மாநில தலைவராகவும் உள்ளார். விஜயகாந்திற்கு போட்டியாக உளுந்தூர்பேட்டையில் பா.ம.க வழக்கறிஞர் பாலு அறிவிக்கப்பட்டுள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் :
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி அ.தி.மு.க.சார்பில் போட்டி யிடும் வேட்பாளர்களையும், அ.தி.மு.க.கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களையும் ஆதரித்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார். முதலில் சென்னையில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய ஜெயலலிதா, அதன்பிறகு விருதாச்சலம், தர்மபுரி, அருப்புக்கோட்டை ஆகிய இடங்களில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
காஞ்சிபுரத்தில் நேற்று நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா கலந்து கொண்டு அ.தி.மு.க. வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பிரசாரம் செய்தார்.
இதைத்தொடர்ந்து 6–வது தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் சேலத்தில் நாளை (புதன்கிழமை) மதியம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் சேலம் மாவட்டத்தில் உள்ள சேலம் தெற்கு, சேலம் வடக்கு, சேலம் மேற்கு, ஓமலூர், வீரபாண்டி, இடைப்பாடி, சங்ககிரி, மேட்டூர், ஏற்காடு (தனி), ஆத்தூர் (தனி), கெங்கவல்லி (தனி) ஆகிய 11 தொகுதிகளின் வேட்பாளர்களையும், நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (தனி), பரமத்திவேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 தொகுதிகளின் வேட்பாளர் களையும் அறிமுகப்படுத்தி முதல்–அமைச்சர் ஜெயலலிதா பேசுகிறார்.
இதற்காக சேலம்சங்ககிரி தேசிய நெடுஞ்சாலையில் மகுடஞ்சாவடி பகுதியில் ஆவத்திப்பாளையம் என்ற இடத்தில் 70 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு, சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்–அமைச்சர் ஜெயலலிதா சென்னையில் இருந்து ஹெலிகாப்டரில் நாளை (புதன்கிழமை) மதியம் சேலம் வருகிறார்.
இதற்காக பொதுக்கூட்டம் நடக்கும் மேடைக்கு அருகே ஹெலிபேடு தளம் அமைக்கப்பட்டு உள்ளது. முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் பேச்சை கேட்க வரும் அ.தி.மு.க.தொண்டர் களும், பொதுமக்களும் சிரமமின்றி வந்து செல்ல வசதியாக கூட்டம் நடைபெறும் பகுதியில் தடுப்புக்கட்டைகளால் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பொதுக்கூட்டம் நடைபெறும் மேடை முதல் ஹெலிபேடு வரை இருபுறமும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. கூட்டம் நடைபெறும் மைதானத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் அமருவதற்கு தனித்தனியாக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு தடுப்பு வேலிகள் அமைக்கப்படுகிறது.
பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் போலீசார் 24 மணி நேரமும் கண்காணித்து, தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பாதுகாப்பு பணிக்காக சேலம் மாவட்டம் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து சுமார் 2,500 போலீசார் பாதுகாப்பு பணிக்காக வருகைதர உள்ளனர்.
இதனிடையே, பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதியில் கோவை மேற்கு மண்டல ஐ.ஜி.ஸ்ரீதர் தலைமையில் சேலம் சரக டி.ஐ.ஜி.நாகராஜன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுப்புலட்சுமி ஆகியோர் பார்வையிட்டு பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தனர். ஹெலிபேடு, தார்சாலை, பந்தல் அமைக்கும் பணி, மக்கள் கூடும் இடங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் வெடிகுண்டு நிபுணர்கள் நேற்று தீவிர சோதனையிட்டனர்.
தமிழக சட்டசபை தேர்தல் வருகிற மே மாதம் 16-ந் தேதி நடக்கிறது. இதில் தே.மு.தி.க.-மக்கள் நலக்கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் தமிழ்நாடு முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார். அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போட்டியிடும் தே.மு.தி.க.-மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பொதுக்கூட்டம் ஓசூரில் உள்ள நியூ ஏ.எஸ்.டி.சி. அட்கோ 100 அடி சாலையில் நேற்று இரவு நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்தில் தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு, தே.மு.தி.க. வேட்பாளர்கள் சந்திரன் (ஓசூர்), நாகராஜ் (வேப்பனப்பள்ளி), இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தளி சட்டசபை தொகுதி வேட்பாளர் டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோரை ஆதரித்து விஜயகாந்த் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
இந்த தேர்தலை தே.மு.தி.க., தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகள் மக்கள் நலக்கூட்டணியாக சந்திக்கிறோம். இந்த கூட்டணிக்கு நீங்கள் ஆதரவு தர வேண்டும். தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா மாற்றம் தருவதாகவும், ஏற்றம் தருவதாகவும் கூறி ஆட்சிக்கு வந்தார். அவர் ஆட்சியில் மாற்றம் வந்ததா? ஏற்றத்தை தந்தாரா?.
உங்கள் ஓசூர் தொகுதி எம்.எல்.ஏ. உங்களை சந்தித்துள்ளாரா? ஆனால் நாங்கள் அப்படி அல்ல. நாங்கள் சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம். பள்ளி குழந்தைகளுக்கு சத்தான உணவுகளை தருவோம். மாணவிகளுக்கு என்று மாலை நேர கல்லூரி தொடங்குவோம். தமிழ்நாடு முழுவதும் கல்வி தரத்தை மேம்படுத்த பள்ளிகளின் தரத்தை உயர்த்துவோம். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் விலைவாசி உயர்ந்துள்ளது. மதுவால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
நான் கடந்த 2006-ம் ஆண்டு முதல் இந்த பகுதிக்கு வந்துள்ளேன். உங்களையெல்லாம் சந்தித்து வருகிறேன். இந்த பகுதி மக்களின் அடிப்படை பிரச்சினைகள் என்னென்ன என்பதை நான் நன்கு அறிவேன். இந்த தேர்தலில் நான், வைகோ, ஜி.கே.வாசன், திருமாவளவன், ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகிய 6 பேரும் ஒன்றாக சேர்ந்துள்ளோம். இந்த தேர்தல் ஒரு புனிதப்போர் ஆகும். எங்கள் அணியில் உள்ளவர்கள் நல்லவர்கள். அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகள் தீயவர்கள். அவர்கள் இந்த தேர்தலில் ஓரங்கட்டப்பட வேண்டும்.
கடந்த 50 ஆண்டுகளாக தமிழ்நாட்டை தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் மாறி, மாறி ஆட்சி செய்தார்கள். இப்போது தி.மு.க. மதுவிலக்கை கொண்டு வருவோம் என்கிறது. அ.தி.மு.க.வோ படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வருவதாக கூறுகிறது. அந்த கட்சியின் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், சட்டசபையில் மதுவிலக்கு கொண்டு வர மாட்டோம் என்கிறார். இதில் எதை மக்கள் நம்புவார்கள்.
மதுவிலக்கை பற்றி பேசக் கூடிய அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சிகளை சேர்ந்தவர்களும் மது ஆலைகளை நடத்தி வருகிறார்கள். எனவே, மதுவிலக்கு பற்றி பேசுவதற்கு அ.தி.மு.க.-தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுக்கும் தகுதி இல்லை.
இன்று மதுவால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட கூடிய மக்களுக்கு கூட ஆறுதலாக கடைசியில் இருப்பது நாங்கள் தான். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆஸ்பத்திரிகள் அனைத்தும் நவீன மயமாக்கப்படும்.
இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
இந்த கூட்டத்தில் மக்கள் நலக்கூட்டணியின் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி - தமாகா கூட்டணியில் தேமுதிகவுக்கு 104 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. முதல் கட்ட பட்டியலில் 5 வேட்பாளர்களும், 2-ம் கட்ட பட்டியலில் 10 வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து 3-ம் கட்ட பட்டியலில் 25 வேட்பாளர்களும். 4-ம் கட்ட பட்டியலில் 35 வேட்பாளர்களும், 5-வது கட்டமாக 18 வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர்.
மொத்தம் 93 வேட்பாளர்களை தேமுதிக அறிவித்திருந்தது. இந்நிலையில் மீதமுள்ள 11 பேர் கொண்ட பட்டியலை தேமுதிக இன்று அறிவித்துள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடுகின்றார். 2006-ம் ஆண்டு தேர்தலில் விருத்தாசலம் தொகுதியிலும், 2011-ம் ஆண்டு ரிஷிவந்தியம் தொகுதியிலும் விஜயகாந்த் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
வேட்பாளர்கள் விவரம்:
விஜயகாந்த் -உளுந்தூர்பேட்டை
திண்டிவனம் - உதயகுமார்,
ஒரத்தநாடு - ராமநாதன்,
விழுப்புரம் - வெங்கடேசன்,
உடுமலைப்பேட்டை - கணேஷ்குமார்,
விராலிமலை - கார்த்திகேயன்,
மேட்டூர் - பூபதி,
ஆத்தூர்(திண்டுக்கல்) - பாக்கியா செல்வராஜ்.
மன்னார்குடி - முருகையன் பாபு,
ரிஷிவந்தியம் - வின்செண்ட் ஜெயராஜ்,
சங்கராபுரம் - கோவிந்தன்.
ம.தி.மு.க. தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தே.மு.தி.க.-மக்கள் நலக் கூட்டணி-த.மா.கா. வெற்றிக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், ம.தி.மு.க. பொதுச்செயலாளருமான வைகோ, 16-ந் தேதி(இன்று) சனிக்கிழமை காலை 10 மணிக்கு, சென்னை அண்ணா நகர், எம்.ஜி.ஆர். காலனியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில், ம.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்துப் பிரசாரத்தைத் தொடங்குகிறார்.
அவரது முதல் கட்ட சுற்றுப்பயண விவரம் வருமாறு:-
16-ந் தேதி - சென்னை மாநகர்,
17-ந் தேதி - தேனி, மதுரை மாவட்டங்கள்,
18-ந் தேதி - கன்னியாகுமரி மாவட்டம்,
19-ந் தேதி - திருநெல்வேலி மாவட்டம்,
20-ந் தேதி - தூத்துக்குடி மாவட்டம்,
21-ந் தேதி - விருதுநகர் மாவட்டம்,
22-ந் தேதி - சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்கள்,
23-ந் தேதி - அரியலூர், திருச்சி மாவட்டங்கள்,
24-ந் தேதி - கரூர், திருப்பூர், கோவை மாவட்டங்கள்,
25-ந் தேதி - கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்கள்,
26-ந் தேதி - விழுப்புரம் மாவட்டம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை:
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். தி.மு.க. வேட்பாளர் பட்டியல் நேற்று மாலை வெளியானதும் மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
அங்கு பெரவள்ளூர் சதுக்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தி.மு.க. வேட்பாளர்கள் பி.கே.சேகர்பாபு (துறை முகம்), ப.ரெங்கநாதன் (வில்லிவாக்கம்), தாயகம் கவி (திரு.வி.க.நகர்), கே.எஸ்.ரவிச்சந்திரன் (எழும்பூர்), ஆகிய 4 வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி மு.க. ஸ்டாலின் பேசியதாவது:–
தி.மு.க. சார்பில் நான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, உங்கள் வீட்டுப் பிள்ளையாக இங்கு வந்திருக்கிறேன். இந்த தொகுதியில் என்னை 2011–ம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில் ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெற்று தரவில்லை என்று சொன்னாலும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தீர்கள்.
உங்களைப் பொறுத்த வரையில் அப்போது நீங்கள் பெருவாரியான வாக்குகளை அளித்தீர்கள்,
ஆனால் முறையாக வாக்கு எண்ணிக்கை நடந்திருந்தால் நிச்சயமாக 20000–25000 வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெற்றிருப்பேன் என்பதுதான் உண்மை. சத்தியம்.
இந்த நிலையில் மீண்டும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக, கழகம் அமைத்திருக்கும் கூட்டணியின் சார்பில் நான் வேட்பாளராக உங்கள் முன் நிறுத்தப்பட்டு இருக்கிறேன்.
இப்போது முதல்– அமைச்சராக இருக்கக் கூடிய ஜெயலலிதா, 2011 தேர்தலில் பல வாக்குறுதிகள் தந்தார்.
இப்போதும் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகள் தர இருக்கிறார். அப்போது அவர் தந்த வாக்குறுதிகளில் ஒன்றையாவது நிறைவேற்றி இருக்கிறாரா? என்றால் இல்லை.
ஆனால் 6–வது முறையாக தமிழகத்தை ஆளக்கூடிய, முதல்வராக பொறுப்பேற்க உள்ள தலைவர் கலைஞர் 2006–ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தந்த உறுதி மொழிகளை, வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றி, சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் சேர்த்து நிறைவேற்றி தந்தார். இது உங்களுக்கே நன்றாக தெரியும். அதனால்தான் கடந்த 10–ம் தேதி தலைவர் கலைஞர், தி.மு.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட நேரத்தில் மிகத் தெளிவாக எடுத்துச் சொன்னார்.
உறுதி மொழியாக அவர், “சொல்வதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம்”, என்று குறிப்பிட்டுக் காட்டி யிருக்கிறார்.
எனவே தி.மு.க. தேர்தல் அறிக்கையை முழுமையாக நிறைவேற்றுவோம். பூரண மதுவிலக்கு அமுல் படுத்துவதுதான் முதல் பணி. இதை தொடர்ந்து அனைத்து தேர்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்.
எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போ தெல்லாம் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் உங்களைத் தேடி வருவார்கள், உங்களை நாடி வருவார்கள் என்று நான் உறுதியுடன் குறிப்பிட விரும்புகிறேன். இனியும் அரசியல்வாதிகளை தேடி நீங்கள் போகக் கூடாது, உங்களை தேடி அவர்கள் வர வேண்டும், வருவார்கள்.
எனவே நம்பிக்கையோடு கொளத்தூர் தொகுதியின் வேட்பாளரான, உங்கள் வீட்டுப் பிள்ளையான எனக்கும் கழக வேட்பாளர்களுக்கும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து ஆதரவு தந்து வெற்றியைப் பெற்றுத் தாருங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.