search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓட்டுக்கு பணம் கொடுத்து ஆட்சியை பிடிக்க முயல்கின்றனர்: கருணாநிதி குற்றச்சாட்டு
    X

    ஓட்டுக்கு பணம் கொடுத்து ஆட்சியை பிடிக்க முயல்கின்றனர்: கருணாநிதி குற்றச்சாட்டு

    மயிலாடுதுறையில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ஓட்டுக்கு பணம் கொடுத்து ஆட்சியை பிடிக்க முயல்கின்றனர் என தி.மு.க. தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்

    மயிலாடுதுறை :

    மயிலாடுதுறையில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:–

    கடந்த 5 ஆண்டு காலமாக நடைபெறுகின்ற அ.தி.மு.க. ஆட்சியில் கோளாறுகளை இங்கே அனுபவத்தில் உணர்ந்தீர்கள். இவை எல்லாம் நீங்கி உண்மையான சுதந்திரத்தை உணர கூடிய வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால், அந்த வாய்ப்பை உருவாக்க கூடியவர்கள் இளைஞர்கள் தான் என்பதை நான் தெரிவித்து கொள்ள கடமைபட்டு இருக்கிறேன்.

    இங்கே பேசியவர்கள் நான் 6வது முறையாக நான் வெற்றி பெற இருக்கிறேன் என்பதை எல்லாம் சொன்னார்கள். அதற்கு காரணம். என் மீது கொண்ட ஆசை, அக்கறையின் காரணமாகத்தான்.

    நமது மக்கள் வாழ வேண்டுமேயானால், தமிழ்நாடு வாழ வேண்டுமேயானால், தமிழ்நாட்டில் தந்தை பெரியார், அண்ணா போன்றவர்களிடம் பாடம் கற்றவர்கள் ஆட்சி பொறுப்பில் இருந்தால் தான் அவர்களால் ஒரு நல்ல நிலையை தமிழ்நாட்டில் உருவாக்க முடியும்.

    தி.மு.க. ஒரு அரசியல் கட்சி என்று சொல்வதை விட சமுதாயம் இயக்கம் என்று சொல்வதுதான் பொருந்தும். தி.மு.க.வின் கொள்கை. சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு எல்லோரும் நண்பர்கள் தான் என்ற நிலையில் இருக்கும் இயக்கம். தி.மு.க. எல்லோரையும் அரவணைத்து செல்லும் இயக்கம். இளைஞர் சமுதாயத்தால் நாட்டை வாழ வைக்க முடியும். அந்த பெரும் பொறுப்பை இளைஞர்கள் ஏற்று கொள்ள வேண்டும்.

    ஓட்டுக்கு பணம் செலவு செய்து ஆட்சியை பிடிக்க முயல்கின்றனர். தி.மு.க.வை அழித்துவிட சதிசெய்தால் அது நடக்காது. வரும்வழியில் விவசாயிகள் பெருமளவில் கூடிய கூட்டத்தை பார்த்தேன். விவசாயிகளுக்கு என்ன தேவை என்ன என்பதை உணர்ந்து அவர்களுக்கு செய்ய தயாராக இருக்கிறோம்.

    தி.மு.க. ஆட்சி இன்றைக்கு நடைபெறவில்லை. அண்ணாவின் பெயரால் ஒரு ஆட்சி இங்கே நடைபெறுகிறது. அண்ணா சமாதான பிரியர். அண்ணா எதையும் தாங்கும் இதயம் படைத்தவர். அந்த அண்ணா பெயரில் நடைபெறும் ஆட்சி எந்த முறையில் நடைபெறுகிறது என்பதை தயவு செய்து நீங்கள் எண்ணி பார்க்க வேண்டும்.

    தமிழ்நாட்டில் இன்னொரு பெரிய பிரச்சினை மதுவிலக்கு. அந்த மதுவிலக்கு பிரச்சினையை பொறுத்தவரை தி.மு.க. உறுதியாக இருக்கிறது. தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் முதலில் நான் போடும் கையெழுத்து மதுவிலக்கு கையெழுத்தாக தான் இருக்கும். மது அருந்தும் காரணத்தால் இளைஞர்கள் வீணாகி போகிறார்கள்.

    எத்தனை வாலிபர்களின் உயிரை மது குடித்து இருக்கிறது. பெண்களின் கற்புக்கு மதுவினால் சோதனை ஏற்பட்டுள்ளது. இதை களையதான் மது வேண்டாம் என்று காந்தியடிகள் சொன்ன கொள்கையை ஏற்று 1971–ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியில் மதுவிலக்கு கொண்டு வந்தோம்.

    மதுவிலக்கு கொண்டு வந்தீர்கள். மறுபடியும் மதுவை வியாபாரம் செய்தீர்களே அது என்ன நியாயம் என்று கேட்கிறார்கள். மதுவிலக்கை ஓராண்டு ஒத்தி வைத்தது உண்மை. அப்படி ஒத்தி வைக்கப்பட்ட மதுவிலக்கை 1974–ம் ஆண்டு அமலுக்கு கொண்டு வந்து மதுவிலக்கை அமல்படுத்தினோம்.

    இனியாரும் இனிமேல் கடைகளிலேயே மது விற்கக்கூடாது என்று சட்டத்தை கொண்டுவந்து மதுவிலக்கு திட்டத்தை 1974–ம் ஆண்டு தீவிரமாக்கியது தி.மு.கஅதற்கு பிறகு வந்த அ.தி.மு.க. ஆட்சியிலே கடைக்கு கடை சாராயம், பிராந்தி என்ற முறையில் மது பெருக ஆரம்பித்தது. அரசே மதுவிற்பனையில் ஈடுபட்டது.

    ஆனால் இன்றைக்கு படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வருவோம் என்கிறார்கள். அது என்ன படிப்படியாக என்று எனக்கு புரியவில்லை. அதை நாங்கள் ஏற்று கொள்ள தயாராக இல்லை.

    ஒரே அடியாக மதுவிலக்கு. யாரும் மது அருந்த கூடாது. மது அருந்துவதை விட விஷத்தை அருந்தலாமே என்று சொல்லும் அளவுக்கு மதுபழக்கத்தினால் மக்கள் கெட்டுபோய்விட்டார்கள். அதை மறப்போம். அதை தடுப்போம். மதுவை ஒழிப் போம் என்று என்னுடைய முழக்கத்தை ஆதரித்து கைதட்டும் இளைஞர்களை பார்க்கிறேன்.

    இனி தமிழ்நாட்டிலேயே தி.மு.க. ஆட்சி ஏற்பட்டால் உடனடியாக முதலில் நான் போடும் கையெழுத்து மது விலக்கு திட்டம் தான். அதற்கு இளைஞர்கள் தயாராக இருக்க வேண்டும். நான் மதுவிலக்கில் தீவிரமாக இருப்பேன். மதுவை ஒழிப்போம். மதியை வளர்ப்போம். மனதை பண்படுத்துவோம். அடக்கத்தை கற்போம். தி.மு.க.வை ஒரு சமுதாய இயக்கமாக ஏற்போம். தமிழகத்தை வளப்படுத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×