search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுவிலக்கு பற்றி பேசுவதற்கு திராவிட கட்சிகளுக்கு தகுதி இல்லை: விஜயகாந்த் பேச்சு
    X

    மதுவிலக்கு பற்றி பேசுவதற்கு திராவிட கட்சிகளுக்கு தகுதி இல்லை: விஜயகாந்த் பேச்சு

    ‘‘மதுவிலக்கு பற்றி பேசுவதற்கு திராவிட கட்சிகளுக்கும் தகுதி இல்லை’’ என்று ஓசூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் பேசினார்.
    ஓசூர் :


    தமிழக சட்டசபை தேர்தல் வருகிற மே மாதம் 16-ந் தேதி நடக்கிறது. இதில் தே.மு.தி.க.-மக்கள் நலக்கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் தமிழ்நாடு முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார். அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போட்டியிடும் தே.மு.தி.க.-மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பொதுக்கூட்டம் ஓசூரில் உள்ள நியூ ஏ.எஸ்.டி.சி. அட்கோ 100 அடி சாலையில் நேற்று இரவு நடைபெற்றது.
    இந்த பொதுக்கூட்டத்தில் தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு, தே.மு.தி.க. வேட்பாளர்கள் சந்திரன் (ஓசூர்), நாகராஜ் (வேப்பனப்பள்ளி), இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தளி சட்டசபை தொகுதி வேட்பாளர் டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோரை ஆதரித்து விஜயகாந்த் பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    இந்த தேர்தலை தே.மு.தி.க., தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகள் மக்கள் நலக்கூட்டணியாக சந்திக்கிறோம். இந்த கூட்டணிக்கு நீங்கள் ஆதரவு தர வேண்டும். தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா மாற்றம் தருவதாகவும், ஏற்றம் தருவதாகவும் கூறி ஆட்சிக்கு வந்தார். அவர் ஆட்சியில் மாற்றம் வந்ததா? ஏற்றத்தை தந்தாரா?.

    உங்கள் ஓசூர் தொகுதி எம்.எல்.ஏ. உங்களை சந்தித்துள்ளாரா? ஆனால் நாங்கள் அப்படி அல்ல. நாங்கள் சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம். பள்ளி குழந்தைகளுக்கு சத்தான உணவுகளை தருவோம். மாணவிகளுக்கு என்று மாலை நேர கல்லூரி தொடங்குவோம். தமிழ்நாடு முழுவதும் கல்வி தரத்தை மேம்படுத்த பள்ளிகளின் தரத்தை உயர்த்துவோம். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் விலைவாசி உயர்ந்துள்ளது. மதுவால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

    நான் கடந்த 2006-ம் ஆண்டு முதல் இந்த பகுதிக்கு வந்துள்ளேன். உங்களையெல்லாம் சந்தித்து வருகிறேன். இந்த பகுதி மக்களின் அடிப்படை பிரச்சினைகள் என்னென்ன என்பதை நான் நன்கு அறிவேன். இந்த தேர்தலில் நான், வைகோ, ஜி.கே.வாசன், திருமாவளவன், ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகிய 6 பேரும் ஒன்றாக சேர்ந்துள்ளோம். இந்த தேர்தல் ஒரு புனிதப்போர் ஆகும். எங்கள் அணியில் உள்ளவர்கள் நல்லவர்கள். அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகள் தீயவர்கள். அவர்கள் இந்த தேர்தலில் ஓரங்கட்டப்பட வேண்டும்.

    கடந்த 50 ஆண்டுகளாக தமிழ்நாட்டை தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் மாறி, மாறி ஆட்சி செய்தார்கள். இப்போது தி.மு.க. மதுவிலக்கை கொண்டு வருவோம் என்கிறது. அ.தி.மு.க.வோ படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வருவதாக கூறுகிறது. அந்த கட்சியின் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், சட்டசபையில் மதுவிலக்கு கொண்டு வர மாட்டோம் என்கிறார். இதில் எதை மக்கள் நம்புவார்கள்.

    மதுவிலக்கை பற்றி பேசக் கூடிய அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சிகளை சேர்ந்தவர்களும் மது ஆலைகளை நடத்தி வருகிறார்கள். எனவே, மதுவிலக்கு பற்றி பேசுவதற்கு அ.தி.மு.க.-தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுக்கும் தகுதி இல்லை.
    இன்று மதுவால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட கூடிய மக்களுக்கு கூட ஆறுதலாக கடைசியில் இருப்பது நாங்கள் தான். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆஸ்பத்திரிகள் அனைத்தும் நவீன மயமாக்கப்படும்.

    இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

    இந்த கூட்டத்தில் மக்கள் நலக்கூட்டணியின் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். 
    Next Story
    ×