search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக சட்டசபை தேர்தல்: கருணாநிதி - வைகோ நாளை மனுதாக்கல்
    X

    தமிழக சட்டசபை தேர்தல்: கருணாநிதி - வைகோ நாளை மனுதாக்கல்

    தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது சொந்த தொகுதியான திருவாரூரில் நாளை (திங்கட் கிழமை) மதியம் மனு தாக்கல் செய்கிறார்.

    சென்னை :

    தமிழக சட்டசபை தேர்தல் மே 16–ந்தேதி நடக்கிறது. இதற்கான மனு தாக்கல் கடந்த 22–ந்தேதி தொடங்கியது.

    அன்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் 83 வேட்பாளர் கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இவர்களில் 7 பேர் பெண்கள்.

    வேட்பு மனு தாக்கல் தொடங்கிய முதல் நாளில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. சுயேச்சைகள் மட்டுமே மனு தாக்கல் செய்தனர்.

    நேற்றும், இன்றும் விடுமுறை என்பதால் மனு தாக்கல் நடைபெறவில்லை. நாளை (25–ந்தேதி) மீண்டும் மனு தாக்கல் தொடங்குகிறது.

    அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் நல்ல நாள், நேரம் பார்த்து வேட்புமனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர்.

    அந்த வகையில் நாளை சித்தயோகம், சங்கட கர சதுர்த்தியுடன் சுப முகூர்த்த தினம் ஆகும். காலை 10.30 மணி முதல் பகல் 12 மணி வரை எம கண்டம் என்பதால் 12 மணிக்கு மேல் பல்வேறு அரசியல் கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர்.

    தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது சொந்த தொகுதியான திருவாரூரில் 2 –வது முறையாக போட்டியிடுகிறார்.

    அவர் நாளை (திங்கட் கிழமை) மதியம் மனு தாக்கல் செய்கிறார். திருவாரூர் தெற்கு வீதியில் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. முத்து மீனாட்சியிடம் வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

    முன்னதாக காட்டூரில் உள்ள தனது தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.

    கருணாநிதி வேட்பு மனு தாக்கல் செய்யும் நாளைய தினம் தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான தி.மு.க. வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்கிறார்கள்.

    மற்ற கட்சி வேட்பாளர்களும் நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார்கள். கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நாளை (திங்கட் கிழமை) காலை 11 மணிக்கு, கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.

    இதற்காக காலை 9 மணிக்கு, கோவில்பட்டி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள தேர்தல் அலுவலகத்தில் இருந்து தே.மு.தி.க., மக்கள்நல கூட்டணி, த.மா.கா. கூட்டணி தொண்டர்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு உதவி கலெக்டர் அலுவலகம் செல்கிறார்.

    விடுதலைசிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோவில் சட்ட சபை தொகுதியில் போட்டியிடுகிறார்.

    நாளை அவர் காட்டுமன்னார் கோவில் தாலுகா அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.

    தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வருகிற 27–ந்தேதி கொளத்தூர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

    அயனாவரம் பஸ் டெப்போ அருகில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை இணை கமிஷனர் கார்த்திகாவிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் வருகிற 27–ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    அன்று உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகம் சென்று உதவி ஆணையாளர் (கலால்) முகுந்தனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருகிற 26–ந்தேதி வேட்பு மனுதாக்கல் செய்கிறார்.

    Next Story
    ×