search icon
என் மலர்tooltip icon

    சிறப்பு வேட்பாளர்கள்

    விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்துள்ளார்.
    தர்மபுரி:

    தர்மபுரியில் இன்று நடந்த அ.தி.மு.க. பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா கலந்துகொண்டு 11 வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து உரையாற்றினார். அப்போது அ.தி.மு.க. அரசின் செயல்பாடுகள் மற்றும் நிறைவேற்றப்பட்ட நலத்திட்டங்களை விளக்கி வாக்கு கேட்டார். அவர் பேசியதாவது:-

    தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் எனது தலைமையிலான அரசு எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. மக்களுக்குத் தேவையான அனைத்து திட்டங்களையும் யோசித்து யோசித்து செயல்படுத்தி வருகிறேன். சொன்ன திட்டங்களையும் சொல்லாத திட்டங்களையும் நிறைவேற்றி உள்ளேன்.

    வாழ்க்கைத் தரத்தில் பின்தங்கி உள்ளோருக்கு கல்வி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளேன். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற கொள்கையோடு இந்த அரசு செயல்படுகிறது. எனவே, அ.தி.மு.க. ஆட்சி தொடர வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும்.

    ஒகேனக்கல் கூட்டக் குடிநீர் திட்டம் எனது முந்தைய ஆட்சியின்போது கொண்டு வரப்பட்டது. இதன்மூலம் 32 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன்பெற்று வருகின்றனர். ஆனால், இந்த திட்டத்தை பேரவைக்கு தெரியமலேயே கருணாநிதி ஒத்திவைத்தார்.

    விவசாய நிலங்கள் வழியாக கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் பதிக்கக்கூடாது என நான் வலியுறுத்தினேன். மேலும், கெயில் எரிவாயு திட்டத்திற்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    மதுவிலக்கு குறித்து பேசுவதற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு தகுதியில்லை. நான் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தில் படிப்படியாக மது விலக்கு அமல்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தேர்தல் பிரசாரத்தில் மாற்றம் செய்து அ.தி.மு.க. தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
    சென்னை:

    அதன்படி, மே 10-ந் தேதி நெல்லையில் நடைபெற இருந்த தேர்தல் பிரசாரம் மே 12-ந் தேதிக்கும், மே 12-ந் தேதி வேலூரில் நடைபெற இருந்த தேர்தல் பிரசாரம் மே 10-ந் தேதிக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் அ.தி.மு.க. 227 இடங்களிலும், கூட்டணி கட்சிகள் 7 இடங்களிலும் போட்டியிடுகின்றன. இதற்கான அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் கடந்த 4-ந் தேதி வெளியிடப்பட்டது.

    அன்றைய தினம் மாலையிலேயே அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதாவின் தேர்தல் பிரசார சுற்றுப்பயண திட்டம் குறித்து அறிவிப்பு வெளியானது. அதன்படி, கடந்த 9-ந் தேதி சென்னையில் தொடங்கிய அவரது பிரசாரம் மே 12-ந் தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

    சென்னை மற்றும் விருத்தாசலத்தில் தனது தேர்தல் பிரசாரத்தை ஜெயலலிதா நிறைவு செய்துள்ளார். இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்தில் சிறிய மாற்றம் செய்து அ.தி. மு.க. தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    அதாவது, மே 10-ந் தேதி நெல்லை மாவட்டத்தில் மேற்கொள்வதாக இருந்த தேர்தல் பிரசாரம் மே 12-ந் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதே போன்று மே 12-ந் தேதி வேலூர் மாவட்டத்தில் மேற்கொள்வதாக இருந்த தேர்தல் பிரசாரம் மே 10-ந் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 14-ம் நாள் தேர்தல் பிரசாரம் மே 10-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வேலூரில் நடைபெறுகிறது. இதில், வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம் (தனி), வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், அரக்கோணம் (தனி), சோளிங்கர், காட்பாடி, ராணிப்பேட்டை, ஆற்காடு, கீழ் வைத்தியணான் குப்பம் (தனி), போளூர், ஆரணி, செங்கம் (தனி), கலசபாக்கம் ஆகிய தொகுதிகள் இடம் பெறுகின்றன.

    15-ம் நாள் தேர்தல் தேர்தல் பிரசாரம் மே 12-ந் தேதி (வியாழக்கிழமை) நெல்லையில் நடைபெறுகிறது. இதில், திருநெல்வேலி, பாளையங்கோட்டை, சங்கரன்கோவில் (தனி), வாசுதேவநல்லூர் (தனி), கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம், அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஒட்டப்பிடாரம் (தனி), கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவன்கோடு, கிள்ளியூர் ஆகிய தொகுதிகள் இடம் பெறுகின்றன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    விஜயகாந்த் தனது முதல் பிரசாரத்தை கும்மிடிப்பூண்டியில் தொடங்குகிறார்.
    கும்மிடிப்பூண்டி:

    தே.மு.தி.க. – மக்கள் நலக்கூட்டணியில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் இணைந்தார்.

    6 கட்சிகளின் மெகா கூட்டணியாக அது உருவாகி உள்ளது. இந்த கூட்டணியின் முதல் தேர்தல் பிரசார மாநாடு மாமண்டூரில் நடந்தது.

    இதில் விஜயகாந்த், வைகோ, ஜி.கே.வாசன், தொல்.திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன் ஆகியோர் ஒரே மேடையில் தோன்றி பிரசாரம் செய்தனர். 6 தலைவர்களும் அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாற்றாக தே.மு.தி.க.– மக்கள் நலக்கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

    கடந்த 2005ம் ஆண்டு தே.மு.தி.க. கட்சி தொடங்கப்பட்டபோது முதல் பிரசார கூட்டத்தை கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் தொடங்கினார். எனவே கும்மிடிப்பூண்டி தொகுதி ராசியான இடமாக விஜயகாந்த் கருதுகிறார்.

    இதைத்தொடர்ந்து சட்டசபை தேர்தலில் தனது முதல் பிரசாரத்தை விஜயகாந்த் தனது ராசியான இடமான கும்மிடிப்பூண்டியில் இருந்து பிரசாரத்தை மேற்கொள்கிறார்.

    இன்று மாலை 4 மணிக்கு தொடங்குகிறார். கும்மிடிப்பூண்டி பஸ்நிலையம் அருகில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் பொன்னேரி, மாதவரம், திருவொற்றியூர் ஆகிய தொகுதிகளில் தே.மு.தி.க.–மக்கள் நலக் கூட்டணி கட்சிகளை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

    மாலை 6 மணிக்கு வட சென்னை பகுதிக்கு உட்பட்ட கொளத்தூர் பெரவள்ளூர் சதுக்கத்தில் பேசுகிறார்.

    இதற்கான ஏற்பாடுகளை தே.மு.தி.க. மாவட்ட நிர்வாகிகள் செய்து உள்ளனர்.
    தமிழக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் 2-வது பட்டியல் வெளியிடப்பட்டது.
    புதுடெல்லி:

    தமிழக சட்டசபை பொதுத்தேர்தல் அடுத்த மாதம் (மே) 16-ந் தேதி நடைபெறுகிறது. இதில் பா.ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் 54 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியல் கடந்த மாதம் 25-ந்தேதி வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து நேற்று இரண்டாவது பட்டியல் வெளியானது. இதை கட்சியின் மத்திய தேர்தல் குழு செயலாளர் ஜெகத் பிரகாஷ் நட்டா டெல்லியில் வெளியிட்டார். அதில் 30 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டது.

    அதன் விவரம் வருமாறு:-

    1. திருவள்ளூர்-பி.எம்.ஆர்.ஜானகிராமன்

    2. வில்லிவாக்கம்-எம்.ஜெய்சங்கர்

    3. துறைமுகம்-கிருஷ்ணகுமார் நதானி

    4. அண்ணாநகர்-சுரேஷ் கருணா

    5. விருகம்பாக்கம்-டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்

    6. மயிலாப்பூர்-கரு.நாகராஜன்

    7. திருப்போரூர்-வி.ஜி.ரங்கசாமி

    8. ஏற்காடு(தனி)-பொன்ராசா

    9. சங்ககிரி-ஏ.சி.முருகேசன்

    10. சேலம்(வடக்கு)-கோபிநாத்

    11. மொடக்குறிச்சி-கிருஷ்ணகுமார்

    12. தாராபுரம்(தனி)-என்.சண்முகம்

    13. மேட்டுபாளையம்-வி.பி.ஜெகநாதன்

    14. பல்லடம்-தங்கராஜ்

    15. கவுண்டம்பாளையம்-ஆர்.நந்தகுமார்

    16. திண்டுக்கல்-திருமலை பாலாஜி

    17.காட்டுமன்னார்கோவில்(தனி)-டாக்டர் எஸ்.பி.சரவணன்

    18. மயிலாடுதுறை - சி.முத்துக்குமரசாமி

    19. மன்னார்குடி-சிவகுமார் என்ற பேட்டை சிவா

    20. தஞ்சாவூர்-எம்.எஸ்.ராமலிங்கம்

    21. கந்தர்வகோட்டை (தனி)-புரட்சி கவிதாசன்

    22. காரைக்குடி-முத்துலட்சுமி

    23. மதுரை(தெற்கு)-ஏ.ஆர்.மகாலட்சுமி

    24. திருப்பரங்குன்றம்-ஆறுமுகம்பிள்ளை

    25. சிவகாசி-ஜி.பார்த்தசாரதி

    26. அருப்புக்கோட்டை-ஆர்.வெற்றிவேல்

    27. ராமநாதபுரம்-துரைகண்ணன்

    28. ஸ்ரீவைகுண்டம்-செல்வராஜ்
     
    29. தென்காசி-பி.செல்வி

    30. ராதாபுரம்-கனி அமுதா

    இவர்களுடன் சேர்த்து பா.ஜனதா கட்சி சார்பில் இதுவரை 84 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

     
    முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று விருத்தாசலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு, 13 அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
    சென்னை:

    சட்டமன்ற தேர்தல் மே 16-ந் தேதி நடைபெறவுள்ள நிலையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா நேற்று முன்தினம் சென்னையில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். தீவுத்திடலில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் அவர் 20 அ.தி.மு.க. வேட்பாளர்களை அறிமுகம் செய்து பேசினார்.

    இந்த நிலையில், 2-வது நாளாக இன்று (திங்கட்கிழமை) கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பங்கேற்று பேசுகிறார். இதற்காக அவர் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து மதியம் ஒரு மணிக்கு புறப்படுகிறார்.

    காரில் சென்னை நேப்பியர் பாலம் அருகே உள்ள ஐ.என்.எஸ். அடையார் வரும் ஜெயலலிதா, அங்கிருந்து ஹெலிகாப்டரில் விருத்தாசலம் நோக்கி புறப்படுகிறார். அங்கு ஜெயங்கொண்டம் நெடுஞ்சாலை கருவேப்பிலைகுறிச்சியில் உள்ள மைதானத்தில் ஹெலிகாப்டர் இறங்குவதற்காக ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது. அதில் மதியம் 2 மணிக்கு வந்து ஹெலிகாப்டரில் இறங்கும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அங்கிருந்து விருத்தாசலத்திற்கு காரில் செல்கிறார். அங்கு அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மேடையில் விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, கடலூர், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், பெரம்பலூர், குன்னம், அரியலூர், ஜெயங்கொண்டம், திட்டக்குடி ஆகிய 13 தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசுகிறார்.

    பின்னர், 3.15 மணிக்கு அங்கிருந்து புறப்படும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஹெலிகாப்டர் மூலம் சென்னை திரும்புகிறார். ஜெயலலிதா வருகையையொட்டி, விருத்தாசலத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    ×