search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்.கே.நகர் தொகுதியில் முதல் அமைச்சர் ஜெயலலிதா வேட்பு மனு தாக்கல் செய்தார்
    X

    ஆர்.கே.நகர் தொகுதியில் முதல் அமைச்சர் ஜெயலலிதா வேட்பு மனு தாக்கல் செய்தார்

    தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிடும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
    சென்னை:

    மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் 227 தொகுதிகளிலும், கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 7 தொகுதிகளிலும் போட்டியிடுகிறார்கள். கூட்டணி கட்சி வேட்பாளர்களும் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடுகிறார்கள். இதன் மூலம் 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னம் களத்தில் உள்ளது.

    அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 9-ந்தேதி சென்னையில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். தொடர்ந்து விருத்தாசலம், தர்மபுரி, அருப்புக்கோட்டை, காஞ்சிபுரம், சேலம், திருச்சி ஆகிய இடங்களில் நடந்த பிரச்சார கூட்டங்களில் பேசி அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

    இந்நிலையில், முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தான்போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதற்காக போயஸ் கார்டனில் இருந்து காரில் புறப்பட்ட ஜெயலலிதாவை வழிநெடுக திரண்டிருந்த தொண்டர்களும், பொதுமக்களும் வரவேற்றனர்.

    பலத்த வரவேற்புக்கிடையே, பர்மா பஜார், ராயபுரம் வழியாக சுமார் 12.20 மணியளவில் பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தை ஜெயலலிதா வந்தடைந்தார். அங்குள்ள தேர்தல் நடத்தும் அதிகாரி பத்மஜா தேவியிடம் அவர் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    பின்னர், வெளியே வந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அங்கு கூடியிருந்த தொண்டர்களைப் பார்த்து, வெற்றியை குறிப்பிடும் வகையில் இரட்டை விரலை காட்டி கை அசைத்தார்.

    தமிழ்நாடு முழுவதும் 226 தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வருகிற 28-ந்தேதி தங்கள் தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்கள்.

    வேட்பு மனு தாக்கல் செய்ய வருகிற 29-ந்தேதி கடைசி நாள் ஆகும். மனுக்கள் மீதான பரிசீலனை 30-ந்தேதி தொடங்குகிறது. வேட்பு மனுவை வாபஸ் பெற மே 2-ந்தேதி கடைசி நாள் ஆகும். 16-ம் தேதி வாக்குப்பதிவு முடிந்ததும், 19-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே வெளியாகிறது.
    Next Story
    ×