search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முந்தைய தி.மு.க. ஆட்சி ஒரு காட்டாட்சி: சேலம் பிரச்சார கூட்டத்தில் ஜெயலலிதா சரமாரி குற்றச்சாட்டு
    X

    முந்தைய தி.மு.க. ஆட்சி ஒரு காட்டாட்சி: சேலம் பிரச்சார கூட்டத்தில் ஜெயலலிதா சரமாரி குற்றச்சாட்டு

    முந்தைய திமுக ஆட்சி ஒரு காட்டாட்சி, தமிழகத்தை இருளில் மூழ்கடித்த ஆட்சி என்று சேலத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா சரமாரியாக சாடியுள்ளார்.
    சேலம்:

    சேலம் மகுடஞ்சாவடியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா உரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் சேலம், ஈரோடு, கோவை, நீலகிரி, மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 54 வேட்பாளர்களை ஆதரித்து ஜெயலலிதா பிரச்சாரம் மேற்கொண்டார்.

    பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா பேசியதாவது:

    எனது தலைமையிலான ஆட்சியில் தமிழகம் ஏற்றம் கண்டுள்ளது. நான் சொன்னதையும் செய்துள்ளேன், சொல்லாத பல திட்டங்களையும் செய்துள்ளேன். ஏழை, எளிய மக்களுக்கு எண்ணிலடங்கா திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன்.

    தொழில் முனைவோரை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். எனது ஆட்சியில் பெண்கள் மிகவும் பாதுகாப்புடன் உள்ளனர். இந்தியாவிலேயே மகளிர் பாதுகாப்பில் தமிழகம் தான் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.


    2011 தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு நான் இட்ட முதல் 7 உத்தரவில் 4 மகளிர் மேம்பாட்டிற்கானது தான். மகப்பேறு கால விடுப்பை 3 மாதங்களில் இருந்து 6 மாதங்களாக நீட்டித்தது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன்.

    மகளிருக்கு உள்ளாட்சி தேர்தலில் மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு அளிக்க 1996-ம் ஆண்டு சட்டம் கொண்டு வந்ததாக கருணாநிதி பொய் பரப்புரை செய்கிறார். அது 1994-ம் ஆண்டு எனது தலைமையிலான ஆட்சியில் தான் கொண்டு வரப்பட்டது.

    முந்தைய திமுக ஆட்சி ஒரு அராஜக ஆட்சி. காட்டாட்சி என்று கூட சொல்லலாம். திமுக ஆட்சியில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை. மக்களுக்கான நலன்கள் எதுவும் இல்லை. தமிழகத்தையே இருளில் மூழ்கடித்த ஆட்சி.

    வேலைக்கு சென்ற கணவர் உயிருடன் திரும்புவானா என்ற அச்சம் இருந்த காலம் திமுக ஆட்சி காலம். பள்ளிக்கு சென்ற குழந்தை வீடு திரும்புமா அல்லது கடத்தப்படுமா என்ற பதற்றம் இருந்த காலம். நிலம் வைத்திருப்பவர் தங்களது நிலம் எப்போது பறிபோகும் என்ற அச்சம் இருந்த காலம் திமுக ஆட்சி காலம்.

    அதிமுக ஆட்சியில் நிலங்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தமிழகம் எனது ஆட்சியில் அமைதி பூங்காவாக உள்ளது.

    காவல்நிலையத்தில் அரசியல்வாதிகள் செல்வதை தடுக்க கொண்டுவரப்பட்ட பரிந்துரையை கருணாநிதி நிராகரித்தார்.

    அதிமுக ஆட்சியில் காவல்துறையின் பணியில் யாரும் தலையிட முடியாது. முந்தைய திமுக ஆட்சியில் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டிருந்தன.

    தற்போது உள்ள நலத்திட்டங்கள் நீடித்திட புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்-ன் சின்னமாம் இரட்டை இலை சின்னத்தில் அனைவரும் வாக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×