என் மலர்
வழிபாடு
- சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
- ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு காலையில் சிறப்பு அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆனி-10 (செவ்வாய்க்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : சதுர்த்தசி இரவு 6.56 மணி வரை பிறகு அமாவாசை
நட்சத்திரம் : ரோகிணி நண்பகல் 12.52 மணி வரை பிறகு மிருகசீரிஷம்
யோகம் : அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தக்கோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்
சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி புறப்பாடு. சிதம்பரம், ஆவுடையார் கோவில் கோவில்களில் ஸ்ரீ சிவபெருமான் பவனி. திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தக்கோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீஆண்டாளுக்குத் திருமஞ்சனம்.
திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுத வல்லித்தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம். ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு காலையில் சிறப்பு அபிஷேகம். திருநறையூர் ஸ்ரீ சித்த நாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை, ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-இரக்கம்
ரிஷபம்-இன்பம்
மிதுனம்-புகழ்
கடகம்-பக்தி
சிம்மம்-மேன்மை
கன்னி-பெருமை
துலாம்- நிம்மதி
விருச்சிகம்-நிறைவு
தனுசு- கண்ணியம்
மகரம்-ஆர்வம்
கும்பம்-ஆதரவு
மீனம்-உழைப்பு
- கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் உள்ளது.
- விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 1-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.
சிதம்பரம்:
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திரு மஞ்சன திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் உள்ளது.
இக்கோவிலில் ஆண்டு தோறும் ஆனி திருமஞ்சன விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஆனி திருமஞ்சன திருவிழா இன்று (திங்கட்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பொது தீட்சிதர்கள் கமிட்டி செயலாளர் சிவசுந்தர தீட்சிதர் கொடியேற்றி பூஜைகளை நடத்தினார்.
நாளை (24-ந் தேதி) வெள்ளி சந்திரபிறை வாகனத்தில் சாமி வீதி உலாவும், 25-ந் தேதி தங்க சூரிய பிறை வாகனத்தில் சாமி வீதி உலா நடக்கிறது.
27-ந் தேதி வெள்ளி ரிஷப வாகனம், 28-ந் தேதி வெள்ளி யானை வாகனம், 29-ந் தேதி தங்க கைலாச வாகனத்தில் சாமி வீதி உலா நடக்கிறது. 30-ந் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதி உலா நடக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 1-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. அன்று இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடக்கிறது.
2-ந் தேதி அதிகாலை காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாம சுந்தரி சமேத நடராஜருக்கு மகா அபிஷேகம், 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜை நடக்கிறது.
அன்று மதியம் 3 மணிக்கு மேல் ஆனிதிருமஞ்சன தரிசனம், ஞானகாச சித்சபா பிரவேசம் நடக்கிறது. 4-ந் தேதி தெப்ப உற்சவத்துடன் விழா முடிவடைகிறது.
விழா ஏற்பாடுகளை பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.
- கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீகருடாழ்வாருக்குத் திருமண சேவை.
- சிதம்பரம் ஆவுடையார் கோவில் கோவில்களில் ஸ்ரீசிவபெருமான் உற்சவம் ஆரம்பம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆனி-9 (திங்கட்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: திரயோதசி இரவு 9.06 மணி வரை. பிறகு சதுர்த்தசி.
நட்சத்திரம்: கார்த்திகை பிற்பகல் 2.18 மணி வரை. பிறகு ரோகிணி.
யோகம்: மரண, அமிர்தயோகம்
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
திருவான்மியூர், மயிலாப்பூர், பெசன்ட்நகர் சிவன் கோவில்களில் சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம்
இன்று பிரதோஷம். மாத சிவராத்திரி, சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீகருடாழ்வாருக்குத் திருமண சேவை. சிதம்பரம் ஆவுடையார் கோவில் கோவில்களில் ஸ்ரீசிவபெருமான் உற்சவம் ஆரம்பம். திருத்தணிகை ஸ்ரீசுப்பிரமணியர் தெப்பம். திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் பவனி. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத்சுந்தரகுசாம்பாள் சமேத ஸ்ரீமகாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீகற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரர் திருவான்மியூர் ஸ்ரீதிரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீமருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீரத்தினகிரீஸ்வரர் கோவில்களில் காலையில் சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. திருச்சேறை ஸ்ரீசாரநாதர் திருமஞ்சன சேவை. கோவில்பட்டி ஸ்ரீபூவண்ணநாதர் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆதாயம்
ரிஷபம்-துணிவு
மிதுனம்-உழைப்பு
கடகம்-வரவு
சிம்மம்-நட்பு
கன்னி-களிப்பு
துலாம்- வெற்றி
விருச்சிகம்-லாபம்
தனுசு- புகழ்
மகரம்-ஆசை
கும்பம்-பரிவு
மீனம்-பண்பு
- முருகப் பெருமானுக்குரிய கந்த சஷ்டி கவசம், வேல் மாறல் முதலிய கவசங்களை பாராயணம் செய்ய வேண்டும்.
- சிவபெருமான் அபிஷேகப் பிரியர்.
சிவ பெருமானுக்குரிய மிக முக்கியமான விரத நாட்களில் ஒன்று பிரதோஷ வழிபாடு. ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை பிரதோஷ விரதம் வரும். அந்த வகையில், நாளை ஆஷாட கிருஷ்ண பக்ஷத்தில் வரும் பிரதோஷ விரதம் திங்கட்கிழமை வருவதால் இது சோம வார பிரதோஷ விரதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் சிவபெருமானை வழிபடுவதால் ஆன்மிக வளர்ச்சி, அமைதி மற்றும் செல்வம் பெருகும். ஒவ்வொரு மாதமும் திரயோதசி திதியில் பிரதோஷ விரதம் வருகிறது. இந்த நாளில் சிவபெருமானை வழிபடுவது மிகவும் சிறந்தது.
சனிக்கிழமையில் வரும் சனிப்பிரதோஷம் எப்படி கிடைப்பதற்கு அரிய பலன்களை தரக் கூடிய மிக முக்கியமான பிரதோஷமோ, அதே போல் திங்கட்கிழமையில் வரும் சோமவார பிரதோஷமும் மிகவும் முக்கியமானதாகும். சிவ பெருமானுக்கும், சந்திரனுக்கும் உரிய திங்கட்கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும்.
அதிலும் நாளை சோமவார பிரதோஷம், ஆனி மாத சிவராத்திரி மற்றும் முருகப் பெருமானுக்குரிய கிருத்திகை நட்சத்திரத்துடன் இணைந்து வருகிறது. இது மிக மிக சிறப்பான ஒன்றாகும்.
கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்துவருவது மேலும் ஒரு விசேஷம். கிருத்திகை முருகப் பெருமானின் நட்சத்திரம். முருகனும் சிவபெருமானும் வேறுவேறல்ல. சிவபெருமானின் அக்னி வடிவமே முருகக் கடவுள். முருகக் கடவுள் தேவர்களின் துயர்தீர்க்க அவதரித்தவர். கருணையே வடிவான வேலினைக் கையிலே கொண்டவர். அதோடு தகப்பன் சாமியாக சுவாமிமலையில் அமர்ந்து அருள்பாலிப்பவர். எனவே நாளை விரதம் இருந்து சிவபெருமானையும் முருகப் பெருமானையும் கட்டாயம் வழிபட வேண்டும். முருகப் பெருமானுக்குரிய கந்த சஷ்டி கவசம், வேல் மாறல் முதலிய கவசங்களை பாராயணம் செய்ய வேண்டும்.
சிவபெருமான் அபிஷேகப் பிரியர். அவருக்கு பிரதோஷத்தன்று கறந்த பசும்பால் கொண்டு அபிஷேகம் செய்து வழிபட்டால் சிறப்பான பலனைப் பெறலாம். இல்லையென்றால் இளநீர் அபிஷேகம் செய்வது நல்லது. இறைவன் இயற்கையை விரும்பக் கூடியவன். எனவே இயற்கையான வில்வ இலை அர்ச்சனையும் சிவபெருமானை மகிழ்ச்சிப்படுத்தும். இது தவிர தும்பைப் பூ மாலை அணிவித்து பிரதோஷம் அன்று, சிவனை வழிபட்டால் சகல தோஷங்களும் விலகும்.
பிரதோஷ தினத்தில் அதிகாலையில் நீராடி திருநீறணிந்து சிவ நாமம் ஆன நமசிவாய ஓதி உபவாசம் இருக்க வேண்டும். அன்று காலை முதல் பிரதோஷம் முடியும் வரை உணவு தவிர்த்து பிரதோஷ தரிசனம் முடித்து பிரசாதம் உண்டு விரதம் முடிக்க வேண்டும். பின்னர் இரவு உணவு சாப்பிடலாம். இப்படி பதினோறு பிரதோஷங்கள் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் சிவனருள் கிடைக்கும்.
பிரதோஷ காலம் என்பது சூரியன் அஸ்தமனத்திற்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும் சூரியன் அஸ்தமனத்திற்கு பின் மூன்றே முக்கால் நாழிகையும் ஆகும். ஒருநாழிகை என்பது 24 நிமிடங்கள். ஒரு மணிக்கு இரண்டரை நாழிகைகள். ஆக சராசரியாக மாலை 4 மணியில் இருந்து இரவு 7.30 வரை பிரதோஷ காலம் உண்டு. சௌகரியத்திற்காக மாலை 4.30 முதல் 6.00வரை என சொல்லப்படுகிறது.
பிரதோஷ விரதம் மேற்கொண்டால் திருமணம் கைகூடும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், வறுமைவிலகும், நோய்கள் நீங்கும், சகல காரியங்களில் வெற்றிகிடைக்கும், சகல சௌபாக்கியங்களையும் தரக்கூடியது பிரதோஷ விரதம்.
நமசிவாயம் சொல்லுவோம். நல்லனவற்றையெல்லாம் பெறுவோம். நமசிவாயம்... நமசிவாயம்... நமசிவாயம்!
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.
- திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆனி-8 (சனிக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : துவாதசி இரவு 11.25 மணி வரை பிறகு திரயோதசி
நட்சத்திரம் : பரணி பிற்பகல் 3.52 மணி வரை பிறகு கார்த்திகை
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
கார்த்திகை விரதம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை
இன்று கார்த்திகை விரதம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன், இருக்கண்குடி ஸ்ரீ மாரியம்மன், திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமான் பால் அபிஷேகம், திருத்தணிகை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி உற்சவம். சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சன சேவை.
திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக் குமார சுவாமிக்கும், அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமி அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-லாபம்
ரிஷபம்-சுகம்
மிதுனம்-நட்பு
கடகம்-கடமை
சிம்மம்-வெற்றி
கன்னி-போட்டி
துலாம்- வரவு
விருச்சிகம்-தாமதம்
தனுசு- தெளிவு
மகரம்-நன்மை
கும்பம்-ஆர்வம்
மீனம்-பண்பு
- அழகரின் அடிகளை வருடிக்கொண்டு கடைசியாக ஏரிகளில் கலந்து வயல்களில் பாய்கிறது.
- அழகருடைய திருமஞ்சனத்துக்கு மட்டும் தினந்தோறும் 2 மைல் அப்பால் உள்ள நூபுர கங்கை தீர்த்தம் கொண்டு வரவேண்டும்.
மதுரை அருகே உள்ள பழமுதிர்சோலை முருகன் கோவிலில் இருந்து சிறிது தூரத்தில் இருக்கிறது, வேட்டுவர் குலத்தெய்வமான ராக்காயி அம்மன் கோவில். இங்கு நூபுர கங்கை தீர்த்தம் விழுகிறது. இது ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இதன் உற்பத்தியிடம் எவ்வளவு ஆராய்ச்சிகள் செய்த போதிலும் இன்றுவரை கண்டுப்பிடிக்க முடியவில்லை.
யானை துதிக்கைப் போல பருமனாக கோமுகியின் வழியாக மாதவி மண்டபத்தில் வந்து விழுகின்றது. இத்தீர்த்தத்தில் இரும்பு சத்தும், தாமிர சத்தும் அதிகம் இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் சொல்கிறது. இந்த தீர்த்தம் நோய்கள் தீர்க்கும் சக்திக் கொண்டதால், இங்கு நீராடினால் தீராத பல நோய்களும் நீங்குவதாக நம்பப்படுகிறது. இத்தீர்த்தம் தெற்கு நோக்கி பாயும்போது 'சிலம்பாறு' என்று வழங்கப்படுகிறது.
அழகரின் அடிகளை வருடிக்கொண்டு கடைசியாக ஏரிகளில் கலந்து வயல்களில் பாய்கிறது. ஆற்று நீரின் ருசியும், ஆற்று நீரால் விளையும் தானியங்களின் ருசியும் மிகுந்திருப்பதால் இதற்கு 'தேனாறு' என்றும் பெயர்.
இங்கிருக்கும் "மாதவி மண்டபத்தில் அமர்ந்துதான் இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை எழுதியதாக செவிவழி செய்தியும் உண்டு. இந்தத் தீர்த்தத் தண்ணீரில்தான் புகழ் பெற்ற அழகர்கோவில் பிரசாதமான சம்பா தோசை தயார் செய்யப்படுகிறது.
இங்கிருந்து ஒன்றரை மைல் தூரத்தில் இருக்கிறது, அனுமார் தீர்த்தம். இங்கே ஓர் அனுமன் கோவில் இருக்கிறது. இதற்குச் சற்று மேல், கருட தீர்த்தம், கருடர் கோவில் இரண்டும் இருக்கின்றன. அதன் பக்கத்தில் பாண்டவ தீர்த்தமும், கோவிலும் இருக்கிறது. மலையில் வட பக்க சரிவில், பார்த்த உடனேயே பாவத்தை போக்கக் கூடிய பெரிய அருவி தீர்த்தம் உள்ளது. அழகர் கோவிலுக்குச் சிறிது வடக்கே உள்ளது உத்தர நாராயண வாவி தீர்த்தம். இந்த தீர்த்தத்தினால் தான் கோவில் பரிவார தேவதைகளுக்கு அபிஷேகமும், சமையலும் செய்ய வேண்டும் என்பது ஐதீகம்.
அழகருடைய திருமஞ்சனத்துக்கு மட்டும் தினந்தோறும் 2 மைல் அப்பால் உள்ள நூபுர கங்கை தீர்த்தம் கொண்டு வரவேண்டும். சைத்ரோற்சவ காலத்தில் அழகர் மதுரைக்கும் வண்டியூருக்கும் சென்று தங்கி இருக்கும்போது கூட இந்தத் தீர்த்தமே கொண்டு வரப்படுகிறது. வேறு தீர்த்தத்தில் அழகரை நீராட்டினால் அவர் உருவம் கருத்து விடுகிறது என்பதாலேயே இப்படி செய்யப்படுகிறது. இந்த விநோதத்தின் ரகசியம் இன்றுவரை ஒருவருக்கும் புலப்படவில்லை.
- திருவண்ணாமலை ஸ்ரீ ரமணாசிரமத்தில் ஸ்ரீ மாதூர் பூதேஸ்வரர் பூஜை.
- திருஇந்தளூர் ஸ்ரீ பரிமளரெங்கராஜர் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆனி-7 (சனிக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : ஏகாதசி நள்ளிரவு 1.52 மணி வரை பிறகு துவாதசி
நட்சத்திரம் : அசுவினி மாலை 5.30 மணி வரை பிறகு பரணி
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சர்வ ஏகாதசி, திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம்
இன்று சர்வ ஏகாதசி. திருவண்ணாமலை ஸ்ரீ ரமணாசிரமத்தில் ஸ்ரீ மாதூர் பூதேஸ்வரர் பூஜை. நெல்லை சமீபம் இரட்டை திருப்பதி ஸ்ரீசீனிவாசன், தேவர்பிரான், அலமேலு மங்கை பத்மாவதி தாயார், செந்தமாமரை கண்ணன் திருமஞ்சனம். திருத்தணிகை ஸ்ரீ சுப்பிரமணியர் திருக்குளம் வலம் வரும் காட்சி. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம்.
மன்னார்குடி ஸ்ரீ ராஜ கோபால சுவாமி, திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்த சாரதிப் பெருமாள், கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சனம். திருஇந்தளூர் ஸ்ரீ பரிமளரெங்கராஜர் புறப்பாடு. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமான் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-வெற்றி
ரிஷபம்-சாந்தம்
மிதுனம்-முயற்சி
கடகம்-அமைதி
சிம்மம்-இரக்கம்
கன்னி-நலம்
துலாம்- உயர்வு
விருச்சிகம்-இன்பம்
தனுசு- நன்மை
மகரம்-புகழ்
கும்பம்-அன்பு
மீனம்-ஆசை
- சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆனி-6 (வெள்ளிக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : நவமி காலை 8.41 மணி வரை பிறகு தசமி பின்னரவு 3.33 மணி வரை பிறகு ஏகாதசி.
நட்சத்திரம் : ரேவதி இரவு 7.08 மணி வரை பிறகு அசுவினி.
யோகம் : அமிர்தயோகம்
ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு ஊஞ்சல் சேவை
சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். கலிக்காம நாயனார் குருபூஜை. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலையில் திருமஞ்சனம், மாலையில் ஊஞ்சல் சேவை. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் தங்கப்பல்லக்கில் புறப்பாடு. பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு.
லால்குடி ஸ்ரீபிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீபெருதிருப்பிராட்டியார் சமேத ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் ஸ்ரீசுந்தரவல்லித்தாயார் புறப்பாடு. இருக்கன்குடி மாரியம்மன் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீபாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம். கரூர் தான்தோன்றி மலை ஸ்ரீகல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சனம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-போட்டி
ரிஷபம்-கவனம்
மிதுனம்-தேர்ச்சி
கடகம்-உயர்வு
சிம்மம்-செலவு
கன்னி-வரவு
துலாம்- முயற்சி
விருச்சிகம்-பரிவு
தனுசு- பாராட்டு
மகரம்-சிறப்பு
கும்பம்-சிந்தனை
மீனம்-வெற்றி
- சீதாதேவி பிரதிஷ்டை செய்த 106 சிவலிங்கங்களும் மூன்று வரிசையில் வடக்குப் பகுதியில் அழகாக அமைந்து உள்ளன.
- பொதுவாக சிவன் சன்னிதி எதிரே நந்தி மட்டுமே இருக்கும்.
தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் அமைந்துள்ளது, '108 சிவாலயம்' என அழைக்கப்படும் ராமலிங்க சுவாமி திருக்கோவில். இந்தக் கோவில் 'கீழை ராமேஸ்வரம்' என்று அழைக்கப்படுகிறது. ராமபிரான் சீதாப்பிராட்டியுடனும், லட்சுமணனுடனும் இத்தலத்திற்கு வந்ததாகவும், இங்கு தன் தோஷம் நீங்க 108 சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகவும் தல வரலாறு கூறுகிறது. எனவே, இத்திருக்கோவில் மூலவர் 'ராமலிங்க சுவாமி' என்றும், அம்பாள் 'பர்வதவர்த்தனி' என்றும் அழைக்கப்படுகின்றனர். மேற்கு நோக்கிய கோவில்களில் வேண்டுதல் வைத்தால் உடனே நிறைவேறும் என்பது நம்பிக்கை. இத்தலம் மேற்கு நோக்கிய தலம் ஆகும். இத்தலத்தில் உள்ள 108 லிங்கங்களும் மேற்கு நோக்கியே அமைந்துள்ளன. இக்கோவிலில் தரிசனம் செய்தால் 108 சிவன் கோவில்களைத் தரிசித்த புண்ணியம் கிடைக்கும்.

தல புராணம்
பறவைகள் முதல் அனைத்து உயிர்களுக்கும் நாம் துன்பம் செய்யும்போது நமக்கு அவைகளின் சாபம் வந்து சேர்கிறது. நாம் செய்ய வேண்டிய கடமைகளில் இருந்து விலகும்போது நமக்கு தோஷம் ஏற்படுகிறது. உதாரணமாக பித்ரு காரியம் போன்றவைகளை உரிய காலங்களில் முறைப்படி செய்யாவிட்டால் தோஷம் ஏற்படுகின்றது. நாம் அன்றாடம் செய்யும் செயல்களிலிருந்தும் பல்வேறு விதமான பாவங்கள் நமக்கு ஏற்பட்டு, பல பிறவிகளாக நம்மைத் தொடர்கின்றன. இத்தகைய சாப, தோஷ பாவங்களை நீக்கும் தலமாக பாபநாசம் 108 சிவாலயம் விளங்கி வருகிறது. தென்னகத்தில் மிகப் பெரிய (6 அடி உயரம்) சூரிய பகவான் சிலையும் கோவிலின் கிழக்குப்புறத்தில் அமைந்துள்ளது. கோவில் முகப்பில் சூரிய தீர்த்தம் உள்ளது.
ராம - ராவண யுத்தத்தில் பலரைக் கொல்ல நேர்ந்ததால் ராமபிரானுக்கு தோஷம் ஏற்பட்டது. தோஷம் நீங்க ராமேஸ்வரத்தில் பூஜை செய்தபின் ராமபிரான் கீழ்த்திசை நோக்கி சீதா தேவியுடனும் லட்சுமணனுடனும் வந்தார். அப்போது குடமுருட்டி ஆற்றின் கரையில் மரங்கள் அடர்ந்த ஒரு சோலையைக் கண்டார். அங்குள்ள ஒரு உயர்ந்த வில்வ மரத்தடியில் ராமபிரான் அமர்ந்தபோது தன்னை இன்னும் ஏதோ ஒரு தோஷம் தொடர்வதையும், அதனால் தனக்கு நிம்மதியின்மை ஏற்படுவதையும் உணர்ந்தார்.
கர, தூஷன் என்னும் அரக்கர்களைக் கொன்ற தோஷம் ராமேஸ்வரத்தில் பூஜை செய்த பின்பும் தன்னைத் தொடர்வதை தனது ஞான திருஷ்டியால் அறிந்தார். அதைப் போக்க சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து சிவ பூஜை செய்வது அவசியம் என்பதையும் அறிந்தார். இறைவனே ஆனாலும் மனிதப் பிறவி எடுத்தால் அதற் குரிய சாப, தோஷங்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்பதற்கு அரிய உதாரணம் இது.
ராமபிரான் அனுமனை அழைத்தார். தான் பூஜை செய்ய காசியில் இருந்து சிவலிங்கம் கொண்டு வருமாறு உத்தரவிட்டார். ராமரின் உத்தரவை சிரமேற்கொண்டு அனுமனும் காசிக்குப் புறப்பட்டார். அங்கிருந்து அவர் சிவலிங்கம் கொண்டு வருவதில் சில தடைகள் ஏற்பட்டு கால தாமதம் ஆனது.
அப்போது சீதா பிராட்டி, அருகிலிருந்த குடமுருட்டி ஆற்றின் மணலில் அமர்ந்து விளையாட்டாக சிவலிங்கங்களை உருவாக்கத் தொடங்கினார். இவ்வாறு 107 சிவலிங்கங்களை அவர் உருவாக்கிவிட்டார். அற்புதமாக அமைந்த அந்த சிவலிங்கங்களைப் பார்த்த ராம பிரான், தனது தேவியை பாராட்டினார். உடனே அந்த சிவலிங்கங்களுக்கு பூஜை செய்யத்தொடங்கிவிட்டார். அப்போது காசியில் இருந்து ஒரு சிவலிங்கத்தைக் கொண்டு வந்த அனுமன், வருத்தமுற்று தான் கொண்டு வந்த சிவலிங்கத்தை என்ன செய்வது என யோசித்தார்.
அப்போது அனுமனுக்கு அருளிய ராமபிரான், கோவிலுக்கு தென்புறத்தில் அந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்யுமாறு உத்தரவிட்டார். அதன்படி தென்புறத்தில் அமைக்கப்பட்ட அந்த லிங்கத்திற்கு 'அனுமந்த லிங்கம்' என்று பெயரிட்டார்.
சீதாதேவி பிரதிஷ்டை செய்த 106 சிவலிங்கங்களும் மூன்று வரிசையில் வடக்குப் பகுதியில் அழகாக அமைந்து உள்ளன. 107-வது லிங்கம் மூலவராக ராமலிங்க சுவாமியாக காட்சி தருகிறது. 108-வது சிவலிங்கமாக காசியிலிருந்து அனுமன் கொண்டு வந்த லிங்கம், 'அனுமந்த லிங்கம்' என்று வழங்கப்பட்டு வருகிறது. '107 லிங்கங்களையும் தரிசனம் செய்து, 108-வதாக அனுமந்த லிங்கத்தையும் தரிசனம் செய்தால்தான் சிவதரிசனம் செய்த பலன் கிடைக்கும்' என்று ராமபிரான் அருளியதால் அனுமனும் தன் வருத்தம் நீங்கி மகிழ்ச்சியுற்றார். மூலஸ்தானம் தவிர்த்து மற்ற 107 லிங்கங்களுக்கும் பக்தர்கள் தாங்களே நேரடியாக பூத்தூவி வழிபடலாம்.
கோவில் அமைப்பு
ராமர், லட்சுமணர், சீதை மற்றும் ஆஞ்சநேயர் சிவலிங்க பூஜை செய்தது புடைப்புச் சிற்பமாக உள்ளது. ராமாயணத்தோடு தொடர்புடைய கோவில் என்பதால் பிரகாரத்தில் ஆஞ்சநேயர், சுக்ரீவர் வணங்கியபடி நிற்கும் சிலைகள் உள்ளன.
பிரகாரத்தில் வள்ளி - தெய்வானையுடன் முருகப் பெருமான் காட்சியளிக்கிறார். மேலும் காசி விசாலாட்சி, அன்னபூரணி ஒரு சன்னிதியிலும், கால பைரவர், சனீஸ்வரர், சூரிய பகவான் ஆகியோர் மற்றொரு சன்னிதியிலும் காட்சி தருகிறார்கள். எதிர்மறை கிரகங்களான சூரிய பகவானும், சனீஸ்வரரும் அருகருகில் இருப்பதால் சனி தோஷம் உள்ளவர்கள் இந்த சன்னிதியில் வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
ராமலிங்க சுவாமி சன்னிதி விமானம் ராமேஸ்வரம் கோவில் அமைப்பிலும், அனுமந்த லிங்க சன்னிதி விமானம் காசி விஸ்வநாதர் கோவில் அமைப்பிலும் உள்ளது. எனவே காசி, ராமேஸ்வரம் செல்ல முடியாதோர் இங்கு வந்து வழிபடலாம்.
பொதுவாக சிவன் சன்னிதி எதிரே நந்தி மட்டுமே இருக்கும். ஆனால் இங்கு நந்தியுடன் காமதேனு பசுவும் இருக்கிறது. காமதேனு சிலை கழுத்தில் சலங்கைகள் அணிந்து சிவனை நேராக பார்த்துக் கொண்டிருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. அகத்தியரின் ஆலோசனைப்படி இந்த கோவிலில் ராமபிரான் காமதேனு செய்தார். அதற்கு அகத்தியரே பிரதோஷ பூஜை செய்ததாக தல வரலாறு கூறுகிறது. தற்போதும் பிரதோஷ வேளையில் அகத்தியர் இங்கு பூஜை செய்வதாக ஐதீகம்.

மகா சிவராத்திரிப் பெருவிழா
இத்தகைய சிறப்புமிக்க பாபநாசம் தலத்தில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் மகா சிவராத்திரி, பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் 108 சிவலிங்கங்களையும் 108 முறை வலம் வரும் நிகழ்ச்சி பக்திப் பரவசத்துடன் நடைபெறும்.
சிவராத்திரியன்று 108 லிங்கங்களுக்கும் ருத்ர மந்திரம் சொல்லி நான்கு கால பூஜை நடைபெறுகிறது. மேலும் ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
சனி தோஷம் விலக, பித்ருதோஷம் நீங்க, அறியாமல் செய்த பாவம் விலக என சகல தோஷங்களுக்கும் இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது. தங்களது வேண்டுதல் நிறைவேறியவுடன் பக்தர்கள் சுவாமிக்கு தேன், பால் கொண்டு அபிஷேக ஆராதனை செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக் கடன்களை செலுத்துகின்றனர்.
கோவில், காலை 6.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்திருக்கும்.
அமைவிடம்
கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் 15 கிலோமீட்டர் தொலைவில் பாபநாசம் உள்ளது. பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே கோவில் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்தும், தஞ்சாவூரில் இருந்தும் பேருந்துகள் உள்ளன.
- எது எப்படி இருந்தாலும் குலதெய்வத்தை வழிபடாமல் எத்தனை கோவில்களுக்கு சென்றாலும் பலன் குறைவு தான்.
- குலதெய்வம் என்பது வாழையடி வாழையாக, தலைமுறை தலைமுறைகளாக நம் முன்னோர்கள் வழிபட்டு வருவது.
குலதெய்வம் என்பது நம் தாய் தந்தையைப் போல நம்கூடவே இருந்து வழிகாட்டும் அருட்சக்தியாகக் கருதப்படுகிறது. நமக்கு ஒரு கஷ்டம் என்றால் குலதெய்வம் தான் உடனே முன் வந்து காப்பாற்றும், மற்ற தெய்வங்கள் எல்லாம் அடுத்துதான் வரும் என கிராமங்களில் சொல்வார்கள்.
குழந்தை பிறந்தவுடன் அதற்கு பெயர் வைப்பது முதல் மொட்டை அடித்து முடி காணிக்கை செலுத்தி காது குத்துவது வரை அனைத்தும் குலதெய்வத்தின் கோவிலில்தான். குடும்பத்தில் எந்த சுபநிகழ்ச்சி நடந்தாலும், குலதெய்வத்தை முதலில் வணங்கிய பிறகே அதற்கான பணிகளைத் தொடங்குவது வழக்கம். சுப நிகழ்ச்சிகளை தொடங்குபவர்கள் உடனே குலதெய்வம் கோவிலுக்கு செல்ல முடியாவிட்டால் குல தெய்வத்தை நினைத்து காணிக்கையை ஒரு மஞ்சள் துணியில் முடிந்து வைத்து, குலதெய்வம் கோவிலுக்கு செல்லும்போது செலுத்தி விடுவது வழக்கம்.
குலதெய்வம் என்பது நமது முன்னோர்களினால் தலைமுறை தலைமுறையாக வழிபட்டு வருவது. ஆகவே, எப்படியாவது நமது குலதெய்வத்தை அறிந்து வழிபடுதல் அவசியம்.
குலதெய்வ வழிபாடு மிக முக்கியமான ஒரு வழிபாடாகும், பலர் தங்களுக்கு விருப்பமான தெய்வம் (இஷ்ட தெய்வம்) ஒன்றை தொடர்ந்து வழிபட்டு வருவார்கள். உதாரணமாக, திருப்பதி வெங்கடாசலபதி கோவில் போன்ற பிரபல கோவில்களுக்கு மட்டுமே செல்வது பலர் வழக்கம். இவர்களில் சிலர் வேறு கோவில்களுக்கு கூட செல்வது கிடையாது.
எது எப்படி இருந்தாலும் குலதெய்வத்தை வழிபடாமல் எத்தனை கோவில்களுக்கு சென்றாலும் பலன் குறைவு தான். மூலவரை வழிபடாமல் அங்கிருக்கும் சுவர் சித்திரங்களை வழிபட்டு வருவது போல் தான் பிற வழிபாடுகளை மட்டும் செய்வது. குலதெய்வம் என்பது வாழையடி வாழையாக, தலைமுறை தலைமுறைகளாக நம் முன்னோர்கள் வழிபட்டு வருவது. அய்யனார், சுடலை மாடன் என்று பல ( கிராம) தெய்வங்கள் உண்டு. பல ஊர்களில் அங்கு வலுவான ஒரு காரணத்தால் மரணமடைந்தவரின் பெயரில் கோவில் ஒன்றை எழுப்பி அதை அவ்வூரின் ஒரு சாரார் குலதெய்வமாக ஏற்று வழிபடுகின்றனர். பெரும்பாலான குல தெய்வங்களுக்கு பின்னணியில் இம்மாதிரி ஒரு நிகழ்வு இருக்கும்.
பெருங்கோவில்களுக்கும் இவற்றுக்கும் உள்ள முக்கிய வித்தியாசம் என்னவென்றால்... இம் மாதிரி குலதெய்வ கோவில்கள் குறிப்பிட்ட சில சமூகம் அல்லது குடும்பங்களின் பராமரிப்பில் அவர்களுக்காகவே நிர்மாணிக்கப்பட்டு இயங்கும். பங்குனி உத்திரம் போன்ற முக்கிய நாட்களில் மட்டுமே குலதெய்வ கோவில்களில் வழிபாடுகளும் விழாக்களும் மிக சிறப்பாக நடைபெறும். பொங்கல், கிடா வெட்டு, பலி என்று விழா அமர்க்களப்படும். மற்ற நாட்களில் கேட்பாரின்றி இருக்கும்.

ஆனாலும் அந்த சாமியை குலதெய்வமாகக் கொண்டவர்கள் எந்த முக்கிய நிகழ்வாக இருந்தாலும் அன்று குலதெய்வ கோவில் பூசாரியைத் தேடிப்பிடித்து கோவிலைத்திறந்து வழிபட்டு அதன் பின்னரே அந்த வேலையைத் தொடங்குவார்கள். அதுவே முறையானதாகும். அந்த வகையில் நாளை குலதெய்வ வழிபாடு முக்கியமானதாக கருதப்படுகிறது.
உங்கள் குலதெய்வத்தை இதுவரை வழிபடாமல் இருந்தால், உடன் வழிபடத் தொடங்குங்கள், குலதெய்வம் எது என்று தெரியாமல் இருந்தால், ஊரில் வயதான பெரியவர்களிடம் கேளுங்கள், சொல்லி விடுவார்கள். அப்படியும் தெரியாவிட்டால் பலரிடம் விசாரித்தால் எப்படியாவது தெரிந்து விடும்.
குல தெய்வத்திற்காக நடத்தப்படும் பிரத்யேக வழிபாட்டு முறை, மற்றும் முக்கிய வழிபாட்டு பொருளையும் தெரிந்து கொள்ளுங்கள். அங்கு செல்லும் போது மறக்காமல் அந்த பொருளை வாங்கிச் செல்லுங்கள். உதாரணமாக ஒரு சில கோவில்களில் தீபத்திற்கு நல்லெண்ணெய், ஏன் சாராயம் கூட இருக்கலாம். தவறாது வாங்கிச் சென்று படையுங்கள்.
குலத்தைக் காப்பதால் தான் குலக்கடவுள், மற்ற கடவுள்களுக்கு இல்லாத சிறப்பு குல தெய்வத்திற்கு மட்டும் தான் உண்டு. குலம் தழைக்க வேண்டும். முன்னோர் சாந்தி அடைய வேண்டும். பின்னோர் செழிக்க வேண்டும் என்று நாம் விரும்பினால் தவறாமல் நாளை குலதெய்வத்தை வழிபட வேண்டும். குலதெய்வத்தின் அருள் நம் மீது பட்டால் துன்பங்கள் பறந்து ஓடி விடும். பல பிரச்சனைகளில் சிக்கி உழல்பவர்கள் பரிகாரம் போன்ற முயற்சிகளில் இறங்கும் முன் குல தெய்வத்தை நேரில் சென்று வழிபட்டு அதன் பின்னர் தொடங்கவும். அப்படி செய்தால் தான் பரிகார பூஜைகளில் வெற்றி உண்டாகும்.
குல தெய்வத்தை நினைக்காமல், பூஜிக்காமல் நாம் தொடங்கும் எந்த ஒரு செயலும் முழுமை பெறாது. குல தெய்வ வழிபாட்டை மறந்து விட்டால் திருமண தடை, குழந்தை பாக்கியம் கிடைக்காமல் இருப்பது, கடன், நோய், குடும்பத்துக்குள் பிரச்சனை என்று குழப்பமும், மன அமைதியின்மையும் ஏற்பட்டு விடும்.
இத்தகைய பிரச்சனைகளில் இருந்து நாம் விடுபட வேண்டுமானால், தொடர்ந்து குல தெய்வ வழிபாட்டை செய்ய வேண்டும். குல தெய்வத்துக்கு உரிய படையல் போட்டு திருப்தி ஏற்படுத்த வேண்டும்.
குல தெய்வம் மகிழ்ச்சி அடைந்தால், உங்கள் குலமே செழிக்கும். தினம், தினம் குல தெய்வத்தை வணங்குபவர்களுக்கு எந்த குறையும் வராது. குதூகலம்தான் வரும்.
பூர்வீக ஊரில் இருப்பவர்களுக்கு குல தெய்வத்தை வழிபட எந்த சிக்கலும் இருக்காது. ஆனால் ஊரை விட்டு வெளியேறி நகரங்களில் குடியேறி விட்டவர்களுக்கு, குல தெய்வ வழிபாடு செய்வது என்பது அரிதான ஒன்றாகும். என்றாலும் நாளை உங்கள் வீட்டில் குலதெய்வ வழிபாடு செய்யுங்கள்.

நீங்கள் எத்தனை கடவுள்களை வணங்கினாலும் சரி.... குல தெய்வத்தை வழிபடா விட்டால் குண்டுமணி அளவுக்கு கூட பிரயோஜனம் இல்லை. ஆகையால் குல தெய்வத்தை அவசியம் வழிபடுங்கள். யார் ஒருவர் குல தெய்வத்தை விடாமல், ஐதீகத்துடன் வழிபாடு செய்து வருகிறாரோ, அவரை எந்த கிரகமும் நெருங்கி தொல்லை கொடுக்காது. அதுதான் குல தெய்வ வழிபாட்டின் மகிமை.
அதனால் தான் "குருவை மறந்தாலும் குல தெய்வத்தை மறவாதே..."
"குலதெய்வத்தைக் கும்பிட்டு கும்மியடி..." என்று சொல்வார்கள்.
எனவே உங்கள் குலதெய்வத்தை வழிபடாதிருந்தால், உடன் வழிபடத் தொடங்குங்கள்.
இறந்து போனவர்களின் ஆத்மாவுக்கு ஆற்றல் அதிகம் என்று கருதப்பட்டதால்தான் குல தெய்வ வழிபாடு முறை தோன்றியது.
தொழில் நிமித்தமாக பல இடங்களில் பரவி இருக்கும் உறவினர்களை ஒன்று சேர்த்து காணும் வாய்ப்பை குல தெய்வ வழிபாடே ஏற்படுத்தி கொடுக்கிறது.
குல தெய்வத்தை யார் ஒருவர் விடாமல் தொடர்ந்து வழிபாடு செய்கிறார்களோ, அவர்கள் வேண்டும் வரம் எல்லாம் கிடைக்கும்.
கணவன் மரணம் அடைந்ததும் உடன்கட்டை ஏறும் பெண்களுக்கும் இறைசக்தி இருப்பதாக நம்பி வழிபடப்பட்டது. தீப்பாய்ச்சியம்மன் இம்முறையில் குல தெய்வமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
நோய்கள் நீங்கவும், பிள்ளைவரம் கிடைக்கவும், மழை பெய்யவும் மக்கள் குல தெய்வத்தையே பெரிதும் நம்புவதுண்டு. ஊருக்கு நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில்தான் கடந்த 100 ஆண்டுகளில் கிராமங்களில் நடக்கும் குல தெய்வ வழிபாடுகள் மிக, மிக விமரிசையாக நடத்தப்படுகின்றன. குல தெய்வம் இருக்கும் இடத்தில் நிச்சயம் வேப்பமரம் அல்லது வில்வமரம் இருக்கும். குல தெய்வங்களுக்கு இதிகாச அடிப்படை எதுவும் கிடையாது.
குல தெய்வ வழிபாடுகளில் பூஜைகள் முறைப்படி இல்லாமல் பெரியவர்களின் இஷ்டப்படியே நடக்கும். குல தெய்வங்களின் சிறப்புகள் கல்வெட்டுக்களாக இருப்பது இல்லை. பெரும்பாலும் செவி வழிக்கதைகளாகவே இருக்கும். தமிழ்நாட்டில் உள்ள குல தெய்வங்களில் பெரும்பாலான குல தெய்வங்கள் பெண் தெய்வங்களாக உள்ளன. குலதெய்வ கோவில்கள் பெரும்பாலும் 'வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கியே கட்டப்பட்டிருக்கும்.
குடும்பத்தில் தொடர்ந்து அசுப நிகழ்ச்சிகள் நடந்தாலோ அல்லது தீமைகள் ஏற்பட்டாலோ குலதெய்வம் கடும் கோபத்தில் இருப்பதாக கருதும் நம்பிக்கை இன்றும் உள்ளது. தங்கள் குறைகளை தீர்க்குமாறு குல தெய்வங்களை வேண்டிக் கொள்பவர்கள், அக்குறை தீர்ந்ததும் பொங்கலிடுதல், பலியிடுதல் போன்ற நேர்த்திக் கடன்களை தவறாமல் செய்வதுண்டு.
குல தெய்வத்துக்கு குறை வைத்தால் வம்ச விருத்தி ஏற்படாது என்பார்கள். ஒரே குல தெய்வத்தை வழிபடும் இரு குடும்பத்தினர் தங்கள் உறவை புதுப்பித்துக் கொள்ள விரும்பினால், தங்கள் குல தெய்வத்திடம் சென்று வழிபாடு செய்து, ஒருவர் கையால், மற்றவர் திருநீறு வாங்கி பூசிக் கொள்ள வேண்டும் என்பது பல ஊர்களில் நடைமுறையில் உள்ளது.
நவீன மாற்றங்கள் மற்றும் நாகரீக வளர்ச்சிக்கு ஏற்ப தற்போது குல தெய்வ வழிபாடுகளின் பூஜைகள், நேர்த்திக் கடன்கள், திருவிழாக்களிலும் பெரும் மாற்றங்கள் வந்து விட்டன. ஆனாலும் குல தெய்வம் மீதான பயமும், பக்தியுணர்வும் கொஞ்சமும் குறையவில்லை. ஆகையால் இதையெல்லாம் கருத்தில் கொண்டு நாளை உங்கள் குல தெய்வத்தை வழிபடுங்கள்...
- சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
- தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆனி-5 (வியாழக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : அஷ்டமி காலை 8.58 மணி வரை பிறகு நவமி
நட்சத்திரம் : உத்திரட்டாதி இரவு 8.41 மணி வரை பிறகு ரேவதி
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம் : தெற்கு
நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், ஸ்ரீராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை
சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. மைசூர் மண்டபம் எழுந்தருளல். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி பால் அபிஷேகம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சனம். திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர மடத்தில் சுவாமிக்கு குருவார திருமஞ்சன சேவை.
தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமான் வழிபாடு. சோழவந்தான் அருகில் குருவித்துறை சித்திரரத வல்லப பெருமாள் கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம். ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-உயர்வு
ரிஷபம்-துணிவு
மிதுனம்-ஆர்வம்
கடகம்-பரிசு
சிம்மம்-மகிழ்ச்சி
கன்னி-உவகை
துலாம்- முயற்சி
விருச்சிகம்-பணிவு
தனுசு- பாசம்
மகரம்-அமைதி
கும்பம்-பயணம்
மீனம்-மகிழ்ச்சி
- இறைவனின் கட்டளையை ஏற்று வாழ்ந்த மனிதர்கள் இம்மையிலும் மறுமையிலும் சிறப்புகளை அடைந்தனர்.
- மனிதன் எப்படி தனது வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் தனது வேதங்கள் மூலம் விளக்கி கூறினான்.
பரந்து விரிந்த வான்வெளியில் பல கோடிக்கணக்கான கோள்கள், நட்சத்திரங்கள், துணைக்கோள்கள் போன்றவை உள்ளன. இவற்றில் மனித இனம் வாழக்கூடிய வகையில் அனைத்து வசதிகளும் நிறைந்தது இந்த பூமி.
இந்த பூமியில் ஆதி மனிதனை படைத்த ஏக இறைவன் அல்லாஹ். மனித வாழ்வுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் இங்கு ஏற்படுத்தினான். மனிதன் எப்படி தனது வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் தனது வேதங்கள் மூலம் விளக்கி கூறினான். மேலும் மனிதர்களை நேர்வழிப்படுத்த நபிமார்களையும் அனுப்பி வைத்தான்.
இறைவனின் கட்டளையை ஏற்று வாழ்ந்த மனிதர்கள் இம்மையிலும் மறுமையிலும் சிறப்புகளை அடைந்தனர். இத்தகைய சிறப்பான வாழ்க்கை வாழ மனிதர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளில் ஒன்று நன்மைகளையே நாடுவது. இதுபற்றி திருக்குர்ஆனிலும், நபி மொழிகளிலும் ஏராளமான வசனங்கள் இடம்பெற்றுள்ளன.
நன்மை செய்ய வேண்டும் என்பது முக்கியமானதாக இருந்தாலும், ஒருவர் நன்மை செய்ய வேண்டும் என்று மனதால் நினைத்தால் கூட அதுவே நன்மையாக அமையும் என்று நபி மொழிகள் கூறுகின்றன. அதுகுறித்த நபி மொழி இது-
"ஒருவர் ஒரு நன்மை செய்யவேண்டும் என (மனத்தில்) எண்ணி விட்டாலே அதைச் செயல்படுத்தாவிட்டாலும், அவருக்காகத் தன்னிடம் அதை ஒரு முழு நன்மையாக அல்லாஹ் பதிவு செய்கிறான். அதை அவர் எண்ணியதுடன் செயல்படுத்தியும் விட்டால், அந்த ஒரு நன்மையைத் தன்னிடம் பத்து நன்மைகளாக, எழுநூறு மடங்காக, இன்னும் அதிகமாக அல்லாஹ் பதிவு செய்கிறான். ஆனால், ஒருவர் ஒரு தீமை செய்ய எண்ணி, (அல்லாஹ்வுக்கு அஞ்சி) அதைச் செய்யாமல் கை விட்டால் , அதற்காக அவருக்குத் தன்னிடம் ஒரு முழு நன்மையை அல்லாஹ் பதிவு செய்கிறான். எண்ணியபடி அந்தத் தீமையை அவர் செய்து முடித்து விட்டாலோ, அதற்காக ஒரேயொரு குற்றத்தையே அல்லாஹ் பதிவு செய்கிறான்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி)
இந்த உலக வாழ்வில் நாம் செய்யும் நன்மைகள், மறுமை வாழ்வுக்கான சேமிப்பாக அமைகிறது என்பதை திருக்குர்ஆன் தெளிவாக எடுத்துரைக்கிறது. நாம் செய்யும் நன்மைகள் எப்படி எல்லாம் நமக்கு இறைவனின் அருட்கொடைகளாக மாறுகிறது என்பதை கீழ்க்கண்ட திருக்குர்ஆன் வசனங்கள் மூலம் அறியலாம்.
"இன்னும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்தும்; ஜகாத் கொடுத்தும் வாருங்கள்; ஏனெனில் உங்களுக்காக எந்த நன்மையை முன்னமேயே அனுப்பி வைக்கின்றீர்களோ, அதை அல்லாஹ்விடம் பெற்றுக்கொள்வீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை எல்லாம் உற்று நோக்கியவனாகவே இருக்கிறான்". (திருக்குர்ஆன் 2:110).
நன்மைகள் செய்பவர்களை இறைவன் மிகவும் நேசிக்கின்றான் என்று திருக்குர்ஆன் இவ்வாறு சாட்சி கூறுகிறது.
"அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்; இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்; இன்னும், நன்மை செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான்". (திருக்குர்ஆன் 2:195).
நன்மைகள் செய்வதென்றால் அது எவ்வாறு இருக்க வேண்டும், யாருக்கு என்ன செய்ய வேண்டும் என்ற சந்தேகம் மனிதர்களிடம் அதிகமாக காணப்படுகிறது. இதற்கும் திருக்குர்ஆன் வழிகாட்டுகிறது.
நபியே அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; "எதை, (யாருக்குச்) செலவு செய்யவேண்டும்" என்று; நீர் கூறும்: "(நன்மையை நாடி) நல்ல பொருள் எதனை நீங்கள் செலவு செய்தாலும், அதை தாய், தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் கொடுங்கள்; மேலும் நீங்கள் நன்மையான எதனைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்து தக்க கூலி தருபவனாக இருக்கிறான்" (திருக்குர்ஆன் 2:215).
மேலும் நபி (ஸல்) அவர்களிடம் ஒருமுறை, 'யாருக்கு அதிகமாக நன்மை செய்ய வேண்டும்' என்று கேட்ட போது, தாய்க்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பதில் அளித்தார்கள். அதன் விவரம் வருமாறு:
``இறைத்தூதர் அவர்களே! நான் யாருக்கு அதிக நன்மை செய்ய வேண்டும்?'' என நான் அவர்களிடம் கேட்டேன். ``உன் தாய்க்கு'' என அவர்கள் கூறினார்கள். ``பின்னர் யாருக்கு?'' என நான் கேட்டேன். ``உன் தாய்க்கு'' என்றே கூறினார்கள். ``பின்னர் யாருக்கு?'' என நான் கேட்டேன். ``உன் தாய்க்கு'' என்றே கூறினார்கள். ``பின்னர் யாருக்கு?'' என நான் (நான்காவது முறை) கேட்டேன். ``உன் தந்தைக்கும், உன் நெருங்கிய உறவினருக்கும். பின்னர், அதற்கடுத்து நெருங்கிய உறவினருக்கு'' என்று இறைத்தூதர் (ஸல்) கூறினார்கள் என பஹ்ஜ் இப்னு ஹாகிம் அறிவித்தார். (நூல்கள்: அபூ தாவூத், திர்மிதீ).
அல்லாஹ்வின் நல்லடியார்களே, நாளும் நன்மைகள் பல செய்வோம், இறையருள் பெறுவோம்.






