என் மலர்tooltip icon

    கோவில்கள்

    சிறுவாச்சூருக்கு வெள்ளிக்கிழமை வந்த மதுரை காளியம்மன் பக்தர்களுக்குத் திங்கள் கிழமை காட்சி தருவதாகவும், எனவே தான் சிறுவாச்சூர் ஆலயம், வெள்ளி, திங்கள் மட்டும் திறந்து பூஜை செய்யப்படுவதாகவும் ஆன்றோர்கள் செவிவழியே இந்த அரிய வரலாற்றை தெரிவித்துள்ளனர்.
    தலவரலாறு

    சிலப்பதிகாரக் காவிய நாயகி கண்ணகி வரலாற்றுடன் தொடர்பு படுத்தி இங்குஅம்மனின் வரலாறு செவிவழிச் செய்தியாய்க் கூறப்பட்டு வருகிறது. கற்புடைத் தெய்வம் கண்ணகி தன் கணவருக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டு மனம் பொறாமல் கோபம் கொண்டு மதுரையை எரித்த பின் மன அமைதியின்றி அலைந்து கொண்டிருக்கையில் இத்தலமடைந்து அமைதி கொண்டாள் எனவும் கண்ணகியைக் கொண்டு மதுரையை எரியூட்டிய மதுரை காளியம்மனே இத்தலம் விரும்பி அமர்ந்தாள் எனவும் பெரியோர்கள் கூறுகின்றனர்.

    சிறுவாச்சூர் வழிபாடு தெய்வம் செல்லியம்மன் ஆகும். ஒரு மந்திரவாதி தனது மந்திர வலிமையால் இவ்வம்மையைக் கட்டுப்படுத்தித் தீய செயல்களுக்கும் பயன் படுத்திவந்துள்ளான்.

    அன்னை மதுரை காளியம்மன் இத்தலத்திற்கு ஒரு வெள்ளிக்கிழமை இரவு வந்து சேர்ந்தபோது செல்லியம்மனுடன் இரவு தங்க இடம் கேட்க செல்லியம்மனோ தன்னை மந்திரவலிமையால்தொல்லைப் படுத்தும் மந்திரவாதி பற்றிக் கூறிய போது மதுரைகாளியம்மன் தான் அதற்குத் தக்க வழி செய்வதாகக் கூறி தங்கி, வழக்கப்படி வந்த மந்திரவாதியை அன்னை மதுரை காளி எதிர்கொண்டு அழித்து விட, செல்லியம்மன் அன்னையின் திறன் கண்டு இனி அவளே சிறுவாச்சூர் ஆலயத்திலிருந்து அடியார்கட்கு அருள் பாலித்து வர வேண்டும் என வேண்டி, தான் அருகிலிருக்கும் பெரியசாமி மலை சென்று விடுவதாகவும் ஆனால் கோயிலில் எப்பொழுதும் தனக்கு முதல் மரியாதை வேண்டு மெனவும் கூற, மதுரை காளியம்மனும் அதற்கு ஒப்புக் கொண்டு ஆலயத்திலே அமர செல்லியம்மன் பெரியசாமி மலை சென்று கோயில் கொண்டுவிடுவதாகவும், சிறுவாச்சூர்க்கு வெள்ளிக்கிழமை வந்த மதுரை காளியம்மன் பக்தர்களுக்குத் திங்கள் கிழமை காட்சி தருவதாகவும், எனவே தான் சிறுவாச்சூர் ஆலயம், வெள்ளி, திங்கள் மட்டும்திறந்து பூசை செய்யப்படுவதாகவும் ஆன்றோர்கள் செவிவழியே இந்த அரிய வரலாற்றை தெரிவித்துள்ளனர்.

    இந்த நாட்கள் தவிர ஆலய சிறப்புத் திருநாட்கள் சிலவற்றிலும் ஆலயம் திறந்து பூசை செய்யப்பட்டு வருகிறது. மற்ற நாட்களில் மதுரகாளியம்மனும், செல்லியம்மனுடன் பெரியசாமி மலையில் தங்குவதாக ஐதீகம் உள்ளது. மதுரை காளியம்மன் என்ற திருப்பெயரே பின்னாட்களில் மருவி மதுரகாளியம்மனாக வந்ததாகக் கூறுவார்கள் சினங்கொண்டு வந்த மதுரகாளியம்மன் இங்கு வந்து அமைதியுற்றுப் பக்தர்களுக்குப் பல இனிய நிகழ்வுகளை அருளுவதாலும், மதுரகாளியம்மன் (மதுரம்/ இனிமை) என்ற பெயர் பெற்றாள் என்பதும் பொருத்தமுடையதே ஆகும்.

    செல்லியம்மன் தனக்கு முதல் மரியாதை தரவேண்டுமென்று கேட்டதற்கு ஏற்ப பூசையின் போது தீபாராதனை காட்டுகையில் முதலில் மலை நோக்கி மேலே தீபாராதனை காட்டி விட்டுத்தான் பின்னர் மதுரகாளியம்மனுக்குத் தீபாராதனை காட்டும் வழக்கம் இது தொண்றுதொட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.
    திருவிழாக்கள்

    ஆண்டுதோறும் சித்திரைத் திங்கள் அமாவாசைக்கு பின் வரும் முதல் செவ்வாய் அன்று பூசொரிதலுடன் தொடங்கி அதற்கு அடுத்த செவ்வாய் அன்று காப்புகட்டி 13 நாட்கள் பெருந்திருவிழா சிறப்புடன் நடைபெறுகிறது.

    சிறப்பு வழிபாடுகள்

    மேலும் தமிழ், ஆங்கில வருடப்பிறப்பு நாட்கள், ஆடி 18ம் பெருக்கு, புரட்டாசி நவராத்திரி 10 நாட்கள், ஐப்பசியில் தீபாவளித் திருநாள், கார்த்திகையில் தீபத் திருநாள், மார்கழி மாதப்பிறப்பு, வைகுண்ட ஏகாதசி, தைப் பொங்கல், தைபூசம், மாசிமகா சிவராத்திரி ஆகிய நாட்களில் திருக்கோயில் நடை திறக்கப்பட்டு வரிபாடுசெய்யப்படுகிறது.

    நடை மற்றும் பூஜை நடைபெறும் நாட்கள்

    வழிபாடு அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில் வாரத்தில் திங்கள், வெள்ளி கிழமைகளிலும் மற்றும் அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களிலும் நடை திறக்கப்பட்டு பூஜை நடைபெறுகிறது. மற்றும் சில குறிப்பிட்ட பண்டிகை நாட்களில் மட்டும் திருக்கோயில் நடை திறக்கப்படும். காலை 6.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை சன்னதி திறக்கப்படும். காலை 11.00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து தங்க கவசம் அணிவித்து இரவு 9.00 மணி வரை அம்பாள் தரிசனம் செய்யலாம். உபயதாரர் இருப்பின் மாலை 6.30 மணிக்கு தங்கரத புறப்பாடு நடைபெறும்.

    அலுவலக முகவரி

    செயல் அலுவலர்,
    அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில்,
    சிறுவாச்சூர், பெரம்பலூர் வட்டம் மற்றும் மாவட்டம்
    பின்கோடு  621113
    கைபேசி : 8056553356
    தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர்கள் மதுரையில் தமக்கென கோவில் அமைக்க முடிவு செய்து, வைகைக் கரையில் இக்கோயிலை அமைத்ததாக செவி வழிச்செய்திகள் கூறுகின்றன.
    மூலவர்     –  வீர ஆஞ்சநேயர்
    தீர்த்தம்     –  அழகர் கோயில் தீர்த்தம்
    ஆகமம்     –  பாஞ்சராத்ரம்
    பழமை     –  500 வருடங்களுக்கு முன்
    ஊர்     –  வண்டியூர்
    மாவட்டம்     –  மதுரை
    மாநிலம்     –  தமிழ்நாடு

    தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர்கள் மதுரையில் தமக்கென கோயில் அமைக்க முடிவு செய்து, வைகைக் கரையில் இக்கோயிலை அமைத்ததாகவும், இதற்கென அவர்கள் தனியே ஆஞ்சநேயர் விக்ரகத்தினை ஆந்திர மாநிலத்தில் இருந்து கொண்டு வந்து இங்கே பிரதிஷ்டை செய்து வழிபடத்தொடங்கியதாகவும் செவி வழிச்செய்திகள் கூறுகின்றன.

    வைகை நதிக்கறையில் தென் திசை நோக்கி அமைந்துள்ள இத்தலம் வைகை ஆற்றில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்படினும் கூட இக்கோயிலின் வாசலுக்கு முன்பாக மட்டுமே தண்ணீர் தொட்டுச் செல்லும் என்பது பெருமையாகக் குறிப்பிடத்தக்க செய்தியாகக் கூறப்படுகிறது.

    இத்தலத்துடன் இணைந்து சிவன், விநாயகர், நாகர் மற்றும் பாண்டி முனிசாமிகளுக்கு தனிச்சந்நிதிகள் உள்ளது. இங்கு நைவேத்தியமாக தயிர் சாதம் படைக்கப்படுகிறது. இத்தலத்தில் ஆஞ்சநேயர் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

    திருவிழா:

    மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசை‌ நாட்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், விளக்கு பூஜைகளும் நடத்தப்படுகிறது. மேலும் சித்திரைத் திருவிழாவின் போது அங்க பிரதட்சண நிகழ்ச்சியும் வெகு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

    வேண்டுகோள்:

    திருமணத்தடை, குழந்தைப் பேறு இல்லாமைக்கும், தீராத வயிறு வேதனைக்கும் இங்குள்ள ஆஞ்சநேயரை மனம் உறுகி வழிபட்டால் அவை விரைவில் குணமாகிறது. மேலும், உடல் பலம் கொடுக்கவும், பயம் நீங்கிடவும், நல்ல புத்தி கிடைக்கவும். நோய்கள் தீரவும் வாழ்க்கை கீர்த்தி பெறவும் இங்கு பிரார்த்தனை செய்தால் நற்பலன் கிடைப்பதாக நம்பப்படுகிறது.

    நேர்த்திக்கடன்:

    எண்ணிய காரியம் நிறைவேறினால், இங்குள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயருக்கு தயிர் சாதத்தை நைவேத்தியமாகப் படைத்து அர்ச்சனை செய்தும், வடை மாலை, வெற்றிலை மாலை மற்றும் துளசி மாலை சாத்தியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.

    காலை 7.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும். திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் அதிகாலையிலேயே நடை திறந்திருக்கும்.

    அருள்மிகு வீர ஆஞ்சநேயர் திருக்கோயில்,
    வண்டியூர், மதுரை,
    மதுரை மாவட்டம்.

    +91 452 262 3060 (மாற்றங்களுக்குட்பட்டது)
    அருள்மிகு அவிநாசியப்பர் திருக்கோவில் சுந்தரர் பாடல் பெற்ற சிவ தலங்களில் ஒன்றாகும். சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் கோவை மாவட்டத்தில் அமைந்துள்ளது.
    மூலவர்: அவிநாசி ஈஸ்வரர் (அவிநாசிநாதர், பெருங்கேடிலியப்பர்,)
    தாயார்: கருணாம்பிகை, பெருங்கருணை நாயகி
    தல விருட்சம்: பாதிரிமரம்
    தீர்த்தம்: காசிக்கிணறு, நாககன்னிகைத் தீர்த்தம், ஐராவதத் தீர்த்தம்

    அருள்மிகு அவிநாசியப்பர் திருக்கோவில் சுந்தரர் பாடல் பெற்ற சிவ தலங்களில் ஒன்றாகும். சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் கோவை மாவட்டத்தில் அமைந்துள்ளது. தேவாரப் பதிகங்கள் பாடப்பட்ட காலத்தில் திருப்புக்கொளியூர் என்று வழங்கப்பட்ட இந்த சிவதலம் தற்போது அவிநாசி என்று அழைக்கப்படுகிறது. இத்திருக்கோவில் சுமார் 2000 வருடங்கள் பழமையான கோவில்.

    அம்பாளின் கோயில் அவினாசியப்பருக்கு வலது புறம் உள்ளது பொதுவாக மற்ற கோயில்களில் இல்லாத சிறப்பு ஆகும். இக்கோவிலின் தேர்த்திருவிழா மிகவும் புகழ்பெற்றது. இத்தேர் தென்னிந்தியாவின் மிகப்பெரிய தேர்களில் ஒன்றாகும். மேலும் இத்தேர் இதன் சிற்ப வேலைகளுக்காகப் பெயர் பெற்றது.

    தல வரலாறு

    நாயன்மார்களுள் ஒருவரான சுந்தரர் அவிநாசிக்கு வந்த போது ஒரே தெருவின் எதிர் எதிர் வீடுகளில் ஒன்றில் பூணூல் கல்யாணமும், மற்றொன்றில் மகனை முதலை சென்றமைக்காக வருத்தமுடனும் இருந்தார்கள். அவனுக்கும் தற்போது பூணூல் கல்யாணம் நடக்கும் சிறுவனுக்கும் ஒத்த வயதே ஆகிறது. அதனை அறிந்த சுந்தரர். இச்சிவாலயத்திற்கு வந்து சிவபெருமானை பிரார்த்தனை செய்தார்.

    அதனால் மூன்று வருடங்களுக்கு முன்பு முதலை விழுங்கிய சிறுவன் வளர்ந்த நிலையில் பெற்றோர்களுக்குக் கிடைத்தான். இந்த தொன்மம் இத்தலத்தில் நடந்தமையால் சிறப்புப் பெற்று இருக்கிறது. இந்த நிகழ்வினை முதலை வாய்ப் பிள்ளை உற்சவம் என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். இவ்விழா பங்குனி உத்தரத்தின் மூன்றாவது நாளன்று இக்கோயிலில் நடைபெறுகிறது.

    இத்தலத்தில் உள்ள இறைவனைப் பிரம்மா நூறு ஆண்டுகளும், இந்திரனுடைய ஐராவதம் எனும் வெள்ளையானை 12 ஆண்டுகளும், தாடகை மூன்று ஆண்டுகளும், நாகக் கன்னி 21 மாதங்களும் வழிபட்டுள்ளனர்.

    கோவில் அமைப்பு:

    இக்கோவில் சுமார் 1.5 ஏக்கர் பரப்பளவில் கிழக்கு திசையில் 7 நிலை ராஜ கோபுரத்துடன் அமைந்துள்ளது. 100 அடி ராஜ கோபுரம் கொங்கு சோழ மன்னனால் கட்டப்பட்டு(காலம்: 1200), பின்பு மைசூர் மகாராஜாவால் புனரமைக்கப்பட்டது. கோவிலின் உள்ளே இரண்டு பிரகாரங்கள் உள்ளன. ராஜ கோபுர நுழைவு வாயிலில் இரண்டு பக்கமும் நர்த்தன கணபதியின் சிற்பங்கள் உள்ளன. உள்ளே மண்டபத்தின் தூண்களில் வீரபத்திரர், ஊர்த்துவ தாண்டவர் மற்றும் காளியின் சிற்பங்கள் காணப்படுகின்றன.

    மண்டபத்தில் இருந்து உள் பிரகாரத்தில் நுழைந்தால் மூலவர் அவிநாசியப்பர் சந்நிதி இருக்கிறது. மூலவர் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். மூலவர் கர்ப்ப கிரகத்தைச் சுற்றி உள்ள பிரகாரத்தின் வடமேற்கு கோஷ்டத்தில் முருகன் சந்நிதியும், வடகிழக்கு கோஷ்டத்தில் காரைக்கால் அம்மையார் சந்நிதியும் அமைந்துள்ளன.

    மேலும் உள் பிரகாரத்தில் 63 நாயன்மார்கள் சிற்பங்களும் வைக்கப்பட்டு இருக்கின்றன. ஸ்ரீகாலபைரவர் சந்நிதியும் இத்தலத்தில் சிறப்பிற்குரியது. நடராஜர் மண்டபத்திலுள்ள ஐம்பொன்னால் ஆன நடராஜர் திருமேனி எல்லோரையும் கவர்ந்து இழுக்கும் வகையில் உள்ளது.

    இத்தலத்தில் பிரம்மா 100 ஆண்டுகளும், இந்திரனுடைய ஐராவதம் என்னும் யானை 12 ஆண்டுகளும், தாடகை 3 ஆண்டுகளும், நாகக்கன்னி 21 மாதங்களும் வழிபாடு செய்ததாக ஐதீகங்கள் உண்டு. இறைவி கருணாம்பிகை சந்நிதி, மூலவர் அவிநாசியப்பர் சந்நிதியின் வலதுபுறம் அமைந்துள்ளது. இங்கே அழகு கொஞ்சும் திருமுகத்துடன் கருணையே உருவெனக் கொண்டு கருணாம்பிகை காட்சி தருகிறாள்.

    அம்பாள் சந்நிதியின் பின்பக்க மாடத்தில் தேளின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேளுக்கு பக்தர்கள் விளக்கேற்றி வழிபடுகின்றனர். விஷ ஜந்துக்களின் கடியில் இருந்து தப்பலாம்.
    கேரளா மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் உள்ளது, குருவாயூர் திருத்தலம். இங்குள்ள குருவாயூரப்பன் கோவில் மிகவும் புகழ்பெற்ற திருக்கோவிலாகும். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    கேரளா மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் உள்ளது, குருவாயூர் திருத்தலம். இங்குள்ள குருவாயூரப்பன் கோவில் மிகவும் புகழ்பெற்ற திருக்கோவிலாகும். இந்த ஆலயத்தை ‘பூலோக வைகுண்டம்’ என்றும் அழைப்பார்கள். இந்தக் கோவிலில் உள்ள மூலவரான குருவாயூரப்பனின் விக்கிரகம் தனிச் சிறப்பு வாய்ந்ததாகும். ஏனெனில் இந்த விக்கிரகம், மிகவும் புனிதத்துவம் பெற்றதான ‘பாதாள அஞ்சனம்’ என்னும் கல்லில் வடிக்கப்பட்டது என்கிறார்கள்.

    குருவாயூரப்பன் கோவிலில் உள்ள மூலவர் விக்கிரகத்தை, வைகுண்டத்தில் உள்ள மகாவிஷ்ணு உருவாக்கினார். பின்னர் அதனை பிரம்மதேவனிடம் ஒப்படைத்தார். அதை வைத்து சில காலம் பூஜை செய்து வந்த பிரம்மன், அந்த விக்கிரகத்தை தேவர்களின் குருவான பிரஜாபதியிடம் வழங்கினார். அவரிடம் இருந்த அந்த விக்கிரகம், கிருஷ்ணரின் தந்தையான வசுதேவரிடம் போய் சேர்ந்தது. அதன் மூலம், அந்த விக்கிரகம் மீண்டும் மகாவிஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணரிடமே வந்தடைந்தது. அதனை தான் ஆட்சி செய்த துவாரகையில் வைத்து வணங்கி வந்தார், கிருஷ்ணர்.

    கிருஷ்ண அவதாரம் பூர்த்தியாகும் தருணம் வந்தபோது, தன் சிறுவயது முதலே தன்னுடன் இருந்தவரும், தன் தேரோட்டியுமான உத்தவரை அழைத்தார், கிருஷ்ணர். அவரிடம், “இன்னும் சில நாட்களில் துவாரகையை கடல் சூழ்ந்துகொள்ளப் போகிறது. அந்த பெருவெள்ளத்தில், நான் வழிபடும் விக்கிரகம் மிதக்கும். அதனை தேவர்களின் குருவான, பிரஜாபதியின் உதவியுடன் பக்தர்கள் வணங்கத்தக்க புனிதமான ஒரு இடத்தில் பிரதிஷ்டை செய்ய வேண்டும்” என்று கூறினார்.

    கிருஷ்ணர் சொன்னபடியே, அடுத்த சில நாட்களில், பெரிய பிரளயம் ஒன்று உண்டானது. அந்த பிரளயத்தில் துவாரகை நகரம் தாக்கப்பட்டது. அந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட விக்கிரகம், குரு பகவானிடம் போய் சேர்ந்தது. அதை தன்வசப்படுத்திய குருபகவான், அவரது முதன்மை சீடரான வாயு தேவனுடன் சேர்ந்து விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்ய வேண்டிய சிறப்பான ஒரு இடத்தைத் தேடி அலைந்தார். இறுதியில் அவர்கள் பரசுராமரால் உருவாக்கப்பட்ட, அந்த பசுமை போர்த்திய தேசத்தை அடைந்தார்கள். அதுவே கேரளம்.

    அங்கே மகாவிஷ்ணுவின் மற்றொரு அம்சமாக கருதப்படும் பரசுராமரை, குரு பகவானும், வாயு பகவானும் சந்தித்தனர். பின்னர் அவரிடம், தங்களிடம் இருக்கும் விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்வதற்கான இடத்தை காண்பித்தருளும்படி வேண்டினர். அதைக் கேட்டு பரவசம் அடைந்த பரசுராமர், ‘அந்த விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்வதற்கான சிறப்புமிக்க இடம் இதுதான்’ என்று, இருவரையும் அழைத்துப் போய் ஒரு இடத்தைக் காண்பித்தார். பன்னெடுங்காலமாக அந்த இடத்தின் அருகில்தான் சிவபெருமான், தவம் இருந்து வந்தார் என்பதை அதன் பிறகே குரு பகவானும், வாயு பகவானும் அறிந்து கொண்டனர்.

    பரசுராமர் கை காட்டிய இடத்தில், விக்கிரகத்தை குருவும், வாயுவும் சேர்ந்து பிரதிஷ்டை செய்தனர். அவர்கள் இருவரும் சேர்ந்து இந்த காரியத்தைச் செய்ததால், இந்த தலம் ‘குருவாயூர்’ என்று ஆனது. இத்தல இறைவனும் ‘குருவாயூரப்பன்’ ஆனார். கிருஷ்ண பகவானால், துவாரகையில் வைத்து பூஜிக்கப்பட்ட விக்கிரகம் என்பதால், இந்த ஆலயம் ‘தென் துவாரகை’ என்றும் போற்றப்படுகிறது.
    தஞ்சாவூர் மாவட்டம் தாராசுரத்தில் உள்ள ஐராவதீஸ்வரர் கோவில், கட்டிடக் கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்த ஆலயங்களில் ஒன்றாகும். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    சுவாமி : ஐராவதேஸ்வரர்.
    அம்பாள் : தெய்வநாயகி.
    தீர்த்தம் : எமதீர்த்தம்.
    தலவிருட்சம் : வில்வம் மரம்.

    தலச்சிறப்பு : முதலாம் ராஜராஜன் கட்டிய தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் எந்த அளவுக்கு கட்டிடக்கலையின் உச்சமாக கருதப்படுகிறதோ, அதற்கு கொஞ்சமும் குறையாத சிறப்புகளை, 2-ம் ராஜராஜனால் கட்டப்பட்ட ஐராவதேஸ்வரர் கோயிலும் பெற்றுள்ளது.  1987-ல் தஞ்சை  பிரகதீஸ்வரர் கோயில் யுனெஸ்கோ அமைப்பால் உலகப் பாரம்பரியச் சின்னமாக  அறிவிக்கப்பட்டது.  அதன் பின்னர் 2004-ஆம் ஆண்டு கங்கை கொண்ட சோழபுரம் கோயிலும்,  ஐராவதேஸ்வரர் கோயிலும் உலகப் பாரம்பரியச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டன என்பது மேலும்  சிறப்பு ஆகும்.

    தல வரலாறு : தாரன் எனும் அரசன் தனது 100 மனைவிகளுடன் வணங்கி சிறப்புற வாழ்ந்த  திருத்தலம். ஐராவதம் எனும் வெண்யானை துர்வாசர் சாபத்தால் இழந்து விட்ட வெண்மையை  இச்சிவனை வணங்கி மீளப் பெற்றதிருத்தலம்.  ஸ்ரீ ஐராவதேஸ்வரர் என்னும் திருநாமத்தில்  சிவபெருமான் திருக்கோவில் கொண்டுள்ளார்.  இத்திருக்கோவிலை ராஜேந்திரச் சோழன் 12-ம்  நூற்றாண்டில் கட்டினார்.  சோழர்களின் கட்டிடக் கலைக்கு மிகப் பெரிய உதாரணமான கோவில்.  திருக்கோவிலின் முன்பு மண்டபம் ரத அமைப்பில் உள்ளது.  இம்மண்டபத்தில் உள்ள தூண்களின்  சிற்பங்களை காண கண் கோடி வேண்டும்.  இங்குள்ள இறைவனை இந்திரனின் ஐராவதமும்,  எமதர்ம ராஜாவும் வழிபட்டு உள்ளதாக புராணம் கூறுகிறது. இங்குள்ள திருக்குளத்தின் பெயர்  எமதீர்த்தமாகும்.

    சோழ மன்னன் இரண்டாம் இராஜராஜன் (1150-1173) இக்கோவிலை எழுப்பினார்.  இம்மன்னர் பெயரால் இக்கோவில் இராஜராஜேச்சுரம் என அழைக்கப்பட்டது.  மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் இக்கோவிலின் சில பகுதிகள் எழுந்தன.  ஐராவதேஸ்வரர் கோவில் பிற்காலச் சோழர்  காலச் சிற்பக் கலைத் திறனுக்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.  இக்கோவிலின் விமானம்  தஞ்சையிலும், கங்கை கொண்ட சோழபுரத்திலும் உள்ள கோவில்களைப் போல் பிரம்மாண்டமான  அமைப்பைக் கொண்டுள்ளது. இக்கோவில் முழுவதும் கல்லாலானது.  

    இரண்டாம் இராஜராஜன்  சாளுக்கியரின் கல்யாணிநகர் மீது படை எடுத்து வெற்றி பெற்றார்.  தமது பரிசாக அங்கிருந்து  சாளுக்கிய துவார பாலகர் சிலையைத் தாராசுரம் கோவிலுக்குக் கொண்டு வந்தார்.  துவார பாலர்  சிற்பமும் இதர சில சிற்பங்களும் தற்பொழுது தஞ்சாவூர் சரஸ்வதி மாளிகையில் உள்ள கலைக்  கூடத்தில் உள்ளன.  ஐராவதேஸ்வரர் கோவிலில் காணப்படும் சில சிற்பங்கள் கல்யாணிச்  சாளுக்கியர் கலையின் அம்சங்களைக் கொண்டுள்ளன.

    கோவிலின் கட்டடகலை : கோனார்க் பாணி வடிவமைப்பு - ஒரு தேரை, குதிரைகள் இழுத்துச்  செல்வது போல அமைந்திருக்கும்.  ஐராவதேஸ்வரர் கோயில் கோனார்க் கோயிலை ஒத்துள்ளது.  ராஜகம்பீரம் என்று அழைக்கப்படும் மகா மண்டபம் ஐராவதம் எனப்படும் யானைகளாலும்  குதிரைகளாலும் இழுத்துச் செல்லப்படுவது போல் அமைக்கப்பட்டுள்ளது.  

    இம்மண்டபத்திற்கு ஏறிச்  செல்லும் படியில் யானைகள் ஒரு பக்கத்திலும் குதிரைகள் மற்றொரு பக்கத்திலும் தேரை இழுத்துச்  செல்வது போல் உள்ள சிற்பத்தின் சக்கரம், இன்று வரை இந்தியக் கலையின் அடையாளமாகப்  பார்க்கப்படுகிறது.  ராஜகம்பீர மண்டபத்தின் தூண்களில் நர்த்தன கணபதியின் உள்ளங்கை அகல  சிற்பம் உள்ளது.  அதோடு நாட்டியத்தின் முத்திரைகள் காட்டும் பெண்களின் சிற்பங்களும்,  வாத்தியக்காரர்களின் குழுக்களும், புராணக் கதைகளும் சில சென்டி மீட்டர் அளவிலேயே இங்கு  மிகவும் தெளிவாகச் செதுக்கப்பட்டுள்ளன.  யானையா, காளையா என்று அடையாளம் காணமுடியாத அளவுக்கு ஒரு அழகியச் சிற்பத்தை அந்தக் காலத்திலேயே வடிவமைத்து  இருக்கிறார்கள் கலை  வல்லுனர்கள்.  63 நாயன்மார்கள் சிலையும் வரிசையாக  வடிக்கப்பட்டுள்ளன.

    இராமாயண காட்சி வாலியும், சுக்ரீவனும் போர் புரிய, மறைந்து இருந்து சுக்ரீவன் மீது அம்பு எய்தும்  ராமர், கையில் வீணை இல்லாத சரஸ்வதி, பாம்புகளுக்கு அரசனான நாகராஜன், மூன்று முகங்கள்  மற்றும் எட்டுக் கைகளுடன் அர்த்தநாரீஸ்வரர் என சாதரணமாகக் கோயில்களில் காணப்படாத  சிற்பங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.

    நடைதிறப்பு : காலை 7.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை.

    கோயில் முகவரி :

    அருள்மிகு ஐராவதேஸ்வரர் கலைக்கோவில்,
    தாராசுரம் - 612 702,
    கும்பகோணம் வட்டம்,
    தஞ்சாவூர் மாவட்டம்.
    வியாக்ரபாதர் என்னும் புலிக்கால் முனிவர், சிவனின் ஆனந்தத் தாண்டவங்களை தரிசித்த தலங்கள் ‘நவ புலியூர்’ என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஒன்பது ஆலயங்களையும் மிகச் சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
    சிவபெருமானின் ஆனந்த தாண்டவத்தைக் காண மிகவும் ஆவல் கொண்டவர்கள், பதஞ்சலி மற்றும் வியாக்ரபாதர் ஆவார்கள். இவர்களில் வியாக்ரபாதர் என்னும் புலிக்கால் முனிவர், சிவனின் ஆனந்தத் தாண்டவங்களை தரிசித்த தலங்கள் ‘நவ புலியூர்’ என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஒன்பது ஆலயங்களையும் மிகச் சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

    பெரும்பற்றப்புலியூர்

    இந்தப் பெயரைக் கேட்டதும் இது எங்கே இருக்கிறது என்று மலைக்கத் தேவையில்லை. பிரசித்திப் பெற்ற சிதம்பரம் ஆலயத்தின் மற்றொரு பெயர்தான் இது. மேலும் தில்லை, பொற்புலியூர் என்ற பெயர்களும் இந்த தலத்திற்கு உண்டு. இங்கு பதஞ்சலி வகுத்த பூஜா சூத்திரப்படியும், வியாக்ரபாதர் வகுத்த புஷ்பார்ச்சனைப் படியும், தினமும் நடராஜருக்கு பூஜைகள் நடத்தப்படுகின்றன. சமயக்குரவர்கள் நால்வரும் வழிபட்ட முக்கியமான திருக்கோவில், சிதம்பரம் ஆகும்.

    திருப்பாதிரிப்புலியூர்

    கடலூர் பஸ் நிலையத்தில் இருந்து மிக அருகாமையில் அமைந்துள்ளது, திருப்பாதிரிபுலியூர். ‘பாதிரி’ என்ற மரத்தை தலமரமாக கொண்டிருப்பதாலும், புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர் வழிபட்டதாலும் இது இப்பெயர் பெற்றது. பாதிரி மரத்தின் அடியில் அமர்ந்து தவம் இருந்ததன் பலனாக பார்வதி தேவி இறைவனை மணம்புரிந்த தலம் இதுவாகும். இறைவனின் பெயர் ‘பாடலீஸ்வரர்’, இறைவியின் திருநாமம் ‘பெரியநாயகி’ என்பதாகும்.

    எருக்கத்தம்புலியூர்

    வெள்ளாற்றின் தென்கரையில் அமைந்துள்ள இந்தத் தலம், தற்போது ராஜேந்திரப்பட்டினம் என்று அழைக்கப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ள இந்த ஊரில்தான் வியாக்ரபாதர் வழிபட்ட நீலகண்டேஸ்வரர் கோவில் இருக்கிறது. இறைவியின் திருநாமம் ‘நீலமலர்க்கண்ணி’ என்பதாகும். இந்த ஆலயத்தின் தல மரமாக, வெள்ளெருக்கு உள்ளது. முருகப்பெருமான், உருத்திரசன்மராக தோன்றி வழிபட்டதால் ‘குமரேசம்’ என்றும், தேவகணங்கள் வழிபட்டதால் ‘கணேசுரம்’ என்றும் பெயர் வழங்கப்படுகிறது. கடலூரில் இருந்து 71 கிலோமீட்டர் தொலைவிலும், விருத்தாசலத்தில் இருந்து 13 கிலோமீட்டர் தூரத்திலும், ஸ்ரீமுஷ்ணத்தில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலும் எருக்கத்தம்புலியூர் உள்ளது.

    ஓமாம்புலியூர்

    சிதம்பரத்தில் இருந்து சுமார் 35 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது, ஓமாம்புலியூர். இத்தல மூலவராக உயர்ந்த பீடத்தில் தட்சிணாமூர்த்தி அருள்கிறார். இறைவனின் திருநாமம், ‘துயர் தீர்த்த நாதர்’ என்னும் ‘பிரணவ வியாக்ரபுரீஸ்வரர்’ என்ப தாகும், இறைவியின் பெயர் ‘பூங்கொடிநாயகி.’ பார்வதி தேவிக்கு, தட்சிணாமூர்த்தியாக இருந்து பிரணவத்தின் பொருளை உபதேசம் செய்ததாலும், வியாக்ரபாதர் வழிபட்டதாலும் இந்த திருத்தலத்திற்கு ‘ஓமாம்புலியூர்’ என்று பெயர் வந்தது.

    கானாட்டம்புலியூர்

    கடலூர் மாவட்டத்தில் உள்ளது, கானாட்டம்புலியூர். பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாதரும் வழிபட்ட தலங்களில் இதுவும் ஒன்று. இத்தல இறைவனின் பெயர், பதஞ்சலிநாதர் என்பதாகும். இறைவியின் திருநாமம், கண்ணார்குழலி. சுந்தரமூர்த்தி நாயனாரின் தேவாரப் பாடல் பெற்ற இந்த ஆலயத்தில் வழிபட்டால், நன்மைகள் பல பெறலாம். சிதம்பரத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில், கானாட்டம்புலியூர் உள்ளது. ஓமாம்புலியூரில் இருந்தும் இந்த ஆலயத்திற்குச் செல்லலாம்.

    சிறுபுலியூர்

    மயிலாடுதுறையில் இருந்து சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, சிறுபுலியூர். இத்தல இறைவன், ‘வழித்துணைநாதர், மார்க்கபந்தீஸ்வரர், கங்காளநாதர்’ என்றெல்லாம் அழைக்கப்படுகிறார். வியாக்ரபாதரும், பதஞ்சலி முனிவரும் இத்தலத்தை அடைந்தபோது இரவு வேளை வந்துவிட்டது. இதையடுத்து அவர்கள் இருவருக்கும், சிவபெருமானும், மகாவிஷ்ணுவும் காட்சி தந்து, யாத்திரை நிறைவேற உதவி செய்தனர். எனவே இத்தல இறைவன் ‘வழித்துணைநாதர்’ என்று பெயர் பெற்றார். இங்கு பெருமாளுக்கும் ஆலயம் அமைந்துள்ளது. பெருமாளின் திருநாமம் ‘அருள்மாகடலமுத பெருமாள்’ என்பதாகும். 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக இத்தலம் திகழ்கிறது. இங்கு பெருமாள், புஜங்க சயனக் கோலத்தில் அருள்பாலிக்கிறார். வியாக்ரபாதர், பெருமாளை பூஜித்த நிலையில் காட்சி தருகிறார்.

    அத்திப்புலியூர்

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது அத்திப்புலியூர் திருத்தலம். இங்குள்ள சிதம்பரேஸ்வரர் கோவிலில், வியாக்ரபாதர் வழிபாடு செய்திருக்கிறார். ‘அத்தி’ என்றால் ‘யானை’ என்று பொருள். இங்கு யானையும், புலிக்கால் கொண்ட வியாக்ரபாதரும் வழிபாடு செய்ததால் இது ‘அத்திப்புலியூர்’ ஆனது. மூலவர் திருநாமம் ‘சிதம்பரேஸ்வரர்’ என்பதாகும். இவர் தெற்கு நோக்கி வீற்றிருந்து அருள்கிறார். இறைவியின் பெயர், சிவகாமசுந்தரி. இங்கு மூலவராக வீற்றிருக்கும் சிவலிங்கத்தின் பின்புறம் சோமாஸ்கந்தரை தரிசனம் செய்யலாம். பதஞ்சலி முனிவர், வியாக்ரபாதர், அகத்தியர் ஆகியோருக்கு, தன்னுடைய திருமணக் காட்சியை இறைவன் காட்டி அருளிய இடம் இது. இந்தத் தலம் ‘தட்சிண கேதாரம்’ என்றும் போற்றப்படுகிறது. நாகப்பட்டினத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் கீழ்வேளூர் என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து 5 கிலோமீட்டர் தூரம் சென்றால், அத்திப்புலியூரை அடையலாம்.

    பெரும்புலியூர்

    திருவையாறுக்கு வடமேற்கே சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில், பெரும்புலியூர் உள்ளது. திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற இந்த ஆலயத்தில் உள்ள இறைவனை, வியாக்ரபாத முனிவர் வழிபாடு செய்துள்ளார். இங்குள்ள இறைவனின் திருநாமம், வியாக்ரபுரீஸ்வரர், இறைவியின் பெயர், சவுந்திரநாயகி. இந்த ஆலயத்தில், கல்லால் வடிக்கப்பட்ட நடராஜர் மூர்த்தம் இருக்கிறது.

    தப்பளாம்புலியூர்

    திருவாரூரில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, தப்பளாம்புலியூர். சுயம்புவாக தோன்றி வீற்றிருக்கும் இத்தல இறைவனின் திருநாமம், வியாக்ரபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம், நித்யகல்யாணி. வியாக்ரபாதருக்கும், மண்டூக மகரிஷிக்கும் இறைவன் அருள்பாலித்த தலம் இது. இந்த ஆலயத்தில்தான், வியாக்ரபாதருக்கு இருந்த புலிக்கால் மற்றும் புலிக்கையை இறைவன் நீக்கி அருளியதாக தல புராணம் சொல்கிறது. பதஞ்சலி, வியாக்ரபாதர், மண்டூக மகரிஷி ஆகிய மூவரும், ஈசனின் திருநடனக் காட்சியை கண்டு களித்த தலங்களில் இதுவும் ஒன்று. இங்கு கல்லால் வடிக்கப்பட்ட, நடராஜர் மூர்த்தம் உள்ளது.
    தஞ்சாவூர் மாவட்டம் தென்குடித் திட்டை என்ற இடத்தில் உள்ளது, உலகநாயகியம்மை உடனாய வசிஷ்டேஸ்வரர் திருக்கோவில். இந்தக் கோவிலில் உள்ள சில சுவாரசிய தகவல்களை சிறு குறிப்பாக பார்க்கலாம்.
    தஞ்சாவூர் மாவட்டம் தென்குடித் திட்டை என்ற இடத்தில் உள்ளது, உலகநாயகியம்மை உடனாய வசிஷ்டேஸ்வரர் திருக்கோவில். தஞ்சாவூரில் இருந்து சுமார் 9 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது இந்த ஆலயம். இந்தக் கோவிலில் உள்ள சில சுவாரசிய தகவல்களை சிறு குறிப்பாக பார்க்கலாம்.

    அழியாத இடம்

    ஒவ்வொரு யுகம் முடியும் போதும், பிரளயம் தோன்றி அதன் அழிவின் முடிவில் புதிய யுகம் தோன்றும் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன. அப்படி ஒரு யுகத்தின் முடிவில் பிரளயம் உண்டானது. பூமியெங்கும் மழை வெள்ளம் கொட்டித் தீர்த்தது. உலகம் முழுவதும் இருந்த அனைத்து உயிர்களும், இடங்களும் அழிந்தன. ஆனால் பூலோகத்தின் ஒரு பகுதி மட்டும் நீரில் மூழ்காமல் திட்டாக நின்றது. அந்த இடத்தில் இறையருள் நிறைந்திருந்ததே அதற்கு காரணம். அந்த இடமே தென்குடித் திட்டை ஆகும். பேரழிவு ஊழிக் காலத்திலும், வெள்ளத்தில் மூழ்காத திட்டை திருத்தலம் சிறப்புக்குரியதாகும்.

    ஈசனுக்கு நிகரான சக்தி

    சிவம் இல்லையேல் சக்தி இல்லை, சக்தி இல்லையேல் சிவம் இல்லை. இது தான் வாழ்க்கை தத்துவம். ஒன்றும் ஒன்றைப் பிரிந்து வாழாது. அதை உலக மக்களுக்கு உணர்த்துவதற்காகவே தன்னில் இருந்து ஒரு பகுதியை சக்தியாக பிரித்து உமாதேவியை இறைவன் உண்டாக்கினார். சக்தியும் சிவமும் நிகர் என்பதை உணர்த்தும் வகையில், திட்டை திருக்கோவிலில் சிவலிங்க மூலவருக்கு நிகராக, உயர்ந்த பீடத்தில் அம்பாள் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். அம்மன் சன்னிதிக்கு முன்புள்ள மண்டபத்தின் மேலே 12 ராசிகள் செதுக்கப்பட்டுள்ளன. அந்தந்த ராசிக்காரர்கள், தங்களுக்கான ராசிக்கட்டத்தின் கீழ் நின்று அம்மனை வேண்டினால் வேண்டிய வரம் கிடைக்கும். திருமணத் தடை, மாங்கல்ய தோஷம் நீங்க அருள் புரிவதால், இந்த அன்னை ‘மங்களாம்பிகை’ என்றும் அழைக்கப்படுகிறார்.

    மும்மூர்த்திகள் வழிபட்ட தலம்

    பிரளயத்தின் முடிவில் மீண்டும் உயிரினங்களைப் படைக்கும் பணி தொடங்க வேண்டியதிருந்தது. இதற்காக தன்னுடைய சக்தியான உமாதேவியுடன் இணைந்து அண்டத்தைப் படைத்தார், பரம்பொருள். மேலும் அந்த அண்டங்களை பரிபாலனம் செய்வதற்காக சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளைப் படைத்தார். ஆனால் மாயை வயப்பட்டிருந்த அந்த மூவரும் பேரிருள் சூழ்ந்த இந்த அண்டத்தைக் கண்டு பயந்தனர். அந்த இருளில் அங்கும் இங்கும் அலைந்து திரிந்து, பெருவெள்ளத்தின் நடுவில் திரளாக இருந்த திட்டையை அடைந்தனர். பின்னர் தங்களின் மாயை விலக வேண்டி இறைவனை வேண்டினர். பரம்பொருளான ஈசனும், அவர்களின் அச்சத்தைப் போக்க தன்னுடைய உடுக்கையை முழக்கினார். அதிலிருந்து தோன்றிய மந்திர ஒலிகள், மும்மூர்த்திகளையும் அமைதியடையச் செய்தது. பின்னர் பரம்பொருள் அவர்கள் மூவருக்கும் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தொழில்களை பிரித்துக் கொண்டு, அதற்கான ஞானத்தையும், சக்தியையும் வழங்கினார். மும்மூர்த்திகளும் இறைவனை வழிபட்ட தலம் இது.

    சந்திரன் செலுத்தும் நன்றி

    இந்தக் கோவிலின் மூலவரான வசிஷ்டேஸ்வரர் வீற்றிருக்கும் கருவறை விமானம், சந்திரக்காந்தக் கல் மற்றும் சூரியக்காந்தக் கல் கொண்டு கட்டப்பட்டதாக சொல்கிறார்கள். தன்னுடைய மாமனார் தட்சனால் தினமும் ஒரு கலையாக அழியும் சாபத்தைப் பெற்றிருந்தான், சந்திரன். அதன்படி தினம் ஒரு கலையாக அழிந்து தேய்ந்து வந்தான். இதையடுத்து சந்திரன், திங்களூர் வந்து கயிலாசநாதரை வழிபட்டு தன் சாபம் நீங்கப்பெற்றான். அப்படி தன்னுடைய சாபத்தைப் போக்கிய ஈசனுக்கு, திட்டையில் உள்ள திருத்தலத்திற்கு வந்து தன்னுடைய நன்றியை தெரிவித்தான், சந்திரன். இப்போதும் அந்த நன்றியை கருவறையின் மேல் உள்ள சந்திரக் காந்தக் கல்லாக இருந்து செலுத்துகிறான். இந்தக் கல் காற்றிலிருந்து ஈரப்பதத்தை ஈர்த்து ஒரு நாழிகைக்கு ஒரு சொட்டு நீரை, இத்தல மூலவரின் மீது நித்ய அபிஷேகமாக செய்து கொண்டிருக்கிறது. 24 நிமிடங்களுக்கு (ஒரு நாழிகை) ஒரு முறை, இத்தல இறைவன்மீது ஒருசொட்டு நீர் விழுவதை இன்றும் நாம் தரிசிக்க முடியும்.
    வேம்புச்சித்தர் ஆசிரமம் எனும் சொர்ண பைரவி சமேத சொர்ணகால பைரவர் சித்தர் பீட திருவாலயத்தில் தனிக்கோவிலில் இருந்து அருள்பாலித்து வருபவர்தான் சொர்ணாகர்ஷன பைரவர்.
    பைரவர் வழிபாடு என்பது கால பைரவர் தொடங்கி அஷ்ட பைரவர், அஷ்டாஷ்ட பைரவர் என தொடர்ந்து சொர்ணாகர்ஷன பைரவரில் முடிவது.

    பைரவ உபாசகர் வேம்பு சித்தரின் தியானத்தில் திருக்காட்சி தந்து தஞ்சை மாவட்டம் கும்பகோணம் திருவிசநல்லூர், சொர்ணபுரியில் வினை நீக்கும் வேம்புச்சித்தர் ஆசிரமம் எனும் சொர்ண பைரவி சமேத சொர்ணகால பைரவர் சித்தர் பீட திருவாலயத்தில் தனிக்கோவிலில் இருந்து அருள்பாலித்து வருபவர்தான் சொர்ணாகர்ஷன பைரவர்.

    இங்குள்ள சொர்ணாகர்ஷன பைரவர், நினைத்ததை நினைத்தபடி, கேட்டதை கேட்டபடி தரும் கற்பக மரத்தின் அடியில் கங்கா ஜடா முடியில் சந்திர பிறை சூடி நான்கு திருக்கரங்களுடன், அஜாமிளா தேவி எனும் சொர்ண பைரவியை தமதுமேல் திருக்கரத்தால் சற்று அணைத்தவாறு அமர்ந்துள்ளார். இருவரும் புன்னகை தவழும் திருமுகங்களுடன் பத்ர பீடத்தின் மீது உடன் அமர்ந்து அருள் பொழியும் சர்வானந்த கோலாகலராக திகழ்கிறார்கள்.

    சர்வாபரணங்கள் பூண்டு சர்வ அலங்காரங்களோடு குபேர சம்பத்தையும், அஷ்ட ஐஸ்வர்யங்களையும், சொர்ணத்தையும், தன, தானியங்களையும் தன்னகத்தே குவித்து வைத்திருப்பவர். மிகவும் வரப்பிரசாதி. ஆகவே இவரை வணங்குபவர்கள் தாமும் செல்வந்தராக இருப்பதுடன் மற்றவர்களையும் செல்வந்தராக மாற்றும் இயல்பு கொண்டவராக திகழ்வர்.

    கோவில் அமைவிடம்

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள திருவிசநல்லூர் கற்கடேஸ்வரர் கோவில் சாலை சொர்ணபுரியில் இக்கோவில் அமைந்துள்ளது. (யோகிநாதசுவாமி திருக்கோவிலுக்கும் கற்கடேஸ்வரர் கோவிலுக்கும் இடையில்). நினைத்ததை நினைத்தபடி தருகின்ற கற்பக விருட்சத்தின் அடியில் பத்ர பீடத்தின் மீது அம்மையும், அப்பனும் சர்வானந்த கோலாகலத்தில் அமர்ந்தபடி சொர்ணகால பைரவர் வலது திருப்பாதத்தை மடித்து இடது திருப்பாதத்தை தாமரை மலரில் பதித்தவாறும், சொர்ண பைரவி அம்மை தம்மிரு திருப்பாதங்களையும் தொங்கவிட்டபடி தாமரை மலரில் பாதத்தை பதித்தவாறு அமர்ந்திருப்பதும் விஷேசமாகும்.

    சொர்ணகால பைரவர் தம் மடியில் பூரண அம்ருத கும்பத்தை வைத்திருப்பது வேண்டுபவர் வேண்டியபடி அனைத்து கோரிக்கையையும் நினைத்தது நினைத்தபடி, கேட்டது கேட்டபடி தந்து அருளுவதோடு நோய் நொடி இல்லாத நிலையையும், சர்வ சித்தியையும் தருவேன் என்பதாகும்.

    சொர்ண கும்பம்

    சொர்ண பைரவி தம் மடியில் ஒரு திருக்கரத்தால் சொர்ண கும்பத்தை பிடித்தபடி மறு திருக்கரத்தால் தன்னை தேடி வரும் அன்பர்களின் தரித்ரிய நிலையை நீக்கி சொர்ணத்தை அள்ளி, அள்ளி வழங்கி சொர்ண சித்தியை தருவேன், குடும்ப ஒற்றுமையை வழங்குவேன், அனைத்து செல்வங்களையும் வாரி, வாரி வழங்குவேன் என்பதாகும்.

    தம் திருக்கரத்தில் வைத்திருக்கும் டமருகத்தால் பெரும் ஒலியை எழுப்பி அந்த சப்தத்தில் லயித்து தம்மை திரும்பி பார்க்கும் தன்னடியவர்களை நாக பாசத்தால் பிடித்து இழுத்து அவர்களின் சாப, பாப, தோஷங்களை திரிசூலத்தால் நீக்கி அனைத்து நலன்களையும் நிறைவாய் வழங்கி தகுதி இருந்தால் மோட்சமும் தருவேன் என்பதாகும்.

    குருவின், குபேரனின் திசையான வடக்கே அமர்ந்து இறை சக்தி நிறைந்த ஈசானியத்தை நோக்கியவாறு அமர்ந்திருப்பது குருவின், குபேரனின் அருளை பரிபூரணமாக வழங்குவதோடு ஈசானியத்தில் நிறைந்த இறை சக்தியை வருபவர் எளிதாக பெறும்படி அமைக்கப் பட்டுள்ளது மிகவும் சிறப்பானது.

    சொர்ணாகர்ஷன பைரவர் வழிபாடு என்பது வழிபடுபவரின் வாழ்க்கையில் தரித்திரம் தலை காட்டாது காத்து தன, தான்யம், சொர்ணம் முதலிய செல்வ செழிப்பை தரும் சிறப்பு கொண்டது. சொர்ணாகர்ஷன பைரவர், 64 பைரவர்களுக்கும் அப்பாற்பட்டவர். அஷ்ட லட்சுமிகளுக்கும், குபேரருக்கும் நவ நிதிகளையும் கொடுக்கும் அதிபதி. வீட்டு பூஜையறைகளிலும், வழிபாட்டு தலங்களிலும், தங்க, வைர நகை வியாபாரம் செய்யும் கடைகளிலும் வைத்து வழிபட மிகவும் உகந்தவர்.

    இப்பெருமானை வீட்டில் வைத்து தினசரி மூன்று வேலைகளிலும் வழிபட்டு வர எந்த கஷ்டங்களும் நெருங்காது. கஷ்டங்களும் வராது. தொட்டது துலங்கும். சொர்ணம் கொழிக்கும். பவுர்ணமி தோறும் முறைப்படி உள்ளன்போடு இப்பெருமானை பூஜித்து மந்திரம் ஜெபித்து வர தலைமுறை தலைமுறையாக நீடித்து நிற்கக்கூடிய நிறை செல்வம் சேரும்.

    வழிபட வேண்டிய நாட்கள்

    திங்கட்கிழமை மாலை நேரங்கள், மாத பிரதோஷம், தினசரி பிரதோஷ காலங்கள், பவுர்ணமி மற்றும் வளர்பிறை அஷ்டமி நாட்கள், திருவாதிரை நட்சத்திர நாட்கள் இவரை வழிபட மிகவும் உகந்த நாட்கள்.

    அதேபோல் மாதப்பிறப்பு, பிறந்த நட்சத்திர நாட்கள், செவ்வாய், வெள்ளிக்கிழமைகள், வியாழக்கிழமை மாலை நேரம், தேய்பிறை அஷ்டமி, அமாவாசை நாட்களிலும், ஆயில்யம், சுவாதி, மிருகசீரிஷ நட்சத்திர நாட்களிலும் இங்கு வந்து மஹா சொர்ணாகர்ஷன பைரவரை வழிபட மனதில் தோன்றும் எதிர்மறை எண்ணங்கள் மறையும்.

    இனம் புரியாத பயம் தானாய் விலகும். சாப, பாப, தோஷங்கள், கடன் தொல்லைகள் குறையும். தீயவை அனைத்தும் விலகும். நல்லன அனைத்தும் நடக்கும். சனிக்கிழமைகளில் வழிபட சனிக்கிரக தோஷங்கள் யாவும் விலகும். சொர்ணாகர்ஷன பைரவருக்கு தாமரை மாலை, வில்வ மாலை, சந்தன மாலை, மஞ்சள் செவ்வந்தி மாலை சாற்றி வழிபடுவது மிகவும் சிறந்தது.

    சிறப்பு மூலிகைகளை கொண்டு ஹோமம்

    இவ்வாலயத்தில் தேய்பிறை அஷ்டமி, வளர்பிறை அஷ்டமி, பவுர்ணமி நாட்களில் காலை வேளையில் கால பைரவர், அஷ்ட பைரவர், சொர்ணாகர்ஷன பைரவர் ஹோமம் சர்வ காரிய சித்தி, சொர்ண சித்தி தரும் சிறப்பான மூலிகைகளை கொண்டு நடத்தப்படுகிறது. இதில் கலந்து கலந்து கொண்டு குருவருளையும், இறைப்பேரருளையும் பெற்றுச்செல்லலாம்.
    அனுமனே நேரில் வந்து எழுந்தருளியதாக கூறப்படும் ஒரே ஆலயம், நாகப்பட்டினம் மாவட்டம் அனந்தமங்கலத்தில் உள்ள ஸ்ரீதிரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர் திருக்கோவில் ஆகும்.
    சிரஞ்சீவிகள் எழுவரில் ஒருவரான அனுமனுக்கு, அனந்தமங்கலம் நிரந்தர வாசஸ்தலம். ஆதலால் இங்கு இவரை வழிபட கால நேரம் வரையறை இல்லை. எனினும் அவர் அவதரித்த மார்கழி மாத மூல நட்சத்திரம் கூடிய அமாவாசை தினத்திலும், பிரதிமாதம் அமாவாசை தினத்திலும், புதன், வியாழன், சனிக்கிழமைகளில் கேட்டை நட்சத்திரத்திலும், மற்றும் ராகுகாலம், எமகண்டம், அஷ்டமி திதி ஆகிய நேரங்களிலும் அனுமனை வழிபட்டு தீமைகளை விலக்கிக் கொள்ளலாம்.

    நாடெங்கும் அனுமனுக்கு பல்லாயிரக்கணக்கான ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன. அனுமன் மீதான பக்தியாலும், அவரை வழிபடுவதற்காகவும் சிலை வடித்து மக்களால் கட்டப்பட்ட ஆலயங்கள் இவை. ஆனால் அனுமனே நேரில் வந்து எழுந்தருளியதாக கூறப்படும் ஒரே ஆலயம், நாகப்பட்டினம் மாவட்டம் அனந்தமங்கலத்தில் உள்ள ஸ்ரீதிரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர் திருக்கோவில் ஆகும். ராமாயண வரலாற்றுடன் நேரடி தொடர்பு கொண்ட ஆலயம் என்ற சிறப்பை இந்தத் தலம் பெற்றுள்ளது.

    இலங்கையில் யுத்தம் செய்து, சீதையை மீட்ட பின்னர், புஷ்பக விமானம் ஏறி ராமன், சீதை, லட்சுமணன், அனுமன் முதலியோர் அயோத்திக்கு திரும்பினர். வழியில் பரத்வாஜ மகரிஷியின் ஆசிரமத்தில் இறங்கி அனைவரும் விருந்து உண்டனர். அப்போது அங்கு வந்த நாரதர் ராமபிரானை வாழ்த்தினார். பின்னர் அவர் ராமபிரானிடம் ‘ராவணன் அழிந்த பின்னரும் அரக்கர்கள் சிலர் ஆங்காங்கு இருக்கவே செய்கின்றனர். அவர்களில் ரக்தபிந்து, ரக்தராட்சகன் ஆகிய இருவரும் மிகவும் கொடியவர்கள். அவர்கள் தற்சமயம் கடலுக்கடியில் கடுந்தவம் செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களின் தவம் நிறைவடையுமானால் ராவணன் போல வரமும் உரமும் பெற்று உலகை அழித்துவிடுவர். ஆதலால் உலக நன்மையின் பொருட்டு அவர்களை தாங்கள் அழிக்க வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டார்.

    ராமபிரான், ‘நாரதரே! தாங்கள் சொன்னபடி அந்த அரக்கர்களும் அழிக்கப்பட வேண்டியவர்களே. ஆனால் நான் பரதனுக்கு கொடுத்த வாக்குப்படி உடனே அயோத்திக்கு திரும்ப வேண்டும். லட்சுமணனும் என்னை பிரிந்து செல்ல மாட்டான். எனவே அந்த அரக்கர்களை அழிக்க ஆற்ற லுடைய மாவீரன் அனுமனை அனுப்புவோம்’ என்றார்.

    அனைவரும் இதை ஆமோதிக்க அனுமனும் பணிவுடன் தன் ஒப்புதலைத் தெரிவித்தார். அனுமன் சிரஞ்சீவி வரம் பெற்றவர். அளவிலா ஆற்றல் கொண்டவர். அட்டமா சித்திகளும் கற்றவர். எனினும் மாயாவிகளான அரக்கர்களை வெல்ல இது போதாது.

    எனவே திருமால் தன்னுடைய சங்கு, சக்கரத்தையும், பிரம்மா தனது பிரம்ம கபாலத்தையும், ருத்ரன் மழுவையும் அளித்தனர். ராமபிரான் வில்லையும், அம்பையும் வழங்கினார். இப்படி தெய்வங்கள் வழங்கிய ஆயுதங்களைத் தாங்கி அனுமன் பத்து கரங்களுடன் காட்சியளித்தார்.

    கருடாழ்வார் தம் சிறகுகளை அளித்தார். கடைசியாக அங்குவந்த சிவபெருமான், பத்து கரங்களிலும் ஆயுதங்கள் தரித்து நின்றிருந்த அனுமனைப் பார்த்தார். தாம் என்ன தருவது என்று சிந்தித்தார். தம்முடைய சிறப்புக்குரிய மூன்றாவது கண்ணையே அனுமனுக்கு அளித்தார். மூன்று கண்களும் (திரிநேத்ரம்), பத்து கைகளும் (தசபுஜம்) கொண்டு வீரக்கோலத்தில் இருந்த அனுமன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

    கடலுக்கு கீழே தவம் செய்த அசுரர்களையும் அவர் களது படையினரையும் அழித்து துவம்சம் செய்த அனுமன், தனக்கு தரப்பட்ட கடமையை செவ்வனே செய்து முடித்து, ஆனந்தத்துடனும் ராமனை சந்திக்கப் பயணமானார். அப்படி வரும் வழியில் கடற்கரை ஓரத்தில் இயற்கை அழகு நிரம்பிய இத்தலத்தில் ஆனந்தத்துடன் தங்கினார். அப்படி அவர் தங்கிய இடம் ‘ஆனந்தமங்கலம்’ என பெயர் பெற்றது. தற்போது வழக்கில் அனந்தமங்கலம் என்று அழைக்கப்படுகிறது.

    சிதம்பரத்தில் இருந்து சீர்காழி, திருக்கடவூர், தரங்கம்பாடி, காரைக்கால் வழியாக நாகப்பட்டினம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திருக்கடவூர் - தரங்கம் பாடிக்கு இடையே தேசிய நெடுஞ்சாலையிலிருந்து ஒரு கிலோமீட்டர் கிழக்கில் அனந்தமங்கலம் அமைந்துள்ளது. சிதம்பரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய ஊர்களில் இருந்து நேரடி பேருந்து வசதி உள்ளது. அருகாமை ரெயில் நிலையங்கள் மயிலாடுதுறை மற்றும் காரைக்கால்.
    கோயம்புத்தூர் மாவட்டம் சரவணம்பட்டி அருகே உள்ளது, ஜனதா நகர். இங்கு பிரசித்தி பெற்ற வேம்படி சுடலைமாடன் கோவில் இருக்கிறது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்
    கோயம்புத்தூர் மாவட்டம் சரவணம்பட்டி அருகே உள்ளது, ஜனதா நகர். இங்கு பிரசித்தி பெற்ற வேம்படி சுடலைமாடன் கோவில் இருக்கிறது. இந்த ஆலயத்தில் சிவனணைந்த பெருமாள், வேம்படி சுடலை மாடன், பிரம்மசக்தி, பலவேசக்காரன், கருப்பசாமி, சத்திராதி முண்டன், பேச்சியம்மன் ஆகிய தெய்வங்கள் அருள்பாலித்து வருகிறார்கள். இந்தக் கோவிலில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் சிறப்பு பூஜை நடைபெறும்.

    இந்தக் கோவிலின் தலவிருட்சம் வேப்ப மரம் ஆகும். வேம்படி சுடலை மாடன், சிவனணைந்த பெருமாள் உள்ளிட்ட தெய்வங்களை மனமுருகி வழிபட்டால் தீராத நோய்கள் தீருவதுடன், குழந்தை செல்வம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. மேலும் செய்வினை கோளாறு, பேய், பிசாசு தொல்லைகள் நீங்குவதுடன் தொழில் வளமும் பெருகும். இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 3-வது செவ்வாய்க்கிழமையன்று கொடை விழா நடத்தப்படுகிறது.

    இதையொட்டி சீவலப்பேரி, ஆறுமுகமங்கலம், தாமிரபரணி, திருச்செந்தூர், கோவை வனபத்ரகாளியம்மன் கோவில் ஆகிய இடங்களில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டு வேம்படி சுடலை மாடனுக்கு சிறப்பு அபிஷேக பூஜை செய்யப்படும். இரவு 7 மணியளவில் பேச்சியம்மன், பிரம்ம சக்திக்கு சிறப்பு பூஜை நடைபெறும். அதன் பின்னர் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள், கும்மியடித்து பாட்டுப்பாடி முளைப்பாரியை கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு செல்வார்கள்.

    இதனைதொடர்ந்து சுவாமி வரலாற்றை கூறும் விதமாக கணியான் கூத்து, வில்லிசை ஆகியவை நடத்தப்படும். நள்ளிரவு 12 மணியளவில் வேம்படி சுடலை மாடன், பலவேசக்காரன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு ஆடு, கோழி, பன்றி ஆகியவை பலியிடப்படும். அதன்பிறகு சுவாமி வேட்டைக்கு செல்வார். அப்போது வாணவேடிக்கை நடைபெறும். இதையடுத்து பக்தர்களுக்கு சுவாமி அருள்வாக்கு கூறும் நிகழ்ச்சி நடைபெறும்.

    இந்த வேம்படி சுடலை மாடன் கோவிலில், தை மாதம் 3-வது செவ்வாய்க்கிழமை (இன்று) வருஷாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி பகல் 12 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெறுகிறது. இரவு 8 மணியளவில் வேம்படி சுடலை மாடன், சிவனணைந்த பெருமாள், பலவேசக்காரன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.
    ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பவர்கள், ‘தில ஹோமம்’ செய்வது மற்றும் தர்ப்பணம் கொடுப்பது பித்ரு தோஷத்தைப் போக்கும். பித்ரு தோஷ பரிகார தலங்கள் எதுவென்று அறிந்து கொள்ளலாம்.
    ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பவர்கள், ‘தில ஹோமம்’ செய்வது மற்றும் தர்ப்பணம் கொடுப்பது பித்ரு தோஷத்தைப் போக்கும். பித்ரு தோஷ பரிகார தலங்கள் எதுவென்று அறிந்து கொள்ளலாம்.

    * இந்தியா முழுவதும் பன்னிரண்டு ஜோதிர்லிங்க தலங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் தமிழ்நாட்டின் தென் பகுதியில் உள்ள ராமேஸ்வரம். இங்குள்ள ராமநாதர் கோவில் பித்ரு வழிபாட்டிற்கு உகந்த தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. ராவணனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க ராமபிரான், சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலம் இது. ராமேஸ்வரத்தில் 22 தீர்த்தங்கள் உள்ளன. இதில் அக்னி தீர்த்தம் என்பது, ராமேஸ்வரம் கடலைக் குறிக்கும். இது பித்ரு தோஷத்தை போக்கும் ஆற்றல் கொண்ட தீர்த்தமாக கருதப்படுகிறது.

    * ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பவர்கள், ராமேஸ்வரம், திருப்புல்லாணி ஆகிய இடங்களில் ‘தில ஹோமம்’ செய்வது மற்றும் தர்ப்பணம் கொடுப்பது பித்ரு தோஷத்தைப் போக்கும்.

    * ‘திலம்’ என்பதற்கு ‘எள்’ என்று பொருள். மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் சாலையில் பூந்தோட்டம் என்ற ஊர் இருக்கிறது. இங்கிருந்து எரவாஞ்சேரி செல்லும் சாலையில் 2 கிலோமீட்டர் சென்றால், ‘திலதர்ப்பணபுரி’ என்ற ஊர் வரும். இங்கு முக்தீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில்தான் ராமபிரான், தனது தந்தை தசரதர் மற்றும் கழுகு பறவையான ஜடாயு ஆகியோருக்கு தர்ப்பணம் கொடுத்ததாக தல புராணம் சொல்கிறது. இதன் காரணமாகவே இந்த ஊர் ‘திலதர்ப்பணபுரி’ என்றானது. இந்தியாவில் பித்ரு தலங்களாக, ஏழு தலங்கள் குறிப்பிடப்படுகின்றன. அவை, காசி, ராமேஸ்வரம், கயா, திரிவேணி சங்கமம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு மற்றும் திலதர்ப்பணபுரி ஆகும். ராமேஸ்வரத்தில் செய்யப்படும் பித்ருக்கள் சம்பந்தமான அனைத்து பூஜைகளும், திலதர்ப்பணபுரியிலும் செய்யப்படுகின்றன.

    * வட இந்தியாவில் கங்கையுடன் யமுனை, சரஸ்வதி நதி இரண்டும் சங்கமிக்கும் தலம் ‘திரிவேணி சங்கமம்.’ இங்கு, சரஸ்வதி நதி கண்ணுக்குத் தெரிவதில்லை. அதுபோல், தமிழகத்தில் பவானி, காவிரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என மூன்று நதிகளும் கூடும் இடம், ‘தென் திரிவேணி சங்கமம்’ என்று அழைக்கப்படும் பவானி கூடுதுறை ஆகும். இது ஈரோடு மாவட்டத்தில் உள்ளது. இந்த பவானி கூடுதுறையில் கோவில் கொண்டிருப்பவர் சங்கமேஸ்வரர். பாவம் போக்கி புண்ணியம் அளிக்கும் சிறப்புமிக்க தலங்களில் இதுவும் ஒன்று. ஆடி அமாவாசை, தை அமாவாசை நாட்களில் இங்கு நீராடி, பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்வது மிகுந்த விசேஷம்.

    * வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள சவுந்திரநாயகி உடனாய புஷ்பவனேஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் இந்தக் கோவில் இருக்கிறது. முன் காலத்தில் சுச்சோதி என்ற மன்னன், தன்னுடைய முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்காக திருப்புவனம் வந்து வைகையாற்றங்கரையில் வேண்டுதல் செய்துள்ளார். இங்கு இறந்தவர்களின் அஸ்தியைக் கரைத்தால், அவர்களுக்கு பாவ விமோசனம் கிடைக்குமாம். பாண்டிய நாட்டின் பாடல் பெற்ற 14 தலங்களில் திருப்புவனமும் ஒன்று.

    துர்க்கை அம்மன் சயன கோலத்தில் அருள்பாலிக்கும் திருத்தலம் ஒன்று செழியநல்லூரில் உள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    வாழ்வில் மேன்மை பெறவும், துன்பம் நீங்கவும் துர்க்கா தேவியை வணங்க வேண்டும் என்றும், மங்கள ரூபிணியான அவள் தரிசனம் கண்டாலே சர்வ மங்களங்களும் உண்டாகும் என்றும் நமது முன்னோர்கள் வழிகாட்டியுள்ளனர். அந்த துர்க்கையம்மனை ஆலயங்களில் பெரும்பாலும் கோஷ்ட தெய்வமாக சந்நிதி கொண்ட நிலையில் சிவதுர்கையாகவோ அல்லது விஷ்ணு துர்கையாகவோ தரிசிக்கலாம். அபூர்வமாக சில இடங்களில் தனிக்கோயிலிலும், அமர்ந்த கோலத்திலும் காணப்படுவது உண்டு.

    ஆனால் அந்த அம்மன் சயன கோலத்தில் அருள்பாலிக்கும் திருத்தலம் ஒன்று செழியநல்லூரில் உள்ளது. திருநெல்வேலிக்கு தெற்கே 25 கி.மீ. தொலைவில் கங்கைகொண்டான் வழி, பராஞ்சேரி அருகில் உள்ளது செழியநல்லூர்.

    பல வருடங்களுக்கு முன் செழியநல்லூர் பகுதியை செழியன் என்ற சிற்றரசன் ஆண்டு வந்தான். அவன் காவல் தெய்வமாக வடக்கில் செழிய அம்மனையும், கிழக்கில் தர்மசாஸ்தாவையும்,தெற்கில் வலம்புரி விநாயகரையும், மேற்கே தன்னுடைய குல தெய்வமாகிய வன துர்க்கையையும் அமைத்து தினந்தோறும் குடும்பத்துடன் வழிபட்டு வந்தான்.

    ஒருமுறை வனதுர்க்கை வழிபாட்டிற்கு வந்த தருணத்தில் அரசனின் எட்டு வயது பெண் குழந்தை வீடு திரும்பாமல் வனத்திலேயே தங்கிவிட்டது. தனது பெற்றோரைக் காணாது தவித்துக்கொண்டிருந்த அந்தக் குழந்தையின் நகைகளை அபகரிக்க வந்தான் ஒரு திருடன். அச்சத்தில் அலறிய அந்தக் குழந்தை ஓடிவந்து வனதுர்க்கை அம்மனை கட்டிக்கொண்டது.

    திருடன் குழந்தையைப் பிடித்து இழுக்க, குழந்தையுடன் அம்மனின் சிலையும் கீழே சாய்ந்தது. அப்போது துர்க்கை பிரசன்னமாகி திருடனை வதம் செய்ததுடன்,குழந்தையையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டாள். அரசனின் கனவிலும் அந்தத் தகவலைத் தெரிவித்தாள்.

    இப்போதும் அந்த அன்னை சயனக் கோலத்திலே அந்தக் குழந்தையை கல் ரூபத்தில் தனது பக்கத்தில் வைத்து காத்தருள்கிறாள் என்கின்றனர். மேலும் துர்க்கையம்மன் நாகராஜபரிவார தேவதைகளுடன் தல விருட்சமாகிய வேப்பமரத்தின் அடியில், சயனக் கோலத்தில் வெட்ட வெளியில் மேலே வானத்தை பார்த்த நிலையில் பக்தர்களுக்கு காட்சி தருகிறாள்.

    இந்த வேப்பமரத்தின் இலைகள் கசப்பதில்லை என்பது மற்றொரு சிறப்பு. இவற்றை உண்பவருக்கு நோய்கள் தீரும் என்பதும் நம்பிக்கை. இவ்வாலயத்தில் விஷ்ணு துர்க்கை, வலம்புரி விநாயகர், பாலசுப்ரமண்யர் சந்நிதிகளும் உள்ளன.

    இவ்வாலயத்தில் ஆனி மாதத்தில் உத்திராட நட்சத்திரத்தில் வருஷாபிஷேகமும், புரட்டாசி மாதத்தில் நவராத்திரியும், மாசி மாதத்தில் சிவராத்திரியும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சயன துர்க்கையை வழிபடுவோருக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். தீராத நோயும் தீரும்.
    ×