என் மலர்tooltip icon

    கோவில்கள்

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது திருப்பாடகம் என்ற ஊர். காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஊர் இருக்கிறது. இங்கு 108 திவ்ய தேசங்களில் ஒன்றான பாண்டவ தூதப் பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது.
    இந்தக்கோவிலில் மூலவராக வீற்றிருக்கும் பாண்டவ தூதப் பெருமாள், 25 அடி உயரத்தில் அமர்ந்த கோலத்தில் மிகப் பிரமாண்டமாக திருக்காட்சி தருகிறார். தாயார்களாக சத்யபாமா மற்றும் ருக்மணி தேவியர் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். இந்த ஆலயத்தில் உள்ள இறைவனை, பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் மங்களாசாசனம் செய்திருக்கிறார்கள்.

    மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்களிலேயே மிகவும் சிறப்பு மிக்கதாக இருப்பது, கிருஷ்ண அவதாரம் என்றால் அது மிகையல்ல. இந்த அவதாரத்தின் போது, பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் தொடக்கம் முதலே பிரச்சினையாக இருந்தது. ஒரு கட்டத்தில் பாண்டவர்களை சூதாட அழைத்து, அவர்களிடம் இருந்த எல்லாவற்றையும் பறித்துக் கொண்டு, 13 வருடம் வனவாசம் மேற்கொள்ளச் செய்தனர். வனவாசம் முடிந்து வந்ததும், பாண்டவர்கள், தாங்கள் ஆட்சி செய்ய 5 ஊர்களை வாங்கித் தரும்படி கிருஷ்ணரிடம் முறையிட்டனர். அப்படி 5 ஊர்களைத் தரவில்லை என்றால், 5 வீடுகளையாவது கேட்டுப் பெற்று வரும்படி கூறினர்.

    பாண்டவர்கள் கேட்ட 5 வீடுகளைக் கூட கொடுக்கவில்லை என்றால், பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் இடையில் போர் மூண்டுவிடும். அதைத் தவிர்க்கும் பொருட்டு, பாண்டவர்கள் சார்பில் கிருஷ்ண பகவான், கவுரவர்கள் வீற்றிருக்கும் அஸ்தினாபுரம் சபைக்கு தூதனாகச் சென்றார். கிருஷ்ணர்தான், பாண்டவர்களின் மிகப்பெரிய பலம் என்பதை, துரியோதனன் அறிந்திருந்தான். எனவே அவர்களுக்காக தூது வரும் கிருஷ்ணரை அவமதிக்க வேண்டும் என்று நினைத்தான். அதற்காக அஸ்தினாபுரம் அரண்மனையில் கிருஷ்ணர் அமர்வதற்காக ஒரு இடம் ஒதுக்கப்பட்டு, நாற்காலி போடப்பட்டது. முன்பாக அந்த நாற்காலியின் கீழே ஆழமான பள்ளம் தோண்டப்பட்டு, அதன்மேல் பந்தலைப்போட்டு மறைத்தான், துரியோதனன்.

    அவன் திட்டப்படியே அரண்மனைக்குள் வந்த கிருஷ்ணர், தனக்கு ஒதுக்கப்பட்ட நாற்காலியில் போய் அமர்ந்தார். உடனே அந்த நாற்காலி பள்ளத்திற்குள் விழுந்தது. அந்த பள்ளத்திற்குள்ளேயே கிருஷ்ணரை கொன்றுவிட துரியோதனன், தன்னுடைய காவலர்களுக்கு உத்தரவிட்டான். அப்படி ஒரு ஆணை வந்ததும், சில மல்லர்கள், அந்த பள்ளத்திற்குள் குதித்து கிருஷ்ணரை தாக்க முயன்றனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் தன்னுடைய விஸ்வரூபத்தைக் காட்டி ஓங்கி உயர்ந்து நின்றார், கிருஷ்ண பகவான். அதைப் பார்த்து அவையில் இருந்த அனைவருமே மிரண்டு போயினர்.

    பாண்டவர்களுக்காக தூது போன கண்ணன், ‘பாண்டவ தூதப் பெருமாள்’ என்று அழைக்கப்படுகிறார். காஞ்சிபுரத்தில் உள்ள ஆலயத்தில் காணப்படும் கல்வெட்டுகளில் ‘தூதஹரி’ என்று கிருஷ்ணரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. கவுரவர்களின் தந்தையான திருதராஷ்டிரருக்கு கண்பார்வை கிடையாது. ஆனால் அவர் கிருஷ்ணனின் அந்த விஸ்வரூப காட்சியை பார்க்க விரும்பினார். அவருக்கு ஒரு கண நேரம் கண் பார்வை அளித்து, தன்னுடைய விஸ்வரூப காட்சியை கிருஷ்ணர் காட்டி அருளிய தலம் இது என்று சொல்லப்படுகிறது.

    குருசேத்திரப் போர் முடிந்து பல காலங்கள் கடந்த பின்னர், ஜனமேஜயன் என்ற அரசன் ஆட்சி செய்து வந்தான். இவர் அர்ச்சுனனின் பேரனான பரீட்சித்து மகாராஜாவின் மகன் ஆவான். ஜனமேஜயன், ஒரு முறை வைசம்பாயனர் என்ற மகரிஷியிடம் மகாபாரதக் கதையைக் கேட்க வந்தான். அப்போது அவன், கிருஷ்ண பகவான் அஸ்தினாபுரத்தில் எடுத்த விஸ்வரூப தரிசனத்தை, நிலவறையில் அமர்ந்த கோலத்தில் பார்க்க விரும்புவதாகவும், அதற்கான வழிமுறையை கூறும்படியும் ரிஷியிடம் கேட்டான். ரிஷி கூறிய அறிவுரையின்படி, இந்த தலத்திற்கு வந்து அங்குள்ள தீர்த்தத்தில் நீராடி தவம் இருந்தான், ஜனமேஜயன். அவனுக்கு தன்னுடைய பாரத கால தூது கோலத்தை அமர்ந்தபடி காட்டியருளினார், பெருமாள்.

    இந்த ஆலயத்திற்கு அருளாளப் பெருமாள் என்ற ஆச்சாரியார் வந்திருந்தார். அப்போது அவர் ராமானுஜருடன் 18 நாட்கள் வாதம் செய்தார். பின்னர் ராமானுஜரை சரணடைந்தார். இவர் நிறைய மகான்களுக்கு ஆச்சாரியராக இருந்திருக்கிறார். அதே போல் மணவாள மாமுனிகளும் இந்த ஆலயத்திற்கு எழுந்தருளியுள்ளார்.

    27 நட்சத்திரங்களில் ஒருத்தியான ரோகிணி தேவி, சந்திரனை மணந்து கொள்வதற்காக கிருஷ்ண பகவானை வழிபாடு செய்தாள். அதன்படி சந்திரனை மணம் முடித்தாள். ஆனாலும் அவளோடு மற்ற 26 நட்சத்திர தேவியரையும் மணம் முடிக்கும் சூழல் சந்திரனுக்கு ஏற்பட்டது. அப்போதும் கூட ஞான சக்திகளைக் கொண்ட ரோகிணியை முதலாவதாகவும், அக்னி சக்திகளை கொண்ட கார்த்திகையை அடுத்ததாகவும் மணந்த பிறகே, ஏனைய நட்சத்திர தேவிகளை சந்திரன் மணந்தான். ரோகிணி இந்த ஆலயத்தில், தனக்கு ஞான சக்திகளையும், விஸ்வரூப தரிசனத்தையும் தந்தருளிய பெருமாளை சூட்சும வடிவில் தினமும் வழிபாடு செய்வதாக ஐதீகம்.
    தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் சாலையில்5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருநாகேஸ்வரம். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் சாலையில்5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருநாகேஸ்வரம். இங்கு அமைந்துள்ள ராகு பகவான் கோவில் நாகராஜன் பூஜித்த தலமாகும். அதனால் இத்தலத்திற்கு திருநாகேஸ்வரம் என்ற பெயர் வந்தது.

    ராகு பகவானுக்கு தென்புறமாக ஜே‌‌ஷ்டா தேவியும், வலப்புறமாக கஜலட்சுமி நர்த்தன கணபதியும் உள்ளனர். உட்பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தியும் அவருக்கு எதிரில் சப்த மாதாக்கள் இருக்க இந்த கோவில் தல வரலாற்றை இங்கே காணலாம்.

    இந்த தலம், நள மகாராஜாவுக்கு ஏழரை நாட்கள் சனி நீக்கிய தலம் ஆகும். சனீஸ்வர பகவான், ஈஸ்வரனை நோக்கி தனி சன்னதி கொண்டுள்ள தலம். நவக்கிரக சன்னதியும் தனியாக அமைந்து இருக்கிறது. இத்தலத்தில் உள்ள அம்பாள் தவக்கோலத்தில் இருப்பதையும், சகல மூர்த்திகளும் அம்பாளை சுற்றி இருப்பதையும் காணலாம்.

    வடக்கு பிரகாரத்தை கடந்து அன்னை கிரிகுஜாம்பாள் ஆலயத்துக்கு செல்ல வேண்டும். இங்கு எழுந்தருளியிருக்கும் தேவி சுயம்புமூர்த்தியாக திகழ்கின்றாள். மலைமகள், அலைமகள், கலைமகள் என மூவரும் ஒன்றாக எழுந்தருளிய சக்தி பீடம் இது. அம்பாளுக்கு அபிஷேகம் செய்வது கிடையாது. புனுகு சட்டம் தான் சாத்தப்படுகிறது.

    கவுதம முனிவரின் மனைவி அகலிகையிடம், இந்திரன் தவறாக நடந்து கொள்ள அதை அறிந்த முனிவர் நீ துர்நாற்றம் உடைய ஒரு பூனையாக மாறக் கடவாய் என்று சாபமிட்டார். அந்த சாபம் நீங்கிட இந்திரன், திருநாகேஸ்வரம் வந்து அன்னை கிரிகுஜாம்பிகையை அர்த்தஜாம பூஜை முடிந்ததும் தரிசனம் செய்ய சாபம் நீங்கி பழைய உருவம் பெற்று நிம்மதி அடைந்ததாக இக்கோவில் தலவரலாறு கூறுகிறது.

    திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய மூவராலும் பாடல் பெற்ற தலம் திருநாகேஸ்வரம். நாகதோ‌‌ஷமும், ராகுதோ‌‌ஷமும் உள்ளவர்கள் இங்கே வந்து வணங்கினால் தோ‌‌ஷம் நிவர்த்தி கட்டாயம் கிடைக்கிறது என்கிறார்கள். தஞ்சை மாவட்டத்தில் உள்ள புகழ்மிக்க திருத்தலங்களில் திருநாகேஸ்வரமும் ஒன்று.

    இந்தக் கோவிலின் வெளிப்பிரகாரத்தில் ராகுபகவான் அவரது இரு தேவியருடன் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் ராகுபகவான் நாகநாத சுவாமியை வழிபட்டதோடு இத்தலத்தில் தன்னையும் வழிபடுவோருக்கு பல நன்மைகளை அருளும் வரமும் பெற்று திகழ்கிறார். ராகு பகவான், சிவபெருமானை பூஜித்த திருத்தலமாக திருநாகேஸ்வரம் திகழ்வதால் வடநாட்டில் இருந்தும் பக்தர்கள் இங்கே குடும்பத்தோடு வருகிறார்கள்.

    ஜோதிட முறையில் பார்க்கும்போது ராகு பெருமானின் பெருமை அளவிடற்கரியது ஆகும். பூமியானது சூரியனைச் சுற்றி வருகிறது. தனது பாதையில் சந்திரன் பூமியை இரண்டு இடங்களில் சந்திக்கிறது. சந்திரன் மேல் நோக்கி செல்லும்போது பூமியின் கதியில் குறுக்கிடும் இடம் ராகு எனவும், சந்திரன் கீழ்நோக்கி வருகிறபோது பூமியின் கதியில் குறுக்கிடும் இடம் கேது எனவும் பெயர் பெறுகிறது.

    இவை இரண்டும் பூமிக்கு மேலும், கீழும் ஒரே நேர்கோட்டில் அதாவது 180 டிகிரி வித்தியாசத்தில் உள்ளதால் எதிரெதிராக அமைகின்றன. நவக்கிரகங்களில் சனியை விட செவ்வாயும், செவ்வாயை விட புதனும், புதனை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும், சந்திரனைவிட சூரியனும் இவர்கள் அனைவரையும் விட ராகுவும், கேதுவும் பலம் பொருந்தி விளங்குகின்றனர்.

    சந்திர, சூரியனை பலம் இழக்கும்படியும். ஒளி குன்றும்படியும் கட்டுப்படுத்தும் ஆற்றல் ராகு-கேதுவுக்கு உண்டு. ராகுவுக்கு எந்த வீடும் சொந்தமாக இல்லை. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது போல ராகு இருந்து வருகிறார். ராகு யோகத்திற்கு அதிபதியாவார். ராகு நல்ல நிலையில் அமைந்திருந்தால் நல்ல பலன்கள் நிறைய கிடைக்கும்.

    மே‌‌ஷம், ரி‌‌ஷபம், கடகம், கன்னி மற்றும் மகரம் என்ற ஐந்து இடங்களில் ராகு இருந்து அவருக்கு கேந்திரங்களில் கிரகம் இருந்தால் பருவத யோகம் எனப்படும். அதன்படி குறிப்பிட்ட ஜாதகர் சீமான் ஆகவும், அரசனுக்கு ஒப்பாகவும் வாழ்வார். ஒருவரது ஜாதகத்தில் ராகு நல்ல இடத்தில் இருந்து விட்டால் நல்ல மனைவி. நல்ல குடும்பம், நல்ல வேலைக்காரர்கள் ஆட்சி மற்றும் செல்வாக்கு முதலியன அமையும். ஆங்கிலம் போன்ற அந்நிய மொழிகளில் தேர்ச்சி பெறுவதற்கும் ராகுவே காரணம் ஆகிறார்.

    மருந்து, ரசாயனம், நூதன தொழில்நுட்ப கருவிகள் போன்றவற்றிற்கும் அவ்வப்போது மாறிவரும் நாகரீகத்திற்கும் ராகுவுடன் இணைந்த சுக்கிரனே காரணமாகிறார். அரசியல், செல்வாக்கு, ஆட்சி உரிமை போன்றவற்றிற்கும் ராகுவின் அனுக்கிரகம் மிகவும் தேவை. அணுகூல ராகு, கீழான ஒருவனையும் சக்கரவர்த்தி ஆக்கி விடுவார் என்று பூர்வ பாராசாரியம் என்னும் ஜோதிட நூல் கூறுகிறது.

    மந்திர ஜாலம், இந்திரஜாலம், கண்கட்டி வித்தை போன்ற வித்தைகளும் ராகுவின் அனுகிரகத்தால் கிட்டும். ராகு, ஒருவனை குபேரபுரிக்கும் அழைத்துச் சென்று விடுவார். ராகு தோ‌‌ஷமுடையவராய் இருந்து விட்டால் மிகவும் கொடூரமான பலன்கள் விளையும். ஐந்தாமிடம் ராகுவால் புத்திர தோ‌‌ஷம் ஏற்படுகிறது.

    சிறந்த சிவபக்த கிரகமாகிய ராகு, ராமேஸ்வரம், ஸ்ரீ காளஹஸ்தி ஆகிய இடங்களில் மேன்மை பெற்று விளங்கியபோதிலும் திருநாகேஸ்வரத்தில் மட்டுமே ராகு தனது இரு தேவியருடன் தனிக்கோவில் கொண்டு தன்னை வழிபடும் மக்களுக்கு அனைத்து நலன்களையும் அருளி வருவதைக் காணலாம். ஏழையையும் குபேரனாக்கும் ராகு தலம் இது என்பதால் நீங்களும் ஒருமுறை இங்கு சென்று வாருங்களேன்.

    கொள்ளை அழகு தரும் கோவில் சிற்பங்கள்

    திருநாகேஸ்வரம் ராகு கோவிலில் உள்ள தூண்களில் சிற்ப அமைப்பு ஆச்சரியப்படத்தக்கதாகவே இருக்கிறது. இங்குள்ள தூண்களிலும், அந்த தூண்களில் காணப்படுகின்ற சிற்பங்களையும் அந்த காலத்தில் நமது சிற்பிகள் மிகவும் அருமையாக செதுக்கியுள்ளனர். சிம்மம், தூணைத் தாங்குவது போன்று வடிவமைத்துள்ளது சிறப்பான அம்சம். மற்ற கோவில்களில்,, தூண்களின் மேலே சிம்மம் இருக்கும். இங்கு சிம்மம் கீழே செதுக்கப்பட்டிருப்பது கொள்ளை அழகு.
    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ளது திருச்சேறை என்ற ஊரில் சாரபரமேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ளது திருச்சேறை என்ற ஊர். இங்கு சாரபரமேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்தல மூலவரின் திருநாமம் ‘சாரபரமேஸ்வரர், செந்நெறியப்பர்’ என்பதாகும். அம்பாளிள் திருநாமம், ‘ஞானாம்பிகை, ஞானவல்லி’ என்பதாகும். சோழர் காலத்தில் கட்டப்பட்டதாக அறியப்படும் இந்தக் கோவில், சிவபெருமானின் தேவாரப் பாடல் பெற்ற 274 தலங்களில், 158-வது தலமாகும். இங்குள்ள மூலவர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆண்டு தோறும் மாசி மாதம் 13, 14, 15 ஆகிய தேதிகளில், இறைவன் மீதும், இறைவி மீதும் சூரியனின் ஒளிக் கதிர்கள் விழுகின்றன.

    இத்தல இறைவன், நெறிப்படுத்திய வாழ்க்கையில் ஞானத்தை அருள்பவர். எனவே செந்நெறியப்பர் என்று பெயர் பெற்றார். அவருக்கு துணையாக ஞானத்தை வழங்குவதால், அம்பாள் ‘ஞானாம்பிகை’ என்று அழைக்கப்படுகிறார். இந்தக் கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் மொட்டை கோபுரமும், அதையடுத்து விசாலமான வெளிப் பிரகாரமும் உள்ளன. வெளிப் பிரகாரத்தின் வடக்குப் பகுதியில் இறைவியின் சன்னிதியும், ஆலய தல விருட்சமான மாவிலங்கை மரமும் உள்ளது. இந்த விருட்சத்தை மகாலிங்க மரம் என்றும் கூறுவார்கள்.

    மொட்டை கோபுரத்தின் உள்ளே நுழைந்ததும் வலதுபுறம் சிவபெருமான், பார்வதியின் சுதை வடிவ திருமேனிகள் உள்ளன. அடுத்துள்ள ராஜகோபுரத்தைத் தாண்டியதும், சிறப்பு மண்டபமும், மகாமண்ட பமும் உள்ளன. அடுத்துள்ள அர்த்த மண்டப நுழைவு வாசலில் துவார பாலகர்கள் அருள்பாலிக்க, அடுத்துள்ள கருவறையில் இறைவன் சாரபரமேஸ்வரர் லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார்.

    இந்த ஆலயத்தில் மூன்று தீர்த்தங்கள் உள்ளன. முதல் தீர்த்தம் ‘பிந்து சுதா தீர்த்தம்.’ இது கோவிலின் உள்ளே அமைந்துள்ள கிணறு ஆகும். அமுதத்தில் ஒரு துளி விழுந்ததால் ஏற்பட்ட தீர்த்தம் இது. இரண்டாவது ‘ஞான தீர்த்தம்.’ இது ஆலயத்தின் எதிரே உள்ள திருக்குளம் ஆகும். மூன்றாவது தீர்த்தமாக ‘மார்க்கண்டேய தீர்த்தம்’ விளங்குகிறது. இது ஆலய தெப்பக்குளம் ஆகும். கோவில் வெளிப்பிரகாரத்தில் மூலவருக்கு இடது பக்கம் இறைவியின் சன்னிதி இருக்கிறது. இந்த ஆலயத்தில் மட்டுமே, சிவ துர்க்கை, வைஷ்ணவி துர்க்கை, விஷ்ணு துர்க்கை என்று, மூன்று துர்க்கை அம்மன்கள் அருள்பாலித்து வருகின்றனர். ஆலய உட்பிரகாரத்தில் விநாயகர், நடராஜர், இடபாரூடர், தட்சிணாமூர்த்தி, கால பைரவர், துர்க்கை, சூரியன், சனி பகவான் ஆகியோரது சன்னிதிகள் இருக்கின்றன.

    மகா சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை ஆகிய திருவிழாக்கள் இங்கு சிறப்புடன் நடைபெறுகிறது. இத்தலத்து சாரபரமேஸ்வரரை வணங்கினால் கடன் நீங்கி, வறுமை விலகி, செல்வ வளம் பெருகும், பிணி தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தலவிருட்சமான மாவிலங்கை மரத்தில் வருடத்தின் நான்கு மாதங்கள் வெறும் இலைகளாகவும், அடுத்த நான்கு மாதங்கள் வெள்ளை பூக்களாகவும், அதற்கடுத்த நான்கு மாதங்கள் பூ, இலை எதுவுமின்றியும் காணப்படுவது இந்த கோவிலின் சிறப்பாக கருதப்படுகிறது.

    வறுமை போக்கும் ஈசன்
    கடன் நிவர்த்தி செய்யும் ரிண விமோசன லிங்கேஸ்வரர், இந்த ஆலயத்தின் சிறப்பாகும். மார்க்கண்டேய முனிவர், தமது ஆத்மார்த்த மூர்த்தியாக உட்பிரகாரத்தில், விநாயகருக்கு அருகில் ஒரு லிங்கம் அமைத்து வணங்கி வந்தார். அந்த லிங்கமே ‘கடன் நிவர்த்தீஸ்வரர்’ என்ற பெயரில் விளங்குகிறார். வடமொழியில் ‘ரிணவிமோசன லிங்கேஸ்வரர்’ ஆவார். வறுமை வராமல் இருக்க, வறுமையை நீக்கி செம்மையான வாழ்வு அளிக்கும் இறைவனே, ரிண விமோசன லிங்கேஸ்வரர் ஆவார். இத்தலத்தில் பரிகார தெய்வமாக இவர் இருக்கிறார்.

    பொதுவாக மனிதனாகப் பிறந்தவருக்கு பிறவிக்கடனும், இப்பிறவியில் பொருள் கடனுமாக இரண்டு கடன் உண்டு. ரிண விமோசன லிங்கேஸ்வரரை முறையாக வழிபட்டால், இந்த இரண்டு கடன்களிலிருந்தும் விடுபடலாம். தொடர்ந்து 10 திங்கட்கிழமைகள் இவருக்கு அர்ச்சனை செய்து, 11-வது வார முடிவில் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தால் உரிய பலன் கிடைக்கும்.

    அமைவிடம்

    கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் கும்பகோணத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, திருச்சேறை திருத்தலம். இங்கு செல்ல கும்பகோணத்தில் இருந்து பேருந்து வசதி உள்ளது.
    மூர்த்தி, தலம், தீர்த்தம், விருட்சம், தவம் ஆகிய ஐம்பெரும் சிறப்பம்சங்களோடு, மூவரால் பாடல் பெற்ற புராணப் பெருமைகளையும் கொண்டது இந்த ஆலயம். தேவாரப் பாடல்பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களுள் இது 16-வது தலம்.
    பார்வதி தேவி, பூமியில் தாட்சாயணி என்ற பெயரில் தட்சனின் மகளாகப் பிறந்திருந்தாள். அப்போது சிவபெருமானின் உத்தரவை மீறி, தட்சன் நடத்திய யாகத்திற்குச் சென்றாள், தாட்சாயணி. இதனால் சிவபெருமானின் சாபத்திற்கு ஆளாகி, மீண்டும் சாதாரணப் பெண்ணாக பூமியில் பிறக்கும் நிலைக்கு தள்ளப்பட்டாள். அவள் பூமியில் பிறந்து, சிவபெருமானை நினைத்து கடும் தவம் புரிந்தாள். அந்த இடம் ‘திருப்பாச்சூர்.’ இங்கு தங்காதலி உடனாய வாசீஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள இறைவனையும், இறைவியையும் வழிபாடு செய்து வந்தால், தம்பதியரிடையே ஒற்றுமை கூடும் என்பது நம்பிக்கை.

    மூர்த்தி, தலம், தீர்த்தம், விருட்சம், தவம் ஆகிய ஐம்பெரும் சிறப்பம்சங்களோடு, மூவரால் பாடல் பெற்ற புராணப் பெருமைகளையும் கொண்டது இந்த ஆலயம். தேவாரப் பாடல்பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களுள் இது 16-வது தலம்.

    இந்தக் கோவிலை கரிகால் பெருவளத்தான் கட்டியதாக கூறப்படுகிறது. குறும்பன் என்ற சிற்றரசன், கரிகால் பெருவளத்தானுக்குக் கப்பம் கட்டி ஆட்சிசெய்து வந்தான். திடீரென கப்பம் செலுத்த மறுத்தான். இதனால் சிற்றரசன் மீது போர் தொடுத்தான், கரிகால் சோழன். குறும்பனும் தம் குலதெய்வமான காளி தேவியை வணங்கி போர் புரியத் தொடங்கினான். அவனுக்கு உதவியாக காளிதேவி விண்ணிலிருந்து அம்புகளை எய்து சோழர்படை வீரர்களை அழித்தாள். விண்ணிலிருந்து பாய்ந்து வந்த அம்புகளும், அவற்றை எய்யும் காளிதேவியும் சோழர்படை வீரர்கள் கண்களுக்குப் புலப்படவேயில்லை.

    இதனால், அம்புகளை எதிர்கொள்ள முடியாமல் அனைத்து சோழர்படை வீரர்களும் போரில் கொல்லப்பட்டனர். சோழர் படைத்தளபதி மட்டும் உயிருடன் இருந்தார். அவரை வரவழைத்த குறும்பன், “உன் மன்னன் போருக்கு வந்தாலும் கொல்லப்படுவது உறுதி. இந்தத் தகவலை சொல்வதற்குத்தான் உன்னை உயிரோடு விட்டுள்ளேன். இதை கரிகாலனிடம் போய்ச் சொல்” என்று திருப்பி அனுப்பினான்.

    நடந்ததை கரிகாலனிடம் கூறினார் தளபதி. தம் படை வீரர்கள் மாண்டதையறிந்து வேதனையுற்ற கரிகாலன், படை திரட்டிக் கொண்டு போருக்கு விரைந்தான். கல்மூங்கில் புதர்கள் நிறைந்த இப்பகுதிக்கு வந்தபோது, சிற்றரசனுக்கு தம்முடைய படையை தோற்கடிக்கும் பெரிய ஆற்றல் எப்படி வந்தது என்ற வியப்புடன், சிவபெருமானை நினைத்து வேண்டினான்.

    அப்போது சிவபெருமான் அசரீரியாய் தன் பக்தனுக்கு ஆறுதல் கூறினார். “கவலைகொள்ள வேண்டாம் மன்னா.. நான் உன் அருகிலேயே இருக்கிறேன். சிற்றரசனுக்கு அவன் குலதெய்வம் காளிதேவி உதவிபுரிகிறாள். உன்னை இங்கு வரவழைக்கவே இந்த நிகழ்வுகள் நடந்தேறின. குறும்பனுக்கு இந்த தகவல் தெரியாது. நான் சொன்ன பிறகு போரைத் தொடங்கு. நீ வெற்றி கொள்வாய்!” என்றார்.

    பின்னர் ஆவேசமாகவுள்ள காளிதேவியை சாந்தப்படுத்த இரண்டு தங்கச் சங்கிலிகளுடன் நந்தியை அனுப்பினார் சிவபெருமான். தங்கச் சங்கிலியைக் கண்டதும் சினம் தணிந்து சிரித்தாள் காளி. அவளை தங்கச் சங்கிலியால் கட்டி அழைத்து வந்து, ஓரிடத்தில் உட்கார வைத்தார் நந்தி.

    இதைத் தொடர்ந்து சிவபெருமான் கரிகாலனிடம், “இப்போது நீ போரைத் தொடங்கு” என்றார். மூங்கில் புதர்கள் மத்தியில் மறைந்திருந்தபடியே ஒற்றன் மூலம் போருக்கு தகவல் அனுப்பினான் கரிகாலன். குறும்பனும் போர்புரிய சம்மதித்தான். கடும் போரில் கரிகாலன் வெற்றிபெற்றான். போரில் தோற்ற குறும்பனின் சொத்துகள் அனைத்தையும் ஈசனுக்குரியதாக ஆக்கினான் கரிகாலன்.

    தமக்கருகில் இருப்பதாய்ச்சொன்ன ஈசனை மூங்கில் காட்டுக்குள் தேடியலைந்தான். எங்கு தேடியும் ஈசன் தென்படவில்லை. அங்கிருந்த மூங்கில் காட்டில் வசித்த காட்டுவாசி களிடம் கேட்டான். அவர்கள், ‘சிவலிங்கம் இருக்குமிடம் எங்களுக்குத் தெரியாது. ஆனால் ஒரு புதருக்குள் பசு மாடு செல்லும். அப்போது மூங்கில் மரங்கள் விலகி நிற்கும். மாடு திரும்பிச் சென்றதும் மூங்கில் மரங்கள் தானாக மூடிவிடும்’ என்றுகூறி அந்த புதரைக் காட்டினர்.

    அங்கு சென்று மூங்கில் வெட்ட பயன்படுத்தப்படும் ‘வாசி’ என்ற அரிவாளால் வெட்டிக்கொண்டே இருந்தான் மன்னன். அப்போதும் லிங்கத்தைக் காணாது சலிப்படைந்த கரிகாலன் ஆவேசமாக ஒரு மூங்கில் மரத்தை வெட்டினான். திடீரென ரத்தம் பீறிட்டுக்கொண்டு வந்தது. திடுக்கிட்டு அருகில் சென்று பார்த்தான். சுயம்புலிங்கம் நெற்றியில் வெட்டுப்பட்டு ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. உள்ளம் உருக ஈசனிடம் மன்னிப்புக் கேட்டதும் ரத்தம் வடிவது நின்றது. இறைவனின் கருணைக்கு தாம் முற்றிலும் ஆட்பட்டுவிட்டோம் என்பதை அறிந்த கரிகாலன், அவ்விடத்திலேயே ஈசனுக்கு ஆலயம் நிர்மாணிக்க உறுதிபூண்டான்.

    ஆலயப் பணி தொடங்கிவிட்டது. ஆனால் போரில் தோற்றவர்கள் கோவில் எழுப்ப இடையூறு கொடுக்கத் தொடங்கினர். இதனால் திருப்பணி மந்தமானது. கரிகாலன் அடிக்கடி வருகை புரிந்து தொல்லை கொடுத்தவர்களை விரட்டியடித்து, மேற்பார்வையிட்டு கோவில் நிர்மாணப்பணிகளை துரிதப்படுத்தினான். திருப்பணி நிறைவு பெற்று கம்பீரமாக ஆலயம் உருப்பெற்றது. புராணப்பெருமையும், சரித்திரப் பின்னணியும் கொண்ட ஒப்பற்ற தலம் இது. 1500 ஆண்டு பழமை வாய்ந்த இந்த ஆலயத்தின் இறைவன் திருநாமம் வாசீஸ்வரர் ஆகும்.

    இத்திருத்தலத்தில் அம்பாள் தினமும் ஈசனுக்கு அபிஷேகம்செய்து வழிபடுவதாக ஐதீகம். ஆகவே பிரதோஷத்தின் போதும், இதர உற்சவங்களின்போதும் முதலில் அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. பின்னரே ஈசனுக்கு அபிஷேகம் நடைபெறும். அம்பாள் சிவனுக்கு வலப்புறம் உள்ளதால், இத்திருக்கோவில் திருமணத்தடை நீக்கும் தலமாக விளங்குகிறது.

    இவ்வாலயத்தில் ஐயாயிரம் வருட பழமையான மூங்கில் மரம், தல விருட்சமாக உள்ளது. அர்த்த மண்டபத்தில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்கரம் உள்ளது. வெளிப்பிரகாரத்தில், வடமேற்கில் சொர்ண காளி கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார். அருகே வசந்த மண்டபம் செல்லும்வழியில் இரட்டைக் காளியும், மண்டபத்தினுள் மிகப்பெரிய குபேரலிங்கமும் உள்ளது. இவ்வாலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    வளம் சேர்க்கும் 11 விநாயகர்

    புராண காலத்தின் போது, திரிபுராந்தர்களை அழிக்கச்சென்ற சிவன், விநாயகரை வணங்காமல் புறப்பட்டு விட்டார். இதனால் வழியில் தேர் சக்கரத்தின் அச்சு முறிந்து விட்டது. அத்தோடு ஒரு சபையை அமைத்த விநாயகர், ‘தம்மை வணங்காமல் சென்றது ஏன்?’ என்று சிவபெருமானிடம் விசாரணை செய்தார். அதனடிப்படையில் இவ்வாலயத்தில் 11 விநாயகர்கள் வீற்றிருக்கும் ‘விநாயகர் சபை’ இருக்கிறது. இந்த ஏகாதச விநாயகர் சபை வழிபாடு மிகுந்த பலனளிக்கக்கூடியது.

    திருப்பதி வெங்கடாஜலபதி தம் திருமணத்திற்காக வாங்கிய கடனை அடைக்க, இந்த விநாயகர் சபை வழிபாட்டை மேற்கொண்ட பிறகுதான் வழிபிறந்தது என்பதாகவும் ஒரு கதை சொல்லப்படுகிறது. தம் திருமணத்தின்போது குபேரனிடம், வெங்கடாஜலபதி கடன் வாங்கினார். எவ்வளவு முயற்சித்தும் கடனை அடைக்க முடியவில்லை. இதற்கு காரணம் என்ன என்று தெரிந்து கொள்வதற்காக, வெங்கடாஜலபதி சிவபெருமானை வழிபட்டார்.

    அதற்கு ஈசன், “திருமணத்தின்போது ‘பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க’ என வாழ்த்துவார்கள். 16 என்பது பதினாறு வகை செல்வங்களைக் குறிக்கும். நீங்கள் மச்ச அவதாரத்தின்போது அசுரர்களைக் கொன்றதால் ஏற்பட்ட தோஷம் காரணமாக, 11 வகை செல்வங்களை இழந்துவிட்டீர்கள். இப்போது ஐந்து வகை செல்வங்களே தங்களிடம் உள்ளன. இழந்த செல்வங்களைப் பெற விநாயகர் சபையிலுள்ள வலம்புரி விநாயகருக்கு 11 தேங்காய் கொண்டு தொடுக்கப்பட்ட மாலை, 11 வாழைப்பழம் கொண்டு தொடுக்கப்பட்ட மாலை, ஒரு அருகம்புல் மாலை அணிவித்து, 11 நெய் தீபமேற்றி பிரார்த்தித்துக் கொண்டால் மூன்று மாதங்களுக்குள் இழந்த சொத்துகளைத் திரும்பப் பெறலாம். அதன் மூலம் கடனை அடைக்க வழிபிறக்கும்” என்று அறிவுறுத்தினார்.

    அதன்படி இந்த விநாயகர் சபையில் வழிபாடுகளை மேற்கொண்டாராம், வெங்கடாஜலபதி. அதன்பிறகே, கடனைத் திரும்பச் செலுத்துவதற்கான வழிகள் ஏற்பட்டனவாம். பக்தர்களும் இங்குள்ள விநாயகரை வழிபட்டால், கடன் தொல்லை நீங்கும். இழந்த செல்வங்கள் மீண்டும் கிட்டும், வியாபாரம் பெருகும் என்று நம்புகிறார்கள்.

    தாழம்பூ வழிபாடு

    தம்முள் யார் பெரியவர் என பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் ஏற்பட்ட போட்டியில், நடுவராய் விஸ்வரூபமெடுத்த சிவபெருமானின் தலைமுடியைக் கண்டதாகப் (பிரம்மாவுக்கு ஆதரவாக) பொய் சொன்ன தாழம்பூவை பூஜைகளிலிருந்து ஒதுக்கிவைத்தார் சிவபெருமான். பின்னர் சிவனிடம் மன்னிப்புக்கேட்டு தாழம்பூ அடைக்கலம் வேண்டவே சிவராத்திரி நாளில் மட்டும் தனது பூஜைக்குப் பயன்படுத்தும்படி வரம் கொடுத்தார். அதனடிப்படையில் இக்கோவிலில் சிவராத்திரி அன்று மட்டும் இரவு ஒரு கால பூஜையில் மட்டும் தாழம்பூவை சிவனின் உச்சியில் வைத்துப் பூஜை செய்கின்றனர். இந்த பூஜையில் பங்கேற்று வழிபட்டால் ஆணவம், பொய் சொல்லும் குணம் நீங்கிவிடும்.

    அமைவிடம்

    திருவள்ளூர் மாவட்டம், சென்னை- அரக்கோணம் ரெயில் மார்க்கத்தில் திருவள்ளூர் ரெயில் நிலையத்திலிருந்து 5 கி.மீ., திருவள்ளூர் பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் திருப்பாச்சூர் உள்ளது. பேருந்து, ஆட்டோ வசதிகள் உள்ளன.
    நாகர்கோவில் பெயர் வர காரணமான நாகராஜா கோவில், நகரின் மைய பகுதியில் அமைந்துள்ளது. மூலவராக உள்ள நாகராஜா சுயம்புவாக உருவானதாக ஐதீகம்.
    நாகர்கோவில் பெயர் வர காரணமான நாகராஜா கோவில், நகரின் மைய பகுதியில் அமைந்துள்ளது. நாகராஜா கோவிலில் 2 கருவறைகள் உள்ளன. ஒரு கருவறையில் நாகராஜரும், மற்றொரு கருவறையில் அனந்த கிரு‌‌ஷ்ணனும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். மூலவராக உள்ள நாகராஜா சுயம்புவாக உருவானதாக ஐதீகம். சுயம்பு வடிவில் உள்ள சுவாமிக்கு 5 தலைகளை கொண்ட ஐம்பொன் நாகர் கவசம் அணிவிக்கப்பட்டு இருக்கும்.

    தலப்புராணம்

    நாகராஜா கோவிலுக்கு என்று தனியாக தலப்புராணம் கிடையாது. இது சமண கோவிலாக இருந்துள்ளது. கி.பி. 16-ம் நூற்றாண்டு வரை சமண பள்ளியாக இருந்த இந்த கோவிலின் வழிபாடு பற்றிய சான்றுகள் இல்லை. ஆரம்ப காலத்தில் நாகராஜா என்னும் தர்ணேந்திரன் இந்த கோவிலில் முக்கிய தெய்வமாக இருந்துள்ளார்.

    தர்ணேந்திரன் பற்றி சமண கதைகள் உண்டு. அதாவது, சமணத்தின் 23-ம் தீர்த்தங்கரர் பார்சுவநாதர். இவருக்கு பிறவிகள்தோறும் துன்பம் அளித்தவன் சமடன். இவன் கடைசி பிறவியில் மகிபாலன் என்ற பெயரில் பிறக்கிறான். மகிபாலனுக்கு பேரனாக பார்சுவநாதர் உள்ளார். ஒரு நாள் மகிபாலன் ஒரு மரக்கட்டையை தீயில் போட முயன்றான். அப்போது சிறுவனாக இருந்த பார்சுவநாதர் அந்த மரக்கட்டையில் 2 பாம்புகள் இருப்பதாகவும், எனவே அதை தீயில் போடாதே என்றும் கூறி தடுக்க முயன்றார்.

    ஆனால் மகிபாலன் கேட்கவில்லை. கட்டையை தீயில் போட்டுவிட்டான். இதனால் 2 பாம்புகளும் தீயில் எரிந்து இறந்தன. அதன் பிறகு பார்சுவநாதர் மந்திரம் ஓதி இறந்த பாம்புகளை மீண்டும் உயிர்ப்பிக்க செய்தார். அதில் ஒன்றுதான் நாகராஜனாகவும் (தர்ணேந்திரன்) மற்றொரு பாம்பு நாகராணியாகவும் (பத்மாவதி) பிறந்தன. இதன்படி கோவிலில் தெற்கு கருவறையில் இருக்கும் நாகராஜர்தான் தர்ணேந்திரன் ஆவார்.

    கட்டுமானம்

    இதுதவிர இந்த கோவில் கட்டுமானம் தொடர்பாக சில தகவல்கள் உள்ளன. அதாவது இந்த கோவிலை முதலில் வை‌‌ஷ்ணவ கோவிலாக கட்ட தொடங்கியவர் வீர உதயமார்த்தாண்டன் என்ற அரசர் ஆவார். இவர், 1516 முதல் 1585-ம் ஆண்டு வரை உள்ள காலகட்டத்தில் சோழகுலவல்லிபுரம் என்ற களக்காட்டை (திருநெல்வேலி மாவட்டம்) தலைநகராக கொண்டு வேணாட்டை ஆட்சி செய்து வந்தார். இந்த அரசனுக்கு தீர்க்க முடியாத சரும நோய் இருந்ததாம். இந்த நோயானது நாகதோ‌‌ஷத்தால் வந்தது என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர். நாகராஜா கோவிலில் வழிபாடு செய்தால் சரும நோய் தீரும் என்றும் ஜோதிடர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து அரசரும் நாகராஜா கோவிலுக்கு வந்து வழிபாடு செய்தார். அப்போது கோவிலின் தலவிருட்சமான ஓடவள்ளி செடியை தனது உடம்பில் தேய்த்து கொண்டு 41 மண்டலங்கள் கோவிலில் இருந்தார். தான் கோவிலில் தங்கி இருந்த காலகட்டத்தில் கோவிலில் சில பகுதிகளை கட்டினார் என்று கூறப்படுகிறது.

    பரிவார தெய்வங்கள்

    இந்த கோவிலில் 8-க்கும் மேற்பட்ட பரிவார தெய்வங்கள் உள்ளன. தெற்கு வெளிப்பிரகாரத்தில் நாகமணி பூதத்தான் காவல் தெய்வமாக இருக்கிறார். வடக்கு வெளிபிரகாரத்தில் சாஸ்தா சன்னதி உள்ளது. இங்கு சாஸ்தா அமர்ந்த கோலத்தில் தலையில் கிரீடத்துடன் இருக்கிறார். உள் பிரகாரத்தில் கன்னி மூல கணபதி உள்ளார். இதுதவிர கோவிலுக்கு வடபுறத்தில் சிறு சிறு சன்னதிகள் உண்டு.

    இங்கு துர்க்கை அம்மன் சங்கு சக்கரத்தை கையில் ஏந்தியபடி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இந்த கோவில் 1965-ம் ஆண்டு கட்டப்பட்டது. துர்க்கை அம்மன் அருகே பாலமுருகன் சன்னதி உள்ளது. இது 1979-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இதன் தெற்கு பகுதியில் குழல் ஊதியபடி கிரு‌‌ஷ்ணர் சிலை உள்ளது.

    12 கல்வெட்டுகள்

    நாகராஜா கோவில் திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெறுகிறது. இங்கு தெப்பக்குளம் உண்டு. ஆனால் தெப்ப விழாக்கள் நடைபெறுவது இல்லை. கோவிலில் உள்ள 12 கல்வெட்டுகளிலும் அரசர் பூதலவீர உதய மார்த்தாண்டவர்மாவை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

    தேரேகால்புதூர், தேரூர், சுசீந்திரம், புரவசேரி ஆகிய இடங்களில் கோவிலுக்கு சொந்தமான சுமார் 40 ஏக்கர் நிலம் இன்னமும் உள்ளன. இதுதவிர கோவிலின் மகா மண்டபம், உள் பிரகார மண்டபங்களில் சிற்ப வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    நாம் எந்த ஒரு செயலை செய்தாலும் அவை வெற்றிகரமாக முடிய வேண்டும் என்பதற்காக முதலில் வணங்கப்படும் முழுமுதற் கடவுள் விநாயகப்பெருமான். அவருக்கு உகந்த சிறப்பு வாய்ந்த கோவில்களை பற்றிய குறிப்பை இங்கே பார்க்கலாம்.
    முக்குறுணி விநாயகர் - மதுரை மீனாட்சி கோவில்

    குடவரைப் பிள்ளையார் - திருப்பரங்குன்றம் கோவில்

    கரும்பாயிரம் பிள்ளையார் - கும்பகோணம்

    அழகிய விநாயகர் - திருவாவடுதுறை

    ஆண்ட பிள்ளையார் - திருநறையூர் சித்தீச்சுரம்

    ஆதி விநாயகன் - திருவையாறு

    ஆழத்துப்பிள்ளையார் - திருமுதுகுன்றம்

    உச்சிப் பிள்ளையார் - திருச்சிராப்பள்ளி

    ஓலமிட்ட விநாயகர் - திருவையாறு

    கங்கைக் கணபதி - குடந்தை கீழ்க்கோட்டம்

    கடுக்காய்ப் பிள்ளையார் - திருக்காறாயில்

    கருக்கடி விநாயகர் - திருக்கச்சூர்

    கள்ள வாரணப் பிள்ளையார் - திருக்கடவூர்

    கற்பக விநாயகர் - பிள்ளையார்பட்டி

    கூப்பிடு பிள்ளையார் - திருமுருகன் பூண்டி

    சிந்தாமணி கணபதி - திருமறைக்காடு

    சுந்தர கணபதி - கீழ்வேளூர், திருமழபாடி

    சூதவனப் பிள்ளையார் - திருவுச்சாத்தனம்

    செவிசாய்த்த விநாயகர் - அன்பிலாந்துறை

    சொர்ண விநாயகர் - திருநள்ளாறு

    நாகாபரண விநாயகர் - நாகைக் காரோணம்

    நீர்த்தன விநாயகர் - இன்னம்பர்

    படிக்காசு விநாயகர் - திருவீழிமிழலை

    மணக்குள விநாயகர் - புதுச்சேரி

    மாணிக்க விநாயகர் - திருச்சி

    படித்துறை விநாயகர் - திருவிடை மருதூர்

    பிரளயங்காத்த பிள்ளையார் - திருப்புறம்பியம்

    பொய்யா விநாயகர் - திருமாகறல்

    பொல்லாப் பிள்ளையார் - திருநாரையூர்

    மாற்றுரைத்த பிள்ளையார் - திருவாரூர்

    வரசித்தி விநாயகர் - திருவல்லம்

    வலம்புரி விநாயகர் - திருக்களர்
    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் இருந்து வடக்கே சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பிளாஞ்சேரிதான் அந்த திருத்தலம்.
    பைரவர் என்றாலே நம் நினைவுக்கு வருவது காசி மாநகரம்தான். காசியில், அஷ்ட பைரவர்களுக்கும் தனித்தனி கோவில்கள் அமைந்துள்ளன. காசிக்கு செல்லும் பக்தர்கள், அஷ்ட பைரவர்களையும் அவசியம் தரிசிக்க வேண்டும் என்பார்கள், பெரியோர்கள். தமிழகத்திலும் அஷ்ட பைரவர்கள் அருளும் ஒரு திருத்தலம் உண்டு.

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் இருந்து வடக்கே சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பிளாஞ்சேரிதான் அந்த திருத்தலம். இங்கே அருள்மிகு காமாட்சியம்மன் சமேதராக கோவில் கொண்டிருக்கிறார், அருள்மிகு கயிலாசநாதர். இந்தக் கோவிலில் தனித்தனி சன்னதிகளில் அஷ்ட பைரவர்களும் அருள்பாலிக்க, சரபசூலினியும் குடிக்கொண்டிருக்கிறாள்.

    இக்கோவிலின் தலவரலாறு மகத்துவமானது.

    பிரளய காலத்தில் அனைத்து ஜீவராசிகளையும் ரட்சிக்க திருவுள்ளம் கொண்டார் சிவபெருமான். எனவே, சப்த ரிஷிகளை அழைத்து தவம் மேற்கொள்ளும்படி கூறினார். அப்போது அத்ரி மகரிஷியின் மகனான பிராச முனிவர், தாமும் சப்தரிஷிகளோடு சேர்ந்து தவம் இருக்க விரும்பினார். அதற்கு சிவபெருமானின் அனுமதியை வேண்டினார். ஆனால், அவருடைய முன்வினைகள் முழுவதும் தீரவில்லை என்பதால், அவர் தவம் இருக்க சிவபெருமான் அனுமதிக்கவில்லை.

    இதனால் மனம் வருந்திய பிராச முனிவர், தன்னுடைய முன்வினைகள் தீருவதற்கு ஒரு வழி கூறியருளும்படி சிவனாரைப் பிரார்த்தித்தார். சிவனாரும் மனமிரங்கி, அவரைப் `பிராச வனஞ்சேரி’ என்ற பகுதிக்குச் சென்று, அந்தத் தலத்தில் உள்ள காமாட்சி அம்மன் சமேத கயிலாசநாதரை வழிபடும்படி அருள்பாலித்தார்.

    அத்துடன், அந்த தலத்தில் சரப சூலினியைப் பிரதிஷ்டை செய்து, தொடர்ந்து ஆயிரம் பவுர்ணமிகள் ஜயமங்களா யாகம் செய்து முடித்தால், முனிவரின் முன்வினைகள் முழுவதும் நீங்கும்; சப்தரிஷிகளுக்கும் மேலான பதவியை அடையலாம் என்று அருளினார்.

    சிவனாரைப் போற்றித் துதித்த பிராச முனிவர், இறை ஆணைப்படி இந்தத் தலத்துக்கு வந்து, பதினெட்டு திருக்கரங்களுடன் கூடிய சரப சூலினியைப் பிரதிஷ்டை செய்து, ஆயிரம் ஜயமங்களா யாகம் செய்து வழிபட்டார். அதன் பலனாக அவரின் முன்வினைகள் நீங்கின. சப்த ரிஷிகளுக்கும் மேலானவராகத் திகழும் பெரும்பேறும் கிடைத்தது. எங்குமே காண முடியாத 5½ அடி உயரத்தில் சிம்மவாராஹி அம்மன் இங்கு தனி கோயில் கொண்டு அருள்பாலிக்கிறார். சிம்ம வாராஹி அம்மனுக்கு பஞ்சமி தினத்தில் சிறப்பு ஆராதனை வழிபாடு நடைபெறுவது சிறப்பு.

    ஜய மங்களா மகா யாகம்

    இந்த தலத்தின் பிரார்த்தனைச் சிறப்புகள் குறித்து இக்கோவிலில் பூஜைகள் செய்து வரும் கண்ணன் குருக்கள் கூறுகையில், ` பவுர்ணமிதோறும் இங்கு மாலை 5 மணியளவில் ஜய மங்களா மகா யாகம் நடைபெறும். அப்போது, பிராச முனிவரும் சூட்சும வடிவில் வந்து அம்பிகையை வழிபடுவதாக ஐதிகம். பக்தர்கள் தாங்கள் தொடங்கும் காரியங்கள் தொடர்பாக அம்பிகை சரப சூலினியின் உத்தரவு கேட்க வருவார்கள். அவர்கள் கொண்டு வரும் எலுமிச்சைப்பழம், அம்பிகையின் திருமுடியில் வைக்கப்படும். `காரியத்தைத் தொடங்கலாம்’ என்பது அன்னையின் சித்தமானால், அந்த எலுமிச்சை அம்பிகையின் திருமுடியில் இருந்து தானாகவே இறங்கி விழுவது, இத்தலத்துக்கே உரிய அற்புதமாகும்.

    அதேபோல், இங்கு நடைபெறும் ஜயமங்களா யாகத்தில் கலந்து கொண்டால் திருஷ்டி தோஷங்கள் அகலும், திருமணத்தடை நீங்கி மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அமையும், வம்ச விருத்தி உண்டாகும், இழந்த பதவிகளை மீண்டும் பெறலாம், வழக்குகள் சாதகமாகும்.

    அதேபோல், ஜாதகத்தில் அபமிருத்யு தோஷம்(உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் கண்டம்) இருப்பவர்களுக்கும் சிறந்த பரிகாரத் தலம் இது. அவர்கள், தேய்பிறை அஷ்டமியன்று மாலை 6 மணியளவில் அஷ்ட பைரவர்களுக்கு நடைபெறும் சிறப்பு ஹோமங்கள் மற்றும் அபிஷேக ஆராதனைகளில் கலந்துகொண்டால், தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்’’ என்றார்.

    அற்புதமான திருக்கதை, சாந்நித்தியம் மிகுந்த திருக்கோவில், அருள் வழங்கும் வழிபாடுகள்... இத்தகைய சிறப்புகள் மிகுந்த பிளாஞ்சேரி தலத்துக்கு நீங்களும் ஒருமுறை சென்று வாருங்கள். உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி வளமான வாழ்வைப் பெறுவீர்கள்!

    எட்டு பேறுகள் அருளும் எட்டு பைரவர்கள்

    சிவபெருமானின் திருவடிவங்களில் ஒன்று ஸ்ரீசரபமூர்த்தி வடிவம். இரண்யகசிபுவை வதைத்த நரசிம்ம மூர்த்தியின் ஆக்ரோஷத்தைத் தணிக்க, சிவபெருமான் எடுத்த திருவடிவே ஸ்ரீசரபமூர்த்தி வடிவம். இந்த மூர்த்தியின் வலப்புற இறக்கையில் இருந்து தோன்றியவளே ஸ்ரீசரப சூலினி.

    இந்தத் தலத்தில் ஸ்ரீசரப சூலினிக்குக் காவலாக எட்டு பைரவர்கள் தனித் தனிச் சன்னதிகளில் காட்சி தருகிறார்கள். ``சரபசூலினிக்கு மட்டுமல்ல, இங்கு வந்து வழிபட்டுச் செல்லும் பக்தர்களுக்கும் காவலாக இருந்து அருள்பாலிக்கிறார்கள் இந்த அஷ்ட பைரவர்கள்’’ என்று சிலிர்ப்போடு பகிர்ந்துகொள்கிறார்கள் பக்தர்கள். இவர்கள் எண்மரையும் வழிபட்டால், எட்டுவிதமான பேறுகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    அசிதாங்க பைரவர்: அன்ன வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் இவர், நான்கு திருக்கரங்களோடு அருள்கிறார். ஜாதகத்தில் சந்திர திசை, சந்திர புக்தி நடைபெறும் அன்பர்களும் ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திரக்காரர்களும் வழிபடவேண்டிய பைரவர் இவர். இவரை வழிபட்டால் கல்வி, கலை, செல்வம், பேச்சாற்றல் ஆகியவற்றில் சிறந்து விளங்கலாம். கலைத் துறையினர் இவரை வழிபட்டால் மகத்தான வெற்றிகளைப் பெறலாம்.

    குரு பைரவர்: ரிஷப வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பவர். சூரிய திசை, சூரிய புக்தி நடைபெறும் ஜாதகர்களும் கிருத்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் வழிபடவேண்டிய பைரவர் இவர். பித்ரு தோஷங்கள் நீங்கவும், திருமணத் தடைகள் விலகவும், கணவன்- மனைவி இடையே பிரச்சினைகள் நீங்கிக் குடும்ப ஒற்றுமை ஏற்படவும் இவரை வழிபட வேண்டும்.

    சண்ட பைரவர்: மயில் வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பவர். செவ்வாய் திசை, செவ்வாய் புத்தி நடைபெறும் ஜாதகர்களும் அவிட்டம், மிருகசீரிடம், சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் வழிபடவேண்டிய பைரவர். காரியத் தடைகள் அகலவும், துன்பங்கள் நீங்கவும், ரத்தம் சம்பந்தமான வியாதிகளில் இருந்து விடுபடவும் இவரை வழிபடுவது, விசேஷம்.

    குரோதன பைரவர்: கருட வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பவர். புதன் திசை, புதன் புக்தி நடைபெறும் ஜாதகர்களும் ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் வழிபட வேண்டிய பைரவர். கடன்தொல்லை தீரவும், செல்வம் பெருகவும், தோல் வியாதிகள் விலகவும் இவரை வழிபடவேண்டும்.

    உன்மத்த பைரவர்: குதிரை வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பவர். கேது திசை, கேது புக்தி நடைபெறும் ஜாதகர்களும் அசுவினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் வழிபட வேண்டிய பைரவர். சகலவிதமான திருஷ்டி தோஷங்கள் நீங்கவும், ஏவல், பில்லி-சூன்யம் போன்ற தீவினைகள் விலகவும், நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெறவும் இவரை வழிபடவேண்டும்.

    கபால பைரவர்: யானை வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பவர். நான்கு திருக்கரங்களுடன் திகழ்பவர். சுக்கிர திசை, சுக்கிர புக்தி நடைபெறும் ஜாதகர்களும் பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் வழிபட வேண்டிய மூர்த்தி இவர். இவரை வழிபட்டால் ஜனவசியம், ஆட்சி-அதிகாரம், அரசியலில் உயர் பதவிகள் ஆகியவை வாய்க்கும்.

    பீஷண பைரவர்: சிம்ம வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பவர். நான்கு திருக்கரங்களோடு அருள்கிறார். குரு திசை, குரு புக்தி நடைபெறும் ஜாதகர்களும் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் வழிபட வேண்டிய பைரவர். குழந்தை பாக்கியம் கிடைக்கவும், இதயம் தொடர்பான பிணிகள், பக்கவாதம் ஆகியவை விலகவும் இவரை வழிபடவேண்டும்.

    சம்ஹார பைரவர்: நாய் வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பவர். பத்து திருக்கரங்களைக் கொண்டவர். சனி திசை-சனி புக்தி மற்றும் ராகு திசை-ராகு புத்தி நடைபெறும் ஜாதகர்களும் பூசம், அனுஷம், உத்திரட்டாதி, திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரக்காரர்களும் வழிபட வேண்டிய பைரவர் இவர். சத்ரு உபாதைகள் நீங்கவும், கண்டங்களிலிருந்து தப்பிக்கவும், விபத்துகளில் சிக்காதிருக்கவும், வாக்குப் பலிதம் வாய்க்கவும் இவரை வழிபட்டு பலன் பெறலாம்.
    காவிரி தென்கரை தலங்கள் வரிசையில் 19-வது தலமாக வைத்து எண்ணப்பெறுவது திருப்பாலைத்துறை திருத்தலமாகும். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    ஆலயம் தொழுவது சாலவும் நன்று, கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று நமது முன்னோர்கள் அருளிச்சென்றுள்ள அறிவுரைகள், கோவில்களின் முக்கியத்துவத்தையும், கோவில்களுக்கு நாள்தோறும் சென்று நாம் வணங்க வேண்டியதன் சிறப்பையும் எடுத்து விளக்குவதாக உள்ளன.

    வான் பொய்ப்பினும் தான் பொய்யா காவிரி நதி பாய்ந்து பொன்வளங்கொழிக்கும் திருநாடு சோழவள நாடாகும். இந்த சோழவள நாட்டின் சிறப்பு தண்ணீரும் காவிரியே தார்வேந்தன் சோழனே மண்ணாவதும் சோழ மண்டலமே எனும் தனிப்பாடல் ஒன்றில் சிறப்பாக பேசப்பெற்றுள்ளது.

    சோழ மண்டலத்தில், தேவார பாடல் பெற்ற 276 தலங்களுள் 190 தலங்கள் அமைந்துள்ளன. இவையனைத்தும் காவிரி நதியை மையமாக கொண்டு தில்லை எனப்பெறும் கோவில் பதியை முதன்மையாக கொண்டு காவிரி வடகரை தலங்கள் எனவும், காவிரி தென்கரை தலங்கள் எனவும் எடுத்து உரைக்கப்பெற்றுள்ளன.

    காவிரி தென்கரை தலங்கள் வரிசையில் 19-வது தலமாக வைத்து எண்ணப்பெறுவது திருப்பாலைத்துறை திருத்தலமாகும். தஞ்சை-கும்பகோணம் சாலையில் பாபநாசத்திற்கு முன்பாக திருப்பாலைத்துறையில் அமைந்துள்ள இக்கோவில் சப்தஸ்தான திருத்தலங்களில் ஒன்றாகும். இத்தலத்து இறைவனின் பெயர் பாலைவனநாதர், இறைவியின் பெயர் தவளவெண்ணகையாள்.

    தல வரலாறு

    இத்தல வரலாறு பல்வேறு விதமாக கூறப்படுகிறது. அவற்றை இங்கே பார்ப்போம்.

    முற்காலத்தில் பாலைச்செடிகள் அடர்ந்து காணப்பட்டதால் பாலைவனம் என அழைக்கப்பட்டது. கல்வி, வேள்விகளில் சிறந்து விளங்கிய தாருகாவனத்து முனிவர்கள் இறைவனையே வெறுத்து அவரை அழிப்பதற்காக து‌‌ஷ்டவேள்வி நடத்தி யாகத்தில் இருந்து கொடிய புலியை வரவழைத்து இறைவன் மீது ஏவினர். இறைவன், அந்த புலியை கொன்று அதன் தோலை ஆடையாக உடுத்திக்கொண்டதாக தல வரலாறு தெரிவிக்கிறது.

    சிவபெருமானது பற்றற்ற நிலையை கலைத்து பார்வதியை மணம்புரிந்து கொள்ளும்படி செய்ய மன்மதன், பூ அம்புகளை எய்தபோது தழல் விழியால் நோக்கி அவனை சாம்பலாக்கினார். பின்னர் தேவர்கள் வேண்டுகோளுக்கு இரங்கி அவனை உருவில்லாதவனாக்கி பார்வதியை மணம் புரிந்து கொண்டார். காமன் எரிந்த சாம்பல் முட்டாயிருந்ததை அங்கு சென்ற பிள்ளையார் கண்டு அதில் இருந்து ஒரு உரு அமைத்து உயிர் உண்டாக்கினார். அவனே பண்டாசுரனாகி தேவர்களை எதிர்த்து துன்புறுத்தினான்.

    அவர்கள் மேருமலைக்கு சென்று சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர் பார்வதியிடம் தெரிவிக்குமாறு கூறினார். அதன்படி அவர்கள் தேவியிடம் தெரிவித்தனர். அம்மையார் கூறியபடி தேவர்கள் இந்த இடத்திற்கு வந்து ஒரு பெருவேள்வி செய்தனர். அப்போது அம்மையார் திரிபுரை என்ற உருவத்துடன் நான்கு கைகளிலும் கரும்பு வில், பூவாளி, அங்குசம், மலர்மாலை தாங்கி காட்சி கொடுத்து கரும்புவில்லை வளைத்து, மலர் அம்பினால் எய்து பண்டாசுரனை கொன்றாள். அந்த வேள்வி குண்டத்தின் வெப்பம் எவராலும் தாங்க முடியாதிருந்ததால் அம்மையாரின் ஆணைப்படி சிவபெருமானை வேண்ட அவர் வீரபத்திர உருவத்துடன் தமது தலையில் இருந்த கங்கையை அக்குண்டத்தில் விட, அது குளிர்ந்து ஒரு திருக்குளமாயிற்று. இங்கு பல முனிவர்கள் வசித்ததால் இதற்கு பிரம்ம வனம் என்னும் பெயர் உண்டாயிற்று.

    ராமபிரான் பூஜித்த தலம்

    மலயத்துவச பாண்டியன் தாமிரபரணியில் நீராடி அதன் அருகில் இருந்த காலவ முனிவரின் குடிலின் அருகில் சென்றான். அங்கிருந்து காலவ முனிவர் அவனை வரவேற்று பல நல் உபதேசங்களை கூறினார். அவரது உபதேசத்தை அவன் தனது ஊழ்வினையால் செவிமடுக்காது அரசர்கள்தான் பெரியவர் என கூறினான். அதனால் வெகுண்ட முனிவர், அவனை கரடியாகுமாறு சபிக்க அவனும் அவ்வுருவை பெற்று வனமெங்கும் திரியலானான். அவன் மனைவி பத்மாவதி மன்னிப்பு கேட்டுக்கொண்டதற்கிணங்கி அவர் மனமிரங்கி அகத்திய முனிவரை வழிபட சொன்னார்.

    அதன்படி அகத்திய முனிவர் இரக்கமுற்று திருப்பாலைத்துறையை சுற்றியுள்ள வனத்திற்கு செல்லும்படி அருளினார். அதன்படி அவனும் இத்தலத்திற்கு வந்து பாலைவனநாதரை வழிபட்டபோது கரடி உருவம் மறைந்து சுயஉருவம் கிடைத்தது. சுவாமியின் பெருமையை உணர்ந்த மன்னன், கோவிலில் திருமண மண்டபம் கட்டினார். அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடத்தி வைத்தான். அதனால்தான் அம்பாள், இக்கோவிலில் கல்யாண கோலத்தில் காட்சியளிப்பதாக தல வரலாறு தெரிவிக்கிறது. இந்த கோவிலில் நடைபெறும் அனைத்து திருமணங்களும் சிறப்பு பெறுகின்றன.

    மகாவி‌‌ஷ்ணு, பிரம்மன், வசி‌‌ஷ்டர், தவுமியர், அர்ச்சுணர் ஆகியோர் வழிபட்ட தலம் இது. கலியுகத்தில் ராமபிரான், இக்கோவிலுக்கு வந்து இத்தலத்து இறைவனை பூஜித்து சென்றதாகவும் வரலாறு தெரிவிக்கிறது.

    அன்னப்பாத்திரம்

    ஐந்து நிலை ராஜகோபுரத்தை கடந்து உள்ளே சென்றால் பலிபீடம், நந்தி ஆகியவை உள்ளது. ராஜகோபுரத்தின் வலதுபுறம் விநாயகரும், இடதுபுறம் முருகனும் உள்ளனர். கோவிலின் வலதுபுறம் அம்மன் சன்னதி அமைந்து உள்ளது. திருமண கோல தலங்களாக கருதி போற்றப்படும் சோழநாட்டு தலங்களில் இந்த தலமும் ஒன்றாக கருதப்பெறுகிறது.

    மேலும் இத்திருக்கோவிலில் அம்பாளின் இடத்திருக்கரத்தில் அன்னப்பாத்திரம் உள்ளதால் அம்பாளை வழிபடுவோர்க்கு எக்காலமும் அன்னத்திற்கு குறைவிருக்காது என்று கூறப்படுகிறது.

    கோவிலை சுற்றிலும் அ‌‌ஷ்டதிக்கு பாலகர்கள் நீராடி வழிபட்ட 8 தீர்த்தங்களும், 8 லிங்கங்களும் இருந்தனவாய்க் கூறப்பெறினும், தற்போது வசிட்ட தீர்த்தம், இந்திர தீர்த்தம் உள்பட 3 தீர்த்தங்கள் மட்டுமே உள்ளன.

    வருகிற 1-ந் தேதி குடமுழுக்கு விழா

    இக்கோவிலில் குடமுழுக்கு விழா வருகிற 1-ந் தேதி(திங்கட்கிழமை) நடக்கிறது. குடமுழுக்கு விழாவையொட்டி யாகசாலை பூஜை நிகழ்ச்சிகள் வருகிற 30-ந் தேதி(சனிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, கணபதி ஹோமம், தன பூஜை, லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமத்துடன் தொடங்குகிறது. அன்று மாலை முதல் கால யாக பூஜையும், மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) காலையில் 2-ம் கால யாக பூஜையும், மாலையில் 3-ம் கால யாக பூஜையும் நடக்கிறது. 1-ந் தேதி(திங்கட்கிழமை) காலை 4-ம் கால யாக பூஜையும், அன்று காலை 9.45 மணிக்கு குடமுழுக்கு விழாவும் நடக்கிறது. அன்று மாலையில் சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது.

    குடமுழுக்கு விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை தஞ்சை இணை ஆணையர் தென்னரசு, உதவி ஆணையர் சிவராம்குமார் ஆகியோர் வழிகாட்டுதலின்படி கோவில் செயல் அலுவலர் ஹாசினி, தக்கார் குணசுந்தரி, கோவில் எழுத்தர் சங்கர மூர்த்தி, ஆன்மிக பேரவை அமைப்பாளர் சீனிவாசன் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.
    சேலம்-நாமக்கல் மாவட்ட எல்லையான காளிப்பட்டியில் இருக்கிறது நூற்றாண்டு பழமை கொண்ட காளிப்பட்டி கந்தசாமி கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    சேலம்-நாமக்கல் மாவட்ட எல்லையான காளிப்பட்டியில் இருக்கிறது நூற்றாண்டு பழமை கொண்ட காளிப்பட்டி கந்தசாமி கோயில். தென்றல் வீசும் கிராமங்கள்,  பசுமை போர்த்திய வயல்வெளிகள், விண்ணை தொடும் மலைகள் நிறைந்த பகுதியில் கண்ணுக்கு விருந்தாய், கம்பீரமாய் காட்சியளிக்கிறது கந்தசாமி ேகாயில். தைப்பூசம், பங்குனி உத்திரம் என்று முருகனுக்கு உகந்த நாட்கள் மட்டுமல்ல, அனைத்து நாட்களிலும் மக்கள் கூட்டம் களை கட்டும். இங்கு நடக்கும் வேண்டுதல்களும், நேர்த்திக்கடன்களும் வியப்புக்குரியவை என்றால் மிகையல்ல. கொடிய பாம்புகள் தீண்டி, விஷம் ஏறியவர்களை கோயில் மண்டபத்திற்கு கொண்டு வருகின்றனர் மக்கள். பூசாரி அவர்களுக்கு தீர்த்தம் வழங்கி திருநீறு பூசுகிறார்.

    சிறிது ேநரத்திலேயே விஷம் இறங்கி விடுகிறது. பாம்பு தீண்டியவர் எந்த பதற்றமும் இல்லாமல் எதார்த்தமாக எழுந்து செல்கிறார். இது தான் ‘‘தோகைமயில் ஏறி வரும் சேவற்கொடியோன், சுந்தர திருநீறு பூசிவரும் ஆறுமுகன், காவடிகள் ஏந்தும் பக்தர்களின் மனக்குமுறை தீர்க்கும் சிவபாலன், செல்வமும், புகழும் அள்ளித்தரும் பரம்பொருள், எங்கள் காவல் தெய்வம் காளிப்பட்டி கந்தசாமியின் மகிமை’’ என்று கூறி சிலிர்க்கின்றனர் பக்தர்கள். முன்னொரு காலத்தில் முருகன் மீது மிகுந்த பற்றுக் கொண்ட பக்தர் ஒருவர் இங்கு வசித்தார். அவர் ஒவ்வொரு தைப்பூசத்திற்கும் கடும் விரதம் இருந்து காடு, மேடுகளை தாண்டி, விஷ ஜந்துக்களை பொருட்படுத்தாமல் கால்நடையாக பழனிக்கு காவடி எடுத்துச் செல்வது வழக்கம்.

    இதுபோல் ஒரு வருடம் தனது உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் விரதம் இருந்து பழனிக்கு செல்ல ஆயத்தமானார். அப்போது அவரது கனவில் ேதான்றிய முருகன், ‘இனி என்னைத்தேடி நீ பழனிக்கு வர வேண்டாம். நீயிருக்கும் இடத்திலேயே நானும் குடியிருக்க விரும்புகிறேன். எனவே எனக்கு நீ வசிக்கும் பகுதியில் ஒரு கோயில் கட்டு’’ என்று கூறிவிட்டு மறைந்துள்ளார். அதன்படி கட்டப்பட்டதே காளிப்பட்டி கந்தசாமி கோயில் என்பது தலவரலாறு. பழனி முருகனே இங்கு, கந்தசாமியாக அமர்ந்து அருள்பாலிக்கிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. வைகாசி விசாகநாளில் பாலாபிஷேகம் செய்து, மனமுருக கந்தசாமியை வழிபட்டால் கல்யாண யோகம் கூடும். பிள்ளைப்பேறு கிடைக்கும்.

    குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகள், வியாபாரத்தில் ஏற்படும் நஷ்டம், உறவுகளுக்குள் ஏற்படும் விரிசல், எதிரிகளால் வரும் தீமை, கிரகங்களால் வரும் தோஷம் என்று அனைத்தையும் தகர்த்து அருள்பாலிக்கும் ஆபத் பாந்தவன் இந்த கந்தசாமி. வைகாசி விசாகத்தின்போது உற்சவர் வீதி உலா வருவது வழக்கம். அப்போது கந்தசாமியை வழிபட்டால் கவலைகளின் சுவடும் காணாமல் போகும். வீண்பயம், மனக்குழப்பம் நிறைந்த நேரத்தில் கந்தசாமியை பூஜித்து, இங்குள்ள இடும்பன் கோயில் கருப்பு மையை நெற்றியில் இட்டால், அனைத்தும் காற்றில் கலந்து விடும் என்பது ஆண்டாண்டு காலமாய் தொடரும் ஐதீகம்.

    ஆண்டுதோறும் இங்கு நடக்கும் தைப்பூச தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது. அப்போது சுற்றுப்புற மாவட்டங்களில் இருந்தும் அலையென பக்தர் கூட்டம் ஆர்ப்பரிக்கும். அன்றைய தினம் பொங்கல் வழிபாடு, உருளுதண்டம், காவடியாட்டம், கரகாட்டம், குறவன் குறத்தி, கும்மிப்பாட்டு என்று திரும்பிய திசையெல்லாம் தமிழ் மண்ணின் பாரம்பரியங்கள் கலந்த பக்தி வாசம் வீசும். மாட்டுச்சந்தை, சிறப்பு நீதிமன்றம் போன்றவை கோயில் வளாகத்திற்கு எதிரில் நடப்பதும் வேறு எங்கும் காணமுடியாத ஒன்று.
    திருவள்ளூர் மாவட்டம் ராமபுரத்தில் உள்ளது புட்லூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    சென்னையில் இருந்து திருவள்ளூர் செல்லும் வழியில் புட்லூர் அங்காளம்மன் ஆலயம் அமைந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்தக் கோவிலுக்கு சமீபகாலமாக வெள்ளமென பக்தர்கள் திரண்டு வந்து அம்மன் அருளினைப் பெற்றுச் செல்கின்றனர். இந்த ஆலய தல வரலாறு வருமாறு:-

    பொன்மேனி என்ற பெயருடைய விவசாயி ஒருவர் மிகவும் வறுமையில் வாழ்ந்து வந்தார். வறுமையை சமாளிக்க அவர் மகிசுரன் என்பவனிடம் தனது நிலத்தை அடமானம் வைத்து பணம் வாங்கினார்.

    ஆனால் பாவம் நிலத்தை அவரால் திருப்பவே முடியவில்லை. கடனை உடனே திருப்பித் தருமாறு மகிசுரன் வற்புறுத்தினான். கொடுக்க முடியாமல் பொன்மேனி திணறவே, கோபம் வந்தது மகிசுரனுக்கு.

    அந்த ஊரில் இருந்த பூங்காவனத்திற்குச் சென்று, அன்றைய இரவிற்குள் நிலத்தை உழுது, விதைத்து, நீர்பாய்ச்சுமாறு கட்டளையிட்டான். ஒரேநாளில் இவை அனைத்தையும் செய்வது என்றால் எளிதான காரியமா என்ன? ஆனாலும் அவனால் வேறு என்னதான் செய்ய முடியும்?சிவராத்திரி அன்று கோவிலுக்குச் சென்று சிவன் அருளைப் பெற முடியாமல் போயிற்றே என்று வருந்தியவாறே, பூங்காவனம் சென்றான் பொன்மேனி. தான் எப்போதும் வணங்கி வரும் இஷ்ட தெய்வமான கருமாரியை கரங்கூப்பி வணங்கியவாறு, நிலத்தை அந்த இரவு நேரத்தில் உழத் தொடங்கினான். திடீரென்று அவனது ஏர் கலப்பை ஏதோ ஒன்றில் இடித்தது போலத் தெரிந்தது.

    என்ன அது? என்று அவன் கீழே குனிந்து உற்றுப்பார்த்தபோது, அங்கே ரத்தம் பீறிட்டு வழிந்தோடிக் கொண்டிருந்தது. பிசுபிசுவென்று வடிந்த ரத்தம், பின்னர் வேகமாகப் பீய்ச்சுவதைப் பார்த்ததும் பொன்மேனிக்கு கண்கள் இருண்டு, மயக்கம் வந்தது. அப்படியே மயக்கமானான். அப்போது ஒரு அசரீரி குரல் அவன் காதுகளில் விழுந்தது.

    பயப்படாதே பக்தனே! சற்றுமுன் வயதான பெரியவராக சிவபெருமானும். வயதான மூதாட்டி போல பராசக்தியாகவும் வந்தது நாங்கள்தான். நீ தண்ணீர் கொண்டு வந்ததும் சிவன் சென்றுவிட்டார். நான், இங்கே உன் நிலத்தில் மண்புற்றாக மாறினேன். அந்தப் புற்றில்தான் நீ, உன் கலப்பையால் இடித்து என்னைக் காயப்படுத்தி விட்டாய். அதனால்தான் அதில் ரத்தம் வழிந்தோடுகிறது. வலி தாங்காமல் நான் அப்படியே அங்கு படுத்துவிட்டேன்.

    கவலைப் படாதே. இதனால் எதுவும் தவறாகி விடவில்லை. மாறாக நல்லதையே நீ செய்திருக்கிறாய். அதாவது, இடித்துக் காயப்படுத்தியதன் மூலம் இந்த உலகிற்கு நீ என்னைக் காண்பித்து விட்டாய். எங்களைப் பூஜிக்கும் பேற்றையும் நீ அடைந்து விட்டாய் இவ்வாறு அந்த அசரீரி சொன்னது. பொன்மேனி சுய உணர்வுக்கு வந்து, தன் காதுகளில் ஒலித்த அந்தக் குரல் பார்வதி தேவியினது என்பதைப் புரிந்து கொண்டான். அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

    இதனையடுத்து ஊர் முழுவதும் இந்தச் செய்தி காட்டுத் தீயாகப்பரவியது. அங்கேயே சயன நிலையில் அங்காளம்மனைப் பிரதிஷ்டை செய்வது என ஊரார் முடிவு செய்தனர். அப்படியே அம்மனும் பிரதிஷ்டை செய்யப்பட்டாள். பூங்காவனத்தில் தோன்றிய அம்மன் என்பதால் பூங்காவனத்தம்மன் என்னும் சிறப்பு பெயரும் புட்லூர் அங்காள பரமேசுவரிக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    புட்லூர் ஆலயத்துக்கு இன்னொரு தல வரலாறும் சொல்லப்படுகிறது. ஒரு தடவை சிவனும், பார்வதியும் மேல்மலை யனூருக்கு புட்லூர் வனம் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தனர். நீண்ட தூரம் நடந்து களைப் படைந்ததால் வேப்ப மர நிழலில் கர்ப்பிணியாக இருந்த பார்வதி அமர்ந்தாள். தாகமாக இருப்பதால் தண்ணீர் வேண்டும் என்று கேட்டாள். உடனே சிவபெருமான் அருகில் இருந்த கூவம் நதியை தாண்டி சென்று புனிதநீர் எடுத்து வந்தார். அந்த சமயத்தில் பலத்த மழை பெய்து கூவம் நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    இதனால் சிவபெருமானால் நதியை கடந்து வர இயலவில்லை. எனவே வெள்ளம் குறையட்டும் என்று சிவன் காத்திருந்தார். இதற்கிடையே பசி-தாகத்துடன் இருந்த பார்வதி அப்படியே தரையில் விழுந்து விட்டாள். அவளை சுற்றி மண் குவிந்து புற்றாக வளர்ந்து விட்டது. இந்த நிலையில் அங்கு திரும்பி வந்த சிவபெருமான், புற்றுக்குள் பார்வதி அமர்ந்து விட்டதை அறிந்து அங்கேயே நின்று விட்டார். அதை பிரதிபலிக்கும் வகையில் புட்லூர் தலத்தில் சிவபெருமான், தாண்டவ ராயன் அம்சமாக சற்று கவலை தோய்ந்த முகத்துடன் இருப்பதை பார்க்கலாம்.

    புட்லூர் தலத்தில் பரமேஸ்வரி அமர்ந்த புற்று தற்போதும் வளர்ந்தபடி உள்ளது. இத்தல நாயகி நவக்கிரக தோஷங்களை நீக்கி, திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றை தருகிறாள். தன்னை நம்பி வரும் பக்தர்களின் திருஷ்டியை விலக்கி, அவர்கள் மீது படிந்துள்ள பில்லி, சூனிய தோஷங் களை விரட்டுகிறாள். சிலருக்கு அவள் பாம்பாக காட்சி கொடுக்கிறாள். சிலருக்கு மூதாட்டியாக காட்சி கொடுக்கிறாள்.

    மேலும் ஒரு நிறைமாத கர்ப்பிணிப் பெண் மல்லாந்து படுத்திருப்பது போல அம்மனே இத்தலத்தில் இயற்கையாக தோன்றி உள்ளாள். இந்த அதிசய தோற்றத்தை பக்தர்கள் தமிழ்நாட்டில் வேறு எந்த தலத்திலும் பார்த்திருக்க முடியாது. எனவேதான் புட்லூர் தலத்துக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்தபடி உள்ளது. புட்லூர் அங்காள பரமேசுவரி அம்மன் கோவிலில் உள்ளே கர்ப்பகிரகத்துக்கு நேர் எதிரில் மண்புற்றாக மல்லாந்தவாக்கில் பூங்காவனத்தம்மன் எழுந்தருளி இருக்கிறாள். சுயம்பு புற்று முழுக்க முழுக்க மஞ்சளும், குங்குமம் துலங்க அன்னை அருள்பாலிக்கிறாள். அன்னை ஈசானிய மூலையில் காலை நீட்டி தென்மேற்கில் தலைவைத்து மல்லாந்து இருக்கிறாள். அந்த சன்னதியில் கால் வைத்த மறு வினாடி எல்லா பக்தர்களுக்கும் உடம்பில் ஒருவித சிலிர்ப்பு ஏற்படுகிறது.

    மண்புற்று மாதாவுக்கு அப்பால், கருவறையில் சூலம் தாங்கிய அங்காள பரமேஸ்வரி, எலுமிச்சம்பழ மாலைகளுடன் ஏற்றமான பூ அலங்காரங்களுடன் புன்னகை துலங்க காட்சி அளிக்கிறாள். சந்நதியை விட்டு வெளியே வந்தால், பிரகாரத்தில் தென்கிழக்கு மூலையில் தலவிருட்சமாக வேம்பு இருப்பதை பார்க்கலாம். அதன்கீழ் சுயம்புவாக உயர்ந்திருக்கும் இன்னொரு மண்புற்று, உள்ளது. அதன் உள்ளிருக்கும் அன்னைக்கு அளிப்பதற்காக எடுத்து வரப்படும் அழுதப்பால் இந்த புற்றில் அர்ப்பணம் செய்யப்படு கிறது. இந்தப் புற்றைச் சுற்றி வரும்போதே மகளிர் தங்கள் புடவையின் முந்தானையில் இருந்து ஒரு பகுதியை கிழித்து வேப்ப மரக்கிளையில் கட்டி முடிச்சிடுகிறார்கள். வேண்டுதல்கள் நிறைவேறுகின்றன.

    இந்த அம்மனின் சந்நிதியில் ஒருமுறை காலடி எடுத்து வைத்தால் மனக்குறைகள் அகலும், தடைகள் விலகும், பில்லி, ஏவல், சூனியம், பேய், பிசாசுகள் போன்ற எவை இருப்பினும் இருந்த இடம் தெரியாமல் விலகிப் புண்ணியங்கள் சேரும் என்பது இவள் அற்புதம் அறிந்த மக்களின் மனதில் இருக்கும் மாறாத நம்பிக்கையாகும்.

    இத்தகைய சிறப்புடைய புட்லூர் அங்காளபரமேஸ்வரி ஆலயத்தில் ஆடி மாதம் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை கூழ் வார்த்தல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும்.

    குழந்தை வரம் கிடைக்கும்

    திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் வேண்டுவோர், கோயிலில் நீராடி விட்டு, ஈரத்துணியுடன் அம்மனை வணங்கி, பிரகாரத்தை 11 முறை சுற்றி வந்து வழிபட வேண்டும். இவ்வாறு 9 வாரங்கள் செய்வதன் மூலம், அவர்களுடைய பிரார்த்தனை நிறைவேறும்.

    செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 6:30 முதல் இரவு 8 மணி வரை; மற்ற நாட்களில் காலை 6:30 முதல் மதியம் 1:00 மணி மற்றும் 2:00 முதல் இரவு 8:30 மணி வரை நடை திறந்திருக்கும்.

    ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில், மணிக்கூண்டு பகுதிக்கு அருகில் அமைந்துள்ள கொங்கலம்மன் கோவில், மிகவும் பழமை வாய்ந்தது.
    அதற்கு ஆதாரமாக பல கல்வெட்டுகளும் கோயிலில் உள்ளன. தை மாதம் தேர்த் திருவிழாவின் போது, முதலில் ஆனங்கூரில் உள்ள ஆதி கொங்கலம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்ட பிறகே, இங்கே தேர்த்திருவிழா நடைபெறும். அதன் பின்னணியில் ஒரு சம்பவம் நடைபெற்றதாக அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.

    சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பாக சில கொள்ளையர்கள் இந்தக் கோயிலில் இருந்த கொங்கலம்மன் சிலையைத் திருடிச் சென்றனர். அவர்கள் ஆனங்கூர் என்ற இடத்துக்கு அருகில் வந்தபோது, வண்டியின் அச்சு முறிந்துவிட்டது. முறிந்த அச்சை சரிசெய்து கொண்டு

    இருந்தபோது, 'என்னைத் திருடிச் சென்றால், உங்களுக்கு ஆபத்து ஏற்படும்’ என்று அசரீரி ஒலிக்கவே, கொள்ளையர்கள் பயந்துபோய் அம்மன் சிலையை அங்கேயே விட்டு விட்டுச் சென்றுவிட்டனர். மறுநாள் காலையில் தங்கள் ஊரில் அம்மன் சிலையைக் கண்ட ஆனங்கூர் மக்கள் ஒரு கோயிலைக் கட்டி அங்கே அம்மன் சிலையைப் பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கினர்.

    கொங்கலம்மன் ஆனங்கூரில் கோயில் கொண்டு விட்டபடியால், ஈரோடு மக்கள் புதியதாக ஒரு அம்மன் விக்கிரஹத்தை இந்த ஆலயத்தில் பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கினர். அதில் இருந்துதான் ஈரோடு கொங்கலம்மன் தேர்த் திருவிழாவுக்கு முன்னதாக ஆனங்கூர் ஆதி கொங்கலம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யும் வழக்கம் ஏற்பட்டது.

    பாண்டிய மன்னர்கள் இந்த ஆலயத்தைக் கட்டி, திருப்பணிகள் செய்துள்ளனர். இவர்களை அடுத்து ஆண்ட எல்லா மன்னர்களும், கொங்கலம்மனை தங்கள் காவல் தெய்வமாகவே வணங்கி வந்ததாகவும் ஆலயத்தின் தல வரலாறு கூறுகிறது. கோயிலில் உள்ள மகா மண்டபத்தில் 6 அழகிய கல் தூண்கள் சிற்ப வேலைப்பாடுகளுடன் உள்ளன. மகாமண்டபத்தை அடுத்து அர்த்த மண்டபமும், அடுத்து கருவறையும் அமைந்துள் ளது. கருவறையில், வேண்டுவோர்க்கு வேண்டும் வரங்களை அருளும் கருணை நாயகியாக எட்டு கரங்களுடன் காட்சி தருகிறாள் கொங்கலம்மன்.

    ஈரோடு நகரில் உள்ள கோயில்களுக்கு காவிரியில் இருந்து தீர்த்தம் எடுத்துச் செல்லும்போது முதலில் கொங்கலம்மனுக்கு முதல் தீர்த்தம் செலுத்திய பிறகுதான் மற்ற கோயில்களுக்கு தீர்த்தத்தை எடுத்துச் செல்லும் வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது.

    இந்த ஆலயத்தில் பிரத்தியங்கிரா தேவி சந்நிதியும் உள்ளது. செவ்வாய்க்கிழமைகளில் பிரத்தியங்கிரா தேவிக்குப் பச்சை மிளகாயால் அர்ச்சனை செய்யப்படுகிறது. இந்த ஆலயத்தின் பிரதான தல விருட்சமாகத் திகழும் அரச மரத் துடன், பிரத்தியங்கராதேவியின் சந்நிதியைச் சுற்றி, ஈசான மூலையில் மலங்கிழுவை மரம், அக்னி மூலையில் வில்வ மரம், நைருதி மூலையில் மின்ன மரம், வாயு மூலையில் அத்தி மரம் ஆகிய தெய்விக மரங்கள் உள்ளன. அந்த வகையில் இந்தக் கோயிலில் ஐந்து தல விருட்சங்கள் அமைந்திருப்பது விசேஷம் என்கிறார்கள்.

    நாகதோஷம் உள்ளவர்களுக்கு, இந்த ஆலயத் தில் பரிகார பூஜைகள் செய்யப்படுகின்றன. ஆலயத்தின் ஈசான்ய மூலையில் ராகு  கேதுவுக் குத் தனிச் சந்நிதி உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை ராகுகால வேளையில், ராகு பகவானுக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

    ஆலயத்தில் மகிஷாசுரமர்த்தினி, மதுரை வீரன், கருப்பண்ணசாமி, மகேஸ்வரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, கௌமாரி, சப்த கன்னிமார் மற்றும் பேச்சியம்மன் ஆகியோருக்கும் தனித் தனி சந்நிதிகள் உள்ளன. ஆலயத்தில் வருடம்தோறும் தைப்பூசத் தேர்த் திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
    மதுரை அருகே உள்ளது சிம்மக்கல் என்ற ஊர். இங்கு ஆதிசொக்க நாதர் திருக்கோவில் அமைந்திருக்கிறது. இங்குள்ள மூலவர், ‘சொக்க நாதர்’ என்றும், அம்பாள் ‘மீனாட்சி’ என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
    மதுரை அருகே உள்ளது சிம்மக்கல் என்ற ஊர். இங்கு ஆதிசொக்க நாதர் திருக்கோவில் அமைந்திருக்கிறது. இங்குள்ள மூலவர், ‘சொக்க நாதர்’ என்றும், அம்பாள் ‘மீனாட்சி’ என்றும் அழைக்கப்படுகிறார்கள். இங்குள்ள சிவலிங்கம், உலகத்தில் உள்ள செல்வங்களை எல்லாம் தன் வசம் வைத்துக் காத்து வரும் குபேரன் பிரதிஷ்டை செய்து வழிபட்டது என்பது சிறப்புக்குரியது. தன்னிடம் உள்ள செல்வம், மென்மேலும் பெருக வேண்டும் என்பதற்காக, குரேபன் இந்தப் பகுதிக்கு வந்து சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக தல புராணம் சொல்கிறது. மேலும் இந்தக் கோவில் புதன் பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. நவக்கிரகங்களில் ஒருவரான புதன், இந்தத் தலம் வந்து இறைவனை வழிபட்டு பேறுபெற்றுள்ளார்.

    மதுரைப் பகுதியை, குசேல பாண்டியன் என்ற மன்னன் ஆட்சி செய்தான். அவன் கல்வியில் மிகச் சிறப்பு படைத்தவனாக இருந்தான். இதைக் கேள்விப்பட்டு, தமிழ்சங்கத்தில் புலவராக இருந்த கபிலரின் நண்பரான இடைக்காடர், பாண்டியனின் அரண்மனைக்கு வந்தார். மன்னனின் முன்பாக நின்று தான் இயற்றி வந்த பாடலைப் பாடினார். ஆனால் கல்வி அறிவால் செருக்கு கொண்டிருந்த மன்னன், இடைக்காடரின் பாடலை ஒரு பொருட்டாகக் கூட மதிக்கவில்லை. அதோடு இடைக்காடருக்கு உரிய மரியாதையையும் அவன் அளிக்கவில்லை.

    இதனால் மன வருத்தம் அடைந்த இடைக்காடர், மதுரையில் வீற்றிருக்கும் இறைவன் முன்பாக அமர்ந்து வழிபட்டார். “இறைவா.. நான் மன்னனின் புலமை மேல் பற்று கொண்டு அவனிடம் என்னுடைய பாடலைப் பாடிக் காட்ட சென்றேன். ஆனால் அவன் என்னை அவமதித்து விட்டான். அவன் என்னை அவமதித்தானா, அல்லது உன்னை அவமதித்தானா என்பதை நீயே பார்த்துக் கொள்” என்று கூறிவிட்டு, தணியாத கோபத்துடன் வட திசை நோக்கி புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

    இடைக்காடரின் உள்ளக்குமுறலைக் கேட்ட சிவபெருமான், தன்னுடைய லிங்க வடித்தை மறைத்து, உமாதேவியருடன் கோவிலை விட்டு வெளியேறி, மதுரை ஆலயத்தின் நேராக, வைகை ஆற்றுக்கு தெற்கே உள்ள கோவிலில் எழுந்தருளினார். இடைக்காடருக்கும் காட்சி கொடுத்து, மன்னனுக்கு பாடம் புகட்டுவதாகக் கூறினார். மறுநாள் அதிகாலை மதுரையம்பதியில் உள்ள இறைவனை தரிசிக்க வந்த பக்தர்கள், அங்கு சிவலிங்கம் காணாததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்த விஷயத்தை மன்னனிடம் தெரிவிக்க வேண்டும் என்பதற்காக கோவில் நிர்வாகிகள் அனைவரும், அரண்மனையை நோக்கிச் சென்றனர். வழியெங்கும் மதுரை நகரமே, பொலிவிழந்து இருப்பதையும் கண்டார்கள்.

    மன்னனின் முன்பாகச் சென்றவர்கள் பதற்றத்துடன், “மன்னா.. கோவிலில் இறைவனைக் காணவில்லை. அம்பாளும் இல்லை. நகரமே பொலிவிழந்து காணப்படுகிறது” என்றனர்.

    அதைக் கேட்டு மன்னன் மிகவும் வருத்தம் அடைந்தான். “இறைவா.. நான் செய்த தவறு என்ன? தாங்கள் உமாதேவியுடன் இங்கிருந்து எங்கு சென்றீர்கள்?” என்று புலம்பினான். அப்போது ஒரு அசரீரி ஒலித்தது. “நீ என்னுடைய பக்தனான இடைக்காடரை அவமதித்து விட்டாய். அதனால்தான் இந்த அசம்பாவிதம் நடைபெற்றது” என்றது அந்தக் குரல்.

    அப்போது சிலர் ஓடி வந்து, “மன்னா.. இறைவனும், இறைவியும் வைகை ஆற்றின் தென்கரையில் உள்ள ஆலயத்தில் எழுந்தருளியிருக்கிறார்கள்” என்று கூறினர். இதையடுத்து மன்னன் தன்னுடைய பரிவாரங்களுடன் அந்த ஆலயத்திற்குச் சென்றான்.

    அங்கு எழுந்தருளியிருந்த இறைவன் முன்பாக மண்டியிட்டு, “சொக்கநாத பெருமானே.. தாங்கள் அங்கிருந்து இங்கே வந்து எழுந்தருளியிருப்பதன் காரணம் என்ன? நான் செய்த தவறை மன்னித்து மீண்டும் மதுரையில் எழுந் தருள வேண்டும்” என்று வேண்டினான். இறைவனை நினைத்து துதிப் பாடல் களையும் பாடினான்.

    மன்னனின் வழிபாட்டால் மகிழ்ந்த இறைவன், “பாண்டியனே.. எல்லாத் தலங்களையும் விட, இந்த திருவாலவாயே உயர்ந்தது. மேலும் நான் இருக்கும் லிங்கங்களிலேயே, குபேரன் பூஜித்த இந்த லிங்கம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. எனவே இன்று முதல் இந்த தலம் ‘வடதிருவாலவாய்’ என்று அழைக்கப்படும் என்று கூறினார்.

    மதுரையில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் சிம்மக்கல் என்ற இடத்தில் அமைந்துள்ள இந்த ஆலயம், ‘ஆதிசொக்கநாதர் கோவில்’ என்றும், ‘பழைய சொக்க நாதர் கோவில்’ என்றும் அழைக்கப்படுகிறது.
    ×