search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பிரளய காலத்திலும் அழியாத உலகநாயகியம்மை உடனாய வசிஷ்டேஸ்வரர் திருத்தலம்
    X
    பிரளய காலத்திலும் அழியாத உலகநாயகியம்மை உடனாய வசிஷ்டேஸ்வரர் திருத்தலம்

    பிரளய காலத்திலும் அழியாத உலகநாயகியம்மை உடனாய வசிஷ்டேஸ்வரர் திருத்தலம்

    தஞ்சாவூர் மாவட்டம் தென்குடித் திட்டை என்ற இடத்தில் உள்ளது, உலகநாயகியம்மை உடனாய வசிஷ்டேஸ்வரர் திருக்கோவில். இந்தக் கோவிலில் உள்ள சில சுவாரசிய தகவல்களை சிறு குறிப்பாக பார்க்கலாம்.
    தஞ்சாவூர் மாவட்டம் தென்குடித் திட்டை என்ற இடத்தில் உள்ளது, உலகநாயகியம்மை உடனாய வசிஷ்டேஸ்வரர் திருக்கோவில். தஞ்சாவூரில் இருந்து சுமார் 9 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது இந்த ஆலயம். இந்தக் கோவிலில் உள்ள சில சுவாரசிய தகவல்களை சிறு குறிப்பாக பார்க்கலாம்.

    அழியாத இடம்

    ஒவ்வொரு யுகம் முடியும் போதும், பிரளயம் தோன்றி அதன் அழிவின் முடிவில் புதிய யுகம் தோன்றும் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன. அப்படி ஒரு யுகத்தின் முடிவில் பிரளயம் உண்டானது. பூமியெங்கும் மழை வெள்ளம் கொட்டித் தீர்த்தது. உலகம் முழுவதும் இருந்த அனைத்து உயிர்களும், இடங்களும் அழிந்தன. ஆனால் பூலோகத்தின் ஒரு பகுதி மட்டும் நீரில் மூழ்காமல் திட்டாக நின்றது. அந்த இடத்தில் இறையருள் நிறைந்திருந்ததே அதற்கு காரணம். அந்த இடமே தென்குடித் திட்டை ஆகும். பேரழிவு ஊழிக் காலத்திலும், வெள்ளத்தில் மூழ்காத திட்டை திருத்தலம் சிறப்புக்குரியதாகும்.

    ஈசனுக்கு நிகரான சக்தி

    சிவம் இல்லையேல் சக்தி இல்லை, சக்தி இல்லையேல் சிவம் இல்லை. இது தான் வாழ்க்கை தத்துவம். ஒன்றும் ஒன்றைப் பிரிந்து வாழாது. அதை உலக மக்களுக்கு உணர்த்துவதற்காகவே தன்னில் இருந்து ஒரு பகுதியை சக்தியாக பிரித்து உமாதேவியை இறைவன் உண்டாக்கினார். சக்தியும் சிவமும் நிகர் என்பதை உணர்த்தும் வகையில், திட்டை திருக்கோவிலில் சிவலிங்க மூலவருக்கு நிகராக, உயர்ந்த பீடத்தில் அம்பாள் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். அம்மன் சன்னிதிக்கு முன்புள்ள மண்டபத்தின் மேலே 12 ராசிகள் செதுக்கப்பட்டுள்ளன. அந்தந்த ராசிக்காரர்கள், தங்களுக்கான ராசிக்கட்டத்தின் கீழ் நின்று அம்மனை வேண்டினால் வேண்டிய வரம் கிடைக்கும். திருமணத் தடை, மாங்கல்ய தோஷம் நீங்க அருள் புரிவதால், இந்த அன்னை ‘மங்களாம்பிகை’ என்றும் அழைக்கப்படுகிறார்.

    மும்மூர்த்திகள் வழிபட்ட தலம்

    பிரளயத்தின் முடிவில் மீண்டும் உயிரினங்களைப் படைக்கும் பணி தொடங்க வேண்டியதிருந்தது. இதற்காக தன்னுடைய சக்தியான உமாதேவியுடன் இணைந்து அண்டத்தைப் படைத்தார், பரம்பொருள். மேலும் அந்த அண்டங்களை பரிபாலனம் செய்வதற்காக சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளைப் படைத்தார். ஆனால் மாயை வயப்பட்டிருந்த அந்த மூவரும் பேரிருள் சூழ்ந்த இந்த அண்டத்தைக் கண்டு பயந்தனர். அந்த இருளில் அங்கும் இங்கும் அலைந்து திரிந்து, பெருவெள்ளத்தின் நடுவில் திரளாக இருந்த திட்டையை அடைந்தனர். பின்னர் தங்களின் மாயை விலக வேண்டி இறைவனை வேண்டினர். பரம்பொருளான ஈசனும், அவர்களின் அச்சத்தைப் போக்க தன்னுடைய உடுக்கையை முழக்கினார். அதிலிருந்து தோன்றிய மந்திர ஒலிகள், மும்மூர்த்திகளையும் அமைதியடையச் செய்தது. பின்னர் பரம்பொருள் அவர்கள் மூவருக்கும் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தொழில்களை பிரித்துக் கொண்டு, அதற்கான ஞானத்தையும், சக்தியையும் வழங்கினார். மும்மூர்த்திகளும் இறைவனை வழிபட்ட தலம் இது.

    சந்திரன் செலுத்தும் நன்றி

    இந்தக் கோவிலின் மூலவரான வசிஷ்டேஸ்வரர் வீற்றிருக்கும் கருவறை விமானம், சந்திரக்காந்தக் கல் மற்றும் சூரியக்காந்தக் கல் கொண்டு கட்டப்பட்டதாக சொல்கிறார்கள். தன்னுடைய மாமனார் தட்சனால் தினமும் ஒரு கலையாக அழியும் சாபத்தைப் பெற்றிருந்தான், சந்திரன். அதன்படி தினம் ஒரு கலையாக அழிந்து தேய்ந்து வந்தான். இதையடுத்து சந்திரன், திங்களூர் வந்து கயிலாசநாதரை வழிபட்டு தன் சாபம் நீங்கப்பெற்றான். அப்படி தன்னுடைய சாபத்தைப் போக்கிய ஈசனுக்கு, திட்டையில் உள்ள திருத்தலத்திற்கு வந்து தன்னுடைய நன்றியை தெரிவித்தான், சந்திரன். இப்போதும் அந்த நன்றியை கருவறையின் மேல் உள்ள சந்திரக் காந்தக் கல்லாக இருந்து செலுத்துகிறான். இந்தக் கல் காற்றிலிருந்து ஈரப்பதத்தை ஈர்த்து ஒரு நாழிகைக்கு ஒரு சொட்டு நீரை, இத்தல மூலவரின் மீது நித்ய அபிஷேகமாக செய்து கொண்டிருக்கிறது. 24 நிமிடங்களுக்கு (ஒரு நாழிகை) ஒரு முறை, இத்தல இறைவன்மீது ஒருசொட்டு நீர் விழுவதை இன்றும் நாம் தரிசிக்க முடியும்.
    Next Story
    ×