என் மலர்tooltip icon

    கோவில்கள்

    ராமாயண, மகாபாரதக் காலத்திற்கு முன்பே புகழ்பெற்ற நகரம் காசி. இத்தகைய பெருமை வாய்ந்த காசிக்கு நிகராக அதே பெயரில் விளங்குகிறது பசுபதேஸ்வரர் ஆலயம்.
    ராமாயண, மகாபாரதக் காலத்திற்கு முன்பே புகழ்பெற்ற நகரம் காசி. சிவபெருமான் ஆனந்தத்துடன் தங்கியிருக்கும் தலம் எனபதால் காசி நகருக்கு ‘ஆனந்த வனம்’ என்னும் பெயரும் உண்டு. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே காசி நகரம் ஆன்மிகத்தில் சிறந்து விளங்கியுள்ளது. ‘அறிவு தரத்தக்க ஒளி பொருந்திய நகரம்’ என்னும் பொருளில் காசி நகரம் பற்றி ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளது. ஸ்கந்த புராணத்தின் ஒரு சுலோகத்தில் ‘மூவுலகும் என் ஒரு நகரான காசிக்கு இணையாகாது’ என காசியின் பெருமையை ஈசன் கூறியுள்ளார். பண்டைய காலங்களில் கல்விக் கூடங்கள் பல அமைத்து, கல்வியிற் சிறந்த நகரமாக காசி விளங்கி இருக்கிறது.

    இத்தகைய பெருமை வாய்ந்த காசிக்கு நிகராக அதே பெயரில் விளங்குகிறது பசுபதேஸ்வரர் ஆலயம். இது திருநெல்வேலி மாவட்டத்தில் திருமலாபுரம் என்ற ஊரில் உள்ள ஒரு குடவரைக் கோவிலாகும். இப்பகுதியில் சுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் பயன்படுத்திய நுண்ணியக் கருவிகளைத் தொல்லியல்துறை கண்டு பிடித்து பாதுகாத்து வருகிறது.

    திருநெல்வேலி மாவட்டம், சுரண்டை நகரை அடுத்துள்ள சேர்ந்தமரம் என்னும் ஊருக்கு மேற்கே, மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிற்றூர் திருமலாபுரம். இவ்வூரில் புராண காலத்தோடு தொடர்புடைய நீண்ட நெடிய கிழக்கு நோக்கிய மலைத்தொடர் ஒன்று உள்ளது. இந்த மலை புராண காலத்தில் ‘வாரணாசி’ மலை என்றும், ‘வருணாச்சி மலை’ என்றும், இப்பகுதியில் அமைந்திருந்த ஊர் ‘வாரணாசிபுரம்’ என்றும், ‘வருணாச்சிபுரம்’ என்றும் வழங்கப்பட்டுள்ளது.

    தற்போது, இந்த மலைத்தொடர் ‘சர்வேஸ்வரன் மலை’ எனவும், இங்கு எழுந்தருளியிருக்கும் ஈசன் பெயர் ‘பசுபதேஸ்வரர்’ எனவும் வழங்கப்படுகிறது. சிவபெருமானின் வழித்தோன்றல்களான பாண்டிய வம்ச மன்னர்கள், தங்கள் நாயகனின் பெருமையைப் பறைசாற்றும் விதமாக சுமார் 1,300 ஆண்டுகளுக்கு சர்வேஸ்வரன் மலைத்தொடரின் இருபுறமும் இரு குடவரைக் கோவில்களை உருவாக்கினர். கிழக்கு - மேற்காக நீண்டிருக்கும் சர்வேஸ்வரன் மலைத் தொடரின் வடக்குப் பகுதியிலுள்ள குடவரைக் கோவில் முழுமை பெற்றுள்ளது. தென்பகுதியில் உள்ள குடவரை முழுமை பெறவில்லை.

    வடக்குப் பகுதியில், வடக்குப் பார்த்து அமைந்த முழுமைப்பெற்ற குடவரைக் கோவில், கருவறை, அர்த்த மண்டபம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. சுமார் 19 அடி நீளம், 12 அடி அகலம் கொண்ட செவ்வக வடிவ அர்த்த மண்டபம் உள்ள இக்குடவரையில், கருவறை எட்டு சதுர அடியில் அமைந்துள்ளது. காசியிலுள்ள கருவறை போன்றே சிவலிங்கத்தை வலம் வந்து அர்ச்சகர் பூஜைசெய்யும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.

    தரைமட்டத்தில் இருந்து சுமார் ஐந்தடி உயரத்தில் உள்ள இக்கோவிலுக்குள் ஏறிச் செல்வதற்கு மேற்குப் பகுதியில் இருந்தும், கிழக்குப் பகுதியில் இருந்தும் பாறைக் கற்களால் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. மழைநீர் குடவரையின் உள்ளே புகாவண்ணம் குடவரையின் மேலே, பாறையில் புருவம் போன்ற காடி வெட்டப்பட்டுள்ளது.

    குடவரையில் மூன்று நுழைவு வாசல்கள் உள்ளன. நுழைவு வாசலில் காணப்படும் தூண்களின் மீது அழகிய பூ வேலைப்பாடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. நுழைவு வாசல்களுக்கு நேரே உள்ளே முன்மண்டபத்தில் நடராஜர், பெருமாள், விநாயகர் புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. அதிலுள்ள சிவபெருமான் ஆடல் நிகழ்த்த, அவரது இருபுறமும் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு பூதங்கள் நிற்கின்றன. வலப்புற பூதத்தின் உடல் பெரு மளவு சிதைந்துள்ளது. கால்கள் மட்டும் எஞ்சியுள்ளன. நின்ற கோலத்தில் காணப்படும் இடப்பூதம் கரண்ட மகுடம் அணிந்து, செவிகளில் பனை ஓலைச் சுருள்களுடன் காட்சியளிக்கிறது. இடக்கையில் ஏந்தி, இடது தோளில் சாத்தியிருக்கும் நரம்பிசைக்கருவியை வலக்கைக் கோலால் இயக்கும் இப்பூதம் இறைவனைத் தலை உயர்த்திப் பார்த்தவாறு பூரித்து நிற்கிறது.

    குடவரை கோவில் அமைந்த மலை

    தமிழ்நாட்டில் எத்தனையோ குடவரை இருந்தாலும், ‘சிரட்டைக் கின்னரி’ (பழமையான வில்லிசைக் கருவி) இடம் பெற்றுள்ள ஒரே குடவரைக் கோவில், பசுபதேஸ்வரர் ஆலயம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

    நின்ற திருக்கோலத்தில் மகாவிஷ்ணு சங்கு, சக்கர தாரியாய் நான்கு திருக்கரங்களுடன் இங்கு வீற்றிருக்கிறார். அருகே அமர்ந்த நிலையில் விநாயகர் எழுந்தருளியுள்ளார். பல்லவர் காலத்தை ஒட்டிய கோவில் என்பதால், பல்லவர் குகைக்கோவில்களில் காணப்பெறாத, சிறப்புமிக்க விநாயகர் புடைப்புச் சிற்பம் இங்குள்ளது. கருவறைக்கு நேர் எதிரில் கிழக்கு உட்பகுதி பாறைச்சுவற்றில், நின்ற நிலையில் பிரம்மா மூன்று சிரசு, நான்கு கரங்களுடன் காணப் படுகிறார்.

    நுழைவு வாசலில் உள்ள கனமான தூண்கள், விரிந்த தாமரைப் பதக்கங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. தரங்கப் பொதிகைகள் (தோரணம் போன்ற அமைப்பு) நுழைவு வாசலுக்கு மேன்மேலும் அழகு சேர்க்கின்றன. முன்மண்டப விதானத்தில் பழங்கால ஓவியங்களின் (அன்னம், தாமரை மலர், வேட்டுவேர், சிம்மாசனம்) வண்ண எச்சங்கள் சிதைந்த நிலையில் உள்ளன.

    முன்மண்டபத்திலிருந்து சுமார் 2 அடி உயரத்தில் கருவறை அமைக்கப்பட்டுள்ளது. கருவறை வாசலில் இருபுறமும் துவார பாலகர்கள் உள்ளனர். கருவறையில் பாறையில் வடிக்கப்பட்ட ஒற்றைக் கற்பீடத்தில் பசுபதேஸ்வரர் அழகாகக் காட்சி தருகிறார். குடவரைக் கோவில் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்தே முறையான அபிஷேக, ஆராதனை சிறப்பாக நடைபெற்று வந்துள்ளன என்பதை சிவலிங்கம் உணர்த்துகிறது.

    காலத்தால் பழையதும், கீர்த்தியால் செழுமை பெற்றதும், மனித உயிர்களை மெய் மறக்கச் செய்து, வேண்டுவன தந்து உலகம் உய்யக் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கிறார், பசுபதேஸ்வரர் இவருக்கான நித்யபூஜை சிறப்புடன் நிகழ்வுற, வல்லவ தேவன் என்ற பாண்டிய மன்னன் மலைப்பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள குளங்களை தானமாக வழங்கியுள்ளான். இத்தகவல் குகைக்கோவில் இடது தூண் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இங்கு மன்னர்களின் 2 கல்வெட்டுகள் உள்ளன.

    சுயம்புலிங்கம்போல் குடவரையில் உள்ள சிவலிங்கத்துக்கும் அதீத ஆற்றல் உண்டு என்பதால், பிரதோஷ வழிபாட்டில் இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்கின்றனர். மேலும் பவுர்ணமிதோறும் நடைபெறும் கிரிவலத்திலும் திரளான பக்தர்கள் பங்கேற்கிறார்கள். திருக்கார்த்திகை, மகா சிவராத்திரி தினங்களில் சுற்றுப்பகுதி கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து தரிசனம் செய்து மகிழ்கின்றனர். திருக்கார்த்திகை தினமான இன்று (23-11-2018) வெள்ளிக்கிழமை காலையில் உலக நலன், உலக ஒற்றுமை, உலக நல்வாழ்வு, உலக ஆரோக்கியம் கருதி ‘மகா ருத்ர யாகம்’ நடைபெறுகிறது.

    பசுபதேஸ்வரரை வழிபடுவோருக்கு எல்லா விதமான தோஷங்கள், சாபங்கள் நீங்கி, சகல யோகங்களும் ஏற்படுவதால், இப்பகுதி மக்கள் ஈசனை ‘சர்வேஸ்வரன்’ எனவும் அழைக்கின்றனர். திருமணம், வாரிசு ஆகிய பிரார்த்தனைக்காகவும், சிறந்த கல்வி, உயர்பதவி பெறவும் வேண்டிப் பயன்பெறுகின்றனர். மழை பொழியவும், மன பயம் அகலவும் இங்கு வேண்டியதும் கைமேல் பலன் கிட்டுகிறது என்பது ஐதீகம்.

    மூர்த்தி, தலம், தீர்த்தம், விருட்சம் (பனை) ஆகிய நான்கு அம்சங்களைக் கொண்டுள்ளது இக்குடவரைக் கோவில். சாலையில் இருந்து கோவில் வரை செல்லும் மண்பாதையின் இருபுறமும் தல விருட்சமான பனை மரம் அணிவகுத்து நிற்பது கொள்ளை அழகு!

    தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த ஆலயம், தினமும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

    துன்பங்களைப் போக்கி, இன்பங்களைத் தந்து, நிறைவில் முக்தியைத் தரவல்ல சர்வேஸ்வரனாம் பசுபதேஸ்வரரை, வாழ்வில் ஒருமுறையாவது தரிசனம் செய்ய வாருங்கள்!

    அமைவிடம்

    சங்கரன்கோவிலில் இருந்து 15 கி.மீ. தொலைவில் சேர்ந்தமரம் என்னும் ஊர் உள்ளது. இங்கிருந்து மேற்குத் திசையில் 3 கி.மீ. தூரத்தில் பசுபதேஸ்வரர் குடவரைக் கோவில் அமைந்துள்ளது. கடையநல்லூரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் சுரண்டை செல்லும் வழியில் இவ்வாலயம் இருக்கிறது. திருநெல்வேலியில் இருந்து ஆலங்குளம், வீ.கே.புதூர், சுரண்டை, சேர்ந்தமரம் வழியாக 60 கி.மீ. பயணித்தும் இக்கோவிலுக்கு வரலாம்.

    கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், குளத்துப்புழா என்னும் இடத்தில் அமைந்திருக்கும் தலத்தில் ஐயப்பன் குழந்தைத் தோற்றத்தில் இருக்கிறார். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், குளத்துப்புழா என்னும் இடத்தில் அமைந்திருக்கும் தலத்தில் ஐயப்பன் குழந்தைத் தோற்றத்தில் இருக்கிறார். இங்கிருக்கும் ஐயப்பனை ‘பால சாஸ்தா’ என்றும், ‘குளத்துப்புழா பாலகன்’ என்றும் போற்றுகின்றனர்.

    தல வரலாறு :

    கொட்டாரக்கரைப் பகுதியைச் சேர்ந்த ஒருவர், தனது பணியாளர்கள் சிலருடன் ராமேஸ்வரத்திற்குப் புனிதப் பயணம் சென்று திரும்பிக் கொண்டிருந்தார். காட்டின் வழியாக வந்து கொண்டிருந்த அவர், வழியில் இருந்த கல்லடையாற்றின் கரையில் தங்கி ஓய்வெடுத்தார். அவருடன் வந்த பணியாளர்கள், அங்கே உணவு தயாரிக்கும் பணியைத் தொடங்கினர்.

    நிலத்தில் புதைந்திருந்த ஒரு கல்லைப் பார்த்த பணியாளர் ஒருவர், அந்தக் கல்லுடன் மேலும் இரு கற்களை வைத்து, அந்த இடத்தில் அடுப்பு மூட்டுவதென்று முடிவு செய்தார். பின்னர் அவர், அங்கே கிடைத்த இரண்டு கற்களை எடுத்துக் கொண்டு போய் நிலத்தில் புதைந்திருந்த கல்லின் அருகில் வைத்தார். அடுப்புக்காக வைத்திருந்த மூன்று கற்களில், நிலத்தில் புதைந்திருந்த கல் மட்டும் சிறிது உயரமாக இருந்தது.

    உடனே அந்தப் பணியாளர், நிலத்தில் புதைந்திருந்த கல்லை, அதைவிடப் பெரிதான ஒரு கல்லை எடுத்துக் கொண்டு வந்து உடைக்க முயன்றார். அப்போது, நிலத்தில் புதைந்திருந்த கல் உடையாமல், உடைக்கப் பயன்படுத்திய பெரிய கல் எட்டுத் துண்டுகளாக உடைந்து போனது. உடைந்து போன எட்டுத் துண்டுக் கற்களில் இருந்தும் ரத்தம் வழியத் தொடங்கியது.

    அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பணியாளர், மற்ற பணியாளர்களை அழைத்து உடைந்த கற்களில் இருந்து ரத்தம் வழியும் செய்தியைச் சொன்னார். அவர்களும் அதனைக் கண்டு பயந்தனர். பின்னர் அவர்கள், தங்கள் உரிமையாளரான யாத்ரிகரிடம் சென்று நடந்ததைத் தெரிவித்தனர்.

    அவர் உடைந்து கிடக்கும் கற்களிலிருந்து வழியும் ரத்தத்தை நிறுத்த முயற்சித்தார். ஆனால் முடியவில்லை. ராமேஸ்வரத்திலிருந்து தான் கொண்டு வந்திருந்த புனித நீரை உடைந்த கற்களின் மீது தெளித்தார். உடனே கற்களிலிருந்து வழிந்த ரத்தம் நின்று போனது.

    அப்போது யாத்ரிகருக்கு, உடைந்து கிடப்பது சாதாரணமான கல் இல்லை என்பதும், அந்தக் கல் பரசுராமரால் நிறுவப்பட்ட தர்ம சாஸ்தா ஐயப்பன் உருவம் என்பதும் தெரிந்து மறைந்தது. அதனைத் தொடர்ந்து அவர், ஐயப்பனை நினைத்து வணங்கி, தனது பணியாளர்கள் தெரியாமல் செய்த தவறை மன்னிக்க வேண்டினார். பின்னர் அவர், தனது பணியாளர்கள் செய்த தவறுக்குப் பரிகாரமாக, அந்த இடத்தில் பாலகன் உருவில் ஐயப்பனுக்குச் சிலையமைத்துக் கோவில் கட்ட முடிவு செய்தார்.

    அங்கு நடந்ததைக் கேள்விப்பட்டக் கொட்டாரக்கரை மன்னர் அவ்விடத்திற்கு வந்து, பிராமணரின் கோவில் கட்டுமானப் பணிக்குத் தேவையான நிலத்தை வழங்கிப் பொருளுதவிகளையும் செய்தார் என்று இக்கோவிலின் தல வரலாறு சொல்லப்படுகிறது.

    இக்கோவில் பந்தளம் மன்னரால் கட்டப்பட்டது என்றும், இவ்விடத்தை யாத்ரிகர் கண்டறிந்து சொன்னார் என்றும் மற்றொரு வரலாற்றுத் தகவலும் தெரிவிக்கப்படுகிறது.

    கோவில் அமைப்பு :

    கேரளக் கட்டுமான அமைப்பில் கட்டப்பட்டிருக்கும் இக்கோவிலின் கருவறையில் ஐயப்பன் பாலகன் வடிவில் பால சாஸ்தாவாகக் காட்சி தருகிறார். இவரைக் குளத்துப்புழா பாலகன் என்றும் அழைக்கின்றனர். இக்கோவில் கருவறையில், பரசுராமர் நிறுவியதாகக் கருதப்படும் மூல சாஸ்தா சிலையின் உடைந்து போன எட்டு துண்டுகளும் வைக்கப்பட்டிருக்கின்றன. இக்கோவில் கருவறையின் நுழைவு வாசல் சிறுவர்கள் செல்லும் அளவிற்கான உயரத்தில் இருக்கிறது. கோவில் வளாகத்தில், நாகராஜர், யட்சி சன்னிதிகளும், சிவபெருமான், விஷ்ணு, கணபதி, பூதத்தான், மாம்பழத்துறை அம்மன் மற்றும் கருப்பசாமி சிலைகளும் நிறுவப்பட்டிருக்கின்றன.

    இங்கு ஐயப்பனுக்குரிய அனைத்துச் சிறப்பு நாட்களிலும் வழிபாடுகள் செய்யப்படுகின்றன. வழிபாட்டின் போது, கருவறையில் வைக்கப்பட்டிருக்கும் மூலச் சிலையாகக் கருதப்படும் எட்டு கற்களும் ஒன்று சேர்க்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது. பின்னர், அந்த எட்டு கற்களும் வழக்கமான இடத்தில் வைக்கப்பட்டு விடுகின்றன.

    மலையாள நாட்காட்டியின்படி, மேஷம் (சித்திரை) மாதம் வரும் விசுப் பெருவிழா இக்கோவிலில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஐயப்பன் மண்டல வழிபாட்டு நாட்களில் இக்கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும்.

    இக்கோவிலில் விஜயதசமி நாளில் ‘வித்யாரம்பம்’ எனப்படும் நிகழ்வு நடைபெறுகிறது. இந்நிகழ்வில், பள்ளியில் புதிதாகச் சேரவிருக்கும் குழந்தைகளுக்கு எழுத்துப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் பங்கேற்கும் குழந்தைகளுக்குப் பாலகனான சாஸ்தா நல்ல கல்வியைத் தருவார் என்கிற நம்பிக்கை இருக்கிறது. இங்குள்ள யட்சி அம்மன் சன்னிதி முன்பாகத் தொட்டில் கட்டி வழிபாடு செய்தால், விரைவில் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. கோவில் வளாகத்திலுள்ள நாகராஜரை வழிபடுபவர்களுக்கு, நாகதோஷம் உள்ளிட்ட தோஷங்கள் நீங்கும் என்கின்றனர். கோவிலுக்கு அருகில் இருக்கும் கல்லடையாற்றில் மீன்களுக்குப் பொரி வாங்கிப் போட்டால், தீராத தோல் நோய்கள் எதுவாக இருப்பினும் நீங்கும் என்கிற நம்பிக்கையும் நிலவுகிறது.

    ஐயப்பனின் ஐந்து தோற்றங்கள் :

    மனித வாழ்க்கையை ஐந்து பருவங்களாக சாஸ்திரங்கள் பிரித்துச் சொல்கின்றன. பிறந்தது முதல் பதினெட்டு வயது வரையிலான குழந்தைப் பருவம், ‘பால்ய பருவம்’ எனப்படுகிறது. இந்தப் பருவத்தை விளக்கும் தோற்றத்திலான ஐயப்பன் திருத்தலமாகக் குளத்துப்புழா இருக்கிறது. பத்தொன்பது முதல் முப்பத்தைந்து வயது வரை உள்ள இளமைப் பருவம், `யவன பருவம்’ எனப்படுகிறது.

    இந்தப் பருவத்தை விளக்கும் ஐயப்பன் தலமாக ஆரியங்காவு இருக்கிறது. முப்பத்தாறு முதல் ஐம்பத்தைந்து வயது வரை குடும்பத்தினருக்கான பருவம் `கிரஹஸ்த பருவம்’ எனப்படுகிறது. இப்பருவத்தை விளக்கும் ஐயப்பன் தலமாக அச்சன்கோவில் அமைந்திருக்கிறது. ஐம்பத்தொன்று முதல் எண்பத்தைந்து வயது வரையிலான துறவு நிலை `வானப்பிரஸ்தம்’ எனப்படுகிறது. இப்பருவத்தை விளக்கும் ஐயப்பன் தலமாகச் சபரிமலை இருக்கிறது. எண்பத்தாறு வயது முதலானது ‘ஏகாந்த நிலை’ எனப்படுகிறது. இதனை விளக்குவதாகக் காந்தமலை இருக்கிறது.

    மீனூட்டு :

    குளத்துப்புழா ஐயப்பனின் அழகில் மயங்கிய மச்சக் கன்னி ஒருத்தி, அவரைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினாள். ஆனால், ஐயப்பன் அவரைத் திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டார். அதனால் அவள், ‘உங்களைப் பார்த்துக் கொண்டே இந்தப் பகுதியில் வாழும் வரத்தையாவது எனக்குத் தர வேண்டும்’ என்று ஐயப்பனிடம் வேண்டினாள். அவரும் தானிருக்கும் இடத்தின் அருகில் ஓடும் ஆற்றில் மீனாக இருக்கும்படி அருளினார். அதனைத் தொடர்ந்து, மச்சக்கன்னியும் அவள் தோழிகளும் இக்கோவிலின் அருகே சென்று கொண்டிருக்கும் கல்லடையாற்றில் மீன்களாக வாழ்ந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள், இங்குள்ள மீன்களுக்குப் பொரியை உணவாக வழங்கி வேண்டுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இதற்கு ‘மீனூட்டு’ என்று பெயர்.

    இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம் :

    கேரள மாநிலம், திருவனந்தபுரம் நகரில் இருந்து 64 கிலோமீட்டர் தொலைவிலும், கொல்லம் நகரில் இருந்து 59 கிலோமீட்டர் தொலைவிலும், தமிழ்நாட்டிலுள்ள செங்கோட்டை நகரில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவிலும் இருக்கிறது குளத்துப்புழா. மேற்கண்ட மூன்று ஊர்களில் இருந்தும் ஏராளமான பேருந்து வசதி கள் உள்ளது.
    திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள ஜே.கேக நகரில் உள்ளது இந்த அருணாசலேஸ்வரர் ஆலயம். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    அம்மனின் பெயரைக்கேட்டதும் திருவண்ணாமலை உங்களுக்கு நினைவுக்கு வரலாம். ஆனால் அதே பெயரோடு அம்பிகை அருள்வது திருச்சி ஜே.கே நகரில் உள்ள அருணாசலேஸ்வரர் ஆலயத்தில். ஆம்! இறைவன் பெயரும் அதேதான். அருணாசலேஸ்வரர்.

    ஆலயம் கீழ் திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பைக் கடந்ததும் நூறு தூண்களுடன் கூடிய மகா மண்டபம் பிரமாண்டமாகக் காட்சி தருகிறது. வலதுபுறம் கால பைரவரின் தனிச் சன்னிதி உள்ளது. தேய்பிறை அஷ்டமியில் இவருக்கு சிறப்பு ஹோமம், அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இந்த வழிபாட்டில் கலந்து கொள்வதால் ஏவல், பில்லி, சூனியம் போன்ற பாதிப்பில் இருந்து பூரணமாக விடுபடலாம் என்பது நம்பிக்கை.

    சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய மகாமண்டபத் தூண்களை ரசித்தபடி நடந்தால் நந்தியை தரிசித்து, அர்த்த மண்டப நுழைவுவாசலில் உள்ள கம்பீரமான துவாரபாலகர்களின் அனுமதிபெற்று, கருவறையில் இறைவன் அருணாசலேஸ்வரரின் லிங்கத் திருமேனி முன்சென்று நிற்கலாம். கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கும் இறைவன் முன் நின்று கரங்குவிக்கும் போது மனம் பூராவும் வெற்றிடமாகி, மெல்லிய மலர்களால் வருடப்படும் உணர்வு தோன்றுகிறது.

    சிவராத்திரியின் போது இறைவனுக்கு நான்கு கால ஆராதனைகளும் அபிஷேகங்களும் நடைபெறுகின்றன. கார்த்திகை மாதம் அனைத்து சோமவார நாட்களில் இறைவனுக்கு 108 வலம்புரி சங்கு அபிஷேகம் நடைபெறுகிறது. பிரதோஷ வழிபாடும் சிறப்பாக நடக்கிறது.

    இத்தல இறைவனுக்கு அபிஷேகம் செய்து, அன்னதானம் செய்தால் பித்ருதோஷம் நீங்கும் என்றும், ஜாதகக் கோளாறுகள் நிவர்த்தியாகும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.

    இறைவனின் தேவகோட்டத்தில் தட்சிணா மூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். சண்டேசர் சன்னிதியும் உள்ளது.

    அன்னை உண்ணாமுலை அம்மன் தனிச் சன்னிதியில் நின்ற கோலத்தில் இரு கரங்களில் அபய வரத முத்திரைகளுடன் அருள்பாலிக்கிறாள். புன்சிரிப்பு மலர காட்சி தரும் அன்னையின் அருள் முகம் நம்மை வசீகரிப்பது நிஜம்.

    மாங்கல்யம் நிலைத்துத் தழைக்க வேண்டும் என்றும், கணவன் நீண்ட ஆயுளுடன்வாழ வேண்டும் என்றும் விரும்பாத பெண் இருக்க முடியாது.

    இப்படிப்பட்ட பெண்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி வைக்கிறாள் அன்னை.



    பவுர்ணமி நாட்களில் அன்னைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. தை வெள்ளிக்கிழமைகள், ஆடி வெள்ளிக்கிழமைகளிலும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் உண்டு. வெள்ளிக்கிழமைகளில் அன்னைக்கு குங்கும அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்தால் தாலி பாக்கியம் நீடிக்கும் என்றும், நோயுற்றவர்கள் விரைந்து குணமாவார் என்றும், தோஷங்கள் விலகும் என்றும் நம்புவதால் அன்றைய தினம் அன்னையின் சன்னிதியில் பெண்கள் கூட்டம் நிறைந்திருக்கும். தங்கள் வேண்டுதல் பலித்ததும் இறைவிக்கு புடவை சாத்தி, நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றனர். வாசனை மலர்களால் தொடுக்கப்பட்ட பூமாலையை இறைவிக்கு சாத்தினால், திருமணம் விரைந்து நடந்தேறும் என்கின்றனர்.

    இறைவியின் தேவகோட்டத்தில் இச்சா, கிரியா, ஞான சக்தியரும், எதிரே சண்டிகேஸ்வரியும் அருள்பாலிக்கின்றனர்.

    ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் தமிழ்ப்புத்தாண்டு நாட்களில் இறைவனுக்கும் இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது.

    இறைவன், இறைவியை சேர்ந்தே வலம் வரும் வகையில் உட்பிரகாரம் அமைந்துள்ளது. நிருதி விநாயகர், மகாலட்சுமி, சரஸ்வதி, முருகன், வள்ளி, தெய்வானை, நால்வர், நவக்கிரக நாயகர்கள் இங்கே அருள் பாலிக்கின்றனர்.

    இறைவியின் சன்னிதியை அடுத்து ஜெயம் கொண்ட விநாயகரின் சன்னிதி உள்ளது. ஆனை முகன் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்க, கோஷ்டங்களில் தட்சிணாமூர்த்தி, துர்க்கை, லிங்கோத்பவர் உள்ளனர். அடுத்துள்ளது பாலமுருகனின் சன்னிதி. சஷ்டியின் போது ஆறு நாட்களும் முருகனுக்கு சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனை நடைபெறும். மாத சஷ்டி மற்றும் தைப்பூசத்தின்போது முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

    ரிஷபங்களின் சுதையாலான திருவடிவங்களுடன் ஆலயத்தைச் சுற்றியுள்ள மதிற்சுவர் அழகுற காட்சியளிக்கிறது.

    தினசரி இரண்டு கால பூஜை நடக்கும் இந்த ஆலயத்தின் தல விருட்சம், வில்வம்.

    பக்தர்களின் நலம் காக்கும் அருணாசலேஸ்வரரையும், மகளிர் துயர் காக்கும் உண்ணாமுலை அம்மனையும் ஒரு முறை தரிசித்து நன்மை பெறலாமே!

    திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள ஜே.கேக நகரில் உள்ளது இந்த அருணாசலேஸ்வரர் ஆலயம்.
    காஞ்சீபுரம் அடுத்த செவிலிமேடு பகுதியில் அமைந்துள்ளது சௌந்தர்யவல்லி சமேதே ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    காஞ்சீபுரம் அடுத்த செவிலிமேடு பகுதியில் அமைந்துள்ளது சௌந்தர்யவல்லி சமேதே ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில். காஞ்சீபுரம் நகரத்தில் இருந்து ஏறத்தாழ 3 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. ஏறத்தாழ 800 ஆண்டுகளுக்கு முன்பு பல்லவ வம்சத்தின் கடைசி மன்னரான ராஜேந்திர பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது.

    இந்த கோவிலில் செவ்வாய், சனிக் கிழமைகளில் நெய் விளக்கு ஏற்றி பயபக்தியுடன் சுவாமியை வழிபட்டால் திருமண வரம் கைகூடும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. திருக்கோயிலின் கருவறையில் பிரம்மாண்டமான முறையில் எழுந்தருளி அருள்பாலிக்கும் நரசிம்ம மூர்த்தியின் மடியில் காண்போரை பக்தி பரவசத்துடன் கவரும் சாந்த சொரூபியாக தாயர் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

    சித்ரா பவுர்ணமி அன்று காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் இந்த திருக்கோவிலுக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார் மேலும் திருக்கோவில் சார்பினில் மண்டகப்படியும் நடைபெறும். திருக்கோயிலின் ஈசான்ய பாகத்தில் கிழக்கு கைலாச நாதரும் வடக்கு மூலையில் மேற்கு நோக்கி அமர்ந்து கைலாச நாதரும் பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.

    மேலும் ஆலயத்தில் செல்லியம்மன், மாரியம்மன் சன்னதிகளும் உள்ளன. புரட்டாசி மாதம் அனைத்து சனிக்கிழமைகளிலும் இத் திருக்கோயிலில் நடைபெறும் சிறப்பு வழிபாடுகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் மேலும் இத் திருக்கோவிலுக்கு நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் பூமி, நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் தீரும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

    திருக்கோவில் காலை 8 மணி முதல் 10.30 வரையிலும் மாலை 5.30 மணி முதல் 7 மணி வரையும் திறந்திருக்கும். காஞ்சீபுரத்தில் இருந்து நகரப் பேருந்துகள் மற்றும் ஷேர் ஆட்டோக்கள் அதிக அளவில் செவிலிமேடு வழியாக இயக்கப்படுவதால் பக்தர்கள் காஞ்சிபுரத்தில் இருந்து பக்தர்கள் சிரமமின்றி இக் கோயிலுக்கு சென்று வரலாம்.

    அந்நியர்களால் நமது நாட்டில் படை யெடுப்பு நடந்தபோது இந்துக்கோவில்கள் பல சூறையாடப்பட்டும் இடித்தும் தள்ளப்பட்டன. அப்போது காஞ்சியில் உள்ள வரத ராஜ பெருமாள் ஆலயத்தின் உற்சவ விக்ரகங்களை பத்திர மாக பாது காக்க செவிலிமேட்டில் உள்ள இந்த ஆலயத்தில் எழுந்தருளச் செய்தனர்.
    சிலகாலம் காஞ்சி வரதருக்கு இங்கு திருமஞ்சனம், ஆராதனை, விழாக்கள் முதலியவற்றினை செவிலிமேட்டில் உள்ள இந்த ஆலயத்தில் செய்து வந்தனர்.

    அப்போது காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் ஆலயத்தில் இருந்து செவிலிமேட்டில் உள்ள லட்சுமி நரசிம்மர் ஆலயம் வரை சுரங்கப்பாதை அமைத்து வரதர் ஆலய உற்சவர்களை பத்திரமாக இங்கு கொண்டு வந்தனர். இப்போது விஷ ஜந்துக்கள் இருப்பதால் சுரங்கப்பாதையை மூடி வைத்துள்ளனர்.
    பலி பிடத்தைக் கடந்து உள்ளே சென்றால் சுமார் எட்டு அடி உயரமுள்ள துவார பாலகர்கள் இருபுறமும் நம்மை வரவேற்க நாம் மகிழ்ச்சியுடன் உள்ளே செல்லலாம்.

    மூலவர் கருணை தவழும் முகத்தோடும் இடது தொடையில் ஸ்ரீலட்சுமியை இடது கரத்தினால் அணைத்தவாறு மிகப் பெரிய வடிவில் லட்சுமி நரசிம்மராக காண்பவர்களின் கண்களுக்கு கருணைக்கடலாக அற்புத வடிவில் காட்சி தருகிறார். எம்பெருமான் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சேவை சாதிக்கிறார். உற்சவ மூர்த்தி சந்நிதியில் சௌந்தர்ய வரதர், கண்ணன், ஆண்டாள் ஆகிய சிலைகளைக் கண்டு சேவிக்கலாம்.

    இங்குள்ள மகாமண்டபத்தில் காஞ்சியின் தவமுனிவர் பரமாச்சார்யாளின் அனுக்கிரகத்தால் உருவான ஸ்ரீ ஆஞ்சநேயர் கலையழகுடன் அருட்காட்சி தருகிறார். ஆஞ்சநேயருக்குப்பின் இந்த ஆலயத்தில் பக்தர்களின் எண்ணிக்கை கூடி வருகிறது. மூலஸ்தானத்திற்கு நேராக பெரிய திருவடிகள் என்று போற்றப்படுகின்றவரும் பச்சைக் கல்லினால் உருவானவரும் ஆன ஸ்ரீ கருடாழ்வார் கைப்கூப்பிய நிலையில் பெருமாளை நோக்கி சேவை சாதிக்கிறார்.

    ஆலயப் பிராகாரத்தைச் சுற்றி வருகின்றபோது ராமர் மேடு என்று குறிப்பிடும் மண்டபம் உள்ளது. இதில் ஆதிசங்கரர், ராமானுஜர் உருவங்களைக் காண லாம். மற்றும் ஒரு சிறிய மண்டபத்தில் ஒரு கல் தூணில் ஆஞ்ச நேயரின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆலயத்தில் உள்ள தாயாருக்கு ஸ்ரீ சௌந்தரவல்லி என்ற திருநாமம் ஆகும். சுமார் 7 அடி உயரமுள்ள தாயாரின் உருவம் நம்மை பக்தி பரவ சத்தில் ஆழ்த்தும் கையிரண்டும் தானகவே ஒன்று சேர்ந்து அம்மா என்று அழைக்கும். உற்சவ விக்ரகமும் மிக எழிலான அலங்காரத்துடன் காட்சி தருகிறது.

    பெருந்தோட்டத்தில் உள்ளது சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஐராவதேஸ்வரர் ஆலயம். இன்று இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    பெருந்தோட்டத்தில் உள்ளது ஐராவதேஸ்வரர் ஆலயம். சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த சோழர் கால ஆலயத்தில் அருள்புரியும் இறைவன் ஐராவதேஸ்வரர். இறைவி அதிதுல்ய குஜாம்பிகை. ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பைத் தாண்டியதும் பலிபீடம், நந்தி இருக்க, இடது புறம் தனிக் கோவிலில் ‘வாதாடும் கணபதி’ அருள்பாலிக்கிறார்.

    அடுத்துள்ள மகாமண்டபத்தின் தென் திசையில் நால்வர் திருமேனிகள் உள்ளன. வலது புறம் அன்னை அதிதுல்ய குஜாம்பிகையின் சன்னிதி உள்ளது. இங்கு அன்னைக்கு நான்கு கரங்கள். மேல் இருகரங்களில் கும்பத்தையும், தட்டையும் சுமந்து, கீழ் இருகரங்கள் அபய, வரத ஹஸ்த முத்திரைகளுடன், இளநகை தவழ, நின்ற கோலத்தில் தென் திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். நவராத்திரியின் ஒன்பது நாட்களும் அன்னையை விதம் விதமாய் அலங்காரம் செய்வர். இதைக் காணவே பக்தர் கூட்டம் இந்த ஆலயத்திற்கு வருவதுண்டு.

    மகாமண்டபத்தைத் தாண்டி, அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் இறைவன் ஐராவதேஸ்வரர் லிங்கத் திருமேனியில் கீழ்திசை நோக்கி அருள்பாலிக்கிறார். தேவக் கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, பிள்ளையார், பிரம்மா, துர்க்கை ஆகியோர் வீற்றிருக்கின்றனர். துர்க்கைக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமை ராகு கால நேரத்தில், நான்கு வாரங்களுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட பெண்களுக்கு திருமணம் விரைவில் நடைபெறும்.

    திருச்சுற்றில் ஸ்தல விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை, மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர் ஆகியோர் அருள்பாலிக்க, வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் உள்ளனர். கிழக்கு திருச்சுற்றில் சூரியன், சனீஸ்வரன் திருமேனிகள் காணப்படுகின்றன.

    நாகை மாவட்டம் திருவெண்காட்டுப் பகுதியில் பல வனங்கள் இருந்தன. இதில் திருவெண்காடு ‘சுவேத வனம்’ எனவும், பூம்புகார் ‘சாயாவனம்’ எனவும், காவிரிப்பூம்பட்டினம் ‘பல்லவ வனம்’ எனவும், பெரும்பள்ளம் ‘தால வனம்’ எனவும், யோகீஸ்வரம் ‘யோகவனம்’ எனவும், பெருந்தோட்டம் ‘உத்யான வனம்’ எனவும் அழைக்கப்பட்டது.

    பெருந்தோட்டத்தில் திருவெண்காட்டினைப் போல் மூன்று குளங்கள் இருந்தன. பெருவெள்ளம் ஒன்று வந்தபோது, இந்த மூன்று குளங்களும் அழிந்து விட்டன. அருகே இருந்த ஆலயமும் சிதிலமடைந்தது. ஊர் மக்களால் அந்த ஆலயம் புணரமைக்கப்பட்டது. அந்த ஆலயமே பெருந்தோட்டத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவனை வழிபடுவதால், கோப குணம் குறைந்து, மனதில் நிதானமும் பொறுமையும் நிலவும் என்கின்றனர் பக்தர்கள்.

    துர்வாச முனிவரிடம் ஒரு முறை மகாலட்சுமி மலர் மாலை ஒன்றை அளித்தார். அதனை அந்த முனிவர், இந்திரனுக்கு பரிசளித்தார். இந்திரனோ மாலையை வாங்கி, தான் அமர்ந்திருந்த ஐராவதம் என்ற வெள்ளை யானையின் மீது வைத்தான். அந்த யானையோ, மாலையை தரையில் வீசி காலால் மிதித்தது. இதைக் கண்ட துர்வாச முனிவருக்கு கோபம் தலைக்கேறியது. ஐராவதத்தை கோபத்ேதாடு பார்த்தார். ‘நான் கொடுத்த மாலையை அவமதித்த நீ, தேவலோகத்தில் இருக்க தகுதியில்லை. காட்டு யானையாக பூலோகத்தில் சுற்றித் திரிவாய்’ என்று சாபம் அளித்தார்.

    பூலோகம் வந்த யானை, ஒவ்வொரு சிவாலயமாக சுற்றித் திரிந்தது. இந்த தலத்திற்கு யானை வந்தபோது, இங்கிருந்த கணபதி, ‘இறைவனை வழிபடக்கூடாது’ என்று வாதிட்டார். அந்த விநாயகரை ஆலயத்தின் வடகிழக்கு திசையில் தனிக்கோவிலில் ‘வாதாடும் கணபதி’ என்ற பெயரில் வீற்றிருக்கிறார். பின்னர் சமரசம் ஆன கணபதி, யானையை அனுமதித்தார். அதன் பிறகே யானைக்கு சாப விமோசனம் கிடைத்தது.

    ஐராவத யானை வழிபட்டதால் இத்தல இறைவன் ‘ஐராவதேஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார். இது செவி வழி தல வரலாறு.

    திருக்கார்த்திகை, சோம வாரங்கள், தைப்பூசம், சஷ்டி, பொங்கல், ஆண்டுப்பிறப்பு, மார்கழி 30 நாட்கள், சிவராத்திரி போன்ற நாட்களில் இறைவனுக்கும் இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

    வாதாடும் கணபதி

    இந்த ஆலயத்தில் ‘வாதாடும் கணபதி’ என்ற பெயரில் விநாயகர் அருள்பாலிக்கிறார். இவர் மிகவும் சக்தி வாய்ந்தவராக காணப்படுகிறார். மழை வேண்டும் என்று இந்த ஊர் மக்கள் இந்த விநாயகருக்கு ‘கரமணி அபிஷேகம்’ செய்கின்றனர்.

    விநாயகர் கருவறையிலிருந்து தண்ணீர் வெளியேறும் வழியை அடைத்து விடுவார்கள். விநாயகரின் கருவறையை தண்ணீர் கொண்டு நிரப்புவார்கள். விநாயகர் உருவம் முழுவதும் தண்ணீரில் மூழ்கி இருக்க தீபாராதனை நடைபெறும். அதன் பிறகு தண்ணீர் வெளியேறும் வழியை திறந்து விடுவார்கள். தண்ணீர் குறையத் தொடங்கியதும், மீண்டும் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெறும். பின் வடைமாலை சாத்தி, கொழுக்கட்டையால் வழிபடுவார்கள். இந்த பிரார்த்தனையால் மழை பெய்வது உறுதி என்கின்றனர் பக்தர்கள்.

    தாமதமாகும் வழக்குகள் விரைந்து சாதகமாக முடிவதற்கும் அலுவலக ரீதியான தண்டனையிலிருந்து முழுவதும் விடுபடவும் இந்த விநாயகருக்கு கொழுக்கட்டையால் அர்ச்சனை செய்ய பலன் உடனடியாக கிடைக்குமாம்.

    இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலய இறைவனை அத்தி (யானை) வழிப்பட்டதால் இந்த ஊருக்கு அத்தீஸ்வரம் என்ற பெயரும் உண்டு. இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை ஆலயம் திறந்திருக்கும்.

    யானைக்கு அருள்பாலித்த இத்தல இறைவனை நாமும் வணங்கி அருள் பெறுவோமே!

    அமைவிடம்


    நாகை மாவட்டம் புதன் தலமான திருவெண்காட்டிலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள பெருந்தோட்டம் என்ற கிராமத்தில் உள்ளது இந்த ஆலயம். சீர்காழி, மயிலாடுதுறையிலிருந்து நகரப் பேருந்து வசதி உண்டு.
    ராவணனால் கடத்தப்பட்ட சீதை சிறைவைக்கப்பட்டிருந்த இடம், ராமபிரானின் கணையாழியை அனுமன் கொடுத்த இடம், என பல்வேறு சிறப்புகளைக் கொண்டதாக திகழ்கிறது, இலங்கையில் உள்ள சீதாஎலியா திருத்தலம்.
    ராவணனால் கடத்தப்பட்ட சீதை சிறைவைக்கப்பட்டிருந்த இடம், சீதை நீராடி தவமியற்றிய தலம், ராமபிரானின் கணையாழியை அனுமன் கொடுத்த இடம், தொல்லியல் சான்றுகள் நிறைந்த தலம், ராவணன் கோட்டைக்கு எதிரே அமைந்த தலம் என பல்வேறு சிறப்புகளைக் கொண்டதாக திகழ்கிறது, இலங்கையில் உள்ள சீதாஎலியா திருத்தலம்.

    தல வரலாறு :

    தமிழர்களுக்குக் கிடைத்துள்ள இரண்டு இதிகாசங்கள், ராமாயணமும், மகாபாரதமும் ஆகும். இவை இரண்டும் உண்மையே என்பதற்கான வரலாற்றுச் சான்றுகள், இந்தியாவிலும், இலங்கையிலும் நிறைந்துள்ளன. அந்த வகையில்.. சீதையை சிறைபிடித்த ராவணன், அவளை காவலில் வைத்த இடமே, சீதாஎலியா என்ற தலம். இங்கு அமைந்துள்ள கோவிலே, சீதை அம்மன் திருக்கோவில் ஆகும். இதனை உறுதிப்படுத்தும் விதமாக இங்கு பல்வேறு தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன.

    கைகேயின் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக, மன்னன் தசரதன் தந்த வரங்களின் படி, ராமன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செல்ல நேர்ந்தது. ராமபிரானுடன் சீதையும் லட்சுமணனும் வனம் சென்றனர்.

    ராமன் தண்டகாவனம் சென்று தங்கியபோது, ராவணனின் தங்கை சூர்ப்பனகை, ராமனின் அழகைக் கண்டு மயங்கினாள். தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி வலியுறுத்தினாள். சீதை இருக்கும் வரை ஏக பத்தினி விரதனான ராமன் தன்னை மணம்புரிய மாட்டான் என்று எண்ணிய சூர்ப்பனகை, சீதையைத் தூக்கிச் செல்ல முயன்றாள். இதைக் கண்ட லட்சுமணன், சூர்ப்பனகையின் மூக்கை அறுத்தெறிந்தான்.

    ராவணன் அரசபைக்குச் சென்ற சூர்ப்பனகை, தனது அண்ணனிடம் புலம்பித் தீர்த்தாள். ‘அழகுமிக்க சீதையை உனக்காக கொண்டுவர முயன்று இந்த கதி ஏற்பட்டது’ என்று பொய் கூறினாள். சீதையின் பேரழகு, ராவணனின் கண்ணை மறைத்தது.

    மாரீசன் என்ற தன் மாமனோடு, சீதை தங்கி யிருந்த பஞ்சவடிக்கு வந்தான். ராவணனுக்காகப் பொன் மான் வடிவம் எடுத்த மாரீசன், லட்சுமணனின் அம்பு பட்டு இறந்தான். என்றாலும், சந்நியாசி வடிவில் வந்த ராவணன், சீதையை புஷ்பக விமானத்தில் கடத்திச் சென்றான்.

    தன் அரண்மனையில் வைத்துப் பார்த்தால் சீதையின் கோபம் குறையும் என்று நினைத்த ராவணனின் எண்ணம் ஈடேறவில்லை. வேறு வழியின்றி அசோக வனத்தில் சிறை வைத்தான் என்கிறது இந்த ஆலயத்தின் புராணக் கதை.

    சீதை சிறைவைக்கப்பட்ட தலமே, சீதாஎலியா என்ற ஊராக விளங்குகிறது. அவ்வூரில் தான் சீதை அம்மன் ஆலயம் இருக்கிறது. புராண காலத்தில் அசோக வனம் என்று குறிப்பிடப்படும் இந்தப் பகுதி, தற்போது இலங்கையின் மத்திய மாகாணமான நுவரெலியா அருகில் உள்ள மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இத்தலம் குழந்தைப்பேறு, தம்பதியர் ஒற்றுமைக்கு ஏற்றத் தலமாகத் திகழ்வதால், உள்நாட்டவர் பலரும் தவறாமல் வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

    ராமாயணம் தொடர்புடைய பழம்பெரும் தலங்களான ஹக்கலா, மலிகடென்னா, ராமராசாலா, சீத்தாவாகா, கெலனியா இன்றும் காணப்படுகிறது. இதேபோல, ராவணன் குகை, ராவண எல்லா எனும் இடங்கள் இலங்கையின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ளன. ராவணனின் மற்றொரு கோட்டை தென்கிழக்கு கடற்கரைக் கோவிலாக இருக்கிறது.

    சீதா எலியா ஆலயத்தின் எதிரே பிரமாண்ட மலை அமைந்துள்ளது. அதன் உச்சியில் ராவணன் கோட்டையும், அரண் மனையும் இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த மலையின் முன்பகுதியைப் பார்த்தால் அது அனுமனின் முகம் போல் காட்சி தருவது வியப்பாக உள்ளது.

    ராமர், சீதையுடன் லட்சுமணன்

    ஆலய அமைப்பு :

    இவ்வாலயம் கண்டி - நுவரெலியா நெடுஞ்சாலையை ஒட்டி, சீதை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்த இடமே சீதை சிறை வைக்கப்பட்ட அசோக வனம் ஆகும். சாலையில் இருந்து சில படிகள் கீழே இறங்கி தான் கோவிலுக்குச் செல்ல வேண்டும். உள்ளே இரண்டு கருவறை விமானங்கள் உள்ளன. ஒன்றில் பழைய மூல மூர்த்திகளும், மற்றொன்றில் புதிய மூல மூர்த்திகளும் உள்ளன. எதிரில் அனுமன், ராமபிரானை வணங்கிய நிலையில் காட்சி தருகின்றார். இரண்டு கருவறைகளிலும் ராமபிரான், சீதை, லட்சுமணன் அருள்காட்சி வழங்குகின்றனர். ஆலயத்தின் தலமரமாக அசோக மரம் உள்ளது. பிரார்த்தனை செய்வோர் கட்டிய ஏராளமான துணி முடிச்சுகள் அதில் காணப்படுகின்றன.

    ஆலயத்தின் பின்புறம் சீதை ஆறு ஜீவநதியாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதன் மறுகரையில் அனுமன் பாதங்களின் சுவடு கள் பாறையில் அமைந்துள்ளன. அதன் மேலே சிறிய மேடை அமைந்து, அதில் ராமபிரான் கொடுத்த கணையாழியை அனுமன் சீதையிடம் தரும் காட்சி, சுதைச் சிற்பமாக வடிக்கப்பட்டிருக்கிறது. அதன் பின்புறம் மலைகள் நிறைந்திருக்க, அதில் அசோக மரங்கள் நிறைந்துள்ளன.

    ஆலயத்தை ஒட்டிய ஒரு பகுதி மண்ணின் நிறம் கருமை நிறமாகவும், மறுபகுதி இயல்பான நிறத்திலும் அமைந்துள்ளது. இதற்குக் காரணம், இலங்கையை அனுமன் எரித்ததால் ஏற்பட்டது என்ற ஐதீகம் கூறப்படுகிறது.

    கோவில் நிர்வாகம் தனியார் வசம் இருக்கிறது. இங்குள்ள அர்ச்சகர்கள் பெரும்பாலானோர் தமிழகத்தில் இருந்து வந்து செல்பவர்களாக உள்ளனர். இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், 2 மணி முதல் மாலை 6.30 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    ராமாயணத்தைக் கதையாகப் படித்து, படமாகப் பார்த்த நமக்கு, அசோக வனத்தையும், சீதை அம்மன் திருக்கோவிலையும் கண்டு வணங்கி, அங்குள்ள வரலாற்றுச் சின்னங்களை எல்லாம் பார்த்து திரும்பும் போது, நம் மனதிற்குள்ளும் ராமாயண காலத்தில் வாழ்ந்த பிரமிப்பு ஏற்படும். அந்த மெய்சிலிர்ப்பை அங்கு செல்லும் எவராலும் தவிர்க்க இயலாது.

    தேங்காய் எப்படி உடைபட வேண்டும்?:

    வழிபாட்டிற்கென்று தேங்காய் உடைக்கும் பொழுது, சரி பாதியாக உடைந்தால் சிறப்பு உண்டாகும். சிறிய மூடியும், பெரிய மூடியும் உடைந்தால் சிறிது நாள் கழித்து காரியம் நிறைவேறும். உள்ளே பூ இருந்தால் குழந்தைப்பேறு உண்டாகும். குறுக்கில் உடைந்தால் குற்றம் இருக்கிறது என்று பொருள். எக்காரணம் கொண்டும் உடைத்த தேங்காயை மூடிப் பார்க்க கூடாது. ஆனால் சிதறு காய் உடைக்கும் பொழுது நன்றாகச் சிதற வேண்டும். அப்பொழுது சரிசமமாக உடையக் கூடாது. சிறு, சிறு துண்டுகளாகச் சிதறி ஓடினால் தான் நமது துன்பங்களும் சிதறும் என்பது ஐதீகம்.

    வாழ்வில் வசந்தம் உருவாக...

    சூரியனுடைய அருளைப் பெற விரும்புபவர்கள் சூரிய திசை, சூரிய புத்தி நடப்பவர்கள் சூரிய வழிபாட்டைத் தினமும் மேற்கொள்ள வேண்டும். அதோடு ஞாயிற்றுக்கிழமை சூரிய ஹோரை நேரத்தில் கோதுமை தானமும், ஏழு குதிரைகளுக்கு ஏழு கைப்பிடி கொள்ளும் தானம் கொடுத்து வழிபட்டு வந்தால் வாழ்வில் வசந்தம் உருவாகும்.

    அமைவிடம் :

    இலங்கையின் மத்திய மாகாணமான நுவரெலியா மாவட்டத்தில், நுவரெலியா நகரில் இருந்து 5 கி.மீ. தொலைவில், கண்டி- நுவரெலியா நெடுஞ்சாலையில் உள்ளது சீதாஎலியா என்ற ஊர். இந்த ஊரின் நெடுஞ்சாலையை ஒட்டியே சீதை அம்மன் ஆலயம் இருக்கிறது. நுவரெலியா, இலங்கை நாட்டின் மலைவாசத் தலம் ஆகும். கண்டியில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவிலும், கொழும்பில் இருந்து 105 கிலோமீட்டர் தூரத்திலும், யாழ்ப்பாணத்தில் இருந்து 400 கிலோமீட்டர் தொலைவிலும் சீதா எலியா என்ற ஊர் அமைந்திருக்கிறது.
    வேல் - மூலவராகத் திகழும் திருத்தலம், ஆறுமுக நாவலரின் மனம் கவர்ந்த கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்ட தலமாக விளங்குவது, இலங்கை நாட்டின் நல்லூர் கந்தசாமி திருக்கோவில்.
    கோவில் தோற்றம் :

    யாழ்ப்பாணத்தின் மிகப்பெரிய திருக்கோவில், புவனேகுபாகுவால் எழுப்பப்பட்ட ஆலயம், வேல் - மூலவராகத் திகழும் திருத்தலம், ஆறுமுக நாவலரின் மனம் கவர்ந்த கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்ட தலமாக விளங்குவது, இலங்கை நாட்டின் நல்லூர் கந்தசாமி திருக்கோவில்.

    இலங்கைத் தமிழர்களின் பூர்வீக பூமியான வடக்கு மாகாணத்தில் அமைந்த முக்கியத் திருக்கோவிலாக திகழ்வது, நல்லூர் கந்தசாமிக் கோவில். மன்னர் காலத்தில், தலைநகராக விளங்கிய இவ்வூர், இன்று முக்கிய நகரமாக மாறியுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பெரிய கோவில் என்ற பெருமையையும் இந்த ஆலயம் பெற்றுள்ளது. இலங்கைவாழ் தமிழர்களின் அபிமானத் தலமாகவும் விளங்குகின்றது.

    ஆலய அமைப்பு :


    கிழக்கு நோக்கிய வாசல் கோபுரம் கலைநயம் கொண்டு தங்க நிறத்தில் ஒளி வீசுகிறது. ஐந்து நிலைகளைக் கொண்ட கோபுரம் எழில் காட்சி தர, இதில் புராணச் சிற்பங்கள் நிறைந்துள்ளன. இதன் இரு திசைகளிலும் மிதமான உயரத்தில் மணி கோபுரங்கள் அமைந்துள்ளன. கருவறைக்கும் கோபுரத்திற்கும் நடுவில் அர்த்தமண்டபம், ஆறுமுக சுவாமி கோவில் மண்டபம், முத்துக்குமார சுவாமி மண்டபம், ஸ்தம்ப மண்டபம் அமைந்துள்ளன.

    பிள்ளையார், பைரவர், சந்தான கோபாலர், தெய்வானை, வள்ளியம்மை கோட்டங்கள் உட்பிரகாரத்தில் அமைந்துள்ளன. ஆறுமுகசுவாமி மண்டப வாசலின் எதிரே, தீர்த்தக் கேணி அமைந்துள்ளது. இதன் அருகே தண்டாயுதபாணி சுவாமி சன்னிதி, திருப்புகழ் மண்டபம் ஆகியவை இருக்கின்றன.

    2011-ம் ஆண்டு 108 அடி உயர தெற்கு கோபுரமும், 2015-ல் 108 அடி உயர வடக்குக் கோபுரவாசல் ராஜகோபுரங்களும் அமைக்கப்பட்டன. பழனியாண்டவர் சன்னிதி, சூரியனுடன் தேவியர், உற்சவத் திருமேனி உள்ளன. பிரமாண்டத் தேரும், தேர் நிறுத்த மண்டபமும் கிழக்கு வாசலின் எதிரில் அமைந்துள்ளது.

    ஆலயத்தில் நடுநாயகமாக நல்லூர் கந்தசாமி விளங்குகின்றார். இங்கே வேல் வழிபாடே பிரதானம் என்பதால், கந்தன் வேலாயுதனாக, வேல் வடிவில் காட்சி யளிக்கிறார். தீப ஒளியில் இக்கோலத்தைக் காணும்போது, நம் மெய்சிலிர்க்கின்றது.

    இந்தக் கோவிலில் தினமும் ஆறு கால பூஜை நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமைகள் சிறப்பு நாட்களாகவும், ஐப்பசி வெள்ளி மிகவும் புனித நாளாகவும் கொண்டாடப் படுகிறது. அன்றைய தினம் ஆயிரக்கணக்கான அடியவர்கள் விரதமிருந்து கந்தனை வழிபடுவார்கள். ஐப்பசி அமாவாசை தொடங்கும் கந்தசஷ்டி விழா, சூரசம்ஹாரம் வரை வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. திருக்கார்த்திகை, தைப்பொங்கல், தைப்பூசம், ஆண்டுப்பிறப்பு, நவராத்திரி, திருவெம்பாவை விழாக்களும் உண்டு.

    ஆடி அமாவாசை முடிந்து வரும் சஷ்டியில் பிரம்மோற்சவம் விழா தொடங்குகிறது. இந்த விழா தொடர்ச்சியாக 25 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பகலிலும் இரவிலும் வெவ்வேறு வாகனங்களில் வள்ளி - தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி உற்சவத் திருமேனிகள் வீதி உலா வரும். விழாவின் போது பக்தர்கள் காவடி எடுத்தல், தீச்சட்டி எடுத்தல், அங்கப் பிரதட்சணம், அடியழித்தல் முதலிய நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுகிறார்கள்.

    ஆலயம் தினமும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 5 மணி பூஜை செய்யப்பட்டதும், கதவுகள் மூடப்படும். பின்னர் காலை 7.30 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 3 மணி முதல் 6 மணி வரையும் கோவிலில் தரிசனம் செய்யலாம். வெள்ளிக்கிழமைகள் சிறப்பு நாட்களாக கருதப்படுவதால் அன்றைய தினம் தொடர்ச்சியாக நடை திறக்கப்பட்டிருக்கும். ஆலயத்தின் தீர்த்தம் மா மரம் ஆகும். தல தீர்த்தமாக சண்முகத் தீர்த்தம் அமைந்திருக்கிறது.

    மாப்பாணர் பரம்பரையினரால் இக்கோவில் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது.

    நல்லூரில் கந்தசாமி கோவில் தவிர, கயிலாயநாதர், சட்டநாத ஈஸ்வரன், நாயன்மார்கட்டு, அரசடிப் பிள்ளையார், வெயிலுகந்த விநாயகர், முக்குறுணி பிள்ளையார் முதலான கோவில்கள் அமைந்திருக்கின்றன.

    அமைவிடம் :

    இலங்கை நாட்டின் வடக்கு மாகாணத்தில், யாழ்ப்பாண மாவட்டம், யாழ்ப்பாணம் நகரில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில், நல்லூர் திருத்தலம் அமைந்துள்ளது. கொழும்பில் இருந்து வடக்கே 355 கி.மீ. தொலைவில் நல்லூர் இருக்கிறது.
    நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு பகுதியில் இருக்கிறது குற்றம் பொறுத்த நாதர் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு பகுதியில் இருக்கிறது குற்றம் பொறுத்த நாதர் கோவில். கருப்பறியலூர், கர்மநாசபுரம், மேலைக்காழி போன்றவை தலைஞாயிறு ஊரின் புராண காலப் பெயர்களாகும். இந்த ஆலயத்தில் உள்ள இறைவன் குற்றம் பொறுத்தநாதர் என்றும், வடமொழியில் அபராதசமேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவியின் திருநாமம் கோல்வளை நாயகி என்பதாகும். வடமொழியில் விஜித்ர வலையாம்பிகை.

    திருஞானசம்பந்தராலும், சுந்தரராலும் தேவாரம் பாடப்பெற்ற ஆலயம் இது. காவிரியின் வடகரையில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் 27-வது ஆலயமாக இது திகழ்கிறது.

    தல வரலாறு :

    இலங்கையை ஆட்சி செய்து வந்த ராவணனின் மகன் மேகநாதன். இந்திரனுடன் போரிட்டு அவனை வென்றதால், ‘இந்திரஜித்’ என்ற பெயர் வந்தது. ஒரு முறை மேகநாதன், புஷ்பக விமானத்தில் பறந்து சென்று கொண்டிருந்தான். ஓரிடத்தில் அவனது விமானம் தடைபட்டு நின்றது. அதற்கான காரணத்தை ஆராய்ந்தபோது, விமானத்தின் கீழ் பகுதியில் ஒரு சிவாலயம் இருப்பது தெரியவந்தது.

    இதனால் வருந்திய மேகநாதன், அந்த ஆலயத்திற்குச் சென்று, ஆலய தீர்த்தத்தில் நீராடி சிவனை பூஜித்து வழிபட்டான். இதையடுத்து விமானத்திற்கு ஏற்பட்ட தடை நீங்கி, மீண்டும் புஷ்பக விமானம் பறக்கத் தொடங்கியது.

    அப்படிப்பட்ட அற்புத சிவலிங்கம் உள்ள ஆலயத்தினை நினைத்து மேகநாதனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. அவன் அந்த ஆலயத்தில் இருந்த லிங்கத்தை, இலங்கைக்கு கொண்டு செல்ல முடிவு செய்தான். மறுநொடியே தன் உடல் வலிமைையக் கொண்டு, சிவலிங்கத்தை தூக்க முயற்சித்தான். ஆனால் அவனால் முடியவில்லை. ஒரு கட்டத்தில் மூர்ச்சையடைந்து விழுந்தான்.

    மகனின் நிலையை அறிந்த ராவணன், அந்த ஆலயத்திற்குச் சென்று, சிவபெருமானிடம் ‘தன் மகனின் குற்றத்தைப் பொறுத்தருளும்படி’ வேண்டினான். இறைவனும் மயங்கிக் கிடந்த மேகநாதனுக்கு, சுயநினைவு வரச் செய்து அருளினார். இதனால் இந்த ஆலய இறைவனுக்கு ‘குற்றம் பொறுத்த நாதர்’ என்று பெயர் வந்ததாக தல புராணம் தெரிவிக்கிறது.

    விசித்திராங்கன் என்ற மன்னன், தன் மனைவி சுசீலையுடன் குழந்தை பாக்கியம் வேண்டி இந்த ஆலயத்திற்கு வந்து இறைவனை வழிபட்டான். இறையருளால் அவர்களுக்கு குழந்தை பிறந்தது. இதனால் மகிழ்ச்சியுற்ற மன்னன், இந்த ஆலயத்தை அழகாக வடிவமைத்துக் கட்டினான் என்று சொல்லப்படுகிறது. சூரிய பகவான் வழிபாடு செய்த திருத்தலம் என்பதால், இந்தப் பகுதிக்கு ‘தலைஞாயிறு’ என்று பெயர் வந்ததாகவும் சொல்கிறார்கள்.

    இந்த ஆலயத்தில் உள்ள இறைவன் சுயம்பு மூர்த்தியாக இருந்து அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் செய்யப்படும் அறச் செயல்கள், ஒன்றுக்கு பத்தாக பெருகும் என்ற சூட்சுமத்தை பிரம்மதேவன், வசிஷ்டருக்கு கூறியிருக்கிறார். அதனால் வசிஷ்டர் இங்கு வந்து லிங்கம் அமைத்து வழிபாடு செய்து மெய்ஞானம் பெற்றதாக தல புராணம் சொல்கிறது. வசிஷ்டரைப் போலவே, 72 மகரிஷிகள் இங்கு வழிபாடு செய்து முக்தி பெற்றுள்ளனர். இத்தலத்தில் வந்து வழிபடுபவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்றும் சொல்கிறார்கள். அவர்கள் சிவன் பாதம் சென்றடைவர் என்பது ஐதீகம். இதனால்தான் இந்த திருத்தலம் இருக்கும் பகுதி ‘கருப்பறியலூர்’ என்றும் வழங்கப்படுகிறது.



    அனுமனுக்கு ஏற்பட்ட தோஷம் :

    சீதையை கடத்திச் சென்றதால், இலங்கையில் உள்ள ராவணனுடன் ராமபிரான் போர் புரிந்தார். அந்தப் போரில் ராமனால், ராவணன் கொல்லப்பட்டான். ராவணனைக் கொன்றதால் ராமருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அதனைப் போக்க சிவ பூஜை செய்ய வேண்டும் என்று நினைத்தார் ராமபிரான். அதற்காக இரண்டு நாழிகைக்குள் ஒரு சிவலிங்கம் கொண்டு வரும்படி அனுமனுக்கு உத்தரவிட்டார்.

    அனுமனும் சிவலிங்கம் கொண்டு வருவதற்காக வடதிசை நோக்கிச் சென்றார். ஆனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் அனுமனால் வர இயலவில்லை. ஆகையால் ராமர், மணலில் சிவலிங்கம் செய்து வைத்து சிவபூஜையை முடித்து விட்டார். அவரது பிரம்மஹத்தி தோஷமும் விலகியது. ராமர் மணல் லிங்கம் அமைத்து வழிபட்ட தலமே ‘ராமேஸ்வரம்.’

    தான் வருவதற்குள் லிங்கம் பிரதிஷ்டை செய்ததை அறிந்த அனுமன், வருத்தம் அடைந்தார். மேலும் மணல் லிங்கத்தை வாலால் கட்டி இழுத்தார். ஆனால் அனுமனால் லிங்கத்திற்கு எந்தச் சேதமும் ஏற்படுத்த முடியவில்லை. அத்துடன் அனுமனுக்கு சிவ தோஷம் ஏற்பட்டது.

    ‘சிவனை நினைத்து தவம் இருந்தால், சிவ தோஷம் நீங்கும்’ என்று ராமபிரான் அனுமனுக்கு யோசனை கூறினார். அனுமனும் அவ்வாறே செய்ய, அனுமன் முன்பாக தோன்றிய சிவபெருமான், ‘அனுமனே! நீ கன்மபுரம் எனப்படும் தலைஞாயிறு சென்று வழிபாடு செய். உன்னுடைய தோஷம் விலகும்’ என்று அருளினார்.

    அதன்படி தலைஞாயிறு வந்து வழிபாடு செய்த அனுமனின் தோஷம் நீங்கியது. தனக்கு கருணை பொழிந்த, சிவனை நினைத்து வடகிழக்கில் ஒரு லிங்கம் அமைத்து வழிபாடு செய்தார், அனுமன். இந்த சிவலிங்கம் உள்ள ஆலயம் அமைந்த பகுதி ‘திருக்குரக்கா’ என்று வழங்கப்படுகிறது.

    குற்றம் பொறுத்தநாதர் ஆலயத்தில் சூரிய புஷ்கரணி, பொற்றாமரை குளம், இந்திர தீர்த்தம் ஆகியவை தல தீர்த்தமாக விளங்குகின்றன. கொடி முல்லை தலவிருட்சமாக உள்ளது. இந்த ஆலயத்தில் திருக்கார்த்திகை, திருவாதிரை ஆகிய நாட்களில் சுவாமி புறப்பாடு நடைபெறும். இங்கு சிவனுக்குரிய அனைத்து விசேஷங்களும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    இத்தல விநாயகர் ‘சித்தி விநாயகர்’ என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். சீர்காழி சட்டை நாதர் கோவிலைப் போலவே, இந்த ஆலயமும் மலைக்கோவில் அமைப்பில் கட்டப்பட்டிருக்கிறது. எனவே தான் இந்த ஆலயம் அமைந்த இடத்தை ‘மேலைக்காழி’ என்றும் அழைத்திருக்கிறார்கள். கோவிலின் முதல் தளத்தில் உமா மகேஸ்வரரும், இரண்டாவது தளத்தில் சட்டைநாதரும் அருள்பாலிக்கின்றனர். சண்டிகேஸ்வரர் மனைவியுடன் வீற்றிருப்பது இந்த ஆலயத்தின் சிறப்புகளில் ஒன்றாகும்.

    குழந்தை பாக்கியம் இல்லாதவர்களும், குழந்தை பிறந்து இறந்து விடும் தோஷம் உள்ளவர்களும், இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர். அவர்களின் வேண்டுதல் நிறைவேறியதுடன், இங்குள்ள தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள். இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.

    அமைவிடம் :


    நாகப்பட்டினத்தில் இருந்து வேளாங்கண்ணி செல்லும் நெடுஞ்சாலையில் சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் தலைஞாயிறு பகுதி அமைந்திருக்கிறது.
    கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கல்பாத்தி எனுமிடத்தில் அமைந்திருக்கிறது விசுவநாதர் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    காசியில் உள்ள விசுவநாதரை வணங்கினால் கிடைக்கின்ற பலன்களில், பாதி பலன்களைக் கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கல்பாத்தி எனுமிடத்தில் அமைந்திருக்கும் விசுவநாதரை வணங்கிப் பெறமுடியும் என்பதால் ‘காசியில் பாதி கல்பாத்தி!’ என்று சொல்லப்படுகிறது.

    தல வரலாறு :

    கேரளாவிலுள்ள கொல்லங்கோடு எனும் ஊரில் வசித்த லட்சுமியம்மாள், அங்கு தன்னுடைய முன்னோர்கள் வழிபட்டு வந்த தமிழ்நாட்டில் உள்ள மயிலாடுதுறை மாயூரநாத சுவாமி கோவிலைப் போன்று, ஒரு சிவபெருமான் கோவிலைக் கட்ட வேண்டும் என்று ஆசைகொண்டார்.

    வயதான காலத்தில், அவர் காசி எனப்படும் வாரணாசிக்குச் சென்று திரும்பி வரும் போது, தன் விருப்பப்படி கோவில் கட்டுவதற்காக, அங்கிருந்து ஒரு பாணலிங்கத்தைக் கொண்டு வந்தார். அவர் வரும் வழியில் உள்ள நதிக்கரைகளில் தங்கி, அந்தப் பாணலிங்கத்தை வைத்துப் பூஜை செய்து வழிபடுவதும், பின்னர் அதனை எடுத்துக் கொண்டு வருவதுமாக இருந்தார்.

    அவர் பாலக்காடு அருகிலுள்ள கல்பாத்தி எனுமிடத்திற்கு வந்த போது, அங்கிருந்த நிலா ஆற்றங்கரையில் பாணலிங்கத்தை வைத்துவிட்டுக் குளிக்கச் சென்றார். பின்னர் வழக்கம் போல், சிவலிங்கத்திற்குப் பூஜை செய்து அந்தச் சிவலிங்கத்தை எடுக்க முயன்றார். ஆனால் சிவலிங்கத்தைச் சிறிது கூட நகர்த்த முடியவில்லை.

    தான் கொண்டு வந்த சிவலிங்கம் இருக்க வேண்டிய இடத்தை இறைவனான சிவபெருமானே தேர்வு செய்து விட்டதை உணர்ந்த லட்சுமியம்மாள், அவ்விடத்திலேயேத் தன் விருப்பப்படி கோவிலைக் கட்டுவது என முடிவு செய்தார்.

    பின்னர், அப்பகுதியை ஆட்சி செய்த இட்டி கோம்பி அச்சன் எனும் அரசரைச் சந்தித்து, தான் காசியில் இருந்து கொண்டு வந்த சிவலிங்கத்தைப் பற்றிய விவரங்களைச் சொல்லி, அங்கு கோவில் ஒன்றை கட்டுவிக்க வேண்டுமென்று வேண்டினார். அப்படியே, அக்கோவில் கட்டுமானப் பணிகளுக்காகத் தான் சேர்த்து வைத்திருந்த 1,320 பொற்காசுகளையும் அரசரிடம் வழங்கினார்.

    அரசரும் லட்சுமியம்மாளின் வேண்டுகோளை ஏற்று, அவ்விடத்தில் சிவபெருமான் கோவிலைக் கட்டுவதற்கான நிலங்களைத் தானமாக வழங்கியதுடன், கோவில் மேற்பார்வைப் பணிகளுக்காகச் சோமசுந்தரக் குருக்கள் (இவரைச் சேகர வர்மா என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர்) என்பவரையும் நியமித்தார்.

    லட்சுமியம்மாள் காசியிலிருந்து கொண்டு வந்த பாணலிங்கம் என்பதால், இத்தல இறைவனுக்கும் காசி விசுவநாதர் என்றே பெயர் சூட்டப்பட்டது. பின்னர், அங்கு விசாலாட்சி அம்பாள் சிலையும் நிறுவப்பட்டது என்று கோவிலுக்கான தல வரலாறு தெரிவிக்கப்படுகிறது.

    கோவில் அமைப்பு :


    தரைமட்டத்திலிருந்து தாழ்வாக இருக்குமிடத்தில் கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டிருக்கிறது இந்த ஆலயம். தெற்கு மற்றும் கிழக்கு திசைகளில் இருந்து 18 படிகள் கீழிறங்கிச் செல்லும்படி இருக்கிறது. இக்கோவில் பள்ளத்தில் இருப்பதால், மலையாளத்தில் ‘பள்ளம்’ என்று பொருள் தரும் ‘குண்டு’ எனும் சொல்லைப் பயன்படுத்தி, ‘குண்டுக்குள் கோவில்’ என்றும், ‘குண்டம்பலம்’ என்றும் அழைக்கின்றனர்.



    இறைவன் காசி விசுவநாதர் கிழக்கு நோக்கிய நிலையிலும், அம்பாள் விசாலாட்சி தெற்கு நோக்கிய நிலையிலும் இருக்கின்றனர். கோவில் வளாகத்தில், மகாகணபதி, தட்சிணாமூர்த்தி, கங்காதரன், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், நடராஜர், சூரியனார் சன்னிதிகளும், நவக்கிரகங்கள் மனைவிகளுடன் இருக்கும் சன்னிதி, நாக தேவதைகள் உள்ளிட்ட ராகு-கேது சன்னிதி போன்றவைகளும் இருக்கின்றன.

    இந்த ஆலயத்தில் சிவபெருமானுக்கு உரியதாகக் கருதப்படும் அனைத்து நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. தமிழ் ஆகம விதிகளைப் பின்பற்றியே வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

    காசியில் உள்ள விசுவநாதரை வணங்கினால் கிடைக்கிற பலன்களில் பாதி பலன்கள், கல்பாத்தியில் இருக்கும் விசுவநாதரை வணங்கினாலும் கிடைக்கும் எனும் நம்பிக்கையில் இங்கு வந்து செல்லும் பக்தர்கள், நிலா ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் ஆலயத்தை ‘காசியில் பாதி கல்பாத்தி’ என்று சிறப்பித்துச் சொல்கின்றனர்.

    இக்கோவிலில் இருக்கும் அம்பாள், தெற்கு நோக்கிய நிலையில் இருப்பதால், எமபயம் நீக்கும் அன்னையாக இருக்கிறார். மேலும் திருமணத்தடை நீங்கவும், ஆயுள் அதிகரிக்கவும் அன்னைக்குப் புதிய ஆடை சமர்ப்பித்து வழிபாடு செய்கின்றனர்.

    இக்கோவிலில் நாள்தோறும் காலையில் நடைபெறும் ‘மிருத்யுஞ்சய ஹோமத்தில் கலந்து கொண்டு, இறைவனை வணங்கி வழிபடுபவர்களுக்கு, உடல் நலம், ஆயுட்காலம் அதிகரிப்பு, நல்வாழ்வு போன்றவை கிடைக்கும் என்கின்றனர்.

    நாக மற்றும் ராகு-கேது தோஷங்கள் நீங்க, இங்கிருக்கும் ராகு - கேது சன்னிதியில் பால் மற்றும் மஞ்சள் பொடி அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். சிலர் கோவில் வளாகத்தில் விற்கப்படும், வெள்ளியிலான சிறிய பாம்பு, வெள்ளியிலான முட்டைகள், புற்று போன்றவைகளை வாங்கி, ராகு- கேது சன்னிதியில் வைத்து வேண்டுவது வழக்கமாக இருக்கிறது.

    ஆண்டுதோறும் மலையாள நாட்காட்டியின்படி துலாம் (ஐப்பசி) மாதம் வரும் கடைசி பத்து நாட்கள் தேர்த்திருவிழா (ரத உற்சவம்) சிறப்பாக நடத்தப்படுகிறது. பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மகாமக நாளில், தமிழகத்தைப் போன்றே சுவாமி புறப்பாடு, ஊர்வலம், தீர்த்தவாரி என்று மகாமகத் திருவிழாவும் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. ஆலயம் தினமும் காலை 5.30 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    அமைவிடம் :


    கேரள மாநிலம், பாலக்காடு நகரிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கல்பாத்தி. இங்கு செல்ல நிறைய பேருந்து வசதிகள் உள்ளன.
    திருமேனியார் கோவில் என்ற அழகிய கிராமத்தில் உள்ளது திருமூலநாத சுவாமி ஆலயம். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    திருமேனியார் கோவில் என்ற அழகிய கிராமத்தில் உள்ளது திருமூலநாத சுவாமி ஆலயம். இறைவனின் பெயர் திருமூலநாத சுவாமி, இறைவியின் பெயர் சவுந்தரநாயகி.

    மண்ணியாற்றுக்கு வடக்கேயும், கொள்ளிடம் நதிக்கு தெற்கேயும் இத்தலம் அமைந்திருப்பதால், நீர் வளத்திற்குப் பஞ்சமின்றி எங்கு நோக்கினும் பசுமையாக காட்சியளிக்கிறது இந்தக் கிராமம். அந்தப் பசுமைச் சூழலில்தான் இறைவனும் இறைவியும் அமர்ந்து அருள்பாலிக்கின்றனர்.

    இத்தலத்துக்கு கிழக்கே திருப்புன்கூர், வைத்தீஸ்வரன் கோவில், மேற்கே பந்தனைநல்லூர், திருச்சிற்றம்பலம், வடக்கே விளத்தொட்டி ஆகிய தலங்கள் உள்ளன.

    கோவில் ஊருக்கு நடுவே கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோவிலின் எதிரே திருக்குளமும் ஆலய வாசலில் வளைவு மட்டுமே உள்ளது. உள்ளே நுழைந்தவுடன் கொடிமர விநாயகர், கொடிமர பீடம் பலி பீடம், நந்தி ஆகியவை உள்ளன. அடுத்து அழகிய கோபுரம்.

    தெற்குப் பிரகாரத்தில் தல விநாயகர், தட்சிணாமூர்த்தி தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலிக்க, மேற்குப் பிரகாரத்தில் திருமாளிகைப் பகுதியில் சுப்பிரமணியர், காசி விசுவநாதர், பெருமாள், மகாலட்சுமி, சரஸ்வதி ஆகியோர் திருமேனிகள் உள்ளன.

    கருவறையின் தெவக்கோட்டத்தில் நடன கணபதியையும், தட்சிணாமூர்த்தியையும் தரிசிக்கலாம். கோட்டத்தின் மேற்குப் பகுதியில் லிங்கோத்பவரையும் வடக்கு பகுதியில் பிரம்மா, துர்க்கை ஆகியோரையும் தரிசிக்கலாம். வடக்குப் பிரகாரத்தில் சண்டீசர் சன்னிதியும் உள்ளது.

    கோவிலின் உள்ளே நுழையும் போது வாசலின் தென்பால் விநாயகரும், வடபால் சுப்பிரமணியரும் உள்ளனர். உட்கோவில் மண்டபத்தில் தெற்கு நோக்கி சவுந்தரநாயகி சன்னிதியும், நடராஜர் சன்னிதியும் உள்ளன. சூரியன், பைரவர், நால்வர் திருமேனிகளும் உள்ளன.

    கருவறை சதுரமாக அமைந்துள்ளது. மூலவர் திருமூலநாதர் சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார்.

    திருமூலநாதருக்கு திருமேனியழகர் என்ற பெயரும் உண்டு. இந்த சிவலிங்கம் மிக அழகானது. ருத்ர பாகமான பாணம் உயர்ந்துள்ளது. விஷ்ணுபாகமான ஆவுடையார் அகன்றுள்ளது. பிரம்ம பாகமான பீடம் சதுரமாக உள்ளது. இவ்வளவு அழகான திருமேனி உடைய இறைவனுக்கு திருமேனியழகர் என்ற பெயர் மிகவும் பொருத்தமே.

    அழகருக்கேற்ற அழகியாக, சவுந்திர நாயகியாக அன்னை அருள்பாலிக்கிறாள். அங்க மாலையும், அலர்ந்த பூவும் மேற் கரங்களில் அழகு செய்ய கீழ் கரங்கள் அபய வரத முத்திரை காட்ட, நின்ற கோலத்தில் சாந்தம் தவழும் முகத்துடன் நான்கு கரங்களுடன் அன்னை காட்சி தருகிறாள்.

    இத்தலத்தின் தல புராணம் என்ன?

    தட்சன் மிகப் பெரிய வேள்வி ஒன்று செய்தான். ஆனால் அந்த வேள்விக்கு சிவபெருமானை அழைக்கவில்லை.

    அக்னி பகவான் அந்த வேள்வியில் கலந்து கொண்ட தால் சிவபெருமானின் சீற்றத்திற்கு ஆளாகி உடல் முழுவதும் ரோகம் பெற்றான். பின் இத்தலத்திற்கு வந்த அக்னிபகவான் இங்குள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி, திருமூலநாதரையும், சவுந்திர நாயகியையும் வழிபட்டு ரோகம் நீங்கி அழகிய திருமேனி பெற்றான். இதுவே இத்தலத்தின் வரலாறு.

    தினமும் இங்கு நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன. தவிர விநாயகர் சதுர்த்தி, ஆண்டுக்கு ஆறுமுறை நடராஜருக்கு நீராட்டு விழாக்கள், ஆடிப்பூரம், ஐப்பசி அன்னாபிஷேகம், கந்த சஷ்டி சூரசம்ஹாரம், திருக்கல்யாணம், கார்த்திகை மாத சோம வாரங்கள், திருக்கார்த்திகை, மார்கழி மாத தின பூஜை, திருவாதிரை, பொங்கல், நவராத்திரி, விஜயதசமி, நால்வர் திரு நட்சத்திரங்கள் ஆகிய நாட்களில் சிறப்பு பூஜையும், பங்குனி உத்திரத்தன்று ஏகதின உற்சவமும் நடைபெறுகின்றன.

    இக்கோவில் இந்து அறநிலைய ஆட்சித் துறையின் நிர்வாகத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    உடல் எனப்படும் மேனியில் பிணியுடையோர் அக்னி தீர்த்தம் என அழைக்கப்படும் இக்கோவிலின் திருக்குளத்தில் நீராடி திருமேனியழகரையும் அன்னை சவுந்திர நாயகியையும் வழிபட்டால் பிணி தீர்ந்து, அழகிய திருமேனியை அடைவர்.

    ஆலயம் காலை 7 மணி முதல் 9 மணி வரையும் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையும் திறந்திருக்கும்.

    பிணியற்ற மேனி உள்ளவர்களும் தன்னை பிணி அண்டாமல் இருக்க ஒரு முறை திருமேனியார் கோவில் சென்று வரலாமே!.

    அமைவிடம் :

    கும்பகோணம் - சீர்காழி பேருந்து தடத்தில் திருப்பனந்தாள் மற்றும் பந்தநல்லூர் வழியாக செல்லும் பேருந்தில் ஏறி, கடலங்குடி என்ற ஊரில் இறங்கினால் அருகிலேயே ஆலயம் உள்ளது.
    சென்னை - திருச்சி சாலையில் மேல்மருவத்தூருக்கு அருகே அச்சிறுப்பாக்கம் நகரில் ஆட்சீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    சென்னை - திருச்சி சாலையில் மேல்மருவத்தூருக்கு அருகே அச்சிறுப்பாக்கம் நகரில் ஆட்சீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.

    கோவில் வரலாறு :

    பிரம்மாவிடம் வரம் பெற்ற தாரகன், கமலாட்சன், வித்வன்மாலி ஆகிய திரிபுர (மூன்று) அசுரர்கள் சேர்ந்து கொண்டு தேவர்களை கொடுமைப்படுத்தி வந்தனர். அசுரர்களை எதிர்க்க முடியாத தேவர்கள், அவர்களை அழித்து தங்களை காக்கும்படி சிவபெருமானிடம் வேண்டினர். தேவர்களுக்கு மனம் இரங்கிய சிவன், வானுலகு மற்றும் பாதாள உலகை இணைத்துத் தேராக்கி, அதில் ஏறி அசுரர்களை அழிக்கச் சென்றார்.

    எந்த ஒரு செயலை செய்யும் முன்பாக முழு முதற்கடவுளான விநாயகரை வணங்கிவிட்டு அல்லது மனதில் நினைத்துவிட்டோ தான் செய்ய வேண்டும் என்பது நியதி. சிவனுக்கும் இந்த நியதி பொருந்தும். ஆனால் அசுரர்களை அழிக்க வேண்டும் என்ற வேகத்தில் விநாயகரை நினைக்காமல் சென்றார் சிவன். அவருடன் சென்ற தேவர்களும், ‘சிவனே நம்முடன் இருக்கும்போது, வேறென்ன துணை வேண்டும்’ என்ற எண்ணத்தில் அவரை வணங்காமல் சென்றனர்.

    கோபம் கொண்ட விநாயகர், தேரின் அச்சை முறித்து, சிவனை செல்ல விடாமல் தடுத்து விட்டார். தேர் அங்கேயே நின்றது.

    இது விநாயகரின் செயல்தான் என உணர்ந்த சிவன், அவரை மனதில் நினைத்து, செல்லும் செயல் சிறப்பாய் நடந்திடக் காவலனாய் இருக்கும்படி வேண்டினார்.

    தந்தை சொல்கேட்ட விநாயகர், தேர் அச்சை சரியாக்கினார். பின் சிவன் திரிபுர அசுரர்களை அழித்தார். தேர் அச்சு இற்று(முறிந்து) நின்ற இடம் என்பதால் இத்தலம் ‘அச்சு இறு பாகம்’ என்று அழைக்கப்பட்டு, காலப்போக்கில் ‘அச்சிறுப்பாக்கம்’ என்றானது. சிவன் ‘அட்சீஸ்வரர்’ என்றும், ‘ஆட்சிபுரீஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகிறார். கண்ணுவ முனிவர், கவுதம முனிவர் ஆகியோர் இங்கு வழிபட்டுள்ளனர்.

    பாண்டிய மன்னன் ஒருவன் சிவதல யாத்திரை சென்று கொண்டிருந்தபோது, இத்தலத்தின் அருகே அவனது தேர் அச்சு முறிந்தது. பணியாளர்கள் சக்கரத்தை சரி செய்து கொண்டிருந்த போது, தங்க நிறமான உடும்பு ஒன்று சென்றதை மன்னன் கண்டான். தங்கத்தால் ஜொலித்த அந்த உடும்பைப் பிடிக்க மன்னன் சென்றான். உடும்போ, ஒரு சரக்கொன்றை மரத்தினுள் புகுந்து கொண்டது. காவலர்கள் மரத்தை வெட்டியபோது, ரத்தம் வெளிப்பட்டது.

    உடும்பு வெட்டுப்பட்டதாக நினைத்த மன்னன் மரத்தின் அடியில் தோண்டிப் பார்த்தான். எவ்வளவோ தேடியும் உடும்பு மட்டும் அகப்படவில்லை. அன்றிரவில் மன்னனுக்கு காட்சி தந்த சிவன், உடும்பு மூலமாக தான் திருவிளையாடல் புரிந்ததை வெளிக்காட்டி, இவ்விடத்தில் சுயம்புவாக எழுந்தருளி இருப்பதை உணர்த்தினார்.

    சிவபெருமானுக்கு அங்கேயே கோவில் கட்ட விருப்பம் கொண்டான் மன்னன். அப்போது அங்கு ‘திரிநேத்ரதாரி’ எனும் மூன்று கண்களை உடைய முனிவர் ஒருவர் வந்தார். தீவிர சிவபக்தரான அவரைப் பற்றி அறிந்து கொண்ட மன்னன், இத்தலத்தில் சிவாலயம் கட்டித்தரும்படி கூறிவிட்டு தனது யாத்திரையை தொடர்ந்தான். நெடுநாட்கள் கழித்து மன்னன் திரும்பி வந்தபோது கோவில் மத்தியில் நந்தி, கொடி மரத்துடன் ஆட்சிபுரீஸ்வரருக்கு ஒரு கருவறையும், அவருக்கு வலது பின்புற பிரகாரத்தில் ராஜகோபுரத்தின் நேரே உமை ஆட்சீஸ்வரருக்கு ஒரு மூலஸ்தானமும் கட்டி வைத்திருந்தார். (இக்கருவறையில் லிங்கத்திற்கு பின்புறம் பார்வதியுடன், சிவன் திருமணக்கோலத்தில் காட்சி தருகிறார்).

    இதற்கு விளக்கம் புரியாத மன்னன் காரணம் கேட்டான். ‘உமை ஆட்சி செய்த ஈஸ்வரனே, உடும்பு வடிவாகி என்னையும் ஆட்சி செய்தார். எனவே, உங்களுக்கு காட்சி தந்த ‘உமை ஆட்சீஸ்வரருக்கு’ பிரதான வாசல் கொண்டு ஒரு கருவறையும், ‘எமை ஆட்சி செய்த ஈஸ்வரருக்கு’ பிரதான கருவறையுமாக வைத்து கோவில் கட்டினேன்’ என்றார் திரிநேத்ரதாரி. அதனை மன்னனும் ஏற்றுக்கொண்டான்.

    சுயம்பு லிங்கமாக இருக்கும் எமையாட்சீஸ்வரரே இங்கு பிரதானம். திருவிழாக்களும் இவருக்கே நடக்கிறது. ராஜகோபுரத்தில் இருந்து கொடிமரமும், நந்தியும் விலகியே இருக்கிறது. பிரகாரத்தில் உள்ள சரக்கொன்றை மரத்தின் அடியில் “கொன்றையடியீஸ்வரர்” சன்னிதியில், சிவனை வணங்கிய கோலத்தில் திரிநேத்ரதாரி இருக்கிறார். இம்மரத்தில் சித்திரை மாத திருவிழாவின் போது மட்டும் பூக்கள் மலர்வது சிறப்பு.

    சிவனின் தேர் அச்சை முறித்த விநாயகர் “அச்சுமுறி விநாயகராக” கோவிலுக்கு வெளியே தனிச் சன்னிதியில் மேற்கு திசை பார்த்து அமர்ந்திருக்கிறார். அருணகிரிநாதர், இவ்விநாயகரை தரிசித்து விட்டு, ‘அச்சிறு பொடி செய்த’ என்று இவரது சிறப்புக்களை பாடித்தான் திருப்புகழை தொடங்கியுள்ளார். புதிய செயல்கள் தொடங்கும் முன்பு இவரிடம் வேண்டிக்கொண்டால் அச்செயல் தடையின்றி நடக்கும் என்பது நம்பிக்கை.

    சிவனின் பிற பெயர்கள் அச்சேஸ்வரர், அச்சுகொண்டருளிய தேவர் என்பதாகும். ஐந்து நிலை பிரகாரத்தில் சீனிவாசர், அலமேலு மங்கைத்தாயார் தனிச்சன்னிதியில் இருக்கின்றனர். ஆட்சிபுரீஸ்வரர், உமை ஆட்சீஸ்வரர் என இரண்டு மூலவர்கள் தனித்தனி கருவறைகளில் அருள்பாலிக்கிறார்கள். இளங்கிளி அம்மை, உமையாம்பிகை என இரண்டு அம்மன்கள் தனித்தனி கருவறைகளில் அருள்பாலிக்கிறார்கள்.

    இத்தல சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற இத்தலத்தை திருநாவுக்கரசர் தனது சேத்திரக் கோவையில் குறிப்பிட்டிருக்கிறார். அகத்தியருக்கு இத்தலத்திலும் சிவன் தனது கயிலாய திருமணக் காட்சியை காட்டியருளியுள்ளார். சிவனால் வதம் செய்யப்பட்ட தாரகனும், வித்யுன்மாலியும் அவருக்கு துவாரபாலகர்களாக இருக்கின்றனர். உமையாட்சீஸ்வரருக்கு முன்னே தியான நந்தி இருக்கிறது.

    தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 29-வது தலம். சித்திரையில் 10 நாட்கள் பிரம்மோற்சவம், பவுர்ணமியில் விசேஷ பூஜைகள் நடக்கிறது. ஆட்சிபுரீஸ்வரரிடம் வேண்டிக்கொண்டால் ஆட்சி செய்யும் வாய்ப்பு, ஆளுமைத் திறன், பதவி உயர்வு கிடைக்கும் என்பதும், சுவாமி அட்சரம் எனும் எழுத்தின் வடிவமாக இருப்பதால் கல்வி, வேள்விகளில் சிறக்கலாம் என்பதும் நம்பிக்கை. இங்கு அமாவாசை தோறும் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. இதில் கலந்துகொண்டால் தோஷங்கள், ஜென்ம வினைகள், தொழில் தடைகள், மனக் குழப்பங்கள் நீங்கும் என நம்புகின்றனர். பிரார்த்தனை நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூைஜகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

    இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும்.

    அமைவிடம் :

    சென்னை - திருச்சி சாலையில் மேல்மருவத்தூருக்கு அருகே அச்சிறுப்பாக்கம் உள்ளது. செங்கல்பட்டில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன. சென்னையில் இருந்து 100 கி.மீ., காஞ்சீபுரத்தில் இருந்து 70 கி.மீ., செங்கல்பட்டில் இருந்து 48 கி.மீ. தொலைவில் இந்த ஆலயம் இருக்கிறது. மேல்மருவத் தூரில் இருந்து ஆட்டோவில் செல்லலாம்.

    45 அடி உயர முருகன் சிலை கொண்ட கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, காஞ்சீபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள, நடுபழனி தண்டாயுதபாணி திருக்கோவில்.








    பனையபுரம் அதியமான்
    கோவில் முகப்புத் தோற்றம்
    45 அடி உயர முருகன் சிலை
    மரகதத்தால் ஆன பாலதண்டாயுதபாணி சிலை








    முத்துசுவாமி சித்தரால் எழுப்பப்பட்ட மலைக்கோவில், நடுபழனி என காஞ்சிப் பெரியவரால் பெயர் சூட்டப்பட்டத் தலம், மரகத மூலவரைக் கொண்டு விளங்கும் திருக்கோவில், மணப்பேறு, மகப்பேறு அருளும் ஆலயம், 45 அடி உயர முருகன் சிலை கொண்ட கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, காஞ்சீபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள, நடுபழனி தண்டாயுதபாணி திருக்கோவில்.

    தல வரலாறு :

    சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு, பொள்ளாச்சியைச் சார்ந்த முத்துசுவாமி என்ற மிராசுதாரர், முருகப்பெருமானின் திருவருளால் வடஇந்திய யாத்திரையை முடித்து, அச்சிறுபாக்கம் அருகேயுள்ள பெரும்பேர் கண்டிகை என்ற திருப்புகழ் தலத்திற்கு வந்தார். மலை மீது சுமார் நான்கு ஆண்டுகள் தவமிருந்தார்.

    அங்கு தங்கியிருந்த காலத்தில் அவரது கனவில் குழந்தை வடிவத்தில் தோன்றிய முருகப்பெருமான், ‘பெருங்கரணையில் உள்ள மலையில் எனக்கு ஒரு கோவில் எழுப்ப வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டார்.

    அதன்படி, அச்சிறுபாக்கம் அருகேயுள்ள பெருங் கரணை ஊரில் உள்ள மலையைக் கண்டறிந்தார். அதன் உச்சியில் வேலாயுதத்தை நிறுவி வழிபாடு செய்யத் தொடங்கினார். செடிகள், பாறைக் கற் களைச் சரிசெய்து, அதன்பிறகு அங்கேயே முருகன் சிலையை வைத்து சிறிய கொட்டகை அமைத்து வழிபாடு தொடங்கினார். இதற்கு ஊர் மக்கள் பெரும் ஒத்துழைப்பு தந்தனர்.

    ஒருநாள் பெருத்த மழையால் கீற்றுக்கொட்டகை விழுந்துவிட, தனி ஆலயம் எழுப்ப தீர்மானித்து, சிறிய ஆலயம் எழுப்பினர். இந்த மலையைச் சீரமைக்க முத்துசுவாமி சித்தர் பெரும்பாடுபட்டுள்ளார். அருகில் உள்ள ஊர்களுக்கு காவடியெடுத்து ஆடி, அவர்கள் தரும் அரிசி உள்ளிட்ட காணிக்கைகளைப் பெற்றார். அதனைக் கொண்டு மலையைச் சீரமைக்கும் பணியாட்களுக்குச் சமைத்து தந்தார். பக்தர்கள் தரும் காணிக்கைகளைத் திருப்பணிக்கு பயன்படுத்தினார். எவரிடமும் கையேந்தி நன்கொடை கேட்டதில்லை. குறையோடு வருபவர்களுக்கு திருநீறு தந்து குணமாக்கும் வல்லமையும், முத்துசுவாமி சித்தருக்கு முருகன் திருவருளால் கிடைத்துள்ளது. இப்படி முத்துசுவாமி சித்தரின் ஐம்பது ஆண்டு கால உழைப்பில் உருவானதே நடுபழனி திருக்கோவில்.

    இந்த சமயத்தில் காஞ்சிப் பெரியவர் ஒருமுறை வருகை தந்தார். அவருக்கு இந்த ஆலயத்தில் உள்ள முருகப்பெருமான், பழனி பாலதண்டாயுத பாணியாகவே காட்சி தர, இந்தத் தலத்தை ‘நடு பழனி’ என்று அழைத்தார் காஞ்சிப் பெரியவர். அதன்பிறகு, முருகப்பெரு மானின் மூலவர் சிலையை, மரகத சிலையாக வடித்து, புதிய தண்டாயுதபாணியாக பிரதிஷ்டை செய்து, 1993-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    தமது பூவுலக நிறைவுக்காலம் வருவதை உணர்ந்த முத்துசுவாமிகளின் கனவில், மைசூர் கணபதி சச்சிதானந்த சுவாமிகளின் உருவம் வந்தது. அதே போல் கணபதி சச்சிதானந்த சுவாமிகளின் கனவில், முத்துசுவாமி சித்தரின் உருவம் தோன்றியிருக்கிறது. அதன்பிறகு ஒரு முறை நடுபழனிக்கு, மைசூர் கணபதி சச்சிதானந்த சுவாமிகள் வருகை தந்தார். அவரைக் கண்ட முத்துசுவாமி சித்தருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. இருவரும் தங்களுக்கு தோன்றிய கனவைப் பற்றி பேசிக்கொண்டனர். அப்போதுதான் இருவருக்குமே ஒரே நேரத்தில் இதுபோன்ற கனவு வந்திருப்பது தெரியவந்தது.

    ஆலய அமைப்பு :

    நடுபழனி மலை, பசுமையான பெருங்கரணை கிராமத்தில் அமைந்துள்ளது. சுமார் 300 அடி உயரமுள்ள கனக மலையான நடுபழனி, வடக்கில் 128 படிகள் கொண்டு மலையேற வசதியாக நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது. மேற்குப்புறம் வாகனங்கள் மலையேறும் சாலை வசதியும் இருக்கிறது. அங்கே மலேசியாவில் பத்துமலைப் பகுதியில் உள்ள முருகப்பெருமான் சிலையைப் போலவே, 45 அடி உயர முருகப்பெருமான் கம்பீரமாய் மேற்கு நோக்கி காட்சியளிக்கின்றார். மலை உச்சியில் இந்த கோவில் உருவாக மூலக்காரணமான முத்துசுவாமி சித்தரின் ஜீவ சமாதி அமைந்துள்ளது. அவரது சமாதி முன்மண்டபத்தோடு எழிலாக ஆலய வடிவில் கட்டப்பட்டுள்ளது.

    சற்று மேலே இடும்பன் சன்னிதியைக் கடந்து சில படிகள் ஏறினால், நடுபழனி முருகன் ஆலயம் கிழக்கு முகமாய் காட்சி தருகின்றது. கணபதி, தத்தாத்ரேயர் சன்னிதிகள் சுற்றி அமைந் திருக்க, நடுநாயகமாக மரகதக் கல்லால் ஆன தண்டாயுதபாணி கிழக்கு நோக்கியபடி அருள்காட்சி தருகிறார். இவரின் வடிவம் நமக்கு பழனி மலையில் இருக்கும் பாலதண்டாயுதபாணியின் உருவத்தை நினைவுபடுத்துகிறது.

    ஆலய மகாமண்டபத்தின் இடதுபுறம் வள்ளி- தெய்வானை சமேத சண்முகப்பெருமான், வலது புறம் விநாயகர், பிரம்மன், விஷ்ணு, ருத்திரன் வடிவமான தத்தாத்ரேயர், நாக தத்தாத்ரேயர், லட்சுமி, சரஸ்வதி, பார்வதி வடிவமான அனகா லட்சுமி, உற்சவர் விநாயகர், வள்ளி- தெய்வானை சமேத சுப்பிர மணியர் சிலா வடிவங்கள் அமைந்துள்ளன. மலை அடிவாரத்தில் விநாயகர், அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள், திருப்போரூர் சிதம்பரம் சுவாமிகள், ராஜேஸ்வரி அம்மன், நவக்கிரகங்கள் சன்னிதி அமைந்துள்ளன.



    சுவாமிகளின் நெருங்கிய நண்பராக விளங்கிய முறப்பாக்கம் சுவாமிகளின் சமாதி மலையடிவாரத்தில், நவக்கிரக சன்னிதி அருகே அமைந்துள்ளது. இதனை சுவாமிகளே செய்து முடித்தார். இத்தலம் திருமண வரம், குழந்தை வரம் அருளும் தலமாக பக்தர்களால் போற்றப்படுகிறது. தொடர்ந்து 6 செவ்வாய்க் கிழமைகளில் விரதம் கடைப்பிடிப்பவருக்கும் பக்தர்களுக்கு, கைமேல் பலன் கிடைப்பதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

    விழாக்கள்:

    இந்த ஆலயத்தில் பங்குனி உத்திரத் திருவிழா மூன்று நாட்கள் நடைபெறுகிறது. சஷ்டி உற்சவம் மற்றும் திருக்கல்யாணம், கார்த்திகை மாதம் கார்த்திகை தீபத்திருநாள், முத்துசுவாமி சித்தர் குருபூஜை வெகு சிறப்பாக நடைபெறுகிறது. இது தவிர, முருகனுக்குரிய கிருத்திகை உள்ளிட்ட விழாக்கள் சிறப்புடன் நடத்தப்படுகிறது. பவுர்ணமி தோறும் கிரிவலம் நடக்கிறது.

    இந்த ஆலயம் தினமும் காலை 7.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் பக்தர்கள் தரி சனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    எல்லப்ப சித்தர்:

    முத்துசுவாமி சித்தருக்கு முன்பாக, இம்மலை உச்சியில் எல்லப்ப சித்தர் என்பவர், வேல் ஒன்றை நிறுவி வழிபட்டு வந்ததாக ஊர் மக்கள் கூறுகின்றனர். இவரின் சமாதி, மலையடிவாரத்தில் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இங்கே, விரிவாக்கம் செய்த குளம், ஆலயத்தின் தீர்த்தக்குளமாக அமைந்துள்ளது.

    45 அடி உயர முருகன் :

    இம்மலையின் மேற்கு அடிவாரத்தில் 45 அடி உயர முருகன் சிலை, மலேசிய பத்துமலை முருகன் சிலையைப் போல அமைக்கப்பட்டுள்ளது. இச்சிலை மைசூர் கணபதி சச்சிதானந்த சுவாமிகளின் அவதூத தத்த பீடத்தின் முயற்சியால் உருவாக்கப்பட்டு, சுவாமிகளின் திருக்கரங்களால் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்தச் சிலை கனகமலை எனும் நடுபழனியின் அழகுக்கு அழகு சேர்ப்பதாக அமைந்திருக்கிறது.

    முத்துசுவாமி சித்தர் :

    நடுபழனி தண்டாயுதபாணி மலைக்கோவிலை எழுப்பியவர் இவர்தான். இவர் முருகப்பெருமான் அருளால் பல சித்து விளையாட்டுகள் கை வரப்பெற்றிருந்தார். ஆனால் அந்த சக்திகளை எல்லாம் பக்தர்கள் நலம் பெறு வதற்காக மட்டுமே பயன்படுத்தினார். தன்னை நாடி வந்த அடியார்களுக்கு திருநீறு மட்டுமே தந்து அனைத்து வகை நோய் மற்றும் ஆபத்துக்களில் இருந்தும் காத்தருளியுள்ளதை பக்தர்கள் நினைவு கூருகின்றனர். இவர் கூடுவிட்டுக் கூடு பாயும் வித்தையில் வல்லவர் என்று இவரது சீடர்கள் பலரும் கூறுகின்றனர்.

    அமைவிடம் :

    காஞ்சீபுரம் மாவட்டம், செய்யூர் தாலுகா பெருங் கரணை கிராமத்தில் உள்ள சிறிய மலையே நடுபழனியாகும். மேல்மருவத்தூருக்குத் தெற்கே 2 கி.மீ. தூரத்தில் இடதுபுறம் முருகன் கோவில் வளைவு வரும். அதில் நுழைந்ததும் ரெயில் கிராசிங் வரும். அதில் இருந்து 5 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது.
    ×