search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nallur Kandaswamy Temple Sri Lanka"

    வேல் - மூலவராகத் திகழும் திருத்தலம், ஆறுமுக நாவலரின் மனம் கவர்ந்த கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்ட தலமாக விளங்குவது, இலங்கை நாட்டின் நல்லூர் கந்தசாமி திருக்கோவில்.
    கோவில் தோற்றம் :

    யாழ்ப்பாணத்தின் மிகப்பெரிய திருக்கோவில், புவனேகுபாகுவால் எழுப்பப்பட்ட ஆலயம், வேல் - மூலவராகத் திகழும் திருத்தலம், ஆறுமுக நாவலரின் மனம் கவர்ந்த கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்ட தலமாக விளங்குவது, இலங்கை நாட்டின் நல்லூர் கந்தசாமி திருக்கோவில்.

    இலங்கைத் தமிழர்களின் பூர்வீக பூமியான வடக்கு மாகாணத்தில் அமைந்த முக்கியத் திருக்கோவிலாக திகழ்வது, நல்லூர் கந்தசாமிக் கோவில். மன்னர் காலத்தில், தலைநகராக விளங்கிய இவ்வூர், இன்று முக்கிய நகரமாக மாறியுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பெரிய கோவில் என்ற பெருமையையும் இந்த ஆலயம் பெற்றுள்ளது. இலங்கைவாழ் தமிழர்களின் அபிமானத் தலமாகவும் விளங்குகின்றது.

    ஆலய அமைப்பு :


    கிழக்கு நோக்கிய வாசல் கோபுரம் கலைநயம் கொண்டு தங்க நிறத்தில் ஒளி வீசுகிறது. ஐந்து நிலைகளைக் கொண்ட கோபுரம் எழில் காட்சி தர, இதில் புராணச் சிற்பங்கள் நிறைந்துள்ளன. இதன் இரு திசைகளிலும் மிதமான உயரத்தில் மணி கோபுரங்கள் அமைந்துள்ளன. கருவறைக்கும் கோபுரத்திற்கும் நடுவில் அர்த்தமண்டபம், ஆறுமுக சுவாமி கோவில் மண்டபம், முத்துக்குமார சுவாமி மண்டபம், ஸ்தம்ப மண்டபம் அமைந்துள்ளன.

    பிள்ளையார், பைரவர், சந்தான கோபாலர், தெய்வானை, வள்ளியம்மை கோட்டங்கள் உட்பிரகாரத்தில் அமைந்துள்ளன. ஆறுமுகசுவாமி மண்டப வாசலின் எதிரே, தீர்த்தக் கேணி அமைந்துள்ளது. இதன் அருகே தண்டாயுதபாணி சுவாமி சன்னிதி, திருப்புகழ் மண்டபம் ஆகியவை இருக்கின்றன.

    2011-ம் ஆண்டு 108 அடி உயர தெற்கு கோபுரமும், 2015-ல் 108 அடி உயர வடக்குக் கோபுரவாசல் ராஜகோபுரங்களும் அமைக்கப்பட்டன. பழனியாண்டவர் சன்னிதி, சூரியனுடன் தேவியர், உற்சவத் திருமேனி உள்ளன. பிரமாண்டத் தேரும், தேர் நிறுத்த மண்டபமும் கிழக்கு வாசலின் எதிரில் அமைந்துள்ளது.

    ஆலயத்தில் நடுநாயகமாக நல்லூர் கந்தசாமி விளங்குகின்றார். இங்கே வேல் வழிபாடே பிரதானம் என்பதால், கந்தன் வேலாயுதனாக, வேல் வடிவில் காட்சி யளிக்கிறார். தீப ஒளியில் இக்கோலத்தைக் காணும்போது, நம் மெய்சிலிர்க்கின்றது.

    இந்தக் கோவிலில் தினமும் ஆறு கால பூஜை நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமைகள் சிறப்பு நாட்களாகவும், ஐப்பசி வெள்ளி மிகவும் புனித நாளாகவும் கொண்டாடப் படுகிறது. அன்றைய தினம் ஆயிரக்கணக்கான அடியவர்கள் விரதமிருந்து கந்தனை வழிபடுவார்கள். ஐப்பசி அமாவாசை தொடங்கும் கந்தசஷ்டி விழா, சூரசம்ஹாரம் வரை வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. திருக்கார்த்திகை, தைப்பொங்கல், தைப்பூசம், ஆண்டுப்பிறப்பு, நவராத்திரி, திருவெம்பாவை விழாக்களும் உண்டு.

    ஆடி அமாவாசை முடிந்து வரும் சஷ்டியில் பிரம்மோற்சவம் விழா தொடங்குகிறது. இந்த விழா தொடர்ச்சியாக 25 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பகலிலும் இரவிலும் வெவ்வேறு வாகனங்களில் வள்ளி - தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி உற்சவத் திருமேனிகள் வீதி உலா வரும். விழாவின் போது பக்தர்கள் காவடி எடுத்தல், தீச்சட்டி எடுத்தல், அங்கப் பிரதட்சணம், அடியழித்தல் முதலிய நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுகிறார்கள்.

    ஆலயம் தினமும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 5 மணி பூஜை செய்யப்பட்டதும், கதவுகள் மூடப்படும். பின்னர் காலை 7.30 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 3 மணி முதல் 6 மணி வரையும் கோவிலில் தரிசனம் செய்யலாம். வெள்ளிக்கிழமைகள் சிறப்பு நாட்களாக கருதப்படுவதால் அன்றைய தினம் தொடர்ச்சியாக நடை திறக்கப்பட்டிருக்கும். ஆலயத்தின் தீர்த்தம் மா மரம் ஆகும். தல தீர்த்தமாக சண்முகத் தீர்த்தம் அமைந்திருக்கிறது.

    மாப்பாணர் பரம்பரையினரால் இக்கோவில் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது.

    நல்லூரில் கந்தசாமி கோவில் தவிர, கயிலாயநாதர், சட்டநாத ஈஸ்வரன், நாயன்மார்கட்டு, அரசடிப் பிள்ளையார், வெயிலுகந்த விநாயகர், முக்குறுணி பிள்ளையார் முதலான கோவில்கள் அமைந்திருக்கின்றன.

    அமைவிடம் :

    இலங்கை நாட்டின் வடக்கு மாகாணத்தில், யாழ்ப்பாண மாவட்டம், யாழ்ப்பாணம் நகரில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில், நல்லூர் திருத்தலம் அமைந்துள்ளது. கொழும்பில் இருந்து வடக்கே 355 கி.மீ. தொலைவில் நல்லூர் இருக்கிறது.
    ×