என் மலர்tooltip icon

    கோவில்கள்

    சென்னைக்கு அருகே உள்ள பழமையான வைணவ தலங்களில் நரசிங்கபுரம் அவசியம் தரிசிக்க வேண்டிய ஒன்று. ஏனெனில் இத்தலம் உடனுக்குடன் பலன் தரும் பெருமை பெற்றது.
    சென்னைக்கு அருகே உள்ள பழமையான வைணவ தலங்களில் நரசிங்கபுரம் அவசியம் தரிசிக்க வேண்டிய ஒன்று. ‘நாளை என்பதில்லை நரசிங்கபுரம் நரசிம்மனிடத்தில்’ என்பது இத்தலத்திற்கு மிகவும் பொருந்தும். ஏனெனில் இத்தலம் உடனுக்குடன் பலன் தரும் பெருமை பெற்றது.

    மகாவிஷ்ணுவின், பத்து அவதாரங்களில் உயர்ந்து நிற்பது நரசிம்ம அவதாரம். மற்ற அவதாரங்களில் தீயவர்களை அழிக்கும் இடம், நேரம் போன்றவை அந்தந்த அவதாரத்திலிருந்த பெருமாள் எடுத்த முடிவு. ஆனால் நரசிம்ம அவதாரம் மட்டும், பிரகலாதன், எப்போது, எந்த இடத்தில் தன்னை அழைப்பானோ என்று எண்ணி, அனைத்துலகிலும் பரவி இருந்து, கூப்பிட்டவுடன், கூப்பிட்ட இடத்தில் தோன்றி தீமையை அழிக்கக் காத்திருந்ததாக புராணங்கள் சொல்கின்றன.

    இவர் லட்சுமி நரசிம்மனாய் வீற்றிருந்து அருள்புரியும் தலமே திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகிலுள்ள நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில். இவரிடம் வேண்டுதல் வைத்தால், நிறைவேற்ற வேண்டிய நேரத்தில் சரியாக நிறைவேற்றி விடுவார் என்கின்றனர். இங்கு அஷ்டலட்சுமிகளும் அருள்புரிவது விசேஷம்.

    மூலவர் லட்சுமி நரசிம்மர் ஏழரை அடி உயரத்துடன் வலது காலை கீழே வைத்து, இடது காலை மடித்து சிரித்த முகத்துடன், தாயார் மகாலட்சுமியை அமரவைத்து, தனது இடது கையால் தாயை அரவணைத்தபடி வலதுகரத்தை அபயஹஸ்தமாக காட்டி இருப்பது சிறப்பு. தாயாரின் பார்வை முழுவதும் பக்தர்களைப் பார்த்தவாறு இருப்பது இத்தலத்தின் தனிச் சிறப்பு.பெருமாளுக்கு கல்யாண லக்ஷ்மி நரசிம்ஹர் என்ற பெயரும் உண்டு.

    ஐந்து நிலை கொண்ட கிழக்கு கோபுரம் வழியாக உள்ளே நுழைந்தால், பலிபீடம் மற்றும் துவஜஸ்தம்பம் உள்ளது. கோபுரத்தின் உள்புறம் தெற்கில் சக்கரத்தாழ்வார், வடக்கில் வேதாந்ததேசிகன் அருள்பாலிக் கின்றனர். பிரகாரத்தின் தெற்கில் ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, வீரலட்சுமி, கஜலட்சுமி, மேற்கு பிரகாரம் சென்றால் சந்தான லட்சுமி, விஜயலட்சுமி, ஐஸ்வர்யலட்சுமி, தனலட்சுமி என அஷ்டலட்சுமிகளையும் தரிசிக்கலாம். தென்மேற்கில் கிழக்கு நோக்கினால், 5 அடி உயரமுள்ள மரகதவல்லித் தாயார், அபயஹஸ்தத்துடன் வசீகரமான சிரிப்புடன் அருள்பாலிக்கிறார்.

    நாகதோஷம் நீங்க, தீராத கடன், நோய், திருமணத்தடை உள்ளிட்ட சகல தோஷங்களும் நிவர்த்தியாக இங்கு வழிபட்டுச் செல்கின்றனர். பக்தர்கள் பெருமாளுக்கும் தாயாருக்கும் அபிஷேகம் செய்து திருமஞ்சனம் சாற்றி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

    நரசிம்ம அவதாரத்தை குறிப்பிடுகையில் சிங்கம் சிரித்தது என்பார் திருமங்கையாழ்வார். அதே போன்று சிரித்த முகத்துடன் பெருமாள் இருக்க, தாயாரின் பார்வை பக்தர்களை நேரடியாக பார்ப்பதாக இருப்பது தனிச்சிறப்பு.

    மரகதவல்லித் தாயார் ஸந்நிதி பிரகாரத்தில் தனியே உள்ளது. முழு அலங்காரத்தில் தாயாரை தரிசிக்கக் கண் கோடி வேண்டும். 16--ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசு காலத்தைச் சேர்ந்த இக்கோயில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு, 2007-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    பிரகாரத்தின் வடமேற்கில் ஆண்டாள் சந்நிதியும், வடகிழக்கில் 20 தூண்களுடன் கல்யாண மண்டபமும் உள்ளது. 4 அடி உயரத்தில், 16 நாகங்களை அணிகலனாக கொண்ட பெரிய திருவடி எனப்படும் கருடாழ்வார் இங்கு அருள்கிறார். இவரைத் தரிசித்தால் நாகதோஷம் நீங்கும் என்பது ஐதீகம். நரசிம்மர் சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தவர். இவரை 9 சுவாதி நட்சத்திர நாட்கள் வணங்கினால், தீராத கடன், நோய், திருமணத்தடை உள்ளிட்ட சகல தோஷங்களும் நிவர்த்தியாகும்.

    கோவில் நடை திறந்திருக்கும் நேரம்:

    காலை : 7.30 மணி முதல் 12 மணி வரை
    மாலை: 4.30 மணி முதல் 8 மணி வரை
    (பிற விஷேச காலங்களில் நேர மாற்றம் உண்டு)

    இரண்யனை வதம் செய்து கோபம் தீராத நரசிம்மரை தாயார் சாந்தப்படுத்தி, பக்தர்களுக்கும் அனுக்கிரகம் செய்வது போன்ற இந்தத் தோற்றம், வேறு எத்தலத்திலும் இல்லாத சிறப்பாகும்.

    சிறந்த பிரார்த்தனைத் தலமான நரசிங்கபுரம் பிரத்யட்ச தெய்வ சக்தி நல்கி, துன்பம் நீங்கி உடனுக்குடன் பலன் தரும் பெருமை பெற்றது. ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 6--ம் இடமாகிய ருண (கடன்), ரோக (வியாதி), சத்ரு (பகை) ஸ்தான தோஷத்தை உடனுக்குடன் நிவர்த்தி செய்பவர் இந்த லட்சுமி நரசிம்மன்.
    தொடர்ந்து 9 சுவாதி நட்சத்திரத்தில் சேவித்தால் தீராத கடன், பிணி, திருமணத் தடை, சகலவிதமான தோஷங்களும் நிவர்த்தியாகும்.

    கோவிலின் கட்டிட அமைப்பு, சோழர்களின் சிற்பக் கலைத் திறனைப்பறை சாற்றும் பொக்கிஷமாகத் திகழ்கிறது. அடித்தளமும் அதன் மேல்பாகமும் கற்களாலும், விமானம், செங்கற்களாலும் கட்டப்பட்டுள்ளன. கருவறை விமான கோபுரத்தில் சுண்ணாம்பு சுதையால் ஆன அழகிய உருவங்கள் ஐந்துள்ளன.

    இங்கு மாதந்தோறும் பெருமாள் பிறந்த நட்சத்திரமான சுவாதி அன்று மூலவருக்கு திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம். அன்றைய தினத்தில் நெய் தீபம் ஏற்றி, கோயிலை 32 முறை வலம் வந்தால் திருமண தடை நீங்கும். நினைத்த காரியம் கைகூடும் என்பதால், திரளான பக்தர்கள் கோயிலுக்கு வந்து, தங்களது நேர்த்தி கடனை செலுத்துவார்கள்.
    பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது தேனூர் நந்திகேஸ்வரர் திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    காமதேனு வழிபட்டு பேறு பெற்ற தலம், நந்திதேவர் தவமியற்றிய தலம், தேவார வைப்புத்தலம், பாதாள லிங்கம் உள்ள ஆலயம், பிணிகள் தீர்க்கும் திருத்தலம் என பல்வேறு பெருமைகள் கொண்டதாகத் திகழ்வது, பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள, தேனூர் நந்திகேஸ்வரர் திருக்கோவில்.

    ஆதியில் இத்தல சிவலிங்கத் திருமேனி, இங்குள்ள வாகை மரத்தடியில் இருந்தது. ஒரு முறை சாபம் பெற்ற காமதேனு, பூலோகம் வந்து இத்தல இறைவனிடம் விமோசனம் கேட்டு வழிபாடு செய்தது. தினமும் தன்னுடைய பாலை சொரிந்து வழிபட்டதால் இத்தலம் ‘காமதேனூர்’ என்று அழைக்கப்பட்டு, அதுவே மருவி ‘தேனூர்’ என்றானதாக சொல்லப்படுகிறது. ‘தேனு’ என்பது பசுவை குறிக்கும் சொல் ஆகும். பசுக்கள் நிறைந்த தலமாக இருந்ததால் இது ‘தேனூர்’ என்று பெயர் பெற்றதாகவும் கூறப்படுகிறது. இதுதவிர இன்னொரு பெயர்க்காரணமும் இருக்கிறது. இத்தல சிவலிங்கத் திருமேனி இருந்த மரத்தின் மீது இருந்து தேன் வடிந்து சிவலிங்கத்தின் மீது பட்டதால், ‘தேனூர்’ பெயர் வந்ததாகவும் சொல்கிறார்கள்.

    ஆலய கருவறையின் வலதுபுறச் சுவரில் கி.பி. 17-ம் நூற்றாண்டினைச் சேர்ந்த கல்வெட்டு காணப்படுகிறது. இதில் கோவிலுக்கு துறையூரைச் சார்ந்த அடியார் ஒருவர் அளித்த தானம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தானத்தை நிறைவேற்றாவிட்டால், கங்கைக் கரையில் காராம் பசுவைக் கொன்ற பாவம் வந்து சேரும் என அக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.

    இத்தலம் திருஞானசம்பந்தராலும், திருநாவுக்கரசராலும் வைப்புத் தலமாகப் போற்றப்படுகிறது. “தேனூரான் செங்கட்டான் குடியான் சிற்றம்பலத்தான், கானூரான், கழுமலத்தான் கணபதீச்சரத்தானே” என சம்பந்தரும், “மூவலூர் மேவினாய் நீயே, சிந்தையாய் தேனூராய் நீயே” என்று திருநாவுக்கரசரும் புகழ்ந்துரைத்துள்ளனர்.

    இத்தலத்து இறைவன், இறைவி திருமேனிகள் பிற்காலச் சோழர் காலத்தைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது. ஆலய கருவறை முன் மண்டப வெளிச்சுவரில் பழமையான கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவை பழங்கால கல்வெட்டுகளை நினைவுபடுத்துவதால், இக்கோவில் மன்னர் காலத்தில் எழுப்பப்பட்டு இருப்பதை அறியமுடிகிறது. ஆய்வு செய்தால் இதன் தொன்மை மற்றும் புதிய வரலாற்றினையும் அறிய ஏதுவாக அமையும்.

    எளிய வடிவில் இருந்த ஆலயம், துறையூர் ஜமீனால் விரிவு படுத்தி கட்டப்பட்டதாக தல வரலாறு கூறுகிறது. இத்தலத்து இறைவனே, ஜமீன்தார் தம்பதியரின் கனவில் தோன்றி தனக்கு ஆலயம் எழுப்ப கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனை உறுதிசெய்யும் விதமாக மகாமண்டபத் தூண்கள் இரண்டில் வடக்கு நோக்கி வணங்கும் விதமாக ஜமீன்தார், அவர்தம் மனைவியின் உருவங்கள் வடிக்கப்பட்டுள்ளன.

    ஆலய அமைப்பு :

    இந்த ஆலயத்திற்கு கிழக்கு மற்றும் தெற்குத் திசையில் எளிய நுழைவு வாசல்கள் அமைந்துள்ளன. இவை சுவாமி, அம்பாள் சன்னிதிக்கு எதிரில் காட்சியளிக்கின்றன. கிழக்கில் பலிபீடம், கொடிமரம், நந்திதேவர் காட்சிதர, எளிய ராஜகோபுரம் அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும், அழகிய தூண்களைக் கொண்டு விளங்கும் மகாமண்டபம் இருக்கிறது. மகா மண்டபத்தின் விதானத்தில் சரபேஸ்வரர் புடைப்புச் சிற்பம் கண்களைக் கவரும் வகையில் வடிக்கப்பட்டிருக்கிறது.

    கருவறை முன்மண்டப முகப்பில் தேனூர் வரகவியின் பாடல்கள் பொறிக்கப்பட்டு உள்ளன. அதற்குள் நுழைந்ததும் அம்மன் சன்னிதி தெற்கு முகமாய் காட்சிதர, கருவறை சுற்றில் ஐந்து அம்மன்களின் திருவுருவங்கள் கோஷ்ட தெய்வங்களாக அமைக்கப்பட்டுள்ளன. நடுநாயகமாக கிழக்கு நோக்கிய நந்திகேஸ்வரர் சன்னிதி துவார பாலகர்களுடன் காணப் படுகிறது. கருவறைச்சுற்றில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர் ஆகியோரது வடிவங்கள் இருக்கின்றன.

    நிருதி மூலையில் நிருதி கணபதி, மகான் குருமூர்த்தி ஜீவ சமாதி, கிருஷ்ணர், வள்ளி - தெய்வானை சமேத முருகப்பெருமான், பாதாள லிங்கேஸ்வரர், காசி விஸ்வநாதர், தீர்த்தக்கிணறு, நடராஜர், நவக்கிரகங்கள், சந்திரன், சூரியன் என அனைத்தும் ஒருங்கே அமைந்துள்ளன.

    ஆலய கருவறையில் நந்திகேஸ்வரர் எளிய வடிவில் கிழக்கு முகமாய் காட்சியளிக்கிறார். இறைவனின் வடிவம் சிறிதானாலும், அருள் ஆற்றல் மிகப்பெரியதாக உள்ளது. தன்னை வழிபடும் அடியாரின் பெயரையே தனக்குச் சூட்டிக்கொண்டு, தன் பக்தரைக் கவுரவிக்கும் குணம் கொண்டவர் சிவபெருமான். அந்த வகையில் தன்னை வழிபட்டுப் பேறுபெற்ற நந்தியின் நினைவைப் போற்றும் விதமாக, இத்தல ஈசன் ‘நந்திகேஸ்வரர்’ என்ற திருப்பெயரோடு அருள் வழங்குகின்றார்.

    இத்தலத்தில் சக்தி சொரூபமாக வீற்றிருக்கும் அன்னை, ‘மகா சம்பத்கவுரி’ என்ற திருநாமத்துடன் நின்ற கோலத்தில் எளிய வடிவாகக் காட்சி தருகின்றாள். நான்கு கரங்கள் கொண்டிருக்கும் அன்னையானவள், மேல் இரு கரங்களில் மலர்களைத் தாங்கியும், கீழ் இரு கரங்களில் அபய வரத முத்திரையோடும் காணப்படுகிறாள்.

    அன்னையின் முகம் சிறிதாக இருந்தாலும், அதில் சிற்பியின் கைவண்ணம் அன்னையின் அழகை நுணுக்கமாக செதுக்கியுள்ளது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. அன்னையின் திருமேனியில் பட்ட சந்தனப் பிரசாதமே, தேனூர் வரகவியின் சூலை நோய்க்கு அருமருந்தாக அமைந்தது. இன்றும் தீராத நோயுற்றவர்களுக்கு அன்னையின் பிரசாதம் தான் அருமருந்தாக அமைகிறது என்று இந்த ஊர் மக்கள் பெருமையோடு தெரிவிக்கின்றனர்.

    இத்தலத்தில் வீற்றிருக்கும் சுவாமியும், அம்பாளும் தங்களை வழிபடுபவர்களுக்கு தீராத வயிற்று வலி, குடல் நோய், சூலை நோய் நீக்கும் கண்கண்ட தெய்வங்களாக விளங்குகின்றனர். நோயுற்றவர்கள் தாங்கள் சாப்பிடும் மருந்துகளோடு, அன்னைக்கு அபிஷேகம் செய்த சந்தனத்தை சிறிதளவு நீரில் கலந்து, நம்பிக்கையோடு குடித்து வந்தால், அவர்களின் நோய் பூரணகுணமாகும் என்பது ஐதீகம். அது இந்தப் பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகவும் இருக்கிறது.

    நந்திகேஸ்வரர், மகா சம்பத்கவுரி

    எழிலான சரபேஸ்வரர் :

    இந்த ஆலயத்தின் மகா மண்டபத்தின் நடுப்பகுதி விதானத்தில் சிவபெருமான் மான், மழுவுடன் சரப பட்சியாக தோன்றி நரசிம்மரை அடக்கும் காட்சி, சரப பறவையை நரசிம்மரை வணங்கும் காட்சி ஆகிய படைப்புகள் உள்ளன. நட்சத்திர வடிவ விளிம்பும், அதனைச் சுற்றி சூரியன் - சந்திரன் மற்றும் தேவர்கள் வணங்கும் காட்சி தெரிகின்றது. இதன் இடதுபுறம் பிரம்மன் நான்கு தலைகளுடன் அட்சயமாலை மற்றும் கெண்டி போன்றவற்றை தன் கரங்களில் தாங்கிய கோலம் அமைந்துள்ளது. இந்த அழகிய புடைப்புச் சிற்பம் அரிதான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

    மகான் குருமூர்த்தி ஜீவ சமாதி:

    பெரும்பாலான சிவாலயங்கள் மகான் ஒருவரின் ஜீவ சமாதியை கொண்டதாக விளங்கும் என்ற தத்துவத்தின் அடிப்படையில், இத்தலத்திலும் சுவாமி கருவறையின் பின்புறம் மகான் குருமூர்த்தியின் ஜீவ சமாதி அமைந்துள்ளது. இதன் மீது அகண்ட தீபம் எந்நேரமும் எரிந்து கொண்டிருக்கிறது. இவரது ஜீவ சமாதிக்கு அருகில் திருவண்ணாமலை கோவிலில் உள்ளது போல, பாதாள லிங்கம் தரையின் கீழ் பகுதியில் இருக்கிறது. இதனுள் காசியில் இருந்து தருவிக்கப்பட்ட சிவலிங்கத் திருமேனி உள்ளது. இந்த பாதாள லிங்க அறையில் அமர்ந்து தியானம் செய்வோரின் நல்ல எண்ணங்கள் ஈடேறும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    தேனூர் வரகவி :

    அறுபத்துமூவர் வரலாற்றைக் கூறுவது சேக்கிழாரின் பெரிய புராணம். அதுபோல முருகப்பெருமானின் 63 அடியார்களை வரிசைப்படுத்தி ‘சேய்தொண்டர் புராணம்’ என்ற நூலை எழுதி இயற்றியவர் தான் தேனூர் வரகவி சொக்கலிங்கனார். இவரின் சொந்த ஊர் தேனூர். பொருளாதாரத்திற்காக மலேசியாவுக்குச் சென்ற இவரை இறைவன் ஆட்கொள்ள நினைந்து திருநாவுக்கரசரைப் போல, சூலை நோயைத் தந்தார்.

    பல்வேறு மருத்துவம் பார்த்தும் குணம் பெறாத நிலையில், தேனூரில் வாழ்ந்த இவரின் பெரியப்பா சீயாளிப்பிள்ளை, இத் தலத்து அம்பிகைக்கு அபிஷேக ஆராதனை செய்து, சந்தனக் காப்பிட்டு வணங்கினார். அந்தப் பிரசாதத்தை மலேசியாவிற்கு அனுப்பினார். அதனை நீரில் கரைத்து உட்கொண்ட சொக்கலிங்கனாருக்கு, சூலை நோய் பூரண குணமானது. அதோடு அந்தப் பிரசாதம், அவருக்கு ஞானத்தையும், தெய்வ கடாட்சத்தையும் அருளியது. அவருக்கு ஏற்பட்ட ஞானத்தால் உருவானதே ‘சேய் தொண்டர் புராணம்.’ இவர் எண்ணற்ற பாடல்களும் பாடியுள்ளார்.

    தினமும் காலை 5 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக இந்த ஆலயம் திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம் :

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்தில் தேனூர் திருத்தலம் இருக்கிறது. திருச்சிராப்பள்ளி - துறையூர் நெடுஞ்சாலையில், மண்ணச்சநல்லூர் கூ.களத்தூர் வழியே செல்லும் வழித்தடத்தில், தேனூர் திருத்தலம் உள்ளது. திருச்சிராப்பள்ளியில் இருந்து 34 கி.மீ. தொலைவில் இதனை அடையலாம்.
    கரூரில் உள்ள சுந்தரராஜப் பெருமாள் திருக்கோவில் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான ஆலயம். இந்த ஆலயத்தில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    கண்ணுக்கு எட்டியவரை பச்சைப் பசேல் வயல் வெளிகள். நங்கவரம் ஊரின் உள்ளே நுழைந்ததுமே கிராமத்துக்கே உரிய மண்வாசனை. நம் மனதை மயக்கும் பெரிய கிராமம். சோழநாட்டை ஆண்ட முதலாம் ராஜராஜனின் கடைக்கண் பார்வை இந்த ஊரின் மேல் பட்டது. விளைவு ?

    ஊரில் மூன்று ஆலயங்களை அமைத்தான் மாமன்னன். சைவப் பெருமக்களுக்காக சுந்தரேஸ்வரர் திருக்கோவில், வைணவப் பெருமக்களுக்காக சுந்தரராஜப் பெருமாள் திருக்கோவில், பெண் தெய்வ வழிபாட்டுக்கு சாத்தாயி அம்மன் ஆலயம் என மூன்று ஆலயங்கள் ஊரின் ஒவ்வொரு திசையிலும் அமைந்துள்ளன.

    சுந்தரராஜப் பெருமாள் ஆலயம், ஊரின் நடுவே கீழ் திசை நோக்கி அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்கு ராஜகோபுரம் இல்லை. முகப்பைத்தாண்டி உள்ளே நுழைந்ததும் விசாலமான பிரகாரம் உள்ளது. இரண்டு சிங்க சிலைகளுக்கு நடுவே விளக்குத் தூணும், பீடமும் உள்ளன. வலது புறம் தல விருட்சமான மகிழம்பூ மரமும், அதனடியில் நாகர் மற்றும் ஆதிசேஷன் திருமேனிகளும் உள்ளன. ஆலயத்தின் தல விருட்சமும் மகிழ மரம் தான்.

    அடுத்துள்ள கருடாழ்வார் சன்னிதியை தாண்டியதும் மகா மண்டபம் உள்ளது. அதற்கடுத்த முன் மண்டபத்தில் லட்சுமி நாராயணர், காளிங்க நர்த்தனர், ஆஞ்சநேயர், நம்மாழ்வார், ராமானுஜர், விசுவசேனர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.

    உள்ளே கருவறையில் பெருமாள் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி பூதேவியர் இருபுறமும் துணையாக நிற்க சேவை சாதிக்கிறார். பின் கைகள் சங்கு சக்கரம் ஏந்த, வலது முன் கை காக்கும் குறிப்பு காட்ட, இடது முன் கையை மடியில் இருத்தியிருக்கும் பெருமாளின் இடையை பட்டாடை அலங்கரிக்கிறது. ஸ்ரீதேவியும் பூதேவியும் ஒரு கையில் மலர் ஏந்திய கோலத்தில் பெருமாளின் அருகே இருபுறமும் நிற்கின்றனர். மேற்கு பிரகாரத்தில் கல்தூணில் ஆஞ்சநேயரின் உருவம் புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கால்கள் தரையில் ஊன்றாமல், அந்தரத்தில் தாவிச் செல்லும் கோலத்தில் ஆஞ்சநேயரின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆஞ்சநேயரை வணங்கினால் விரைந்து வந்து நலன் வழங்குவார் என்பது அனைவரின் நம்பிக்கையாக இருக்கிறது.

    இந்தக் கோவிலில் நான்கு கல்வெட்டுகள் உள்ளன. அவற்றில் மூன்று தமிழிலும், ஒன்று வடமொழியிலும் காணப்படுகிறது. தமிழ் கல்வெட்டுகள் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆண்ட சோழ மாமன்னன் முதலாம் ராஜராஜன் காலத்தவை எனத் தெரிகிறது. எனவே இந்த ஆலயம் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான ஆலயம் என்பதில் சந்தேகமே இல்லை.

    ‘அரிஞ்சிகை சதுர்வேதி மங்கலம்’ என்பது, நங்கவரத்தின் அப்போதைய பெயர் என கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். அந்தக் கல்வெட்டுகளில் இருந்து ராஜராஜன் ஆட்சியின் செயல்பாடு தெளிவாகத் தெரிகிறது.

    இந்த ஊரில் ஓடம் இயக்கும் அளவிற்கு பெரிய குளம் ஒன்று இருந்துள்ளது. ஓடத்தை இயக்குவது முதல் பிற வேலைகள் செய்யும் பணியாளர்களுக்கு எவ்வளவு நெல் தானியம் ஊதியமாகத் தரவேண்டும் என்பன போன்ற தகவல்கள் இந்தக் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

    ஆலய வழிபாடு, படையல் செலவுகள், பூஜை செய்த அர்ச்சகரின் ஊதியம், திருக்கோவில் ஊழியர்களுக்கான ஊதியம், கோவில் படையலுக்கு சட்டிகள் செய்து தந்த குயவருக்கு ஊதியம், நந்தவனத்தை பராமரிக்கும் பணியாளர், பூத்தொடுப்போர் ஊதியம் என அனைத்து செலவினங்களுக்கும் நிலம் ஒதுக்கப்பட்டு, அதிலிருந்து கிடைக்கும் வருவாயில் இந்த செலவினங்கள் மேற்கொள்ளப்பட்ட தகவலும் கல்வெட்டுகள் மூலம் தெரிய வருகிறது.



    இந்தக் கோவிலில் சித்திரை முதல் நாளான தமிழ் வருடப் பிறப்பு, தை முதல் நாளான தமிழர் திருநாள், பங்குனி உத்திரம் போன்ற நாட்களில் இறைவனுக்கும் இறைவிக்கும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. மார்கழி மாதத்தின் 30 நாட்களும் காலை 4.30 மணிக்கே ஆலயம் திறக்கப்பட்டு பூஜைநடைபெறுகின்றன. தினசரி இங்கு இரண்டு கால பூஜை நடைபெறுகிறது.

    வைகாசி ஏகாதசியில் பெருமாள் புறப்பட்டு வீதிஉலா செல்வதுண்டு. மார்கழி மூல நட்சத்திரம் அன்று ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. தங்கள் வேண்டுதல் பலிக்க பக்தர்கள் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சூட்டுவது, வழக்கமாக இங்கு நாம் காணும் காட்சி.

    நவராத்திரி திருநாளின் கடைசி நாளான விஜயதசமி அன்று பெருமாள் அற்புத அலங்காரங்களுடன் குதிரை வாகனத்தில் வீதியுலா வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். வீதிகள் பூராவும் மக்கள் நீர் தெளித்து மாக்கோலமிட்டு பெருமாளை வரவேற்று அளவில்லா மகிழ்ச்சியில் திளைப்பார்கள்.

    பொதுவாக பெருமாள் நவராத்திரி உற்சவத்தின் போது வீதியுலா வருவது அபூர்வம். இங்கு பெருமாள் வீதியுலா வரும் காட்சி பக்தர்களை மிகவும் மகிழ்ச்சியடைய செய்கிறது. தவிர சைவ, வைணவ பாகுபாடின்றி மக்கள் இந்த விழாவை இங்கு கொண்டாடுகிறார்கள்.

    இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயம், தினமும் காலை 9 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பக்தர்களுக்கு அருள்புரியும் சுந்தரராஜப் பெருமாளையும், ஸ்ரீதேவி, பூதேவியையும் நங்கவரம் சென்று நாமும் ஒருமுறை தரிசிக்கலாமே.

    அமைவிடம் :

    கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட நங்கவரம் திருத்தலம், திருச்சியில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ளது. திருச்சி- குளித்தலை சாலையில் பெருகமணி வரை பயணித்து, நச்சலூர் சாலையில் இரண்டு கி.மீ பயணம் செய்ய வேண்டும். திருச்சியிலிருந்து நகரப் பேருந்து வசதி உள்ளது. ஆட்டோ வசதியும் உண்டு.
    கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், அச்சன் கோவில் என்னும் இடத்தில் அமைந்திருக்கும் தலத்தில், அச்சம் நீக்கி அருளும் அரசனாக ஐயப்பன் அருள்பாலித்து வருகிறார்.
    கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், அச்சன் கோவில் என்னும் இடத்தில் அமைந்திருக்கும் தலத்தில், அச்சம் நீக்கி அருளும் அரசனாக ஐயப்பன் அருள்பாலித்து வருகிறார்.

    வழி காட்டிய வாள் :

    பரசுராமர் நிறுவியதாகக் கருதப்படும் ஐந்து சாஸ்தா (ஐயப்பன்) கோவில்களில் ஒன்றான அச்சன்கோவில் திருத்தலத்தில் பூர்ணா, புஷ்கலை எனும் இரு தேவிகளுடன் ஐயப்ப அரசர் தோற்றத்தில் அழகாகக் காட்சி தருகிறார். இங்கிருக்கும் ஐயப்ப பக்தர்களின் அனைத்து வகையான அச்சங்களையும் நீக்கி, வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுவார் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. அதற்காக, மரபுவழிக் கதை ஒன்றும் சொல்லப்படுகிறது.

    முன்பொரு காலத்தில், இக்கோவிலில் இருக்கும் ஐயப்பனை வழிபடுவதற்காக முதியவர் ஒருவர், தனது ஊரிலிருந்து கிளம்பி அடர்ந்த காடுகளின் வழியாகச் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில், பகல் கடந்து இரவு நேரமாகி விட்டது. இரவு வேளையில், அவருக்குப் பாதை சரியாகத் தெரியவில்லை. மேலும் அவருக்கு, ‘வழி தவறி வேறு பாதையில் சென்று, ஏதாவது ஆபத்து வந்து விடுமோ?’ என்கிற அச்சமும் ஏற்பட்டது.

    உடனே அவர், ஐயப்பனை மனதில் நினைத்து, அச்சத்தை நீக்கிச் சரியான பாதையைக் காட்டியருள வேண்டினார். அப்போது, “பக்தனே! உன் முன்பாக தோன்றும் என் வாள், உன்னை என் ஆலயத்திற்கு அழைத்துச் செல்லும். அச்சன்கோவிலை அடைந்ததும், அந்த வாளை என் சன்னிதியில் சேர்த்துவிடு” என்று ஒரு குரல் அசரீரியாக ஒலித்தது.

    சிறிது நேரத்தில், ஒளி மிகுந்த வாள் ஒன்று அங்கே தோன்றியது. அந்த வாள் முன்னோக்கிச் செல்ல, அதனைப் பின் தொடர்ந்து சென்றார், முதியவர். மறுநாள் அதிகாலையில் கோவிலை அடைந்த முதியவர், கோவில் அர்ச்சகரைச் சந்தித்து, இரவில் காட்டுக்குள் நடந்ததைச் சொல்லி அந்த வாளை அவரிடம் ஒப்படைத்தார்.

    அப்போது கருவறையில் இருந்து, “என் வாளைக் கருவறையில் வைத்து வழிபாடு செய்யுங்கள். நான் உங்களுக்கு அரணாக இருந்து காப்பேன்” என்று ஒரு குரல் கேட்டது. அங்கிருந்த அனைவரும் அதனைக் கேட்டனர். அன்று முதல் அந்த வாள், அச்சன்கோவில் ஐயப்பனின் கருவறையில் வைத்து வழிபாடு செய்யப்பட்டு வருகிறது என்று அச்சம் நீக்கிய ஐயப்பனின் வரலாறு சொல்லப்படுகிறது.

    கோவில் அமைப்பு :

    அச்சன் கோவில் ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் இந்தக் கோவிலின் கருவறையில், பூர்ணா - புஷ்கலை என்னும் இரண்டு தேவியர்களுடன் அரசரின் தோற்றத்தில் ஐயப்பன் அருள்பாலிக்கிறார். இதனால் இங்கிருக்கும் ஐயப்பனைக் ‘கல்யாண சாஸ்தா’ என்று அழைக்கின்றனர். இங்கிருக்கும் ஐயப்பன் வலது கையில் சந்தனம் மற்றும் புனித நீர் இருக்கிறது. இதனால், ஐயப்பனை ‘பெரும் மருத்துவர்’ (மகாவைத்யா) என்றும் அழைக்கின்றனர்.

    ஆலய வளாகத்தில், சிவன், பார்வதி, கணபதி, சுப்பிரமணியர், நாகராஜா, நாகயட்சி, மாளிகப்புறத்தம்மாள், சப்பானி மாடன், கருப்பசாமி போன்ற தெய்வங்களும் இடம் பெற்றுள்ளனர்.

    வழிபாடும்.. பலன்களும்.. :

    இங்கு ஐயப்பனுக்குரிய அனைத்துச் சிறப்பு நாட்களிலும், சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. ஐயப்பன் மண்டல வழிபாட்டு நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். மேலும் ஆண்டுதோறும், மலையாள நாட்காட்டியின்படி, தனு (மார்கழி) மாதம் முதல் நாளிலிருந்து பத்து நாட்கள் வரை பெருவிழா (மகோத்ஸவம்) நடைபெறுகிறது.

    இவ்விழா நாட்களில் ஐயப்பனுக்கு அணிவிப்பதற்காக வைக்கப்பட்டிருக்கும் தங்க ஆபரணங்கள் மற்றும் வாள் போன்றவை புனலூர் கருவூலத்தில் இருந்து எடுத்துச் சென்று அணிவிக்கப்படுகின்றன. இந்த திருவாபரண ஊர்வலம் செல்லும் பாதையானது, கேரளாவிலுள்ள புனலூர், ஆரியங்காவு, தமிழ்நாட்டிலுள்ள செங்கோட்டை, தென்காசி உள்ளிட்ட நகரங்களின் வழியாக அமைந்திருக்கிறது. விழாவின் ஒன்பதாம் நாளில் தேரோட்டம் நடத்தப் பெறுகிறது. மகரம் (தை) மாதம் வரும் ரேவதி நட்சத்திர நாளில் பூச்சொறிதல் நிகழ்ச்சி நடக்கிறது.

    இங்கிருக்கும் ஐயப்ப பக்தர்களின் அனைத்து வகையான அச்சங்களையும் நீக்கி, வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுவார் என்னும் நம்பிக்கை இருக்கிறது. மேலும் இத்தல ஐயப்பனை வழிபடுபவருக்குத் திருமணத்தடை இருப்பின் அவை நீங்கும். இல்லறத்தில் இருப்பவர்களுக்கு மனமகிழ்ச்சியுடனான வாழ்க்கை அமையும். பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சி கடித்தவர்களுக்கு இங்கிருக்கும் ஐயப்பன் சிலையிலிருந்து சந்தனம் எடுத்துத் தரப்படுகிறது. சந்தனத்துடன், அர்ச்சகர் தரும் புனித நீரையும் சேர்த்துப் பூசினால் விஷம் உடனடியாக நீங்கிக் குணம் பெறலாம் என்கின்றனர்.

    பூர்ணா- புஷ்கலை சமேத ஐயப்பன்

    ஆலயத்தின் சிறப்புகள் :

    பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்ட ஐயப்பன் ஆலயங்களில் இருக்கும் ஐயப்பன் சிலைகள், நெருப்பு மற்றும் இயற்கைப் பேரழிவுகளால் சேதமடைந்து பின்னர் மாற்றப்பட்டிருக்கின்றன. ஆனால், அச்சன் கோவிலில் இருக்கும் ஐயப்பன் சிலை மட்டும் பழைய சிலையாக அப்படியே இருக்கிறது.

    இக்கோவிலில் ஐயப்பன் பூர்ணா, புஷ்கலை ஆகிய இரு தேவியர்களுடன் முழுமையான குடும்பத்தினராக இருந்து அரசாட்சி செய்கிறார்.

    ஐயப்பன் கோவில்களில், சபரிமலை ஆலயத்துக்கு அடுத்தபடியாக புகழ் பெற்ற கோவிலாக அச்சன்கோவில் ஐயப்பன் கோவில் திகழ்கிறது.

    ஐயப்பன் கோவில்களில் சபரிமலை, அச்சன் கோவில் ஆகிய இடங்களில் மட்டுமே பத்து நாட்கள் திருவிழா நடைபெறுகிறது.

    அச்சன்கோவில் ஐயப்பன் கோவிலில் மட்டுமே தேரோட்டம் நடத்தப்படுகிறது. பிற ஐயப்பன் கோவில்களில் தேரோட்டம் இல்லை.

    அச்சன்கோவில் ஐயப்பன் ஆலயத்தில், ஆண்களுடன் அனைத்து வயதுப் பெண்களும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

    குழந்தைப்பேறு வேண்டுபவர்கள், இங்கிருக்கும் அம்மன் சன்னிதியில் பட்டுத்துணி, வளையல் போன்றவற்றுடன் தொட்டில் கட்டி வழிபட்டால் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    மாய, மந்திரச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள், தீராத நோயால் அவதிப்படுபவர்கள், இக்கோவிலில் நடைபெறும் ‘கருப்பந்துள்ளல்’ என்னும் விழாவில் கலந்து கொண்டு, கருப்பசாமியை வழிபட்டால், தீய சக்திகள் அனைத்தும் நீங்கி வளம் பெறுவர்.

    இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம் :

    கேரள மாநிலம், புனலூர் நகரில் இருந்து 43 கிலோ மீட்டர் தொலைவிலும், தமிழ்நாட்டிலுள்ள செங்கோட்டை நகரில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவிலும் அச்சன்கோவில் இருக்கிறது. இங்கு செல்ல ஏராளமான பேருந்து வசதிகளும் உள்ளன.

    திருவிசலூர் எனும் திருவிசநல்லூரில் சவுந்திரநாயகி சமேத சிவயோகிநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    திருவிசலூர் எனும் திருவிசநல்லூரில் சவுந்திரநாயகி சமேத சிவயோகிநாதர் கோவில் அமைந்துள்ளது. இது திருஞானசம்பந்தரின் பாடல் பெற்ற திருத்தலமாகும். பெண் பாவம் போக்கும் திருத்தலமாகவும், ரிஷப ராசியினருக்கு உரிய திருத்தலமாகவும், பிரதோஷ வழிபாட்டிற்கு மிக உகந்த திருத்தலமாகவும் இந்த ஆலயம் விளங்குகிறது.

    ஸ்ரீதர வெங்கடேச தீட்சிதர், சிறந்த சிவபக்தர். இவர் தினமும் காலையில் சிவயோகநாதரை வணங்குவது வழக்கம். ஒருமுறை கார்த்திகை அமாவாசை தினத்தன்று, தமது முன்னோர்களுக்கு சிரார்த்தம் செய்ய ஏற்பாடு செய்தார். மிகுந்த ஆசாரத்துடன் அனைத்து ஏற்பாடுகளும் நடக்கிறது. சிரார்த்த நேரத்திற்கு முன்னால் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், அங்கு வந்து பசிக்கு உணவு வேண்டி நின்றார். அவரை வாட்டமான முகத்தைக் கண்டு மனம் இரங்கிய வெங்கடேச தீட்சிதர், சிரார்த்தம் செய்ய வைக்கப்பட்டிருந்த உணவை, பசித்து வந்தவருக்கு வழங்கினார்.

    இதைக் கண்ட வேதியர்கள் சிலர், இப்படிச் செய்தது சாஸ்திர விரோதம் என்றும், இதற்கு பரிகாரமாக காசி சென்று கங்கையில் நீராட வேண்டும். இல்லையெனில் அவரை ஊரை விட்டு விலக்கி வைப்பதும், சிரார்த்தமும் செய்ய மாட்டோம் என்றனர்.

    வடநாட்டில் இருக்கும் கங்கையில் ஒரே நாளில் நீராடித் திரும்ப முடியுமா? கும்பகோணத்தில் இருந்து காசியில் இருக்கும் கங்கைக்கு சென்று வருவதற்குள் அடுத்த ஆண்டு திதி வந்து விடுமே என்று வெங்கடேச தீட்சிதர் வருந்தினார். மனமுருகி ‘கங்காஷ்டகம்’ என்னும் துதி பாடினார்.

    அவர் பாடி முடித்ததும் அவர் வீட்டுக் கிணற்றிலிருந்து கங்கை பொங்கியது. கிணற்றிலிருந்து நீர் மேலெழுந்து வழிந்து பெருக்கெடுத்து ஊருக்குள் புகுந்து வெள்ளக் காடானது. இதைக் கண்டு அதிசயித்த மக்கள், ஸ்ரீதர வெங்கடேச தீட்சிதரை வணங்கி, கங்கை நீரில் நீராடினர். சிரார்த்தம் செய்ய வந்த அந்தணர்கள் தங்கள் தவறை உணர்ந்து மகானிடம் மன்னிப்புக் கேட்க, மகானும் கங்கையிடம் தணியுமாறு பிரார்த்தித்தார். கங்கையும் அடங்கி அந்தக் கிணற்றிலேயே நிலைத்தது. பின்னர் அந்தணர்கள் திதி கொடுத்தனர்.

    அன்றைய தினம் மாலை வேளையில் திருவிசநல்லூர் ஈசன் கருவறையில், ஒரு துண்டுச் சீட்டு இருந்தது. அதில் ‘இன்று மதியம் ஸ்ரீதர வெங்கடேசன் வீட்டின் திதியில் உணவருந்தியதால் இரவு நைவேத்தியம் வேண்டாம்’ என்று எழுதியிருந்தது.

    தாழ்த்தப்பட்டவராக ஸ்ரீதர வெங்கடேச தீட்சிதர் வீட்டிற்கு வந்து உணவருந்திச் சென்றது சிவபெருமான் என்பதை உணர்ந்த அனைவரும், அவரைப் போற்றிப் பணிந்தனர்.

    இந்த அற்புத நிகழ்வு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தன்று, ‘கங்கா பூஜை நீராடல்’ எனும் விழாவாக திருவிசநல்லூர் மகான் ஸ்ரீதர வெங்கடேச திருமடத்தில் நிகழ்கிறது. மகான் தன்னுடைய கங்காஷ்டகத்தில்,‘கங்கையே நீ இங்கேயே ஸ்திரமாக இரு’ என்று வேண்டுகிறார். அதனால் இந்த கிணற்றிலுள்ள தீர்த்தம், எல்லா நாளிலும் கங்கை தீர்த்தமே.

    இன்றைக்கும் கார்த்திகை அமாவாசையில் இந்தக் கிணற்றில் கங்கை பொங்கி வருவதாக ஐதீகம். இங்கு கங்கை பொங்கும் விழா பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. விழா நாட்களில் தினமும் அன்னதானமும் வழங்கப்படுகிறது. பத்து நாட்கள் நடைபெறும் விழாவில் பத்தாம் நாள் கார்த்திகை அமாவாசை அன்று கங்கை கிணற்றில் பொங்குகிறது. அன்றைய இரவு முழுவதும் திவ்ய நாம சங்கீர்த்தனம் நடக்கும். கார்த்திகை அமாவாசையன்று அதிகாலை காவிரி நதிக்குச் சென்று சங்கல்ப ஸ்நானம் செய்து விட்டு அங்கிருந்து தீர்த்தம் கொண்டுவந்து கிணற்றில் விடுவார்கள். பின்னர் கிணற்றுக்கு கங்கா பூஜை நடத்திவிட்டு காலை ஐந்து மணியிலிருந்து எல்லோரும் நீராடுவார்கள். இது மிகப்பெரும் பாக்கியமாகும்.

    ஸ்ரீதர வெங்கடேச தீட்சிதர் ‘சிவனும், விஷ்ணுவும் ஒன்றே’ என்று மக்களுக்கு போதித்தவர். தினமும் திருவிசநல்லூர் ஈசனை காலையில் வழிபட்டு விட்டு, அருகில் உள்ள திருவிடைமருதூருக்குச் சென்று மாலை வேளையில் மகாலிங்க சுவாமியையும் வணங்கி வருவார் ஸ்ரீதர வெங்கடேச தீட்சிதர். அதன் பின்பே தினமும் இரவு உணவை உண்பார்.

    திருவிசநல்லூரில் இருந்து திருவிடைமருதூருக்குச் செல்லும் வழியில் வீரசோழன் என்ற ஆறு குறுக்கிடும். ஆற்றைக் கடந்து சென்றுதான் தினமும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமியை தரிசித்து வருவார். ஒரு நாள் வீரசோழன் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஸ்ரீதர வெங்கடேச தீட்சிதரால் ஆற்றினைக் கடக்க முடியவில்லை. இதனால் வீடு திரும்பிய அவர் மகாலிங்க சுவாமியை தரிசிக்காமல் திரும்பியதை நினைத்து கவலையடைந்தார். அந்த கவலையில் உணவருந்தாமலேயே படுக்கைக்குச் சென்றார்.

    திடீரென வீட்டு வாசல் கதவு தட்டும் ஓசை கேட்டது. ‘நள்ளிரவு நேரத்தில், இந்த அடை மழையில் யார் கதவைத் தட்டுவது?’ என்ற யோசனையுடன் கதவைத் திறந்தவருக்கு இன்ப அதிர்ச்சி. ஆம்! திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி ஆலய அர்ச்சகர் பிரசாத தட்டுடன் நின்று கொண்டிருந்தார்.

    “அய்யா! இன்று ஆற்றில் கடுமையான வெள்ளம் ஓடுகிறது. அதனால் மகாலிங்க சுவாமியை காண இரவு பூஜைக்கு உங்களால் வர முடியவில்லை என்பதை அறிந்து கொண்டேன். சுவாமியை தரிசிக்காமல் இரவு உணவு உண்ண மாட்டீர்கள் என்பதும் எனக்குத் தெரியும். ஆகவே தான் திருக்கோவில் பிரசாதத்துடன் வந்து விட்டேன்” என்றார் அர்ச்சகர்.

    பிரசாதத்தைப் பெற்றுக்கொண்ட மகான், மகாலிங்க சுவாமியின் கருணையை எண்ணி வியந்தார். அர்ச்சகரை இரவு வீட்டிலேயே தங்கி செல்ல வேண்டினார். அர்ச்சகரும் சம்மதித்தார். உறக்கத்தில் கடும் குளிரால் அர்ச்சகர் அவதியுறுவதைக் கண்ட மகான், கம்பளியை எடுத்து வந்து அர்ச்சகருக்கு போர்த்தி விட்டார்.

    பொழுது விடிந்தது. மழையும் நின்றது. உறக்கத்தில் இருந்து எழுந்த மகான், அர்ச்சகரைக் காணாமல் திகைத்தார். தன்னிடம் சொல்லாமலே சென்று விட்டாரே என்று எண்ணிவிட்டு, விடிந்ததும் விடியாததுமாக அந்த அதிகாலையிலேயே திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமியை தரிசிக்க புறப்பட்டார். அங்கு மகாலிங்க சுவாமி சன்னிதியில் முதல் நாள் இரவு தன் வீட்டிற்கு வந்த அர்ச்சகர் நின்று கொண்டிருப்பதைக் கண்டார். அப்போது தான் அவரும் கோவிலுக்கு வந்திருந்தார். இன்னும் கோவில் நடை திறக்கப்படாமல் இருந்தது.

    அர்ச்சகரிடம் சென்ற ஸ்ரீதர வெங்கடேசர் நேற்று நடந்ததை நினைவுபடுத்தி, “சுவாமி! என்னிடம் சொல்லாமலேயே வந்து விட்டீர்களே!” என்று வருத்தப்பட்டார்.

    அர்ச்ககர் திகைத்தவாறே, “நீங்கள் என்ன சொல்கிறீர்கள். நான் எப்போது உங்கள் வீட்டிற்கு வந்தேன். கடுமையான மழை காரணமாக, நான் நேற்று மாலையிலேயே திருக்கோவிலை சாத்திவிட்டு என் வீட்டிற்குச் சென்று விட்டேனே” என்றார்.

    பேசியபடியே அவர் கோவில் கருவறை கதவை திறந்த போது, ஸ்ரீதர வெங்கடேசர், நேற்று இரவு அர்ச்சகருக்கு போர்த்தி விட்ட கம்பளி, ஈசனின் திருமேனியை தழுவிக்கொண்டிருந்தது.

    அப்போதுதான் அர்ச்சகருக்குத் தெரிந்தது, ‘நேற்று நள்ளிரவில் கொட்டும் மழையில் ஸ்ரீதர வெங்கடேசர் வீட்டுக்குச் சென்று, பிரசாதம் உண்ணக்கொடுத்து அவர் வீட்டில் தூங்கி வந்தது திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமியே’ என்பது. ஈசனின் கருணையை எண்ணி இருவரும் உள்ளம் நெகிழ்ந்தனர்.

    பின்னர் ஈசன் அருளால் அற்புதங்கள் பல புரிந்த மகான் ஸ்ரீதர வெங்கடேசர், திருவிடை மருதூரில் உள்ள மகாலிங்க சுவாமியிடம் ஜோதி வடிவில் ஐக்கியமானார்.

    சதுர்கால பைரவர்கள் :

    திருவிசநல்லூர் ஆலயத்தில் ஒரே சன்னிதியில் மேற்கு நோக்கிய வண்ணம் நான்கு பைரவர்கள் அருள்பாலிக்கிறார்கள். யுகத்திற்கு ஒரு பைரவராக சதுர்கால பைரவர்களாக இவர்கள் விளங்கு கின்றனர். ஞான கால பைரவர், சொர்ண ஆகர்ஷண பைரவர், உன்மத்த பைரவர், யோக பைரவர் என நான்கு பைரவர்களும் அழைக்கப்படுகின்றனர்.

    இதில் ஞானகால பைரவர் அருகில் தட்சிணாமூர்த்தி வீற்றிருக்கிறார். இவரை வழிபட்டால் கல்வியிலும், உத்தியோகத்திலும் மேன்மை பெறலாம். சொர்ண ஆகர்ஷண பைரவர் எதிரில் மகாலட்சுமி அருள்பாலிக்கிறார். இவரை வழிபட வறுமை, கடன் அகலும். செல்வம் சேரும். சேமிப்பு உயரும். உன்மத்த பைரவருக்கு அருகில் சனி பகவான் வீற்றிருக்கிறார்.

    இவரை வழிபட்டால் ஏழரைச் சனி, அஷ்டமத்துச் சனி, கண்டகச் சனி முதலிய சனி தோஷங்கள் விலகும்; திருஷ்டி தோஷங்களும் நீங்கும். யோக பைரவரின் அருகில் உத்திர கயிலாச லிங்கம் உள்ளது. இவரை வழிபட்டால் எல்லா விதமான ராஜ யோகங்களும் வாழ்வில் கிடைக்கப்பெறும். இழந்த சொத்து, பூர்வீக சொத்துகளை மீண்டும் பெறலாம். வளர்பிறை அஷ்டமி நாளில் இந்த நான்கு பைரவர்களையும் ஒரு சேர வழிபட்டால் அனைத்து துன்பங்களும் நீங்கி நன்மைகள் பெருகும் என்பது ஐதீகம்.

    அமைவிடம் :

    கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் 8 கிலோமீட்டர் தூரத்தில் திருவிடைமருதூர் திருத்தலம் அமைந்து உள்ளது. திருவிடைமருதூரில் இருந்து வடமேற்கில் 4 கிலோமீட்டர் தூரத்தில் திருவிசநல்லூர் திருத்தலம் அமைந்து உள்ளது.
    வேலூர் அருகே உள்ளது விரிஞ்சிபுரம் என்ற திருத்தலம். இங்கு மார்க்கபந்தீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    வேலூர் அருகே உள்ளது விரிஞ்சிபுரம் என்ற திருத்தலம். இங்கு மார்க்கபந்தீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. ‘திருவிரிஞ்சை மதிலழகு’ என்பது சொல் வழக்கு.

    திருவண்ணாமலையில் ஜோதியாய் நின்ற ஈசனின் திருமுடியைக் கண்டதாக பொய் சொன்ன பிரம்மனுக்கு, சிவபெருமான் சாபமிட்டார். அந்த சாபத்தை நீக்கும் பொருட்டு, பிரம்மதேவன் வழிபட்ட தலம் விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் ஆலயம் என்பது தல புராண சிறப்பாகும். பிரம்மா, இந்த ஆலயத்தின் அர்ச்சகரின் மகனாகப் பிறந்து, ஆலய இறைவனை பூஜித்து சாபம் நீங்கப் பெற்றாராம். பிரம்மனுக்கு விரிஞ்சன் என்ற பெயரும் உண்டு. எனவே தான் இந்த ஆலயம் ‘விரிஞ்சிபுரம்’ என்றானது.

    அருணகிரிநாதர், திருமூலர், பட்டினத்தார், கிருபானந்த வாரியார், எல்லப்பா தேசிகர் உள்ளிட்டோர் பாடல் பெற்ற திருத்தலம் இது.

    விரிஞ்சிபுரம் ஈசனுக்கு பூஜை செய்து வந்த, சிவநாதன்- நயனாநந்தினி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார், பிரம்மதேவன். சிவசர்மன் எனப் பெயரிடப்பட்ட அவர், தன் ஐந்தாம் வயதில் தந்தையை இழந்தார். சிறுவனாய் இருந்ததால் ஆலயத்திற்கு பூஜை செய்யும் உரிமையை, உறவினர் பறித்துக்கொண்டனர்.

    இதனால் கவலையுற்ற சிவசர்மனின் தாயார், இத்தல ஈசனிடம் வேண்டினார். அவர் கனவில் சிவபெருமான் தோன்றி, ‘ஆலயத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் சிவசர்மனை நீராட்டிக் காத்திரு. நான் வந்து உனக்கான வழியைக் காட்டுகிறேன்’ என்றார்.

    நயனா நந்தினி கனவு கண்ட மறுநாள், கார்த்திகை மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை ஆகும். அந்த நாளில் ஒரு முதியவர் உருவில் வந்த ஈசன், சிவசர்மனுக்குப் பூணூல் அணிவித்து வேத சாஸ்திரங்கள் புகட்டி, சிவதீட்சை அனைத்தும் செய்து மறைந்தார். பிரம்மனுக்கு, சிவபெருமானே சிவ தீட்சை அளித்த திருத்தலம் என்ற பெரும் சிறப்புடையதாக இந்த ஆலயம் திகழ்கிறது.

    பின்னாளில் சிறுவன் சிவசர்மன் பூஜை செய்யும் பொருட்டு ஆலயத்தை நெருங்கியதும், பூட்டியிருந்த ஆலயக் கதவும் திறந்துகொண்டது. பின்பு சிறுவன் சிவசர்மன் விரிஞ்சிபுரம் வழித்துணை நாதருக்கு அபிஷேகம் செய்ய எண்ணினான். ஆனால் சிறுவனான அவனது உயரம் குறைவு என்பதால் வருந்தினான். சிறுபாலகனின் வருத்தம் அறிந்த ஈசன், சிவலிங்கத்தின் மேல் பகுதியான பாணத்தைச் சாய்த்து, சிவசர்மன் செய்த அபிஷேகத்தை ஏற்றுக் கொண்டார்.

    ஆம்! சிருஷ்டி கர்த்தாவாக விளங்கும்போது, திருஅண்ணாமலையில் பிரம்மனுக்குக் காட்டாத திருமுடியை, அதே பிரம்மன் சிறுவனாக வந்து விரிஞ்சிபுரத்தில் வருந்தியபோது ஈசன் தலை சாய்த்து காட்டியருளினார். அந்த சிறப்பு மிக்க நாள் கார்த்திகை கடைசி ஞாயிறு ஆகும்.

    பாலகனாகத் தோன்றிய பிரம்மா இத்திருத்தலத்தில், சிவபெருமானிடம் உபநயனம், பிரம்மோபதேசம், சிவதீட்சை ஆகியவற்றைப் பெற்றுள்ளார். எனவே அடியவர்கள் சிவதீட்சை பெற இதனைக் விட உயரிய தலம் வேறில்லை எனலாம். இங்கு தலமரமாக பனை மரம் உள்ளது. இங்குள்ள சிம்மக்குளம் தீர்த்தம் ஆகும். இந்த தீர்த்தத்தில் பீஜாட்சர யந்திரம், ஆதி சங்கரரால் ஸ்தாபனம் செய்யப்பட்டுள்ளது.

    ஆண்டு தோறும் இத்தீர்த்த குளம், கார்த்திகை மாதம் கடைசி சனிக்கிழமை நள்ளிரவு 11-55 மணிக்கு திறக்கப்படும். அதாவது கார்த்திகை கடைசி ஞாயிறு நள்ளிரவு 12 மணிக்கு இந்த தீர்த்தக் குளத்தில் குளித்தால், குழந்தை பேறு இல்லாத பெண்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும் என்பதும், பேய், பிசாசு, பில்லி, சூனியம் போன்ற தீவினைகள் அகலும் என்பதும் நம்பிக்கை.

    முதலில் அருகில் உள்ள பாலாற்றில் குளித்துவிட்டு கோவிலின் அருகில் உள்ள பிரம்மனால் உருவாக்கப்பட்ட பிரம்ம தீர்த்தத்தில் நீராடி, தொடர்ந்து சிம்ம வாய்முகம் கொண்ட சிம்ம தீர்த்தத்தில் நள்ளிரவு 12 மணிக்கு மூழ்கி எழ வேண்டும். பின்னர் ஆலயத்தில் அமைந்துள்ள மகா மண்டபத்தில் ஈர உடையுடன் மடியில் பூ, பழம், தேங்காய் வைத்துக் கொண்டு கோவில் பிரகாரத்தில் படுத்து உறங்கினால், அவர்களது கனவில் சிவபெருமான் மலர் வடிவில் தோன்றி குழந்தை வரம் அருள்வார் என்பது ஐதீகம். அல்லது கனவில் மலர்கள், பழங்கள், புத்தாடைகள் ஆகியவற்றைத் தாங்கியபடி முதியவர் காட்சி தந்தாலும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    இப்படி வேண்டிக்கொண்டு குழந்தை வரம் பெற்றவர்கள், குழந்தை பிறந்த பிறகு, மரகதாம்பிகை அம்பாள் சன்னிதிக்கு எதிரில் உள்ள மண்டபத்தில் தொட்டில் கட்டி வேண்டுதல் நிறைவேற்றுகின்றனர்.

    இங்கு கார்த்திகை கடை ஞாயிறு விழா, முதல் நாளான சனிக்கிழமை மாலை 3 மணிக்கு தொடங்கி, மறுநாள் ஞாயிறு இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. சிம்மக்குளத்தில் நீராட உள்ளவர்கள், சனிக்கிழமை மாலை மூன்று மணிக்குள் ஆலயம் வர வேண்டும். அப்போதுதான் அன்று நள்ளிரவில் நீராட வசதியாக இருக்கும்.

    வழித்துணை நாதர் :

    மைசூரைச் சேர்ந்த ஒரு வணிகர், இத்தலம் வழியாக காஞ்சீபுரம் சென்று மிளகு வியாபாரம் செய்வது வழக்கம். ஒரு முறை வியாபாரத்திற்காகச் சென்றபோது, வணிகர் இந்த ஆலயத்தில் தங்க நேரிட்டது. அவர் திருடர்களிடம் இருந்து தன்னைக் காத்து உதவும்படி வேண்டினார். இறைவனும் வேடன் உருக்கொண்டு, வணிகருக்கு வழித்துணையாக வந்ததாக தல வரலாறு சொல்கிறது. எனவேதான் இத்தல இறைவனுக்கு ‘வழித்துணை நாதர்’ என்றும் பெயர் வந்தது.

    அமைவிடம் :

    வேலூரில் இருந்து மேற்கே 15 கி.மீ. தூரத்தில் பாலாற்றங்கரையில் விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
    சோழ சிம்மபுரம் என்பது மருவிச் சோளிங்கபுரம் என ஆயிற்று. நாளடைவில் சோளிங்கபுரம் என்பது பேச்சுவழக்கில் மருவி சோளிங்கர் என்றாகிவிட்டது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    கோவில்கள் விபரம்

    1. கீழேயுள்ள கோவில் - உற்சவர் மட்டும்.
    உற்சவர் : பக்தவச்சலப் பெருமாள், தக்கான்.
    2. பெரிய மலை மீதுள்ள கோவில் - கடிகாசலம்
    பெருமாள்    : யோக நரசிம்மர், அக்காரக்கனி
    திருநிலை    : வீற்றிருந்த திருக்கோலம்
    திருமுக மண்டலம்    : கிழக்கு நோக்கியது
    தாயார்    : அமிர்தவல்லித் தாயார்
    விமானம்    : சிம்மகோஷ்டாக்ருதி விமானம்
    தீர்த்தம்    : அமிர்த தீர்த்தம், தக்கான்குளம்
    3. சிறிய மலை மீதுள்ள கோவில்
    மூலவர்    : யோக ஆஞ்சநேயர்-இவர் நான்கு திருக்கரத்தோடு கையில் சங்கு சக்கரத்தோடும் நரசிம்மரை நோக்கியவாறும் எழுந்தருளியுள்ளார். இங்கு ரங்கநாதர், சீதாராம லட்சுமணர் சந்நிதிகள் உள்ளன.

    சோழ சிம்மபுரம் என்பது மருவிச் சோளிங்கபுரம் என ஆயிற்று. நாளடைவில் சோளிங்கபுரம் என்பது பேச்சுவழக்கில் மருவி சோளிங்கர் என்றாகிவிட்டது.

    தொட்டாச்சார்யார் :

    அனைத்து திருமால் ஆலயங்களிலும் காணப்படும் சடாரி இத்தலத்தில் ஆதிசேஷன் வடிவில் இருப்பது குறிப்பிட வேண்டிய சிறப்பு. வலப்புறத்தில் ஐம்பொன்னாலான கிருஷ்ண விக்ரகத்தையும் மற்றொருபுறம் சிறிய வடிவிலான வரதராஜப் பெருமாளையும் தரிசிக்கிறோம். தொட்டாச்சார்யார் எனும் பக்தர் வருடந்தோறும் காஞ்சி வரதராஜரின் கருட சேவையை தரிசிப்பது வழக்கம்.

    வயது முதிர்ந்த நிலையில் அவரால் காஞ்சிக்குச் செல்ல முடியாதபோது பெருமாளே தக்கான்குளத்தில் அவருக்கு கருட சேவையை காட்டியருளியதாக ஐதீகம். அதை நினைவுறுத்தும் வண்ணம் இங்கு கொலுவிருக்கும் வரதராஜப் பெருமாளை அருளாளர் என்றும் பேரருளாளர் என்றும் அழைக்கின்றனர். கருவறையை வலம் வரும்போது ஆண்டாள் சந்நதியை தரிசிக்கலாம். எதிரில் ஆழ்வார்களும் ஆச்சார்யார்களும் அருள்கின்றனர்.

    ஆண்டு முழுவதும் பல்வேறு விதமான திருவிழாக்கள் இத்தலத்தில் நடைபெறுகின்றன.

    தலபுராணம் :

    பக்த பிரகலாதனுக் காக காட்சி கொடுத்த நரசிம்மரின் அவதாரத்தை தாங்களும் தரிசிக்க வேண்டுமென வாமதேவர், வசிஷ்டர், கத்யபர், அத்திரி, ஜமத்கனி, கவுதமர், பரத்வாஜர் ஆகிய சப்தரிஷிகளும் இங்கு வந்து தவமிருந்தனர். விஸ்வாமித்திரர் இத் தலத்தில் சிறிது நேரம் நரசிம்மனை வழிபட்டு வரம் பெற்றாராம். அதே போல் தங்களுக்கும் பெருமாளின் தரிசனம் கிடைக்க வேண்டும் எனும் ஆவல் கொண்டு அவர்கள் இங்கு தவமிருந்தனர்.

    ராமாவதாரம் முடிந்ததும் ஸ்ரீராமன் ஆஞ்சநேயரிடம், “இந்த மலையில் தவம் செய்யும் ரிஷிகளுக்கு அரக்கர்களால் இடைஞ்சல் ஏற்படுகிறது. அதைப் போக்கி வை’’ என்றார். அதன்படி ஆஞ்சநேயர் இங்கு வந்து காலன், கேயன் என்னும் இரு அரக்கர்களுடன் சண்டை செய்ய, அது முடியாமல் போனதால் ஸ்ரீராமனை வழிபட்டு அவரிடமிருந்து சங்கு, சக்கரங்களை பெற்று அதன் மூலம் அரக்கர்களை அழித்து ரிஷிகளை காப்பாற்றினார்” என்கிறது ஸ்தல புராணம்.

    கடைசியில் ரிஷிகளின் தவத்தினை மெச்சிய பெருமாள் அவர்களது விருப்பப்படி நரசிம்ம மூர்த்தியாக காட்சி கொடுத்தார். இந்த அவதாரத்தை தரிசித்துப் பூரித்த ஆஞ்ச நேயரிடம், ‘நீ எனக்கு முன்பாக கையில் சங்கு சக்கரத்துடன் யோகத்தில் அமர்ந்து என் பக்தர்களின் குறைகளை போக்கி அருள்வாயாக!’ என அருளினார்! அதன்படி நரசிம்மர் கோயில் உள்ள மலைக்கு அருகில் உள்ள சிறிய மலையலில் யோக ஆஞ்சநேயராக சங்கு சக்கரத்துடன் அருள்பாலித்து வருகிறார்.

    கார்த்திகை மாதம் மட்டும் அபிஷேக நேரம் மாறும் :

    சோளிங்கர் தலத்தில் நரசிம்மர், அமிர்த வல்லிதாயார் மற்றும் ஆஞ்சநேயருக்கு நடத்தப்படும் அபிஷேகங்கள் விசேஷமானதாக கருதப்படுகிறது. இந்த அபிஷேக ஆராதனையை நேரில் கண்டு தரிசிப்பது மிகுந்த புண்ணியத்தைத் தர வல்லது.

    நரசிம்மருக்கும், அமிர்தவல்லி தாயாருக்கும் பால், பஞ்சாமிர்தம், தயிர், இளநீர், தேன் உள்பட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது. மற்றமாத வெள்ளிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் 11 மணி வரை அபிஷேகம் நடத்துவார்கள். ஆனால் கார்த்திகை மாதம் வெள்ளிக்கிழமைகளில் இந்த அபிஷேகம் காலை 7 மணி முதல் 9 மணி வரை நடத்தப்படும் என்று ஆலய தலைமை அர்ச்சகர் ஸ்ரீதர் பட்டாச்சார்யார் தெரிவித்தார்.

    கார்த்திகையில் நடைதிறக்கும் நேரம் :

    கார்த்திகை மாதம் வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை 5 மணிக்கு நடைதிறந்து சுப்ரபாதம் பூஜை நடைபெறும். அது முடிந்ததும் தர்ம தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். காலை 7மணி வரை தர்ம தரிசனத்துக்கு அனுமதி உண்டு.

    காலை 7 மணி முதல் 9 மணி வரை அபிஷேகம் ஆராதனைகள் நடைபெறும். காலை 10 மணி முதல் பிற்பகல் 7 மணி வரை தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    அதன் பிறகு பிரார்த்தனை உற்சவம் நடைபெறும்.

    ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருக்கும் என்பதால் சனிக்கிழமை இரவு 2 மணிக்கே பெரியமலை கோவில் நடையைத்திறந்து விடுவார்கள். ஞாயிற்றுகிழமை மாலை 6.30 மணி வரை சாமி தரிசனம் செய்யலாம்.

    சிறிய மலையில் உள்ள ஆஞ்சநேயரை கார்த்திகை வெள்ளிக்கிழமைகளில் காலை 6 மணி வரை தரிசிக்கலாம். சனிக்கிழமைகளில் காலை 7 மணி முதல் மாலை 6.30 மணி வரை தரிசிக்கலாம்.

    ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

    விசேஷ உற்சவங்கள் விபரம் :

    சோளிங்கர் தலத்தில் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் உற்சவ விழாக்கள் விபரம் வருமாறு:-

    1. சித்திரை மாதம்:


    1.சித்திரை பெருந்திருவிழா, பத்து நாட்கள் நடைபெறும். தங்க கருட சேவை திருத்தேர். 2.இராமானுஜர் விழா 10 நாட்கள்.

    2.வைகாசி மாதம்:

    1.நரசிம்ம ஜெயந்தி, 2.வசந்த உற்சவம், 3.வைகாசி கருட சேவை தொட்டாசார் சவை, 4.நம்மாழ்வார் விழா 10 நாட்கள்.

    3.ஆனி மாதம்

    1.கோடைத்திருநாள் (3நாட்கள்),2.பரதத்துவ நிர்ணயம் கருட சேவை,3.ஆதிகேசவப்பெருமாளுக்கு வருஷ திருநட்சத்திரமான திருவோண விழா.



    4.ஆடி மாதம்

    1.ஆண்டாள் திருவாடிப்பூர விழா 10 நாட்கள் திருவாடிப் பூரத்தன்று திருக்கல்யாண புறப்பாடு. 2.ஆடி பவுர்ணமி கஜேந்திர மோட்சம் கருடசேவை. 3.ஜேஷ்டாபிஷேகம்(கவசம் களைந்து திரு அபிஷேகம் நடந்து பின் கவசம் அணிதல்).

    5.ஆவணி மாதம்

    1.திருப்பவித்ரோற்சவம்-7நாட்கள். பெரியமலையில் நடை பெறும்.2, ஸ்ரீஜெயந்தி- மறுநாள் உரியடி கண்ணனுக்கும் பெரு மாளுக்கும் நான்கு வீதி புறப்பாடு.

    6.புரட்டாசி மாதம்

    1.நவராத்திரி உற்சவம் 10-நாட்கள் பெருமாள், தாயார் இரு வருக்கும். 2. விஜயதசமி, குதிரை வாகனம்.

    7.ஐப்பசி மாதம்

    1.டோலோற்சவம் எனும் ஊஞ்சல் திருவிழா 5 நாள் நடை பெறும். 2.மணவாள மாமுனிகள் 10 நாள் உற்சவம்.3,கடை வெள்ளிக்கிழமை. 4,தீபாவளி ஆஸ்தானம். 5,வனபோஜனம்.

    8.கார்த்திகை மாதம்

    1. பெரியமலையில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் சிறியமலையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் உற்சவ புறப்பாடு. திருமஞ்சனம் முதலிய விசேஷம். 2.கார்த்திகை தீபத் திருவிழா- சொக்கப்பனை கொளுத்துதல்.3, திருமங்கையாழ்வார் 10 நாள் உற்சவம்.4, அனுமன் ஜெயந்தி சின்னமலையில் ஸ்ரீஆஞ்ச நேயருக்கு விசேஷ உற்சவம்.

    9. மார்கழி மாதம்:

    1. பகல் பத்து திருநாள், 2. வைகுண்ட ஏகாதசி, 3. முக்கோடி துவாதசி தீர்த்தவாரி உற்சவம், 4. இராப்பத்து திருநாள். இறுதி நாளில் நம்மாழ்வார் பரமபதம் புகும் திருவடி தொழும் விழா, 5. ஆண்டாள் மார்கழி நீராட்டம் 3 நாள் நடைபெறும். 6. ஜனவரி முதல் தேதி திருப்படித் திருவிழா

    10. தை மாதம்:

    1. பொங்கல்-சங்கராந்தி ஆண்டாள் திருக்கல்யாணம், 2. கனுப்பாரி (பரி) வேட்டை, 3. கிரி பிரதசட்னம், 4. தைப்பூசம், 5. தை அமாவாசை தொடங்கி தெப்பல் உற்சவம் 3 நாள் நடைபெறும்.

    11. மாசி மாதம்:

    1. தவன உற்சவம், 3 நாள், 2. மாசி உத்திரரடத் திருநாள் 10 நாள். (சுவாமி தொட்டாசார்- அவதார உற்சவம்), 3. மாசி மகம்- தெப்பல் உற்சவம் 3 நாள்.

    12 பங்குனி மாதம்:

    1. யுகாதி (அ) தெலுங்கு வருடப்பிறப்பு உற்சவம். பஞ்சாங்க சிரவணம், 2. பெரியமலையில் பங்குனி உத்திரத் திருக்கல்யாணம்.

    எப்படி செல்வது?

    சோளிங்கர் தலமானது வேலூர் மாவட்டத்தில் உள்ளது. திருத்தணி-சித்தூர் நெடுஞ்சாலையில் திருத்தணிக்கு 32 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு செல்ல அரக்கோணத்தில் இருந்து பேருந்து வசதி உண்டு.

    ஆலயத்தை தொடர்பு கொள்ள...

    சோளிங்கர் நரசிம்மர் ஆலய முகவரி:-
    உதவி ஆணையர் / செயல் அலுவலர்,
    அருள்மிகு லட்சுமி (யோக)
    நரசிம்ம சுவாமி திருக்கோவில்,
    சோளிங்கர்-631 102. வேலூர் மாவட்டம்.
    போன் : 04172- 262225, 263515.
    நாயனாருக்கு ஆயிரத்தில் ஒருவராக வந்து அமுதுண்ட இறைவன் ‘ஆயிரத்தில் ஒருவர்’ என அழைக்கப்படலானார். இந்த ஆயிரத்தில் ஒருவர் அருள்புரியும் ஆலயமே தான்தோன்றி அப்பர் ஆலயம்.
    காவிரி பாயும் வற்றாத வளம் கொழிக்கும் ஊர் ஆக்கூர். இங்கு 63 நாயன்மார்களில் ஒருவரான சிறப்புலி நாயனார் வசித்து வந்தார். இவர் சிறந்த வள்ளல். தன் இல்லம் நாடி வருபவர்களுக்கு இல்லை என்று கூறாது உணவு அளித்து உபசரிப்பவர். எத்தனை சிவனடியார்கள் வந்தாலும் அனைவருக்கும் மனம் கோணாது அமுது படைத்து வந்தார் சிறப்புலி நாயனார். அதனாலேயே சுந்தரர் இவரை ‘சீர்கொண்ட புகழ் வள்ளல்’ எனப் போற்றியுள்ளார்.

    நாயனார் ஒரு நாள் ஆயிரம் பேருக்கு அறுசுவை உணவூட்ட முடிவு செய்தார். ஆனால் ஒருவர் குறையவே நாயனார் மன வேதனை அடைந்தார். உள்ளம் உருக இத்தலத்து இறைவனான தான்தோன்றி அப்பரை வேண்டினார். அடியாரின் மன வேதனையை இறைவன் உணர்ந்தார். உடனே தானே சிவனடியார் வேடம் பூண்டு நாயனாரின் இல்லம் வந்தார். நாயனார் ஆயிரம் பேருக்கும் அமுது படைத்தார். பின் நாயனாருக்கு இறைவன் காட்சி தந்தார்.

    நாயனாருக்கு ஆயிரத்தில் ஒருவராக வந்து அமுதுண்ட இறைவன் ‘ஆயிரத்தில் ஒருவர்’ என அழைக்கப்படலானார். பின்னர் கார்த்திகை மாதம் பூராட நட்சத்திரத்தன்று சிறப்புலி நாயனாரை இறைவன் ஆட்கொண்டார். எனவே இந்த ஆலயத்தில் இன்றும் அந்த நட்சத்திர நாளில் சிறப்புலி நாயனார் வழிபாடு சிறப்புற நடந்து வருகிறது.

    இந்த ஆயிரத்தில் ஒருவர் அருள்புரியும் ஆலயமே தான்தோன்றி அப்பர் ஆலயம். இறைவன் தான்தோன்றியப்பர். இறைவியின் திருப்பெயர் வாள்நெடுங்கண்ணியம்மை. ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் உள்ள ராஜகோபுரத்தைக் கடந்ததும் விசாலமான வெளிபிரகாரம். எதிரே இறைவனின் ஆலயம் உள்ளது. முற்பிறவியில் சிலந்தியாக இருந்து யானை மேல் பகை கொண்டு உயிர்விட்டபின் இறைவன் ஆட்கொள்ள மறுபிறவியில் சோழ மன்னனாய் பிறந்தான். அந்த சோழ மன்னன் கோசெங்கோட்சோழன் யானை ஏற முடியாத எழுபது மாடக்கோவில்களை கட்டிய வரலாறு தெரிந்ததே. அந்த மாடக்கோவில்களில் இதுவும் ஒன்று.

    இறைவன் சன்னிதிக்கு நேரேயும், தென்புறத்திலும் படிகட்டுகள் உள்ளன. ஆலயம் 6 அடி உயரத்தில் அமைந்துள்ளது. சன்னிதிக்கு எதிரே நந்தியும் பலிபீடமும் உள்ளன. இந்த முகப்பு மண்டபத்தின் கிழக்கில் சிவசூரியன், பைரவர், காலபைரவர் திருமேனிகள் உள்ளன.

    அடுத்துள்ள மகா மண்டபத்தின் ஈசானிய மூலையில் நவக்கிரக நாயகர்கள் அருள்பாலிக்கின்றனர். மகாமண்டபத்தை அடுத்து உட்பிரகாரம் உள்ளது. பிரகாரத்தை வலமாக வந்தால் பாணலிங்கங்களும், அதை அடுத்து விசுவநாதர், விசாலாட்சி அம்மனும் உள்ளனர். அடுத்து இந்த ஊரில் பிறந்து இங்கேயே முக்தி அடைந்த, இறைவனுக்கு அமுது படைத்த சிறப்புலி நாயனார் உருவம் தனி சன்னிதியில் உள்ளது. அடுத்து நாவுக்கரசர், ஞான சம்பந்தர், சுந்தரமூர்த்தி சங்கிலியார், பாவை நாச்சியார் திருமேனிகள் உள்ளன. மேற்கு திருச்சுற்றில் கணபதியும், பாலமுருகன், அருணகிரி, கஜலட்சுமி, கயிலாய நாதரும், தெற்கில் பர்வதவர்த்தினி, வாயுலிங்கம், தேயுலிங்கம், அப்புலிங்கம் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.

    மகாமண்டபத்தில் சிறப்புலி நாயனாரின் சன்னிதிக்கு நேர் எதிரே தெற்கு நோக்கிய நிலையில் நாயனாருக்கு காட்சி கொடுத்த மூர்த்தியாகிய ஆயிரத்தில் ஒருவர் சன்னிதி உள்ளது. கையில் தண்டு ஊன்றிய நிலையில் காட்சி தருகிறார் இறைவன். இந்த மூர்த்தி செப்பு மேனியாகும். அர்த்த மண்டப நுழைவாயிலின் இருபுறமும் துவாரபாலகர்களின் உருவம் மாடத்தின் உள்ளே மிக அழகாக அமைந்துள்ளது.

    உள்ளே கருவறையில் இறைவன் தான்தோன்றியப்பர் லிங்கத் திருமேனியில் கீழ்திசை நோக்கி அருள்பாலிக்கிறார். லிங்கத்தின் மேல்பகுதி சற்றே பிளந்த நிலையில் காட்சி தருவது எங்கும் காணாத அமைப்பாகும். இந்த ஊருக்கு அருகே உள்ள திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரர் மார்க்கண்டேயனுக்காக எமனை சம்ஹாரம் செய்தபோது இந்த பாணம் வெடித்ததாக செவிவழி தகவல்.

    சோழமன்னன் காலத்தில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது இந்த ஆலயம். கோவில் கட்ட எண்ணி ஊர் மக்கள் இடத்தை தேர்வு செய்து அதை சமன் செய்த போது ஓரிடத்தில் மிகப்பெரிய ஒலி எழுந்தது. அந்த இடத்தை தோண்டி பார்த்த போது அங்கே சிவபெருமானின் லிங்கத்திருமேனி விண்ணொளியாகப் பிரகாசித்தது. அந்த இடத்திலேயே சோழ மன்னன் ஆலயம் கட்டினான். இறைவன் தானாகக் கிடைத்ததால் இறைவனுக்கு தான்தோன்றியப்பர் எனப் பெயரிட்டு அழைத்தனர். தரையை தோண்டிய போது லிங்கத்தின் மேல்பகுதி சற்றே பிளந்து இருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.

    இறைவனின் தேவகோட்டத்தில் அகத்தியர், நர்த்தனவிநாயகர் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை திருமேனிகள் உள்ளன. தவிர இந்த ஆலயத்தைக் கட்டிய கோசெங்கோட்சோழன் இறைவனை வழிபடும் நிலையில் உள்ள திருவுருவம் உள்ளது.

    இறைவன் ஆலயத்திற்கு வலதுபுறம் இறைவி வாள் நெடுங்கண்ணியின் ஆலயம் உள்ளது. இறைவியும் கீழ்திசை நோக்கியே அருள்பாலிக்கிறாள். இரண்டாம் ராஜாதிராஜன், மூன்றாம் ராஜேந்திரசோழன், பல்லவன், கோப்பெருந்சிங்கன், பாண்டியன் குலசேகரன் ஆகிய மன்னர்களின் கல்வெட்டு சாசனங்கள் இந்த ஆலயத்தில் உள்ளன.

    ஆலய வெளி திருச்சுற்றில் மேற்கில் விநாயகர் அருள்பாலிக்கிறார். அடுத்து தலவிருட்சமான சரகொன்றை மரம் தழைத்தோங்கி நிற்க அதனை அடுத்து சரஸ்வதி தேவியின் சன்னிதி உள்ளது. இங்கு சரஸ்வதி வீணையுடன் காட்சி தருகிறாள். அடுத்து முருகன், வள்ளி, தெய்வானையும் வடக்கில் சண்டீஸ்வரர் சன்னிதியும் உள்ளன.

    இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயத்திற்கு தினசரி மூன்று கால ஆராதனை நடக்கிறது. ஐப்பசியில் இறைவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுவதுடன் சிவராத்திரி, நவராத்திரி, திருவாதிரை, கந்தசஷ்டி, பங்குனி உத்திரம், கார்த்திகை என அனைத்து விசேஷ நாட்களிலும் இறைவன் இறைவிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

    ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    இத்தல இறைவன் இறைவியை ஆராதிப்பதால் திருமண தடை விலகுவதுடன் இத்தலம் ஒரு பரிகார தலமாகவும் விளங்குகிறது என்று பக்தர்கள் சொல்வது உண்மையே.
     
    அமைவிடம் :

    நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து திருக்கடையூர் செல்லும் நெடுஞ்சாலையில் 17 கி.மீ. தொலைவில் உள்ள ஆக்கூர் என்ற ஊரில் உள்ளது இந்த ஆலயம். மயிலாடுதுறை, காரைக்கால், சீர்காழி, திருக்கடையூர் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்து வசதி நிறைய உள்ளது.
     
    மகா பைரவர்- மகாபைரவியுடன் அருள்பாலிக்கும் தலமாகவும், பைரவப் பெருமான் சிவலிங்க ரூபமாக காட்சியளிக்கும் தலமாகவும் இந்த ஆலயம் திகழ்கிறது.
    ஆதியும் அந்தமும் இல்லாதவர் சிவபெருமான். இந்த பிரபஞ்சத்திலுள்ள ஜீவராசிகள் மட்டுமின்றி ஏனைய பிற இறை வடிவங்களையும் படைத்தவரும் அவரே. அசுரர்களால் உலகம் துன்பமடையும் பொழுதெல்லாம், சிவபெருமான் தனது அம்சமாகவும், வலிமைமிக்க ஞானமூர்த்தியாகவும் பைரவரை உருவாக்கினார் என்றும், எட்டுதிசைகளிலும் அவரை குடிகொள்ளச் செய்து உலகினைக் காக்கும் பொறுப்பை அளித்து, அதன் மூலம் அசுரர்களை வென்று உயிர்களுக்கு அமைதியளித்தார் என்றும் பைரவர் தோற்றத்தைப் பற்றி புராணங்கள் கூறுகின்றன.

    ‘பைரவர்’ என்றால் ‘பயத்தைப் போக்குபவர்’, ‘பாபத்தையும் இன்னல்களையும் நீக்குபவர்’ என்று பொருள். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் ஒடுக்குதல் ஆகிய முத்தொழில்களின் மூலமாக, பல கோடி உயிர்களை காப்பதற்காக படைக்கப்பட்ட பைரவருக்கு, சிவபெருமானின் கையில் இருக்கும் திரிசூலமே ஆயுதமாக வழங்கப்பட்டிருக்கிறது.

    படைத்தல் தொழிலை உடுக்கையும், காத்தல் தொழிலை கையில் உள்ள கபாலமும், அழித்தல் தொழிலை உடலில் பூசிய விபூதியும் குறிக்கும். பைரவரை, பூஜை செய்தால் மட்டுமே ஆபத்துகளில் இருந்து காப்பாற்றுவார் என்றில்லை. இக்கட்டான நேரத்தில் முழு மனதுடன் அவரை நினைத்தாலே போதும். நம்மை துன்பங்களில் இருந்து உடனடியாக காப்பார்.

    பைரவர் தோற்றம் :
     
    பைரவர் தோன்றியது பற்றி இருவிதமான வரலாறுகள் கூறப்படுகின்றன. பெண்கள் பலவீனமானவர்கள் என்று கருதிய தானகாசுரன் என்னும் அசுரன், ‘பெண்களால் மட்டுமே எனக்கு மரணம் நிகழ வேண்டும்’ என்ற வரத்தைப் பெற்றான்.

    அந்த வரத்தின் காரணமாக, பிரம்மதேவன் முதலான தேவர்களை அவன் துன்புறுத்தினான். அவனது கொடுமையில் இருந்து விடுபட, தேவர்கள் அனைவரும் சிவபெருமானை வேண்டினர். சிவபெருமானும் தனது அம்சமான காளியைத் தோற்றுவித்து, தானகாசுரனை அழிக்க கட்டளையிட்டார். அதன்படியே அசுரனை அழித்த காளி, அதன் பிறகும் கோபத் தீயுடன் உலகெங்கும் சுற்றித் திரிந்தாள். அவளது கோபத் தீயினால், உலக உயிர்கள் அனைத்தும் துன்பமடைந்தன.

    இதையடுத்து மாயையை, ஒரு பாலகன் உருவில் இடுகாட்டில் கிடந்து அழும்படி செய்தார் ஈசன். அங்கு வந்த காளி, குழந்தையை தூக்கி அணைத்து பால் கொடுத்தாள். காளியிடம் பால் குடித்த அந்தக் குழந்தை, பாலுடன் காளியின் கோபத் தீயையும் சேர்த்து பருகியது. அதனால் காளியின் கோபம் தணிந்து, உலக உயிர்கள் காப்பாற்றப்பட்டன.

    காளியின் கோபத்தைத் தணித்த குழந்தை ‘ஷேத்திரபாலர்’ என்று அழைக்கப்பட்டது. ‘ஷேத்திரம்’ என்றால் ‘மண்’ என்று பொருள். மண்ணில் கிடந்த பாலகன் என்பதால், ‘ஷேத்திரபாலர்’ அதாவது ‘மண்ணின் மைந்தர்’ என்று அழைக்கப்பட்டார். நாய் வாகனத்தின் மீது அமர்ந்திருக்கும் அந்த ஷேத்திரபாலரே, பைரவர் திருவடிவம் என்று லிங்க புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அந்தகாசுரன் என்னும் அசுரன், சிவபெருமானை நினைத்து பஞ்சாக்கினி வளர்த்து கடுந்தவம் செய்தான். அதன் வாயிலாக சிவபெருமானிடம் இருந்து எண்ணற்ற வரங்களைப் பெற்றான். பின்னர் தேவர்களை வென்றான். தோல்வியுற்ற தேவர்களை, பெண்களின் ஆடையை அணிந்து கொண்டு தனக்கு சேவகம் செய்யும்படி கூறி அவமதித்தான்.

    அசுரனின் கொடுமையை தாங்க முடியாத தேவர்கள், பெண் வேடத்துடனேயே சிவபெருமானைச் சந்தித்து, தங்கள் இன்னல்களை அகற்றும்படி வேண்டினர். அவர்களின் துயரம் கேட்டு சிவபெருமான் கோபம் கொண்டார். அவர் அடைந்த உக்கிரத்தால் உடல் வெப்பமாகி, நெற்றியில் வியர்வை உருவானது. அந்த வியர்வையில் இருந்து மகா பைரவர், அதிஉக்கிரத்துடன் தோன்றினார். அந்தகாசுரன் மீது போர் தொடுத்து, தனது சூலாயுதத்தில் அவனை குத்தித் தூக்கியவாறு, மூன்று உலகங்களிலும் வலம் வந்தார் என்பது மற்றொரு வரலாறு.



    இதுபோல் அநேக அசுரர்கள் தோன்றும் போதெல்லாம், சிவ பெருமான் அநேக பைரவர்களைத் தோற்றுவித்து அவர்களை அழித்தார். பொதுவாக சிவாலயங்களில் பைரவரின் திருவுருவம் ஆலயத்தின் வடகிழக்கு திசையில் இடம்பெற்றிருக்கும். தவிர அஷ்ட பைரவர்கள் தனித்தனியாகவும், ஒன்றாகவும் பல ஆலயங்களில் இடம்பிடித்திருப்பார்கள். இருப்பினும் சிவபெருமானால் முதன்முதலாக உருவாக்கப்பட்டவரும், அஷ்ட பைரவர்களை உருவாக்கியவருமான ஆதி மகாபைரவ மூர்த்திக்கான ஆலயம் சோழவரம் என்ற ஊரில் இருக்கிறது.

    இவ்வாலயம் பல சிறப்புகளைக் கொண்டுள்ளது. மகாபைரவர் பூவுலகில் முதன்முதலில் தம் திருவடிகளை எடுத்து வைத்த புண்ணிய பூமியாகவும், மகா பைரவர்- மகாபைரவியுடன் அருள்பாலிக்கும் தலமாகவும், பைரவப் பெருமான் சிவலிங்க ரூபமாக காட்சியளிக்கும் தலமாகவும் இந்த ஆலயம் திகழ்கிறது.

    மூலவரின் திருநாமம் மகா பைரவேஸ்வரர் என்பதாகும். அம்பாளின் திருநாமம் மகா பைரவேஸ்வரி. உற்சவர்களின் திரு நாமம் கல்யாண பைரவர், கல்யாண பைரவி. எட்டு அல்லது அதற்கு மேலான எண்ணிக்கை கொண்ட இலைகள் கொண்ட வில்வ மரம் தல விருட்சமாக உள்ளது. ஆலய தீர்த்தம் ‘பைரவ அமிர்த தீர்த்தம்’ ஆகும். திராவிட கட்டிடக் கலையம்சத்துடன் கட்டப்பட்டுள்ள இந்த ஆலயம், ராஜராஜசோழன் காலத்தில் கட்டப்பட்டதாக சொல்லப்பட்டாலும், அதற்கான ஆதாரம் எதுவும் இல்லை.

    அகத்திய மகரிஷி இந்த ஆலய மகா பைரவரை வணங்கி வழிபட்டுள்ளார். அஷ்டதிக்கு பாலகர்களும், அஷ்டவசுக்களும் இவ்வாலய இறைவனை வணங்கி பேறு பெற்றள்ளனர். இந்தத் திருத்தலம் உள்ள சில பகுதிகளை தாங்கியும், புறவெளி சுத்திகரிப்பு பணியையும் அஷ்டதிக்கு பாலகர்களும், அஷ்ட வசுக்களும் செய்து வருகின்றனர். எனவே இத்தலம் வாஸ்து சக்தி நிறைந்ததாக விளங்குகிறது. வாராந்தி வாஸ்து நாளான செவ்வாய்க்கிழமைகளிலும், வருடத்தின் எட்டு வாஸ்து நாட்களிலும் இந்த ஆலயத்தில் வாஸ்து பூஜை செய்யப்படுகிறது. புதிய வீடு கட்டுபவர்கள் அதுபோன்ற நாட்களில் இங்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

    ஆலய அமைப்பு :

    கிழக்கு நோக்கிய இந்த ஆலயம், தரைமட்டத்தில் இருந்து உயர்த்தப்பட்ட பீடத்தில் விமானம் வரை கருங்கல்லால் கட்டப்பட்ட கற்றளி ஆகும். செப்புக்காப்பு செய்யப்பட்ட படிக்கட்டு வழியே மேலேச் சென்றால், மகாநந்தி, உச்சிஷ்ட கணபதியும், வள்ளி - தெய்வானை சமேத முருகப்பெருமானும் உள்ளனர். இவர்களுக்குப் பின்புறம் சிவலிங்க ரூபத்தில் மகா பைரவர் அருள்பாலிக்கிறார். மூலவருக்கு இடதுபுறத்தில் மகா பைரவி தென்திசை நோக்கி வீற்றிருந்து அருள்புரிகிறார்.

    பிரகார சுற்றில் தெற்கில் விநாயகர், பிரளய காலமூர்த்தி, நடராஜர், முருகப்பெருமான், தட்சிணாமூர்த்தி ஆகியோரும், மேற்கில் லிங்கோத்பவர், வடக்கில் பிரம்மா, காலபைரவர், அர்த்த நாரீஸ்வரர், துர்க்கை, கங்காவிஜர்ணமூர்த்தி ஆகியோரது திருவுருவங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று, இவ்வாலயத்தில் சிறப்பு பூஜை வெகு விமரிசையாக நடைபெறுகிறது. கார்த்திகை மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி காலபைரவ அஷ்டமியாக கொண்டாடப்படுகின்றது. அன்றையதினம் எட்டுவிதமான அபிஷேகங்களுடன் சிறப்பு பூஜைகளும், திருக்கல்யாணமும், வீதியுலாவும் நடத்தப்பெறுகிறது.

    அமைவிடம் :

    விக்கிரவாண்டியில் இருந்து தஞ்சாவூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திருப்பனந்தாளில் இருந்து 6 கிலோமீட்டர் தெற்காகவும், கும்பகோணத்தில் இருந்து 12 கிலோமீட்டர் வடக்காகவும் உள்ளது சோழவரம். இந்த ஊரின் சாலையோரத்திலேயே ஆலயம் இருக்கிறது. சென்னை, கும்பகோணம், வடலூர், காட்டுமன்னார்கோயில், ஜெயங்கொண்டம் ஆகிய ஊர்களிலிருந்து அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளன. ஆலயத்தின் அருகில் உள்ள ரெயில் நிலையம் கும்பகோணம் ஆகும்.
    திருமணத் தடை இருப்பவர்கள் கேரள மாநிலம், ஆரியங்காவு என்னும் இடத்தில் அமைந்திருக்கும் சாஸ்தாவான ஐயப்பனை வந்து வழிபட்டுத் திருமணத் தடை நீங்கப் பெறலாம்.
    கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், ஆரியங்காவு என்னும் இடத்தில் அமைந்திருக்கும் தலத்தில் சாஸ்தாவான ஐயப்பன், புஷ்கலையைத் திருமணம் செய்து குடும்பத்தினராகக் காட்சி தருகிறார். திருமணத் தடை இருப்பவர்கள், இங்கு வந்து வழிபட்டுத் திருமணத் தடை நீங்கப் பெறலாம்.

    தல வரலாறு :

    பரசுராமர் தான் தோற்றுவித்த கேரளாவின் பாதுகாப்புக்காகவும், செழிப்புக்காகவும் கடலோரங்களில் பத்ரகாளியம்மன் கோவில்களையும், மலைப்பகுதிகளில் சாஸ்தா கோவில்களையும் நிறுவினார் என்று சொல்லப்படுகிறது. பரசுராமர் மலைப்பகுதிகளில் குளத்துப்புழா, ஆரியங்காவு, அச்சன்கோவில், சபரிமலை, காந்தமலை (பொன்னம்பல மேடு) ஆகிய ஐந்து இடங்களில் சாஸ்தாவிற்கான கோவில்களை நிறுவியிருக்கிறார். அவற்றில் ஆரியங்காவு சாஸ்தா கோவிலும் ஒன்றாக இருக்கிறது என்று தல வரலாறு கூறுகிறது.

    ஐயப்பன் திருமணம் :

    சபரிமலை ஐயப்பன் கோவிலைப் போன்று, இந்தக் கோவிலில் இருக்கும் ஐயப்பன் பிரம்மச்சாரியாக இல்லாமல், புஷ்கலையைத் திருமணம் செய்து குடும்பத்தவராகக் காட்சி தருகிறார். இங்கிருக்கும் ஐயப்பனுக்குத் திருமணம் நடந்தது பற்றி சுவையான கதை ஒன்று இருக்கிறது.

    மதுரையைச் சேர்ந்த சவுராஷ்டிரா வகுப்பினர், திருவிதாங்கூர் மகாராஜாவின் அரண்மனைக்குத் தேவையான துணிகளை நெசவு செய்து கொண்டு போய் விற்பனை செய்து வந்தனர். அப்படிச் சென்ற வணிகர்களில் ஒருவர், ஒரு முறை தனது மகள் புஷ்கலையையும் உடன் அழைத்துக் கொண்டு திருவிதாங்கூர் சென்றார். அவருக்கு மகள் புஷ்கலையைக் காட்டுப் பகுதிக்குள் அழைத்துச் செல்வது மிகவும் கடினாமக இருந்தது.

    அவர்கள் இருவரும் ஆரியங்காவு கணவாய்ப் பகுதிக்கு வந்து சேர்ந்தனர். புஷ்கலை அதற்குள்ளாகவே மிகவும் களைத்துப் போயிருந்தார். இனி அவளை திருவிதாங்கூருக்கு அழைத்துச் செல்ல முடியாது என்று நினைத்த அந்த வணிகர், அங்கிருந்த சாஸ்தா கோவிலின் தலைமை அர்ச்சகரைச் சந்தித்து, தான் திருவிதாங்கூர் சென்று திரும்பி வரும் வரை, தனது மகளைப் பாதுகாப்பாகப் பார்த்துக் கொள்ளும்படி சொல்லி ஒப்படைத்துச் சென்றார்.

    சாஸ்தா கோவிலின் தலைமை அர்ச்சகரின் வீட்டில் தங்கிய புஷ்கலை, சாஸ்தா கோவிலுக்குத் தேவையான சில பணிகளைச் செய்து வந்தார். நாளடைவில், அவளது மனத்தில் அந்தக் கோவிலில் இருக்கும் சாஸ்தாவையேத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கியது.

    இந்நிலையில், புஷ்கலையின் தந்தை திருவிதாங்கூர் சென்று துணிகளை விற்பனை செய்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார். வரும் வழியில் அவரை, மதம் பிடித்த யானை ஒன்று விரட்டத் தொடங்கியது. அதனைக் கண்டு பயந்த அவர் வேகமாக ஓடத் தொடங்கினார். அப்போது அங்கு வந்த ஒரு இளைஞன், அந்த மத யானையை அடக்கி அவரைக் காப்பாற்றினான்.

    தன்னைக் காப்பாற்றிய இளைஞனுக்கு நன்றி தெரிவித்த அவர், அந்த இளைஞனுக்கு என்ன வேண்டுமென்று கேட்டார். அந்த இளைஞன், ‘உங்கள் மகளை எனக்குத் திருமணம் செய்து தாருங்கள்’ என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து சென்று விட்டான். அதன் பிறகு, வணிகர் ஆரியங்காவு வந்து சேர்ந்தார்.

    ஆரியங்காவிலுள்ள சாஸ்தா கோவிலுக்குச் சென்ற வணிகருக்கு, கோவில் கருவறையிலிருந்த சாஸ்தாவின் உருவம், காட்டில் மதயானையிடம் இருந்து தன்னைக் காப்பாற்றிய இளைஞரின் உருவமாகத் தெரிந்தது. தனது மகளைத் திருமணம் செய்து கொள்ள விரும்பியே சாஸ்தா, காட்டிற்குள் மதம் பிடித்த யானையைக் கொண்டு, நம்மை ஓடச் செய்து, காப்பாற்றியிருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டார்.

    அதன் பிறகு வணிகர், அந்தக் கோவில் அர்ச்சகரிடம் காட்டில் நடந்த கதையைச் சொல்லித் தன் மகள் புஷ்கலையை சாஸ்தாவிற்குத் திருமணம் செய்து கொடுக்கப் போவதாகச் சொன்னார். அர்ச்சகரும், கோவில் உயர் அதிகாரிகளுக்கு அந்தத் தகவலைத் தெரிவித்து வரச் செய்தார். வணிகரும், தனது ஊரான மதுரையிலிருந்து தனது உறவினர்களை வரச் செய்தார்.

    அதன் பிறகு, சாஸ்தாவிற்கும் புஷ்கலைக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சாஸ்தாவான ஐயப்பன், புஷ்கலையை மனைவியாக ஏற்றுத் தன்னுடன் ஆட்கொண்டார் என்று இக்கோவிலில் ஐயப்பன், புஷ்கலை திருமணம் நடந்த கதை மரபு வழியாகச் சொல்லப்பட்டு வருகிறது.

    புஷ்கலையுடன் ஆரியங்காவு ஐயப்பன்

    கோவில் அமைப்பு :

    கேரளக் கட்டுமான அமைப்புடன் அமைந்த இக்கோவில் கருவறையில், ஐயப்பன் வலது காலைக் கீழே ஊன்றியும், இடது காலைச் சிறிது உயர்த்தியும் வைத்து அமர்ந்த நிலையில் அரசர் தோற்றத்தில் இருக்கிறார். இவருக்கு வலது புறம் சிவபெருமான் லிங்க வடிவிலும், இடதுபுறம் புஷ்கலை நின்ற நிலையிலும் இருக்கின்றனர். இக்கோவில் வளாகத்தில், நாகராஜர், கணபதி, வலியக்கடுத்தா கருப்பசாமி, கருப்பாயி அம்மாள் ஆகியோரும் துணைக் கடவுள்களாக இருக்கின்றனர்.

    வழிபாடுகள் :

    இங்கு ஐயப்பனுக்குரிய அனைத்துச் சிறப்பு நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. ஐயப்பன் மண்டல வழிபாட்டு நாட்களில், சபரிமலையில் நடக்கும் நிகழ்ச்சி நிரலை அடிப்படையாகக் கொண்டு இக்கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். இங்கு ஆண்டுதோறும், மலையாள நாட்காட்டியின்படி, தனு (மார்கழி) மாதத்தில் ஐயப்பன் - புஷ்கலை திருமண விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின் முதல் நாளில் பாண்டியன் முடிப்பு எனப்படும் நிச்சயதார்த்த நிகழ்வும், தாலிப்பொலி ஊர்வலம் எனும் மாப்பிள்ளை அழைப்பு நிகழ்வும், சமபந்தி விருந்தும் மிகச் சிறப்பாக நடத்தப் பெறுகின்றன.

    திருமணத்தடை இருப்பவர்கள், இங்கிருக்கும் சாஸ்தாவை வழிபட்டு வேண்டினால், அவர்களுக்குத் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடை பெறும் என்பது இங்கு வந்து செல்லும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

    ஆரியங்காவு பெயர்க்காரணம் :

    ‘ஆரியன்’ என்ற சொல்லுக்கு ‘உயர்ந்தவன்’ என்று பொருள். ‘காவு’ என்றால் ‘சோலை’ என்று பொருள். ‘உயர்ந்தவன் குடியிருக்கும் சோலை’ என்ற பொருளில், இவ்விடம் ‘ஆரியன் காவு’ என்று அழைக்கப்பட்டு, பின்னர் ‘ஆரியங்காவு’ என்று மருவி இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

    ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம் :

    கேரள மாநிலம், கொல்லம் நகரில் இருந்து 73 கிலோமீட்டர் தொலைவிலும், புனலூர் நகரில் இருந்து 33 கிலோமீட்டர் தொலைவிலும், தமிழ்நாட்டிலுள்ள செங்கோட்டை நகரில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவிலும் ஆரியங்காவு உள்ளது. இங்கு செல்ல மேற்கண்ட ஊர்களில் இருந்து ஏராளமான பஸ் வசதி இருக்கிறது.

    கருவறை வாசலை திரையிட்டு மூடியுள்ள அதிசயக் கோவில், அருணகிரிநாதர் திருப்புகழ் பாடிய திருத்தலம், என பல்வேறு சிறப்புக்கள் கொண்ட தலமாக விளங்குவது, இலங்கை நாட்டின் புகழ்பெற்ற கதிர்காமம் கந்தன் திருக்கோவில் ஆகும்.
    வள்ளியை மணந்த கந்தன் விரும்பிய திருத்தலம், கருவறை வாசலை திரையிட்டு மூடியுள்ள அதிசயக் கோவில், அருணகிரிநாதர் திருப்புகழ் பாடிய திருத் தலம், புத்தர் தவம் இயற்றிய புனித பூமி, அசோக மன்னனின் மகள் சங்கமித்தை வெள்ளரசு நட்ட பூமி என பல்வேறு சிறப்புக்கள் கொண்ட தலமாக விளங்குவது, இலங்கை நாட்டின் புகழ்பெற்ற கதிர்காமம் கந்தன் திருக்கோவில் ஆகும்.

    தொன்மைச் சிறப்பு :


    முருக வழிபாட்டில் மூர்த்தி, தலம், தீர்த்தம் கொண்ட இலங்கையின் புகழ்பெற்ற முருகன் தலமாக விளங்குவது கதிர்காமம் திருத்தலம் ஆகும். இது கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் புத்தர் தியானம் செய்த பதினாறு தலங்களில் ஒன்று என்ற பெருமையைப் பெற்றுள்ளது. அசோகரின் மகளான சங்கமித்தை புத்த கயாவில் இருந்து புனித வெள்ளை அரசு மரக்கன்றைக் கொண்டுவந்து நட்டதை ‘மகா வம்சம்’ என்ற சிங்கள நூல் குறிப்பிடுகிறது.

    கந்தப்பெருமானின் புனிதத்தலமாக கதிர்காமம் விளங்கியதை இலக்கியங்களும், புராணங்களும் கூறுகின்றன. கதிர்- ஒளி, காமம்-அன்பு என்பது பொருளாகும். ஆறு கதிர்ப்பொறிகளால் தோன்றிய முருகப்பெருமான், வள்ளியம்மை மீது காதல் கொண்டு, மணம் புரிந்த இடமாதலால் ‘கதிர்காமம்’ என்பது பொருத்தமான பெயராகவே அமைந்து விட்டது.

    ஏமகூடம், பூலோகக் கந்தபுரி, வரபுரி, பிரமசித்தி, கதிரை எனப் பல்வேறு பெயர்களால் இன்றைய கதிர்காமம் வழங்கப்படுகிறது. அதேபோல முருகப்பெருமானும் கதிர்காமசுவாமி, கதிரைநாயகன், கதிரைவேலன், மாணிக்க சுவாமி, கந்தக்கடவுள் எனப் பல்வேறு திருநாமங்களால் அழைக்கப்படுகிறார்.

    புராண வரலாறு :

    சூரபதுமனை வதம்செய்யும் நோக்கில், முருகப்பெருமான் கதிர்காமத்தை அடைந்தார். இங்கு ஓடும் மாணிக்க கங்கை நதி அருகே பாசறை அமைத்து வீற்றிருந்தார். இப்பகுதி ‘ஏமகூடம்’ என வழங்கப்பட்டது. சூரபதுமனை வதம் செய்து வென்று, நவகங்கைத் தீர்த்தம் உண்டாக்கி, தேவர்கள் வணங்குவதற்கு எழுந்தருளினார் என, தட்சிண கைலாச புராணம் குறிப்பிடுகிறது.

    தெய்வயானையை மணம் முடித்த பின், வள்ளிமலையில் வள்ளியம்மையை மணம்புரிந்த முருகப்பெருமான் திருத்தணிகையில் அமர்ந்தார். பிறகு தாம் விரும்பும் தலம் கதிர்காமமே என்று தன் துணையான இருவரிடமும் கூறி, கதிர்காம கிரியை அடைந்து, அன்பர்களுக்கு அருள் வழங்குகின்றார் என தட்சிண கைலாசபுராணம் கூறுகிறது.

    வேடுவர்கள் பகுதியான இதுவே வள்ளி வாழ்ந்த தலம் என்று சொல்கிறார்கள். இங்கே வள்ளி தினைப்புனம் காத்த இடம், முருகன் மரமாக நின்ற இடம் என பல்வேறு இடங்களை அதற்குச் சான்றாக அடையாளம் காட்டுகின்றனர் இப்பகுதியினர்.

    தல வரலாறு :

    ‘யாழ்ப்பாண வைபவ மாலை’ என்ற நூலும், ‘மகாவம்சம்’ என்ற சிங்கள வரலாற்று நூலும் கதிர்காமம் குறித்து குறிப்பிட்டுள்ளன. கி.மு. 500-ல் விஜயன் என்ற மன்னன், கதிரை வேலனுக்குக் கோவில் அமைத்ததாக யாழ்ப்பாண வைபவ மாலை கூறுகிறது.

    கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அசோக மாமன்னனின் மகளான சங்கமித்தைப் புனித வெள்ளரசுக் கன்றை, அனுராதபுரத்தில் நட்ட பின்பு, இரண்டாவதாக கதிர்காமத்தில் நட்டார். அந்த ‘கிரிவிகாரை’ என்ற ‘பவுத்தவிகார்’, முருகன் ஆலயத்தின் அருகே அமைந்துள்ளது. இதனை மக்கள் ‘சூரன் கோட்டை’ என அழைக்கின்றனர்.

    எல்லாளன் என்ற தமிழ் வேந்தனை வெற்றி கொள்ள விரும்பிய துட்டகெமுனு என்ற சிங்கள மன்னன், கதிர்காமத்து கந்தனிடம் வேண்டுதல் வைத்து விரதமிருந்தான். அதன்படியே, கந்தன் அருளால் வெற்றி பெற்றான். அதற்கு நன்றிக்கடனாக கி.மு. 101-ம் ஆண்டில் கந்தனுக்குத் தனிக்கோவில் எழுப்பினான் என, ‘கந்த உபாத’ என்ற சிங்கள நூல் கூறுவதாக பொன். அருணாசலம் குறிப்பிட்டுள்ளார்.

    இலங்கையில் சோழர் ஆட்சியில் சிறைப்பட்டிருந்த சிங்கள மன்னன் ஐந்தாம் மகேந்தரனும், அவன் மனைவியும் கதிர்காமத்தானிடம் விடுதலை வேண்டி விரதமிருந்தனர். கந்தன் கருணையால் சோழமன்னனைத் துரத்தியதாக மகாவம்சம் குறிப்பிடுகிறது. இதன் வாயிலாக கந்தனின் அருள்சக்தியை மகாவம்சம் என்ற சிங்கள நூல் ஏற்றுக்கொண்டுள்ளதை நம்மால் அறிய முடிகிறது.

    இத்திருக்கோவில், கி.பி. 1581-ம் ஆண்டில் முதலாம் ராஜசிம்மனால் கட்டப்பட்டதாக ஆய்வாளர் வ.குமாரசுவாமி குறிப்பிடுகின்றார். அதே நேரம் கி.பி.1634-ல் இரண்டாம் ராஜசிங்கனால் கட்டப்பெற்றதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    ஆலய அமைப்பு :

    கதிர்காம ஆலயத்தில், நம்நாட்டு கோவில் போல, ராஜகோபுரம், முன்மண்டபம், மகாமண்டபம், கருவறை எனும் எதுவும் கிடையாது. கோவிலின் முகப்பில் ஒரு வளைவு உள்ளது. அதிலும் சிங்கள மொழியில் எழுதியுள்ளார்கள். ஆங்கிலத்திலும், தமிழிலும் சிறிய எழுத்துக்களால் பெயர் எழுதப்பட்டு உள்ளது.

    வலதுபுறம் விநாயகர் சன்னிதி, அருகே பெருமாள் சன்னிதி என்று கூறப்படும் இடத்தில் புத்தர்சிலை உள்ளது. முருகன் சன்னிதியின் இடதுபுறம், சற்றுத் தள்ளி தெய்வானை சன்னிதி கிழக்கு முகமாய் அமைந்துள்ளது. இதன் வழிபாடுகளைத் தமிழர்கள் கவனிக்கின்றனர். கதிர்காமர் சன்னிதி தெற்கு நோக்கியும், வள்ளியம்மன் சன்னிதி வடக்கு நோக்கி, எதிரெதிர் பார்வையில் அமைந்துள்ளன. தெய்வயானை சன்னிதி கிழக்கு நோக்கி இருக்கிறது.

    கதிர்காமத்து திருத் தலம் நான்கு பிரிவுகளாக அமைந்துள்ளது. முதல் பிரிவில் கதிர்காமர் கோவில், வள்ளியம்மன் கோவில், கண்ணகியம்மன் கோவில் இருக்கிறது. இம்மூன்றும் பவுத்தமத கோவில் பரிபாலன சட்டப்படி நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது. இரண்டாவது பிரிவில் மாணிக்கப் பிள்ளையார் கோவில், தெய்வானை அம்மன் கோவில், பைரவர் கோவில், முத்துலிங்கசுவாமி கோவில், கதிரை மலையில் ஐந்து கி.மீ. தொலைவில் உள்ள பழைய கதிர்காமம் எனும் செல்லக் கதிர்காமம் மற்றும் பிள்ளையார் கோவில், கதிரைமலை இவை அனைத்தும் பாபாக்களின் நிர்வாகத்தில் இயங்குகின்றன. மூன்றாம் பிரிவில் கிரிவிகாரை, பெருமாள் கோவில் ஆகியவை பவுத்த குருமார்களால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. நான்காவது பிரிவில் சோனகருடைய பள்ளிவாசல் அமைந்துள்ளது.

    பொதுவாக, கருவறையில் உள்ள தெய்வ வடிவங் களைத் தரிசிக்கும் விதமாக இருப்பதே வழக்கம். ஆனால் இங்கே கருவறையைக் காண இயலாதபடி, கருவறை வாசலை வண்ணத் திரையிட்டு மூடியிருக்கின்றனர். திரையில் வள்ளி, தெய்வானை சமேத கந்தனின் ஓவியம் வரையப்பட்டிருக்கிறது. இங்கு பூஜை செய்பவர்களை ‘கப்புராளைமார்’ என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் நாம் தரும் அர்ச்சனைப் பொருட்களைப் பெற்றுக் கொண்டு திரைக்குள் சென்று முருகனுக்கு சமர்ப்பித்து, மீண்டும் நம்மிடம் திருப்பித் தருகின்றனர். எவ்வளவு பெரிய மனிதரானாலும், திரையை விலக்கி காண இயலாது. திரைமீது உள்ள வடிவத்தை மட்டுமே தரிசித்து வரவேண்டும்.

    கதிர்காமத்துக் கந்தனின் புகழைக் கேள்விப்பட்டு, பெரிய எதிர்ப்பார்ப்புடன் செல்லும் நமக்கு அவரைக் காண இயலாததும், கோவில் எளிய வடிவத்தில் அமைந்திருப்பதும் சற்று ஏமாற்றமாகத்தான் உள்ளது. என்றாலும், இவரின் சக்தியும், அருளாற்றலும் அதை ஈடுசெய்து விடுகிறது.

    திருவிழாக் காலங்களில் சன்னிதிக்குள் இருந்து, என்னவென்று அறிய முடியாத ஒரு பொருளை பெரிய துணியில் மூடி, யானை மீது உள்ள பெட்டியில் வைத்து இறுகக் கட்டி விடுகின்றனர். இது முத்துலிங்க சுவாமி அமைத்த எந்திரம் என்று கூறுவோரும் உண்டு. அப்பெட்டி வள்ளியம்மை கோவிலுக்குச் சென்று திரும்பி வரும்.

    எந்தக் கோவிலிலும் இல்லாத வழக்கமாக, இந்த ஆலய கருவறை எப்போதும் திரையிட்டபடியே இருக்கிறது. இதற்குப் பல்வேறு யூகங்கள் கூறப்படுகின்றன. திருப்புகழில் வரும் ‘கனக மாணிக்க வடிவனே மிக்க கதிர்காமத்தில் உறைவோனே’ என்ற வரிகளை வைத்து பார்த்தால், மாணிக்கத்தால் செய்த விலை மதிப்பற்ற திருவுருவம் உள்ளே இருப்பதை உணர முடிகிறது. கதிர்காமத்தை தரிசனம் செய்த டாக்டர் டேவி என்பவரின் கூற்றில், கதிர்காமத்து திருவுருவம் காட்டில் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

    சிங்களவர்களின் ஆட்சியின் கீழ் வரும் வரை, தமிழர்களால் சைவ முறைப்படி முருகப்பெருமானின் திருவுருவத்தோடு பூஜைகள் நடந்து வந்தன. இதன்பின் சிங்களவரிடம் கோவில் கை மாறியது. ஆனால் அவர்களுக்கு நமது வழிபடும் முறைகள் தெரியாததால், கருவறையைத் திரையிட்டனர் என்று கூறப்படுகிறது. மொத்தத்தில் கருவறை வாசலை மறைத்து தொங்கும் திரைசீலையின் மீது ஓவியமாக விளங்கும் வள்ளி -தெய்வானை சமேத கந்தனையே வழிபட வேண்டியுள்ளது.

    முத்துலிங்க சுவாமி :

    காஷ்மீரில் இருந்து கதிர்காமத்திற்கு வந்தவர், கல்யாணகிரி ஆவார். இவர் இங்கு பன்னிரண்டு ஆண்டுகள் தவமியற்றி இத்தலத்திலேயே சமாதி அடைந்தார். இவரே முத்துலிங்க சுவாமி என அழைக்கப்படுகிறார். இவர் ஆகர்ஷணம் செய்து தந்த யந்திரம் தான் மூலஸ்தானப் பேழையில் வைக்கப்பட்டிருக்கிறது என்று சொல்கிறார்கள்.

    இதேபோல, இந்தியாவில் இருந்து வந்த கேசவபுரி என்ற பால்குடி பாவா என்ற மகானும் இத்திருக்கோவிலில் தவமியற்றி சமாதியடைந்துள்ளார்.

    கண்டியும்.. கதிகாமமும்.. :

    இத்தலத்தைக் ‘கண்டி கதிர்காமம்’ என்று சொல்வது, இந்தியாவில் வழக்கமான ஒன்றாக அமைந்துள்ளது. கண்டியில் புத்தரின் புனிதப்பல்லைக் கொண்ட கோவில் பிரசித்தி பெற்றது. அதேபோல், கதிர்காமத்தில் கந்தப்பெருமானின் கோவில் புகழ்பெற்றது. இரண்டு இடங்களுக்கும் உள்ள தூரம் 210 கி.மீ. ஆகும். ஆகவே, கண்டி வேறு, கதிர்காமம் வேறு என்பதை நாம் நினைவில் கொள்வது நல்லது. இந்தியாவில் காசி -ராமேஸ்வரம் என்ற சொல் வழக்கு போல, கண்டி- கதிர்காமம் என்ற சொல் வழக்கு ஏற்பட்டிருக்கலாம்.

    அமைவிடம் :

    இலங்கை நாட்டின் தென்பகுதியில், ஊவா மாகாணத்து புத்தல பிரிவில், தீயனகம காட்டில், மாணிக்க கங்கை நதிக்கரையில், கதிர்காமக் கந்தன் திருக்கோவில் அமைந்துள்ளது. இது கொழும்பில் இருந்து 280 கி.மீ, கண்டியில் இருந்து 210 கி.மீ. தொலைவில் இருக்கிறது.
    அளுந்தூரில் சுமார் 1100 ஆண்டுகள் பழமையான வரகுணேஸ்வரர் கோவில், கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் முதலாம் வரகுண பாண்டியனால் கட்டப்பட்டதாகத் தெரிகிறது.
    அளுந்தூர் சின்னஞ்சிறிய அழகிய கிராமம். கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை பச்சைப்பசேல் வயல் வெளிகள். ஊரில் நுழைந்து வெளியே வயல் வெளிகளுக்கு இடையே செல்லும் சாலையில் நடந்தால் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் ஓர் ஆலயம் தெரியும். மிகப் பழமையான ஆலயம்.

    இந்த ஆலயத்திற்கு தென்மேற்கே ½ கி.மீ. தொலைவில் செங்குளம் என்ற குளம் இருந்த பகுதி. அந்தப் பகுதி தற்போது திடலாகக் காட்சி தருகிறது. இந்தத் திடலில் ஒரு நந்தியும் எதிரே பீடம் இல்லாத சிவலிங்கமும் காட்சி தருகிறது. இதன் தல வரலாறு என்ன?

    அந்த ஊரில் ஒரு விவசாயத் தம்பதியர் இருந்தனர். இருவரும் சிவ பக்தர்கள். அந்தப் பெண்ணுக்கு பால் பருகும் பருவத்தில் ஒரு குழந்தை. செங்குளத்தை ஒட்டி அவர்களுக்கு நிறைய நஞ்சை நிலங்கள். குழந்தையை திடலில் கிடத்தி உறங்க வைத்து விட்டு தம்பதிகள் இரண்டு காளைகளைப் பூட்டி வயலை உழத் தொடங்கினர். விவசாயி வயலை கலப்பையால் உழ, அந்தப் பெண் களைகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தாள்.

    விடிவதற்குள் எல்லா நிலத்தையும் உழுது முடித்து விட வேண்டும் என்ற ஆவலில் நேரம் நள்ளிரவைத் தாண்டியும் வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தனர். இறைவன் அருளால் வேலையை முடித்து விடலாம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு. திடீரென்று குழந்தையின் அழுகுரல் கேட்டது. பசியால் குழந்தை அழுகிறது என்று புரிந்துகொண்ட அந்தப் பெண், குழந்தைக்கு பால் ஊட்டினாள்.

    ‘வேலை முடியவில்லையே’ என்ற கவலையில் அருகே இருந்த ஆலயத்தில் உள்ள இறைவனை வேண்டினாள். இறைவனின் அதீத கருணை இவர்கள் மேல் படிய, இவளும் குழந்தையும், காளைகளும், கணவனும் சிலையாக மாறி இறைவனுடன் ஐக்கியமாகினர். இது செவி வழி கதை.

    ஒரு காளையின் சிலையும் விவசாயியின் சிலையும் தற்போது திடலாக காட்சி தரும் செங்குளம் ஏரிப்பகுதியில் காட்சி தருகிறது. குழந்தை பால் பருகும் கோலத்தில் உள்ள அந்த இளம் பெண்ணின் சிலை திருச்சி அருங்காட்சியகத்தில் உள்ளது. இன்னொரு காளையின் சிலை அருகே உள்ள ஆலயத்தில் நந்தியம் பெருமானாக அருள்பாலிக்கிறது.

    இதுவே அளுந்தூரில் உள்ள வரகுணேஸ்வரர் ஆலயம். சுமார் 1100 ஆண்டுகள் பழமையான இந்தக் கோவில், கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் முதலாம் வரகுண பாண்டியனால் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. காலப்போக்கில் சற்றே சிதிலமடைந்த இக்கோவிலை முதலாம் குலோத்துங்கன் திருப்பணிகள் செய்து புதுப்பித்துள்ளான்.

    இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் ‘வரகுண ஈசுவரமுடைய மகாதேவர்’ எனவும், ‘வரவுணீசுவரமுடைய நாயனார்’ எனவும் கல்வெட்டுகள் கூறுகின்றன. இந்த ஆலய இறைவன் ‘வரகுணேஸ்வரர்’ என்ற பெயரிலும், ‘காசி விசுவநாதர்’ என்ற பெயரிலும் தற்போது அழைக்கப்படுகிறார். இறைவியின் பெயர் காசி விசாலாட்சி.

    ஆலய முகப்பைத் தாண்டியதும் எதிரே நந்தியம் பெருமானும், பலிபீடமும் இருக்க, வலதுபுறம் அன்னை விசாலாட்சியின் சன்னிதி உள்ளது. இந்தச் சன்னிதியின் இரண்டாம் விமான தளம் முற்றிலும் அழிந்துவிட்டது. இறைவி நாற்கர நாயகியாய் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அன்னை மேல் இருகரங்களில் அங்குசத்தையும் மலர்மொட்டையும் சுமந்து, கீழ் இரு கரங்கள் அபய வரத ஹஸ்த முத்திரைகளுடன் காட்சி தருகிறாள்.

    அன்னையின் சன்னிதியை விட்டு கீழே இறங்கி, தென்புறம் சற்றே நடந்து உயர்ந்த படிகட்டுகளைக் கடந்து வடபுறம் திரும்பினால் மகாமண்டபத்தின் உள்ளே நுழையலாம். ஆலயத்தின் மையமாகத் திகழும் இறைவனின் கருவறைக்கு முன்பாக இருக்கிறது மகா மண்டபம். சிதிலமான இந்த மகாமண்டபத்தை நான்கு தூண்கள் தாங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த நான்கு தூண்களிலும் சோழர்கால சிற்ப வேலைப்பாடுகளே காணப்படுகின்றன. இரு தூண்களில் அடியவர்களின் வடிவங்களும், பூ வேலைப்பாடுகளும் உள்ளன. ஒரு தூணில் நந்தி, யானை முதலிய விலங்கு வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

    அடுத்துள்ள அர்த்த மண்டபத்தின் வடபுறம் ஒரு பெரிய சுரங்கம் செவ்வக வடிவில் காணப்படுகிறது. இப்பாதை ½ கி.மீ. தொலைவில் இருக்கும் பிடாரி தோப்பிற்கு செல்லும் பாதையாக இருந்ததாக பக்தர்கள் கூறுகின்றனர். தற்போது சிமெண்டு பலகையைக் கொண்டு இந்த சுரங்க பாதையை மூடி வைத்துள்ளனர். அடுத்துள்ள கருவறையில் இறைவன் வரகுணேஸ்வரர் லிங்கத் திருமேனியில் கீழ் திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.

    இங்கு இறைவனுக்கும் இறைவிக்கும் அனைத்து விசேஷ நாட்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. ஐப்பசி பவுர்ணமியில் இறைவனுக்கு அன்னாபிஷேகமும், கார்த்திகை மாத அனைத்து சோமவாரங்களில் 108 சங்காபிஷேகமும் நடக்கிறது. மகா சிவராத்திரி திருநாள் இங்கு வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அனைத்து விசேஷ நாட்களிலும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

    மகாமண்டபத்தின் மேற்கில் முருகப்பெருமானின் திருமேனி உள்ளது. இறைவனின் தேவகோட்டத்தில் தட்சிணாமூர்த்தியும் சிவ துர்க்கையும் அருள்பாலிக்கின்றனர். ஆலய தலவிருட்சமான வில்வம் ஆலய முகப்பிலேயே உள்ளது. மேற்கு பிரகாரத்தில் ஓர் அரசமரமும், அதன் அடியில் மன்னன் வரகுணபாண்டியன் சிலையும் உள்ளது. இந்த அரசமரம் பலநூறு ஆண்டுகளை கடந்தது.

    இந்த ஆலயம் சித்தர்கள் உலவும் இடமாக இன்றும் திகழ்வதாக பக்தர்கள் கூறுகின்றனர். ஆலயத்தின் தென்மேற்கு திசையில் ஒரு கற்கட்டிடம் இருந்த சுவடு தெரிகிறது. அதனிடையே பல நூற்றாண்டுகளைக் கடந்த ஆலமரம் ஒன்று உள்ளது. ஆலமரத்தின் அடியில் பீடம் ஒன்றும் உள்ளது. இது சித்தர்கள் தவம் செய்த இடம் என்று சொல்லப்படுகிறது.

    கால பைரவர்

    மகா மண்டபத்தின் வடகிழக்கு மூலையில் கால பைரவர் அருள்பாலிக்கிறார். பதினான்காம் நூற்றாண்டின் கலை முறையில் அமைந்துள்ள இந்த கால பைரவரின் தலைக்கோலம் சுடர் முடி அமைப்பில் உள்ளது. பைரவரின் நான்கு கைகளில் வலதுமுன் கையில் முத்தலை ஈட்டியும், இடது முன் கையில் தலை ஓடும், பின் கரங்களில் உடுக்கையும் பாசமும் உள்ளன. பைரவரின் பின்னால் அவரது வாகனமான நாய் திறந்த வாயுடன் காணப்படுகிறது. பைரவரின் கழுத்திலிருந்து தொங்கும் மண்டையோட்டு மாலை அவரது முழங்கால் வரை நீண்டு அமைந்துள்ளது. தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு அபிஷேக ஆராதனைகளும், பைரவர் யாகமும் நடைபெறுகிறது.

    இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயம், தினமும் மாலை 4 மணி முதல் 5 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.

    அமைவிடம்

    திருச்சியில் இருந்து 19 கிலோமீட்டர் தொலைவில் அளுந்தூர் கிராமம் உள்ளது. நகரப் பேருந்தில் சென்று அளுந்தூர் பஸ் நிறுத்தத்தில் இறங்க வேண்டும். பின் அங்கிருந்து உள்ளே 3 கிலோமீட்டர் சென்றால் ஆலயத்தை அடையலாம்.
    ×