என் மலர்tooltip icon

    கோவில்கள்

    சென்னையை அடுத்து திருவள்ளூர் அருகே உள்ளது வாசீஸ்வரர் திருத்தலம். தேவாரப் பாடல்பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களுள் இது 16-வது தலம்.
    சிவபெருமானின் உத்தரவை மீறி, தன் தந்தை தட்சன் நடத்திய யாகத்திற்குச் சென்றாள் பார்வதிதேவி. இதனால் அவளை, பூலோகத்தில் சாதாரணப் பெண்ணாகப் பிறக்கும்படி சபித்தார் சிவன். பூலோகத்தில் பிறந்த பார்வதி தேவி, சிவனை நோக்கித் தவத்தில் ஆழ்ந்தார். இளகிய மனம்கொண்ட ஈசன், தேவியின் தவத்திற்கு இரங்கி அம்பாளை ஏற்றுக்கொண்டார்.

    பூலோகத்தில் அம்பாள் தவம்புரிந்த இடம் திருப்பாச்சூர். இங்கே ஈசன் அழைத்த திருநாமத்தினாலயே ‘தங்காதலி’ என்னும் பெயருடன் அம்மன் அருளாட்சி செய்து வருகிறார். இந்த அன்னையை வழிபடும் தம்பதியரிடையே ஒற்றுமை கூடும், அன்னியோன்யம் அதிகரிக்கும்.

    சென்னையை அடுத்து திருவள்ளூர் அருகே உள்ளது இந்தத் திருத்தலம். மூர்த்தி, தலம், தீர்த்தம், விருட்சம், தவம் ஆகிய ஐம்பெரும் சிறப்பம்சங்களோடு, மூவரால் பாடல் பெற்ற புராணப் பெருமைகளையும், வரலாற்றுச் சிறப்புகளையும் கொண்டது இந்த ஆலயம். தேவாரப் பாடல்பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களுள் இது 16-வது தலம்.

    புராண காலத்தின் போது, திரிபுராந்தர்களை அழிக்கச்சென்ற சிவன், விநாயகரை வணங்காமல் புறப்பட்டு விட்டார். இதனால் வழியில் தேர் சக்கரத்தின் அச்சு முறிந்து விட்டது. அத்தோடு ஒரு சபையை அமைத்த விநாயகர், ‘தம்மை வணங்காமல் சென்றது ஏன்?’ என்று சிவபெருமானிடம் விசாரணை செய்தார். அதனடிப்படையில் இவ்வாலயத்தில் 11 விநாயகர்கள் வீற்றிருக்கும் ‘விநாயகர் சபை’ இருக்கிறது. இந்த ஏகாதச விநாயகர் சபை வழிபாடு மிகுந்த பலனளிக்கக்கூடியது.

    திருப்பதி வெங்கடாஜலபதி தம் திருமணத்திற்காக வாங்கிய கடனை அடைக்க, இந்த விநாயகர் சபை வழிபாட்டை மேற்கொண்ட பிறகுதான் வழிபிறந்தது என்பதாகவும் ஒரு கதை சொல்லப்படுகிறது. தம் திருமணத்தின்போது குபேரனிடம், வெங்கடாஜலபதி கடன் வாங்கினார். எவ்வளவு முயற்சித்தும் கடனை அடைக்க முடியவில்லை. இதற்கு காரணம் என்ன என்று தெரிந்து கொள்வதற்காக, வெங்கடாஜலபதி சிவபெருமானை வழிபட்டார்.

    அதற்கு ஈசன், “திருமணத்தின்போது ‘பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க’ என வாழ்த்துவார்கள். 16 என்பது பதினாறு வகை செல்வங்களைக் குறிக்கும். நீங்கள் மச்ச அவதாரத்தின்போது அசுரர்களைக் கொன்றதால் ஏற்பட்ட தோஷம் காரணமாக, 11 வகை செல்வங்களை இழந்துவிட்டீர்கள். இப்போது ஐந்து வகை செல்வங்களே தங்களிடம் உள்ளன. இழந்த செல்வங்களைப் பெற விநாயகர் சபையிலுள்ள வலம்புரி விநாயகருக்கு 11 தேங்காய் கொண்டு தொடுக்கப்பட்ட மாலை, 11 வாழைப்பழம் கொண்டு தொடுக்கப்பட்ட மாலை, ஒரு அருகம்புல் மாலை அணிவித்து, 11 நெய் தீபமேற்றி பிரார்த்தித்துக் கொண்டால் மூன்று மாதங்களுக்குள் இழந்த சொத்துகளைத் திரும்பப் பெறலாம். அதன் மூலம் கடனை அடைக்க வழிபிறக்கும்” என்று அறிவுறுத்தினார்.

    அதன்படி இந்த விநாயகர் சபையில் வழிபாடுகளை மேற்கொண்டாராம், வெங்கடாஜலபதி. அதன்பிறகே, கடனைத் திரும்பச் செலுத்துவதற்கான வழிகள் ஏற்பட்டனவாம். பக்தர்களும் இங்குள்ள விநாயகரை வழிபட்டால், கடன் தொல்லை நீங்கும். இழந்த செல்வங்கள் மீண்டும் கிட்டும், வியாபாரம் பெருகும் என்று நம்புகிறார்கள்.

    புராணப் பின்னணியைக் கொண்ட இந்த சேத்திரத்தில் ஆலயம் நிர்மாணித்தது கரிகாற் பெருவளத்தான். குறும்பன் என்ற சிற்றரசன், கரிகாற் பெருவளத்தானுக்குக் கப்பம் கட்டி ஆட்சிசெய்து வந்தான். திடீரென கப்பம் செலுத்த மறுத்தான். இதனால் சிற்றரசன் மீது போர் தொடுத்தான் கரிகாற் சோழன். குறும்பனும் தம் குலதெய்வமான காளி தேவியை வணங்கி போர் புரியத் தொடங்கினான். அவனுக்கு உதவியாக காளிதேவி விண்ணிலிருந்து அம்புகளை எய்து சோழர்படை வீரர்களை அழித்தாள். விண்ணிலிருந்து பாய்ந்து வந்த அம்புகளும், அவற்றை எய்யும் காளிதேவியும் சோழர்படை வீரர்கள் கண்களுக்குப் புலப்படவேயில்லை.

    இதனால், அம்புகளை எதிர்கொள்ள முடியாமல் அனைத்து சோழர்படை வீரர்களும் போரில் கொல்லப்பட்டனர். சோழர் படைத்தளபதி மட்டும் உயிருடன் இருந்தார். அவரை வரவழைத்த குறும்பன், ‘உன் மன்னன் போருக்கு வந்தாலும் கொல்லப்படுவது உறுதி. இந்தத் தகவலை சொல்வதற்குத்தான் உன்னை உயிரோடு விட்டுள்ளேன். இதை கரிகாலனிடம் போய்ச் சொல்!’ என்று திருப்பி அனுப்பினான்.

    நடந்ததை கரிகாலனிடம் கூறினார் தளபதி. தம் படை வீரர்கள் மாண்டதையறிந்து வேதனையுற்ற கரிகாலன், படை திரட்டிக் கொண்டு போருக்கு விரைந்தான். கல்மூங்கில் புதர்கள் நிறைந்த இப்பகுதிக்கு வந்தபோது, சிற்றரசனுக்கு தம்முடைய படையை தோற்கடிக்கும் பெரிய ஆற்றல் எப்படி வந்தது என்ற வியப்புடன், சிவபெருமானை நினைத்து வேண்டினான்.

    அப்போது சிவபெருமான் அசரீரியாய் தன் பக்தனுக்கு ஆறுதல் கூறினார். ‘‘கவலைகொள்ள வேண்டாம் மன்னா! நான் உன் அருகிலேயே இருக்கிறேன். சிற்றரசனுக்கு அவன் குலதெய்வம் காளிதேவி உதவிபுரிகிறாள். உன்னை இங்கு வரவழைக்கவே இந்த நிகழ்வுகள் நடந்தேறின. குறும்பனுக்கு இந்த தகவல் தெரியாது. நான் சொன்ன பிறகு போரைத் தொடங்கு! நீ வெற்றி கொள்வாய்!” என்றார்.

    பின்னர் ஆவேசமாகவுள்ள காளிதேவியை சாந்தப்படுத்த இரண்டு தங்கச் சங்கிலிகளுடன் நந்தியை அனுப்பினார் சிவ பெருமான். தங்கச் சங்கிலியைக் கண்டதும் சினம் தணிந்து சிரித்தாள் காளி. அவளை தங்கச் சங்கிலியால் கட்டி அழைத்து வந்து, ஓரிடத்தில் உட்கார வைத்தார் நந்தி.

    இதைத் தொடர்ந்து சிவபெருமான் கரிகாலனிடம், ‘இப்போது நீ போரைத் தொடங்கு!” என்றார். மூங்கில் புதர்கள் மத்தியில் மறைந்திருந்தபடியே ஒற்றன் மூலம் போருக்கு தகவல் அனுப்பினான் கரிகாலன். குறும்பனும் போர்புரிய சம்மதித்தான். கடும் போரில் கரிகாலன் வெற்றிபெற்றான். போரில் தோற்ற குறும்பனின் சொத்துகள் அனைத்தையும் ஈசனுக்குரியதாக ஆக்கினான் கரிகாலன்.

    தமக்கருகில் இருப்பதாய்ச்சொன்ன ஈசனை மூங்கில் காட்டுக்குள் தேடியலைந்தான். எங்கு தேடியும் ஈசன் தென்படவில்லை. அங்கிருந்த மூங்கில் புதருக்குள் வசித்த காட்டுவாசி களிடம் கேட்டான். அவர்கள், ‘சிவலிங்கம் இருக்குமிடம் எங்களுக்குத் தெரியாது. ஆனால் ஒரு புதருக்குள் பசு மாடு செல்லும். அப்போது மூங்கில் மரங்கள் விலகி நிற்கும். மாடு திரும்பிச் சென்றதும் மூங்கில் மரங்கள் தானாக மூடிவிடும்’ என்றுகூறி அந்த புதரைக் காட்டினர்.

    அங்கு சென்று மூங்கில் வெட்ட பயன்படுத்தப்படும் ‘வாசி’ என்ற அரிவாளால் வெட்டிக்கொண்டே இருந்தான் மன்னன். அப்போதும் லிங்கத்தைக் காணாது சலிப்படைந்த கரிகாலன் ஆவேசமாக ஒரு மூங்கில் மரத்தை வெட்டினான். திடீரென ரத்தம் பீறிட்டுக்கொண்டு வந்தது. திடுக்கிட்டு அருகில் சென்று பார்த்தான். சுயம்புலிங்கம் நெற்றியில் வெட்டுப்பட்டு ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. உள்ளம் உருக ஈசனிடம் மன்னிப்புக் கேட்டதும் ரத்தம் வடிவது நின்றது. இறைவனின் கருணைக்கு தாம் முற்றிலும் ஆட்பட்டுவிட்டோம் என்பதை அறிந்த கரிகாலன், அவ்விடத்திலேயே ஈசனுக்கு ஆலயம் நிர்மாணிக்க உறுதிபூண்டான்.

    ஆலயப் பணி தொடங்கிவிட்டது. ஆனால் போரில் தோற்றவர்கள் கோவில் எழுப்ப இடையூறு கொடுக்கத் தொடங்கினர். இதனால் திருப்பணி மந்தமானது. கரிகாலன் அடிக்கடி வருகை புரிந்து தொல்லை கொடுத்தவர்களை விரட்டியடித்து, மேற்பார்வையிட்டு கோவில் நிர்மாணப்பணிகளை துரிதப்படுத்தினான். திருப்பணி நிறைவு பெற்று கம்பீரமாக ஆலயம் உருப்பெற்றது. புராணப்பெருமையும், சரித்திரப் பின்னணியும் கொண்ட ஒப்பற்ற தலம் இது. 1500 ஆண்டு பழமை வாய்ந்த இந்த ஆலயத்தின் இறைவன் திருநாமம் வாசீஸ்வரர் ஆகும்.

    இத்திருத்தலத்தில் அம்பாள் தினமும் ஈசனுக்கு அபிஷேகம்செய்து வழிபடுவதாக ஐதீகம். ஆகவே பிரதோஷத்தின் போதும், இதர உற்சவங்களின்போதும் முதலில் அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. பின்னரே ஈசனுக்கு அபிஷேகம் நடைபெறும். அம்பாள் சிவனுக்கு வலப்புறம் உள்ளதால், இத்திருக்கோவில் திருமணத்தடை நீக்கும் சேத்திரமாக விளங்குகிறது.

    இதையடுத்து 11 விநாயகர் கம்பீரமாக வீற்றிருக்கும் ‘விநாயகர் சபை’ உள்ளது. அருகில் பெருமாளின் வினைதீர்த்த ஈஸ்வரனும் எழுந்தருளியுள்ளார். மூன்று சன்னிதிகளையும் கடந்து சென்று சுயம்புவாய் வீற்றிருக்கும் திருப்பாசீஸ்வரரை வழிபடலாம். கஜ பிருஷ்ட விமானம் கொண்ட கருவறையில், சதுரவடிவ பீடத்திலுள்ள சுயம்புலிங்கத்தின் தலையில் வெட்டுப்பட்ட தடம் உள்ளதைக் காணலாம். சிவலிங்கத்தின் மேற்பகுதி சற்று இடப்புறத்தில் நகர்ந்த நிலையில் உள்ளது. காயம்பட்ட லிங்கம் என்பதால் தொட்டுப் பூஜை செய்வதில்லை. அலங்காரங்கள் பாவனையாகத்தான் நடக்கின்றன. இம்மூர்த்தியைத் ‘தீண்டாத் திருமேனி’ என்றும் அழைக்கிறார்கள்.

    இவ்வாலயத்தில் ஐயாயிரம் வருட பழமையான மூங்கில் மரம், தல விருட்சமாக உள்ளது. அர்த்த மண்டபத்தில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்கரம் உள்ளது. வெளிப்பிரகாரத்தில், வடமேற்கில் சொர்ண காளி கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார். அருகே வசந்த மண்டபம் செல்லும்வழியில் இரட்டைக் காளியும், மண்டபத்தினுள் மிகப்பெரிய குபேரலிங்கமும் உள்ளது.

    தாழம்பூ வழிபாடு :

    தம்முள் யார் பெரியவர் என பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் ஏற்பட்ட போட்டியில், நடுவராய் விஸ்வரூபமெடுத்த சிவபெருமானின் தலைமுடியைக் கண்டதாகப் (பிரம்மாவுக்கு ஆதரவாக) பொய் சொன்ன தாழம்பூவை பூஜைகளிலிருந்து ஒதுக்கிவைத்தார் சிவபெருமான். பின்னர் சிவனிடம் மன்னிப்புக்கேட்டு தாழம்பூ அடைக்கலம் வேண்டவே சிவராத்திரி நாளில் மட்டும் தனது பூஜைக்குப் பயன்படுத்தும்படி வரம் கொடுத்தார். அதனடிப்படையில் இக்கோவிலில் சிவராத்திரி அன்று மட்டும் இரவு ஒரு கால பூஜையில் மட்டும் தாழம்பூவை சிவனின் உச்சியில்வைத்துப் பூஜை செய்கின்றனர். இந்த பூஜையை தரிசனம் செய்தால் ஆணவம், பொய் சொல்லும் குணம் நீங்கிவிடும்.

    இவ்வாலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடைதிறந்திருக்கும்.

    அமைவிடம்

    திருவள்ளூர் மாவட்டம், சென்னை- அரக்கோணம் ரெயில் மார்க்கத்தில் திருவள்ளூர் ரெயில் நிலையத்திலிருந்து 5 கி.மீ., திருவள்ளூர் பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் திருப்பாசூர் உள்ளது. பேருந்து, ஆட்டோ வசதிகள் உள்ளன.
    புதுவையில் மணக்குள விநாயகர் கோவில் புகழ்பெற்று விளங்குவது போல் சித்தானந்தா கோவிலும் புகழ் பெற்ற ஒன்றாக திகழ்கிறது.
    புதுவையில் மணக்குள விநாயகர் கோவில் புகழ்பெற்று விளங்குவது போல் சித்தானந்தா கோவிலும் புகழ் பெற்ற ஒன்றாக திகழ்கிறது. இந்த கோவிலுக்கு சென்று சித்தானந்தாவை வணங்கினால் வேண்டிய வரம் கிடைப்பதாகவும், தீராத பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைப்பதாகவும் மக்கள் நம்பு கின்றனர். குறிப்பாக நோய்களில் இருந்து விடுதலை கிடைப்பதாக கூறுகின்றனர்.

    எனவே, சித்தானந்தா கோவிலில் பக்தர்கள் குவிவது வாடிக்கையானதாக உள்ளது. சிலர் தினமும் இந்த கோவிலுக்கு சென்று வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அலுவலகங்களுக்கு செல்லும் பலர் கோவிலுக்கு சென்று வழி பட்டு விட்டுத்தான் பணிக்கு செல்கிறார்கள்.

    சித்தானந்தா மீது பற்றுதல் கொண்டு வழிபாடு செய்தவர்களில் மகாகவி பாரதியாரும் ஒருவர். தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சி நடந்த காலத்தில் பாரதியார் நீண்ட காலம் புதுவையில் வசித்து வந்தார். அப்போது அவர் அடிக்கடி சித்தானந்தா கோவிலுக்கு செல்வது வழக்கம். அங்கு நீண்ட நேரம் இருந்து வழிபடுவதுடன் பயபக்தியுடன் பாடல்களை பாடுவது வழக்கம். பாரதியார் அடிக்கடி செல்லும் குயில் தோப்பு சித்தானந்தா கோவில் அருகேதான் இருந்தது. அங்கு இருந்துதான் பாரதியார் தனது புகழ்பெற்ற குயில்பாட்டு எழுதினார். சித்தானந்தா கோவிலில் அமர்ந்தும் பாரதியார் கவிதை எழுதுவது வழக்கம்.

    குரு சித்தானந்தா கடலூர் வண்டிபாளையத்தை சேர்ந்தவர். சித்தராக மாறி இருந்த அவர் கடலூர் பாடலீசுவரர் கோவில் அருகே தங்கி இருந்து பாடலீசுவரர் கோவிலில் வழிபாடு செய்து வந்தார். புதுவை முத்தியால் பேட்டையை சேர்ந்த முத்துகுமாரசாமி பிள்ளை அடிக்கடி கடலூர் பாடலீசுவரர் கோவிலுக்கு செல்வார். அப் போது சித்தானந்தாவை அறிந்த முத்துகுமாரசாமி பிள்ளை சித்தா னந்தாவையும் சந்தித்து ஆசி பெறுவது வழக்கம். இந்த நிலையில் முத்துகுமாரசாமி பிள்ளை மனைவி உடல்நிலை பாதிப்படைந்தது. அதில் இருந்து அவர் மீள முடியாமல் தவித்தார்.

    எனவே, சித்தானந்தா நேரடியாக வந்து தனது மனைவிக்கு ஆசி வழங்கினால் நோய் தீர்ந்து விடும் என்று முத்துகுமாரசாமிபிள்ளை கருதினார். இதற்காக சித்தானந்தாவை புதுவைக்கு அழைத்து வந்தார். அவர் ஆசி வழங்கியதை அடுத்து முத்துகுமாரசாமி பிள்ளையின் மனைவிக்கு நோய் குணமானது.

    இதன் பிறகு சித்தானந்தா புதுவையிலேயே தங்கி விட்டார். அவரது சக்தியை அறிந்த புதுவை மக்கள் ஏராளமானோர் சித்தானந்தாவை தேடி வந்து வழிபட்டனர். அவர்களுக்கு சித்தானந்தா அருளாசி வழங்கினார். இதனால் பக்தர்களுக்கு நல்ல பலன் கிடைத்தது. பவுர்ணமி நாளில் சிறப்பு பூஜைகள் நடத்தி ஆசி வழங்கினார்.
     
    இந்த நிலையில் சித்தானந்தா வயதான நிலையை எட்டி இருந்தார். ஒரு தடவை முத்துகுமாரசாமி பிள்ளையுடன் சித்தானந்தா கருவடி குப்பம் வழியாக நடந்து சென்று கொண் டிருந்தார். அப்போது, இப்போது கோவில் அமைந்துள்ள இடம் அருகே அவர்கள் சென்றனர். அந்த இடம் சித்தானந் தாவுக்கு மிகவும் பிடித்திருந்தது. எனக்கு இந்த இடத்தில் சமாதி அமைய வேண்டும் என்று விரும்புகிறேன் என முத்துகுமாரசாமியிடம் சித்தானந்தா கூறினார்.

    அவர் குறிப்பிட்ட நாளில் ஜீவ சமாதி அடைய முன்வந்தார். அதற்கான ஏற்பாடுகள் நடந்தன. 1837-ம் ஆண்டு மே 28-ந்தேதி அந்த இடத்தில் பத் மாசனம் இருந்த நிலையில் சித்தா னந்தா ஜீவசமாதி அடைந்தார்.

    அந்த இடத்தில் சிவலிங்கம் அமைத்து கோவில் எழுப்பப்பட்டது. கோவிலில் வணங் கினால் தீராத பிரச்சினைகளுக்கும் தீர்வு ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியது. சித்தானந்தா கோவிலில் குரு தட்சிணாமூர்த்தி சிலையும் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. இதுவும் சக்திவாய்ந்த கடவுளாக இருக்கிறது. எனவே, குருவை வழிபடுவதற்காக வியாழக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர் கள் வருகிறார்கள்.

    சித்தானந்தா கோவில் உள்ள மணி, பிரான்சு நாட்டில் இருந்து விசேஷமாக தயாரித்து கொண்டு வரப்பட்டதாகும். அந்த மணியில் சித்தானந்தா உருவம் பொறிக்கப் பட் டுள்ளது. சித்தானந்தா கோவிலில் தினமும் காலையில் தொடங்கி இரவு வரை பூஜை நடைபெறும். மகாசங்கடகர சதுர்த்தி, மகா சிவராத்திரி குரு பூஜை போன்ற விழாக்கள் சிறப்பாக நடைபெறும்.
    திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் சுமார் 3000 ஆண்டுகள் பழமையான வடபத்ர காளியம்மன் ஆலயம் உள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    சதாசிவமூர்த்தி, மந்திரங்களால் உருவான அருவுருவ வடிவம். இது சிவனின் ஞானமயமான வடிவினைக் குறிக்கும். எல்லாவற்றிலும் மேலானதாகவும், சிறந்ததாகவும், உயரிய தத்துவங்களைக் கொண்டதாகவும், சாதாரண மக்களால் எளிதில் புரிந்துகொள்ள முடியாத வடிவினை உடையதாகவும் சதாசிவ வடிவம் விளங்குகிறது.

    சதாசிவன் - ஒருமுகம், இரண்டு முகங்கள், ஐந்து முகங்கள், இருபத்து ஐந்து முகங்கள் எனப் பல வடிவங்களாக சித்திரிக்கப்பட்டுள்ளார்.

    சதாசிவன் வடிவம் சிவனுடைய மற்றைய வடிவங்கள் போன்று, பொதுவாகக் கல், செம்பு போன்றவற்றால் அமைக்கப்படுவதில்லை. அத்துடன் வழிபாட்டிலும் இவ்வடிவம் கோவில்களில் இடம் பெறுவதும் மிக அரிதே. கோபுரங்களில் சுதை வடிவில் சதாசிவமூர்த்தி அமைத்துள்ள மையை தமிழ்நாட்டுக் கோவில்களில் காணலாம். சதாசிவ வடிவம் தியான வடிவமாகும்.

    அத்தகைய சிறப்பு பெற்ற தலங்களுள் ஒன்றாக, திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள வடபத்ர காளியம்மன் ஆலயம் விளங்குகிறது. சுமார் 3000 ஆண்டுகள் பழமையான ஆலயம் இது. ஆலய கருவறையில் அன்னை வடபத்ர காளியம்மன் எட்டு கரங்களுடன் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறாள். அன்னை தனது கரங்களில் சூலம், சக்கரம், நாகம், கோடாலி, சங்கு, சூலம், அம்பு, கிண்ணம் இவைகளைத் தாங்கி புன்னகை தவழும் முகத்துடன் அருள் பாலிக்கிறாள்.

    தென் திசை நோக்கி பயணம் வந்த அகத்திய முனிவர், இந்த ஆலயம் வந்து அன்னையை தரிசித்து ஆன்ம சக்தி ஆத்மதானம் பெற்று சித்த மருத்துவம் மூலம் அம்மை நோய் போன்ற நோய்களை குணமாக்கியதாக கூறப்படுகிறது.

    ஆலயத்தின் வடக்கு பிரகாரத்தில் நின்ற கோலத்தில் அகத்தியர் சிலையும், திருமூலர் சிலையும் தனி மண்டபத்தில் காட்சி தருகின்றன. சைவ சமயக் குரவர்களான சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர்களால் பாடல் பெற்ற தலம் இது. இந்த ஆலயத்தின் பிரகாரத்தில் கற்சிலை விக்கிரகங்களும், பஞ்சலோக விக்கிரகங்களும் நிறையவே உள்ளன. ஆலயத்தின் வடக்குப் பிரகாரத்தில் இந்த மகா சதாசிவனாரின் பஞ்சலோகத் திருமேனி உள்ளது. மகா சதாசிவம் இங்கு தனி சன்னிதியில் அருள் பாலிக்கிறார்.

    சதாசிவனின் சிறப்பு அம்சங்கள்

    சதாசிவன் நான்கு திசைகளுக்கும் நான்கு முகங்களும், உச்சியில் ஒரு முகமுமாக ஐந்து முகங்களையும் ஒவ்வொரு முகத்திற்கும் மும்மூன்று கண்களையும் உடையவர். உச்சியிலுள்ள ஈசானமுகம் ஈசான திசையை நோக்கியதாகவும், பளிங்கு நிறம் கொண்டதாகவும் இருக்கும். கிழக்கிலுள்ள தத்புருஷ முகம் கிழக்கு திசையை நோக்கி கோங்கம் பூ நிறத்தினைக் கொண்டதாகவும், தெற்கிலுள்ள அகோரமுகம் வலது தோள் மேல் தெற்கு நோக்கி தாடியும், மிகுந்த கருப்பும், பயங்கரத் தோற்றத்தினை உடையதாகவும், வடக்கிலுள்ள வாமதேவ முகம் இடது தோள் மேல் வடக்கு நோக்கியதாக பெண் களின் முகம் போன்று சிவப்பு நிறமுடையதாகவும், மேற்கிலுள்ள சத்தியோசாத முகம் மேற்கு நோக்கியதாகப் பால் நிறமுடையதாகவும் இருக்கும்.

    வலது கரங்களில் சூலம், மழு, வாள், வஜ்ஜிரம், அபயமுத்திரை ஆகியவைகளை தாங்கியும், இடது கரங்களில் பாம்பு, பாசம், அங்குசம், மணி, வரதமுத்திரை முதலியவைகளை கொண்டவராக சதாசிவமூர்த்தி காட்சி தருகிறார்.

    சதாசிவ மூர்த்தியின் ஐந்து திருமுகங்களும் ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்தியோசாதம் என்று பெயர்களைப் பெற்றிருந்தாலும், உண்மையில் இந்த ஐந்தும் பஞ்சப்பிரம்ம மந்திரம் என்றே சிவாகமங்களில் குறிப்பிடப்படுகின்றன.

    மந்திரமயமான தியான வடிவான சதாசிவ மூர்த்தியின் வடிவம் எவ்வாறு அமையலாம் என்பது பற்றி ஆகமங்கள் கூறுகின்றன. சதாசிவர் ஐந்து திருமுகங்களும், பத்து திருக்கரங்களும் உடையவர். ஒவ்வொரு முகத்திலும் மும்மூன்று திருக்கண்கள் உண்டு. வலக்கரங்களில் சூலம், வஜ்ஜிரம், கத்தி, பரசு, அபயமுத்திரை ஆகியவற்றையும், இடது கரங்களில் பாசம், மணி, அக்கினி, அங்குசம் ஆகியவற்றையும் தாங்கியிருப்பவர். பாம்பினை பூணூலாக அணிந்திருப்பவர். பிறைச் சந்திரனால் அலங்கரிக்கப்பட்ட சடாமகுடம் தரித்தவர். சாந்தமான தோற்றம் கொண்டவர். இவ்வாறு காமிகாகமத்தில் சதாசிவனது வடிவம் வர்ணிக்கப்பட்டுள்ளது.

    கோவில் கோபுரங்களில் சுதை வடிவிலும், ஓரிரு இடங்களில் ஓவிய வடிவிலும் காணப்படும் இவ் வடிவம், நித்திய வழிபாட்டில் கிடையாது. வெறும் காட்சிப் பொருளாகத்தான் உள்ளது.

    மகா சதாசிவ மூர்த்தி

    சதாசிவமூர்த்தி 25 முகங்களுடனும், 50 கரங் களுடனும் காணப்படும்போது, அவர் ‘மகா சதா சிவர்’ என்று அழைக்கப்படுவார். ‘ஸ்ரீதத்துவநிதி’ என்னும் நூல் மகா கயிலாயமூர்த்தி என்ற பெயரில் மகாசதாசிவ வடிவத்தை விளக்கிக் கூறுகின்றது. இவரது 50 கரங்களில் இடம் பெற்றிருக்கும் பொருட்களையும் இந்நூல் எடுத்துரைக்கிறது.

    இதன்படி மகா சதாசிவ மூர்த்தியின் வலது பக்க 25 கரங்களில் அபயம், சக்கரம், சூலம், உளி, அம்பு, கதை, தாமரை, கத்தி, தோமரம், சத்தி, பிராசம், கோடாரி, பாம்பு, கலப்பை, அங்குசம், அக்கமாலை, சிறுசுத்தி, கொடி, தண்டம், வஜ்ஜிரம், குந்தம், அஸ்திதம் ஷட்ரம், ரம்பம், பிண்டி, பாலம் போன்ற அம்சங்களும், இடது பக்க 25 கரங்களில் வரதம், வில், மான், சங்கம், கேடயம், பாசம், பரசுவதம், முத்கரம், உடுக்கை, மணி, சுவடி, உருத்திர வீணை, கபாலம், முண்டம், கட்வாங்கம், பூசுண்டி, பரிகம், பலகை, பட்டசம், பிரம்பு, கமண்டலம், அனல், கத்திரிக்கோல், உலக்கை, மயில் தோகை ஆகிய அம்சங்களும் இடம் பெற்றிருக்கின்றன.

    பஞ்ச வடிவங்கள்

    சதாசிவ மூர்த்தியை பஞ்சப் பிரம்ம மந்திரத்தினால் தியானிக்கும் போது, ஐந்து முகங்களும் தனித்தனியான முழு வடிவங்களால் குறிக்கப்படும். அவையாவன:-

    ஈசான மூர்த்தி - பளிங்கு நிறமுடையவர். முக்கண்களைக் கொண்டவர். ஞானச் சந்திரனை சடையில் அணிந்தவர். சூலம், அபயமுத்திரை தாங்கியிருப்பவர். பார்வதியுடன் காணப்படுவார். அழகும், பிரசன்னமும் உள்ளவர்.

    தத்புருஷ மூர்த்தி - பொன்னிறத்தை கொண்டவர். பீதாம்பரத்தையும், உபவீதத்தையும, சடையில் இளம் பிறையையும் தரித்தவர். மாதுளங்கனி, ருத்திராட்ச மாலை ஆகியவற்றை கரங்களில் ஏந்தி, கவுரி தேவியுடன் காட்சி தருவார்.

    அகோர மூர்த்தி - முக்கண்களைக் கொண்டவர். திருமுடியில் சந்திரனைச் சூடியவர். சாந்தத்தையும், குண்டலாலங்காரத்தையும் கொண்டவர். கீரி நிறமுடையவர். புருவம், மீசை, தாடி, கேசம், பல் என உக்கிர முகத்தினைக் கொண்டவர். வலது கரங்களில் சூலம், பரசு, வாள், தண்டம் ஆகியவற்றையும், இடது கரங்களில் கட்டுவாங்கம், கபாலம், பரிசை, பாசம் ஆகியவற்றையும் ஏந்தி, கபாலம், பாம்பு, விருச்சிகம் போன்றவற்றை ஆபரணங்களாகச் சூடியவர். சத்துருக்களை அழிப்பவர். சூல் கொண்ட முகில் போன்ற நிறமுள்ள கங்கையுடன் இருப்பவர்.

    வாமதேவ மூர்த்தி - சிவந்த நிறத்தவர். நறுமணம் பொருந்திய மாலை, வஸ்திரம், உபவீதம் ஆகியவற்றையும், உயர்ந்த மூக்கையும், சிவந்த தலைப்பாகையையும் கொண்டவர். கணாம்பிகையுடன் இருந்து அருள்பவர்.

    சத்தியோசாத மூர்த்தி - வெண்மை நிறமுள்ளவர். வெண்மையான மாலை, சந்தனம், ஆபரணம், தலைப்பாகை, வஸ்திரம் ஆகியவற்றையும், மூன்று கண்களையும் வரத அபய கரங்களையும் கொண்டவர். சந்திரனைத் தரித்தவர். அம்பிகையுடன் இருந்து அருள்பவர்.

    கர்நாடக மாநிலம் ஹாசனில் பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை, அதாவது 10 நாட்கள் மட்டுமே நடை திறந்து பூஜை நடத்தப்படும் என்பது சிறப்பம்சமாகும்.
    கர்நாடக மாநிலம் ஹாசனில் பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஹாசனாம்பாதேவி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். அம்மன் இங்கு மண்புற்று வடிவில் வீற்றிருக்கிறார். தொடக்கத்தில் ஹாசனுக்கு சிம்ஹாசனபுரி என்று பெயர் இருந்தது. சிம்ஹாசனபுரி என்பது அர்ச்சுனனின் பேரன் ஜனமேஜய மகாராஜனின் இடம் என்றும் கூறுவர். இங்கு ஹாசனாம்பா தேவி நிலைத்த பிறகு ஹாசனா என பெயர் பெற்றதாக சொல்லப்படுகிறது.

    கல்லாய் நிலைத்த திருடர்கள் :

    இந்த கோவிலின் கொடி மரத்தைத் தாண்டியவுடன் சித்தேஸ்வரர் என்ற திருநாமத்துடன், சிவபெருமான் அருள்பாலிக்கிறார். இங்கு சிவன் லிங்கவடிவில் காட்சி தருகிறார். அத்துடன் அவருடன் பாசுபதாஸ்திரம் பெற்றுக்கொள்ளும் நிலையில் அர்ச்சுனன் காணப்படுகிறார்.

    உற்சவ மூர்த்தியான சிவனின் நெற்றியில் ஒளி வீசும். இதை நாம் ஆண்டுதோறும் கோவில் நடை திறக்கப்படும் வேளைகளில் கண்டு ரசிக்கலாம்.

    அதுபோல் கோவிலில் கல்லப்பா குடி என்ற சன்னிதி உள்ளது. இந்த சன்னிதியில் 4 கல் சிலைகள் உள்ளன. இதற்கு ஒரு வரலாறு உண்டு. அதாவது கோவிலுக்குள் புகுந்த 4 திருடர்கள் தேவியின் கழுத்தில் கிடந்த ஆபரணங்களை திருட முயற்சித்துள்ளனர். இதனால் கடும் கோபமடைந்த தேவி, 4 பேரும் கல்லாய் போகட்டும் என்று சாபமிட்டதாகவும், அதனால் அந்த 4 பேரும் கல்லாய் நிலைத்தார்கள் என்றும் சொல்லப்படுகிறது. 4 பேரும் நிலைகொண்ட இடம் ‘கல்லப்பா குடி’ என அழைக்கப்படுகிறது.

    வாழை வெட்டும் நிகழ்வு..

    12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஆலயம் :

    இந்த ஆலயம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைப் போல அம்மனை முன்னிறுத்தி பூஜைகள் நடத்தப்படும் ஆலயமாகும். இத்தகைய புகழ்பெற்ற ஹாசனாம்பாவுக்கு சுமார் 12-ம் ஆண்டு நூற்றாண்டில் கிருஷ்ணப்பா நாயக்க பாளையக்காரரின் காலத்தில் கோவில் எழுப்பப்பட்டது.

    தலபுராணம்:

    இந்த கோவிலுக்கு தலப்புராணம் உள்ளது. அதாவது, சப்த கன்னியர்களான பிரம்ஹிதேவி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர் வாரணாசியில் இருந்து தெற்கு பகுதிக்கு புத்துணர்வுக்காக வலம் வந்தார்கள் என்றும், அந்த சப்த கன்னியர்களில் வைஷ்ணவி, கவுமாரி, மகேஸ்வரி அம்மன்கள் ஹாசனாம்பா கோவிலில் மண்புற்றின் வடிவத்தில் நிலைத்தார்கள் என்றும், பிரம்ஹிதேவி கெஞ்சம்மனின் புதுக்கோட்டையில் நிலைக்கொண்டிருக்கிறார் என்றும், சாமுண்டி, வராகி, இந்திராணி ஹாசன் நகரில் உள்ள தேவி கெரேயில் நிலைகொண்டு இருப்பதாகவும் பக்தர்களால் நம்பப்படுகிறது.

    அணையா தீபமும்... வாடா மலரும்...


    ஹாசனாம்பா கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கோவில் பலிபட்யாமி என்ற நாளில் நடை சாத்தப்படுவது வழக்கம். அன்றைய தினத்தில் இந்த கோவிலில் தீபம் ஏற்றப்படுகிறது. இந்த தீபம் அடுத்த ஆண்டு கோவில் நடை திறக்கப்படும் நாள் வரை அணையாமல் எரிந்து கொண்டிருக்குமாம்.

    அதுபோல் நடைமூடப்படும் அன்று ஹாசனாம்பா தேவிக்கு சிறப்பு அர்ச்சனைகள் செய்யப்படும். அவ்வாறு அர்ச்சனைகள் செய்யப்படும் பூக்கள், மாலையிடப்படும் பூக்கள் அடுத்த ஆண்டு வரை வாடாமல் இருக்கும் என்பது பக்தர்களால் நம்பப்படுகிறது. இந்த இரு அதிசயங் களின் கண்கொள்ளாக் காட்சிகளை பார்ப்பதற்காக ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் கோவில் திறக்கப்படும் நாளில் அம்மனை காண வருகிறார்கள்.

    புற்று மண் வடிவில் ஹாசனாம்பா தேவி

    ஆண்டுக்கு ஒரு முறை நடை திறப்பு :

    இந்த கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை, அதாவது 10 நாட்கள் மட்டுமே நடை திறந்து பூஜை நடத்தப்படும் என்பது சிறப்பம்சமாகும். அதாவது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புரட்டாசி மாதம் இறுதி முதல் ஐப்பசி மாதம் முதல் வாரத்திற்குள் வரும் பவுர்ணமிக்கு அடுத்த வியாழக்கிழமை கோவில் நடை திறக்கப்பட்டு, அமாவாசைக்கு அடுத்த 3-வது நாள் கோவில் நடை சாத்தப்படுவது வழக்கமாக உள்ளது. அதாவது 10 நாட்களும் இரவு முழுவதும் நடைசாத்தப்படாமல் திறந்தே இருக்கும்.

    கோவில் நடை திறக்கப்படும் முதல் நாளில் ஹாசன் மாவட்டம் மட்டும் இன்றி மாநிலம் முழுவதில் இருந்தும் பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். தலவார் குடும்பத்தினர் கர்ப்பகிரகத்துக்கு எதிரே வாழைத் தண்டுகளை நட்டுவைத்து, ஹாசனாம்பாவை பயபக்தியுடன் பஜனைகள் பாடுவார்கள். பின்னர் அந்த வாழைத்தண்டுகளை வெட்டியதும், கோவில் நடை திறக்கப்படுவது இன்று வரை நடைமுறையில் இருக்கும் ஐதீகமாகும்.

    கோவில் நடை திறந்திருக்கும் 10 நாட்களும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனை, அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். இந்த விழாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டு செல்வார்கள். கோவிலிலுள்ள அம்மனை வழிபாடு செய்தால் வேண்டியது அனைத்தும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    அதிசயிக்க வைக்கும் ஹாசனாம்பா தேவி கோவில் இந்த ஆண்டில் தீபாவளியை முன்னிட்டு 1-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை திறக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், மாவட்ட அறநிலையத்துறையினர் செய்து வருகிறார்கள். பெங்களூருவில் இருந்து இந்த கோவில் 184 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. பெங்களூருவில் இருந்து பஸ், கார்களில் 3.15 மணி நேரம் பயணித்தால் ஹாசனாம்பாதேவியை தரிசிக்கலாம். மேலும் பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் இருந்து ஹாசனுக்கு ரெயில்களும் இயக்கப்படுகிறது. அதிலும் பயணித்து ஹாசனாம்பா தேவி கோவிலை சென்றடையலாம்.

    பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரத்தில் கோனேரி ஆற்றங்கரையில் வாலாம்பிகை உடனுறை வாலீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் வரலாற்றை பார்க்கலாம்.
    பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரத்தில் கோனேரி ஆற்றங்கரையில் வாலாம்பிகை உடனுறை வாலீஸ்வரர் கோவில் உள்ளது. பெரம்பலூரில் இருந்து சென்னை செல்லும் 4 வழிச்சாலையில் 15 கி.மீ. தொலைவில் இந்த ஆலயம் இருக்கிறது. பல்வேறு சரித்திர சிறப்புக்களை பெற்றுள்ள இந்தக் கோவில், சோழர் ஆட்சி காலத்தில் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு குடமுழுக்கு விழா நடத்தப்பட்டுள்ளதாக தல வரலாறு தெரிவிக்கிறது.

    இந்தக் கோவில் கிருதயுகம், பிரம்மபுரீஸ்வரர், பிரகன்நாயகி ஆகிய திருநாமப் பெயர்களை கொண்டதாகவும், திரேதாயுகத்தில் இந்திரன் அம்சமான வாலி வழிபட்டதால் வாலீஸ்வரர், வாலாம்பிகை ஸ்தலமாகவும் திகழ்ந்துள்ளது.

    ‘திருவாலீஸ்வரத்து மகாதேவர், திருவாலீஸ்வரத்து பெருமாள், திருவாலீஸ்வரத்து ஆழ்வார், திருவாலீஸ்வரத்து பரமேஸ்வரர், திருவாலீஸ்வரமுடைய நாயனார், திருவாலிநாதர், திருவாலீஸ்வரமுடைய தம்பிரான், ஸ்ரீவாலிநாயகர், வாலீஸ்வர சுவாமி’ என்பது இறைவனின் திருப்பெயர்கள்.

    சங்க காலத்தில் ஏறத்தாழ கி.பி. 910-ம் ஆண்டில் கண்டீரக்கோ என்ற மன்னர் ஆட்சி புரிந்ததால் ‘கண்டீரபுரம்’ எனப்பெயர் பெற்று வாலியுடன் தொடர்பு கொண்டு மருவி வாலிகண்டபுரம் ஆனதாக இந்த ஆலய கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இந்த கோவிலில் 134 கல்வெட்டுகள் உள்ளன.

    இந்த ஆலயம் ஏழுநிலை ராஜகோபுரத்துடன் அழகுற காட்சியளிக்கிறது. கோவில் தீர்த்தம் சரவண தீர்த்தம் ஆகும். தல விருட்சம் மாவிலிங்கை மரம். இந்த ஆலத்தில் உள்ள இறைவனை அருணகிரி நாதர், ஸ்ரீமத்பாம்பன் சுவாமிகள், குமரகுருபரர், தண்டபாணி சுவாமிகள், சிதம்பர சுவாமிகள், ராமலிங்க அடிகளார், திருமுருக கிருபானந்த வாரியார் ஆகியோர் பாடியிருக்கிறார்கள். அருணகிரிநாதர் தமது திருப்புகழில் 229 தலங்களை குறிப்பிட்டு பதிகங்களை பாடியுள்ளார்.

    பிரதோஷ காலத்தில் வாலிகண்டபுரம் வாலீஸ்வரரை வழிபட்டால், சங்கடங்கள் விலகி மனதிற்கு வலிமை சேர்க்கும் என்பது ஐதீகம். இந்து சமய அறநிலையத்துறை பராமரிப்பில் உள்ள இந்தக் கோவில் இந்திய தொல்பொருள் இலாகா கட்டுப்பாட்டில் உள்ளது.

    கோவிலின் ராஜகோபுரத்தின் முன்பு வடக்கு பகுதியில் கட்டப்பட்டுள்ள அலங்கார மண்டபம் மற்றும் அவற்றில் வடிவமைக்கப்பட்டுள்ள சிற்ப வேலைப்பாடுகள் காண்போரை வியக்க வைக்கின்றன. ராஜகோபுரம் வழியே உள்ளே நுழைந்தவுடன் நந்தி எதிர்படுகிறது. கட்டிடக்கலையின் அறிவியல் படி ராஜகோபுரத்திற்கு சற்று தாழ்நிலையில் கோவில் கருவறைகள் அமைக்கப்படுவது பெரும்பாலான கோவில் கட்டிடக்கலையின் நுணுக்கம் ஆகும். அதுபோல வாலீஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்திற்கு தாழ்வான நிலையில் கோவில் கருவறை மற்றும் இதர சன்னிதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவில், சிவன் கோவில், கோவில்,

    ராஜகோபுரத்தில் நுழைந்தவுடன் வலதுபக்கம் அழகுற வடிவமைக்கப்பட்ட ஒரு குளம் உள்ளது. மன்னர் வந்தால் நீராடி இறைவனை வழிபடுவதற்காக 1761-ல் மதுரையை ஆட்சிபுரிந்த கிருஷ்ண கோனாரால் இக்குளமும், தர்பார் மண்டபமும் கேரள கலை அம்சத்துடன் கட்டப்பட்டுள்ளது.

    கோவிலில் நுழைந்தவுடன் வலதுபுறம் வாலாம்பிகை தெற்கு நோக்கி காட்சி அளிக்கிறார். வாலாம்பிகை சன்னிதியின் எதிரே உள்ள பகுதியில், சிதைந்துபோன நிலையில் சில சிற்பங்கள் காட்சி அளிக்கின்றன. கி.பி. 18-ம் நூற்றாண்டில் ஆற்காடு நவாப்கள் வாலிகண்டபுரத்தை மையமாக வைத்து போர்புரிவதற்காக ரஞ்சன்குடியில் கோட்டையை எழுப்பினர். அப்போது வாலீஸ்வரர் கோவிலில் இருந்த சிற்பங்கள் சிதைக்கப்பட்டதாக வரலாறு தெரிவிக்கிறது.

    வாலாம்பிகை சன்னிதியை கடந்து உள்ளே சென்றால், வாலீஸ்வரர் கருவறை உள்ளது. இதில் லிங்க வடிவில் வாலீஸ்வரர் வீற்றிருக்கிறார். வாலீஸ்வரர் கருவறைக்கு வெளிப்பிரகாரத்தில் வடக்கு நோக்கி தண்டத்துடன் காட்சி அளிக்கும் சுமார் 9 அடி உயர தண்டாயுதபாணி சிலை உள்ளது. அதற்கு எதிரே ஒரு லிங்கத்தில் 1008 லிங்கம் வடிவமைக்கப்பட்ட சகஸ்ர லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதனால் இக்கோவில் பிரசித்தி பெற்று விளங்குகிறது.

    இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்தில் வானரத் தலைவனான வாலி, ஈஸ்வரனை வழிபட்ட இடம் ‘வாலீஸ்வரம்’ என்றும், ராமன் சீதையை தேடி இலங்கை நோக்கி சென்ற வழியில் வாலியை கண்ட இடம் ‘வாலிகண்டபுரம்’ என்று பெயர் பெற்றுள்ளதாக இத்தல வரலாற்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இக்கோவிலில் உள்ள தண்டபாணிக்கு, கிருத்திகை விழா கமிட்டி சார்பில் ஆண்டுதோறும் ஆடிக்கிருத்திகை விழாவும், திருக்கார்த்திகை விழாவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 1996-ல் கும்பாபிஷேக விழா விமரிசையாக நடத்தப்பட்டது. தற்போது கோவில் உள்பிரகார புணரமைப்பு பணிகள் நடந்துவருகின்றன.

    இந்தக் கோவில் தினமும் காலை 6.30 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரையும் பக்தர்கள் வழிபாட்டிற்காக திறந்து வைக்கப்படுகிறது.
    கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், கூத்தாட்டுக்குளம் அருகிலுள்ள நெல்லியக்காட்டு மனா என்னும் இடத்தில் அமைந்துள்ளத பத்ரகாளி கோவில்.
    உடல் நலத்திற்கான மருந்தைத் தயாரித்து, அதை அம்மனுக்குப் படைத்து வழிபடுவதுடன், அந்த மருந்தையேப் பிரசாதமாகத் தரும் சிறப்புமிக்கக் கோவிலாகக் கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், கூத்தாட்டுக்குளம் அருகிலுள்ள நெல்லியக்காட்டு மனா என்னும் இடத்தில் அமைந்திருக்கும் பத்ரகாளி கோவில் இருக்கிறது.

    தல வரலாறு :

    கேரளாவில் திருமந்தாம்குந்து என்ற இடத்தில் நெல்லியக்காட்டு இல்ல மரபு வழியைச் சேர்ந்த பெரியவர் ஒருவர் வைத்தியத் தொழில் செய்து வந்தார். அவரது கனவில் தோன்றிய தன்வந்திரி பகவான், ‘தளிக்குன்னு’ என்ற இடத்தில் வைத்தியர் எவரும் இல்லாததால், அங்கிருப்பவர்கள் பலவிதமான நோய்களால் துன்பமடைந்து கொண்டிருப்பதாகவும், அந்த ஊருக்குச் சென்று தங்கி, அங்கிருப்பவர்களுக்கு வைத்தியம் செய்ய வேண்டுமென்றும் கூறியிருக்கிறார்.

    மறுநாள் காலையில், அந்தப் பெரியவர் தான் கண்ட கனவைத் தன் குடும்பத்தினரிடம் சொல்ல, அவர்களும் அதை ஏற்றுத் தன்வந்திரி பகவான் சொன்ன இடத்திற்குச் செல்ல முடிவு செய்தனர். அங்கிருந்து கிளம்பியவர்கள், தங்களின் குடும்பத் தெய்வமாக வழிபட்டு வந்த பத்ரகாளியம்மன் சிலையையும் எடுத்துச் சென்றனர்.

    தளிக்குன்னு அருகில் கூத்தாட்டுக்குளம் என்ற இடத்தில் சென்று தங்கிய அவர்கள், அங்கு பத்ரகாளியம்மன் சிலையை நிறுவி வழிபட்டு, அந்தப்பகுதி மக்களுக்குச் சிகிச்சை அளிக்கத் தொடங்கினர். நாளடைவில், அந்தக் குடும்பத்தினர் விஷக்கடிக்குச் சிகிச்சை அளிப்பதில் சிறப்பு பெற்றனர்.

    இந்நிலையில் ஒரு நாள், பாம்பு கடித்து உயிருக்குப் போராடிய நிலையில் கொண்டு வரப்பட்ட ஒருவருக்குச் சிகிச்சையளித்து அவரைக் காப்பாற்றினர். ஆனால், சிறிது நேரத்தில் அங்கிருந்த கால்நடைகள் அனைத்தும் இறந்து போயின. அதனால் கவலையடைந்த அந்தக் குடும்பத்தின் பெரியவர், தங்களது குடும்பத் தெய்வமான பத்ரகாளியம்மன் சிலையின் முன்னால் அமர்ந்து வழிபட்டார்.

    அப்போது அங்கு வந்த ஒருவர், சில ஓலைச்சுவடிகளை அவரிடம் கொடுத்து, ‘விஷக்கடிக்குச் சிகிச்சை செய்வதை விட்டுவிட்டு, பொதுவான சிகிச்சைகளுடன், இந்த ஓலைச்சுவடியில் சொல்லப்பட்டிருப்பதை போல், கண் சிகிச்சைக்கான மருந்துகளைத் தயாரித்து, அதை அம்மனுக்குப் படைத்து நோயாளிகளுக்குத் தாருங்கள்’ என்று சொல்லிச் சென்றார்.

    அதனை ஏற்றுக் கொண்ட பெரியவருக்கு, தன்னிடம் ஓலைச்சுவடியைக் கொண்டு வந்து கொடுத்தவர் தன்வந்திரி பகவான் என்பது பின்னரே தெரிந்தது. அதனைத் தொடர்ந்து, அங்கு தன்வந்திரி பகவானுக்கும் தனியாகச் சிலை செய்து நிறுவப்பட்டது என்று இக்கோவிலின் தல வரலாறு கூறுகிறது.

    தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது ஆலகால விஷம் எங்கும் பரவியது. விஷத் தாக்கத்தால் எங்கும் கொடிய நோய்கள் பரவத் தொடங்கியது. அதிலிருந்து, தங்களைக் காப்பாற்றும்படி தேவர்கள் அனைவரும் தேவ மருத்துவர்களான அஸ்வினி குமாரர்களின் உதவியை நாடினர். தேவர்கள் செய்த தீவினையின் காரணமாகவே அப்படியொரு நோய் ஏற்பட்டிருப்பதாகவும், அதிலிருந்து தேவர்களைக் காக்கப் பார்வதி தேவியின் உதவியைப் பெற வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.

    அதனைத் தொடர்ந்து, தேவர்கள், அசுரர்கள் மற்றும் அஸ்வினி குமாரர்கள் ஆகியோர் அம்மனிடம் சென்று, தங்களை அந்தக் கொடிய நோயிலிருந்து காப்பாற்றியருளும்படி வேண்டினர். அவர்களது வேண்டுதலில் மனமிரங்கிய அம்மன், தன் முன்னிலையில் தேவமருத்துவர்களான அஸ்வினி குமாரர்களை மருந்து தயாரிக்கச் சொன்னார்.



    அவர்களும் அம்மனின் முன்பாக, ஒரு இடத்தில் அதற்கான மருந்தினைத் தயாரித்தனர். அதன் பிறகு, அந்த மருந்தைச் சாப்பிட்ட தேவர்கள் மற்றும் அசுரர்கள் அனைவரும் தங்களுக்கு ஏற்பட்ட நோயில் இருந்து மீண்டு நலம் பெற்றனர். அஸ்வினி குமாரர்கள் மருந்து தயாரித்த அந்த இடத்தில்தான் தற்போதைய பத்ரகாளியம்மன் கோவில் அமைந்திருக்கிறது என்று ஒரு கூடுதல் தகவலும் சொல்லப்படுகிறது.

    கோவில் அமைப்பு

    இக்கோவிலில் இருக்கும் பத்ரகாளியம்மன் நெல்லியக்காட்டு பகவதி என்றும், நெல்லியக்காட்டு அம்மன் என்றும், கூத்தாட்டுக்குளம் பகவதி என்றும், கண்ணொளி தரும் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார். இக்கோவில் வளாகத்தில் தன்வந்திரி பகவானுக்கும் தனிச் சன்னிதி அமைக்கப்பட்டிருக்கிறது.

    இங்கிருக்கும் பத்ரகாளி சன்னிதியில் தட்டு சமர்ப்பித்தல், ஔஷத (மருந்து) சேவை, சுற்று விளக்கில் திரி சமர்ப்பித்தல், பட்டு மற்றும் தாலி சமர்ப்பித்தல், ரோகசமண பூஜை போன்றவையும், தன்வந்திரி சன்னிதியில், பால் மற்றும் வெண்ணெய் சமர்ப்பித்தல், பால்பாயசம் படைத்தல், தாமரைப்பூ சமர்ப்பித்தல், ரோகசமண புஷ்பாஞ்சலி போன்றவை பக்தர்களின் வேண்டுதலுக்கேற்ப சிறப்பு வழிபாடுகளாகச் செய்யப்பெறுகின்றன.

    இக்கோவிலில், ஆண்டுதோறும் மலையாள நாட்காட்டியின்படி மீனம் (பங்குனி) மாதம் ஹஸ்தம் நட்சத்திரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கி 12 நாட்கள் வரையிலான சிறப்புத் திருவிழா நடக்கிறது. இதே போன்று, கர்க்கடகம் (ஆடி) மாதம் முதல் நாள் தொடங்கி கடைசி நாள் வரை ஔஷத (மருந்து) சேவை திருவிழா நடைபெறுகிறது.

    மருந்துப் படையல்

    இக்கோவிலில் மருந்து சேவைத் திருவிழா நாட்களில் பல்வேறு நோய்களைத் தீர்க்கும் மூலப் பொருட்களைச் சேர்த்துத் தயாரிக்கப்படும் மருந்து, அம்மன் சிலை முன்பாகப் படைக்கப்பட்டு, பின்னர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இம்மருந்தினைப் பெற்று 41 நாட்கள் எடுத்துக் கொள்பவர்களுக்குத் தீராத நோய்கள் எதுவாக இருப்பினும், அந்நோய் நீங்குவதுடன், முன்பிறவியில் செய்த பாவங்களும் தீர்ந்து போய்விடும் என்பது இக்கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

    மருந்துச் சேவைத் திருவிழாவின் போது ஒரு நாள், அம்மன் கோவில் முன்பாகக் கோவிலில் தயாரிக்கப்படும் மருந்தைப் பொங்கலுடன் சேர்த்து, மருந்துப் பொங்கலிடும் நிகழ்வு நடத்தப்பெறுகிறது. இந்த மருந்துப் பொங்கலிடும் நாளில் கேரளா மட்டுமின்றி, தமிழகம், புதுச்சேரி, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டு மருந்துப் பொங்கலைப் பெற்றுச் செல்கின்றனர்.

    இக்கோவிலில் காலை 5 மணி முதல் மதியம் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் தினசரி வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

    அமைவிடம்

    கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் எர்ணாகுளம் நகரில் இருந்து 46 கிலோமீட்டர் தொலைவிலும், கோட்டயத்தில் இருந்து 38 கிலோ மீட்டர் தொலைவிலும் கூத்தாட்டுக்குளம் எனும் ஊர் இருக்கிறது. இங்கிருந்து 2 கிலோமீட்டர் தொலைவிற்குள்ளாக இருக்கும் நெல்லியக்காட்டு மனாவில் அமைந்திருக்கும் இக்கோவிலுக்குச் செல்ல இரு நகரங்களில் இருந்தும் பேருந்து வசதிகள் இருக்கின்றன.
    சிருங்கேரி ஸ்ரீசாரதாம்பாள் தலத்தில் பக்தியும் ஞானமும் ஒருங்கே இணைந்து இருப்பதை உணர முடிகிறது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    சிருங்கேரி சிறப்புகள் :

    துங்கா நதியின் இடது கரையில் சிக்மகளூர் மாவட்டத்தில் இது அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் உள்ளது சிருங் கேரி. நெல்வயல்கள், பாக்கு மரங்கள் புடைசூழ அமைந்துள்ளது.

    ராமாயணத்தில் வரும் கலைக் கோட்டு முனிவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக் கிறீர்களா? அவர் தான், குழந்தை வேண்டி தசரதன் செய்த புத்திர காமேட்டி யாகத்தை முன்னின்று நடத்தியவர். பெயர் கலைக்கோட்டு முனிவர். இவருடைய வேறு பெயர் ரிஷ்ய சிருங்கர். இவர் பெயரில் அமைந்தது இவ்வூர்.
    அத்வைத தத்துவத்தை உலகறியச் செய்த ஆதி சங்கரருடன் தொடர்புடையது. கல்விக் கடவுளாகக் கருதப்படும் சாரதா தேவிக்கும், ஆதி சங்கரருக்கும் இங்கு கோவில்கள் உள்ளன.

    இவை தவிர சிற்பக்கலைச் சிறப்பு வாய்ந்த வித்யாசங்கரர் கோவிலும் இங்கு உள்ளது. மலைக்குன்றுகளும் நிலமும் நீர்வளமும் அமைதியான சூழ்நிலையை உண்டாக்குகின்றன. ஆதிசங்கரர் ஏற்படுத்திய நான்கு மடங்களில் சிருங்கேரியில் உள்ள சாரதா பீடமே முதன்மையானது. அதாவது முதன்முதலில் நிறுவியது.
    நமது நாட்டில் நிலவிய பல்வேறு சமயங்களை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் ‘அத்வைதம்’ என்னும் தமது கொள்கையை நிலை நாட்டுவதற்காகத் தெற்கு வடக்காகவும், கிழக்கு மேற்காகவும் தாம் ஒருவராகவே பயணம் செய்து போதனைகளை செய்தார் ஆதிசங்கரர்.

    பாரத நாட்டின் நான்கு இடங்களில், அதாவது பத்ரிநாத், பூரி, சிருங்கேரி, துவாரகை ஆகியவற்றில் மடங்களை நிறுவினார் ஆதிசங்கரர். ஆதிசங்கரர் வாரணாசிக்குச் சென்று அங்கிருந்த ‘சுரேஸ்வராச் சாரியார்’ என்ப வரைச் சந்தித்து பல சமயக்கருத்துகளைப் பற்றி உரையாடிய பிறகு சிருங்கேரியில் முதலில் சாரதா பீடத்தை நிறுவினார்.

    சாரதா பீடத்திற்கு பல்வேறு மரபைச் சேர்ந்த மன்னர்கள் கொடைகளை வழங்கியுள் ளார்கள். விஜயநகர மன்னர்கள், ஐதராபாத் நவாப்புகள், ஹைதர் அலி, திப்பு சுல்தான், மைசூர் உடையார்கள், மராட்டிய பேஸ் வாக்கள், கேரள அரசர்கள் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர் கள். பிரிட்டிஷ் அரசும் இந்த மடத்திற்கு தனது பங்கை செய்துள்ளது. மிகச்சிறந்த கல்விமான்களாகவும், மதாச்சாரியார் களாகவும் விளங்கிய வித்யா தீர்த்தர், பாபதி தீர்த்தர், வித்யாரணயர், நரசிம்மபாரதி, சந்திர சேகர பாரதி முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் இந்த மடத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர்கள். இவர்களுக்கெல்லாம் மூலகாரணமாக விளங்கு பவர் ஆதிசங்கரர். இங்குள்ள ‘சார தாம்பாள் கோவில்’ திராவிடக் கலைப்பாணியில் அமைந்துள்ளது. கி.பி. 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜனார்த் தனர் கோவில் விஜயநகர மன்னர்களின் காலத்தை சேர்ந்தது.

    சிருங்கேரியிலுள்ள ஒரு சிறிய மலையின் மீது பழமையான சிவன் கோவிலும் உள்ளது. இந்நகரிலுள்ள மற்றொரு பழமையான கோவில் பார்சுவ நாத தீர்த்தங்கரர் என்றும் சமண முனிவருக்காக எழுப்பப்பட்டது. சிருங்கேரி மடத்திற்கு நாடு முழுவதும் எழுபதுக்கும் மேற்பட்ட கிளை மடங்கள் உள்ளன. அங்கு வேத பாடசாலை களும், ஆன்மீகச் சொற்பொழிவு களும் நடந்து வருகின்றன.

    ஒவ்வொரு கிளையிலும் நன்கு பராமரிக்கப்படும் நூலகம் ஒன்றும் உள்ளது.சிருங்கேரிக்கு வரும் பயணிகள் ‘பயணிகள் விடுதிகளில்’ தங்கலாம். அவை மடத்தின் நிருவாகத் தில் உள்ளன. இலவச உணவும் வழங்கப்படுகிறது. கோவிலின் அன்னசாலையிலும் இரவு 8.30 மணி வரைத்தான் உணவு வழங்கப்படும். அந்த இடம் மிகத் தூய்மையாகக் காணப்படுகிறது. உணவு பரிமாறப்படும் எவர்சில்வர் தட்டுகள் ஆங்காங்கு சிறுசிறு குன்றுகளாகக் காணப்படுகின்றன.

    முதலில் சூடான அரிசிச் சாப்பாடு, பிறகு மிளகு ரசம், சாம்பார், மோர் இந்த முறையில் பரிமாறப்படுகிறது. அளவு கிடையாது. சாரதாம்பிகை கோவில் ஒரு திருச்சுற்றுடன் அமைந்துள்ளது. எளிமையான கட்டமைப்பு. சிருங்கேரி பீடாதிபதி தினமும் இரவு பத்து மணிக்கு சிறப்பு பூஜை நடத்துவார். அந்த சிறப்பு பூஜை தனியாக ஒரு தியான மண்டபத்தில் நடக்கிறது. அந்த இடத்திற்கு செல்ல துங்கா ஆற்றை கடந்து செல்ல வேண்டும். அதற்கு வசதியான பாலம் கட்டப்பட்டுள்ளது. “யாரும் ஆற்றில் இறங்க வேண்டாம். சுழல் உள்ளது”.

    கோவில் அமைப்பு :


    சாரதா அன்னை வீற்றிருக்கும் மண்டபத்திற்குக் கீழ்ப்புறமாய் பலிபீடம், உற்சவ மூர்த்திகள், வெள்ளியாலான விக்னேஷ்வரர், இடதுப்புறம் கலைவாணியாம், சரஸ்வதிதேவி ஆகியோர் காட்சியருளுகின்றனர்.

    கருவறையைச் சுற்றி வரும் போது தெற்குப் பிரகாரத்தில் வியாக்யான சிம்மாசனத்தில் ஸ்ரீ சாரதாம்பிகையின் உற்சவ விக்கிரகம் வைக்கப்பட்டுள்ளது. இம் மடத்தின் பீடாதிபதியாய் பட்டம் ஏற்கும் ஒவ்வொரு சன்னிதானமும் இச்சிம்மாசனத்தில் தான் முதலில் அமர்வார்களாம். இச்சிம்மாசனத்தின் அருகே வெள்ளி சிம்மாசனம் ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது.

    மேற்கு பிரகாரத்தில் ஸ்ரீ சக்தி கணபதி பத்து கரங்களுடன் காட்சியளித்திடுகின்றார். இவைத் தவிர வீடுகளில் விக்கிரகங்களை வைத்து பூஜை செய்திட இயலாதவர்கள் கொண்டு வந்து வைத்துச் சென்ற பலதரப்பட்ட விக்கிரகங்களும் இங்கு வைக்கப்பட்டுள்ளன. அன்னையின் சன்னிதிக்கு நேர் மேற்குப் புறமாய் ஸ்ரீ புவனேஸ்வரியின் பஞ்சலோக விக்கிரகம் உள்ளது. இதனை அடுத்து வெள்ளிரதம் உள்ளது.

    பிரதி வெள்ளிக்கிழமையும் அன்னையை இத்திருத்தேரில் அமரச் செய்து பிரகாரத்தைச் சுற்றி வருகிறார்கள். நவராத்திரி தினங்களில் தினமும் இந்த ரதோற்சவம் நடைபெறும். முன் மண்டபத்தில் காணப்படும் இரு தூண்களில் ஸ்ரீராஜ ராஜேஸ்வரியும், ஸ்ரீ மகிஷாசுர மர்த்தனியும் அபய, வரத கரங்களுடன் எழுந்து அருளியுள்ளனர். இம்மண்டபத்தில் இரு துவார பாலகர்களும் உள்ளனர்.

    சிருங்கேரி கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு வடக்கிலும், தெற்கிலும் நுழை வாயில்கள் உள்ளன. கோபுரத்திற்கு வெளியே முப்பத்து ஐந்தடி உயரமுடன் கூடிய தீபஸ்தம்பம் காணப்படுகிறது. சாரதா கோவிலுக்கு இடபுறமாய் ஒரு பெரிய மண்டபம் உள்ளது. இம்மண்டபத்தில் ஸ்ரீ ஆதிசங்கரர் திருக்கோவில் கொண்டுள்ளார். இரண்டு அடி உயரத்துடன் கூடிய பீடத்தில் யோகாசனத்தில் ஆச்சாரியார் அமர்ந் திருக்கிறார். ஆதிசங்கரர் வலப்பக்கமும் தண்டமுடன் இடப்பக்கம் கமண்டலமும் வைக்கப்பட்டுள்ளன. பீடத்தின் கீழே நான்கு சீடர்கள் காணப்படுவதுடன் பீடத்தின் அடியில் ஒரு சிவலிங்கமும் வைக்கப்பட்டுள்ளன.

    அம்மாளின் திருக்கோவிலுக்கு தென்புறம் ஆதிசங்கரரின் சீடர்களின் ஒருவரும் இம் மடத்தின் முதல் ஆச்சாரியாருமான ஸ்ரீ சுரேச்வதாச்சாரியாரின் அதிர்ஷ்டான ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்கும் துங்க நதித்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ வித்யா சங்கர ஆலயத்திற்கும் இடையே ஸ்ரீ ஜனார்த்தனனின் சிறிய அளவிலான கோவில் ஒன்றும் அமைந்துள்ளது.

    ஸ்ரீ வித்யா சங்கர ஆலயம் ஸ்ரீசக்கரவடிவுடன் அமைந்திருக்கின்றது. இவ்வாலயம் 600 ஆண்டுகளுக்கு முன்பாக எழுப்பப்பட்டது. அக்கால சிற்ப கட்டுமான வேலைகளுக்கு எடுத்துக்காட்டாகவும் இவ்வாலயம் விளங்குகிறது. கருவறையில் ஸ்ரீ வித்யா சங்கரர் லிங்க உருவாய் எழுந்தருளியுள்ளார். கருவறைக்கு வெளியே உள்ள இரண்டு சிறுமண்டபங்களில் ஸ்ரீ வித்யா கணபதியும் மகிஷாசுர மர்த்தினியும் சன்னிதி கொண்டுள்ளனர்.

    கருறை மண்டப வெளிச் சுவருக்கு தெற்கில் மகா விஷ்ணு, சரஸ்வதி, மேற்கில் உமையவள் மகேஸ்வரர் ஆகியோருக்கான சன்னிதிகள் அமைந்துள்ளன. இவை அல்லாமல் சிவதாண்டவ மூர்த்தி நம்பி நாராயணர், ஸ்ரீநிவாசர், ஹரிகரர் ஆகியோருக்கான வெண்கல திருஉருவங்களும் சிவலிங்கங்களும் சாளக்கிராமங்களும் உள்ளன.

    இத்தலத்தில் பக்தியும் ஞானமும் ஒருங்கே இணைந்து இருப்பதை உணர முடிகிறது. ஸ்ரீ ஆதிசங்கரரின் அத்வைத தத்துவத்தை விளக்கிடும் ஒளி விளக்காய் திகழும் இவ்வாலயத்தை தரிசிப்பது பிறவிப்பயன் ஆகும்.

    பக்தர்களுக்கு ஸ்ரீசாரதா பீடத்தினால் செய்யப்பட்டுள்ள வசதிகள் :

    சிருங்கேரிக்கு எண்ணற்ற யாத்ரீகர்களும் பக்தர்களும் வருகை புரிகின்றனர். அவர்கள் தங்க வசதியாக ஸ்ரீமடத்தினால் ஸ்ரீசங்கர கிருபா, ஸ்ரீசாரதா கிருபா, ஸ்ரீபாரதீ தீர்த்த கிருபா, யாத்ரீ நிவாஸ், ஸ்ரீசங்கர சதனம், ஸ்ரீ ஸ்ரீனிவாச நிலையம் முதலிய விடுதிகள் கட்டப்பட்டிருக்கின்றன.

    விடுதிகளில் தங்க விரும்புவோர் ஸ்ரீமடத்தின் நுழைவாயிலின் அருகேயுள்ள வரவேற்பு மையத்தை அணுகலாம். முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நிம்மதியாக ஆலய தரிசனம் செய்வதற்கு வசதியாக சக்கர நாற்காலிகளை எவ்வித கட்டணமுமின்றி ஸ்ரீமடம் வழங்குகிறது.

    தேவைப்படுவோர் இவற்றை வரவேற்பு மையத்தில் பெற்றுக்கொண்டு, பயன்படுத்திவிட்டு பின்பு மையத்திலேயே திரும்ப ஒப்படைத்துவிடலாம். ஸ்ரீசாரதாம்பாளின் பிரசாதமாக தினமும் மதியம் (12.15 மணி முதல் 2.30 மணி வரை) மற்றும் இரவு (7.15 முதல் 8.30 வரை) வேளைகளில் ஸ்ரீமடத்தின் அன்னக்கூடத்தல் சுவையான உணவு வழங்கப்படுகிறது. ஸ்ரீபாரதீ தீர்த்த பிரசாதா என அழைக்கப்படும் பிரம்மாண்டமான ஸ்ரீமட உணவுக்கூடத்தில் ஒரே சமயத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அமர்ந்து உணவு உட்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    வாகனங்களில் வருகை புரியும் பக்தர்கள் தங்களது வாகனங்களை நிறுத்திட ஸ்ரீமடத்தின் அருகே துங்கையின் வடகரையில் இடம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. பக்தர்களின் அவசர மருத்துவ தேவைகளுக்கு உதவிட ஸ்ரீமடத்தால் நடத்தப்படும் ஸ்ரீசாரதா தன்வந்திரி இலவச மருத்துவனையும் உள்ளது.

    திருவிழாக்களும் சிறப்பு வழிபாடுகளும் :

    ஜனவரி மாத மத்தியில் (தை மாத தொடக்கத்தில்) மகர சங்கராந்தி பூஜை நடைபெறுகிறது. அதே மாதத்தில் லலிதா பஞ்சமி பூஜையும், சூரிய பூஜையான ரதசப்தமியும் நடைபெறுகின்றன.

    பிப்ரவரி- மார்ச் மாத தருணத்தில் சிவராத் திரியின் போது ஜகத் குருநாதர் இரவு முழு வதும் கண் விழித்து இடைவிடாது ஸ்ரீ சந்திர மௌலீஸ்வரருக்கு விதவிதமான அபிஷேக ஆராதனை களுடன் கூடிய பூஜை யைச் செய்வார். குருநிவாஸ் என அழைக்கப்படும் பிரம்மாண்டமான பூஜா வளாகம் அன்றைய இரவு எள் விழக்கூட இடமில்லாத வகையில் பக்தர்களால் நிரம்பியிருக்கும் மார்ச், ஏப்ரல் தருணங்களில் உகாதி (கன்னட புதுவருடம்) மற்றும் ஸ்ரீராமநவமி பண்டிகைகள் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

    ஏப்ரல்,மே மாத தருணத்தில் ஸ்ரீசங்கர ஜெயந்தி விழா ஸ்ரீ பீடத்தில் ஐந்து நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. விசேஷ ஆராதனைகள் மற்றும் வித்வத் சதஸ் எனப்படும் பண்டிதர்களின் சபைச்கூட்டங்களும் வெகு விமரிசையாக நடைபெறும். இம்மாதங்களின் பொழுது தான் ஸ்ரீகிரிஜா கல்யாணம் மற்றும் ஸ்ரீநரசிம்ம ஜெயந்தி ஆகியவையும் கொண்டாடப்படுகின்றன.

    ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மழைக்காலங் களில் சாதுர்மாஸ்ய விரதத்தை பீடத்தின் ஜகத் குரு கடைப்பிடிக்கிறார். சன்னியாசிகள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விரதமாக இது கருதப்படுகிறது. இக்கால கட்டத்தில் ஜகத்குருநாதர் இருக்கும் இடத்தை நாடி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அவருக்கு தங்கள் மரியாதைகளை சமர்பித்து அவரது ஆசிகளை பெற்றுச் செல்வார்கள்.

    ஸ்ரீவியாஸ் பூஜையுடன் தொடங்கப்படும் இந்த சாதுர்மாஸ்ய காலங்களில் தான் மிக விசேஷமான பூஜைகளான சிராவண சோமவார பூஜை, ஸ்ரீ வரமகாலட்சுமி பூஜை, ஸ்ரீகிருஷ்ண ஜன்மாஷ்டமி, ஸ்வர்ண கௌரி விரதம், ஸ்ரீவரசித்தி விநாயக பூஜை, ஸ்ரீ கேதாரீஸ்வர விரதம், ஸ்ரீவாமன ஜெயந்தி, ஸ்ரீ அனந்த பத்மனாப விரதம், ஸ்ரீஉமா மகேஸ்வர விரதம் ஆகியவை ஜகத்குருநாதரால் நடத்தப்படுகின்றன. ஸ்ரீசாரதா பீடத்தின் பிரதான திருவிழா நவராத்திரி விழாவாகும், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பத்து நாட்கள் கோலாகலமாக நடைபெறும். இவ்விழாவில் கலந்த கொள்ள நாடெங்கி லுமிருந்து ஆயிரக்கணக் கான பக்தர்கள் சிருங்கேரிக்கு வருகை புரிவார்கள்.

    ஸ்ரீசாரதா பீடத்தின் 12-ம் குருவான ஸ்ரீ வித்யாரண்ய சுவாமிகளிடம் விஜய நகர மன்னர்கள் வேண்டிக் கேட்டுக் கொண் டற்கு இணங்க நவராத் திரியின் ஒன்பது தினங்களில் மட்டும் பீடத்திலுள்ள ஆசார்யசுவாமிகள் மன்னர்களால் சமர்பிக்கப்பட்ட இராஜ குக்கள் அணியும் தர்பார் உடைகளை அணிந்து பக்தர்களுக்கு காட்சி தருவது வழக்கம்.

    நவராத்திரியின் அனைத்து நாட்களிலும் ஸ்ரீசாரதாம்பாள் விதவிதமான அலங்காரங்களுடன் பக்தர்களுக்கு அளிக்கும் தரிசனத்தை காண கண்கோடி வேண்டும் என்றால் அது மிகையாகாது.

    நவம்பர், டிசம்பர் தருணங்களில் கார்த்திகை சோமவார பூஜை, ஸ்ரீவித்யாசங்கர ஆராதனை, சிராப்தி த்வாதசீ, லஷ தீ போத்சவம் மகா பிரதோஷம், ஸ்ரீசுப்மண்ய லஷ்டி, அந்த காசுர வரதம், ஆர்த்ரோத்சவம், ஸ்ரீகாலபைரவ அஷ்டமி போன்ற பூஜைகள் நடத்தப்படுகின்றன. திருக்கார்த்திகை யட்டி நிகழ்த்தப்பெறும் லஷ தீ போத்சவம் மிக பிரசித்தி பெற்ற ஒன்று.

    அன்றைய தினம் இரவு சிருங்கேரி ஊர் முழுவதிலும் ஒரு லஷம் தீபங்கள் ஏற்றுப் படுகின்றன. மலகானிகரேசுவரர் குன்றிலிருந்து பார்த்தோமானால் சிருங்கேரி ஊரே வைர வைடூரியங்கள் நிறைந்த ஓர் ஆடையை தரிதிருப்பது போலவே தோன்றும்.

    மேற் கூறப்பட்டவை தவிர, சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தில் ஸ்ரீசாரதா ரதோத்சவம், ஸ்ரீதுர்காம்பாள் ரதோத்சவம், ஸ்ரீமலகானிகரேசுவரர் ரதோத்சவம், ஸ்ரீவித்யாசங்கரர் ரதோர்சவம் ஆகியவையும் நிகழ்த்தப்படுகின்றன.

    ஸ்ரீசாரதா பீட ஆலய தரிசன நேரங்கள் பூஜைகள் மற்றும் திருவிழாக்கள்


    ஸ்ரீஜகத்குருவை தரிசிக்கும் நேரங்கள்

    காலை 10.30மணி, மாலை5.30மணி, இரவு பூஜை 8.30 ( இவை பொதுவாக ஜகத்குரு மகாசுவாமிகள் தரிசனம் அளிக்கும் நேரங்கள். எனினும், திருவிழா சமயங்களிலும், விஜய யாத்திரை செல்லும் இடங்களி லும் இந்நேரங்கள் மாறுபடலாம்.)

    காலை தரிசனத்தின் போது ஜகத்குருநாதர், வந்திருக்கும் பக்தர்களுக்கு ஸ்ரீ சந்திரமௌலீஸ்வர அபிஷேக தீர்த்த பிரசாதத்தை வழங்குகிறார்.
    நாடெங்கி லுமிருந்து வருகை புரியும் பக்தர்கள் ஜகத் குருவிற்கு பிக்சாவந்தனம், வஸ்த்ர காணிக்கை, பாதுகாணிக்கை, பூஜா காணிக்கை முதலியனவற்றைச் சமர்பித்து தங்களது மரியாதைகளைச் செலுத்துகின்றனர்.

    அச்சமயமே பக்தர்கள் முந்தைய ஆசார்யரின் பாதுகைகளுக்கும், ஸ்ரீசாரதாம்பாளின் பாதுகை களுக்கும் பாத பூஜைகளையும் செய்கின்றனர். மாலை தரிசனத்தின் போது ஜகத் குருநாதர் தம்மை நாடு வோரது சந்தேகங்களை தீர்த்து வைத்து, அவர்களது பிரச்சினைகளுக்கு பரிகாரங்களையும் தந்தருள்கிறார்.

    இரவு ஜகத்குரநாதரே ஸ்ரீசந்திரமௌலீஸ்வர பூஜையைச் செய்கிறார். சிருங்கேரிக்கு வரும் பக்தர்கள் இறையருள் நிறைக்கும் இந்த பூஜையைக் காணாது செல்வதில்லை.

    ஆலய தரிசன நேரங்கள் :


    • ஸ்ரீசாரதாம்பாள் ஆலயம்
    காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை.
    மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை.

    • ஸ்ரீவித்யாசங்கரர் மற்றும் ஸ்ரீ தோரண கணபதி ஆலயங்கள்
    காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை
    மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை

    • ஸ்ரீமலஹானிகரேசுவரர் ஆலயம்
    காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை
    மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை

    • இதர ஆலயங்கள் மற்றும் சன்னதிகள்
    காலை 8.30 மணி முதல் மதியம் 12 மணி வரை.
    மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை.

    சிருங்கேரி மடத்தின் பணிகள் :

    சிருங்கேரி மடத்தின் சார்பில் சிருங்கேரியில் ‘சத்வித்யா சஞ்சீவினி பாடசாலை’ என்று ஒரு பள்ளி, அரசாங்க உதவி எதுவும் பெறாமல், தனித்து 100-க்கு மேற்பட்ட மாணவர்களுடன் இயங்கி வருகிறது. இந்த மாணவர்கள் வேதங்களையும், சாஸ்திரங்களையும் குருகுல முறையில் பயின்று வருகிறார்கள். பெங்களூருவிலும், ஐதராபாத்திலும், காலடியிலும் தர்க்கம், வேதாந்தம், மீமாம்சம் போன்ற உயர் வகுப்பு வேதக் கல்வி பயிலும் வசதிகள் கொண்ட கல்லூரிகள் இயங்கி வருகின்றன. உணவு மற்றும் தங்குமிட வசதிகளோடு, கல்வியானது உயர் தரத்தில் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்க விஷயம். நஞ்சன்கூடு, கோபிச்செட்டிப்பாளையம், ராமேஸ்வரம் மற்றும் பல இடங்களில் சிறிய அளவிலான வேத பாடசாலைகள் இயங்கி வருகின்றன.

    சிருங்கேரியில் 125 படுக்கை வசதி கொண்ட நவீன இலவச மருத்துவ மனை ஒன்று இயங்கி வருகிறது. பெங்களூருவிலும், சேலத்திலும் புற நோயாளிகள் சிகிச்சைப் பிரிவு மருத்துவமனைகள் உள்ளன. காலடி, பெங்களூரு, ஐதராபாத் மற்றும் புதுடெல்லி ஆகிய இடங்களில் நவீனக் கல்வி பயிற்றுவிக்கும் கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள் சிருங்கேரி மடத்தின் சார்பில் நடத்தப்படுகின்றன. ஆன்மிக பக்தர்கள் திருத்தல யாத்திரை செல்கையில், திருமலை, வாரணாசி, ஹரித்துவார், கயா, ராமேஸ்வரம், ஸ்ரீ சைலம், கோகர்ணா, காலடி போன்ற இடங்களில் தங்குமிட வசதிகளை சிருங்கேரி மடம் செய்து தருகிறது இவை தவிர, பல தர்ம காரியங்களையும் சிருங்கேரி மடம் செய்து வருகிறது.

    சிருங்கேரியை அடையும் பயண மார்க்கங்கள் :

    விமான மார்க்கம்:

    மங்களூர் சர்வதேச விமான நிலையத்திற்கு சுமார் 100 கி.மீ தொலைவில் சிருங்கேரி திருத்தலம் உள்ளது. விமான நிலையத்தில் இருந்து சிருங்கேரிக்கு வாடகை கார்கள் இயக்கப்படுகின்றன.

    ரெயில் மார்க்கம்:

    சிருங்கேரிக்கு அருகில் மங்களூர் (110 கி.மீ), உடுப்பி (80 கி.மீ), ஷிமோகா (105 கி.மீ) ஆகிய ரெயில் நிலையங்கள் உள்ளன.

    பேருந்து மார்க்கம்:

    சென்னை, பெங்களூர், மைசூர், மங்களூர், உடுப்பி, ஷிமோகா போன்ற நகரங்களிலிருந்து சிருங்கேரிக்கு நேரடி பஸ் வசதி உண்டு.

    சிருங்கேரி மடத்தை தொடர்பு கொள்ள....


    நிர்வாக அதிகாரி
    சிருங்கேரி மடம்,
    சிருங்கேரி, சிக்மகளூர் மாவட்டம்
    கர்நாடகா-577 139
    போன்: +91 8265 250123,
    +91 8265 250594, +91 8265 250192
    பேக்ஸ்: +91 8265 250792
    மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் தென்மேற்கு திசையில் இருக்கிறது, இம்மையில் நன்மை தருவார் கோவில். இந்த கோவில் வரலாற்றை பார்க்கலாம்.
    மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் தென்மேற்கு திசையில் இருக்கிறது, இம்மையில் நன்மை தருவார் கோவில். பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் இத்தலம், அற்புதங்கள் நிறைந்த தலமாக திகழ்கிறது. பத்து இலைகளுடன் கூடிய தசதள வில்வ மரம் இந்த ஆலயத்தின் தல விருட்சமாகும். இங்குள்ள தட்சிணாமூர்த்தியை, குரு தோஷம் இருப்பவர்கள் வழிபாடு செய்கிறார்கள். இந்த ஆலயத்தில் அறுபது மற்றும் எண்பதாம் வயதில் உள்ளவர்கள் திருமணம் செய்து கொள்ளும் நிகழ்வுகள் அதிக அளவில் நடைபெறுகின்றன. இந்த ஆலயத்தின் சில சிறப்பு தகவல்களை இங்கே பார்க்கலாம்.

    அதிசய சிவலிங்கம் :

    எந்தக் கோவிலுக்கு போனாலும் சிவலிங்கத்தின் முன் பகுதியையே நாம் தரிசிப்போம். ஆனால், இந்தக் கோவிலில் மட்டும் லிங்கத்தின் பின்புற தரிசனமும் நமக்கு கிடைக்கிறது. இதற்கு காரணம் உண்டு. மேற்கு நோக்கி அமர்ந்து சிவபூஜை செய்ய வேண்டுமென்பது நியதி. இங்கே சிவன் அம்பாளுடன் மேற்கு நோக்கி அமர்ந்து லிங்க பூஜை செய் கிறார். எனவே, லிங்கத்தின் முன்பகுதி அவர்களை நோக்கி இருக்கிறது. பக்தர்களுக்கு பின்புற தரிசனம் கிடைக்கிறது. மீனாட்சியம்மன் கோவிலில் சிவனுக்கு பட்டாபிஷேகம் நடக்கும் முன்பு, சிவன்- அம்பாள் இருவரும் இங்கு எழுந்தருள்வார்கள். இவ்விருவரையும் மூலஸ்தானத்தை நோக்கி வைத்து, இம்மையிலும் நன்மை தருவார், சுந்தரேஸ்வரர், மீனாட்சி மூவருக்கும் ஒரே சமயத்தில் தீபாராதனை, பூஜை நடக்கும். இந்த பூஜையை சிவனே செய்வதாக ஐதீகம்.

    சித்தர் சிவன் :

    மதுரையில் திருவிளையாடல் நிகழ்த்திய சிவன், வல்லப சித்தராக வந்து கல் யானையை கரும்பு தின்னச் செய்தார். இவர் பத்மாசனத்தில் வலது கையில் ஆகாயம் காட்டி, இடக்கையில் சாம்பிராணி குங்கிலியம் வைத்து காட்சி தருகிறார். கல்வி, கலைகளில் வளர்ச்சி பெறவும், மன அமைதிக்காகவும் இவருக்கு பவுர்ணமி மற்றும் திங்கட்கிழமைகளில் சாம்பிராணி பதங்க (தைலத்திற்கு முந்தைய நிலை) காப்பிட்டு, பூப்பந்தல் வேய்ந்து வேண்டிக்கொள்கின்றனர். தை மற்றும் சித்திரை மாதத்தில் வரும் பவுா்ணமி மற்றும் ஆடி அமாவாசை நாட்களில் இவருக்கு விசேஷ பூஜை நடக்கிறது.

    கல் ஸ்ரீசக்கரம் :

    பொதுவாக செம்பில் தான் ஸ்ரீசக்கரம் வரைந்து பிரதிஷ்டை செய்யப்படும். ஆனால், இங்கு கல் ஸ்ரீசக்கரம் இருப்பது வித்தியாசமான அமைப்பு. மத்தியபுரி நாயகி சன்னிதிக்கு பின்புறம், அரசமரத்தின் அடியில், லிங்கோத்பவர் காட்சி தருகிறார். திருமணத்தடை உள்ள பெண்கள் இவருக்கு பாலாபிஷேகம் செய்து, பாவாடை, தாலி கட்டி, மஞ்சள், குங்குமம் படைத்து வழிபடுகிறார்கள். இதனால் நல்ல வரன் அமையும் என்பது நம்பிக்கை.

    வருடத்திற்கு 54 அபிஷேகம் :

    இக்கோவிலில் பூஜையின் போது அர்ச்சகர், சுயரூப சிவன் மற்றும் லிங்கத்தின் மத்தியில் நின்று கொண்டு லிங்கத்தை பூஜிப்பார். இங்கு லிங்கத்திற்கு மட்டுமே அபிஷேகம் நடக்கிறது. சுய வடிவில் இருக்கும் சிவனுக்கு அமாவாசை, பவுர்ணமி மற்றும் மார்கழியில் 30 நாட்கள் என வருடத்திற்கு 54 முறை மட்டும் தைலாபிஷேகம் நடத்தப்படும். சிவராத்திரியன்று இரவில் ஹோமத்துடன் சங்காபிஷேகம் நடக்கும்.
     
    ராஜ உபசார அர்ச்சனை :

    மதுரையிலுள்ள பஞ்சபூத தலங்களில் இது பிருத்வி (நிலம்) தலம் ஆகும். எனவே புது கட்டிடம் கட்டத் தொடங்குபவர்கள், சிவன் சன்னிதியில் கைப்பிடி மணலை வைத்து வேண்டி, அதை கட்டிடம் கட்டும் மணலுடன் கலந்து பணியைத் தொடங்குகிறார்கள்.

    சிவபெருமானே அரசராக முடிசூட்டிக் கொண்ட தலம் மதுரை. அரசை ஏற்கும் முன் இங்கு ஈசன், லிங்க பூஜை செய்தார். இதனடிப்படையில், தலைமைப் பொறுப்புள்ள பதவி கிடைக்கவும், பொறுப்பான பதவி ஏற்கும் முன்பும் இத்தல இறைவனுக்கு ராஜ உபசார அர்ச்சனை செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.

    காரமான புளியோதரை :

    கோவில் முன் மண்டபத்திலுள்ள காசி விஸ்வநாதர், வெள்ளை நிறத்தில் காட்சி தருகிறார். அருகில் விசாலாட்சி இருக்கிறாள். சிவபக்தனான ராவணனை அழித்து சீதையை மீட்ட ராமர், தோஷம் நீங்க ராமேஸ்வரத்தில் மணல் லிங்கத்தை பூஜித்தார். இந்த நிகழ்வின் அடிப்படையில் இங்கும் அதே போன்ற மணல் லிங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. இவருக்கு பின்புறம் கையில் கோதண்டத்துடன் ராமர் காட்சியளிக்கிறார். இத்தலத்தில் ஜுரத்தைக் குணப்படுத்தும் ஜுரதேவர், மனைவி ஜுரசக்தியுடன் வீற்றிருந்து அருள்கிறார். உடல் உபாதை, ஜுரம் உள்ளவர்கள் மிளகு ரசம், காரமான புளியோதரை சாதம் நைவேத்யம் படைத்து வேண்டிக்கொள்கிறார்கள்.

    பரிந்துரை செய்யும் சண்டிகேஸ்வரர் :

    பொதுவாக சிவன் கோவில்களில், அவரது கணக்காளரான சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு வழிபாடு எதுவும் நடப்பதில்லை. ஆனால், இத்தலத்திலுள்ள சண்டிகேஸ்வரருக்கு பக்தர்கள் விசேஷ பூஜை செய்கிறார்கள். தீராத பிரச்சினைகளில் இருந்து விடுபட சிவனுக்கு மாலை அணிவித்து பூஜை செய்து, அதே மாலையை இவருக்கு அணிவித்து வழிபடுகிறார்கள். இதனால், சண்டிகேஸ்வரர் தங்களது பிரச்சினை தீர சிவனிடம் பரிந்துரை செய்வார் என்று நம்புகிறார்கள். எனவே இவரை பக்தர்கள், ‘பரிந்துரைக்கும் சண்டிகேஸ்வரர்’ என்று அழைக்கிறார்கள்.

    Phone: 094434 55311
    வடபழநி ஆண்டவர் திருக்கோவிலை ஒட்டி, தென்பகுதியில் 600 வருட பழமையான ஆதிமூலப் பெருமாள் திருக்கோவில் ஒன்று உள்ளது என்பது நமக்கு வியப்பையும் மகிழ்ச்சியையும் தருகிறது.
    வேலவனுடன், மாமன் மாலவன் இருக்கும் கோவில்கள் தமிழகத்தில் பல உள்ளன. திருப்பரங்குன்றில் தெய்வானையை முருகன் மணமுடிக்கும் போது பவளக் கனிவாய்ப் பெருமாளாகவும், செந்தூரில் திருக்கோவில் பிரகாரத்தில் செந்தில் கோவிந்தனாகவும், பழமுதிர்ச்சோலையிலே மலைமீது முருகன் காட்சி தர, அடிவாரத்தில் சுந்தரராஜப் பெருமாளாகவும் திருமால் அருளாட்சி செய்கிறார்.

    இதுதவிர எண்கண் என்னும் தலத்தில் மயில் மீது ஆறுமுகப்பெருமான் அமர்ந்திருக்கும் கோவிலை ஒட்டி, கருடன் மீது வீற்றிருக்கும் நாராயணனின் ஆலயம் அமைந்துள்ளது. சிக்கல் சிங்காரவேலர் திருக்கோவிலை ஒட்டி கோல வாமனப் பெருமாள் கோவில் கொண்டுள்ளார்.

    அதேபோல சென்னையில் புகழ்பெற்று விளங்கும் வேலவனின் வடபழநி ஆண்டவர் திருக்கோவிலை ஒட்டி, தென்பகுதியில் 600 வருட பழமையான திருமாலின் திருக்கோவில் ஒன்று உள்ளது என்பது நமக்கு வியப்பையும் மகிழ்ச்சியையும் தருகிறது.

    எளிமையான இந்த வைணவ ஆலயத்தில் கருவறைக்குள், கதிர் உதயம் நோக்கி காட்சி தருபவர் ஆதிமூலப் பெருமாள் ஆவார். அமர்ந்த திருக்கோலத்தில் இடது திருவடியை மடித்து வைத்து, வலது திருவடியைத் தொங்கவிட்டு தாமரை மலர் மீது வைத்தபடி அருள்கிறார். மேலும் சங்கு, சக்கரம் ஏந்தியும், வரத ஹஸ்த முத்திரையுடனும் புன்னகை மிளிர காண்போரை கவர்ந்திழுக்கும் தோற்றத்தில் இவர் வீற்றிருக்கிறார். இருபுறமும் நில மகளும், திருமகளும் இருந்து அருள் மழை பெய்கின்றனர்.

    இங்கே உற்சவ மூர்த்தியாக கஜேந்திர வரதப் பெருமாள் பேரருள் புரிகிறார். எனவே இத்தலம், மகாவிஷ்ணுவின் கஜேந்திர மோட்சம் என்னும் புராணக்கதை தொடர்புடைய திருத்தலமாக கருதப்படுகிறது.

    மூலவருக்கு எதிரே பெரிய திருவடி என்று அழைக்கப்படும் கருட பகவான் வீற்றிருக்க, அர்த்த மண்டபத்தின் உள்ளே வடக்கு நோக்கி சிறிய திருவடியான வரத ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். தெற்கு சன்னிதியில் உடையவர், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், மணவாளர், பாமா - ருக்மணி சமேத கிருஷ்ணர் ஆகியோரின் திருவுருவங்கள் காணப்படுகின்றன.

    சுவாமி விமானத்துக்கு வலதுபுறம் தனிக் கோவிலில் விமானத்தின் கீழ் கருவறையில் அமர்ந்த கோலத்தில் ஆதிலட்சுமி தாயார் வீற்றிருக்கிறார். இந்த அன்னையின் உற்சவ மூர்த்தியாக பெருந்தேவி தாயார் இருக்கிறார். கோவில் வளாகத்தின் வட கிழக்குப் பகுதியில் பரந்து விரிந்த பசுமையான அரசும் வேம்பும் இணைந்து இயற்கைச் சூழலை இதமாக்குகின்றன. இதுவே ஆலயத்தின் தல விருட்சமாக உள்ளது.

    குழந்தைப் பேறு வழங்கும் சந்தான கோபாலன், வழக்குகளில் வெற்றி தரும் வழக்கறு தும்பிக்கை ஆழ்வார், தோஷங்கள் போக்க வல்ல கல்யாண சர்ப்பம், தாய்மார்களின் கருவினைக் காக்கும் கர்ப்பஸ்வபினி தாயார், குடும்ப பிரச்சினைகள் நீங்கி இனிமை நிலவ செய்யும் சல்லாப நாகங்கள் என்று பல மூர்த்தங்கள், அரசமரத்தடியைச் சுற்றிலும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. எனவே நம் வாழ்வில் வரும் ஒவ்வொரு துயரங்களுக்கும் பரிகாரம் தரும் இடமாக இத்தலம் இருக்கிறது.

    ‘இந்த வைணவ ஆலயத்துக்கு வேறென்ன சிறப்பு?’ என வினவினால், திருமணத்தடை விலக ஏற்ற பரிகாரத் தலம் என்று பகர்கிறார்கள். வயது அதிகரித்தும் திருமணம் கூடிவராத ஆண்களும், பெண்களும் இங்கே வந்து வழிபட்டு பரிகாரம் செய்து விட்டுச் செல்கிறார்கள். செவ்வாய்க் கிழமை தோறும் 16 வாரங்கள் நம்பிக்கையுடன் வர வேண்டும். முதல் வார செவ்வாய் அன்று 3 மாலைகளை வாங்கிவர வேண்டும். பெருமாள், தாயாருக்கு தலா ஒரு மாலையை அணிவித்து விட்டு, மூன்றாவது மலர் மாலையை திருமணத் தடையுள்ளவர்கள், தங்கள் கழுத்தில் அணிந்து கொண்டு 12 முறை வலம் வர வேண்டும். பிறகு ஒவ்வொரு செவ்வாயும் வந்து சேவித்து விட்டு, 16-வது வார செவ்வாய் அன்று முதல் வாரத்தில் செய்தது போலவே மாலை யணிந்து சுற்றிவர வேண்டும். விரலி மஞ்சள் கிழங்கை மாலையாகக் கட்டி தாயாருக்கு சாற்றுவது மங்கல வாழ்வு தரும்.

    இப்படி வேண்டிக்கொள்பவர்கள், திருமணம் கைகூடிய பின், ஒரு நன்னாளில் புதுமணத் தம்பதியராக வந்து ஆதிமூலம் வீற்றிருக்கும் ஆலயத்திற்குள் அடி வைத்து, இறைவனுக்கும், இறைவிக்கும் நேர்த்திக் கடன் செலுத்துவதை வழக்கமாக வைத் திருக்கிறார்கள்.

    இது தவிர, பகைவர்கள் தொல்லை விலகவும், மரண பயம் அகலவும், தீராத பிணிகள் தீரவும், கடன் கவலை குறையவும் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இத்தல இறைவனை வழிபட்டுச் செல்கிறார்கள். கல்யாணத்தடை நீங்க செவ்வாய்க்கிழமையும், கடன் பிரச்சினை தீர புதன் கிழமையும், செல்வம் செழிக்க வெள்ளிக்கிழமையும், புத்திரப் பேறு உண்டாக ரோகிணி நட்சத்திர தினமும் வழிபாட்டுக்குரிய சிறந்த நாட்களாகச் சொல்லப் படுகிறது.

    ஒவ்வொரு புதன்கிழமை காலை 6.30 மணிக்கு மூலவர் திருமஞ்சனமும், வெள்ளி காலை 7 மணிக்கு தாயார் திருமஞ்சனமும் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. மக்கள் புரட்டாசி சனிக் கிழமைகளில் நீண்ட வரிசையில் நின்று சேவிக்கிறார்கள். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் வடபழநி ஆதிலெட்சுமி சமேத ஆதிமூலப் பெருமாள் கோவில், தினமும் காலை 6.30 முதல் 11.30 வரையிலும், மாலை 4.30 முதல் இரவு 8.30 வரையிலும் தரிசனத்துக்காக திறந்திருக்கும்.
    கேரளா மாநிலம், கண்ணூர் மாவட்டம், திருச்சம்பரம் என்ற ஊரில் உள்ளது கிருஷ்ணர் கோவில். இன்று இந்த கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    பொதுவாக அனைத்துக் கோவில்களிலும் அதிகாலையில் நடை திறந்ததும், கருவறையில் வீற்றிருக்கும் மூலவருக்கு தொடக்க கால பூஜை செய்யப்படுவது வழக்கம். ஆனால் கேரளா மாநிலம், கண்ணூர் மாவட்டம், திருச்சம்பரம் என்ற ஊரில் இருக்கும் கிருஷ்ணர் கோவிலில், அதிகாலை பூஜை எதுவும் நடைபெறாமல், நடை திறந்ததும் முதலில் இறைவனுக்கு பச்சரிசி சாதம் படைத்து வழிபடும் வித்தியாசமான வழிபாட்டு முறை வழக்கத்தில் இருந்து வருகிறது.

    இந்த ஆலயத்தைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    தல வரலாறு :
     
    பாலகனாக இருந்த கிருஷ்ணனைக் கொல்ல, கம்சன் செய்த சூழ்ச்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. அந்த இயலாமையால் வருத்தமும், கோபமும் கொண்ட கம்சன், கிருஷ்ணனையும், பலராமனையும் மல்யுத்தப் போட்டிக்கு வரச்செய்து கொல்வதென்று முடிவு செய்தான். அவர்கள் இருவரையும் அழைத்து வரும் பணியை, அக்ரூரர் என்பவரிடம் கம்சன் ஒப்படைத்தான்.

    மன்னரின் கட்டளையை மீற முடியாத அக்ரூரர், பிருந்தாவனத்திற்குச் சென்று, மல்யுத்தத்தைக் காண மதுராவிற்கு வரும்படி கிருஷ்ணன் மற்றும் பலராமனுக்கு அழைப்பு விடுத்தார்.

    இதற்கிடையே கம்சன், மதுராபுரிக்கு வரும் இருவரையும் வலிமை மிகுந்த ‘குவாலயபீடம்’ என்னும் யானையைக் கொண்டு கொல்ல வேண்டுமென்று யானைப்பாகனிடம் சொல்லி வைத்தான்.

    அந்த யானையிடம் தப்பித்தால், மதுராபுரியில் இருந்த சாணுரன், முஷ்டிகன், சாலன், தோசாலன், கூடன் என்கிற வலிமையான மல்யுத்த வீரர்களிடம், கிருஷ்ணன் மற்றும் பலராமனை எப்படியாவது மல்யுத்தத்திற்கு வரச்செய்து கொன்றுவிட வேண்டுமென்று அறிவுறுத்தினான்.

    மல்யுத்தத்தைக் காண மதுராபுரிக்கு நுழைந்த கிருஷ்ணன் மற்றும் பலராமனை வழிமறித்த யானை பாகன், அவர்கள் இருவரையும் கொல்ல யானையை ஏவினான். ஆனால், கிருஷ்ணர் அந்த யானையையும், யானை பாகனையும் கொன்றுவிட்டு, மல்யுத்தக் களத்திற்கு வந்தனர்.

    அங்கு அவர்கள் இருவரையும், மல்யுத்தத்திற்கு வரும்படி, கம்சனால் ஏவப்பட்ட மல்யுத்த வீரர்கள் அழைத்தனர். ஆனால் கிருஷ்ணரும் பலராமரும் தாங்கள் சிறுவர்கள் என்றும், பெரியவர்களான தங்களுடன் மல்யுத்தம் செய்வது யுத்த தர்மத்திற்கு புறம்பானது என்றும் வாதாடினர்.

    ஆனால் மல்யுத்த வீரர்கள், அவர்கள் இருவரையும் ஏளனமாகப் பேசிப் போட்டிக்கு வர வைத்தனர். மல்யுத்த வீரர்களில் சாணுரனைக் கிருஷ்ணனும், முஷ்டிகனைப் பலராமனும் கொன்றனர். பின்னர் தங்களுடன் போட்டியிட்ட அனைத்து மல்யுத்த வீரர்களையும் கொன்று குவித்தனர். இதனைக் கண்டு அதிர்ந்து போனான், கம்சன்.

    ஆவேசத்தில், கிருஷ்ணனையும், பலராமனையும் கொல்லும்படி ஆணையிட்டான். இதனால் கோபம் அடைந்த கிருஷ்ணன், அரசவையில் வீற்றிருந்த கம்சனை அங்கிருந்து, மல்யுத்தக் களத்திற்கு இழுத்து வந்து கொன்றான். கம்சனுக்கு ஆதரவாக வந்த கம்சனின் எட்டு சகோதரர்களையும் பலராமன் கொன்றான்.

    நீண்ட நேரமாக மல்யுத்தம் செய்து, கம்சனையும் கொன்ற கிருஷ்ணர் அதிகாலை வேளையில், தன்னைப் பெற்ற தாய் தேவகியைச் சந்தித்தார். தாயிடம் தனக்குப் பசிப்பதாகச் சொல்லி, அவர் தந்த உணவை வாங்கிச் சாப்பிட்டார்.

    மகாபாரதத்தில் வரும் இந்தக் கதை, காட்டிற்குள் தவமியற்றி வந்த சாம்பர முனிவர் மனதிற்குள் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தது. அதனைத் தொடர்ந்து அவர், அங்கு கம்ச வதம் செய்து திரும்பிய கிருஷ்ணரின் உருவச் சிலையை நிறுவி வழிபட்டு வந்தார் என்றும், பிற்காலத்தில் பரசுராமர் அங்கு கோவில் அமைத்து, வழிபாட்டு முறைகளை வகுத்துக் கொடுத்தார் என்றும் ஆலய தல வரலாறு சொல்லப்படுகிறது.

    காளி கோவில் தோற்றம்

    கோவில் அமைப்பு:

    இந்த ஆலயத்தின் கரு வறையில் கம்ச வதத்திற்குப் பின்பான கிருஷ்ணர், சிறிது சினத்துடன் வலது கரத்தில் சிறிய குச்சியும், இடது கரத்தில் சங்கும் வைத்துக் கொண்டு கிழக்கு பார்த்த நிலையில் அமர்ந்திருக்கிறார். அவருக்கு வெள்ளியாலான மேலாடை அணிவிக்கப்பட்டிருக்கிறது.

    இங்கு விசாகச் சேனனுக்குத் தெற்கு பார்த்த நிலையில் தனிச் சன்னிதி இருக்கிறது. இக்கோவில் வளாகத்தில் தவமியற்றும் நிலையில் சாம்பர முனிவர் சிலையும் இடம் பெற்றிருக்கிறது. ஆலய வளாகத்தில் இருக்கும் மூன்று குளங்களில், ஒரு குளத்தின் நடுவில் காளி கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்குள் மகாபாரதக் கதையில் வரும் பல்வேறு காட்சிகள், அழகிய வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டிருக்கும் மரச்சிற்பங்கள் மிக அழகாகக் காட்சியளிக்கின்றன.

    இந்தத் திருக்கோவிலில் மலையாள நாட்காட்டியின் படி கும்பம் (மாசி) மாதம் 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, மீனம் (பங்குனி) மாதம் 6-ந் தேதி வரை நடை பெறும் ‘கூடிப்பிரிதல்’ எனும் நிகழ்வுடன் நிறைவடையும் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும் ஒரு விழாவாகும்.

    இந்தத் திருவிழாவின் போது, மழூர் என்னும் இடத்தில் இருக்கும் தருமிக்குளங்கரா ஆலயத்தில் இருந்து கொண்டு வரப்படும் பலராமர் சிலை, திருச்சம்பரம் கோவிலில் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது. இடைப்பட்ட நாட்களில் திருச்சம்பரம் கோவிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பூக்கோத் நடா எனுமிடத்தில் கிருஷ்ணர், பலராமர் தொடர்பான மகாபாரதக் காட்சிகளை ஆடிக் காண்பிக்கும் ‘திடம்பு நிருத்தம்’ எனும் சிறப்பு நடன நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    யானை இல்லாத திருவிழா :


    * இந்தக் கோவில், கேரளாவில் புகழ் பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலுக்கு இணையானது என்று சொல்லப்படுகிறது. இதனை ‘வடக்கு குருவாயூர்’ என்றும் அழைக்கிறார்கள்.

    * ஆலயம் அமைந்திருக்கும் பகுதி, இங்கு தவமியற்றிய சாம்பர முனிவரது பெயரைக் கொண்டு, ‘திருச்சம்பரம்’ என்று அழைக்கப்படுகிறது.

    * இங்கு தினமும் அதிகாலையில் கோவில் கருவறைக் கதவு திறந்ததும், மற்ற கோவில்களில் நடத்தப்பெறும் நிர்மால்ய பூஜை, ஆராதனை எதுவும் செய்யப்படுவதில்லை. முதலில் கிருஷ்ணருக்கு பச்சரிசி சாதம் படைத்து வழிபாடு செய்யப்படுகிறது. கம்சனை வதம் செய்த கிருஷ்ணர், தன் பசியைப் போக்க அதிகாலை வேளையில் தாய் தேவகியிடம் உணவு பெற்றுச் சாப்பிட்டதை நினைவில் கொள்ளும் விதமாக, பச்சரிசி சாதம் படைக்கும் நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது.

    * பொதுவாக கேரளக் கோவில் விழாக்களில் யானை களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் இங்கு தரப்படுவதில்லை. கிருஷ்ணரும், பலராமரும் மல்யுத்தப் போட்டியைக் காண மதுராபுரி வந்த போது, கம்சன் தூண்டுதலால் குவாலயபீடம் எனும் யானை கிருஷ்ணரைக் கொல்ல முயன்றது. அந்த யானையைக் கிருஷ்ணர் கொன்று விட்டார். இதனை அடிப்படையாகக் கொண்டு, இந்த ஆலய விழாக்களின் போது, யானைகளை பயன்படுத்துவதில்லை என்கிறார்கள்.

    * இக்கோவில் திருவிழாவின் கடைசி நாளில் நடை பெறும் ‘கூடிப்பிரிதல்’ நிகழ்விற்கு, ஆயிரம் அப்பம் எனும் சிறப்பு இனிப்பு வகை தயாரித்து, இறைவனுக்குப் படைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.

    இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக நடை திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம் :

    கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டத்தில் இருக்கும் தளிப்பிரம்பா எனும் ஊரில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலுள்ள திருச்சம்பரம் என்ற இடத்தில் இந்த ஆலயம் இருக்கிறது. இந்தக் கோவிலுக்குச் செல்ல கண்ணூர் நகரில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன.
    திருச்சி பெரிய மிளகு பாறை என்ற இடத்தில் உள்ள ஆலயத்தின் பெயர் ஒண்டி கருப்பண்ணசாமி - ராஜகாளியம்மன் ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    சில ஆலயங்களில் நாகங்கள் எப்போதாவது வருவது உண்டு. ஆனால் அடிக்கடி இரவு, பகல் என்று எந்த நேரமும் சகஜமாக நாகங்கள் உலா வரும் ஆலயம் ஒன்று உள்ளது.

    திருச்சி பெரிய மிளகு பாறை என்ற இடத்தில் உள்ளது இந்த ஆலயம். ஆலயத்தின் பெயர் ஒண்டி கருப்பண்ணசாமி - ராஜ காளியம்மன் ஆலயம்.

    இங்கு கருநாகம் ஒன்றும், கோதுமை நாகம் ஒன்றும் இறைவியின் சன்னிதிக்கு அடிக்கடி வருவதுண்டாம். ஆலய அர்ச்சகர் இதை பலமுறை பார்த்ததுண்டு. ஆனால் இந்த நாகங்கள் யாரையும் எதுவும் செய்வதில்லை.

    இந்த ஆலயம் மேல்திசை நோக்கி அமைந்துள்ளது. படியேறி ஆலயத்தின் உள்ளே சென்றால், இடதுபுறம் மிக உயரமான குதிரை சிலையில் அமர்ந்தபடி கருப்பண்ணசாமி கம்பீரமாக காட்சி தருகிறார். பீடத்தில் நாக கன்னியர் காட்சி தருகின்றனர். சிலைக்கு பின்புறம் 18 படிகளும், உயரே கருப்பண்ணசாமியும் அருள்பாலிக்கின்றனர். உள்ளே இடதுபுறம் திரும்பினால், வரிசையாக பல தெய்வங்களின் சன்னிதிகள் இருக்கின்றன.

    முதலில் கருப்பண்ணசாமி மூலவராய் காட்சி தந்து அருள் பாலிக்கும் சன்னிதி. இந்த கருப்பண்ணசாமி பல ஆயிரம் குடும்பங்களுக்கு குலதெய்வமாய் விளங்குகிறார். அடுத்து விஷ்ணு துர்க்கை, நாக துர்க்கை சன்னிதி உள்ளது. அடுத்து அன்னை ராஜகாளியம்மன் சன்னிதி. இந்த அன்னை மேற்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறாள்.

    இதையடுத்து விநாயகர் தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அடுத்ததாக ஈசனின் சன்னிதி. இந்தச் சன்னிதியில் மூலவராக இரண்டு சிவலிங்கங்கள் இருப்பது சிறப்பம்சமாகும். ஒன்று காசியில் இருந்து கொண்டுவரப்பட்ட காசி விஸ்வநாதர், இன்னொன்று கயிலாயத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட கயிலாயநாதர்.

    அடுத்துள்ள தெற்கு பிரகாரத்தில் நவக்கிரக நாயகர்கள் அருள்பாலிக்கின்றனர். நவ பாஷாணத்தின் மீது பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த நவக்கிரக நாயகர்கள், தங்கள் வாகனங்களுடன் வடக்கு திசை நோக்கி ஒரே வரிசையில் நின்றபடி அருள் பாலிப்பது மிகவும் சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது. இவர்களுக்கு மேல் முருகப்பெருமான் காட்சி தரு கிறார்.

    மேற்கு பிரகாரத்தில் இரண்டு ஆஞ்சநேயர்கள் அருள்பாலிக்கின்றனர். அனுமன் ஜெயந்தியின்போது ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இந்த ஆலயத்தில் பங்குனி உத்திரம் உற்சவம் வெகு சிறப்பாகவும், விமரிசையாகவும் நடைபெறும். ஊர் மக்களும், குலதெய்வ மக்களும், சுற்று வட்டார மக்களும் தினசரி ஆயிரக்கணக்கில் இங்கு கூடுவார்கள்.

    சதுரகிரி மலையிலிருந்து கரும்பு ரசு என்ற மரத்தில் செய்யப்பட்ட நீண்ட சிலம்ப வடிவ கழி ஒன்று இறைவியின் முன் வைக்கப்பட்டுள்ளது. இதில்தான் காப்பு கட்டி முதல் நாள் திருவிழா தொடங்கும்.

    இரண்டாம் நாள் கருப்பண்ணசாமி சிலைக்கு முன்பாக யாகம் வளர்க்கப்படும். அன்று சரப ஹோமம், சுதர்சன ஹோமம், தந்வந்திரி ஹோமம் என மூன்று ஹோமங்கள் வளர்க்கப்படுகின்றன. இந்த ஹோமங்கள் முதல் நாள் இரவு தொடங்கி மறுநாள் காலை வரை தொடரும்.

    சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அய்யாலம்மன் படித் துறையில் இருந்து சுமார் 500 பால்குடம், காவடி, அலகு காவடி, கரகம் என ஆயிரம் பேர் ஆலயம் நோக்கி வருவார்கள். ஐந்து பேர் நீண்ட பட்டையான கத்தியுடன் (சுமார் 5 அடி நீளம்) ஊர்வலத்தில் பங்கேற்பார்கள். ஆலயம் வந்ததும் கத்தி ஏந்தி வந்தவர்கள், அதன் மேல் ஏறி நின்ற பின்னரே ஆலயத்தின் உள்ளே நுழைவார்கள்.



    பால்குடம் கொண்டுவரும் பக்தர்கள், அவர்களே நேரடியாக சென்று மூலவர்களுக்கு பால் அபிஷேகம் செய்வார்கள். அன்று சர்க்கரைப் பொங்கல் மற்றும் வெண் பொங்கல் ஆகியவை பக்தர் களுக்கு பிரசாதமாக விநியோகம் செய்யப்படும். பல நூறு பக்தர்கள் பங்குபெறும் அன்னதானமும் அன்று நடைபெறும்.

    மாதந்தோறும் இங்கு பவுர்ணமி பூஜை வெகு பிரசித்தம். ஒண்டி கருப்பண்ணசாமி, ராஜகாளியம்மன் மற்றும் அனைத்து தெய்வங்களுக்கும் அன்று விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அன்று பக்தர்களுக்கு புளியோதரை, சர்க்கரைப் பொங்கல் விநியோகம் செய்யப்படும். சுமார் 500 பேர் அந்த பூஜையில் கலந்துகொள்வார்கள்.

    பங்குனி உத்திரம் அன்று மட்டும் இறைவன்-இறைவி வீதியுலா வருவதுண்டு. ஆடிப்பூரத்தன்று சுமார் 50 ஆயிரம் வளையல்களை கொண்டு ராஜகாளியம்மனை அலங்காரம் செய்வார்கள். இந்த அலங்காரம் மூன்று நாட்கள் வரை அப்படியே இருக்கும்.

    தைப்பூசம் இங்கு வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அன்று சுமார் 2000 பேருக்கு அன்னதானம் நடைபெறும். அன்றைய தினம் கருப்பண்ணசாமிக்கு பிரமாண்ட மாலை சாத்துவார்கள். அது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். ராஜகாளியம்மனையும் கருப்பண்ண சாமியையும் வேண்டிக்கொள்ளும் பக்தர்களின் வேண்டுதல்கள் உடனே நிறைவேறுவதாக பக்தர்கள் சிலிர்ப்புடன் கூறுகின்றனர்.

    கன்னிப்பெண்கள் தங்களுக்கு விரைந்து திருமணம் நடக்க வேண்டியும், கர்ப்பிணிகள் சுகப்பிரசவம் நடக்க வேண்டியும், குழந்தைபேறு இல்லாதவர்கள் குழந்தை வேண்டியும் பிரார்த்தனை செய்து கொள் கிறார்கள் வேண்டியது நடந்ததும் அவர்கள் ஆலயம் வந்து இறைவன்-இறைவிக்கு புத்தாடை காணிக்கை செலுத்தி அபிஷேகம் செய்து தங்கள் நன்றிக்கடனை செலுத்துகின்றனர். இறைவிக்கு வளையல் வாங்கி சாற்றுகின்றனர்.

    இரவு நேரங்களில் இந்தப் பகுதியில் கருப்பண்ணசாமியின் நடமாட்டம் இருப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். ஆலயம் தினமும் அதிகாலை 5 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    தன்னை நம்பும் பக்தர் களுக்கு வேண்டியதை அருள கருப்பண்ணசாமியும், ராஜகாளியம்மனும் தவறுவதில்லை என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை.

    அமைவிடம்

    திருச்சி மத்திய பேருந்து நிலையத்தின் பின்புறம் பெரிய மிளகு பாறை பகுதியில் உள்ளது, ஒண்டி கருப்பண்ணசாமி - ராஜ காளியம்மன் ஆலயம். பேருந்து நிலையத்திலிருந்து ½ கி.மீ. தொலைவில் ஆலயம் உள்ளது. ஆட்டோ வசதி உண்டு.
    எளியவர்களும் அன்னதானம் செய்வித்து தங்கள் தோஷங்களையும், முன்ஜென்ம வினைகளையும் போக்கிக்கொள்ளும் வண்ணம் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருத்தலத்தில் ‘பிடி அரிசி உண்டியல்' அமைத்துள்ளார்கள்.
    உயிர்கள் வாழ்வதற்கு முக்கியமாக உணவு தேவை. ‘மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என்கிறது மணிமேகலை. அதாவது, இந்த உலகத்தில் வாழும் உயிர்கள் உண்ணுவதற்கு உணவு கொடுத்தோர் உயிர் கொடுத்தோராகக் கருதப்படுவார்கள் என்கிறது.

    புராணங்கள் அனைத்திலும், தானங்களில் மிக உயர்ந்த தானமாக அன்னதானமே சொல்லப்பட்டு இருக்கிறது. ஒருவரது சகல தோஷங்களையும், முன் ஜென்ம வினை களையும் அடியோடு நீக்கவல்லது, ஒருவர் உள்ளன்போடு செய்யும் அன்னதானம் மட்டுமே. நாயன்மார்களில் பலரும், அடியவர்களுக்கு அன்னதானம் செய்வித்தே சிவபெருமானின் அருளாசியைப் பெற்றுள்ளனர்.

    மயிலாப்பூர் பூம்பாவை திருமுறைப் பதிகத்தில் ‘கபாலீஸ்வரர் திருக்கோவிலில் நடைபெறும் அன்னதானம் காணாமல் சென்று விட்டாயே பூம்பாவை’ என்று கூறி இறந்து சாம்பலாகிப் போன பூம்பாவையை உயிருடன் எழுப்பி தருவார், திருஞான சம்பந்தர். இதன் மூலம் சம்பந்தர் காலத்திற்கு முன்பிருந்தே மயிலாப்பூர் திருத்தலத்தில் அன்ன தானம் செய்வித்தல் என்பது சிறப்பாக நடைபெற்றுவந்துள்ளது என்பதனையும் அறியலாம். எனவே கபாலீஸ்வரர் திருக்கோவிலில் அடியவர்களுக்கு அன்னதானம் செய்வது என்பது மிகவும் சிறப்பு என்கிறார்கள்.

    எளியவர்களும் அன்னதானம் செய்வித்து தங்கள் தோஷங்களையும், முன்ஜென்ம வினைகளையும் போக்கிக்கொள்ளும் வண்ணம் சென்னை மயிலாப்பூர் திருத்தலத்தில் ‘பிடி அரிசி உண்டியல்' அமைத்துள்ளார்கள். இத்தலத்தில் கற்பகாம்பாள் சன்னிதியில் இருந்து கபாலீஸ்வரர் சன்னிதிக்கு செல்லும் வழியில் ‘பிடி அரிசி உண்டியல்' அமைந்துள்ளது.

    வீட்டில் சமைக்கும் பொழுது, தினமும் சிறு பிடி அரிசியை தனி பாத்திரத்தில் சேமித்து வரவேண்டும். பின்பு சேமித்த அந்த அரிசியை சென்னையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு வரும்பொழுது அங்குள்ள ‘பிடி அரிசி உண்டியலில்’ சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆலயத்தில் தினமும் அன்னதானம் நடைபெறுவதால், பிடி அரிசி உண்டியலில் கொட்டிய அரிசி அடியவர்களுக்கு அன்னதானம் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. இதனால் கடுமையான கர்மவினைகளும், தோஷங்களும் அகலும் என்பது ஐதீகம்.

    கபாலீஸ்வரம் வர இயலாதவர்கள் இத்தல சம்பந்தர் பதிகத்தை தினமும் பாராயணம் செய்து, வீட்டினில் தினமும் சமைக்கும்போது ஒருகைப்பிடி அரிசியினை தனியாக எடுத்துவைத்து தங்கள் அருகிலுள்ள சிவாலயத்தில் அன்னதானம் செய்திட அளிப்பதும் சிறந்த பலனைக் கொடுக்கும். தோஷங்களையும், முன்ஜென்ம வினைகளையும் போக்கும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருத்தலத்தை வலம் வரலாம் வாருங்கள்.

    ஒருமுறை கயிலாய மலையில் பார்வதி தேவிக்கு பஞ்சாட்சர மந்திரப் பொருளை உபதேசித்துக் கொண்டிருந்தார் சிவபெருமான். ஆனால் பார்வதி அதனைக் கவனிக்காமல் அருகில் இருந்த மயிலை கவனித்ததால், மயில் உருவம் அடைந்தாள். தன் தவறுக்கு வருந்திய பார்வதி தேவி, ஈசனை வேண்டி சாப விமோசனம் கூறும்படி கேட்டாள்.

    ஈசன் கூறியபடி, மயில் வடிவிலேயே பூலோகத்தில் புன்னை மரங்கள் நிறைந்த இடத்தில் சிவபூஜை செய்துவந்தார். புன்னை மரத்தின் அடியில் ஈசனை பூஜித்து, ஈசனுடன் மீண்டும் ஒன்றானாள். கபாலீஸ்வரர் கோவில் தல மரமான புன்னைமரத்தின் அடியில், மயில் வடிவில் அன்னை பார்வதி பூஜிக்கும் சிவலிங்கம் உள்ளது. உமையவள் ஈசனை மயில் வடிவில் பூஜித்ததால், இத்தலம் ‘மயிலாபுரி, மயிலை, மயிலார்ப்பு’ என்றழைக்கப்பட்டு, தற்போது ‘மயிலாப்பூர்’ என்று வழங்கப்படுகிறது.

    சிவபெருமானைப்போலவே, தொடக்க காலத்தில் ஐந்து தலைகளைக் கொண்டிருந்தார் பிரம்மன். தனக்கும் ஈசனைப்போல ஐந்து தலைகள் உள்ளதால், தானும் ஈசனுக்கு நிகரே என்ற எண்ணம் பிரம்மனுக்குத் தோன்றியது. பிரம்மனின் கர்வத்தை ஒடுக்க நினைத்த ஈசன், பைரவரை தோற்றுவித்து, பிரம்மனின் ஒரு தலையைக் கிள்ளி எறிந்தார். அப்படி தலையை இழந்து படைக்கும் தொழிலையும் விட்ட பிரம்ம தேவன், ரிஷிகளின் ஆலோசனைப்படி இத்தலம் வந்து சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.

    அந்த லிங்கத்திலேயே ஈசன், கபாலீஸ்வரராக எழுந்தருளினான். பிரம்ம கபாலத்தைக் கையில் ஏந்தி, கபால ஈஸ்வரனாக திருக்காட்சி கொடுத்த ஈசன், பிரம்மனின் பிழையைப் பொறுத்து ஆக்கல் தொழிலையும் மீண்டும் அவருக்கு வழங்கினார். ‘கபாலி’ என்றால் ஈசனின் பைரவ வடிவமே. பைரவரை வழிபடுபவர்களுக்கு அக்காலத்தில் ‘கபாலிகர்கள்’ என்றே பெயர். இத்தல ஈசன், பைரவ சொரூபமே. கபாலீஸ்வரரை ஒவ்வொரு அஷ்டமி நாட்களிலும் அபிஷேகம், அர்ச்சனை செய்து நெய் தீபம் ஏற்றி வழிபட, அனைத்து செல்வங்களும் நம்மை வந்தடையும்.

    இத்தல கபாலீஸ்வரரை ஒவ்வொரு அஷ்டமி நாட்களிலும் அமரர், சித்தர், அசுரர், சைத்தியர், கருடர், கின்னரர், நிருதர், கிம்புருடர், காந்தருவர், இயக்கர், விஞ்சையர், பூதர், பசாசர், அந்தரர், உரகர், ஆகாய வாசியர், போக பூமியர் முதலிய பதினெண் கணங்களும் வழிபடுகின்றனவாம். இதனை சம்பந்தர் தனது இத்தல பூம்பாவை திருப்பதிகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    இத்தலம் பைரவர் உபாசகர்கள் வழிபட வேண்டிய முதன்மை திருத்தலம் ஆகும். கபாலீஸ்வரர் கருவறை முன் மண்டபத்தில் ஈசனின் வலப்புறம் லிங்க சக்தி அருள்கிறாள். ஆலய வெளிப்பிரகாரத்தில் மேற்கு நோக்கிய வண்ணம் வள்ளி- தெய் வானையுடனான முருகப்பெருமான், சிங்காரவேலர் எனும் திருநாமத்தில் வீற்றிருக்கிறார். இந்த சன்னிதியின் நேர்எதிரில் அருணகிரிநாதர் சன்னிதி உள்ளது. கபாலீஸ்வரர் ஆலயக் கொடிமரத்தின் அருகில் தனிச்சன்னிதியில் திருஞானசம்பந்தரும், பூம்பாவையும் எழுந்தருளி உள்ளனர். சம்பந்தர் கையில் பொற்றாளத்துடனும், அவரை வணங்கிய நிலையில் பூம்பாவையும் இருக்கிறார்கள்.

    இத்தல அன்னையான கற்பகாம்பாளை வெள்ளிக்கிழமை தோறும் மாலை வேளைகளில் தங்க காசு மாலை அலங்காரத்தில் தரிசிக்கலாம். தொடர்ந்து 8 வெள்ளிக்கிழமை மாலை வேளைகளில் மயிலை கற்பகாம்பாளை, தங்க காசு மாலை அலங்காரத்தில் தரிசிக்க பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். செவ்வாய்க்கிழமைகளில் தொடர்ந்து 8 வாரங்கள் வழிபட்டு, கருவறை தீபத்தில் சந்தனாதி தைல எண்ணெய் அல்லது நெய் சேர்த்து வழிபட்டு வர வீடு வாங்கும் யோகம் கிட்டும் என்கிறார்கள்.

    சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து மயிலாப்பூர் செல்ல பஸ் வசதி உள்ளது.

    ×