search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "vada bathra kaliamman temple trichy"

  திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் சுமார் 3000 ஆண்டுகள் பழமையான வடபத்ர காளியம்மன் ஆலயம் உள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
  சதாசிவமூர்த்தி, மந்திரங்களால் உருவான அருவுருவ வடிவம். இது சிவனின் ஞானமயமான வடிவினைக் குறிக்கும். எல்லாவற்றிலும் மேலானதாகவும், சிறந்ததாகவும், உயரிய தத்துவங்களைக் கொண்டதாகவும், சாதாரண மக்களால் எளிதில் புரிந்துகொள்ள முடியாத வடிவினை உடையதாகவும் சதாசிவ வடிவம் விளங்குகிறது.

  சதாசிவன் - ஒருமுகம், இரண்டு முகங்கள், ஐந்து முகங்கள், இருபத்து ஐந்து முகங்கள் எனப் பல வடிவங்களாக சித்திரிக்கப்பட்டுள்ளார்.

  சதாசிவன் வடிவம் சிவனுடைய மற்றைய வடிவங்கள் போன்று, பொதுவாகக் கல், செம்பு போன்றவற்றால் அமைக்கப்படுவதில்லை. அத்துடன் வழிபாட்டிலும் இவ்வடிவம் கோவில்களில் இடம் பெறுவதும் மிக அரிதே. கோபுரங்களில் சுதை வடிவில் சதாசிவமூர்த்தி அமைத்துள்ள மையை தமிழ்நாட்டுக் கோவில்களில் காணலாம். சதாசிவ வடிவம் தியான வடிவமாகும்.

  அத்தகைய சிறப்பு பெற்ற தலங்களுள் ஒன்றாக, திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள வடபத்ர காளியம்மன் ஆலயம் விளங்குகிறது. சுமார் 3000 ஆண்டுகள் பழமையான ஆலயம் இது. ஆலய கருவறையில் அன்னை வடபத்ர காளியம்மன் எட்டு கரங்களுடன் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறாள். அன்னை தனது கரங்களில் சூலம், சக்கரம், நாகம், கோடாலி, சங்கு, சூலம், அம்பு, கிண்ணம் இவைகளைத் தாங்கி புன்னகை தவழும் முகத்துடன் அருள் பாலிக்கிறாள்.

  தென் திசை நோக்கி பயணம் வந்த அகத்திய முனிவர், இந்த ஆலயம் வந்து அன்னையை தரிசித்து ஆன்ம சக்தி ஆத்மதானம் பெற்று சித்த மருத்துவம் மூலம் அம்மை நோய் போன்ற நோய்களை குணமாக்கியதாக கூறப்படுகிறது.

  ஆலயத்தின் வடக்கு பிரகாரத்தில் நின்ற கோலத்தில் அகத்தியர் சிலையும், திருமூலர் சிலையும் தனி மண்டபத்தில் காட்சி தருகின்றன. சைவ சமயக் குரவர்களான சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர்களால் பாடல் பெற்ற தலம் இது. இந்த ஆலயத்தின் பிரகாரத்தில் கற்சிலை விக்கிரகங்களும், பஞ்சலோக விக்கிரகங்களும் நிறையவே உள்ளன. ஆலயத்தின் வடக்குப் பிரகாரத்தில் இந்த மகா சதாசிவனாரின் பஞ்சலோகத் திருமேனி உள்ளது. மகா சதாசிவம் இங்கு தனி சன்னிதியில் அருள் பாலிக்கிறார்.

  சதாசிவனின் சிறப்பு அம்சங்கள்

  சதாசிவன் நான்கு திசைகளுக்கும் நான்கு முகங்களும், உச்சியில் ஒரு முகமுமாக ஐந்து முகங்களையும் ஒவ்வொரு முகத்திற்கும் மும்மூன்று கண்களையும் உடையவர். உச்சியிலுள்ள ஈசானமுகம் ஈசான திசையை நோக்கியதாகவும், பளிங்கு நிறம் கொண்டதாகவும் இருக்கும். கிழக்கிலுள்ள தத்புருஷ முகம் கிழக்கு திசையை நோக்கி கோங்கம் பூ நிறத்தினைக் கொண்டதாகவும், தெற்கிலுள்ள அகோரமுகம் வலது தோள் மேல் தெற்கு நோக்கி தாடியும், மிகுந்த கருப்பும், பயங்கரத் தோற்றத்தினை உடையதாகவும், வடக்கிலுள்ள வாமதேவ முகம் இடது தோள் மேல் வடக்கு நோக்கியதாக பெண் களின் முகம் போன்று சிவப்பு நிறமுடையதாகவும், மேற்கிலுள்ள சத்தியோசாத முகம் மேற்கு நோக்கியதாகப் பால் நிறமுடையதாகவும் இருக்கும்.

  வலது கரங்களில் சூலம், மழு, வாள், வஜ்ஜிரம், அபயமுத்திரை ஆகியவைகளை தாங்கியும், இடது கரங்களில் பாம்பு, பாசம், அங்குசம், மணி, வரதமுத்திரை முதலியவைகளை கொண்டவராக சதாசிவமூர்த்தி காட்சி தருகிறார்.

  சதாசிவ மூர்த்தியின் ஐந்து திருமுகங்களும் ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்தியோசாதம் என்று பெயர்களைப் பெற்றிருந்தாலும், உண்மையில் இந்த ஐந்தும் பஞ்சப்பிரம்ம மந்திரம் என்றே சிவாகமங்களில் குறிப்பிடப்படுகின்றன.

  மந்திரமயமான தியான வடிவான சதாசிவ மூர்த்தியின் வடிவம் எவ்வாறு அமையலாம் என்பது பற்றி ஆகமங்கள் கூறுகின்றன. சதாசிவர் ஐந்து திருமுகங்களும், பத்து திருக்கரங்களும் உடையவர். ஒவ்வொரு முகத்திலும் மும்மூன்று திருக்கண்கள் உண்டு. வலக்கரங்களில் சூலம், வஜ்ஜிரம், கத்தி, பரசு, அபயமுத்திரை ஆகியவற்றையும், இடது கரங்களில் பாசம், மணி, அக்கினி, அங்குசம் ஆகியவற்றையும் தாங்கியிருப்பவர். பாம்பினை பூணூலாக அணிந்திருப்பவர். பிறைச் சந்திரனால் அலங்கரிக்கப்பட்ட சடாமகுடம் தரித்தவர். சாந்தமான தோற்றம் கொண்டவர். இவ்வாறு காமிகாகமத்தில் சதாசிவனது வடிவம் வர்ணிக்கப்பட்டுள்ளது.

  கோவில் கோபுரங்களில் சுதை வடிவிலும், ஓரிரு இடங்களில் ஓவிய வடிவிலும் காணப்படும் இவ் வடிவம், நித்திய வழிபாட்டில் கிடையாது. வெறும் காட்சிப் பொருளாகத்தான் உள்ளது.

  மகா சதாசிவ மூர்த்தி

  சதாசிவமூர்த்தி 25 முகங்களுடனும், 50 கரங் களுடனும் காணப்படும்போது, அவர் ‘மகா சதா சிவர்’ என்று அழைக்கப்படுவார். ‘ஸ்ரீதத்துவநிதி’ என்னும் நூல் மகா கயிலாயமூர்த்தி என்ற பெயரில் மகாசதாசிவ வடிவத்தை விளக்கிக் கூறுகின்றது. இவரது 50 கரங்களில் இடம் பெற்றிருக்கும் பொருட்களையும் இந்நூல் எடுத்துரைக்கிறது.

  இதன்படி மகா சதாசிவ மூர்த்தியின் வலது பக்க 25 கரங்களில் அபயம், சக்கரம், சூலம், உளி, அம்பு, கதை, தாமரை, கத்தி, தோமரம், சத்தி, பிராசம், கோடாரி, பாம்பு, கலப்பை, அங்குசம், அக்கமாலை, சிறுசுத்தி, கொடி, தண்டம், வஜ்ஜிரம், குந்தம், அஸ்திதம் ஷட்ரம், ரம்பம், பிண்டி, பாலம் போன்ற அம்சங்களும், இடது பக்க 25 கரங்களில் வரதம், வில், மான், சங்கம், கேடயம், பாசம், பரசுவதம், முத்கரம், உடுக்கை, மணி, சுவடி, உருத்திர வீணை, கபாலம், முண்டம், கட்வாங்கம், பூசுண்டி, பரிகம், பலகை, பட்டசம், பிரம்பு, கமண்டலம், அனல், கத்திரிக்கோல், உலக்கை, மயில் தோகை ஆகிய அம்சங்களும் இடம் பெற்றிருக்கின்றன.

  பஞ்ச வடிவங்கள்

  சதாசிவ மூர்த்தியை பஞ்சப் பிரம்ம மந்திரத்தினால் தியானிக்கும் போது, ஐந்து முகங்களும் தனித்தனியான முழு வடிவங்களால் குறிக்கப்படும். அவையாவன:-

  ஈசான மூர்த்தி - பளிங்கு நிறமுடையவர். முக்கண்களைக் கொண்டவர். ஞானச் சந்திரனை சடையில் அணிந்தவர். சூலம், அபயமுத்திரை தாங்கியிருப்பவர். பார்வதியுடன் காணப்படுவார். அழகும், பிரசன்னமும் உள்ளவர்.

  தத்புருஷ மூர்த்தி - பொன்னிறத்தை கொண்டவர். பீதாம்பரத்தையும், உபவீதத்தையும, சடையில் இளம் பிறையையும் தரித்தவர். மாதுளங்கனி, ருத்திராட்ச மாலை ஆகியவற்றை கரங்களில் ஏந்தி, கவுரி தேவியுடன் காட்சி தருவார்.

  அகோர மூர்த்தி - முக்கண்களைக் கொண்டவர். திருமுடியில் சந்திரனைச் சூடியவர். சாந்தத்தையும், குண்டலாலங்காரத்தையும் கொண்டவர். கீரி நிறமுடையவர். புருவம், மீசை, தாடி, கேசம், பல் என உக்கிர முகத்தினைக் கொண்டவர். வலது கரங்களில் சூலம், பரசு, வாள், தண்டம் ஆகியவற்றையும், இடது கரங்களில் கட்டுவாங்கம், கபாலம், பரிசை, பாசம் ஆகியவற்றையும் ஏந்தி, கபாலம், பாம்பு, விருச்சிகம் போன்றவற்றை ஆபரணங்களாகச் சூடியவர். சத்துருக்களை அழிப்பவர். சூல் கொண்ட முகில் போன்ற நிறமுள்ள கங்கையுடன் இருப்பவர்.

  வாமதேவ மூர்த்தி - சிவந்த நிறத்தவர். நறுமணம் பொருந்திய மாலை, வஸ்திரம், உபவீதம் ஆகியவற்றையும், உயர்ந்த மூக்கையும், சிவந்த தலைப்பாகையையும் கொண்டவர். கணாம்பிகையுடன் இருந்து அருள்பவர்.

  சத்தியோசாத மூர்த்தி - வெண்மை நிறமுள்ளவர். வெண்மையான மாலை, சந்தனம், ஆபரணம், தலைப்பாகை, வஸ்திரம் ஆகியவற்றையும், மூன்று கண்களையும் வரத அபய கரங்களையும் கொண்டவர். சந்திரனைத் தரித்தவர். அம்பிகையுடன் இருந்து அருள்பவர்.

  ×