search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "karuppannasamy raja kaliamman temple"

    திருச்சி பெரிய மிளகு பாறை என்ற இடத்தில் உள்ள ஆலயத்தின் பெயர் ஒண்டி கருப்பண்ணசாமி - ராஜகாளியம்மன் ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    சில ஆலயங்களில் நாகங்கள் எப்போதாவது வருவது உண்டு. ஆனால் அடிக்கடி இரவு, பகல் என்று எந்த நேரமும் சகஜமாக நாகங்கள் உலா வரும் ஆலயம் ஒன்று உள்ளது.

    திருச்சி பெரிய மிளகு பாறை என்ற இடத்தில் உள்ளது இந்த ஆலயம். ஆலயத்தின் பெயர் ஒண்டி கருப்பண்ணசாமி - ராஜ காளியம்மன் ஆலயம்.

    இங்கு கருநாகம் ஒன்றும், கோதுமை நாகம் ஒன்றும் இறைவியின் சன்னிதிக்கு அடிக்கடி வருவதுண்டாம். ஆலய அர்ச்சகர் இதை பலமுறை பார்த்ததுண்டு. ஆனால் இந்த நாகங்கள் யாரையும் எதுவும் செய்வதில்லை.

    இந்த ஆலயம் மேல்திசை நோக்கி அமைந்துள்ளது. படியேறி ஆலயத்தின் உள்ளே சென்றால், இடதுபுறம் மிக உயரமான குதிரை சிலையில் அமர்ந்தபடி கருப்பண்ணசாமி கம்பீரமாக காட்சி தருகிறார். பீடத்தில் நாக கன்னியர் காட்சி தருகின்றனர். சிலைக்கு பின்புறம் 18 படிகளும், உயரே கருப்பண்ணசாமியும் அருள்பாலிக்கின்றனர். உள்ளே இடதுபுறம் திரும்பினால், வரிசையாக பல தெய்வங்களின் சன்னிதிகள் இருக்கின்றன.

    முதலில் கருப்பண்ணசாமி மூலவராய் காட்சி தந்து அருள் பாலிக்கும் சன்னிதி. இந்த கருப்பண்ணசாமி பல ஆயிரம் குடும்பங்களுக்கு குலதெய்வமாய் விளங்குகிறார். அடுத்து விஷ்ணு துர்க்கை, நாக துர்க்கை சன்னிதி உள்ளது. அடுத்து அன்னை ராஜகாளியம்மன் சன்னிதி. இந்த அன்னை மேற்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறாள்.

    இதையடுத்து விநாயகர் தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அடுத்ததாக ஈசனின் சன்னிதி. இந்தச் சன்னிதியில் மூலவராக இரண்டு சிவலிங்கங்கள் இருப்பது சிறப்பம்சமாகும். ஒன்று காசியில் இருந்து கொண்டுவரப்பட்ட காசி விஸ்வநாதர், இன்னொன்று கயிலாயத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட கயிலாயநாதர்.

    அடுத்துள்ள தெற்கு பிரகாரத்தில் நவக்கிரக நாயகர்கள் அருள்பாலிக்கின்றனர். நவ பாஷாணத்தின் மீது பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த நவக்கிரக நாயகர்கள், தங்கள் வாகனங்களுடன் வடக்கு திசை நோக்கி ஒரே வரிசையில் நின்றபடி அருள் பாலிப்பது மிகவும் சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது. இவர்களுக்கு மேல் முருகப்பெருமான் காட்சி தரு கிறார்.

    மேற்கு பிரகாரத்தில் இரண்டு ஆஞ்சநேயர்கள் அருள்பாலிக்கின்றனர். அனுமன் ஜெயந்தியின்போது ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இந்த ஆலயத்தில் பங்குனி உத்திரம் உற்சவம் வெகு சிறப்பாகவும், விமரிசையாகவும் நடைபெறும். ஊர் மக்களும், குலதெய்வ மக்களும், சுற்று வட்டார மக்களும் தினசரி ஆயிரக்கணக்கில் இங்கு கூடுவார்கள்.

    சதுரகிரி மலையிலிருந்து கரும்பு ரசு என்ற மரத்தில் செய்யப்பட்ட நீண்ட சிலம்ப வடிவ கழி ஒன்று இறைவியின் முன் வைக்கப்பட்டுள்ளது. இதில்தான் காப்பு கட்டி முதல் நாள் திருவிழா தொடங்கும்.

    இரண்டாம் நாள் கருப்பண்ணசாமி சிலைக்கு முன்பாக யாகம் வளர்க்கப்படும். அன்று சரப ஹோமம், சுதர்சன ஹோமம், தந்வந்திரி ஹோமம் என மூன்று ஹோமங்கள் வளர்க்கப்படுகின்றன. இந்த ஹோமங்கள் முதல் நாள் இரவு தொடங்கி மறுநாள் காலை வரை தொடரும்.

    சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அய்யாலம்மன் படித் துறையில் இருந்து சுமார் 500 பால்குடம், காவடி, அலகு காவடி, கரகம் என ஆயிரம் பேர் ஆலயம் நோக்கி வருவார்கள். ஐந்து பேர் நீண்ட பட்டையான கத்தியுடன் (சுமார் 5 அடி நீளம்) ஊர்வலத்தில் பங்கேற்பார்கள். ஆலயம் வந்ததும் கத்தி ஏந்தி வந்தவர்கள், அதன் மேல் ஏறி நின்ற பின்னரே ஆலயத்தின் உள்ளே நுழைவார்கள்.



    பால்குடம் கொண்டுவரும் பக்தர்கள், அவர்களே நேரடியாக சென்று மூலவர்களுக்கு பால் அபிஷேகம் செய்வார்கள். அன்று சர்க்கரைப் பொங்கல் மற்றும் வெண் பொங்கல் ஆகியவை பக்தர் களுக்கு பிரசாதமாக விநியோகம் செய்யப்படும். பல நூறு பக்தர்கள் பங்குபெறும் அன்னதானமும் அன்று நடைபெறும்.

    மாதந்தோறும் இங்கு பவுர்ணமி பூஜை வெகு பிரசித்தம். ஒண்டி கருப்பண்ணசாமி, ராஜகாளியம்மன் மற்றும் அனைத்து தெய்வங்களுக்கும் அன்று விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அன்று பக்தர்களுக்கு புளியோதரை, சர்க்கரைப் பொங்கல் விநியோகம் செய்யப்படும். சுமார் 500 பேர் அந்த பூஜையில் கலந்துகொள்வார்கள்.

    பங்குனி உத்திரம் அன்று மட்டும் இறைவன்-இறைவி வீதியுலா வருவதுண்டு. ஆடிப்பூரத்தன்று சுமார் 50 ஆயிரம் வளையல்களை கொண்டு ராஜகாளியம்மனை அலங்காரம் செய்வார்கள். இந்த அலங்காரம் மூன்று நாட்கள் வரை அப்படியே இருக்கும்.

    தைப்பூசம் இங்கு வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அன்று சுமார் 2000 பேருக்கு அன்னதானம் நடைபெறும். அன்றைய தினம் கருப்பண்ணசாமிக்கு பிரமாண்ட மாலை சாத்துவார்கள். அது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். ராஜகாளியம்மனையும் கருப்பண்ண சாமியையும் வேண்டிக்கொள்ளும் பக்தர்களின் வேண்டுதல்கள் உடனே நிறைவேறுவதாக பக்தர்கள் சிலிர்ப்புடன் கூறுகின்றனர்.

    கன்னிப்பெண்கள் தங்களுக்கு விரைந்து திருமணம் நடக்க வேண்டியும், கர்ப்பிணிகள் சுகப்பிரசவம் நடக்க வேண்டியும், குழந்தைபேறு இல்லாதவர்கள் குழந்தை வேண்டியும் பிரார்த்தனை செய்து கொள் கிறார்கள் வேண்டியது நடந்ததும் அவர்கள் ஆலயம் வந்து இறைவன்-இறைவிக்கு புத்தாடை காணிக்கை செலுத்தி அபிஷேகம் செய்து தங்கள் நன்றிக்கடனை செலுத்துகின்றனர். இறைவிக்கு வளையல் வாங்கி சாற்றுகின்றனர்.

    இரவு நேரங்களில் இந்தப் பகுதியில் கருப்பண்ணசாமியின் நடமாட்டம் இருப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். ஆலயம் தினமும் அதிகாலை 5 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    தன்னை நம்பும் பக்தர் களுக்கு வேண்டியதை அருள கருப்பண்ணசாமியும், ராஜகாளியம்மனும் தவறுவதில்லை என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை.

    அமைவிடம்

    திருச்சி மத்திய பேருந்து நிலையத்தின் பின்புறம் பெரிய மிளகு பாறை பகுதியில் உள்ளது, ஒண்டி கருப்பண்ணசாமி - ராஜ காளியம்மன் ஆலயம். பேருந்து நிலையத்திலிருந்து ½ கி.மீ. தொலைவில் ஆலயம் உள்ளது. ஆட்டோ வசதி உண்டு.
    ×