என் மலர்tooltip icon

    கோவில்கள்

    பவளமலை முருகனை காண படியேறி சென்றால் அதுவரை பக்தர்களின் எண்ணங்களில் குடிகொண்டிருந்த துன்பங்களும், துயரங்களும் காணாமல் போகும் என்பதே நம்பிக்கை.
    ‘பச்சை மலை பவள மலை எங்கள் மலையே‘ என்கிற போதே பச்சை மலைக்கு இணையாக பவளமலையும் கோபிசெட்டிபாளையத்தின் முக்கிய அடையாளமாக உள்ளது. பச்சைமலை எப்படி குமரக்கடவுளின் ஆலயமாக அமைந்திருக்கிறதோ, அப்படியே பவளமலையிலும் குமரக்கடவுள் குடிகொண்டிருந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார்.

    கோபியில் இருந்து பாரியூர் செல்லும் சாலையில் முருகன்புதூரில் இருந்து கூப்பிடும் தொலைவில் கிராமத்துக்குள் அமைந்திருக்கிறது பவளமலை. மரங்கள் அடர்ந்த ஒரு அழகிய குன்று. உச்சியில் முருககடவுள் முத்துக்குமாரசாமியாக குடிகொண்டிருக்கும் காட்சியை காண படிக்கட்டுகள் வழியாகவும் செல்லலாம். கிரிவல பாதையில் வாகனங்களிலும் செல்லலாம். பரபரப்பான கோபி நகரையொட்டி இப்படி ஒரு அமைதியான, அழகான பகுதியா? என்று வியக்கும் வகையில் அமைந்திருக்கிறது பவளமலை.

    கோவிலில் முத்துக்குமாரசாமி சன்னதி, வள்ளி-தெய்வானை சன்னதிகள், கைலாசநாதர் (சிவன்), இடும்பன், விநாயகர், நவக்கிரகங்கள் என்று தனித்தனி சன்னதிகள் உள்ளன.

    இந்த கோவிலும் பச்சைமலையில் முருகக்கடவுளை வைத்து வழிபாடு செய்த துர்சாவ முனிவரால் உருவாக்கப்பட்டது என்றே கூறப்படுகிறது.

    ஒரு முறை வாயுபகவானுக்கும், ஆதிசேஷனுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. அது படிப்படியாக பெரியதாகி, அவர்களில் யார் பெரியவர்? என்ற போட்டி எழுந்தது. அந்த போட்டி போராக மாறியது. தங்கள் பலத்தையும் சக்தியையும் காட்டி அவர்கள் போர் செய்தனர். யாரும் யாரையும் வெல்ல முடியாத நிலை. வாயுபகவான் தனது சக்தியை எல்லாம் திரட்டி மேரு மலையை தகர்த்துக்காட்டுகிறேன் என்று சவால் விட்டு மலையுடன் மோதுகிறார்.

    காற்றின் வேகத்தை தாங்க முடியாக மேரு மலையின் சில பாகங்கள் மலையை விட்டு பறந்தன. அதில் ஒரு துளி விழுந்த இடம்தான் பவளமலை என்கிறது பவளமலையின் தல புராணம். மகேசனாகிய சிவபெருமான் இந்த கோவிலில் குடியிருந்து அவரை நாடி வரும் மக்களுக்கு நல்லாசி வழங்குகிறார். இந்த லிங்கமானது, அருகில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் உழவுப்பணி செய்யும்போது சுயம்புவாக தோன்றியது என்றும், அதையே எடுத்து வந்து மலைமீது வைத்து தொன்று தொட்டே வணங்கி வருவதாகவும் தல புராண கதை கூறுகிறது.

    பவளமலை கோவிலில் சிவபெருமானுக்கு ஈடாக முருகபெருமானை கொண்டு நடைபெறும் திரிசத அர்ச்சனை சிறப்பு மிக்கதாகும்.

    திரி என்றால் மூன்று, சதம் என்றால் நூறு. திரிசதம் என்பது முந்நூறு. அதாவது முருக பெருமானுக்கு செய்யப்படும் புகழ்மிக்க அர்ச்சனை இது. ஆறுமுகக்கடவுள் என்று போற்றப்படும் முருகன், பன்னிரு கைகள், ஆறு முகத்துடன் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்று சிவபெருமானை போன்று ஐந்தொழில்களையும் மேற்கொள்பவராக இருக்கிறார். அவருக்கு புகழ் சேர்க்கும் வகையில் அவரது ஒரு முகத்துக்கு 50 அர்ச்சனைகள் வீதம், ஆறு முகங்களுக்கும் சேர்த்து 300 அர்ச்சனைகள் செய்வதே திரிசத அர்ச்சனை.

    சூரபத்மனை வதம் செய்து இந்திரலோகத்து தேவர்களை எல்லாம் முருக கடவுள் மீட்டார். எனவே அவருக்கு புகழ் சேர்க்கும் வகையில் தேவர்களின் அரசன் இந்திரன் தலைமையில் தேவர்களால் செய்யப்பட்ட அர்ச்சனையே திரிசத அர்ச்சனை. எனவே எதிரிகளை வீழ்த்தும் திரிசத அர்ச்சனை என்றும் இது அழைக்கப்பட்டது. திருமணத்தடை நீங்க, குழந்தை பேறு கிடைக்க, தொழில், அரசியலில் எதிரிகளிடம் இருந்து வெற்றி பெற விரும்புபவர்கள் பவளமலையை தேடி வந்து திரிசத அர்ச்சனையை சிறப்பாக செய்வது வழக்கம். பவளமலை கோவில் 19-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டு இருக்கிறது. 2004-ம் ஆண்டு குடமுழுக்கு செய்யப்பட்டு உள்ளது.

    பவளமலை முருகனை காண படியேறி சென்றால் அதுவரை பக்தர்களின் எண்ணங்களில் குடிகொண்டிருந்த துன்பங்களும், துயரங்களும் காணாமல் போகும் என்பதே நம்பிக்கை. 
    திருச்சி மாநகரின் மத்தியப் பகுதியான கண்டோண்மெண்ட் அருகே உள்ள பீமநகர் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு வேணுகோபால் கிருஷ்ணன் கோவில்.
    திருச்சி மாநகரின் மத்தியப் பகுதியான கண்டோண்மெண்ட் அருகே உள்ள பீமநகர் பகுதியில் அமைதியான சூழலில் அமைந்துள்ளது, அருள்மிகு வேணுகோபால் கிருஷ்ணன் கோவில்.

    ஆங்கிலேயர் நம் நாட்டை திருச்சி ஆண்ட போது படைவீரர்கள் தங்கும் பகுதியாக இருந்த இடம்தான் கண்டோண்மெண்ட் பகுதி. அவர்களது முழுமையான ஆளுகையின் கீழ் இருந்த இந்த பகுதியில் ராணுவ வீரர்கள் தங்களது விருப்ப தெய்வமாக காளிகாபரமேஸ்வரியை வழிபட்டு வந்துள்ளனர். பின்னர் கிருஷ்ணன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ணன் கோவில் உருமாறியது.

    வடக்கு திசைநோக்கி அமைந்திருக்கும் இந்த ஆலயம் பல நூறு ஆண்டுகளுக்கு முன் பழமையானது.

    முகப்பில் ராஜ கோபுரம் இல்லை. ஆனால் அழகிய நுழைவு வாசல் உள்ளது. இதைக் கடந்ததும் நீண்ட மண்டபம். அதையடுத்து மகாமண்டபம் உள்ளது.

    எதிரே அர்த்தமண்டப நுழைவு வாயிலின் இடதுபுறம் ஜெயன், விஷ்ணு திருமேனிகள் உள்ளன. வலதுபுறம் விஜயன், ஆஞ்சநேயர் திருமேனிகள் உள்ளன. அர்த்த மண்டபத்தை அடுத்து கருவறையில் கிருஷ்ணன் அருள்பாலிக்கிறார்.

    மகா மண்டபத்தின் வலதுபுறம் காளிகா பரமேஸ்வரியின் சன்னிதி உள்ளது. அன்னை கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்க அன்னையின் சன்னிதியின் முன் சூலம், நந்தி, பலிபீடம் ஆகியவை உள்ளன. பிரகாரத்தின் தென் திசையில் நெடிதுயர்ந்த துளசிமாடம் உள்ளது.

    மேற்கு பிரகாரத்தில் சொர்ண கணபதி, நாகராஜா, தனி சன்னிதியில் அருள்பாலிக்கின்றனர். சுந்தரேஸ்வர், மீனாட்சி இருவர் முன்பும் நந்தியம் பலிபீடமும் இருக்க இருவரும் தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர். அடுத்து சண்டிகேசுவரர் தென்திசை நோக்கி வீற்றிருக்கிறார். அடுத்து ஐய்யப்பன் மண்டபம் உள்ளது. அருள்மிகு முருகன் வள்ளி தெய்வானையுடன் தனிக் கோவில் கொண்டு அருள்கிறார்.

    இக்கோவிலின் தேவக்கோட்டத்தின் வடபுறம் காலைபரவர் தென்திசை நோக்கி இருக்கிறார். முருகன் சன்னிதிக்கு எதிரே மயிலும் பலிபீடமும் உள்ளன. அடுத்து ராஜ கணபதியின் சன்னிதி உள்ளது. பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் அருள்பாலிக்கின்றனர். மகா மண்டபத்தின் வலது புறம் விஷ்ணு துர்க்கை தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறார்.

    துர்க்கையின் முன் சிங்கத்தின் திருமேனியும் பலிபீடமும் உள்ளன. துர்க்கை எட்டு கைகளுடன் சூலம் ஏந்தி சிம்ம வாகனத்தில் காட்சி தருகிறாள். இந்த துர்க்கைக்கு தடைபட்ட திருமணம் நடந்தேறவும் விரைவாக திருமணம் நடக்க பிரார்த்தனை செய்பவர்களும் வெள்ளிக் கிழமை அன்று ராகு கால அர்ச்சனை செய்வதுடன் எலுமிச்சை விளக்கிட்டு வேண்டிக் கொள்கின்றனர். அவர்கள் பிரார்த்தனை நிறைவேறுவது நிஜம் என்கின்றனர் பக்தர்கள்.

    அன்னை காளிகா பரமேஸ்வரிக்கு மாத பவுர்ணமிகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. பங்குனி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அன்னைக்கு பூச்சொரிதல் விழா சிறப்பாக நடைபெறுகிறது. அன்று பக்தர்கள் கூட்டம் கணிசமாகக் காணப்படும். சித்திரை முதல் நாள் காளிகா பரமேஸ்வரி புறப்பாடும் நடைபெறுகிறது. ஆடி மாதம் முதல் வெள்ளிக் கிழமை இங்கு குத்து விளக்கு பூஜை மிகச் சிறப்பாக நடைபெறுகின்றது. விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, மார்கழி திருநாட்கள், கார்த்திகை, சிவராத்திரி, பொங்கல், ஆண்டு பிறப்பு போன்ற நாட்களில் இங்கு இறைவன் இறைவிக்கு சிறப்பான பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெறுகின்றன. தினசரி ஒரு கால பூஜை மட்டுமே இங்கு நடைபெறுகிறது.

    பக்தர்களிடம் பணம் வசூலிக்க இந்த ஆலயத்தில் மகா உண்டியல்கள் கிடையாது. உபயமாக ஆலயத்திற்கு பொருட்கள் வாங்கித் தருபவர்களின் பெயர்களை அந்தப் பொருட்களின் மீதோ வேறு எங்கேனுமோ காண இயலாது.

    இங்கு அருள்பாலிக்கும் கிருஷ்ணன் சக்தி மிக்கவர் என இங்குள்ள மக்கள் கூறுகின்றனர். மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் குணமாக இங்குள்ள கிருஷ்ண பரமாத்மாவை வேண்டிக் கொண்டு ரோகிணி நட்சத்திரத்தில் இறைவனுக்கு பால், தயிர் மற்றும் பழச்சார் அபிஷேகம் செய்தால், அந்த குழந்தைகள் ஓரளவோ அல்லது முற்றிலுமோ குணமடைகின்றனர் என்பது கண்கூடான உண்மை என்கின்றனர் பக்தர்கள்.

    தங்களது கோரிக்கை நிறைவேறத் தொடங்கியதும் வேண்டியவர்கள் கிருஷ்ணனுக்கு பால் பாயசம் நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு வினியோகம் செய்வது இங்கு சர்வ சாதாரணமாகக் காணும் காட்சியாகும்.

    காலை 6 மணி முதல் 10 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை ஆலயம் திறந்தி ருக்கும்.

    கிருஷ்ண ஜெயந்தி அன்று இங்கு உரியடி திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. அன்று அன்னதானமும் நடைபெறும். பின்னர் கிருஷ்ணர் உலா வருவது வழக்கம்.

    வெண்ணெய் திருடனான பால கிருஷ்ணன் சிறார்களின் குறைகளை இந்த ஆலயத்தில் நிவர்த்தி செய்து வைப்பது கண்கூடான நிஜம்.

    அமைவிடம் :

    திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கி.மீ தொலைவில் பீம நகரில் உள்ளது இந்த ஆலயம்.
    கோயம்புத்தூரில் இருந்து மேற்கு திசையில் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பேரூர் என்னும் பாடல்பெற்ற ஸ்தலம். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    கோயம்புத்தூரில் இருந்து மேற்கு திசையில் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பேரூர் என்னும் பாடல்பெற்ற ஸ்தலம். நால்வரால் பாடல்பெற்ற இவ்வாலயம் மேல சிதம்பரம் என்றும் அழைக்கப்படுகிறது.

    இங்கு “நடராஜப்பெருமான்“ ஆனந்த தாண்டவம் ஆடியபோது . . . அவர் காலில் அணிந்திருந்த சிலம்பு தெறித்து சிதம்பரத்தில் விழுந்ததாக செவிவழிச் செய்தியும் உண்டு.

    முன்பு இக்கோயில் இருந்த இடம் அரச மரங்கள் நிறைந்த காடாக இருந்ததாம்.அப்போது பல பசுமாடுகள் இங்கு வந்து மேய்ந்து கொண்டிருக்கும் . . .அதில் ஒரு மாடு மட்டும் அருகிலுள்ள பாம்பு புற்றின் மீது பாலை சொறியுமாம். இதைப் பார்த்த ஒருவன் மற்றவர்களிடம் சொல்ல அவர்கள் அந்த இடத்தைத் தோண்டும்போது கிடைத்தவர்தான் நமது பட்டீஸ்வரர்.

    கிடைக்கும்போதும் அதிசயத்துடன் கிடைத்தவர் இவர். இவரின் திருமேனியில் தலையில் ஐந்து தலைப்பாம்பு படமெடுத்த நிலை, . . .மார்பில் பாம்பின் பூணூல், தலையில் அழகழகாய் சடைக் கொத்துக்கள், சடைகளுக்கு அரணாய் இருப்பதுபோல் கங்கை, அன்னமும், பன்றியுமாய் பிரம்மா, விஷ்ணு அடிமுடி தேடிய அடையாளங்கள்,

    இவைகளோடு பட்டீஸ்வரர் தலையில் மாட்டின் கால் குளம்புகள் மூன்றும், கொம்பு முட்டிய தழும்பும் காணப் படுகின்றன.இதையெல்லாம் பார்த்த மக்கள் பரவசத்துடன் வழிபட ஆரம்பித்திருக்கிறார்கள். இவர் இருக்கும் பின்புறம் பன்னீர் மரங்கள் பன்னீர் பூக்க ளைச் சொறிந்து கொண்டிருக் கின்றன. ஒரு முறை மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத் தன்ற கோயிலுக்குத் திடீர் என்று வந்திருக்கின்றான் மன்னன் திப்பு சுல்தான்.

    இந்தக் கோயில் அதிசயங்களை எல்லாம் பார்க்க வந்தவனுக்கு மீண்டும் ஒரு அதிசயத்தை இங்குள்ளோர் சொல்லியிருக்கிறார்கள். ஆம் இறைவன் குடியிருக்கும் சிவலிங்கம் அடிக்கடி அசையும் என்று, இதை நம்பாமல் சிவலிங்கத்தின் மீது கைவைத்துப் பார்த்திருக்கிறான் மன்னன் திப்பு சுல்தான் அப்போது அவன் உடலில் அதிர்வுகள் தோன்றியிருக்கினறன. நெருப்பின்மீது கைகள் வைப்பதுபோல் உணர்ந்து துடித்திருக்கிறான்.

    கண்கள் இருண்டு கீழே விழுந்தவன் சிறிது நேரத் திற்குப்பின் சுய நினைவு அடைந்த பின் தன் செயலுக்கு வருந்தி கண்களில் கண்ணீர் மல்க கை தொழுது பட்டீஸ்வரரிடம் தன்னை மன்னிக்குமாறு வேண்டியிருக்கின்றான்.

    கோயிலுக்கு நிலங்களை மானியமாக தந்திருக்கிறான்.

    இவனைப்போன்றே ஹதர் அலியும் நிலங்களை மானியங்களாக தந்திருப்பதாக கல்வெட்டுகளில் செய்திகள் காணப்படுகின்றன.இக்கோயிலின் ஸ்தல விருட்சம் அரச மரமாகும்.

    இங்குள்ள அம்மனின் பெயர் பச்சை நாயகியாகும்.பச்சை நிறமாகிய மரகதக் கல்லில் அன்னை எழில் ஓவியமாக எழுந்தருளியிருக்கிறாள்.அன்னையின் அன்புமுகத்தைப்பார்த்து கொண்டேயிருக்கலாம். அவ்வளவு அழகு, வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் தரும் அன்னை கற்பக விருட்சமாய் காட்சி தருகின்றாள். இவளின் ஆலயத்தின் முன்பு சிங்கமொன்று சிலை வடிவில் காட்சித் தருகின்றது. அதன் வாயினுள் உருண்டைக் கல்லொன்று உருளுகின்றது. கல்வெளியில் வராதவாறு சிங்கத்தின் பற்கள் நிற்கின்றன. அற்புதமாக கலை நுட்பத்துடன் காண்போர் வியக்கும் வண்ணம் சிங்கத்தின் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

    ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சுழல் தாமரை, நான்குபுறமும் தொங்கும் கல்லால் ஆன சங்கிலிகள். இதுபோன்ற ஏராளமான சிற்பங்கள் ஆலயத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கோயிலின் வட பக்கம் உள்ள பெரிய மண்டபம் 94 அடி நீளமும் 38 அடி அகலமும் உடையது. இம்மண்டபத்தை 16 அடி உயரமுள்ள 36 பெரிய கல் தூண்கள் தாங்கி நிற்கின்றன. சிற்பங்களால் வடிவமைக்கப்பட்டுள்ள இக்கல் தூண்கள் தாங்கி நிற்பது பெரிய மண்டபத்தை மட்டும் அல்ல, தமிழனின் புகழையும் தான் என்று நாம் எண்ணும் போதே பெருமையால் நமது நெஞ்சு நிமிர்கின்றது.

    நால்வரில் ஒருவராகிய சுந்தரர், இங்குள்ள பட்டீஸ் வர்ரை“ வணங்க வர வேண்டும் என்று நினைக்கிறாராம். எப்போதுமே சுந்தரரிடம்“ ஒரு நல்ல குணம் உண்டு.எந்த ஊர்சென்றாலும் வழிச்செலவுக்கு இறைவனிடம் காசு கேட்பார்.ஏன் என்றால், இவர் இறைவனின் தோழன் அல்லவா! இறைவனும் இவர் சொல்லைத் தட்டாது பணம் கொடுப்பாராம். செல்வ செழிப்போடு இருந்த ஈசனுக்கே ஒருமுறை பணம் தட்டுப்பாடாம். சுந்தரர் வந்தால், பணம் கேட்பானே என்ன செய்வது என்று யோசித்த பட்டீஸ்வரர் சுந்தரரிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காக நிலத்தில் நாற்று நடும் கூலித் தொழிலாளியாய், “பச்சையம் மனுடன் சேர்ந்து நாற்று நடும்போது சுந்தரர் பார்த்து விடுகின்றார். அதை பார்த்த சுந்தரர் பாட்டு பாடவைத்து மகிழ்ந்துள்ளார்.

    பேரூரில் இறைவனும் இறைவியும் நாற்று நட்ட வரலாற்றை இன்றும் இவ்வூர் மக்கள் ஆணி மாதத்தில்வரும் கிருத்திகை நட்சத்திரத்தன்று உற்சாகமாய் கொண்டாடி மகிழ்கின்றார்கள். 
    திருவிடைமருதூர் ஆலயம் பல்வேறு சிறப்புகளை கொண்டதாக திகழ்கிறது. குறிப்பாக ஆலயத்தில் உள்ள பல்வேறு சன்னதிகள், பிரகாரங்கள், சிற்பங்கள், ஓவியங்கள் ரசித்து பார்க்க வைக்கின்றன.
    திருவிடைமருதூர் ஆலயம் பல்வேறு சிறப்புகளை கொண்டதாக திகழ்கிறது. குறிப்பாக ஆலயத்தில் உள்ள பல்வேறு சன்னதிகள், பிரகாரங்கள், சிற்பங்கள், ஓவியங்கள் ரசித்து பார்க்க வைக்கின்றன.

    இந்த தலத்தில் பிரகாரங்களில் உள்ள மாடங்கள் பிரமிக்க வைக்கின்றன. சோழ மன்னர்களும், வரகுணபாண்டிய மன்னனும் இந்த ஆலயத்தில் உள்ள ஒவ்வொரு பிரகாரத்தையும் ரசித்து ரசித்து கட்டியிருப்பது தெரிகிறது.

    ஒவ்வொரு பிரகாரத்தின் மாடங்களும், ஒவ்வொரு விதமான பயன்பாட்டிற்காக கட்டப்பட்டதாகும். ஆனால் இன்று இந்த மாடங்களில் நெல் மூட்டைகளையும், வைக்கோல் பொதிகளையும் அடைத்து வைத்துள்ளனர். என்றாலும் ஆலயத்தின் மாடங்களின் அழகு கொஞ்சமும் குறையவில்லை.

    திருவாவடுதுறை ஆதினம் இந்த ஆலயத்தை மிகச்சிறப்பாக பராமரித்து வருகிறது. தூய்மை பணிகளில் மட்டும் இன்னும் சற்று கவனம் செலுத்தினால், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள்.

    அழகான இந்த ஆலயத்தை முழுமையாக சுற்றி பார்க்க வேண்டுமானால் குறைந்தபட்சம் 3 மணி நேரமாவது வேண்டும். இந்த ஆலயத்தின் நான்கு புறங்களிலும், நான்கு கோபுரங்களுடன் நுழைவாயில் உள்ளது.

    கும்பகோணம்- மயிலாடுதுறை வழித்தடத்தில் இறங்கி நாம் இந்த ஆலயத்திற்கு சென்றால் வடக்கு பக்க நுழைவாயிலுக்கு தான் செல்ல முடியும். ராஜகோபுரம் அமைந்துள்ள கிழக்கு திசைக்கு செல்ல வேண்டுமானால், பிரமாண்டமான தீர்த்தக்குளத்தை சுற்றி செல்ல வேண்டும்.

    ராஜகோபுரம் அமைந்துள்ள தெரு மிக அகலமாக, மிக நேர்த்தியாக உள்ளது. அந்த தெருவில் எந்த பக்கத்தில் நின்றாலும் ராஜகோபுரத்தை பார்க்க முடியும். வாருங்கள் நாமும் இந்த கோபுரம் வழியாக உள்ளே சென்று ஆலயத்தின் அமைப்பை பார்க்கலாம்.

    ராஜகோபுரத்தை வணங்கிவிட்டு உள்ளே நுழைந்தால் இடது பக்கம் விநாயகரும், வலது பக்கம் முருகரும் இருப்பதை காணலாம். கோபுரத்தின் கீழ்புற சன்னதியில் பட்டினத்தார் சிலை உள்ளது. இதை கடந்து உள்ளே சென்றால் கொடி மரம், பலிபீடம், பிரமாண்டமான நந்தியை காணலாம். அதை தொடர்ந்து பிரம்மகத்தி தோஷம் நீக்கும் பகுதி உள்ளது. அங்கும் வழிபட்டு உள்ளே செல்ல வேண்டும்.

    இத்தலத்தில் நிற்கும் துவாரபாலகர்கள் பிரமிக்க வைக்கிறார்கள். அவர்களிடம் அனுமதி பெற்று கருவறைக்கு முன்பு உள்ள மண்டபத்திற்குள் செல்ல வேண்டும். அங்கிருந்து பார்த்தால் மகாலிங்க சுவாமி நமக்கு அருள்புரிவார்.

    இந்த லிங்கம் சுயம்பாக தோன்றியது என்பதால் அதிக சக்தி கொண்டதாக தெரிகிறது. எனவே அந்த மண்டபத்தில் அமர்ந்து தியானம் மேற்கொள்வது மிகுந்த பலன்களை தரும். மகாலிங்கசுவாமியை வழிபட்டபிறகு கருவறையை சுற்றி வரலாம்.

    கருவறை கோஷ்டத்தில் விநாயகர், தட்சணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை, பிரம்மா, சண்டிகேஸ்வரர் உள்ளனர். தட்சணாமூர்த்தி அமைப்பு வித்தியாசமாக உள்ளது. அதுபோல மகிஷாசூரனை காலில் போட்டு மிதித்தப்படி இருக்கும் துர்க்கையின் சிலையும் மனதை கவர்வதாக உள்ளது.

    கருவறையை வலம் வரும்போதே முதல் பிரகாரமான பிரணவ பிரகாரத்தை சுற்றி வரலாம். இந்த பிரகாரத்தில் ஆண்ட விநாயகர் உள்ளார். இவர் தான் முதன் முதலில் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமியை வழிபட்டு பலன் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    எனவே இவருக்கு தான் இந்த ஆலயத்தின் முதல் பூஜை நடத்தப்படுகிறது. தினமும் இந்த விநாயகருக்கு 6 கால பூஜை செய்யப்படுகிறது. இவரை வழிபட்டு பிரகாரத்தை வலம்வர தொடங்கினால் நிறைய விக்கிரங்கள் வரிசையாக இருப்பதை காணலாம்.

    குமாரசுப்பிரமணியர், சண்டி, வீரபத்திரர், சப்தமாதர்கள், ஏகாதசருத்ரர்கள் எனப்படும் மகாதேவர், சிவன், ருத்ரன், சங்கரர், நீலலோகிதர், ஈசனார், விஜயர், பீமர் ஆகியோரை பார்க்கலாம். இவர்களுக்கு பிறகு தேவதேவர், பவோத்பவர், கபாலீஸ்வரர், திரியம்பகருத்ரர் உள்ளனர். அந்த வரிசையின் மூலையில் கலாபலிங்கம் என்ற மிகபெரிய லிங்கம் உள்ளது. அதற்கு அருகில் ஸ்ரீஏகநாயகர் சன்னதி அமைந்துள்ளது.

    அந்த பிரகாரத்தில் கருவறைக்கு நேர் பின்புறம் சுப்பிரமணியர் சன்னதி இருக்கிறது. அதை தொடர்ந்து மருதவானார்-அன்பிற்பிரியாள் சன்னதி மாடியில் இருப்பது போல் வித்தியாசமான அமைப்பில் காணப்படுகிறது.

    அதே வரிசையில் மருதமரம் சிற்பம், ஸ்ரீமகாலட்சுமி அமைந்துள்ளது. அதன்பிறகு பஞ்சலிங்கங்கள் சோழலிங்கம், ஜுராதேஸ்வரர், சங்கநிதி, சேரலிங்கம், பாண்டியலிங்கம், காந்திமதி, ஹரிஹரகுனர், விக்னேஸ்வர் ஆகியோரை காணலாம். அதனை தொடர்ந்து 64 நாயன்மார்கள் சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன.

    வலது பக்கத்தில் அர்த்தநாரீஸ்வரர், உமாமகேஸ்வரி, பராசக்தி, ஸ்ரீகங்கையம்மன் ஆகியோருக்கான சிற்பங்கள் உள்ளன. அந்த வரிசையில் நடராஜர் சன்னதி தனியாக அமைந்துள்ளது. மேலும் பைரவர், உஷாதேவி, சூரியன் சிற்பங்கள் காணப்படுகின்றன.

    இவற்றை பார்த்து முடிந்ததும் நுழைவாயில் அருகே பாவை விளக்கு இருப்பதை காணலாம். இந்த பாவை விளக்கு மிக பழமையானது. கலை அழகுடன் நேர்த்தியாக செய்யப்பட்டிருக்கும் சிறப்பு கொண்டது. இதை பார்த்துவிட்டு வெளியில் வந்தால் சித்ர பிரகாரத்திற்கு செல்ல முடியும். அதற்கு முன்பு அந்த பகுதியில் உள்ள நவகிரகங்களை சுற்றி வரலாம். இந்த நவகிரகங்கள் வித்தியாசமான அமைப்புடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    வாகனங்கள் அனைத்தையும் இந்த பகுதியில் தான் வைத்துள்ளனர். அங்குள்ள துவாரபாலகர்கள் அருகே பின்புறம் வரகுணபாண்டியனின் சிலை அமைந்துள்ளது. பக்தர்கள் எளிதில் பார்க்க முடியாதப்படி ஒரு ரகசிய அறைக்குள் இருப்பது போல அந்த மன்னனின் சிலை இருக்கிறது. பக்தர்கள் இந்த இடத்திற்கு வந்ததும் அதை கண்டுபிடித்து பார்த்தால் இந்த ஆலயத்தை கட்டிய மன்னன் இவன் தான் என்பதை தெரிந்துகொள்ள முடியும்.

    அடுத்து சித்ரகூடம் பிரகாரம் உள்ளது. இதை முன்பு பக்தர்கள் வலம் வரமுடிந்தது. சமீப ஆண்டுகளாக இந்த பிரகாரத்தை வலம் வரும் பக்தர்கள் இந்த பிரகாரத்தில் உள்ள அருமையான சிற்பங்களை சேதம் செய்துவிடும் நிலை ஏற்பட்டது. பல சிலைகள் சேதம் அடைந்தன. இதையடுத்து சித்ரபிரகாரத்தை இரும்பு கதவு போட்டு தடுத்துள்ளனர்.

    மார்கழி மாதம் மட்டுமே இந்த சித்ரகூட பிரகாரத்தை பக்தர்கள் வலம் வரமுடியும். பக்தர்கள் செல்லாத காரணத்தால் அந்த சிலைகளுக்கு இடையே சிறுசிறு செடிகள் வளர்ந்துள்ளன. ஆதீன நிர்வாகம் இதில் கவனம் செலுத்தினால் தான் சிற்பங்களை காப்பாற்ற முடியும்.

    இந்த பிரகாரத்தை சுற்றி வந்தபிறகு அம்மன் சன்னதிக்கு செல்லலாம். அம்மன் சன்னதியும் மூன்று பிரகாரங்களுடன் அமைந்துள்ளது. இரண்டாவது பிரகாரத்தில் அன்பிற்பிரியாளுக்கு தனி சன்னதி உள்ளது. இந்த அம்மன் சன்னதி பிரகாரத்தில் நாகலிங்கம், சோமலிங்கம், சகஸ்ரலிங்கம், பிரதிஷ்டலிங்கம், வசிஷ்டலிங்கம் ஆகிய பிரமாண்ட லிங்கங்கள் உள்ளன. மற்றொரு பகுதியில் சனி பகவானுக்கு தனிச்சன்னதி இருக்கிறது.

    அம்மனை வழிபட்டு வந்தால் மூகாம்பிகை அம்மனை தரிசிக்கலாம். அங்கு வழிபாடு செய்துவிட்டு அப்படியே வெளியேறலாம். இல்லையெனில் மூன்றாவது பெரிய பிரகாரமான அஸ்வமேதயாக பிரகாரம் வழியாகவும் வெளியே வரலாம்.

    தேரோட்டம்

    திருவிடைமருதூரில் தைப்பூச உற்சவம் மற்றும் ஆடிப்பூர உற்சவத்தின்போது தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இதில் ஆடிப்பூர உற்சவத்தின்போது ஆடிப்பூரத்தம்மன் மட்டும் தனித்தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    தைப்பூச உற்சவத்தில் கோவிலில் உள்ள 5 தேர்களும் வலம் வரும். கடந்த 1936-ம் ஆண்டுக்கு பிறகு தைப்பூச தேரோட்டம் பல்வேறு காரணங்களால் தடைப்பட்டது. இதனால் கோவிலுக்கு சொந்தமான 5 தேர்களும் சிதிலமடைந்தன.

    இதையடுத்து 80 ஆண்டுகளுக்கு பிறகு 5 தேர்களும் புதிதாக வடிவமைக்கப்பட்டு கடந்த 2016-ம் ஆண்டு தைப்பூச விழா தேரோட்டம் நடந்தது. இதன் பின்னர் ஆடிப்பூர உற்சவ தேரோட்டமும் நடந்தது.

    இந்த நிலையில் ஆடிப்பூர உற்சவத்துக்கு என கடந்த ஆண்டு தனியாக புதிய தேர் செய்ய திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் உத்தரவிட்டார். அதன்படி பக்தர்களின் பொருள் உதவியுடன் 45 அடி உயரம், 15 அடி அகலத்தில் ஆடிப்பூர உற்சவத்துக்கு தனியாக தேர் வடிவமைக்கப்பட்டது.

    இந்த தேரில் 200 கிலோ எடை கொண்ட 4 இரும்பு சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. தேரின் மொத்த எடை 4 டன் ஆகும்.

    தோஷங்களை போக்க தினமும் சிறப்பு பூஜை

    திருவிடை மருதூர் மகாலிங்கம் சுவாமி ஆலயத்தில் தோஷங்களை விரட்டுவதற்காக தினமும் காலை சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. இதற்காக தேவேந்திரன் நந்தி அமைந்துள்ள பகுதிக்கும், பிரம்மகத்தி சன்னதிக்கு இடையே வசதி செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் அமர சிறு பலகைகள் போட்டு இந்த பூஜை நடத்துகிறார்கள்.

    தினமும் காலை 7 மணி, 8 மணி, 9 மணி என மூன்று தடவையாக தோஷ நிவர்த்தி பூஜை நடத்தப்படுகிறது. தினமும் பக்தர்கள் இதில் கலந்து கொண்டு தோஷ நிவர்ததி செய்து கொள்கிறார்கள். சிறப்பு மற்றும் பண்டிகை நாட்களில் இந்த தோஷ நிவர்த்தி பூஜை நேரம் மாறுதலுக்கு உட்பட்டது. எனவே ஆலயத்தில் தொடர்பு கொண்டு உறுதி செய்துகொள்ளுங்கள்.

    பஞ்சலிங்க தலம்

    தேரோடும் நான்கு வீதிகளின் கோடிகளிலும் விஸ்வநாதர், ஆத்மநாதர், ரிஷிபுரீஸ்வரர் மற்றும் சொக்கநாதர் ஆகியோருக்கு நான்கு சிவாலயங்களும் நடுவிலே மஹாலிங்கப் பெருமானும் அமர்ந்திருப்பதால் இத்தலம் பஞ்சலிங்கத் தலமென்றும் அழைக்கப்படுகிறது.

    கலைக்கூடம்

    தெற்கில் உள்ள சித்திரப் பிரகாரம் என்பது சுதைச் சிற்பங்களா லும், ஓவிய வடிவங்களாலும் நிறைந்து நம் கண்கள் மகிழ கலைக் கூடமாகக் காட்சி தருகிறது.
    வடக்கில் உள்ள பிரணவப் பரிகாரத்தில் நாயக்கர் கால கட்டிடக்கலையின் படி தேர் வடிவில் சன்னிதி அமைக்கப்பட்டு அதில் வேம்படி முருகன் ஆட்சி செய்கிறார்.

    எதிரே வேல் மண்டபமும், பிறகு காசிபரும், அவர் விரும்பியபடி கண்ணனாகக் காட்சி தரும் சிவனும் தலவிருட்சமான மருத மர நிழலில் இளைப்பாறுகிறார்கள். அங்கே சிங்கமுகத் தீர்த்தக் கிணறு ஒன்றும் இருக்கிறது.

    பாவம் நீங்க வழிபாடு

    வரகுணபாண்டிய மன்னன் அறியாமல் செய்த கொலைக்காக, பிரம்மஹத்தி தோஷத்தால் பாதிக்கப்பட்டான். விமோசனத்திற்காக இத்தலம் வந்து மகாலிங்கசுவாமியை வழிபட்டான். சிவன் அவனைப் பற்றியிருந்த பிரம்ம ஹத்தியை அகற்றினார். இந்த பிரம்மஹத்திக்கு, சிவன் சந்நிதி இரண்டாம் கோபுரத்தில் சிலை உள்ளது. அறியாமல் செய்த பாவம் நீங்க இதற்கு உப்பு மற்றும் மிளகிட்டு வணங்குகின்றனர்.
    மழை பெய்யும் அதிசயம்

    திருவிடைமருதூரில் மேற்கு திசையில் அமைந்துள்ள சொக்கநாதர் ஆலயத்திற்குத் தனிப் பெருமை ஒன்றுண்டு. மழையின்றி மக்கள் வறட்சியால் வருந்தும் காலங்களில் இப்பெருமானுக்கு சிறப்பாகப் பூசை வழி பாடுகளைச் செய்து, மேகராகக் குறிஞ்சிப் பண்களில் அமைந்த தேவாரப் பதிகங்களைப் பாராயணஞ் செய்வதால் மழை பொழிவது இன்றளவும் நடைபெற்று வரும் அதிசயமாகும்.

    ஆண்ட விநாயகர்

    கோவிலின் உட்பிராகாரத்தில் சுவாமி சன்னதிக்கு தெற்குப் புறம் ஆண்ட விநாயகர் சன்னதி அமைந்துள் ளது. இந்த விநாயகக் கடவுள் பஞ்சாட்சர விதிப்படி மகாலிங்கப் பெருமானை சிறப்பாகப் பூஜித்து வருகிறார். தேவ கணங்கள் குறையாமல் கொண்டு வந்து அளிக்கும் பூஜைப் பொருட்களைக் கொண்டு மிகவும் விசேஷமாக இறைவனை வழிபடுகிறார், மனித சஞ்சாரம் இல்லாத இந்த இடத்தில், தமது அருட்சக்தியால் விநாயகர் உலகத்தை ஆண்டு வருவதால் இவருக்கு ஆண்ட விநாயகர் என்ற காரணப் பெயர் உண்டு.

    முருகன் சன்னதிகள்

    இங்கு கோவிலின் உட்புறத்தில் ஆறுமுகம் பன்னிரண்டு கரங்களுடன் தேவியர் இருவருடன் மயில் மீது அமர்ந்து முருகன் காட்சி தருகின் றார். அம்பாள் சன்னதியின் நுழைவாயிலில் துவாரமூர்த்தியாகப் பன்னிரண்டு கைகளுடன் முருகன் காட்சி அளிக்கிறார். இவை தவிர பிரணவப் பிரகாரத்தில் ஒரு முருகன் சன்னதியும், தலவிருட்சமான மருதமரத்தின் அடியில் அறுமுகச் சன்னதியும் அமையப் பெற்றுள்ளன. மேற்குக் கோபுரத்தை அடுத்துத் தனி முருகன் கோவில் ஒன்றும் அமைந்துள்ளது.

    இந்த ஒரு ஆலயத்தில் மட்டுமே ஜோதி தெரிந்தது

    ஒரு தடவை சிவபெருமானின் கண்ணை பார்வதி தேவி தம் கைகளால் பொத்தினார். அப்போது உலகமே இருண்டது. பிரபஞ்சமே இருளில் மூழ்கியது. ஆனால் திருவிடை மருதூர் தலத்தில் மட்டும் ஜோதி ஒளி பிரகாசமாக தெரிந்தது. இதன் மூலம் உலகில் பிரளயமே ஏற்பட்டாலும் ஈசன் உறைந்துள்ள தலமாக திருவிடை மருதூர் தலம் சிறப்புப் பெற்றுள்ளது.

    முக்கியமான 3 பிரகாரங்கள்

    இக்கோவில் 3 பிரகாரங்களைக் கொண்டதாகும். இம்மூன்று பிரகாரங்களிலும் வலம் வருதல் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.

    அஸ்வமேதப் பிரகாரம்:

    இது வெளிப் பிரகாரமாகும். இந்த்ப் பிரகாரத்தில் கோவிலை வலம் வருதல் அஸ்வமேத யாகம் செய்த பலனைக் கொடுக்கும் என்று புராண வரலாறுகள் கூறுகின்றன.

    கொடுமுடிப் பிரகாரம்:

    இது இரண்டாவதும், மத்தியில் உள்ள பிரகாரமாகும். இப்பிரகாரத்தை வலம் வருதல் சிவபெருமான் குடியிருக்கும் கைலாச பர்வதத்தை வலம் வந்ததற்குச் சமம் என்று கூறப்படுகிறது.

    ப்ரணவப் பிரகாரம்:

    இது மூன்றவதாகவும் உள்ளே இருக்கக் கூடியதுமான பிரகாரமாகும். இப்பிரகாரத்தை வலம் வருவதால் மோட்சம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

    செல்வது எப்படி?

    திருவிடைமருதூர் தலத்துக்கு செல்பவர்கள் காருண்யாமிர்த தீர்த்த குளக்கரையில் உள்ள ஐராவதிஸ்வரர் ஆயலத்தை முதலில் வழிபடவேண்டும் என்பது ஐதீகமாகும்.

    திருவிடை மருதூருக்கு செல்ல தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் நல்ல வாகன வசதி உள்ளது. கும்பகோணத்துக்கு மிக, மிக அருகில் திருவிடைமருதூர் அமைந்துள்ளதால் பக்தர்கள் முதலில் கும்பகோணத்துக்கு செல்ல வேண்டும்.

    கும்பகோணத்தில் குளித்துவிட்டு, புறப்பட்டு செல்ல நிறைய தங்கும் வீடுகள் உள்ளன. பஸ் நிலையம் அருகில் வசதிக்கு ஏற்ப தங்கும் விடுதிகள் இருக்கின்றன.

    கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழித்தடத்தில் திருவிடைமருதூர் இருக்கிறது. ஆனால் மயிலாடுதுறை செல்லும் ரூட் பஸ்களில் திருவிடை மருதூருக்கு செல்பவர்களை ஏற்ற மறுப்பார்கள். மயிலாடுதுறைக்கு செல்பவர்களை மட்டுமே ஏற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் கண்டக்டர்கள் கெடுபிடி செய்வதுண்டு.

    ரூட் பஸ் கிடைக்காவிட்டால் பக்தர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. அருகிலேயே டவுன்பஸ் நிலையம் உள்ளது. அங்கிருந்து திருவிடை மருதூருக்கு அடிக்கடி டவுன்பஸ் வசதி உள்ளது.

    கும்பகோணம்- திருவிடைமருதூர் இடையே டவுன் பஸ் கட்டணம் 10 ரூபாய்தான். 30 நிமிடங்களில் கும்பகோணத்தில் இருந்து திருவிடை மருதூருக்கு டவுன் பஸ்சில் சென்று சேர்ந்துவிடலாம்.

    கும்பகோணத்தில் இருந்து திருவிடைமருதூருக்கு செல்ல கார், ஆட்டோ வசதிகளும் உள்ளன. ஆனால் கட்டணமாக 250 ரூபாய், 350 ரூபாய் என்று கேட்பார்கள். கும்பகோணத்தை சுற்றியுள்ள மற்ற ஆலயங்களுக்கு செல்ல வேண்டும் என்று திட்டத்துடன் இருப்பவர்கள் கார் அல்லது ஆட்டோ எடுத்துக்கொள்ளலாம்.

    அப்படி இல்லாமல் திருவிடைமருதூர் தலத்துக்கு மட்டும் செல்லும் திட்டத்துடன் இருப்பவர்கள் டவுன் பஸ்சிலேயே சென்று வரலாம். இதன்மூலம் பயணத்துக்கான செலவை பக்தர்கள் கணிசமாக குறைக்க முடியும்.

    சென்னையில் இருந்து செல்பவர்கள் கும்பகோணத்தை சென்றடைய ரெயில், அரசு பஸ்கள் நிறைய உள்ளன. ஏ.சி. படுக்கை வசதி கொண்ட ஆம்னி பஸ்களும் இயக்கப்படுகின்றன.

    சென்னையில் இருந்து செல்லும் பக்தர்கள் கும்பகோணத்துக்கு அதிகாலையில் சென்று வரும் வகையில் தங்கள் பயண திட்டத்தை அமைத்துக் கொண்டால், காலை 8 மணிமுதல் மதியம் 12 மணி வரை சுமார் 4 மணிநேரம் திருவிடைமருதூர் ஆலயத்தில் செலவிட முடியும்.

    இந்த 4 மணிநேரத்தில் திருவிடைமருதூர் தலத்தில் உள்ள ஒவ்வொரு சன்னதியிலும் நின்று நிதானமாக வழிபட்டு வர முடியும். அர்ச்சனை, நட்சத்திரத்துக்கு ஏற்ற தீபம் ஏற்றும் வழிபாடு போன்றவற்றையும் இந்த 4 மணிநேர அவகாசத்தில் முடித்துவிட முடியும்.

    மதியம் 12.30 மணிக்கு ஆலயம் நடை சாத்தப்பட்ட பிறகு திருவிடைமருதூரில் இருந்து புறப்பட்டு கும்பகோணத்துக்கு 1.15 மணிக்குள் வந்துவிட முடியும். மதிய உணவை முடித்தபிறகு 2 மணிக்கே சென்னைக்கு புறப்பட்டு விடலாம்.

    அன்றிரவே சென்னை திரும்பிவிட முடியும். அதாவது இன்றிரவு புறப்பட்டால் திருவிடைமருதூர் தலத்தில் வழிபட்டு விட்டு மறுநாளே சென்னை திரும்பி வந்துவிடலாம்.

    ஆலய முகவரி:

    ஸ்ரீ மகாலிங்கசுவாமி ஆலயம்,
    திருமஞ்சனம் தெரு,
    திருவிடைமருதூர்-612 104.
    தஞ்சை மாவட்டம்
    தொலைபேசி எண்:-0435- 2460660
    ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் உள்ள ஏகாம்பரேஸ்வரரை சனிதோஷம் உள்ளவர்கள், சனிக்கிழமைகளில் வழிபட்டால் நீங்கும் என்பது ஐதீகம்.
    பொது தகவல்:

    இங்குள்ள விநாயகர் வன்னிமரவிநாயகர். திரிதள விமானம் மற்றும் ஏழு நிலை ராஜகோபுரத்துடன் கோயில் அமைந்துள்ளது.

    தல வரலாறு:

    பல்லாண்டுகளுக்கு முன்பு பக்தர் ஒருவர், காஞ்சிபுரத்தில் கோயில் கொண்டுள்ள ஏகாம்பரேஸ்வரரின் தீவிர பக்தராக இருந்தார். ஒரு பிரதோஷ தினத்தன்று அவர் கோயிலுக்கு செல்ல எண்ணியபோது, பல தடைகள் ஏற்பட்டது. பணியில் ஏற்பட்ட சிறிய சுணக்கம் காரணமாக அவரது முதலாளியும் கோயிலுக்கு செல்லக்கூடாது என தடுத்தார். பக்தரோ அதை மீறி கோயிலுக்கு சென்றார்.

    வழியில் களைப்படைந்த அவர் இத்தலத்தில் சற்றுநேரம் ஓய்வெடுத்தார். அப்போது, சிவன் அம்பாளுடன் காட்சிதந்து, "இனி தன்னை வழிபட நெடுதூரம் வரவேண்டாம்; நீ ஓய்வெடுத்த இடத்திலேயே நான் சுயம்புவாக இருக்கிறேன், என்னை இங்கேயே வழிபடு,'' என்றாராம். அதன்பின், இவ்விடத்தில் இக்கோயில் கட்டப்பட்டதென வரலாறு கூறுகிறது.

    தல சிறப்பு:

    இத்தலத்து அம்பாள், ஆவுடையார் மீது நின்ற கோலத்தில் இருக்கிறாள். இவளே இங்கு பிரதானம். ஆணும், பெண்ணும் சமம் என்பதை சிவன், அர்த்தநாரீஸ்வர அம்சம் மூலமாக உணர்த்தியதைப்போல, இவள் ஆவுடையார் மீது நின்றபடி, சிவனில் சக்தி அடக்கம் என உணர்த்துகிறாள். இவளது பாதத்தின் முன்பு ஸ்ரீசக்கரம் உள்ளது.

    தலபெருமை:

    கோயிலுக்கு வெளியே அரசமரத்தின் அடியில் ஒரு லிங்கம் தனி சன்னதியில் உள்ளது. இவரது கருவறைக்குள் சென்று நாமாக பாலாபிஷேகம், வில்வஇலை அர்ச்சனை செய்து வழிபடலாம். இங்கு, சப்தநாகத்தின் கீழ் சகோதர விநாயகர் தனிச்சன்னதியில் உள்ளார். இதே சிலையின் பின்புறத்தில் மயில்வாகனத்துடன் நின்றகோலத்தில் முருகன் இருக்கிறார். அண்ணனும், தம்பியும் ஒரே நாகத்தின் முன்னும், பின்னும் இக்கோலத்தில் இருப்பது அபூர்வம்.

    அம்மன் சன்னதி முன்புறம் நவக்கிரக மண்டபம் உள்ளது. இம்மண்டபத்தில் உள்ள சனீஸ்வரர் அம்பாளின் நேரடிப்பார்வையில் உள்ளதால், உக்கிரம் குறைந்து காட்சியளிக்கிறார். தோஷம் உள்ளவர்கள், சனிதோஷ தினத்தில் இவரை வழிபட்டால் நீங்கும் என்பது ஐதீகம்.

    கனவு பலன்: சிவன் சன்னதிக்கு முன்வலப்புறத்தில் தூணில் சிவ ஆஞ்சநேயர் இருக்கிறார். இவருக்கு வெள்ளி நிறத்திலான ஜரிகை பூசி, துளசி மாலை சாத்தி வணங்கினால் நாம் கண்ட நற்கனவுகள் பலிக்கும், தீய கனவுகளாக இருந்தால் அவை நம்மை அண்டாமல் விலகிஓடும் என பக்தர்கள் நம்புகின்றனர். எனவே, இவரை "கனவு ஆஞ்சநேயர்' என்றும் அழைக்கிறார்கள். பிரகாரத்திலும் ஒரு ஆஞ்சநேயர் வடக்கு நோக்கியபடி உள்ளார்.

    பிரார்த்தனை

    திருமணமான பெண்கள் கணவருடன் ஒற்றுமையாக இருக்கவும், சனி தோஷம் நீங்கவும் பிரார்த்திக்கின்றனர்.

    சனிதோஷம் உள்ளவர்கள், சனிதோஷ தினத்தில் இவரை வழிபட்டால் நீங்கும் என்பது ஐதீகம். இங்குள்ள ஆஞ்சநேயருக்கு செந்தூரத்தால் அபிஷேகம் செய்து, வெற்றிலை மாலை சாத்தி வழிபட்டால் வாழ்வு சிறக்கும், பயம் நீங்கும் என்பது நம்பிக்கை. குடும்பத்தில் சகோதரர்களுக்குள் பிரச்சனை இருந்தால், கனிகள் படைத்து, பாலாபிஷேகம் செய்து வழிபட்டால், பிரச்சனைகள் தீருவதாக நம்பிக்கை.

    இருப்பிடம் :

    சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன், பாரிமுனையிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் கோயில் அமைந்துள்ளது.
    காரப்பாக்கத்தில் கங்கையம்மன் ஆலயத்திற்குள், தனி ஆலயமாக சிவாலயம் ஒன்றும் இருக்கிறது. கற்பகேஸ்வரர் ஆலயம் என்று அது அழைக்கப்படுகிறது.
    17.3.2019 அன்று கோவில் கும்பாபிஷேகம்

    கங்கை என்றதுமே அதன் நீர் வளமும், அது தரும் நில வளமுமே நம் நினைவுக்கு வரும். கங்கை தேவியானவள், தான் பாயும் வட இந்தியாவை வளப்படுத்துவது போல, தென் இந்தியாவையும் வளப்படுத்தும் விதமாக, இங்கே பல பகுதிகளில் ‘கங்கையம்மன்’ என்ற பெயரில் அம்மனாக இருந்து அருள்பாலித்து வருகிறாள். அதில் ஒரு திருத்தலம் தான் காரப்பாக்கம். இங்கு வீற்றிருந்து அருளும் கங்கையம்மன், தன்னை நம்பி வந்தவர்களை கைதூக்கி விடும் தேவியாக இருக்கிறாள்.

    தன்னுடைய தலையில் இடம் அளித்த சிவபெருமானுக்கு, இத்தலத்தில் கங்கையம்மன் இடமளித்திருப்பது சிறப்புக்குரிய அம்சமாகும். ஆம்.. கங்கையம்மன் ஆலயத்திற்குள், தனி ஆலயமாக சிவாலயம் ஒன்றும் இருக்கிறது. கற்பகேஸ்வரர் ஆலயம் என்று அது அழைக்கப்படுகிறது.

    தல வரலாறு :

    மன்னர் காலத்தில் ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து, குலோத்துங்க வள நாட்டிற்குள் அமைந்திருந்த ஊர் காரப்பாக்கம் ஆகும். இங்கிருக்கும் கங்கையம்மன் ஆலயம் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும். இங்குள்ள குளக்கரை மரத்தடியில் சுயம்புவாக தோன்றியவள் இந்த அம்மன். இந்தப் பகுதி வாழ் மக்கள், விவசாயத்தின் விதை விதைப்பிற்கும், அறுவடைக்கும் அன்னையின் உத்தரவு பெற்றே செய்து வந்துள்ளனர். அறுவடைக்குப் பின், அம்மனுக்கு நன்றி செலுத்தும் விதமாக, ஆடி மாதத்தில் கூழ் ஊற்றி, கும்பம் எடுத்தும், ஊரணிப் பொங்கல் வைத்தும் வழிபட்டுள்ளனர். மகாபலிபுரத்தில் இருந்து சென்னைக்கு மாட்டு வண்டி மூலம் செல்லும் யாத்திரிகர்கள், இத்தலத்து அன்னையை வழிபட்டு, இளைப்பாறிய பின்பே பயணத்தைத் தொடர்ந்திருக்கிறார்கள்.

    இந்தச் சூழ்நிலையில் அம்மனின் அருள் பார்வையால், மழை அதிகரித்து குளத்தில் வெள்ளம் வந்தது. இதனால் அம்மன் இருக்கும் இடத்திற்கு பாதிப்பு ஏற்படும் நிலை உருவானது. எனவே சிவனடியார் ஒருவரின் முயற்சியால் தற்போதைய ஆலயம் ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் பிரமாண்டமாக எழுந்து நிற்கிறது.

    இந்த கங்கையம்மன் ஆலயத்தின் பின்புறத்தில் தான், கற்பகாம்பாள் சமேத கற்பகேஸ்வரர் திருக்கோவில் அமைந்திருக்கிறது.

    ஆலய அமைப்பு :

    கங்கையம்மனுக்கு வடக்கு முகமாக ஐந்து நிலை ராஜகோபுரம் எழிலாக அமைந்திருக்க, எதிரே சதுர வடிவத் திருக்குளம் நீர் நிறைந்து ஆலயத்திற்கு அழகு சேர்க்கிறது. ராஜகோபுரத்திற்குள் நுழைந்ததுமே பெரிய துவாரபாலகிகள் இருவர் வண்ணக் கோலத்தில் காவல் நிற்க, கருவறைக்குள் சுமார் ஆறடி உயரத்தில் கங்கையம்மன் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறாள். திருவடிசூலம் மலையில் இருந்த கல்லில் உருவானவள் இந்த அன்னை. புதியதாக வடிக்கப்பட்ட இந்த அன்னையின் கீழே, சுயம்புவான பழைய அம்மனின் உருவமும் எழிலாக அமைந்திருக்கிறது.

    ஆலயத்தில் இடமிருந்து வலமாக முதலில் துர்க்கை, வலம்புரி விநாயகர், நெய் அபிஷேகப் பிரியன், ஸ்ரீதேவி - பூதேவி சமேத வெங்கடேசப்பெருமாள், வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமான், மேற்கு முக சன்னிதியில் 11 அடி உயரமுள்ள பக்த ஆஞ்சநேயர், ராமர், லட்சுமணர், சீதா சன்னிதிகள், கபிலமுனி, பகீரதன் சுதைச் சிற்பங்களும் காணப்படுகின்றன. இதனை அடுத்து நவக்கிரகங்கள், சனீஸ்வரர், கால பைரவர், வீர ஆஞ்சநேயர் சன்னிதிகளும் ஒருங்கே அமைந்துள்ளன.

    இந்தக் கோவிலில் கங்கையம்மனுக்கு ஆடித் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். ஆடி மாதம் நான்காவது செவ்வாய்க்கிழமை தொடங்கி, ஐந்தாவது ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். விழாவின் ஒரு பகுதியாக கும்பம் வைத்தல், கூழ்வார்த்தல், ஊரணி பொங்கல் வைக்கும் நிகழ்வு போன்றவை நடைபெறும். அந்த நேரங்களில் இந்தப் பகுதி முழுவதும் பக்தர்கள் கூட்டத்தில் களை கட்டியிருக்கும்.

    கற்பகேஸ்வரர், கற்பகாம்பாள்

    கற்பகேஸ்வரர் ஆலயம் :

    கற்பகாம்பாள் சமேத கற்பகேஸ்வரர் திருக்கோவில், கங்கையம்மன் சன்னிதியின் பின் புறம் இருக்கிறது. கொடிமரம், பலிபீடம், நந்திதேவரைக் கடந்து முன்மண்டபம் சென்றதும், இறைவனின் கருவறை நம்மை வரவேற்கிறது. கருவறைக்குள் அடியார்களைக் கவர்ந்து இழுக்கும் கற்பகேஸ்வரர் வட்ட வடிவ ஆவுடையாரைக் கொண்டு அழகிய திருமேனியில் ஜொலிக்கிறார். பக்தர்கள் வேண்டும் வரத்தை அளிக்கும் வல்லமை படைத்தவராக இந்த இறைவன் இருக்கிறார்.

    இவரது சன்னிதியை அடுத்ததாக எளிய வடிவில் அன்னை கற்பகாம்பாள் அருளாசி வழங்குகிறாள். கொடிமரத்தின் அருகே தென்புறத்தில் நாகலிங்க மரத்தடியில் ஆதி கற்பகேஸ்வரர், நாகராஜன், நாகராணி சிலை வடிவங்கள் உள்ளன.

    இந்த ஆலயத்தில் மாதந்தோறும் நான்காவது ஞாயிற்றுக்கிழமைகளில் காலை முதல் மாலை வரை அடியார்கள் திருக்கூட்டத்தால், திருவாசக முற்றோதல் மற்றும் தேவாரப்பாடல்கள் பாடும் நிகழ்வு நடைபெறுவது வழக்கமான ஒன்று. கங்கையம்மன் ஆலயம் முழுமையும், அழகிய சுதை தூண்கள், கலைநயம் மிக்க சுதைச் சிற்பங்கள் என அனைத்துமே கலைநயத்தை பறைசாற்றுவதாக அமைந்திருக்கின்றன. பூமிக்குள் புதைந்தது போல் காணப்பட்ட இந்த ஆலயத்தை, தற்போது உயர்த்தி நிறுத்தி, திருப்பணிகள் செய்து முடித்திருக்கிறார்கள். இதன் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    இத்தலத்தில் உள்ள கற்பகேஸ்வரருக்கு பிரதோஷம், அன்னாபிஷேகம், மகா சிவராத்திரி, பங்குனி உத்திரத்தில் திருக்கல்யாணம், திருக்குளத்தில் தெப்பத்திருவிழா என அனைத்தும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    பல நூற்றாண்டுகளைக் கண்ட காரப்பாக்கம் கங்கையம்மன் திருக்கோவிலில் அமைந்துள்ள கற்பகேஸ்வரர் திருக்கோவிலுக்கு, இரண்டாவது முறையாக கும்பாபிஷேகத் திருவிழா நடைபெற உள்ளது. தென்சென்னைப் பகுதியில் அடியார்களுக்கு அருள் வழங்கி ஆதரவு அளித்து வரும் காரப்பாக்கம் கற்பகேஸ்வரரை வழிபட்டுப் பேறுபெறுங்கள்.

    அம்மன் ஆலயம் நிறைந்த பகுதி :

    காரப்பாக்கத்தில் கங்கையம்மன் ஆலயம் தவிர, ஏராளமான அம்மன் ஆலயங்கள் இருக்கின்றன. அவற்றில் பழமையான வேண்டவராசி அம்மன், காளியம்மன், திரவு பதியம்மன், பெரியபாளையத்தம்மன், அங்காளம்மன், நாகாத்தம்மன் போன்ற ஆலயங்கள் அமைந்துள்ளன. இது தவிர பெருமாளுக்கான பஜனைக் கோவில் ஒன்றும் இந்தப் பகுதியில் இருக்கிறது.

    அமைவிடம் :

    சென்னையில் இருந்து ஓ.எம்.ஆர். என்னும் பழைய மகாபலிபுரம் சாலையில் சோழிங்கநல்லூருக்கு முன்பாகவும், சென்னையில் இருந்து தெற்கே 23 கி.மீ. தொலைவிலும் காரப்பாக்கம் திருத்தலம் இருக்கிறது. காரப்பாக்கம் பேருந்து நிறுத்தத்தை ஒட்டியே ஆலயம் அமைந்திருப்பது சிறப்பு. காரப்பாக்கம் செல்வதற்கு ஏராளமான பேருந்து வசதிகள் இருக்கின்றன.
    திருமண தடை, குழந்தை பேறு வழக்கும் ராகு - கேது பரிகார தலங்கள்ல தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் உள்ளன. அந்த தலங்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
    * ஆதிசேஷன் பூஜித்து அருள் பெற்ற தலம் சென்னை திருவொற்றியூர். இங்குள்ள ஸ்ரீவடிவுடையம்மன் உடனுறை ஸ்ரீபடம்பக்கநாதர் மற்றும் ஸ்ரீமானிக்கதியாகேஸ்வரரை வணங்குங்கள். ராகு-கேதுவால் உண்டான தோஷம் விலகும்.

    * கும்பகோணம்-மயிலாடுதுறை இடையே உள்ள கதிராமங்கலம் நவமி திதி அன்று இந்த தலத்திற்கு சென்று காவிரியில் நீராடி இங்குள்ள வனதுர்க்கை அம்மனை வழிபடுங்கள். ராகு பகவானால் உண்டான தீமை விலகும்.

    * சிவகங்கை அருகில் உள்ள காளையார் கோவிலுக்கு சென்று கொண் டின்ய மகரிஷி மற்றும் நாகங் களின் அரசன் வழிபட்ட ஸ்ரீமகமாயி அம்மன், ஸ்ரீகானக்காளையீஸ்வரரை வழிபடுங்கள். ராகு மற்றும் கேதுவால் உண்டான தீமைகள் விலகும்.

    * காஞ்சீபுரம்-ஸ்ரீசித்ரகுப்தர் ஆலயம் சென்று அவரை வழிபடுவதுடன் கொள்ளு, உளுந்து மற்றும் பிரவுன் நிற துணிகளை தானம் செய்யுங்கள். பசுவுக்கு ஏதேனும் உண்ண கொடுக்கவும்.

    * ஸ்ரீவாஞ்சியம்: நன்னிலம்-குடவாசல் பேருந்து சாலையில் உள்ள வாஞ்சி நாதேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நாகதீர்த்தத்தில் நாக தோஷத்தால் நீண்ட நாட்கள் திருமணம் ஆகாதவர்கள் நீராடி, நாகநாத சுவாமியையும், நாக ராஜரையும் பிரார்த்தனை செய்து வேண்டிக் கொண்டால் விரைவில் திருமணம் நடக்கும்.

    * விருத்தாசலத்திற்கு தெற்கே சுமார் 7 கி.மீ. தொலைவில் நாகேந்திரபட்டினம் எனும் ஊரில் நீலமலர் கண்ணியம்மை உடனுறை நீலகண்ட நாயகேஸ்வரை வணங்குங்கள். ராகு மற்றும் கேதுவினால் உண்டான தோஷங்கள் விலகும்.

    * திருப்பத்தூர்-திண்டுக்கல் சாலையில் சிங்கம் புனரிக்கு அருகில் உள்ள தலம் பிரான்மலை. இங்கு நாகராஜன் வழிபட்ட குயிலமுதநாயகி கொடுங்குன்றீசரை, தேன்-தினைமாவு கலந்து படைத்து வழிபடவும்.

    * சென்னை, மைலாப்பூரில் கோவில் கொண்டுள்ள முண்டகக்கன்னி அம்மனை மனம் உருக வணங்கி வழிபட்டு வர ராகு-கேதுவினால் ஏற்பட்ட தடைகள் விலகும்.

    * ஆதிசேஷன் வழிபட்ட திருநாகேஸ்வரம் சென்று சூரிய புஷ்கரணியில் நீராடி ஸ்ரீசண்பகா தண்யேஸ்வரர், ஸ்ரீகிரிஜகுசாம்பிகையை நெய்தீபம் ஏற்றி வழிபடுங்கள் நினைத்தது நிறைவேறும்.

    * ஸ்ரீகாளஹஸ்தி சென்று அங்கு கோவில் கொண்டிருக்கும் அருள்மிகு ஞானபூங்கோதையம்மை உடனுறை அருள்மிகு காளஸ்தீஸ்வரரை வணங்கி வழிபட்டு வர நிம்மதி கிடைக்கும்.

    * திருச்சி சென்று இந்திரனும் நாககன்னியர்களும் வணங்கி வழிபட்ட மட்டுவார் குழலம்மை உடனுறை தாயுமானவரை வணங்கி வாருங்கள். உங்கள் வாழ்வில் சுபீட்சம் காணுவீர்.

    * சர்ப்பதோஷ முள்ளவர் கள் பாம்பு புற்றிற்கு மஞ்சள் பூசி குங்கும பொட்டு வைத்து எலுமிச்சையை புற்றின் மீது வைத்து புற்றினுள் பால்விட்டு மூன்று முறை வலம் வர வேண்டும். நாகபஞ்சமி அன்று மட்டும் 9 முறை வலம் வர வேண்டும். குடும்பநலம், மகப்பேறு, சிரமமில்லாத பிரசவம் உண்டாகும். ராகு-கேது தசை நடப்பில் உள்ளவர்கள் நோய் நீங்க இந்த வழிபாடு செய்ய வேண்டும்.
    கோவை அவினாசி நெடுஞ்சாலையில் அன்னை தண்டுமாரி, முப்பெருத்தேவியாய், சகல சவுபாக்கியங்களையும் வாரி வழங்கும் கற்பகரட்சாம்பிகையாய் திகழ்ந்து வருகின்றாள்.
    இயற்கை அன்னையின் எழில் கொஞ்சும் கோவை நகர் வரலாறு புகழ் மிக கொண்டது. கோவன்புதூர் என்ற சிற்றூராகத் திகழ்ந்தது. கோயமுத்தூர் கோட்டை வலிமை பொருந்தியதாக விளங்கியது. நகரம், கோட்டை மற்றும் பேட்டை என்ற இரண்டு பெரும் பிரிவுகளாகத் திகழ்ந்தன. கோட்டையில் ஒரு ஈசுவரன் கோயிலும், பேட்டையில் ஒரு ஈசுவரன் கோவிலும் இன்றும் பொலிவுடன் திகழ்கின்றன.

    கோவை மறுமலர்ச்சி

    வணிகம் செய்வதற்கு வந்த ஆங்கிலேயர் நம் மக்களிடையே காணப்பட்ட ஒற்றுமையின்மையை பயன்படுத்தி நம் நாட்டையும் நம் மக்களையும் அடிமைகளாக மாற்ற தந்திரங்களையும் வஞ்சகத் திட்டங்களையும் கையாண்ட தருணத்தில் பாளையக்காரர்கள் ஆங்கிலேயரை எதிர்க்கத் தொடங்கினர். அதுபோல் மைசூர் மன்னன் திப்புசுல்தான் ஆங்கில ஆதிக்கத்தை எதிர்க்கத் துணிந்து நமது மக்களின் அடிமை வாழ்வை மீட்க தமது படையுடன் கோவை கோட்டை மதிலுக்குள்ளே தங்கியிருந்தான்.

    அந்தக் காலத்தில் தான் நம் அன்னை தண்டுமாரி மக்களுக்கு அருள்மழை பொழியத்தன் இருப்பை உணர்த்தி வெளிப்பட்டு எழுந்தருளினாள்.

    தண்டு

    தண்டு என்னும் சொல்லுக்குப் படைவீரர்கள் தங்குவதற்கு அமைக்கப்படும் கூடாரம் என்பது பொருள் மன்னவர்க்குத் தண்டு போய் வடபுலத்து வரதாபி என சேக்கிழார் குறிப்பிடுகின்றார். சிறுத்தொண்டராகிய பரஞ்சோதி வடநாட்டுக்கு படையெடுத்துச் சென்று வென்ற செய்தியைக் கூறும் பொழுது சேக்கிழார் பெரியபுராணத்தில் இச்சொல்லை சிறப்பித்துக் காட்டினார்.

    இந்த தண்டு என்னும் சொல்லே அன்னையின் பெயருக்கு அமுதூட்டும் சிங்காரச் சொல்லாய், சிறப்புப் பெயராய் அன்னையின் பெயருடன் சேர்ந்து வழங்கி வருகிறது. கோவை அவினாசி நெடுஞ்சாலையில் அன்னை தண்டுமாரி, முப்பெருத்தேவியாய், அகிலாண்ட நாயகியாய், ஆதி பராசக்தியாய், சாந்தசொரூபிணியாய் சகல சவுபாக்கியங்களையும் வாரி வழங்கும் கற்பகரட்சாம்பிகையாய் எழுந்தருளி கோவை நகரை அரசாட்சி செய்யும் அன்னையாய் திகழ்ந்து வருகின்றாள்.

    நோய் தீர்க்கும் தாய்

    நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது முதுமொழி, அக்காலத்தில் காலரா, பிளேக், அம்மை ஆகியவை கொடிய நோய்களாகக் கருதி அஞ்சப்பட்டன. நம் தண்டுமாரியம்மன் பக்தர்களுக்கு நோய் அணுகாத நல்வாழ்வை வழங்கி காத்து வருகிறாள்.

    அன்னையை மறவாத வீரர்கள்

    திப்புவின் படைவீரர்கள் அன்னை எழுந்தருளிய இடத்தில் சின்னஞ்சிறு ஆலயம் அமைத்து வழிபட்டு வந்தனர். மன்னன் ஆணைப்படி தண்டு எனும் படைவீடு இடம் மாறியபோதும் வீரர்கள் தண்டுமாரியம்மனை மறவாமல் தமக்கு இன்னல் வந்த போதெல்லாம் வந்து வணங்கினர். திருவிழாக் காலங்களில் அன்னையை வந்து தொழுது வேண்டினர். தம்மை நாடி வரும் பக்தர்களின் நோய் அகல அன்னை வேப்பிலையிலும், தீர்த்தத்திலும் கலந்து அருள் செய்தாள்.

    மேனியில் அவைபட்டவுடனே நோயின் வேகம் குறைந்தது. கவலைகள் மறைந்தன. சுபகாரியங்கள் இன்னும் கைகூடவில்லையே என்று ஏங்கியவர் பலரும் நம்பிக்கையோடு தண்டுமாரியை நாடி வந்தனர். தன்னை நாடி வரும் பக்தர்கள் அனைவருக்கும் வேண்டுவன வழங்கி கருணைக்கடலாய் அன்னை தண்டுமாரி அருள்பாலித்து வருகின்றாள்.

    வழிபாட்டின் மேன்மைகள்

    கோவை தண்டுமாரியம்மன் தீராத நோய் தீர்ப்பதில் வல்லவள், செவ்வாய்க்கிழமைகளில் எலுமிச்சைபழம் தோலில், இராகு கால நேரத்தில் நெய்தீபம் ஏற்றி ஒன்பது வாரம் வழிபாடு செய்தால் திருமணமாகாத பெண்களுக்கு நல்ல சுபவேளை கைகூடும். வெள்ளிக்கிழமை அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சிறப்பாக வழிபாடு செய்து சகல நன்மைகளையும் செளபாக்கியங்களையும் குறைவில்லாமல் பெற்று வாழ்வில் பயனடைந்து வருகின்றனர்.

    படைவீரனுக்கு கனவில் அருள் காட்சி

    திப்புவின் படைகள் கோவை கோட்டை மதிலுக்குள் தங்கியிருந்த சமயத்தில் எண்ணற்ற வீரர்கள் படையில் இருந்தனர். ஆனால் அவள் உள்ளத்தை கொள்ளை கொண்ட ஒரு வீரனுக்கு அன்னை கனவில் அருள் காட்சி அளித்தார். கண்ணுக்கும், கருத்துக்கும் அரிய நம் தாய் தண்டுமாரியம்மன் கற்பனைக்கு எட்டாத காலம் முதல் இப்புவியில் வாழ்ந்து வருவதாக கூறினாள்.

    வேப்ப மரங்களுக்கும், செடி, கொடிகளுக்கும் இடையில் நீர்ச்சுனைக்கும் அருகில் அமைந்துள்ள இக்காட்டுப் பகுதியில் அன்னை தண்டுமாரி வீற்றிருந்த கோலத்தை கனவில் கண்ட வீரன் மறுநாள் எழுந்து அதிகாலையில் விரைவாக ஆவலுடன் தேடினான். வேப்பமரத்தின் கிளைகளைத் தன் கைகளால் விலக்கி பார்த்த பொழுது பெற்ற தாயை முதலில் நோக்கும் குழந்தையாய் அவன் அன்னையை முதலில் கண்டு இன்புற்றான். பின்பு தன் கண்கள் இன்புற்றதோடு மட்டுமல்லாமல் கையெடுத்து தொழ ஆரம்பித்தான்.

    அவன் அடைந்த இன்பத்திற்கு எல்லையின்றி அமையவே கூத்தாடி மகிழ்ச்சியுற்றான். பின் அனைத்து படைவீரர்களுக்கும், நண்பர்கள், உறவினர்களுக்கும் நம் அன்னையை கோவையில் காவியத் தலைவியாய் பறைசாற்றத் தொடங்கினான். நல்ல நாள் பார்த்து சிறு மேடை அமைத்து அம்மேடை மீது அன்னை தண்டுமாரியை எழுந்தருளச் செய்தான்.

    இங்ஙனம் எழுந்தருளிய நம் அன்னை தண்டுமாரி கோவையில் கொலு வீற்றிருக்கும் செய்தி எல்லா இடங்களிலும் எல்லாரிடத்திலும் பேசப்பட்டது. படைவீடான தண்டு இருந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட மாரி தண்டுமாரி என அழைக்கப் பெற்றாள். பசியும், பிணியும் நீங்கி அன்னையை எண்ணி வழிபட்ட பக்தகோடி பெருமக்கள் எண்ணிக்கை நாளும் பெருகியது. அன்னையின் புகழ் அகிலமெங்கும் எதிரொலித்தது.

    நிகழ்ச்சி நிரல்

    தண்டுமாரியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று 13.03.2019 புதன்கிழமை காலை 6.30 மணிக்குமேல் 7.15 மணிக்குள் நடைபெறுகிறது.

    பூச்சாட்டு

    சித்திரை மாதத்தில் முதல் செவ்வாய் கிழமையன்று அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயிலின் சித்திரைத் திருவிழாவானது பூச்சாட்டுடன் தொடங்கப் பெறுகிறது. அன்று மாலை 6.30 மணியளவில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்வித்து மேள தாளங்கள் முழங்க கம்பம் எடுத்து வந்து சுவாமி சன்னிதானத்தில் வசந்த மண்டபத்தில் கம்பத்தை ஆவாகனம் செய்து மலர் மாலை களினால் கம்பத்திற்கு அலங்காரம் செய்து ஆராதனை நடைபெறும்.

    அக்கினிச்சாட்டு

    சித்திரைத் திருவிழாவில் மூன்றாம் நாளன்று அம்மனுக்கு அக்கினிச்சாட்டு விழா நடைபெறும். அன்று மாலை 6.30 மணியளவில் அக்கினிச்சட்டியை அம்மனின் திருமலர் பாதங்களில் வைத்து அக்கினிச்சட்டியில் அக்கினி வளர்க்கப்படும். பின்பு அக்கினி கம்பத்திற்கு பூஜை செய்யப்பட்டு மேற்படி கம்பத்தையும் அக்கினிச் சட்டியையும் இத்திருக்கோயில் பூசாரிகள் எடுத்து கோவிலைச் சுற்றி வலம் வந்து பூச்சாட்டுக் கம்பத்தை எடுத்து விட்டு அக்கினிச்சாட்டு கம்பத்தை ஆவாகனம் செய்து மேற்படி கம்பத்தின் மூன்று கிளைகளிலும் குழல் ஓடுகளைச் செருகி அதன்மேல் அக்கினிச்சட்டியை வைப்பார்கள். அக்கினிச் சட்டியில் எரியும் அனல் நெருப்பினால் அன்னையவள் ஜோதி சொரூபியாக அருள்பாலித்து இப்பூவுலகைக் காத்து இரட்சிக்கிறாள்.
    500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது குணசீலத்தில் உள்ள தார்மீக நாதர் ஆலயம். இது ஒரு பித்ரு தோஷ நிவர்த்தி தலமாகும். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    சூறைக்காற்று, பேய் மழை, ஊரெங்கும் வெள்ளம். காவிரியில் நொங்கும் நுரையுமாகப் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. பிரளயம் ஏற்பட்டு விட்டதோ என மக்கள் மனதில் அச்சம் பரவத் தொடங்கியது.

    வெள்ளத்தில் உருக்குலைந்த எந்த ஆலயத்திலிருந்தோ சிவபெருமானின் திருமேனி ஒன்று காவேரி வெள்ளத்தில் அசுர வேகத்தில் அடித்துக் கொண்டு வந்தது. வந்த வேகத்தில் அந்த திருமேனி இரண்டாகப் பிளந்தது. அதன் ஒரு பகுதி காவிரியின் வடகரையிலும் இன்னொரு பகுதி தென்கரையிலும் ஒதுங்கியது.

    வடகரையில் ஒதுங்கிய திருமேனி சித்தர் ஒருவரின் பார்வையில் பட்டது. அவர் அந்தத் திருமேனியை ஓரிடத்தில் பிரதிஷ்டை செய்து சிறிய ஆலயம் அமைத்தார். காலப்போக்கில் அந்த ஆலயம் படிப்படியாக திருப்பணி நடந்து பல மன்னர்களில் கருணைப் பார்வையால் அழகான ஒரு ஆலயமாக உருவெடுத்தது. அந்த ஆலயமே குணசீலத்தில் உள்ள தார்மீக நாதர் ஆலயம். இது செவி வழி வரலாறு

    இங்கு அருள்பாலிக்கும் இறைவன் தார்மீக நாதர். இறைவியின் பெயர் ஹேமவர்ணேஸ்வரி. ஆலயம் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.

    கிழக்கு திசை நோக்கி ஆலயம் அமைந்திருந்தாலும் தென் புறத்திலும் சாலையை ஓட்டி அழகிய முகப்புடன் நுழைவு வாசல் உள்ளது. உள்ளே நுழைந்ததும் அகன்ற பிரகாரம். நடுவே நந்தியும், பலிபீடமும் உள்ளது.

    பொதுவாக சித்தர்கள் நடமாடிய ஆலயத்திலோ அவர்கள் ஆலய அமைப்பிற்கு உதவி இருந்தாலோ நந்தியின் அமைப்பு மாற்றத்துடன் காணப்படும். இது போன்ற ஆலயங்களில் நந்தி பகவான் தனது இரண்டு கால்களையும் மடித்தப்படி படுத்திருப்பார். இங்கும் அப்படித்தான் காட்சி தருகிறார். பிற ஆலயங்களில் நந்தி பகவான் ஒரு காலை சற்றே மடக்கியும் இன்னொரு காலை மடித்தபடியும் காட்சி தருவார்.

    இந்த ஆலயத்தில் சித்தர்கள் நடமாட்டம் இருப்பதாகவும் பக்தர்கள் கூறுகின்றனர். அடுத்து உள்ள மகா மண்டபத்தில் வலது புறம் அன்னை ஹேமவர்ணேஸ்வரியின் சன்னிதி உள்ளது. அன்னை இங்கு நின்ற திருக்கோலத்தில் தென்திசை நோக்கி புன்னகை தவழ அருள்பாலிக்கிறாள். அன்னைக்கு இரண்டு கரங்கள் அவை அபய வரத ஹஸ்த முத்திரைகளுடன் காட்சி தருகின்றன.

    அடுத்து மகா மண்டபத்தில் கருவறை நுழைவுவாயிலின் இடது புறம் கற்பக விநாயகரும், வலது புறம் சண்முகர் என்ற திருநாமத்துடன் வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமானும் அருள்பாலிக்கின்றனர். இங்கு முருகப்பெருமானின் வாகனமான மயிலின் தலைப் பகுதி முருகனின் இடதுபுறம் இருப்பது அபூர்வ அமைப்பாக சொல்லப்படுகிறது. பொதுவாக மயிலின் தலைப்பகுதி முருகனின் வலது புறம் இருப்பது தான் வழக்கம்.

    கருவறையில் இறைவன் தார்மீகநாதர் கீழ்திசை நோக்கி அருள்பாலிக்கிறார். இறைவனின் பிளவுபட்ட திருமேனியின் பகுதி பின்புறம் உள்ளதால் தரிசனம் செய்யும் போது நமக்கு எந்த வேறுபாடும் தெரியாது.

    இங்கு அன்னைக்கு குங்கும அர்ச்சனை செய்தால் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் குணமாவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

    தார்மீகநாதர், ஹேமவர்ணேஸ்வரி

    இறைவனின் தேவ கோட்டத்தில் தட்சிணாமூர்த்தியும் சிவ துர்க்கையும் அருள்பாலிக்கின்றனர். திருச்சுற்றில் வடக்கில் சண்டிகேஸ்வரரும் வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்களும் கிழக்கில் காலபைரவரும் அருள்பாலிக்கின்றனர். ஆலய தல விருட்சம் வில்வம் கிழக்கு பிரகாரத்தில் தழைத் தோங்கி நிற்கிறது.

    துர்க்கைக்கு வெள்ளிக்கிழமைகளில் ராகு கால நேரத்திலும் தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளிலும் காலபை வரருக்கு தேய்பிறை அஷ்டமியிலும் சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன.

    நவராத்திரி ஒன்பது நாட்களும் அன்னை விதம் விதமான அலங்காரத்தில் காட்சி தருவாள். 10-ம் நாள் இறைவன் இறைவி அம்பு போடும் வைபமும் நடைபெறும். அன்று இறைவன் - இறைவி ரிஷப வாகனத்தில் வீதியுலா வருவார்கள்.

    முருகப்பெருமானுக்கு மாத கார்த்திகை மற்றும் சஷ்டி நாட்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. கார்த்திகை மாத கார்த்திகை அன்று ஆலயத்தின் முன் சொக்கப்பனை தீபம் ஏற்றும் வைபமும் நடைபெறும்.

    இங்கு முருகப்பெருமானின் பின்புறம் உள்ள திருவாசி கல்லில் வடிவமைக்கப்பட்டு இறைவனுடன் இணைந்தே காணப்படுவது சிறப்பான அம்சமே. கார்த்திகை மாத சோம வாரங்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

    பத்ம பீடத்தில் அருள்பாலிக்கும் இறை வனுக்கு ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் பல நூறு பக்தர்கள் சூழ வெகு சிறப்பாக நடைபெறுகிறது.

    இது ஒரு பித்ரு தோஷ நிவர்த்தி தலம். பித்ரு தோஷம் உள்ளவர்கள் முதல் நாள் இரவு இந்த ஊரில் வந்து தங்குகின்றனர். அவர்கள் அதிகாலையில் குளித்து முடித்து ஆலயம் வருகின்றனர். பூமாலை அர்ச்சனை பொருட்களுடன் இறைவனுக்கு அர்ச்சனை செய்ய தட்டை அர்ச்சகரிடம் தருகின்றனர். அர்ச்சகர் அவர்களைப் பற்றிய விவரங்களை கேட்டபின் இறைவனுக்கு அர்ச்சனை செய்கிறார். அர்ச்சனை முடிந்ததும் தோஷம் உள்ளவருக்கு கழுத்தில் ஒரு மாலையை சூட்டி, அர்ச்சனை செய்த தட்டை அவரிடம் தருகிறார். பின் இறைவியின் சன்னிதிக்கு செல்கிறார். அங்கும் அர்ச்சனை செய்தபின் அர்ச்சகர் அன்னையின் கரத்திலிருக்கும் ஒரு ரட்சையை (முடிகயிறு) கொண்டு வந்து தோஷ பாதிப்பு உள்ளவர் கரத்தில் கட்டுகிறார்.

    பின்னர் அந்த நபர், இறைவன் - இறைவி ஆலயத்தை 12 முறை வலம் வர வேண்டும். தொடர்ந்து சன்னிதி முன்பாக அமைந்து, குறைந்தது 15 நிமிடங்கள் தியானத்தில் மூழ்கினால், அவர்களின் தோஷம் அறவே நீங்குவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

    செவ்வாய்க்கிழமை மட்டுமே இந்த பித்ரு தோஷ நிவர்த்தி அர்ச்சனை நடைபெறுகிறது. அன்று ஆலயம் வெளியூர் மற்றும் வெளி மாவட்ட பக்தர்களால் நிரம்பி வழியும்.

    காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

    திருச்சி - முசிறி பேருந்து சாலையில் திருச்சியில் இருந்து 16 கி.மீ தொலைவிலும், முசிறியில் இருந்து 12 கி.மீ தொலைவிலும் உள்ள குணசீலத்தில் உள்ளது இந்த ஆலயம்.
    சனி பகவான் வீற்றிருக்கும் ஒவ்வொரு ஆலயங்களும் சிறப்பு மிக்கவையாக இருக்கிறது. சனீஸ்வர பகவான் அருள்புரியும் சில தலங்களை இங்கே பார்க்கலாம்.
    சனி பகவான் வீற்றிருக்கும் ஒவ்வொரு ஆலயங்களும் சிறப்பு மிக்கவையாக இருக்கிறது. சனி பகவான் இருக்கும் ஆலயங்களில் எல்லாம், பிரதான தெய்வங்களையும், சனீஸ்வரரையும் வழிபட்டால் தான் முழுமையான பலன்கள் கிடைக்கும். சனீஸ்வர பகவான் அருள்புரியும் சில தலங்களை இங்கே பார்க்கலாம்.

    திருநள்ளாறு

    காரைக்கால் அருகே உள்ளது திருநள்ளாறு. நள மகா சக்கரவர்த்தியின் ஏழரை நாட்டு சனி விலகிய தலம் இது. இங்குள்ள நள தீர்த்தம் விசேஷம் மிக்கது. இந்த குளத்தில் நீராடி, தர்ப்பாரண்யேஸ்வரரையும், சனி பகவானையும் வழிபாடு செய்தால், சனி தோஷங்கள் விலகும். நன்மைகள் வந்து சேரும் என்பது ஐதீகம். தர்ப்பாரண்யேஸ்வரர் சன்னிதிக்கு செல்லும் வழியில், ஒரு சிறு மாடம் போன்ற அமைப்பில் சனி பகவான் அமர்ந்து அருளாட்சி செய்கிறார். சிறப்பு மிக்க நாட்களில், இத்தலத்தில் அருளும் சனி பகவான், தங்க காக வாகனத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு திருக்காட்சி தருகிறார்.

    குச்சனூர்

    தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ளது குச்சனூர். இங்கு சனி பகவான் சுயம்பு மூர்த்தியாய் அருள்கிறார். கல் தூணாக பூமியில் இருந்து தோன்றிய மூர்த்தம் இது. இந்த இறைவனுக்கு மஞ்சள் காப்பு சாத்துகிறார்கள். சூரியனின் மகன் என்பதால் நாமமும், ஈஸ்வர பட்டம் பெற்றிருப்பதால் விபூதியும் அணிவிக்கிறார்கள். நீதியை வழங்குபவராகவும், வயிற்று வலி நீக்குபவராகவும் இந்த குச்சனூர் சனீஸ்வரன் திகழ்கிறார். தேனியில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் இந்த ஆலயம் உள்ளது.

    எட்டியத்தளி

    புதுக்கோட்டை, அறந்தாங்கியில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது எட்டியத்தளி. அகத்திய மாமுனிவர் காசி விஸ்வநாதரை வணங்கி விட்டு, இந்த திருத்தலத்திற்கு வருகை தந்தார். அப்போது அஷ்டம சனியால் பாதிக்கப்பட்டிருந்த தொண்டை மண்டல மன்னன் காளிங்கராயன், தன்னுடைய சனி தோஷம் நீங்குவதற்காக திருநள்ளாறு திருத்தலத்திற்கு இந்த வழியாகச் சென்றார். அந்த மன்னனை அகத்தியர் தடுத்து நிறுத்தி, அஷ்டம சனிக்கு பரிகாரமாக தான் பூஜித்த அகத்தீஸ்வரருக்கும் அகிலாண்டேஸ்வரிக்கும், இங்கு ஒரு ஆலயம் அமைத்து வழிபடும்படி அறிவுறுத்தினார். மேலும் நவக்கிரகங்களையும் பிரதிஷ்டை செய்யும்படியும், ஈசனின் ஈசான பார்வை சனி பகவானின் மீது படும்படியும் ஆலயத்தை அமைக்கக் கூறினார். அதன்படியே செய்த மன்னனின் சனி தோஷம் நீங்கியது. சிறந்த சனி தோஷ பரிகாரத் தலங்களில் எட்டியத்தளி ஆலயமும் ஒன்றாக விளங்குகிறது.

    மங்கம்மாபேட்டை

    வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ளது மங்கம்மாபேட்டை. இங்குள்ள ஆலயத்தில் சனி பகவான், தன்னுடைய மனைவி நீலாதேவியை மடியில் அமர்த்தியபடி கல்யாண சனீஸ்வரராக காட்சியளிக்கிறார். எனவே இந்த ஆலயத்தில் இங்கே சஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷேகம், பீமரதசாந்தி போன்ற சுப விசேஷங்களையும் செய்கிறார்கள். இவ்வாறு செய்வதால், ஆயுள் விருத்தியாகி, குடும்ப நலனும் மேம்படுவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். பிரமிடு போன்று அமைந்திருக்கும் இந்த ஆலயத்தின் கருவறை விமானம் மிகவும் சக்தி வாய்ந்ததாக திகழ்கிறது. தன் சகோதரன் எமதர்மனுக்கு உரித்தான தென்முகம் நோக்கி அருள்பாலிக்கிறார் சனி பகவான். 27 நட்சத்திரங்கள், 12 ராசிகளுக்குரிய சக்கரங்கள், சனி பகவானின் பீடத்தில் வைக்கப்பட்டுள்ளன. எனவே கிரக தோஷங்கள் போக்கும் தெய்வமாகவும் இத்தல சனி பகவான் திகழ்கிறார்.

    திருவாதவூர்

    இந்தத் திருத்தலத்தில் வேதபுரீஸ்வரரும், வேதநாயகி அம்மனும் அருள்பாலிக்கிறார்கள். இங்கு சனி பகவானுக்கு தனிச் சன்னிதி இருக்கிறது. மாண்டவ்ய முனிவரின் சாபத்தால் சனி பகவானுக்கு முடக்கு வாத நோய் ஏற்பட்டது. அந்த நோய் நீங்குவதற்காக, சனி பகவான் இத்தலத்தில் உள்ள இறைவனையும், இறைவியையும் வழிபட்டார். இதையடுத்து அவரது வாத நோய் நீங்கியது. இதனால் தான் இந்த திருத்தலத்திற்கு ‘திருவாதவூர்’ என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது. இத்தலத்து ஈசனையும், சனி பகவானையும் வழிபட்டால் சனி தோஷங்களில் இருந்து விடுபடலாம். மதுரைக்கு வடகிழக்கே 20 கி.மீ. தொலைவில் திருவாதவூர் உள்ளது.

    பொழிச்சலூர்

    சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ளது பொழிச்சலூர் திருத்தலம். இங்கு பழமையான அகஸ்தீஸ்வரர் திருக்கோவில் அமைந்திருக்கிறது. இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் சனி பகவானும் ஒரு வரப்பிரசாதியாக இருந்து அருள்பாலிக்கிறார். சனீஸ்வர பகவான் நேரடியாக இத்தல இறைவனை பூஜித்ததாகவும், இங்குள்ள நள்ளாறு தீர்த்தத்தில் நீராடி தன்னுடைய தோஷத்தை போக்கிக் கொண்டதாகவும் தல வரலாறு சொல்கிறது. எனவே இத்தலம் வடதிருநள்ளாறு என அழைக்கப்படுகிறது. திருநள்ளாறுக்குச் சென்று பரிகாரம் செய்ய இயலாதவர்கள், இத்தல இறைவனான அகஸ்தீஸ்வரருக்கும் சனீஸ்வரனுக்கும் அந்த பரிகாரங்களைச் செய்தால் உரிய பலன்கள் கிடைக்கும்.

    சோழவந்தான்

    சோழவந்தானில் இருந்து குருவித்துறைக்குப் போகும் பாதையில் சனி பகவான் ஆலயம் ஒன்று இருக்கிறது. இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் முருகப்பெருமானுக்கு ஆலயம் அமைத்து வழிபட நினைத்தார்கள். அதற்காக சிலை வடிக்க ஏற்பாடு நடைபெற்றது. ஆலயம் கட்டி, கருவறையில் முருகனின் சிலையை அமைக்க அனைவரும் காத்திருந்தனர். அந்த நேரத்தில் காஞ்சி மகாமுனி, ‘இது சனி பகவான் சிலை. உங்கள் ஊரில் நிறுவி வழிபடுங்கள்’ என அடையாளம் காட்டி ஆசி அளித்தார். தனது மேல் கரங்களில் ஆயுதங்கள் தரித்து, கீழ் வலது கரம் அபய ஹஸ்தமாகவும், கீழ் இடது கரம் கதாயுதம் ஏந்தியும் சனி பகவான் காட்சி தருகிறார். அருகில் காக வாகனம் உள்ளது. இத்தலம் சனி தோஷம் நீக்குவதற்கும், விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பரிகார தலமாகவும் இருக்கிறது. மதுரையில் இருந்து 27 கி.மீ. தொலைவில் இருக்கிறது சோழவந்தான்.
    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டையில் தன்வந்திரி பகவானுக்கு, தனித்த சிறப்பு மிக்க ஆலயம், ‘தன்வந்திரி பீடம்’ என்ற பெயரில் உள்ளது. இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    மனித வாழ்வின் பற்றுக்கோலாக ஆன்மிகம் விளங்குகிறது. ஏதோ ஒரு தருணத்தில் நம்பிக்கை இழக்கும் மனிதனின் சோர்வை நீக்கி வாழ்வின் போக்கை மாற்றியமைக்கும் அற்புதமான வரமாக, ஆன்மிக வழிபாடுகளும், கடவுள்களின் உருவ ஆராதனைகளும் உள்ளன. வாழ்வில் கோடிகோடியாய் பொருள் செல்வம் இருந்தாலும், உடல் ஆரோக்கியம் எனும் பெரும் செல்வம் இல்லையெனில் வாழ்வு இன்பமாக அமையாது. நம் உடல்நலன் காத்து நமக்கு ஆரோக்கிய வாழ்வு அருளும் தெய்வமாக தன்வந்திரி பகவான் திகழ்கிறார்.

    தேவர்களும் அசுரர்களும் அமுதம் வேண்டி பாற்கடலைக் கடைந்தனர். அப்போது மகாவிஷ்ணுவின் அவதாரமாக கடலில் இருந்து திருக்கரங்களில் அமிர்த கலசத்துடன் தோன்றியவரே ஸ்ரீதன்வந்திரி பகவான். இவர் மகாவிஷ்ணுவின் பன்னிரண்டாவது அவதாரமாக போற்றப்படுகிறார். உலகின் முதல் மருத்துவராகவும், எண்ணற்ற மருத்துவ முறைகளுக்கு மூல ஆதாரமாகவும், தன்னை நாடும் பக்தர்களுக்கு பிணி தீர்ப்பவராகவும் இவர் அருள்கிறார்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த தன்வந்திரி பகவானுக்கு, வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டையில் தனித்த சிறப்பு மிக்க ஆலயம், ‘தன்வந்திரி பீடம்’ என்ற பெயரில் உள்ளது. 75 சன்னிதிகள், நலம் தரும் மூலிகை ஹோமங்கள், கவலைகள் தீர்த்திடும் கடவுள் விக்கிரகங்கள், தூய்மையான பரந்த இடம் என பக்தர்களின் மனதை மகிழவைத்து வரவேற்கிறது இந்த பீடம். சைவம், வைணவம், சாக்தம், சவுரம், கவுமாரம், காணாபத்யம் என ஷண்மத கடவுள்களை போற்றும் விதத்தில், இந்த ஆலயத்தில் ஆறு மத கடவுள்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பாகும்.

    உலக மக்களின் நலனுக்காக ஸ்ரீ முரளிதர சுவாமிகளால் அமைக்கப்பட்டிருக்கிறது இந்த தன்வந்திரி பீடம். இதன் முன் பக்கமாக நுழைந்தவுடன், தேசத்தைக் காக்கும் பெண் சக்தியான பாரதமாதா நிற்கிறாள். அவளை வணங்கி பீடத்தின் பிரதான வாசல் வழியாக உள்ளே சென்றால், வலது பக்கம் சயன கோலத்தில் வாஸ்து பகவான் காட்சி தருகிறார். பொதுவாக வாஸ்து பகவானின் உருவச்சிலையை ஆலயங்களில் காண்பதென்பது அரிதானது. அதிலும் புராணத்தில் எப்படி குறிப்பிடப்பட்டுள்ளதோ, அதே சயனக்கோலத்தில் அற்புதமான அழகுடன் இங்கு இருப்பது சிறப்பு.

    இங்குள்ள தெய்வங்களின் சிலை வடிவங்கள் ஒவ்வொன்றும் அற்புதமாக சிறந்த முறையில் அமைந்துள்ளன. பீடத்தின் முகப்பு பகுதியில் ஒரே கல்லில் செய்யப்பட்ட வினை தீர்க்கும் விநாயகரும், பிணி தீர்க்கும் தன்வந்திரியும் சிம்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கின்றனர். விநாயகர் சங்கு சக்கரத்துடன் தும்பிக்கையில் அமுத கலசத்துடன், திருமண் தரித்து சிரித்த முகத்துடன் அருள் புரிகிறார். இங்குள்ள காலச் சக்கரத்தில், நவக்கிரகங்களின் சுழற்சியால் ஏற்படும் பாதிப்புகளை அகற்ற, ஒவ்வொரு ராசிக்கும் ஏற்ற விருட்சங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

    மரண பயம் நீக்கி, மாங்கல்ய பாக்கியம் அருளும் மகிஷாசுரமர்த்தினி, பில்லி, சூனியம் போன்ற தீய சக்திகளிடம் இருந்து காத்திடும் பிரத்யங்கரா தேவி, நல்வாழ்வு தரும் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி, கஷ்டங்கள் நீக்கும் அஷ்ட நாக கருடன், இழந்த பொருளை மீட்டுத் தரும் கார்த்தவீர்யார்ச்சுனன், குழந்தை பாக்கியம் தரும் நவநீத கிருஷ்ணன், பதவி தரும் பட்டாபிஷேக ராமர், சுகம் தரும் சுதர்சன ஆழ்வார், சத்தியம் காக்கும் சத்தியநாராயணா, வாக்கு தரும் ஸ்ரீ வாணி சரஸ்வதி, குலம் தழைக்க வைக்கும் கூர்ம லட்சுமி நரசிம்மர், சங்கடம் தீர்க்கும் ராகு- கேது, சொர்ணம் அளிக்கும் சொர்ணாகர்ஷண பைரவர், நன்மைகள் தரும் நவ பைரவர், அன்ன மளிக்கும் காசி அன்னபூர்னேஸ்வரி போன்ற தெய்வங்களுடன் முருகப்பெருமான், காயத்திரி தேவி, தத்தாத்ரேயர், ரெங்கநாதர், ஷீரடி சாய்பாபா, கஜலட்சுமி, தட்சிணாமூர்த்தி, லட்சுமி ஹயக்ரீவர், மரகதாம்பிகா சமேத மரகதேஸ்வரர் போன்ற எண்ணற்ற தெய்வங்கள் அருள்பாலிக்கிறார்கள்.

    தன்வந்திரி பகவான், ஆரோக்கிய லட்சுமி

    மூலவரான தன்வந்திரி பகவான் 8 அடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில், நான்கு கரங்களிலும் சங்கு, சக்கரம், அமிர்த கலசம், சீந்தல்கொடி ஏந்தியபடி பத்மபீடத்தில் காட்சி தருகிறார். இவரது துணைவியாக வீற்றிருப்பவர், மகாலட்சுமியின் சொரூபமான ஆரோக்கிய லட்சுமி தாயார். இவரும் தன்வந்திரி பெருமாளைப் போலவே, அமிர்த கலசமும், சீந்தல்கொடியும் கைகளில் ஏந்தியிருக்கிறார். இந்த அன்னைக்கு நடைபெறும் ஹோமத்தில் கலந்து கொண்டால், ஆரோக்கிய தோஷங்கள் நீங்குவதுடன், ஆனந்தமான வாழ்வு அமையும் என்பது நம்பிக்கை.

    இங்கு பசுக்களை காக்கும் கோசாலை, மனத்தூய்மை தரும் துளசி மாடம், வள்ளலார், ரமணர், ராகவேந்திரர், காஞ்சி பெரியவர், மகா அவதார் பாபாஜி, அகத்தியர், ராமகிருஷ்ணர், குழந்தையானந்தா மகா சுவாமிகள், புத்தர், குருநானக், மகாவீரர், வீரபிரம்மங்காரு போன்ற மகான்களுடன் சஞ்சலம் போக்கும் சஞ்சீவராயராக அனுமனும் வீற்றிருக்கிறார்.

    இந்த தன்வந்திரி பீடத்தில் இருக்கும் தெய்வங்களுக்கு அர்ச்சனை, ஆரத்தி போன்றவை கிடையாது. யாகம் மட்டுமே உண்டு என்பதால், பக்தர்கள் அர்ச்சனைப் பொருட்களை கொண்டு வருவதை தவிர்க்கும்படி நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் வைக்கப்படுகிறது. காலை, மாலை உலக நலன் கருதி கூட்டு பிரார்த்தனை நடைபெறும். மேலும் பீடத்தில் தினமும் நடைபெறும் தன்வந்திரி ஹோமத்துடன் சகல தேவதா காயத்ரி ஹோமமும் உண்டு. இந்த ஆலயத்தின் விழா வருகிற 13-ந் தேதி முதல், 17-ந் தேதி வரை நடைபெற உள்ளது. 16-ந் தேதி (சனிக்கிழமை) தன்வந்திரி பகவானுக்கு 1008 கலச அபிஷேகமும், ஸ்ரீதேவி-பூதேவி சமேத சீனிவாசருக்கு திருக்கல்யாணமும் நடக்கிறது. 17-ந் தேதி ஷண்மத தெய்வங்களை ஆராதிக்கும் வகையில் ஒரே மேடையில் ஷோடஸ (பதினாறு) தெய்வீக திருக்கல்யாண மகோற்சவமும் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொண்டால் திருமண பாக்கியம், குழந்தைப்பேறு, உடல் ஆரோக்கியம் பெறலாம் என்கிறார்கள்.

    அமைவிடம் :

    சென்னையில் இருந்து மேற்கே 100 கிலோமீட்டர் தொலைவிலும், வேலூரில் இருந்து கிழக்கே 30 கிலோ மீட்டர் தூரத்திலும், திருப்பதியில் இருந்து தெற்கே 100 கிலோமீட்டர் தொலைவிலும், திருவண்ணாமலையில் இருந்து வடக்கே 90 கிலோமீட்டர் தூரத்தில் வாலாஜாபேட்டை அமைந்துள்ளது. ஆலயத்திற்குச் செல்ல ஏராளமான பஸ் வசதிகள் உள்ளன.

    மகாமந்திர யந்திரம் :

    இந்த ஆலயத்தில் இருக்கும் தன்வந்திரி பகவான் சிலை, வேறு எங்கும் இல்லாத வகையில் சிறப்பான வகையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. அதாவது, இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள், கடல் கடந்த தேசங்களில் வாழ்பவர்கள் என சுமார் 47 லட்சம் பக்தர்கள், தங்களது கைப்பட எழுதிய 54 கோடி மகாமந்திரங்களை, கர்ப்பகிரகத்தில் உள்ள மூலவருக்கு அடியில் 15 அடி ஆழத்தில் பளிங்கு கற்கள் பதித்து வைக்கப்பட்டுள்ளது. அதன்மேல் அமைந்த பீடத்தில் தான் தன்வந்திரி பகவானை நிலைநிறுத்தி உள்ளனர். கழுத்தில் மருத்துவர்கள் அணியும் ஸ்டெதஸ்கோப் அணிந்து, நோய் தீர்க்கும் மருத்துவராக முகத்தில் புன்னகை தவழ, தன்வந்திரி பகவான் அருள்பாலிக் கிறார். வழக்கமாக ஆலயங்களில் அருளும் மூலவருக்கு கீழே யந்திரங்களை பதிப்பதுதான் வழக்கம். ஆனால் இங்கு பக்தர்கள் கையால் எழுதப்பட்ட மகாமந்திரங்களே யந்திரங்களாக இருப்பது சிறப்புக்குரியது என்கிறார்கள்.
    மலேசிய நாட்டின் பழம்பெரும் ஆலயம், தமிழர்களுக்கு அருளை புகட்டிய ஆலயம் என பல்வேறு பெருமைகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, கோலாலம்பூர் மகாமாரியம்மன் ஆலயம் ஆகும்.
    மலேசிய நாட்டின் பழம்பெரும் ஆலயம், தைப்பூசத்திற்கு அரசு விடுமுறையைப் பெற்றுத் தந்த கோவில், தமிழர்களுக்கு அருளை புகட்டிய ஆலயம், இந்திய தேசிய காங்கிரஸ், இந்திய தேசிய ராணுவத்தின் கிளையாகச் செயல்பட்ட கோவில், சமயப் பணியோடு, சமுதாயப் பணிகளுக்கும் உதவும் திருக்கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, கோலாலம்பூர் மகாமாரியம்மன் ஆலயம் ஆகும்.

    தல வரலாறு :

    மகாமாரியம்மன் வரலாறு, மலேசியத் தமிழர்களின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்துள்ளதை வரலாறு எடுத்துக் காட்டுகிறது. தமிழ்நாட்டின் திருமலைராயன் பட்டினம் ஊரைச் சார்ந்த காயோரோகணம் பிள்ளை, கிழக்கிந்தியக் கம்பெனியின் பாதுகாப்புப் படையில் சேர்ந்து பணிபுரிய, சிங்கப்பூர் சென்றார். அங்கு சிறப்பாகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

    இந்நிலையில், மலேசிய நாட்டில் கோம்பாக், கிள்ளன்னான் கழிமுகப் பகுதியில் உள்ள கோலாலம்பூரில், ஈய சுரங்க வளர்ச்சி, ரப்பர், காபித் தோட்டங்கள் தோன்றின. அங்கே ஒரு வணிக நகரம் உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்தச் சமயத்தில் அவர் கோலாலம்பூர் வந்தார். அங்கே இந்தியர்களின் ஈடு இணையற்ற உழைப்பினால் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அங்கே பணிபுரிந்த தொழிலாளர்களுக்குத் தலைவராக விளங்கினார், காயோரோகணம் பிள்ளை.

    அந்த சமயத்தில் தமிழ்மக்கள் வழிபட்டு வணங்க மகாமாரியம்மன் ஆலயம் எழுப்ப முடிவு செய்யப்பட்டது. அதன்படி, காேயாரோகணம் பிள்ளை தலைமையில் கி.பி. 1873-ல் எளிய ஆலயம் எழுப்பப்பட்டது. சிறிது காலத்தில் அந்த இடம் ரெயில்நிலையம் அமைக்க தேவைப்பட்டது.

    இதனால் சீனத் தலைவர் யாப் ஆலாய் என்பவரிடம் இருந்து காப்டன் குடில் என்பவர் இடத்தை கி.பி.1885-ல் பெற்று, அங்கே எளிய மகாமாரியம்மன் ஆலயம் இடம் பெயர்ந்தது. காயோரோகணம் பிள்ளை 1886-ல் தமிழகம் சென்றபோது காலமானார். அதனைத் தொடர்ந்து அவரது புதல்வர் தம்புசாமிப்பிள்ளை தந்தையார் விட்டுச் சென்ற பணியைத் தொடர்ந்தார். இவரே பத்துமலை முருகன் ஆலயத்தில் வேல் வைத்து வழிபாட்டினைத் தொடங்கி வைத்தார். அவருடன் இன்னும் சிலரும் இணைந்து செயல்பட்டனர்.

    தம்புசாமிப் பிள்ளையை அடுத்து, ஆலயத்தை அவரது புதல்வர்கள் நிர்வகித்து வந்தனர். இதனிடையே, பத்துமலை முருகன், கோர்ட்டுமலை கணேசன் ஆலயங்களும் ஒரே நிர்வாகத்தின் கீழ்வந்தது. இதன்பின், புதிய பிரச்சினை உருவானது. உபயதாரர்கள் தங்களுக்கும் ஆலய நிர்வாகத்தில் இடம் வேண்டும் என வலியுறுத்தினர். எவ்வித முடிவும் ஏற்படாமல், 1929-ல் உச்சநீதிமன்றம் வரை வழக்கு சென்றது. 1930-ல் அளித்த தீர்ப்பின்படி ஆலய நிர்வாகம் மக்களின் பாதுகாப்பிற்கு மாற்றம் செய்யப்பட்டது. தென் இந்திய வம்சா வழியினர் ஆலய நிர்வாகத்தில் இடம் பெற்றனர்.

    1942-ல் மலாயா, ஜப்பான் ஆதிக்கத்தில் வந்தபோது, ஆலயத்தின் ஒருபகுதி இந்திய தேசிய ராணுவத்தின் உதவி நிலையமாகவும், இந்திய சுதந்திர சங்கத்தின் கிளையாகவும் செயல்பட்டது. தென்கிழக்கு ஆசியாவில் சுதந்திர எழுச்சியை ஏற்படுத்திய மாவீரர் நேதாஜி, இந்த ஆலயத்திற்கு வருகை தந்து, இங்குள்ள மக்களிடம் எழுச்சியூட்டினார்.

    இதன்பின், 1945-ல் பிரிட்டிஷார் வசம் சென்றது, மலேயா. இதனால் இந்திய வம்சாவழியினர் நிலை, இன்னலுக்கு உள்ளானது. தங்களைத் தற்காத்துக் கொள்ள, மலேசிய இந்திய காங்கிரஸ் என்ற அரசியல் கட்சி உருவானது. அது தன்னை நிலை நிறுத்தி தமிழர்கள் வாழ்வை காத்தது. இப்படி சமயப் பணியிலும், அரசியல் பணியிலும் இந்த ஆலயம் முக்கியப் பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.

    இதன்பின், சிலாங்கூர் மாநில அரசு, முதல்வர் டத்தோ ஆருண், மலேசிய மைய அரசு பிரதமர் துன் அப்துல் ரசாக், அன்னையின் அடியவர்கள் ஆகியோர் பெருமளவில் நிதியுதவி செய்து, இவ்வாலயம் எழும்ப துணை புரிந்தனர்.

    இன்று மகாமாரியம்மன் ஆலயம், கோலாலம்பூர் நகரின், கவுரவமான அடையாளச் சின்னமாக திகழ்கிறது. கோலாலம்பூர் மகாமாரியம்மன், பத்துமலை முருகன், கோர்ட்டுமலை கணேசர் ஆலயங்களின் விரிவாக்கமும் நடைபெற்று வருகின்றன.

    ஆலய அமைப்பு :

    கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரம், வெளிச்சுவரில் லட்சுமி, சரஸ்வதி, துர்க்கை, விநாயகர், முருகர் உள்ளிட்ட சுதை வடிவங்கள் அலங்கரிக்கின்றன. உள்ளே நுழைந்ததும் கொடிமரம், பலிபீடம், சிங்க வாகனமும் ஒருங்கே அமைந்துள்ளன. எதிரே மகாமண்டபம், கருவறை முகப்பில் விநாயகர், முருகன் அமர்ந்த நிலை, நடுநாயகமாய் அன்னை மகாமாரியம்மன் அமர்ந்த கோலத்திலும், வலது கரத்தில் சூலம் தாங்கியும், இடது கரத்தில் குங்குமக் கிண்ணத்தைத் தாங்கியும் அருளாசி வழங்குகிறாள்.

    அன்னையை வணங்கும் போது, தமிழர்களின் காவல் தெய்வமாகவும், மலேசிய அரசிடம் பங்களிப்பையும் பெற்றுத் தந்தது உள்ளிட்ட திருவிளையாடல்கள், நம் கண்முன் தோன்றுகின்றன. ஆலயத்தில் நடராசப்பெருமானும், 63 நாயன்மார்களும் எழுந்தருளச் செய்துள்ளனர். நூலகம் ஒன்றும் ஆலயத்திற்குள் செயல்பட்டு வருகின்றது.

    இவ்வாலயம் பன்முக சமய சமூகக் கல்விப் பணிகள் ஆற்றி வருவது குறிப்பிடத்தக்கது. சமயத்தைத் தாண்டி, கல்விப் பணிகள் உள்ளிட்ட எண்ணற்ற பணிகளை, ஆலய நிர்வாகம் செய்து வருகின்றது. இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், தொடர்ந்து ஆலய தரிசனம் செய்யலாம்.

    அமைவிடம் :

    மலேசிய நாட்டின் தலைநகரான கோலாலம்பூரின் மையப்பகுதியான, ஜலான் துன் எச்.எஸ். லீயில் இவ்வாலயம் அமைந்துள்ளது.
    ×