என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    விரதகாலத்தில் உண்ணாமல் இருப்பதும், அவசியமானால் மிக எளிமையான உணவை எடுத்துக் கொள்வதும் அவரவர் உடல், மன நிலைக்கு ஏற்றபடியானது.
    அமாவாசை, சதுர்த்தி, பவுர்ணமி, முன்னோர் திதி என எந்த ஒரு முக்கிய நிகழ்ச்சி வந்தாலும் நாம் அனைவரும் விரதம் இருப்பது இயற்கை. விரதம் என்று சொன்னால் பலருக்கும் சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்பது மட்டுமே தெரியும். விரதம் அல்லது நோன்பு என்பதற்கு உண்ணாமல் இருப்பது என்பது மட்டும் அர்த்தம் அல்ல.

    உரிய முறையில் வழிபாடுகள் செய்வது என்பதுதான் சரியான பொருள். அப்படி பூஜைகள் செய்யும்போது புலனடக்கம் தேவை என்பதால்தான் உணவில் கட்டுப்பாடுகள் கூறப்பட்டன. எல்லா விரதங்களிலுமே பொதுவான பல விஷயங்கள்தான் தொடக்கம் முதல் முடிக்கும் வரை கடைப்பிடிக்கப்படுகின்றன. அந்தப் பொதுவான விதிகளோடு எந்தக் கடவுளுக்கான விரதமோ அந்த தெய்வத்திற்கான வழிமுறையும் துதிகளும் சேர்த்துக் கொள்ளப்படும்.

    விரதங்களைக் கடைபிடிக்கும் முறைப் பற்றித் தெரிந்து கொண்டு எந்த விரதமானாலும் சுலபமாக அனுசரித்து எண்ணற்ற நற்பலன்களைப் பெறுங்கள். எந்த ஒரு விரதமானாலும், முதல் நாளே வீட்டைக் கழுவி தூய்மைப்படுத்துங்கள். பூஜைகளின்போது கோலம் இரு இழைகளால் அமையவேண்டும் என்பது பொதுவான விதி!

    விரத தினத்தன்று சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து நீராடி தூய ஆடையினை அணிந்து அவரவர் வழக்கப்படி குங்குமம், திருநீறு, சந்தனம் அணியுங்கள். வழிபடப் போகிற தெய்வ உருவங்கள், படங்களை நன்றாகத் துடைத்து சந்தனம், குங்குமம் பொட்டுகள் இட்டு, மலர்களால் அலங்கரியுங்கள்.

    (சில தெய்வங்களை குறிப்பிட்ட மலர் அல்லது இலையால் அர்ச்சிப்பது கூடுதல் பலன்தரும். உதாரணமாக, துர்க்கைக்கு செவ்வரளிப்பூ). அனைத்து பூஜைகளுக்குமே தூய்மையான நீரும், பூவும் அவசியம். முதல் நாளே தனியாக நீரெடுத்து வைத்துக் கொள்ளுங்கள். எல்லா நோன்புகளுக்குமே ஆரம்பமாக பிள்ளையாரை பூஜிக்க வேண்டும்.



    மஞ்சளில் பிடித்து வைத்து வழிபடுவது நல்லது. விரதம் நிறைவடைந்த பின் அல்லது மறுநாள் அந்த மஞ்சள் பிள்ளையாரை நீரில் கரைத்துவிட வேண்டும். விரதத்திற்காக வைக்கப்படும் கலசத்தினை ஆரம்பத்திலேயே சரியான இடத்தில் வைத்துவிடவேண்டும். ஒருமுறை வைத்துவிட்டால், விரத வழிபாடுகள் நிறைவடைந்த பிறகே கலசத்தினை நகர்த்தலாம்.

    அதற்கு முன் நகர்த்தக் கூடாது. ஆணோ பெண்ணோ விரதம் கடைப்பிடிப்பவர் யாராக இருந்தாலும், குடும்பத்துப் பெரியவர்களிடமோ, பெற்றோரிடமோ ஆசிபெற்றும் வாழ்க்கைத் துணையின் அனுமதியோடும் விரதத்தினை மேற்கொள்வது நல்லது. இதனால் விரதகாலத்தில் பிறரால், எதிர்பாராத மனவருத்தங்கள் வராமல் இருக்கும்.

    விரதகாலத்தில் உண்ணாமல் இருப்பதும், அவசியமானால் மிக எளிமையான உணவை எடுத்துக் கொள்வதும் அவரவர் உடல், மன நிலைக்கு ஏற்றபடியானது. அதேசமயம் ஏகாதசி விரதம் போன்ற விரதங்களில் உணவருந்தாமல் இருப்பது அவசியம். எனவே உங்கள் உடல்நிலைக்கு ஏற்ற விரதத்தினை அனுசரிப்பதே நல்லது.

    விரதம் இருக்கும் சமயத்தில் இயன்றவரை இறை சிந்தனையுடன் இருப்பது அவசியம். விரதம் இருக்கும் தினங்களில் முடிந்தவரை பேசுவதைக் குறைத்துக் கொள்ளுங்கள். விரதகாலத்தில் எவர்மீதும் கோபப்படுவதோ, வீண்விவாதங்கள் செய்வதோ கூடாது. பூஜைக்கு உரிய தெய்வத்தின் துதிகள், பாடல்களை அன்று முழுவதுமே கேட்பது, படிப்பது, சொல்வது நல்லது.

    தெரியாதவர்கள் அந்தக் கடவுளின் பெயரையே திரும்பத்திரும்ப சொன்னாலும் போதும். விரதம் இருப்பது நிச்சயம் பலன்தரும் என்பதை முழுமையாக நம்புங்கள். அதே சமயம் பலனை எதிர்பார்த்து மட்டுமே அனுசரிக்காமல் மனப்பூர்வமாக பக்தியுடன் கடைப்பிடியுங்கள். விரதம் இருப்பதோடு உங்களால் இயன்ற உதவியினை வசதியில் குறைந்தவர்களுக்குச் செய்யுங்கள்.

    ஒவ்வொருவரும் தங்களுக்கு என்ன கோரிக்கை இருக்கிறதோ, அதற்கேற்ற கடவுளைத் தேர்ந்தெடுத்து அதற்குரிய நாளில் விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.
    விரதம் என்றால் உண்ணா நோன்பு என்று பொருள். உணவு உண்ணாமல் இறைவனை முழுமனதோடு வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை. விரதம் என்றால் சிலர் முழுமையாக உணவு உண்ணாமல் இருப்பர், சிலர் காலையில் மட்டும் உணவு உண்ணாமல் இருப்பர். சிலர் பால் மற்றும் பழம், பழச்சாறு இவற்றை உண்டு விரதத்தைப் பூர்த்தி செய்வர்.

    ஒவ்வொருவரும் தங்களுக்கு என்ன கோரிக்கை இருக்கிறதோ, அதற்கேற்ற கடவுளைத் தேர்ந்தெடுத்து அதற்குரிய நாளில் விரதத்தை மேற்கொள்ள வேண்டும். அந்த அடிப்படையில் இந்தக் காலக் கட்டத்தில் ஒரு மனிதனுக்கு சங்கடம் என்பது ஒன்று மனதால் வருகிறது அல்லது பணத்தால் வருகிறது. இந்த சங்கடங்கள் அகன்று சந்தோஷம் பெருக வேண்டுமானால், மூல முதற்கடவுளாம் கணபதிக்கு சங்கடஹர சதுர்த்தி விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

    சதுர்த்தி என்றாலே நம் நினைவிற்கு வருபவர் கணபதி. ஆவணி மாதத்தில் கொண்டாடப்படும் சதுர்த்தி ‘பெரிய சதுர்த்தி’ ஆகும். ஒவ்வொருவரும் தங்களது ஆவல்கள் பூர்த்தியாக இந்த சதுர்த்தி விரதத்தை மேற்கொள்ளலாம். பொதுவாக உண்ணா நோன்பு இருக்கின்ற பொழுது நமது உடலும் வலிமை பெறுகின்றது. உள்ளமும் இறை உணர்வால் பலம் பெறுகின்றது. சதுர்த்தி திதி தேய்பிறையில் வந்தால் அது சங்கடஹர சதுர்த்தி என்று அழைக்கப்படுகின்றது.

    விரதத்தைத் தொடங்கும் முறை :

    சதுர்த்தி தினத்தன்று காலையில் எழுந்து உடலையும், உள்ளத்தையும் சுத்தமாக்கி, அன்றைய தினம் சந்திரன் உதயமாகும் வரை எந்த உணவையும் உண்ணாது, விநாயகப் பெருமான் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.



    பூஜைக்கு வேண்டிய பொருட்கள்!

    பிள்ளையார் செய்வதற்கு மஞ்சள், பிள்ளையார் படம் அல்லது விக்கிரகம் (மாலை மற்றும் பூ அணிவிப்பதற்கு) அர்ச்சனை செய்வதற்கு மஞ்சள் கலந்த அட்சதை பூக்கள், வாசனை மிக்க பூக்களால் ஆன மாலைகள், பஞ்சபாத்திரம். தீர்த்த பாத்திரத்தில் சுத்தமான நீர், மணி, தூபக்கால், தீபத்தட்டு, கற்பூரம், குத்துவிளக்கு, திரி, எண்ணெய், ஊதுபத்தி, சாம்பிராணி, விபூதி, குங்குமம். அமர்ந்து பூஜை செய்வதற்கு பலகை, இனிப்புச் சுவையுடைய நெய் வேத்யப் பொருட்கள். (மோதகம், அப்பம், கொழுக்கட்டை ஏதேனும் ஒன்று. அவல், பொரி கடலையும் வைக்கலாம்)

    இவற்றை யெல்லாம் வைத்துக் கொண்டு பூஜையறையில் ஐந்துமுக விளக்கேற்றி, உள்ளங்கையை தீர்த்தத்தால் சுத்தம் செய்து பிறகு தீர்த்தத்தைப் பருகி ‘ஓம் அச்யுதாய நம’ என்றும், ‘அனந்தாய நம’ என்றும் மூன்றுமுறை சொல்ல வேண்டும்.

    பிறகு இரண்டு உள்ளங்கைகளிலும் மஞ்சள் அரிசியான அட்சதையை வைத்துக் கொண்டு, ‘சுக்லாம்பரதம் விஷ்ணும் சசிவர்னம் சதுர்புஸம், ப்ரஸன்ன வதனம் த்யோயேத் ஸர்வ வின்னோப சாந்தயே’ என்று கூறிய படி தலையில் ஐந்துமுறை குட்டிக் கொள்ள வேண்டும். பிறகு தியானம் செய்ய வேண்டும். தங்களுக்குத் தெரிந்த விநாயகர் அகவல், விநாயகர் பாடல், மந்திரங்களைச் சொல்லி மனமுருகி விநாயகரை வழிபட வேண்டும்.

    பூஜை செய்யும் பொழுது நைவேத்தியமாகப் படைக்கும் கொழுக்கட்டையை, குழந்தைகள் மற்றும் பெரியவர் களுக்கு கொடுத்துவிட்டு இரவு விரதமிருந்தவர்கள் அந்தக் கொழுக்கட்டையும் பாலும் குடிக்கலாம். இயலாத வர்கள் உடல் நலம் கருதி இரவு உணவை பலகாரமாக உட்கொள்ளலாம். பகலில் பால் அல்லது பழச் சாறு குடித்துக் கொள்ளலாம்.



    பூஜையால் பலன் பெற்றவர்கள் :

    பார்வதி தேவி, சிவபெருமான், அரிச்சந்திரன் ஆகியோர் சதுர்த்தி விரதம் இருந்து சங்கடம் நீங்கியுள்ளனர். சீதையைத் தேடுவதற்காக அனுமார் இவ்விரதத்தை மேற்கொண்டு வெற்றி பெற்றுள்ளார். இவ்விரதத்தை மேற்கொண்ட தேவேந்திரன் மூவுலகத்தையும் ஆண்டிருக்கின்றார். பஞ்சபாண்டவர்கள் நாடிழந்து வனவாசம் சென்ற பொழுது இந்த விரதத்தை பகவான் விஷ்ணுவின் அறிவுரைப்படி மேற்கொண்டு குருச்சேத்திரப் போரில் பகைவர்களை வென்றிருக்கின்றனர். கந்தக் கடவுளாம் முருகக் கடவுளே தவத்தில் சிறந்த முனிவர்களிடம் மனிதர்களின் சிக்கல்கள் தீர, விநாயகப் பெருமானுக்குரிய இந்த சங்கடஹர சதுர்த்தியைத் தான் வலியுறுத்திக் கூறியிருக்கின்றார் என்று சான்றோர்கள் எடுத்துரைப்பார்கள்.

    போராட்டங்களைச் சந்தித்தவர்களெல்லாம் இந்த விரத்தினால் பலன் பெற்றிருப்பதால் முறையாக நாமும் சங்டஹர சதுர்த்தி விரதத்தை முறைப்படி மேற்கொண்டு மனக்கஷ்டமும், பணக்கஷ்டமும் இல்லாமல் வாழலாம் அல்லவா? சங்கடஹர சதுர்த்தி விரதத்தைக் கடைப்பிடிப்போம். சந்தோஷத்தோடு வாழ்வில் வளம் சேர்ப்போம்.
    சித்ரா பவுர்ணமியான இன்று காலையில் குளித்து முடிந்து பூஜையறையில் விநாயகர் படத்தை நடுவில் வைத்து, சிவனை எண்ணி பூஜித்து விரதத்தை ஆரம்பிக்க வேண்டும்.
    மாதந்தோறும் பவுர்ணமி வந்தாலும், சித்திரையில் பவுர்ணமிக்கு என்று ஒரு தனி சிறப்பு உள்ளது. சித்ரா பவுர்ணமி அன்று காலையில் குளித்து முடிந்து பூஜையறையில் விநாயகர் படத்தை நடுவில் வைத்து, சிவனை எண்ணி பூஜிக்க வேண்டும். சர்க்கரைப் பொங்கல் செய்து படைத்து அதனை எல்லோருக்கும் அளிக்கலாம்.

    சித்திரை மாதத்தில் தாராளமாகக் கிடைக்கும் மா, பலா, வாழை போன்ற பழங்களை இறைவனுக்கு படைத்து பூஜிப்பார்கள். இந்த நாளில் உறவினர், நண்பர்களுடன் நதிக்கரையில் உரையாடியபடி உண்பது தான் பழங்காலம் தொட்டு இருக்கும் வழக்கமாகும்.

    புழுக்கத்தையும், வெயிலின் உஷ்ணத்தையும் சமாளிக்க இப்படி நீர்நிலைக்கு அருகில் மக்களை வரவைப்பதே இந்த சித்ரா பவுர்ணமியின் விஞ்ஞானப் பூர்வ உண்மை. இத்தினம் அம்பாளை பூஜிக்க மிகவும் சிறப்புப் பொருந்திய நாளாக அமைகின்றது. அத்துடன் தாயாரை இழந்தவர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்யும் நாளாகவும், பிரம்மஹத்தி தோஷம் பிடித்தவர்கள் தோஷம் நீங்கும் விரதமாகவும் அமைகின்றது.



    இத்தினத்தில் அம்மன் ஆலயங்களில் பால்குடங்கள் எடுப்பது, திருவிளக்கு பூஜை, விசேஷ அபிஷேக ஆராதனைகளும், வழிபாடும் சித்திரைக் கஞ்சி வார்ப்பும் இடம் பெறுகின்றது. சிவாலயங்களிலும், பெருமாள் (விஷ்ணு) கோவில்களிலும் சிறப்பு அபிஷேகங்கள், இறைவழிபாடு, வீதி ஊர்வலங்கள் என்றும் சிறப்பாக நடைபெறுகின்றன.

    அம்மனுக்கு சிறப்பு பொருந்திய இச்சித்ரா பவுர்ணமி விரதநாளிலேயே எமனின் சபையில் நம்பாவ புண்ணியக்கணக்கை இம்மியும் பிசகாமல் எழுதும் சித்திரகுப்தன் அவதரித்த நாளாகவும் இது கருதப்படுவதால் சித்திர புத்திரனார் விரதமும் அமைகின்றது.

    ஒவ்வொருவரும் செய்யும் புண்ணிய, பாவங்களைக் கணிப்பவர், சித்திர புத்திரனார் என்பது நம்பிக்கை, நாம் செய்யும் புண்ணிய, பாவங்களை நமது இறப்பின் பின் கணித்து அதற்கேற்ப மோட்சமோ, நரகமோ, மறு பிறவியில் பெறும் உருவமோ வழங்கப்படும் என்பது இந்துக்களின் ஐதீகம். சில கோவில்களில் சித்திரகுப்த பூஜையும் செய்யப்படுகிறது

    வைகாசி மாதம் விசாக நட்சத்திரம் வரும்நாளில், நாம் முருகப்பெருமானை முறையாக விரதமிருந்து வழிபட்டால் வெற்றி நிச்சயம் வந்து சேரும்.
    சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் வெளியான நெருப்பில் இருந்து அவதரித்தவர் முருகப்பெருமான். இவரை சிவக்குமரன் என்றும், விநாயகரின் இளைய சகோதரன் என்றும், இந்திரனின் மாப்பிள்ளை என்றும், அகத்திய முனிவருக்கு தமிழ் இலக்கணம் போதித்தவர் என்றும், அவ்வை பிராட்டிக்கு நாவல் கனி மூலம் தத்துவ ஞானத்தைப் போதித்தவர் என்றும் போற்றுகிறார்கள். தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு வைகாசி மாதத்தில் விசாக விழாவாக கொண்டாடி மகிழ்கிறோம்.

    வைகாசி மாதம் விசாக நட்சத்திரம் வரும்நாளில், நாம் முருகப்பெருமானை முறையாக வழிபட்டால் வெற்றி நிச்சயம் வந்து சேரும். திருப்பரங்குன்றத்தை முதல் படைவீடாகவும், திருச்செந்தூரை 2-ம் படைவீடாகவும், பழநியை 3-ம் படைவீடாகவும், திருவேரகம் எனப்படும் சுவாமிமலையை 4-ம் படைவீடாகவும், திருத்தணியை 5-ம் படைவீடாகவும், பழமுதிர்சோலையை 6-ம் படைவீடாகவும் கொண்ட ஆறுபடை வீட்டு அழகனை வைகாசி விசாகம் அன்று வழிபடுவது சிறப்பானதாகும். அன்றைய தினம் முருகனுக்கு வாழைப்பழம், கந்தரப்பம் வைத்து வழிபட்டு வந்தால் அன்றாட வாழ்க்கை நன்றாக அமையும். வந்த துயரங்களும் வாசலோடு நிற்கும்.

    வாரியார் சுவாமிகள் ‘முருகு, முருகு என்று நீ உருகு உருகு’ என்பார். அந்த முருகப்பெருமானிடம் மும்மூர்த்திகளும் அடக்கம் என்று சொல்வார். காக்கும் கடவுளாகிய முகுந்தன், அழிக்கும் கடவுளாகிய ருத்திரன், படைக்கும் கடவுளாகிய காமலோற்பவன் ஆகிய மூவரின் முதல் எழுத்துகளை ஒன்று சேர்த்தால் ‘முருகா’ என்ற பொருள் கிடைக்கும். எனவே முருகனை வழிபட்டால் மும்மூர்த்தியை வழிபட்ட பலன் வந்து சேரும்.



    ஒவ்வொரு மாதத்திலும் ஒரு சிறப்பான நட்சத்திரம் அல்லது திதியைத் தேர்ந்தெடுத்து நாம் கொண்டாடுகிறோம். நட்சத்திர அடிப்படையில் வைகாசி விசாகம், ஆடிப்பூரம், கார்த்திகையில் திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம், மாசிமகம் போன்றவை சிறப்பாக கொண்டாடப் படுகின்றன.

    நட்சத்திர அடிப்படையில் நாம் தெய்வங்களைக் கொண்டாடும் பொழுது, அச்சமில்லாத வாழ்க்கை நமக்கு அமையும் என்பதை முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். அந்த விதத்தில் விசாக நட்சத்திரம் என்பது முருகனுக்கு உகந்த நட்சத்திரமாகும். அதிலும் வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரமன்று முருகப்பெருமானை விரதமிருந்து வழிபட்டால் வையகத்தில் நல்ல வளமான வாழ்க்கை அமையும். வருங்காலம் நலமாக உருவாகும். முருகப்பெருமான் சன்னிதியில் கவசம் படித்தால் காரிய வெற்றி கிட்டும். பதிகம் படித்தால் படிப்படியாய் துயர் தீரும்.

    இந்த ஆண்டு வைகாசி விசாகம் 7-6-2017 (புதன்கிழமை) வருகிறது. அன்றைய தினம் அதிகாலையில் விநாயகப் பெருமானை வழிபட்டு அதன் பின்னர் முருகப்பெருமான் படத்தின் முன்னால் பஞ்சமுக விளக்கேற்றி, ஐந்து வகைப் பரிமளப் பொருட்களை இணைத்து, ஐந்து வகை நைவேத்தியம் வைத்தும் அத்துடன் மாம்பழத்தை நைவேத்தியமாக வைத்து ‘திருப்புகழ்’ பாட வேண்டும். திருப்புகழ் பாடினால் எதிர்ப்புகள் அகலும். இனிய வாழ்வு மலரும்.



    வைகாசி விசாகத்தன்று ஆலயங் களுக்கு சென்று வழிபாடு செய்வதும் நல்லது. அன்றைய தினம் முருகப்பெருமான் வீற்றிருக்கும் ஆலயத்திற்குச் சென்று பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். இளநீரால் அபிஷேகம் செய்தால் நன்மக்கட்பேறு உண்டாகும். கரும்புச் சாறு அபிஷேகம் செய்தால் ஆரோக்கியம் சீராகும்.

    இந்த இனிய நாளில் முருகப்பெருமானை வழிபடுவதன் மூலம் பகை விலகும். பாசம் பெருகும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் ஏராளம் நடைபெறும். வருமானம் பெருகும். வருங்கால நலன் கருதி தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். அன்றைய தினம் மோர், பானகம், தயிர்சாதம், இளநீர் போன்றவற்றைத் தானம் செய்தால் குலம் தழைக்கும் என்று முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

    வைகாசி விசாகத்தன்று வடிவேலன் சன்னிதிக்குச் சென்று, மனமுருகி முருகனின் பாடல்களைப் பாடி வழிபாடு செய்யுங்கள். சிந்தனைகள் வெற்றி பெறும்.

    ‘வரவேண்டும், வரவேண்டும் செந்தில் வடிவேலா!

    - வரம்

    தரவேண்டும் தரவேண்டும் செந்தில் வடிவேலா!’ என்று மனமுருகிப் பாடுங்கள்.

    இனிய துணையாக முருகன் என்றும் உங்களுடன் வருவான். இதயம் மகிழக் கேட்ட வரங்களை அள்ளித் தருவான்.
    நரசிம்ம ஜெயந்தி அன்று விரதமிருந்து நரசிம்மருக்கு சந்தனாபிஷேகம் செய்தால் வாழ்வில் உண்டாகும் துன்பங்களை போக்கி பக்தர்களை காத்து அருளாசி புரிவார்.
    9-5-2017 நரசிம்மர் ஜெயந்தி

    திருநெல்வேலி மாவட்டம், தென்காசியிலிருந்து பாவூர்சத்திரம் வழியாக சுரண்டை செல்லும் வழியில் அமைந்துள்ளது கீழப்பாவூர். இங்கு புராணச் சிறப்புமிக்க மிகத்தொன்மையான உக்ர நரசிம்மர் ஆலயம் உள்ளது. இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கூறப்படுகிறது.

    மகாவிஷ்ணு, தன் பக்தன் பிரகலாதனுக்கான தற்போதைய ஆந்திர மாநிலம் அகோபிலத்தில் நரசிம்ம அவதாரம் எடுத்தார். அந்த அவதார காட்சியை, காசியப மகரிஷி, வருண பகவான், சுகோஷ முனிவர் ஆகியோர் தரிசிக்க விரும்பினர். இதற்காக மகாவிஷ்ணுவை நினைத்து அவர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தவம் இருந்தனர். அதன்பலனாக மகாவிஷ்ணு அசரீரியாக, ‘பொதிகைமலைச் சாரலில் சித்ரா நதிக்கரையில் தவம் புரியுங்கள். அங்கு உங்களுக்கு நரசிம்மர் தரிசனம் கிட்டும்’ என்றார்.

    மகாவிஷ்ணு குறிப்பிட்ட சித்ரா நதிக்கரையை அடைந்த அவர்கள் அங்கு தவம் செய்தனர். அவர்களின் தவம் மாலவன் மனதை மகிழ்ச்சிப்படுத்தியது. இதையடுத்து அவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக 16 திருக்கரங்களுடன் மகாஉக்ர நரசிம்ம மூர்த்தியாக காட்சி கொடுத்தார். பின்னர் முனிவர்களின் வேண்டுதல் படி அங்கேயே தங்கி அருள்புரிந்தார் என்கிறது தல புராணம்.

    இந்தியாவில் ராஜஸ்தான், புதுச்சேரி அருகே சிங்ககிரியில் உள்ள ஆலயம் தவிர, கீழப்பாவூரில் மட்டுமே நரசிம்மர் 16 திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறார். நரசிம்மரை சாந்தப்படுத்துவதற்காக அவரது சன்னிதி முன்பாக மேற்கு பகுதியில் பெரிய தெப்பக்குளம் ஏற்படுத்தியுள்ளனர். ‘கங்கா நர்மதா சம்யுக்த ஸ்ரீ நரசிம்ஹ புஷ்கரணி’ என்று அழைக்கப்படும் இந்த தெப்பக்குளத்தை மையமாக வைத்தே இவ்வாலயத்தின் உற்சவங்கள் அனைத்தும் நடக்கின்றன.

    இங்கு ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திரத்தன்று மாலையில் ஐந்துவித ஹோமங்களுடன், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடக்கிறது. இந்த நாளில் விரதமிருந்து நரசிம்மரை வழிபாடு செய்தால் கடன் தொல்லை நீங்கி, செல்வச் செழிப்பு ஏற்படும். வியாபாரம் பெருகும் என்கிறார்கள்.



    இங்குள்ள பெருமாள் ‘முனைகடி மோகர் விண்ணகர்’, ‘விண்ணகர் ஆழ்வார்’, ‘முனைஎதிர் மோக விண்ணகர்’, ‘மோகராழ்வார்’ போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறார். ‘முனை மோகர் விண்ணர்’ என்பதற்கு ‘போரில் எதிரிகளை வெல்வதில் விருப்பம் உடையவர்’ எனப் பொருள். ‘முனை எதிர் மோகர்’ என்பது இவ்வூரில் தங்கியிருந்த படையின் பெயராகும். இங்கிருந்த படைகளின் துணைகொண்டு சோழ, பாண்டிய சிற்றரசுகளை வென்று விக்கிரம பாண்டிய மன்னன் பேரரசனாக முடி சூட்டினான் என்று கூறுகிறார்கள்.

    இத்தகைய சிறப்புமிக்க ஷேத்திரத்தில் கோவில் கொண்டுள்ள நரசிம்மரை விரதமிருந்த வழிபாடு செய்தால் எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து, நியாயமாக கிடைக்க வேண்டிய அரச பதவி முடி சூட வழி பிறக்கும். மேலும் நரசிம்மருக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் விரைவான பலன் கிட்டும் என்பது ஐதீகம். நரசிம்மருக்கு மிக விருப்பமான வெல்லத்தினால் ஆன பானகம் படைத்தும் வழிபடலாம்.

    நரசிம்மரை விரதமிருந்து வழிபட செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்களும் மாலை வேளையும் உகந்தது. திருவோணம், பிரதோஷம், வளர்பிறை சதுர்த்தசி ஆகிய நாட்களில் சிறப்புப் பூஜை நடக்கிறது. திருக்கார்த்திகை, வைகுண்ட ஏகாதசி, தை மாதப் பிறப்பு ஆகியன இவ்வாலயத்தின் முக்கிய திருவிழாவாகும். வருகிற 9-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) இங்கு நரசிம்மர் ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.

    இந்த ஆலயத்தில் உள்ள கன்னி மூல கணபதியை வணங்கி, பின்னர் நரசிம்மர் சன்னிதியை 16 முறை அமைதியாக வலம் வந்து நரசிம்மரை வழிபட வேண்டும். தொடர்ந்து வாலி பூஜைசெய்து வழிபட்ட, சிவகாமி அம்மாள் சமேத திருவாலீஸ்வரரை வணங்கி ஷேத்திர வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும். அப்போது தான் வழிபாட்டின் முழுப்பலனும் கிட்டும்.

    தன் பெயரை சொல்ல மறுத்து ‘ஓம் நமோ நாராயணாய நம’ என பகவானின் நாமத்தை கூறிய பிரகலாதனை இரணியன் கல்லைக்கட்டி கடலில் போட்டான். அவன் வெளியில் வர முடியாதபடி பெரிய மலையையும் அவன்மேல் போட்டு அழுத்தினான். பக்தனை காப்பாற்ற பெருமாள் அம்மலையை பிளந்தார். அவரது கோபத்தை தணிக்க நரசிம்மருக்கு சந்தனாபிஷேகம் செய்வார்கள். நரசிம்ம ஜெயந்தி அன்று விரதமிருந்து நரசிம்மருக்கு சந்தனாபிஷேகம் செய்தால் வாழ்வில் உண்டாகும் துன்பங்களை போக்கி பக்தர்களை காத்து அருளாசி புரிவார்.

    திருநெல்வேலி - தென்காசி நெடுஞ்சாலையில் திருநெல்வேலியில் இருந்து மேற்காக 44 கி.மீ. தூரத்திலும், தென்காசியிலிருந்து கிழக்காக 10 கி.மீ. தூரத்திலும் உள்ளது பாவூர்சத்திரம். இங்கிருந்து 2 கி.மீ. தூரம் சென்றால் கீழப்பாவூரை அடையலாம்.
    செலுத்துபவர்களுக்கு வேண்டியதை நிறைவேற்றிக்கொடுப்பார் நரசிம்ம மூர்த்தி. இவரை விரதமிருந்து வழிபட்டால் எதிரிகள் தொல்லை விலகும். அரச வாழ்வு வந்து சேரும்.
    நரசிம்மர் என்பதற்கு ‘ஒளிப்பிழம்பு’ என்று பொருள். திருமால் எடுத்த அவதாரங்களில் உக்கிரமான அவதாரமாக இருப்பினும், பக்தர்கள் அனைவருக்கும் விருப்பமான அவதாரம் இது. நரசிம்ம பெருமாளிடம், பிரகலாதனைப் போல பக்தி கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு பக்தி செலுத்துபவர்களுக்கு வேண்டியதை நிறைவேற்றிக்கொடுப்பார் நரசிம்ம மூர்த்தி. இவரை வழிபட்டால் எதிரிகள் தொல்லை விலகும். அரச வாழ்வு வந்து சேரும்.

    வைகாசி மாதம் வளர்பிறை சதுர்த்தியன்று சூரியன் மறையும் நொடியில் (பகலுமின்றி, இரவுமின்றி) மாலைஅந்திப்பொழுதில் நரசிம்மர் அவதரித்தார். இதுவே நரசிம்ம ஜெயந்தியாகும். நரசிம்மர் அவதரித்த நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தன்று அவரை வழிபடுவது நல்ல பலனை தரும்.

    நரசிம்ம ஜெயந்தியன்று பக்தர்கள் அதிகாலை குளித்து வீட்டை சுத்தம் செய்து பூஜையறையில் சுவாமி படத்திற்கு முன்பு விளக்கேற்றி வழிபட வேண்டும். அன்று பகல் முழுவதும் உணவின்றி நீராகாரமாக பருகி, நரசிம்மர் ஸ்தோத்திரம் கூறி வழிபடலாம். அன்று மாலை 4.30 மணி முதல் 7.30 மணிக்குள் வழிபட வேண்டும். விஷ்ணு வழிபாட்டில் பயன்படுத்தும் மலர்கள், வஸ்திரம், நைவேத்தியம் ஆகியவற்றை உபயோகிக்க வேண்டும். செவ்வரளி மலரால் அர்ச்சனை செய்து, சர்க்கரை பொங்கல், பானகம் போன்ற இனிப்புகளை படைக்கலாம்.



    அறிந்தோ, அறியாமலோ செய்த பாவங்களால் கிடைத்து வரும் தண்டனையில் இருந்து விடுபட லட்சுமி நரசிம்மரை வழிபட வேண்டும். நரசிம்மரை முழுமையாக சரணடைந்து ‘ஓம் நமோ நாராயணாய’ எனகூறி வழிபட்டால் தாயுள்ளம் படைத்த அவர் தண்டனையில் இருந்து விடுதலை கிடைக்க செய்வார். அவரது படத்தை பூஜை அறையில் கிழக்குநோக்கி வைக்க வேண்டும். தினமும் குளித்துவிட்டு நரசிம்மபிரபத்தி ஸ்லோகத்தை 3, 12, 28 என பாராயணம் செய்ய வேண்டும்.

    ‘நரசிம்மரே தாய்; நரசிம்மரே தந்தை, சகோதரனும் நரசிம்மரே, தோழனும் நரசிம்மரே, அறிவும் நரசிம்மரே, செல்வமும் நரசிம்மரே, எஜமானனும் நரசிம்மரே. இவ்வுலகத்தில் நரசிம்மரே, அவ்வுலகத்திலும் நரசிம்மரே, எங்கெங்கு செல்கிறாயோ, அங்கெல்லாம் நரசிம்மரே’. நரசிம்மரை காட்டிலும் உயர்ந்தவர் எவரும் இல்லை. அதனால் நரசிம்மரே உம்மை சரணடைகிறேன்.

    இந்த சுலோகத்தை சொல்லி லட்சுமி நரசிம்மரின் முன்விளக்கேற்ற வேண்டும். காய்ச்சி ஆறவைத்த பசும்பால் அல்லது பானகத்தை நைவேத்தியம் செய்ய வேண்டும். இந்த பிரசாதத்தை குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டு வர வேண்டும். கைமேல் பலனளிக்கும் சக்தி வாய்ந்த சுலோகம் இது. இதை முறையாக கடைப்பிடித்தால் 48 நாட்களுக்குள் எண்ணிய செயல் கைகூடும். பின்னர் நரசிம்மர் கோவிலுக்கு சென்று, சுவாமிக்கு நெய் தீபம் ஏற்றி துளசி மாலை சாத்தி வழிபட வேண்டும். இதனால் கடன் சுமை குறையும். நோய் குணமாகும். திருமணத்தடை அகலும். குழந்தை பாக்கியம், வேலைவாய்ப்பு கிடைக்கும். வேலையில் இடைஞ்சல் அகலும்.
    சித்ரகுப்தரை விரதமிருந்து சித்ரா பவுர்ணமி அன்று வணங்குவதால் கேது தோஷம், கல்வி தோஷம், புத்திர தோஷம் உள்ளிட்ட சர்வ தோஷங்களும் நீங்கும்.
    காஞ்சீபுரத்தில் சித்ரகுப்தருக்கு தனிக்கோவில் உள்ளது. இது பரிகார தலமாகவும் விளங்குகிறது. வலதுகையில் எழுத்தாணியும், இடதுகையில் ஓலைச்சுவடியும் தாங்கிய எழிலார்ந்த உருவத்தோடு அருள் புரிகிறார். இங்கு கலியுகத்துக்கு முன்னதாகவே சித்ரகுப்தர் எழுந்தருளி உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. சித்ரகுப்தரை வணங்குவதால் கேது தோஷம், கல்வி தோஷம், புத்திர தோஷம் உள்ளிட்ட சர்வ தோஷங்களும் நீங்கும்.

    ஒவ்வொரு சித்ரா பவுர்ணமி அன்றும் நமது பாவ, புண்ணியங்கள் அனைத்தும் சித்ரகுப்தரால் எழுதப்படுகிறது என்கிறார்கள். எனவே சித்ரா பவுர்ணமி அன்று சித்ரகுப்தரை நினைத்து விரதம் இருந்து வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

    சித்ரா பவுர்ணமி அன்று காலை விரதத்தை தொடங்கி ‘சித்ரகுப்தாய நம’ என்று சொல்லிக் கொண்டு இருக்க வேண்டும். மாலையில் பவுர்ணமி நிலவு உதயமானதும் வீட்டில் விளக்கேற்றி சித்ரகுப்தருக்கு பூஜை செய்யவேண்டும். வெண்பொங்கல், இனிப்பு கொழுக்கட்டை, மாங்காய், தட்டைப்பயறு குழம்பு இவைகளுடன் நீர் மோர், பழங்கள், இளநீர், பலகாரங்கள் படைக்கவேண்டும். பிறகு ஏழைகளுக்கு முடிந்த அளவுக்கு தானம் செய்யவேண்டும்.



    பேனா, பென்சில், நோட்டு ஆகியவற்றை படிக்கும் ஏழை மாணவர்களுக்கு கொடுக்கவேண்டும். பயத்தம்பருப்பும், எருமைப்பாலும் கலந்த பாயாசத்தை நைவேத்தியம் செய்ய வேண்டும். பின்னர் உப்பு சேர்க்காமல் ஆகாரம் உண்டு விரதமிருந்தால் சித்ரகுப்தர் மனம் மகிழ்ந்து நம் பாவ கணக்குகளை குறைப்பார். இந்த விரதம் இருப்பவர்களுக்கு எமபயம் இருக்காது. சித்ரகுப்தரிடத்தில் மலையளவு பாவத்தை கடுகளவாகவும், கடுகளவு புண்ணியத்தை மலையளவாகவும் எழுதிக்கொள்ளும்படி பிரார்த்திக்க வேண்டும். நவக்கிரகங்களில் கேதுபகவானின் அதிஷ்டானதேவதை ஸ்ரீ சித்ரகுப்தரே ஆவார். கேதுபகவானால் ஏற்படக்கூடிய கெடுபலன்கள் நீங்கிட சித்ர குப்தரை வழிபடவேண்டும்.

    கேது பகவானுக்கு பரிகாரம் செய்ய விரும்புபவர்கள் சித்ரகுப்தரை வழிபடுவதோடு கேது பகவானுக்கு உகந்த கொள்ளு தானியத்தில் வடை அல்லது சுண்டல் செய்து புளியோதரையுடன் நைவேத்தியமாக படைத்து கேது பகவான் தோத்திரப்பாடலை பாடி செங்கரும்பு நிற மலர்களை கொண்டு அர்ச்சனை செய்யவேண்டும்.
    அனைத்து விதமான தோஷங்களுக்கும் விரத வழிபாடுகள் உள்ளன. எந்த தோஷத்திற்கு எந்த விரதத்தை கடைபிடித்து பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.
    • பகைவரைக் கண்டு அஞ்சாத உள்ளத்தை தருபவர் செவ்வாய். செவ்வாய் தோஷம் என்பதைக் கேட்டாலே பெண்ணைப் பெற்றவர்கள் பதறுவார்கள். செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து அருகில் உள்ள கோவில்களில் தீபமேற்றுவது செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் பாதிப்புக்களைக் குறைக்கும்.

    • வாக்கு வன்மை, பேச்சினாலே பிறரை வசீகரிக்கும் திறன், பண்பு, கணிடம், ஜோதிடம், சிற்பம், பன்மொழிப் புலமை தருவது, எழுத்தாற்றல், கவிபாடும் திறன் ஆகியவற்றைத் தருபவர் புதன். புதன் நமது ஜாதகத்தில் தோஷமாக இருந்தால் கல்வித்தடை ஏற்படும். புதன் கிழமை விரதமிருந்து ஏதேனும் கோவிலில் தீபமேற்றி வழிபடுவது, படிக்க வசதியில்லாத ஏழைக் குழந்தைகளுக்கு உடைகள், புத்தகம், நோட்டுகள், பேனா, பென்சில் போன்றவற்றை வழங்குவது போன்றவற்றால் புதன் தோஷம் நீங்கும். கல்வியறிவு மேம்படும்.



    • திருமணம், குழந்தைப் பேறு இரண்டும் நம் வாழ்வின் மிக முக்கியமான திருப்பங்கள் ஆகும். அவற்றை நமக்குத் தருபவர் வியாழன். வியாழக்கிழமைகளில் விரதமிருந்து மாலை நேரத்தில் ஏதேனும் ஒரு கோவிலில் தீபமேற்றி வழிபடுவதுடன், பெரியவர்கள், துறவிகள், மகான்கள், சாதுக்கள் ஆகியோரை வணங்கி அவர்களின் ஆசியைப் பெறுவதாலும் வியாழனால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி அனைத்து விதமான நலன்களையும் பெறலாம்.

    • கலையுணர்ச்சி, அழகுணர்ச்சி, காதல், போகம் போன்றவற்றிற்கு அதிபதியாக விளங்குபவர் சுக்கிரன். வாழ்க்கை நமக்குத் தரும் சுகங்களை மன திருப்தியோடு அனுபவிக்க சுக்கிரனின் அருள் வேண்டும். திருமால் சந்நிதியில் விளக்கேற்றி வழிபடுவதுடன் வெள்ளிக்கிழமைகளில் விரதமிருந்து ஏழை சுமங்கலிப் பெண்களுக்கு உடை, ஏழைகளுக்கு அன்னதானம் போன்றவற்றைச் செய்வதால் சுக்கிரன் தோஷம் நீங்கி சுகம் பெறலாம்.

    • நீண்ட ஆயுளையும், நல்ல செல்வத்தையும் வாரி வழங்குபவர் சனீஸ்வரன். நவக்கிரகங்களில் ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒருவர் இவரே. சனிக்கிழமைகளில் விரதமிருந்து மாலையில் ஏதாவது ஒரு கோவிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபடுவதுடன் எள் கலந்த சாதம் படைத்து நைவேத்தியம் செய்வது, ஏழைகளுக்கு அன்னதானம் செய்வதுடன், தினந்தோறும் காக்கைக்கு உணவு வைப்பதும் சனீஸ்வரனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் அனைத்தையும் நீக்கும்.
    பார்வதி தேவியை ‘கவுரி’ என்றும் அழைப்பார்கள். ‘கேதார கவுரி விரதம்’ என்று ஒன்று இருக்கிறது. இந்த விரதத்தை முறைப்படி கடைபிடித்தால் பக்தர்களில் வேண்டுதல்களை அன்னை நிறைவேற்றுவாள்.
    சத்யவீர கவுரி :

    இந்த காலத்தில் கொடுத்த வாக்கை காப்பாற்றுபவர்கள் ஒரு சிலரே இருக்கிறார்கள். பலரும் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் அவதிப்படுவதையும் நாம் காண்கிறோம். அதற்கு நல்ல மனமும் அவசியமானது. அத்தகைய மனப்பாங்கை அருள்பவளே ‘சத்யவீர கவுரி’. இந்த தேவியுடன் வீர கணபதி அருள்பாலிப்பார். இந்த கவுரிக்குரிய நாள், ஆடி மாத வளர்பிறை திரயோதசி ஆகும். இந்த வழிபாட்டை ஜெயபார்வதி விரதம், ஜெய கவுரி விரதம் என்கின்றனர்.



    வரதான கவுரி :

    பக்தர்கள் கேட்கும் வரங்களைத் தானமாக அளிப்பதால் இவள் ‘வரதான கவுரி’ என்று போற்றப்படுகிறாள். இந்த அன்னை கொடை வள்ளல்களின் கரத்தில் குடியிருப்பவள். திருவையாற்றில் விளங்கும் அம்பிகை, ஸ்ரீஅறம்வளர்த்த நாயகி; வடமொழியில் தர்மசம்வர்த்தினி. காஞ்சியிலும் அறம் வளர்த்த நாயகியைத் தரிசிக்கலாம். புரட்டாசி வளர்பிறை திருதியை நாளில், வரதான கவுரியை வழிபடுவது சிறப்பு.

    சம்பத் கவுரி அன்னையை பங்குனி மாத வளர்பிறை திருதியை திதியில் விரதம் இருந்து வழிபட்டால், தான்யம், செல்வம், வம்சம் விருத்தியாகும். ஆரோக்கியம் பெருகும்.
    மனித வாழ்வுக்கு அவசியமானது உணவு, உடை, உறைவிடம். பழங்காலத்தில் ஆடு, மாடு போன்ற கால்நடைகள்தான் உயர்ந்த செல்வங்களாக போற்றப்பட்டன. அத்தகைய உயர்ந்த சம்பத்துகள் பெருக அருள்பவள் ‘சம்பத் கவுரி’. இந்த அன்னை பசுவுடன் காட்சி அளிப்பாள்.

    இந்த அன்னையே பசுவாக உருவெடுத்து வந்து, சிவபூஜை செய்த தலங்களும் உண்டு. இதனால் அவளுக்கு கோமதி, ஆவுடை நாயகி ஆகிய திருப்பெயர்கள் வழங்கப்படுகின்றன. திருச்சிக்கு அருகிலுள்ள துறையூரில் சம்பத் கவுரி உடனாய நந்தீஸ்வரர் கோவில் உள்ளது.

    காசி அன்னபூரணியையும் சம்பத் கவுரி என்பார்கள். இந்த அன்னையை பங்குனி மாத வளர்பிறை திருதியை திதியில் விரதம் இருந்து வழிபட்டால், தான்யம், செல்வம், வம்சம் விருத்தியாகும். ஆரோக்கியம் பெருகும்.
    ‘அட்சயம்’ என்பதற்கு ‘வளர்வது’ என்று பொருள். அட்சய திருதியை நாளில் விரதமிருந்து குலதெய்வ வழிபாடு செய்வது மிகவும் முக்கியமானது.
    ‘அட்சயம்’ என்பதற்கு ‘வளர்வது’ என்று பொருள். அட்சய திருதியை நாளில் எந்த பொருள் வாங்கினாலும் அது பல மடங்கு பெருகும் என்பது நம்பிக்கை. அதனால்தான் அன்றைய தினம் மக்கள் பலரும் தங்கம் வாங்கப் போட்டி போடுகின்றனர். செல்வத்தை அள்ள அள்ளக் குறையாதபடி தரும் மகத்துவம் மிக்க திருநாள் இது என்று கூறப்படுகிறது. தங்கம் மட்டுமின்றி உப்பு, அரிசி, துணிமணிகள், விலை உயர்ந்த பொருட்கள் போன்றவை வாங்கினாலும் செல்வ வளம் பெருகும் என்பது ஐதீகம்.

    திதிகளில் பவுர்ணமி அல்லது அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாவது திதி ‘திருதியை’ ஆகும். சித்திரை மாதத்தில் வளர்பிறை காலத்தில் வரும் திருதியை திதி ‘அட்சய திருதியை’ எனப்படுகிறது.

    பாண்டவர்கள் வனவாசத்தின்போது உணவுப் பொருட்களை அள்ள, அள்ள குறையாத அட்சய பாத்திரம் பெற்றதும், மணிமேகலை அட்சய பாத்திரம் பெற்றதும் இந்தநாளில் தான். மகாவிஷ்ணுவின் மார்பில் திருமகள் என்றும் நீங்காமல் இருக்கும் வரத்தை அட்சய திருதியை தினத்தன்று பெற்றாள். வேதவியாசர் சொல்லச்சொல்ல விநாயகர் மகா பாரதத்தை எழுத தொடங்கியதும், குபேரன் மகா லட்சுமியை வணங்கி வற்றாத செல்வமுள்ள சங்க நிதி, பதுமநிதியை பெற்றதும், பகிரதன் தவம் இருந்து புண்ணிய நிதியான கங்கை நதியை சொர்க்கத்தில் இருந்து பூமிக்கு வரவழைத்ததும் இந்த நாளில் தான் எனக் கூறப்படுகிறது.

    அட்சய திருதியை தினத்தன்று தான் ஐஸ்வரிய லட்சுமி, தானிய லட்சுமி அவதாரங்கள் நிகழ்ந்த தாக புராணங்கள் கூறுகின்றன.

    அன்றைய திருதியை நாளில் புதிதாக தொழில் தொடங்குவதும், பூமிபூஜை செய்வதும் நல்ல பலனைக் கொடுக்கும். அன்றைய தினம் ஏழைகளுக்கு செய்யும் தானம், பன்மடங்கு புண்ணியத்தை தரும். அன்று செய்யப்படும் பித்ரு தர்ப்பணம் பலதலைமுறைகளுக்கு முன் வாழ்ந்த நமது மூதாதையர்களுக்கு போய் சேரும். அன்று பித்ரு கடன் கொடுப்பது முக்கியமாகும். இதனால் வறுமை நீங்கி வளமான வாழ்க்கை அமையும்.



    அட்சய திருதியை அன்று செல்வத்துக்கு அதிபதியான லட்சுமியை வணங்கி துதிபாடல் பாடி பூஜிக்க வேண்டும். இதனால் செல்வம் பெருகும். அன்று செய்யும் தான, தர்மத்தால் மரண பயம் நீங்கும். குழந்தைகளின் கல்வி மேம்படும். மகாவிஷ்ணு, மகாலட்சுமி, பரமசிவன், பார்வதி, அன்னபூரணி, கலைமகள், குபேரன் ஆகியோரை வணங்கி நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் வாழ்வில் வளம்பெருகும்.

    திருமாலை நெல், அரிசியுடன் வணங்கி விரதம் இருக்க வேண்டும். முடிந்தவர்கள் கங்கை நதியில் நீராடுவது விசேஷம். விசிறி, அரிசி, உப்பு, நெய், சர்க்கரை, காய்கறிகள், புளி, பழம் ஆகியவற்றை தானமாக வழங்கலாம்.

    தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள விளாங்குளத்தில் அட்சயபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள ஈசன் அருளால் சனீஸ்வரர் ஊனம் நீங்கப்பெற்றார். இவரை அட்சய திருதியை அன்று வணங்கி சனீஸ்வரனுக்கு சந்தனகாப்பு செய்து வழிபட்டாலும், இறைவனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டாலும் செல்வச்செழிப்பு ஏற்படும்.

    அட்சய திருதியை நாளில் குலதெய்வ வழிபாடு முக்கியமானது. தயிர் சாதம் தானம் செய்தால் ஆயுள்கூடும். இனிப்பு பொருள் தானம் செய்தால் திருமணத்தடை நீங்கும். உணவு தானியம் அளித்தால் விபத்து, அகால மரணத்தை தடுக்கலாம். கால்நடைகளை தானமாக வழங்கினால் வாழ்வு வளம் பெரும். மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்தால் பாவ விமோசனம் கிடைக்கும். ஏழைகளுக்கு தயிர்சாதம் தருவது 11 தலைமுறைக்கு குறையில்லா அன்பு கிடைக்கும்.



    விரதம் இருப்பது எப்படி?

    அட்சய திருதியை தினத்தில் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு பூஜை அறையில் கோலமிட வேண்டும். லட்சுமி நாராயணன், சிவசக்தி, அன்னபூரணி, குபேரன் படங்கள் வைத்து சந்தனம், குங்குமம் இட்டு மாலையிட வேண்டும். குத்துவிளக்கு, காமாட்சி விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். பின்னர் கோலத்தின் மீது பலகை வைத்து அதில் கோலம்போட்டு, ஒரு சொம்பில் அரிசி, மஞ்சள், நாணயம், சிறிய நகைகளை போடவும். சொம்பில் நீர்நிரப்பி அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு அதன்மீது தேங்காயை மாவிலை கொத்து நடுவில் வைத்து கலசமாக தயார் செய்து பலகை மீது வைக்கவும்.

    இதற்கு முன் கோலம் போட்டு நுனிவாழை இலையில் அரிசியை பரப்பி அதன்மீது விளக்கு ஏற்றி வைக்கவும். மஞ்சள் பிள்ளையார் பிடித்து குங்குமம் இட்டு பூ போடவும். பொன், பொருள் மற்றும் புதிதாக வாங்கிய பொருட்களை கலசத்திற்கு அருகில் வைக்கவும். அர்ச்சனை முடிந்த பிறகு தூப, தீபம் காட்டி பால்பாயாசம், நைநேத்தியம் செய்யலாம். இவ்வாறு பூஜை செய்தால் அளவற்ற பலன் கிடைக்கும் என புராணங்கள் கூறுகின்றன.

    அன்று மாலை சிவாலயம் சென்று தரிசனம் செய்யலாம். அன்று ஏழைகளுக்கு செய்யும் தான, தர்மம் பலமடங்கு வளர்ந்து புண்ணியத்தை கொடுக்கும். இந்நாளில் செல்வத்துக்கு அதிபதியான லட்சுமி பூஜையை ஒவ்வொருவரும் செய்ய வேண்டும். மகாலட்சுமி படம் முன்பு நெய்தீபம் ஏற்றி லட்சுமி துதியை மனம் உருக சொல்ல வேண்டும். கோவிலுக்கு சென்று வீடு திரும்பிய பின்னர் கலசத்துக்கு தீபாராதனை செய்துவிட்டு கலசத்தை வடக்கு பக்கமாக நகர்த்தி வைத்து விரதம் இருக்க வேண்டும். இந்த நாளில் திரவ உணவு மட்டும் உட்கொள்வது சிறப்பான பலனைத் தரும்.
    கேதாரம் என்பது சிவனையும், கவுரி என்பது பார்வதியையும் குறிக்கும். ஈசனை நோக்கி அன்னை விரதம் இருந்ததால் இது ‘கேதார கவுரி விரதம்’ என அழைக்கப்பட்டது.
    பார்வதி தேவியை ‘கவுரி’ என்றும் அழைப்பார்கள். ‘கேதார கவுரி விரதம்’ என்று ஒன்று இருக்கிறது. இதில் கேதாரம் என்பது சிவனையும், கவுரி என்பது பார்வதியையும் குறிக்கும். ஈசனை நோக்கி அன்னை விரதம் இருந்ததால் இது ‘கேதார கவுரி விரதம்’ என அழைக்கப்பட்டது.

    ஞான கவுரி :

    ஒரு முறை, சிவத்தை விட சக்தியே சிறந்தது என்று பார்வதிதேவி எண்ணினாள். இதனால் சிவன் உலக உயிர்களின் அறிவை நீக்கினார். இதனால் பெரும் குழப்பம் நேர்ந்தது. இதைக் கண்ட பார்வதி தேவி, உலகில் சக்தி மட்டும் போதாது என்பதை உணர்ந்து இறைவனைப் பணிந்தாள். இதையடுத்து அன்னையை தன்னுடைய உடலில் சரி பாதியாக சேர்த்து அறிவின் அரசியாக்கினார். அன்னை ஞான கவுரியானாள். இந்த ஞான கவுரியை, பிரம்மன் கார்த்திகை மாத வளர்பிறை பஞ்சமியில் வன்னி மரத்தின் அடியில் இருத்தி வழிபட்டான். அந்நாள் ‘ஞான பஞ்சமி’, ‘கவுரி பஞ்சமி’ என்று அழைக்கப்படுகிறது. இவளுடன் ஞான விநாயகர் வீற்றிருப்பார். இந்த தேவி, மக்களுக்கு உயர்ந்த ஞானத்தையும் கல்வியையும் அருள்கிறாள்.

    சுமித்ரா கவுரி :

    உலக உயிர்களின் சிறந்த நண்பன், இறைவனே. சுந்தரரின் தோழனாக ஈசன் அருள்பாலித்ததும், இறைவன் நடத்திய திருவிளையாடல்களுமே இதற்கு சாட்சியம் கூறும். ஈசனைப் போலவே உலக உயிர்களின் தோழியாகத் திகழும் அம்பிகையை, ‘அன்பாயி சினேகவல்லி’ என்று போற்றுகின்றன புராணங்கள். திருவாடானையில் அருளும் அம்பிகைக்கு சினேகவல்லி என்று பெயர். இவளையே வடமொழியில் ‘சுமித்ரா கவுரி’ என்கிறார்கள். இந்த கவுரியை விரதமிருந்து வழிபட்டால் நல்ல விதமான நட்பும், சுற்றமும் வாய்க்கும்.



    சுயம் கவுரி :

    சிவபெருமானை, மணமகனாக மனதில் நினைத்தபடி நடந்து செல்லும் கோலத்தில் அருள்கிறாள், இந்த கவுரி தேவி. திருமணத் தடையால் வருந்துபவர்கள், சுயம் கவுரி தேவியை விரதமிருந்து வழிபடலாம். ருக்மணி, சீதை, சாவித்திரி போன்ற புராண கால பெண்களின் கவுரி பூஜை, இந்த அன்னையின் சிறப்பை வெளிப்படுத்தக்கூடியவை. நல்ல இல்லறத்தை நல்கும் இந்த அம்பிகையை ‘சாவித்திரி கவுரி’ என்றும் அழைக்கின்றனர். இந்த தேவியுடன் கல்யாண கணபதி வீற்றிருக்கிறார்.

    சத்யவீர கவுரி :

    இந்த காலத்தில் கொடுத்த வாக்கை காப்பாற்றுபவர்கள் ஒரு சிலரே இருக்கிறார்கள். பலரும் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் அவதிப்படுவதையும் நாம் காண்கிறோம். அதற்கு நல்ல மனமும் அவசியமானது. அத்தகைய மனப்பாங்கை அருள்பவளே ‘சத்யவீர கவுரி’. இந்த தேவியுடன் வீர கணபதி அருள்பாலிப்பார். இந்த கவுரிக்குரிய நாள், ஆடி மாத வளர்பிறை திரயோதசி ஆகும். இந்த வழிபாட்டை ஜெயபார்வதி விரதம், ஜெய கவுரி விரதம் என்கின்றனர்.
    ×