என் மலர்tooltip icon

    ரஷ்யா

    • உக்ரைனில் இருந்து கடல் வழியாக சுமார் 32.9 மில்லியன் மெட்ரிக் டன் உணவு தானியம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
    • ரஷியா சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டவுடன் கருங்கடல் ஒப்பந்தத்தில் பங்கேற்பதாக கூறி உள்ளது.

    கோதுமை, சோளம் உட்பட பல தானியங்களை பெருமளவில் ஏற்றுமதி செய்யும் நாடு உக்ரைன். உலகின் பல நாடுகள் உக்ரைனின் தானியங்களை பெரிதும் நம்பியிருக்கின்றன.

    ரஷிய-உக்ரைன் போரில் உக்ரைனின் துறைமுகங்கள் ரஷியாவால் கைப்பற்றப்பட்டது. இதனால் தானிய ஏற்றுமதி குறைந்து மிக பெரிய உணவு நெருக்கடி உருவாகியது.

    இதனையடுத்து, கடந்த வருடம் ஜூலை மாதம், ஐ.நா. மற்றும் துருக்கியின் முயற்சியால், ரஷியாவுடன் "கருங்கடல் தானிய ஒப்பந்தம்" (Black Sea Grain Deal) என்ற உடன்படிக்கை செய்யப்பட்டது. இதன்படி ஆயுதங்கள் ஏதும் இல்லையென பரிசோதித்து உறுதி செய்த பின் உக்ரைனின் 3 துறைமுகங்களிலிருந்து தொடர்ந்து தானிய ஏற்றுமதி நடைபெறுவதற்கு ரஷியா சம்மதித்தது. இந்த ஒப்பந்தம் காலாவதியாகி மீண்டும் 2 முறை புதுப்பிக்கப்பட்டது.

    இந்நிலையில், இன்று அந்த ஒப்பந்தம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டிய கடைசி நாள். ஆனால், இம்முறை ரஷியா இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக தெரிவித்தது.

    இதனால், போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனிலிருந்து பல்லாயிரக்கணக்கான டன் தானிய ஏற்றுமதி பாதிக்கப்படும் அபாயம் உருவாகியிருக்கிறது. அதன் மூலம் பெரும் உணவு பஞ்சம் ஏற்படலாம் என அச்சம் உருவாகியுள்ளது.

    ரஷியாவின் சொந்த விவசாய ஏற்றுமதிகளுக்கு உதவும் வகையில் பணம் செலுத்துதல், காப்பீடு மற்றும் கப்பல் போக்குவரத்து ஆகியவற்றை அனுமதிக்கும் ஒரு இணையான ஒப்பந்தத்தை, மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகள் தடுத்து வைத்திருப்பதாகவும், இதனால் ரஷியாவிற்கு பெரும் சிரமங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் ரஷியா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தது.

    "கருங்கடல் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டது. இனி இதற்கு ரஷியா ஒத்துழைக்காது. ரஷியா சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டவுடன், ரஷியாவும் கருங்கடல் ஒப்பந்தத்தில் மீண்டும் பங்கேற்கும்" என்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியுள்ளார்.

    இது வரை இந்த ஒப்பந்தம் மூலம் சென்ற ஆகஸ்ட் மாதம் தொடங்கி உக்ரைனின் துறைமுகங்களில் இருந்து கடல் வழியாக சுமார் 32.9 மில்லியன் மெட்ரிக் டன் உணவு தானியம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டவை வளரும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவையாகும்.

    தற்போது இந்த ஒப்பந்தத்தில் இருந்து ரஷியா விலகுவதாக அறிவித்திருப்பது பயனாளி நாடுகள் அனைத்தையும் பெரிதும் கவலை கொள்ள செய்திருக்கிறது.

    • அமெரிக்கா கொத்து வெடிகுண்டுகளை உக்ரைனுக்கு வழங்கியுள்ளது
    • எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் பரஸ்பர தாக்குதல் நடத்துவோம்

    உக்ரைன்- ரஷியா போர் 500 நாட்களை கடந்து இன்னும் நீடித்து வருகிறது. ரஷிய தாக்குதல் நடத்த தொடங்கியபோது, உக்ரைன் தாக்குதலுக்கு உள்ளாகி வந்தது. தற்போது எதிர்தாக்குதல் நடத்தி வருகிறது.

    உக்ரைனுக்கு அமெரிக்கா மிகப்பெரிய அளவில் ராணுவ உதவி செய்து வருகிறது. மேற்கத்திய நாடுகளும் உதவி செய்து வருகிறது. இதனால் ரஷியாவால் போரை முடிவுக்கு கொண்டு வரமுடியவில்லை.

    கடந்த வாரம் அமெரிக்கா கொத்து வெடிகுண்டுகளை (cluster bombs) உக்ரைனுக்கு வழங்குவதாக அறிவித்தது. அந்த வெடிகுண்டுகள் உக்ரைனை சென்றடைந்து விட்டது. இது ரஷியாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என பார்க்கப்படுகிறது.

    கொத்து வெடிகுண்டுகள் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமெரிக்கா அதை வழங்கியுள்ளது.

    இதுகுறித்து ரஷிய அதிபர் புதின் கூறுகையில் ''எங்களிடம் கொத்து வெடிகுண்டுகள் போதுமான கையிருப்பு உள்ளது. அவர்கள் எங்களுக்கு எதிராக அதை பயன்படுத்தினால், நிச்சயமாக பரஸ்பர தாக்குதல் நடத்த எங்களுக்கு உரிமை உள்ளது'' என்றார்.

    ரஷிய வீரர்களை வெளியேற்றுவதற்காக மட்டுமே பயன்படுத்துவோம் என உக்ரைன உறுதி அளித்துள்ளது. 

    • வாக்னர் கூலிப்படை ரஷியாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியது.
    • புதினின் அரசை கவிழ்க்க திடீர் புரட்சியில் ஈடுபட்டது.

    மாஸ்கோ :

    உக்ரைன் மீதான போரில் ரஷிய படைகளுடன் இணைந்து அந்த நாட்டின் தனியார் ராணுவ அமைப்பான வாக்னர் குழு செயல்பட்டு வந்தது. போரில் உக்ரைன் நகரங்களை கைப்பற்றுவதில் இந்த கூலிப்படை முக்கிய பங்காற்றியது.

    இந்த சூழலில் திடீர் திருப்பமாக வாக்னர் கூலிப்படை ரஷியாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியது. புதினின் அரசை கவிழ்க்க திடீர் புரட்சியில் ஈடுபட்டது.

    எனினும் கூலிப்படையுடன் புதின் அரசு சமரசம் செய்து கொண்டதால் இந்த புரட்சி ஓரிரு நாட்களிலேயே முடிவுக்கு வந்தது. புரட்சியில் ஈடுபட்ட வாக்னர் குழு உறுப்பினர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் ரஷியாவின் வாக்னர் குழு இல்லை என்று அதிபர் புதின் பேசியிருப்பது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. மாஸ்கோவில் பத்திரிகையாளர்களை சந்தித்த புதினிடம் வாக்னர் குழு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "ரஷியாவில் தனியார் ராணுவ அமைப்புகளுக்கு எந்த சட்டப்பூர்வ அங்கீகாரமும் இல்லை. எனவே வாக்னர் குழு என்ற அமைப்பு இல்லை" என கூறினார்.

    • வாக்னர் படை திடீரென கலகத்தை ஏற்படுத்தி மாஸ்கோ நகர் நோக்கி செல்ல இருப்பதாக அறிவித்தது
    • பெலாரஸ் அதிபர் மத்தியஸ்தராக செயல்பட்டு கலக முயற்சியை முடிவுக்கு கொண்டு வந்தார்

    உக்ரைன் மீது ரஷியப்படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது. 500 நாட்களை தாண்டியும் தாக்குதல் நிறுத்தப்படவில்லை. உக்ரைனை எப்படி வீழ்த்துவது என்று ரஷியா யோசித்து வரும் நிலையில், வாக்னர் கூலிப்படை திடீரென ரஷியாவுக்கு எதிராக திரும்பியது. மாஸ்கோவை நோக்கி செல்ல இருப்பதாக அதன் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் அறிவித்தார்.

    வாக்னர் படை தலைவர் பிரிகோசினால் உண்டாக்கப்பட்ட இந்த கலகம், மிகப்பெரிய அளவில் ஆயுத கிளர்ச்சியாக மாறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜூன் 22-23-ந்தேதி ஆகிய இரண்டு நாட்களுக்குள் கலகம் முடிவுக்குள் கொண்டு வரப்பட்டது.

    ரஷிய படைக்கும், வாக்னர் படைக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த மக்கள், தங்களது தேவைக்கான பணத்தை கையிருப்பாக வைத்துக்கொள்ள விரும்பினர். இதன்காரணமாக வங்கிகளில் உள்ள பணத்தை அவசர அவசரமாக எடுக்க தொடங்கினர்.

    ஒருவேளை ஆயுத புரட்சி பெரிய அளவில் ஏற்பட்டால் உணவு மற்றும் அன்றாட செலவிற்கு பணம் தேவைப்படும் என்பதால் முன்னெச்சரிக்கை காரணமாக பணத்தை எடுத்தனர். ஜூன் 23-25-ந்தேதிகளில் சுமார் 1.1 பில்லியன் (இந்திய பண மதிப்பில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய்) வங்கியில் இருந்து எடுக்கப்பட்டதாக ரஷியாவின் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

    ஜூன் மாதத்தில் மட்டும் 5 பில்லியன் அளவிற்கு மக்கள் பணத்தை எடுத்துள்ளனர். இதில் அந்த குறிப்பிட்ட நாட்களில் மட்டும் 1 பில்லியன் அளவிற்கு பணம் எடுக்கப்பட்டுள்ளது. இது ஐந்தில் ஒரு பகுதியாகும்.

    ஜூன் மாதத்தில் அதிக அளவில் பணம் எடுக்கப்பட்டாலும், ரஷியாவின் பணவியல் கொள்கையை இது பாதிக்காது என்று அந்நாட்டு மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இருந்தாலும் வாகனர் படையின் கலக முயற்சியால் ரஷியாவின் ருபெல் பணமதிப்பு 15 மாதத்தில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது. ஏற்றுமதி வருவாயிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    தொடர்ந்து பணத்தின் மதிப்பு குறைந்து வருவதால், இது பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் என பணவீக்கதையும் அதிகரிக்கும் என ரஷியாவின் மத்திய வங்கி கவர்னர் கவலை தெரிவித்துள்ளார்.

    • ரஷியாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கை அதே இலக்குகளுடன் தொடரும் என்று டெலிகிராமில் மெத்வதேவ் பதிவிட்டுள்ளார்.
    • போரில் உக்ரைனுக்கு உதவுவதாக நேட்டோ தலைவர்கள் உறுதியளித்துள்ளனர்.

    ரஷிய-உக்ரைன் போர் 504வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், நேட்டோவின் 2-நாள் உச்சி மாநாடு லிதுவேனியா நாட்டில் நடைபெற்று வருகிறது.

    நேட்டோவில் இணைவதற்கு உக்ரைன் தீவிரமாக முயற்சித்து வரும் வேளையில், நேட்டோவிடமிருந்து உக்ரைனுக்கு இது குறித்து எந்த அழைப்பும் வரவில்லை. இருப்பினும், போரில் உக்ரைனுக்கு உதவுவதாக நேட்டோ தலைவர்கள் உறுதியளித்துள்ளனர்.

    இந்த உதவி 3வது உலகளாவிய மோதலுக்கு வழிவகுக்கும் என சக்திவாய்ந்த ரஷியாவின் பாதுகாப்பு கவுன்சிலின் துணைச் செயலாளரான டிமிட்ரி மெத்வதேவ் எச்சரித்துள்ளார்.

    மாநாட்டின் முதல் நாள் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த மெத்வதேவ், "மேற்கத்திய பாதுகாப்பு கூட்டணியில் இருந்து உக்ரைனுக்கு ராணுவ உதவி வழங்குவதன் மூலம், உக்ரைனில் தன் இலக்குகளை அடைவதில் இருந்து ரஷியாவை தடுக்க முடியாது. ரஷியாவிற்கு போரை முடிவுக்கு கொண்டு வரும் எண்ணம் இல்லை. முற்றிலும் பைத்தியம் பிடித்த மேற்கத்திய நாடுகளால் வேறு எதையும் செய்ய முடியாது. மூன்றாம் உலகப்போர் நெருங்கி வருகிறது. ரஷியாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கை அதே இலக்குகளுடன் தொடரும்" என்று டெலிகிராமில் மெத்வதேவ் பதிவிட்டுள்ளார்.

    2008-2012 வரை ரஷிய அதிபராக இருந்தபோது தாராளவாத நவீனத்துவவாதியாக தன்னை காட்டி கொண்ட மெத்வதேவ், சமீப காலமாக மேற்கத்திய நாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

    உக்ரைனில் உள்ள புது நாஜி குழு (விளாடிமிர் ஜெலன்ஸ்கியின் அரசாங்கம்) நேட்டோவில் சேர்வதை தடுக்கும் ரஷியாவின் இலக்கு இப்போது, சாத்தியமற்றது. உக்ரைனிய அரசாங்கத்தை அகற்றுவது இப்போது அவசியமாகிறது. நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே அதை வலியுறுத்தினோம், என கூறியிருக்கிறார் மெத்வதேவ்.

    உக்ரைன் ஏற்கெனவே போரில் "கிளஸ்டர் வெடிகுண்டுகள்" பயன்படுத்தியதாக கூறி வரும் அவர், ரஷியாவும் அதனை பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆடம்பரமான உடற்பயிற்சி கூடம் மற்றும் ஸ்பா போன்றவை உள்ளது
    • ஷவர் உள்ள குளியலறை புதினின் பயன்பாட்டுக்கு வடிவமைக்கப்பட்டு உள்ளது

    ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த தகவல்கள் வெளி உலகம் அதிகம் அறியாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    லண்டனில் உள்ள ரஷிய துப்பறியும் நிறுவனம் டோசியர் சென்டர் (Dossier Center). நாடு கடத்தப்பட்ட ஒரு முன்னாள் ரஷிய எண்ணெய் அதிபரும், தற்போதைய ரஷிய விமர்சகருமான மைக்கேல் கோடோர்கோவ்ஸ்கி என்பவரால் இந்த நிறுவனம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிறுவனம் புதினின் ரகசிய தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சில பல ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களின் தொகுப்பினை தற்போது பகிர்ந்து கொண்டிருக்கிறது.

    ரஷிய ரெயில்வேத்துறை, புதின் பயணம் செய்யும் ரெயிலில் அவர் உபயோகிக்கும் பெட்டியின் வடிவமைப்பு வேலைகளை ஜிர்கான் சர்வீஸ் எனும் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. இவர்களிடமிருந்து டோசியர் சென்டர் இந்த தகவல்களை பெற்றுள்ளது.

    அந்த ரெயிலின் விவரங்களில், பெட்டி எண் 021-78630 முக்கியத்துவம் பெறுகிறது. இது புதினுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு அனைத்து உயர்ரக வசதிகள் அடங்கியது.

    இதில் ஆடம்பரமான உடற்பயிற்சி கூடம் மற்றும் ஸ்பா போன்றவை உள்ளது. இந்த பெட்டி தயாரிக்கும் பணிகள் 2018-ல் நிறைவடைந்திருக்கிறது.

    உடற்பயிற்சிக்கான இத்தாலிய தயாரிப்பான டெக்னோஜிம் எடைகள் மற்றும் உடற்பயிற்சி கருவிகள் இதில் முதலில் பொருத்தப்பட்டிருந்தது. பின்னர், அமெரிக்காவின் ஹாய்ஸ்ட் கருவிகளால் இவை மாற்றியமைக்கப்பட்டது.

    அந்த பெட்டியில் ஒரு முழு அழகுசாதன மையத்தில் மசாஜ் டேபிள் மற்றும் உடல் தோலின் இறுக்கத்தை அதிகரிக்க பயன்படுத்தப்படும் உயர்ரக ரேடியோ அதிர்வெண் இயந்திரம் உட்பட அனைத்து விதமான சிறப்பு அழகு சாதனங்களும் இருக்கின்றன.

    உளவு பார்க்கும் மற்றும் ஒட்டுகேட்கும் கருவிகள் பயன்படுத்துவதைத் தடுக்க உதவும் வகையில் அந்த பெட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது.

    முழுவதுமாக சிறப்பான முறையில் டைல்ஸ் ஒட்டப்பட்ட ஒரு முழு துருக்கி நாட்டின் நீராவி குளியல் மற்றும் ஷவர் உள்ள குளியலறை புதினின் பயன்பாட்டுக்கு வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    தான் கண்காணிக்கப்படுவதை தவிர்ப்பதற்காக புதின் ரெயில் பயணத்திற்கு அதிகளவில் திரும்பியுள்ளார் என ரஷியாவை விட்டு வெளியேறிய ரஷிய பெடரல் செக்யூரிட்டி சர்வீஸின் முன்னாள் கேப்டனான கிளெப் கரகுலோவ் கூறுகிறார்.

    ரஷிய- உக்ரைன் போரின் தொடக்கத்திலிருந்து மாஸ்கோவிற்கும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்குமிடையே உள்ள தொலைதூர ரஷிய பகுதியான வால்டாய் அருகே புதினின் ரெயில் கணிசமான நேரம் நிறுத்தப்பட்டிருந்தது.

    ஊழியர்கள் இந்த சிறப்பு ரெயிலுக்காக தனிமைப்படுத்தப்பட்டு வேலை செய்கின்றனர். ரெயில் புறப்படாமல் இருக்கலாம், ஆனால் பணியாட்கள் எப்போதும் தயார் நிலையில் இருக்கிறார்கள் என கரகுலோவ் கூறியுள்ளார்.

    மேம்பட்ட தகவல்தொடர்பு ஆண்டெனாவைக் குறிக்கும் ஒரு வெள்ளை டோம் புதினின் ரெயிலின் மேற்புறத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. இதனை கொண்டுதான் இந்த ரெயிலை அடையாளம் கண்டுகொள்கின்றனர். பிற ரெயில்களில் இது இருக்காது எனபது குறிப்பிடத்தக்கது.

    வாக்னர் அமைப்பின் கிளர்ச்சிக்கு பிறகு புதின் வழக்கத்திற்கு மாறாக அதிக எண்ணிக்கையிலான கூட்டங்களில் கலந்து கொள்கிறார். ஆனால், அதற்கு இந்த ரெயிலை பயன்படுத்தினாரா? என்பது ஊர்ஜிதமாகவில்லை.

    • தொழிற்சாலையில் 1,300 பேர் வேலை பார்த்து வருகின்றனர்.
    • உக்ரைனில் தாக்குதல் தொடங்கியதில் இருந்து பல தொழிற்சாலைகள் ரஷ்யாவில் முழு வேகத்தில் இயங்கி வருகிறது.

    ரஷ்யாவின் மத்திய பகுதியான சமாராவில் வெடிபொருள் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

    ரஷ்யா மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் ராம்சிந்தெஸ் தொழில்துறை வெடிமருந்துகளின் முக்கிய உற்பத்தியாளர்களில் ஒன்றாகும்.

    தொழிற்சாலைக்கு சொந்தமான நிறுவனம் 1997ல் உருவாக்கப்பட்டது. இந்த தொழிற்சாலையில் 1,300 பேர் பணியில் உள்ளனர்.

    இதேபோல் கடந்த மாதம், மாஸ்கோவின் தென்கிழக்கில் உள்ள டாம்போவ் பகுதியில் உள்ள துப்பாக்கித் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

    சப்பாயிவெஸ்க் நகரில் உள்ள புராமின்தெஸ் ஆலையில் இந்த வெடி விபத்து ஏற்பட்டது. இதில், எட்டு பேர் காயமடைந்தனர். அவர்களில் ஆறு பேர் இறந்தனர்.

    பழுதுபார்க்கும் பணியின் போது உபகரணங்கள் அகற்றப்பட்டதன் விளைவாக வெடி விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

    உக்ரைனில் தாக்குதல் தொடங்கியதில் இருந்து பல தொழிற்சாலைகள் ரஷ்யாவில் முழு வேகத்தில் இயங்கி வருகிறது என்பது குறுிப்பிடத்தக்கது.

    • செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள ஃபின்லாந்து தூதரகத்தையும் மூட ரஷியா முடிவு.
    • துர்குவில் உள்ள ரஷிய தூதரகத்தை மூடுவதற்கு பின்லாந்து தயாராகி வருகிறது.

    ரஷியாவின் அண்டை நாடான மற்றும் நேட்டோவின் புதிய உறுப்பினரான பின்லாந்தில் இருந்து ஒன்பது தூதர்களை வெளியேற்றியதாக ரஷியா தெரிவித்துள்ளது.

    கடந்த மாதம் பின்லாந்தில் உள்ள ரஷிய தூதரகத்தில் பணிபுரிந்து வந்த அதிகாரிகள் நாட்டிற்கு எதிராக உளவு வேலை பார்ப்பதாக கூறி ஒன்பது ரஷிய தூதர்களை ஃபின்லாந்து அரசு வெளியேற்றியது.

    இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக, ஏற்கனவே ஒரு தூதரகம் மூடிய நிலையில், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள ஃபின்லாந்து தூதரகத்தையும் மூட ரஷியா முடிவு செய்துள்ளதாக ரஷிய வெளியுறவு அமைச்சகம் கூறியது.

    இதுகுறித்து ரஷியா வெளியிட்டுள்ள அறிக்கையில், "நேட்டோவில் ஃபின்லாந்து இணைந்தது குறித்து விவாதிக்கப்பட்ட அளவுருக்கள் ரஷிய கூட்டமைப்பின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளன. மேலும் உக்ரைன் ஆட்சியை போருக்குச் செல்ல ஊக்குவிப்பதும், மேற்கத்திய ஆயுதங்களால் அதை செலுத்துவதும் நம் நாட்டிற்கு எதிரான தெளிவான விரோத நடவடிக்கைகளுக்கு சமம் " என்று குறிப்பிட்டிருந்தது.

    ஃபின்லாந்து ஜனாதிபதி சவுலி நினிஸ்டோ, இந்த நடவடிக்கைகள் ஃபின்லாந்தின் வெளியேற்ற முடிவுகளுக்கு கடுமையான மற்றும் சமச்சீரற்ற பதில் ஆகும் என்றும் இதற்கு பதிலடியாக துர்குவில் உள்ள ரஷிய தூதரகத்தை மூடுவதற்கு பின்லாந்து தயாராகி வருவதாகவும் அவர் கூறினார்.

    • சுமார் 40 வீடுகள், பல பள்ளிகள், இரண்டு தீயணைப்பு நிலையங்கள் சேதமடைந்துள்ளதாக நகர நிர்வாக தலைவர் தெரிவித்தார்.
    • ஜனவரி மாதம் ராணுவ தளத்தின் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் 89 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

    ரஷியப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு உக்ரைன் நகரமான மகிவ்காவில், உக்ரைன் நடத்திய தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், 2 குழந்தைகள் உட்பட 41 பேர் காயமடைந்ததாகவும் ரஷியா இன்று தெரிவித்துள்ளது.

    டொனெட்ஸ்க் பகுதி 2014 வருடம் முதல் ரஷிய ஆதரவு பிரிவினைவாதிகளால் ஓரளவு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதனை முழுமையாக கைப்பற்றுவது ரஷியாவின் முதன்மையான ராணுவ நோக்கமாகும். ஆனால், பல வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட உக்ரைனிய எதிர்தாக்குதலின் மையமாகவும் இந்த தொழில்துறை பகுதி இப்பொழுது மாறி வருகிறது.

    உக்ரைன் தாக்குதல் குறித்து ரஷியாவால் நியமிக்கப்பட்ட நகர நிர்வாகத் தலைவர் விளாடிஸ்லாவ் க்ளுயுச்சரோவ் கூறுகையில், "இந்த குண்டுவீச்சில் 2 குழந்தைகள் உட்பட 41 பேர் காயமடைந்துள்ளனர். ஒருவர் காயங்களால் உயிரிழந்துள்ளார். சுமார் 40 வீடுகள், பல பள்ளிகள் மற்றும் இரண்டு தீயணைப்பு நிலையங்கள் சேதமடைந்துள்ளது" என தெரிவித்தார்.

    உக்ரைன் ராணுவம், மகிவ்காவில் ஒரு ரஷிய 'உருவாக்கத்தை' அழித்ததாக கூறியதுடன், வானில் இரவை ஒளிரச் செய்யும் ஒரு தாக்குதல் நிகழ்வின் வீடியோவையும் வெளியிட்டிருக்கிறது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "தற்காலிகமாக ஆக்கிரமிக்கப்பட்ட மகிவ்காவில் ரஷிய பயங்கரவாதிகளின் மற்றொரு உருவாக்கம் அழிக்கப்பட்டது" என தெரிவித்தது.

    ரஷியாவால் நிறுவப்பட்ட டொனெட்ஸ்கின் தலைவர் டெனிஸ் புஷிலின் கூறும்போது, உக்ரைனியப் படைகள், மகிவ்காவில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் மருத்துவமனை வளாகத்தின் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தியதாக கூறினார்.

    உக்ரைன் படைகளின் குண்டு வீச்சு தாக்குதலில் 9 சுகாதார மையங்கள் சேதமடைந்துள்ளதாக கூறியிருக்கிறது. ஒரு மருத்துவமனையின் தரையில் சிதறிக் கிடக்கும் உடைந்த கண்ணாடித்துண்டுகளின் படங்களையும், தாக்குதலின்போது தூக்கி வீசப்பட்ட புத்தகங்களையும் ரஷிய தரப்பு வெளியிட்டது.

    ரஷியா, கடந்த ஜனவரி மாதம், மகிவ்காவில் உள்ள ஒரு தற்காலிக ராணுவ தளத்தின் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் 89 வீரர்கள் கொல்லப்பட்டதாக தெரிவித்தது. ஆனால் உக்ரைனும் அதன் கூட்டு நாடுகளும், இந்த பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என மதிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • பெண் பத்திரிகையாளர் தலைமுடியை வெட்டப்பட்டு கொடூரம்
    • கைவிரல்கள் முறிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை

    ரஷியாவின் செச்செனியா குடியரசில் பிரபல பெண் பத்திரிகையாளர் ஒருவர் மிருகத்தனமாக தாக்கப்பட்டிருக்கும் செய்தியும், அது சம்பந்தமாக வந்திருக்கும் புகைப்படமும் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

    நொவாயா கெசெட்டா (Novaya Gazeta) எனப்படும் செய்தித்தாளின் பிரபல பத்திரிகையாளரான எலெனா மிலாஷினா (Yelena Milashina), அலெக்சாண்டர் நெமோவ் என்ற வழக்கறிஞருடன் உள்ளூர் விமான நிலையத்திலிருந்து செச்சென் தலைநகர் குரோஸ்னி நகருக்கு நேற்று காலை பயணம் செய்து கொண்டிருந்தார்.

    அப்போது ஆயுதமேந்திய முகமூடி அணிந்தவர்கள் அவரையும் அவரின் வழக்கறிஞரையும் காரை நிறுத்துமாறு கட்டாயப்படுத்தி பின்னர் மிருகத்தனமாக அவர்களை தாக்கியுள்ளனர். தாக்குதலுக்குள்ளான பிறகு அருகிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருக்கும் அவர்கள், மேல் சிகிச்சைக்காக மாஸ்கோவிற்கு விமானம் மூலம் அனுப்பப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மிலாஷினா அந்த வழக்கறிஞருடன் அரசியல் காரணங்களுக்காக அநியாயமாக துன்புறுத்தப்பட்ட ஒரு பெண்ணின் வழக்கில் நீதிமன்ற விசாரணையில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தார்.

    இது ஒரு தீவிரமான தாக்குதல் என கருத்து தெரிவித்த ரஷிய அரசாங்கம், இந்த தாக்குதல் குறித்து ரஷிய அதிபர் புதினுக்கு விளக்கமளிக்கப்படும் என்று கூறியிருக்கிறது. மாஸ்கோவில் உள்ள சில ரஷிய அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் இத்தாக்குதலைக் கண்டித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியுள்ளனர்.

    ஆனால், செச்சென்யாவை ஆள்பவரான ரம்ஜான் கதிரோவ் இதுகுறித்து உடனடி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. செச்சென்யா முஸ்லிம்கள் அதிகம் வாழும் தெற்கு மாகாணம் ஆகும். சோவித் ரஷியா பிரிந்த பின், இரண்டு கடும் போருக்குப்பின் ரம்ஜான் செச்சென்யாவின் அதிகாரித்து வந்தவர்.

    மருத்துவமனையில் படுத்திருந்தபோது, செச்செனிய மனித உரிமை அதிகாரியான மன்சூர் சோல்டயேவிடம் இது திட்டமிட்ட உறுதியான கடத்தல் என்று குறிப்பிட்டார் மிலாஷினா.

    இச்சம்பவம் குறித்து செய்திகள் தெரிவிப்பதாவது:-

    இதில் ஈடுபட்டது ரஷியாவில் தடைசெய்யப்பட்ட மெமோரியல் எனும் ஒரு உரிமை குழு. மிலாஷினா மற்றும் நெமோவ் ஆகியோர் முகத்தில் கொடூரமாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து, அவர்கள் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டிதோடு மட்டுமில்லாமல், அவர்களது உபகரணங்களையும் அபகரித்து, அவற்றை அடித்து நொறுக்கியிருக்கிறது.

    இவ்வாறு அடிக்கும்போது, இங்கிருந்து வெளியேறுங்கள். இனி எதுவும் எழுத வேண்டாம் என்று மெமோரியல் கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

    இவ்வாறு செய்திகள் தெரிவிக்கின்றன.

    மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும்போது வெளியிடப்பட்டிருக்கும் அவரது புகைப்படத்தில் அவர் படுக்கையில் அமர்ந்திருப்பதும், அவர் முகம் முழுவதும் தாக்குதல்காரர்கள் வீசிய பச்சை சாயத்தையும் காண முடிகிறது. அவரது தலையை தாக்கியவர்கள், அவர் தலையை மொட்டையடித்திருக்கின்றனர். அவரது கையில் கட்டுகள் உள்ளன. அவரது விரல்கள் பல உடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

    மிலாஷினாவின் பத்திரிகையின் உரிமம் கடந்த ஆண்டு ரஷ்யாவில் பறிக்கப்பட்டது.

    செசன்யாவில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களை குறித்து பல வருடங்களாக விசாரித்து எழுதி வந்தார் மிலாஷினா. அப்பகுதியில் வாழும் ஓரினச்சேர்க்கையாளர்களின் வெகுஜன கைது மற்றும் சித்திரவதைகள் குறித்தும் அவர் செய்திகள் வெளியிட்டு வந்தார். முன்பே அவரது உயிருக்கு பல அச்சுறுத்தல்கள் வந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    • சவால்களை திறம்பட அடக்கிவிட்டதாக உலகுக்கு உணர்த்த இந்த மாநாடு புதினுக்கு முக்கியமானது.
    • வெளியுறவுக் கொள்கைகளில் இந்தியா அனைத்து நாட்டுடனும் ஒரே நேரத்தில் நட்பில் இருக்கும் சித்தாந்தத்தோடு செயல்படுகிறது.

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாடு நாளை காணொலி வாயிலாக நடைபெறுகிறது. இதில் இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோருடன் ரஷிய அதிபர் புதினும் பங்கேற்க உள்ளார்.

    2017ல் இதில் உறுப்பினராக சேர்ந்த இந்தியா, இந்த ஆண்டு, மாநாட்டு நிகழ்வை நடத்துகிறது. உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் பகுதியில் கடந்த ஆண்டு இந்த உச்சிமாநாடு நடந்தது. ஆனால், இந்த முறை, இது ஆன்லைனில் நடத்தப்படும் என்று இந்தியா அறிவித்திருக்கிறது.

    இரு வாரங்களுக்கு முன் ரஷியாவில், அதிபர் புதினுக்கு எதிராக நடைபெற்ற ஆயுதமேந்திய வாக்னர் கிளர்ச்சியை அவர் வெற்றிகரமாக ஒடுக்கிய பிறகு நடைபெறும் ஒரு சர்வதேச நிகழ்வில் அவர் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னை தனிமைப்படுத்தும் முயற்சியில் மேற்கத்திய நாடுகள் தோற்றுவிட்டதாக காட்டத் துடிக்கும் புதினுக்கு, அனைத்தும் தமது கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், தனது அரசாங்கத்திற்கான சவால்கள் அனைத்தையும் திறம்பட அடக்கி விட்டதாகவும் உலகுக்கு உணர்த்த இந்த மாநாடு முன்னெப்போதையும் விட முக்கியமானது.

    இது குறித்து, வில்சன் மையத்தின் தெற்காசிய நிறுவனம் எனப்படும் அமைப்பின் இயக்குனர் மைக்கேல் கூகல்மேன் கூறும்போது, "இந்த கூட்டம், உலகளவில் புதின் தனது வலிமையையும் நம்பகத்தன்மையையும் முன்வைக்க கிடைத்திருக்கும் சில வாய்ப்புகளில் ஒன்றாகும்" என கூறியிருக்கிறார்.

    அதே போல் இது இந்தியாவிற்கும் ஒரு குறிப்பிடத்தக்க சந்திப்பாக அமையலாம் என நிபுணர்கள் கருதுகிறார்கள்.

    ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் தொடங்கியது முதல் தற்போது வரை இந்திய-ரஷிய உறவு வலுவாக இருந்து வருகிறது. ரஷியாவின் கச்சா எண்ணெயை இந்தியா சாதனை அளவில் சேகரித்து வைத்திருக்கிறது. மேலும், தனது 60% பாதுகாப்பு தளவாடங்களுக்கு ரஷியாவையே இந்தியா நம்பியுள்ளது.

    "ரேண்ட் கார்ப்பரேஷன்" (RAND Corporation) என்னும் அமெரிக்காவில் உள்ள லாபநோக்கமற்ற, அமைப்புசாரா பல்துறை சிந்தனை நிறுவனத்தின் இந்தோ-பசிபிக் ஆய்வாளரான டெரெக் கிராஸ்மேன் கூறுகையில், "வெளியுறவுக் கொள்கைகளில் இந்தியா அனைத்து நாட்டுடனும் ஒரே நேரத்தில் நட்பில் இருக்கும் சித்தாந்தத்தோடு செயல்படுகிறது" என கூறினார்.

    சில நாட்களுக்கு முன்புதான் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது அமெரிக்க சுற்றுப்பயணத்தில் இரு நாடுகளுக்குமிடையே வலுவான புதிய உறவுக்கான திட்டங்களில் கையெழுத்திட்டார். இப்பின்னணியில் இந்தியா, ரஷிய-சீனாவுடனான தனது உறவை எவ்வாறு கொண்டு செல்லப்போகிறது என்பதை நிபுணர்கள் கூர்ந்து கவனிக்கிறார்கள்.

    • வாக்னர் படை தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் பெலாரஸில் தஞ்சம்
    • ஆயுத கிளர்ச்சி குறித்து ஏன் முன்கூட்டிய அறியவில்லை என்பது குறித்து புதின் விசாரணை

    சென்ற வாரம் ரஷியாவில் வாக்னர் எனும் தனியார் ராணுவ அமைப்பு ரஷிய அதிபருக்கெதிரான கலகத்தை தொடங்கியது. இது பெரும் புரட்சியாக வெடிக்கலாம் என உலகமே எதிர்பார்த்திருந்த நிலையில், ரஷிய அதிபர் புதின் இந்த கிளர்ச்சியை சாமர்த்தியமாக அடக்கிவிட்டார். அந்த அமைப்பின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் ரஷியாவை விட்டு பெலாரஸ் நாட்டில் தஞ்சமடைந்திருக்கிறார்.

    தற்போது புதின், வாக்னர் கலகத்திற்கான பின்னணியில் இருந்தவர்களையும், அதனை ஆரம்ப கட்டத்திலேயே தடுக்க முயற்சி செய்யாதவர்களையும் மற்றும் ஒரு தீர்மானம் இல்லாத மனநிலையில் செயல்பட்ட ராணுவ அதிகாரிகளையும் இனம் கண்டு களையெடுக்க தேவையான உயர்மட்ட நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருப்பதாக தெரிகிறது.

    இதனை உறுதி செய்யும் வகையில் ரஷியாவின் மூத்த ராணுவ ஜெனரல்கள் பொதுமக்களின் பார்வையில் இருந்து விலகிவிட்டனர்.

    ரஷியாவின் உயர்மட்ட ஜெனரல் வாலெரி செராசிமோவ் (67), பொது இடங்களிலோ அல்லது அரசு தொலைக்காட்சியிலோ காணப்படவில்லை. ஜூன் 9 முதல் அவர் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்திக்குறிப்பிலும் குறிப்பிடப்படவில்லை.

    செராசிமோவ் ரஷியா உக்ரைனுடன் நடத்தும் போரில் ரஷிய துருப்புகளுக்கான தளபதியாக செயல்படுபவர். அவரிடம் ரஷியாவின் அணு ஆயுதங்கள் தொடர்பான 3 முக்கிய பெட்டிகளில் ஒன்று எப்போதும் இருக்கும் என்றும் தெரிகிறது.

    அதேபோன்று துணைத்தளபதியும், ஜெனரல் ஆர்மகெடோன் என்ற அடைமொழி உடையவருமான ஜெனரல் செர்ஜி சுரோவிகின் மக்கள் பார்வையில் காணப்படவில்லை என்றும் செய்திகள் வெளியாகின்றன.

    ஆனால், இவற்றை உறுதி செய்யும் வகையில் ரஷிய பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ செய்திகள் எதுவும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ×