search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ஸ்பா, ஜிம், அழகு சாதன கருவிகள்...! புதினுக்காக தயாரிக்கப்பட்ட சொகுசு ரெயில் பெட்டி
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    ஸ்பா, ஜிம், அழகு சாதன கருவிகள்...! புதினுக்காக தயாரிக்கப்பட்ட சொகுசு ரெயில் பெட்டி

    • ஆடம்பரமான உடற்பயிற்சி கூடம் மற்றும் ஸ்பா போன்றவை உள்ளது
    • ஷவர் உள்ள குளியலறை புதினின் பயன்பாட்டுக்கு வடிவமைக்கப்பட்டு உள்ளது

    ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த தகவல்கள் வெளி உலகம் அதிகம் அறியாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    லண்டனில் உள்ள ரஷிய துப்பறியும் நிறுவனம் டோசியர் சென்டர் (Dossier Center). நாடு கடத்தப்பட்ட ஒரு முன்னாள் ரஷிய எண்ணெய் அதிபரும், தற்போதைய ரஷிய விமர்சகருமான மைக்கேல் கோடோர்கோவ்ஸ்கி என்பவரால் இந்த நிறுவனம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிறுவனம் புதினின் ரகசிய தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சில பல ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களின் தொகுப்பினை தற்போது பகிர்ந்து கொண்டிருக்கிறது.

    ரஷிய ரெயில்வேத்துறை, புதின் பயணம் செய்யும் ரெயிலில் அவர் உபயோகிக்கும் பெட்டியின் வடிவமைப்பு வேலைகளை ஜிர்கான் சர்வீஸ் எனும் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. இவர்களிடமிருந்து டோசியர் சென்டர் இந்த தகவல்களை பெற்றுள்ளது.

    அந்த ரெயிலின் விவரங்களில், பெட்டி எண் 021-78630 முக்கியத்துவம் பெறுகிறது. இது புதினுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு அனைத்து உயர்ரக வசதிகள் அடங்கியது.

    இதில் ஆடம்பரமான உடற்பயிற்சி கூடம் மற்றும் ஸ்பா போன்றவை உள்ளது. இந்த பெட்டி தயாரிக்கும் பணிகள் 2018-ல் நிறைவடைந்திருக்கிறது.

    உடற்பயிற்சிக்கான இத்தாலிய தயாரிப்பான டெக்னோஜிம் எடைகள் மற்றும் உடற்பயிற்சி கருவிகள் இதில் முதலில் பொருத்தப்பட்டிருந்தது. பின்னர், அமெரிக்காவின் ஹாய்ஸ்ட் கருவிகளால் இவை மாற்றியமைக்கப்பட்டது.

    அந்த பெட்டியில் ஒரு முழு அழகுசாதன மையத்தில் மசாஜ் டேபிள் மற்றும் உடல் தோலின் இறுக்கத்தை அதிகரிக்க பயன்படுத்தப்படும் உயர்ரக ரேடியோ அதிர்வெண் இயந்திரம் உட்பட அனைத்து விதமான சிறப்பு அழகு சாதனங்களும் இருக்கின்றன.

    உளவு பார்க்கும் மற்றும் ஒட்டுகேட்கும் கருவிகள் பயன்படுத்துவதைத் தடுக்க உதவும் வகையில் அந்த பெட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது.

    முழுவதுமாக சிறப்பான முறையில் டைல்ஸ் ஒட்டப்பட்ட ஒரு முழு துருக்கி நாட்டின் நீராவி குளியல் மற்றும் ஷவர் உள்ள குளியலறை புதினின் பயன்பாட்டுக்கு வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    தான் கண்காணிக்கப்படுவதை தவிர்ப்பதற்காக புதின் ரெயில் பயணத்திற்கு அதிகளவில் திரும்பியுள்ளார் என ரஷியாவை விட்டு வெளியேறிய ரஷிய பெடரல் செக்யூரிட்டி சர்வீஸின் முன்னாள் கேப்டனான கிளெப் கரகுலோவ் கூறுகிறார்.

    ரஷிய- உக்ரைன் போரின் தொடக்கத்திலிருந்து மாஸ்கோவிற்கும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்குமிடையே உள்ள தொலைதூர ரஷிய பகுதியான வால்டாய் அருகே புதினின் ரெயில் கணிசமான நேரம் நிறுத்தப்பட்டிருந்தது.

    ஊழியர்கள் இந்த சிறப்பு ரெயிலுக்காக தனிமைப்படுத்தப்பட்டு வேலை செய்கின்றனர். ரெயில் புறப்படாமல் இருக்கலாம், ஆனால் பணியாட்கள் எப்போதும் தயார் நிலையில் இருக்கிறார்கள் என கரகுலோவ் கூறியுள்ளார்.

    மேம்பட்ட தகவல்தொடர்பு ஆண்டெனாவைக் குறிக்கும் ஒரு வெள்ளை டோம் புதினின் ரெயிலின் மேற்புறத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. இதனை கொண்டுதான் இந்த ரெயிலை அடையாளம் கண்டுகொள்கின்றனர். பிற ரெயில்களில் இது இருக்காது எனபது குறிப்பிடத்தக்கது.

    வாக்னர் அமைப்பின் கிளர்ச்சிக்கு பிறகு புதின் வழக்கத்திற்கு மாறாக அதிக எண்ணிக்கையிலான கூட்டங்களில் கலந்து கொள்கிறார். ஆனால், அதற்கு இந்த ரெயிலை பயன்படுத்தினாரா? என்பது ஊர்ஜிதமாகவில்லை.

    Next Story
    ×