என் மலர்tooltip icon

    மற்றவை

    • ஹால்மார்க் என்ற பொறுப்பை இந்திய தர நிர்ணய கழகத்திடம் இந்திய அரசு பொறுப்பை ஒப்படைத்துள்ளது.
    • ஹால்மார்க் முத்திரை இடுவதற்கு ஐந்து பிரிவுகளை இந்திய தர நிர்ணய கழகம் நிர்ணயித்துள்ளது.

    ஹால்மார்க் என்பது விலையுயர்ந்த உலோகப் பொருட்களில், அந்த விலையுயர்ந்த உலோகப் பொருள் சேர்ந்துள்ள அளவின் துல்லிய மதிப்பு மற்றும் அங்கீகார பதிவாகும்.

    தங்கத்தில் கலப்படம் செய்யாமல் விற்க வேண்டும் என்பதற்காக சுமார் 800 வருடங்களுக்கு முன் பிரிட்டனில் தான் முதல் முதலாக ஹால்மார்க் அறிமுகம் செய்யப்பட்டது. அன்றைய நகை வியாபாரிகள் சில உலோகங்களை தங்கத்துடன் எந்த அளவு சேர்கிறார்கள்? என்பதை எல்லோருக்கும் தெரியும்படி ஒரு ஹாலில் வைத்து நகை செய்தனர். ஹாலில் வைத்து தங்க நகைகளை செய்து அதன்பின் வியாபாரம் செய்வதால் தான் ஹால்மார்க் என்ற பெயர் இதற்கு வந்தது.

    இந்தியாவில், ஹால்மார்க் என்ற பொறுப்பை இந்திய தர நிர்ணய கழகத்திடம் இந்திய அரசு பொறுப்பை ஒப்படைத்துள்ளது. நாட்டின் பல்வேறு பாகங்களில் உள்ள இந்த கழகத்தின் அலுவலகம் தான் ஹால்மார்க் என்ற சோதனையை செய்கிறது.

    ஹால்மார்க் முத்திரை இடுவதற்கு ஐந்து பிரிவுகளை இந்திய தர நிர்ணய கழகம் நிர்ணயித்துள்ளது.

    1. பிஐஎஸ் தர நிர்ணய கழகத்தின் சின்னம்.

    2. தங்கத்தின் தன்மை அல்லது மாற்று. உதாரணமாக 22 காரட் தங்கத்தில் 916 முத்திரையும், 21 காரட் தங்கத்தில் 875 என்ற முத்திரையும் இடப்பட்டிருக்கும்.

    3. ஹால்மார்க் செய்யப்படும் மையத்தின் சின்னம்.

    4. நகைகள் செய்யப்பட்ட வருடம் ரகசியமாக குறிப்பிடப்பட்டிருக்கும்.

    5. பிஐஎஸ் அங்கீகாரம் வணிகரின் சின்னம்.

    ஹால்மார்க் செய்யப்பட்ட நகைகளில் மேற்கண்ட ஐந்து முத்திரைகளும் கண்டிப்பாக இருக்கும்.

    சர்வதேச வர்த்தக அமைப்பான டபிள்யூடிஓ என்ற தங்க நகை ஏற்றுமதி செய்யும் 164 உறுப்பு நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதால் இந்திய அரசு பிஐஎஸ் தரச்சான்றை கட்டாயமாக்கியுள்ளது. மேலும் பிஐஎஸ் ஹால்மார்க் முத்திரை பதித்த தங்க நகைகள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்ற விதியும் உள்ளது.

    -அருண் நாகலிங்கம்

    • ஆழ்ந்து தூங்கும்போது அருகில் சென்று திரும்பத் திரும்ப தினமும் சொல்லுங்கள்.
    • மாற்றங்கள் நிகழும்! வாழ்வு புத்துணர்ச்சியோடு மலரும்!

    உங்களுடைய அன்பு குழந்தை தூங்கும்போது அருகில் சென்று அதிக ஓசை இன்றி ஆனால் திருத்தமாக கீழ்க்கண்ட வாசகத்தை சொல்லுங்கள்.

    *என் மகனே(மகளே)! நீ வாழ்க!

    *நீ நல்ல முயற்சி உடையவனாக இருக்கிறாய்!

    *உடல் நலம் மிக்கவனாக இருக்கிறாய்!

    *நல்ல சூழ்நிலை பெற்றவனாக இருக்கிறாய்!

    *நல்ல குணங்களை இயற்கையாகவே நீ பெற்றிருக்கிறாய்!

    *நன்கு உழைப்பவனாக நீ வளர்கின்றாய்!

    *வாழ்வில் வெற்றி பெறுகின்ற எல்லா உடன்பாட்டு எண்ணங்களையும் நீ கொண்டிருக்கின்றாய்!

    *நல்வாழ்வு பெறுவதற்கான எல்லா அம்சங்களும் உன் உள்ளும், புறமும் நன்கு நிரம்பி இருக்கிறது!

    *உன்னிடத்தில் தெய்வீகம் நிரம்பியுள்ளது!

    *நீ அருளாற்றல் பெற்றவனாக நல்ல அறிவுடனும் நலத்துடனும் வாழ்க வளமுடன்!

    என அனுதினமும் அவனை வாழ்த்துங்கள்.

    அவன் ஆழ்ந்து தூங்கும்போது அருகில் சென்று திரும்பத் திரும்ப தினமும் சொல்லுங்கள். அவனது ஆல்ஃபா மனநிலை அதனை ஏற்று, அவனது ஆழ்மனம் தூண்டப்படும். ஆழ்மனம் தூண்டப்பட்டால் படிப்படியாக அவனுள் மாற்றங்கள் நிகழும். உடன்பாட்டுச் சூழல் தோன்றும். இதை சொல்லச் சொல்ல உங்கள் கண்ணோட்டமும் மாறும். அவன் மீது உங்களுக்கு நம்பிக்கை உருவாகும். உங்கள் பேச்சும், தொணியுமே மாறும், சூழல் மாறும்! எண்ண அலைகள் உங்கள் குழந்தையை தாக்குவதற்கு பதிலாக, அவனை தழுவி அன்பு செய்யும்! மனம் மாறும்! மாற்றங்கள் நிகழும்! வாழ்வு புத்துணர்ச்சியோடு மலரும்! வாழ்த்தி வாழ்த்தி பாருங்கள் ! வளத்தை சேருங்கள் !

    - வேதாத்திரி மகரிசி     

    • கல்லீரலின் நலன் காப்பதில் நீர்ச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது.
    • கல்லீரலின் நலம் காக்க செய்யக்கூடாத முக்கிய விஷயங்களில் ஒன்று மது பழக்கம்.

    மூளைக்கு அடுத்தபடியாக உடலின் இரண்டாவது பெரிய உறுப்பாக கல்லீரல் விளங்குகிறது. நோய் எதிர்ப்பு சக்தி, செரிமானம், வளர்சிதை மாற்றம் உள்பட ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் கல்லீரலின் பங்களிப்பு முக்கியமானது. கல்லீரலின் செயல்பாட்டில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடலின் மற்ற பாகங்களின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படக்கூடும். மது பழக்கம், போதைப்பொருள் துஷ்பிரயோகம், ஹெபடைடிஸ் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் கல்லீரல் எதிர்மறையாக பாதிப்புக்கு ஆளாகிறது.

    ஒட்டுமொத்த உடல் நலனில் கல்லீரலின் பங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கல்லீரல் தொடர்பான நோய்கள், அதனை தவிர்க்கும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 19-ந் தேதி உலக கல்லீரல் தினமாக அனுசரிக்கப்படுகிறது. கல்லீரலை பாதுகாக்க செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகளை பற்றி பார்க்கலாம்.

    செய்யக்கூடியவை:

    * கீரை, புரோக்கோலி, காலே போன்ற பச்சை இலை காய்கறிகளை தவறாமல் உட்கொள்ளுங்கள். இந்த காய்கறிகள் உடலில் இயற்கையான சுத்திகரிப்பு செயல்முறையை தூண்டுவதற்கு உதவுகின்றன.

    * வால்நெட், அவகோடா மற்றும் ஆலிவ் எண்ணெய் போன்ற நல்ல கொழுப்புகள் நிறைந்தவைகளை அடிக்கடி உட்கொள்ள வேண்டும்.

    * கல்லீரலின் நலன் காப்பதில் நீர்ச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் தினமும் போதுமான அளவு தண்ணீர் பருகுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். நீர் தான் இயற்கையாகவே நச்சுத்தன்மையை நீக்கும் முகவராக செயல்படுகிறது. உடலில் இருந்து கழிவுகளை சுலபமாக அகற்ற கல்லீரலுக்கு நீர் உதவிகரமாக செயல்படுகிறது.

    * உண்ணும் உணவில் பழங்களும் இடம் பெற வேண்டும். அவை ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை, கிவி, ஸ்ட்ராபெர்ரி, பப்பாளி, கிரேப் புரூட் உள்ளிட்ட வைட்டமின் சி அதிகம் நிறைந்த பழங்களா? என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

    * தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதுதான் எல்லா நோய்களில் இருந்தும் உடலை காக்கும் அருமருந்து. உடற்பயிற்சி செய்வதற்கு நேரம் ஒதுக்க முடியாதவர்கள் அன்றாட வாழ்வில் குறைந்தபட்சம் அரைமணி நேரமாவது நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கு நேரத்தை செலவிட வேண்டும்.

    இன்றைய இளம் தலைமுறையினரிடையே 'டாட்டூ' எனப்படும் பச்சை குத்தும் மோகம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. டாட்டூ குத்துவதற்கு பயன்படுத்தும் மை தரமானதாக இருக்க வேண்டும். அதனை குத்துவதற்கு பயன்படுத்தும் கருவி கிருமி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறதா? என்பதையும் உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.

    ஒருவருக்கு பயன்படுத்திய டாட்டூ குத்தும் கருவி கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படாவிட்டால், மற்றொருவருக்கு பச்சை குத்தும்போது ரத்தம் மூலம் நோய்த்தொற்றுகள் பரவும் அபாயம் அதிகம். குறிப்பாக ஹெபடைடிஸ் பி மற்றும் ஹெபடைடிஸ் சி, கல்லீரல் நோய்த்தொற்றுகளுக்கு வழிவகுக்கும். டாட்டூ குத்தும் கருவிகள் மூலம் பரவும் வைரஸ்கள் ஆரம்பத்தில் கல்லீரல் வீக்கத்திற்கு வழிவகுக்கும்.

    காலப்போக்கில் கல்லீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். எனவே டாட்டூ குத்துவதற்கு பயன்படுத்தப்படும் அனைத்து உபகரணங்களும் புதியதா அல்லது பயன்படுத்துவதற்கு முன்பு கிருமி நீக்கம் செய்யப்பட்டதா என்பதை உறுதிப்படுத்துவது முக்கியம். ஏற்கனவே கல்லீரல் சார்ந்த நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள் பச்சை குத்திக்கொள்வதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியமானது.

    செய்யக்கூடாதவை:

    * பதப்படுத்தப்பட்ட உணவுகளை முடிந்தவரை தவிர்க்கவும். இந்த வகையான உணவுகள் அதிக கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டிருப்பதால் கல்லீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் இந்த உணவுகள் உடலில் சர்க்கரை அளவையும் அதிகரிக்க செய்துவிடும்.

    * கெட்ட கொழுப்புகள் எனப்படும் நிறைவுற்ற கொழுப்புகளை தவிர்க்கவும். பொரித்த உணவுகளும் இதில் அடங்கும்.

    * கல்லீரலின் நலம் காக்க செய்யக்கூடாத முக்கிய விஷயங்களில் ஒன்று மது பழக்கம். மதுவில் உள்ள ஆல்கஹால் நீரிழப்புக்கு வழிவகுக்கும். மேலும் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்கு கல்லீரலின் செயல்பாட்டை கடினமாக்கிவிடும். அதனால் கல்லீரல் எளிதில் பாதிப்புக்கு ஆளாகிவிடும்.

    * ஆடு, மாடு, பன்றி போன்ற பாலூட்டிகளின் இறைச்சி, சிவப்பு இறைச்சியாக கருதப்படும். அந்த வகை இறைச்சியை அதிகமாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த வகை இறைச்சி உணவுகள் கல்லீரலில் அதிக கொழுப்புகள் படிவதற்கு காரணமாக அமைந்துவிடும்.

    * சாக்லேட்டுகள், மிட்டாய்கள் மற்றும் குளிர்பானங்கள் போன்ற அதிக சர்க்கரை கொண்ட உணவுகளையும் அதிகமாக உட்கொள்ளக்கூடாது.

    • ஓலைச்சுவடிகளை வாங்கியதும், விளக்கு வெளிச்சத்தைக்கூட நாடிப் போகாமல், நிலா வெளிச்சத்திலேயே பிரித்துப்பார்க்கிறார் சாமிநாதய்யர்.
    • 1889 ஆம் ஆண்டு ‘பத்துப்பாட்டு’ ஓலைச்சுவடி அச்சிடப்பட்டு நூலாக வெளியாகியது.

    திருநெல்வேலிச் சீமையில் ஆழ்வார் திருநகரி என்னும் ஊருக்குச் சென்று அங்கே இலட்சுமணக் கவிராயர் என்னும் பெருந்தகையாளரைச் சந்தித்துப் 'பத்துப்பாட்டு' என்ற ஓலைச்சுவடி தேடி வந்திருப்பதாக உ.வே.சா. கூறினார்.

    அவரது இல்லத்தில் எத்தனையோ ஓலைச் சுவடிகள் இருந்தன. அத்தனையும் தேடிப்பார்த்தார். ஆனால் 'பத்துப்பாட்டு' மட்டும் அகப்படவில்லை.

    அப்போது இலட்சுமணக் கவிராயர், "என் வேலைக்காரன் சில ஓலைச் சுவடிகளை எடுத்துப்போய் என் மாமனாரிடம் கொடுத்துவிட்டான். ஒருவேளை நீங்கள் தேடிவந்த நூல் அவரிடம் இருக்கலாம்" என்றார்.

    "வாருங்கள் போய்த் தேடுவோம்".- உ.வே.சா.

    "நான் அங்கே வர இயலாது".

    "ஏன்?"

    "என் மாமனார் வீட்டு வாசற்படியை மிதிப்பதில்லை என்று நான் சத்தியம் செய்திருக்கிறேன்".

    "அப்படியானால் நான் மட்டும் போய்ப் பார்க்கிறேன்"

    "வேண்டாம்"

    "ஏன்?"

    "தமிழறிஞர்களை மதிக்கத் தெரியாதவர் அவர். உங்களைஅவமானப்படுத்தி விடுவார்"

    "இதற்கு வேறு வழி?"

    "இன்னும் ஒருநாள் பொறுங்கள்".

    உ.வே.சா. மிக்க சோர்வோடு வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்தார். இரவு நேரம், நிலா வெளிச்சம். அப்போது இலட்சுமணக் கவிராயர் மேல்துண்டில் எதையோ சுற்றி எடுத்துக் கொண்டு ஓடோடி வருகிறார். அருகே வந்ததும், கவிராயர் மேல்துண்டை விரித்தார். உள்ளே இருந்தது ஓலைச்சுவடிக் கட்டு. அதைக்காட்டி,"நீங்கள் தேடி வந்த சுவடிகள் இதுதானா பாருங்கள்" என்றார்.

    ஓலைச்சுவடிகளை வாங்கியதும், விளக்கு வெளிச்சத்தைக்கூட நாடிப் போகாமல், நிலா வெளிச்சத்திலேயே பிரித்துப்பார்க்கிறார் சாமிநாதய்யர்.

    நக்கீரர் எழுதிய திருமுருகாற்றுப்படை முதலில் இருக்கிறது. தொடர்ந்து பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை இருக்கின்றன. பிறகு பார்க்கிறார், முல்லைப் பாட்டு இருக்கிறது. மேலே நிலா. உடனே, "நிலவில் மலர்ந்த முல்லையோ?" என்று ஆடுகிறார், பாடுகிறார். இலட்சுமணக் கவிராயரைக் கட்டி அணைத்துக் கொள்கிறார்.

    "இந்த ஓலைச்சுவடிகள் எப்படிக் கிடைத்தன?"

    "என் மாமனார் வீட்டில் போய்த் தேடிக் கண்டுபிடித்து வந்தேன்!".

    "அவர் வீட்டு வாசற்படியைத்தான் மிதிப்பதில்லை என்று நீங்கள் சத்தியம் செய்துள்ளீர்களே?"

    "ஆமாம், சத்தியம் செய்தது உண்மைதான். ஆனால் தமிழுக்காக நான் என் மானத்தை விற்றுவிட்டேன்!"

    அதுகேட்டு சிலைபோல் நின்றார் சாமிநாதய்யர். செய்வதறியாது கண்ணீரை நன்றிக் கடனாகச் செலுத்திவிட்டு, ஓலைச்சுவடிகளுடன் ஊர் திரும்பினார்.

    1889 ஆம் ஆண்டு 'பத்துப்பாட்டு' ஓலைச்சுவடி அச்சிடப்பட்டு நூலாக வெளியாகியது. படித்தவர்கள் எல்லாம் திகைத்தார்கள், மகிழ்ச்சியால் திளைத்தார்கள்.

    -பாலு சுப்பிரமணியன்

    • சிறுநீர் கட்டு, நீர் எரிச்சல், நீர் கட்டு ஆகிய நோய்களுக்கு சுரைக்காய் சாப்பிடுவது மிகச்சிறந்தது ஆகும்.
    • சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பித்தம் சமநிலை அடையும்.

    கோடை காலத்தில் பெரும்பாலானோருக்கு உடல் சூடு ஏற்படும். இந்த உடல் சூட்டை குறைக்க சுரைக்காயை சாப்பிட்டு வர தாகம் ஏற்படாது. நாவறட்சியை போக்கும். மேலும் சுரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் சிறுநீரக கோளாறு நீங்கும்.

    சுரைக்காயில் பல்வேறு மருத்துவ பலன்கள் அடங்கியுள்ளது.

    சுரைக்காய் வைட்டமின் பி மற்றும் சி சத்துக்களை கொண்டுள்ளது. இவற்றை சாப்பிடுவதால் உடல் பலமாக இருக்கும்.

    சுரைக்காயின் சதை பகுதியை ரசமாக்கி அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை பழச்சாற்றை சேர்த்து பருகி வந்தால் சிறுநீரக கோளாறு படிப்படியாக குறையும்.

    சிறுநீர் கட்டு, நீர் எரிச்சல், நீர் கட்டு ஆகிய நோய்களுக்கு சுரைக்காய் சாப்பிடுவது மிகச்சிறந்தது ஆகும்.

    சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பித்தம் சமநிலை அடையும்.

    சுரைக்காயை வெயில் காலத்தில் தொடர்ந்து சாப்பிட, வெப்ப நோய்கள் தாக்காமல் காப்பதோடு சருமத்திற்கு பொலிவையும் கொடுக்கும்.

    சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வை கொடுத்து, உடலை வலுப்படுத்தும்.

    அஜீரணக்கோளாறு உள்ளவர்கள் சுரைக்காயை சாப்பிடலாம்.

    வெப்பத்தினால் ஏற்படும் தலைவலி நீங்க வேண்டுமெனில் சுரைக்காயின் சதை பகுதியை அரைத்து நெற்றியில் பற்று போட வேண்டும். இதனால் தலைவலி நீங்கும்.

    தற்போது உள்ள சூழ்நிலையில் பெரும்பாலானோர் கணினி சம்பந்தமான பணிகளில் இருப்பதால் கண் எரிச்சல், கண் வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இத்தகைய கண் குறைபாடுகள் நீங்க சுரைக்காயை பயன்படுத்தலாம்.

    சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு தணியும், வெப்ப நோய்கள் ஏதும் ஏற்படாது. சுரைக்காயின் இலைகளை நீரில் ஊற வைத்து, அந்த நீரை பருகி வந்தால் வயிறு தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். கை, கால் எரிச்சல் உள்ள இடத்தில் சுரைக்காயின் சதை பகுதியை வைத்து கட்டினால் எரிச்சல் குறையும்.

    நீரிழிவு நோய் உள்ளவர்கள் இந்த காயை அடிக்கடி பயன்படுத்தி வர ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு படிப்படியாக குறையும்.

    -கணேஷ்ராம்

    • மார்புச்சளி அல்லது கன்றிப் போன ஊமைக் காயத்துக்கு பாலில் மஞ்சள் தூள் கலந்து குடிப்பது சிறந்த மருந்தாகக் கருதப்படுகிறது.
    • கல்லீரலில் சேரும் நச்சை அகற்றும் இயற்கை மருந்தாக மஞ்சள் இருக்கிறது.

    மஞ்சள் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. சருமப் பராமரிப்பிலும், திருமணங்களிலும் மஞ்சளின் பயன்பாடு நாம் அறிந்ததே.

    மஞ்சளின் பிரகாசமான நிறத்துக்கு, அதிலுள்ள கர்கியூமின் என்ற நிறமியே காரணம். இது மிகவும் முக்கியமான வேதிப்பொருள். புண்களை குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டது. அழற்சி-வீக்கத்தை குறைக்கும் அற்புதமான நிறமி.

    மஞ்சளில் நச்சுத்தன்மை கிடையாது. மார்புச்சளி அல்லது கன்றிப் போன ஊமைக் காயத்துக்கு பாலில் மஞ்சள் தூள் கலந்து குடிப்பது சிறந்த மருந்தாகக் கருதப்படுகிறது. இதன் குணமளிக்கும் பண்பை அதிகரிக்க, பனங்கற்கண்டு சேர்ப்பது கூடுதல் பலன் தரும்.

    மஞ்சளின் மருத்துவக் குணங்கள் தொடர்பான பட்டியலுக்கு முடிவே கிடையாது. ஏற்கனவே, சொன்ன பலன்களைத் தாண்டி கல்லீரலில் சேரும் நச்சை அகற்றும் இயற்கை மருந்தாக மஞ்சள் இருக்கிறது. மண்ணீரல், கணையம், வயிற்றுச் செயல்பாடுகளை அது மேம்படுத்துகிறது. நோய் எதிர்ப்பாற்றலை வலுவாக்குகிறது. செரிமானத்தை எளிதாக்குவதுடன், கருப்பை கட்டிகள், கருப்பை நீர்க்கட்டிகளையும் குறைக்கிறது.

    பாக்டீரியாவையும் அழிக்கக்கூடியது. ரத்தச் சர்க்கரை அளவை முறைப்படுத்தவும் சிலர் மஞ்சளைப் பயன்படுத்துகிறார்கள். மஞ்சளில் இருக்கும் சத்துகள் என்று பார்த்தால் இரும்புச்சத்து, மாங்கனீசு, வைட்டமின்-பி6, பொட்டாசியம், நார்ச்சத்து போன்றவையும் உள்ளன.

    • ஊரடங்காக இருந்தாலும் பிள்ளைகளின் படிப்புக்கு செல்போன்தான் கைகொடுத்தது என்பதை மறுப்பதற்கில்லை.
    • குழந்தைகள் மட்டுமின்றி வளர் இளம் பருவ குழந்தைகள் வரை நினைவாற்றலை இழக்கிறார்கள்.

    இருபத்தைந்து வயதானாலும் பலர் மொபைல் போனில் புது புது விஷயங்களை தெரிந்து கொள்ள முடியாமல் திணறுவதை பார்க்க முடிகிறது.

    அதேநேரம் பல் முளைக்காத சின்னஞ்சிறுசுகள் செல்போன் கேட்டு அடம் பிடிப்பதையும் செல்போனை கையில் கொடுத்தால் அமைதியாகி விடுவதையும் வீடுகள் தோறும் காண முடிகிறது. செல்லுக்கு கட்டுப்படும் குழந்தைகள் தாயின் சொல்லுக்குகூட கட்டுப்படுவது இல்லை. அந்த குழந்தைகளே செல்போனை திறந்து தேவையான கார்ட்டூன் போன்ற படங்களை பார்த்தும் ரசிக்கிறது.

    அதை பார்த்ததும் 'ஆஹா... என் பிள்ளையின் ஆற்றலைப் பார்...! என்று பெருமைப்படும் பெற்றோரும் உண்டு. என் குழந்தைகள் எப்போதும் செல்போனில்தான் விளையாடும். அவனுக்கு செல்போனை கையில் கொடுத்தால் போதும் இரவில் கூட பக்கத்தில் வைத்து கொண்டுதான் தூங்குவான். 'என் குழந்தை எல்லா அப்ளிகேஷனையும் திறந்து பார்த்து விடும். செல்போனை கையில் கொடுத்தால்தான் சாப்பிடும்..." இது தங்கள் குழந்தைகளை பற்றி தாய்மார்கள் பெருமையுடன் சொல்லும் சேதி!

    ஆனால் தனது குழந்தை செல்போன் என்ற ஆக்டோபசால் கொஞ்சம் கொஞ்சமாக வளைக்கப்படுகிறது என்பதை அப்போது உணர்வதில்லை.

    ஒரு கட்டத்தில் செல்போன் பிடியில் இருந்து குழந்தைகளை மீட்க பெற்றோர்கள் படாத பாடுபடுகிறார்கள்.

    நவீன உலகில் செல்போன் மிகப்பெரிய தகவல் தொடர்பு சாதனம் என்பதை மறுப்பதற்கில்லை. அதே நேரம் அதை பயன்படுத்தும் விதத்தை பொறுத்து அது தரும் நன்மையை விட தீமை அதிகரித்து விடுகிறது.

    உலகம் முழுவதும் செல்போன் விற்பனை செய்யும் உலக கோடீசுவரரான டிம் குக் தனது குழந்தைக்கு விளையாட செல்போன்கள் கொடுப்பதில்லை என்பதை நம்ப முடிவதில்லை.

    ஆனால் குழந்தையின் ஆரோக்கியம் கருதி செல்போன் கொடுப்பது கிடையாது என்பதை அவரே ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

    கொரோனா பெருந்தொற்று காலகட்டம்தான் பலரையும் கட்டாயமாக செல்போனுக்குள் மூழ்க வைத்தது.

    ஊரடங்காக இருந்தாலும் பிள்ளைகளின் படிப்புக்கு செல்போன்தான் கைகொடுத்தது என்பதை மறுப்பதற்கில்லை. அதே நேரம் செல்போன்கள் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்து கொண்டது. எனவேதான் தேவைக்கான என்ற நிலை மாறி செல்போன்களிலேயே மூழ்க வைத்து விட்டது.

    குழந்தைகள் செல்போன்களின் ஒளிரும் திரையை பல மணி நேரம் பார்த்து கொண்டிருந்தால் அவர்களுக்கு பல், கண் பிரச்சினைகள், பார்வைத்திறன் குறைபாடுகள் ஏற்படலாம்.

    பேச்சு திறன் குறையும். மற்றவர்களோடு பேசும் திறன் குறையும். மற்ற குழந்தைகளுடன் இணைந்து பழகவோ, விளையாடவோ முடியாமல் தனிமைப்பட்டு விடுகின்றன.

    குழந்தைகள் மட்டுமின்றி வளர் இளம் பருவ குழந்தைகள் வரை நினைவாற்றலை இழக்கிறார்கள். ஒரு கணக்கெடுப்பில் சுமார் 60 சதவீத குழந்தைகள் 5 வயதுக்கு முன்பே ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துகிறார்களாம். அதிலும் 31 சதவீதம் பேர் 2 வயதுக்கு முன்பே பயன்படுத்த தொடங்கி விடுகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.

    குழந்தை பருவம் என்பது குழந்தைகளின் நினைவாற்றல் மற்றும் மூளை செல்களை வலுப்படுத்த வேண்டிய வளர்ச்சிக்கான ஒரு முக்கிய கட்டமாகும். ஆனால் ஸ்மார்ட்போன்கள் குழந்தைகளுக்கு அதிக கவனச்சிதறலை ஏற்படுத்துகின்றன. குழந்தைகள் எந்நேரமும் அல்லது அதிக நேரம் போன்களில் மூழ்கி இருக்கும் போது, அவர்களின் பெற்றோர் அல்லது ஆசிரியரின் அறிவுறுத்தல்களை தவிர்க்கிறார்கள்.

    தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சு கண்களுக்கு மட்டுமல்ல, மூளை செல்களுக்கும் தீங்கு செய்ய கூடியது. அதிலும் குறிப்பாக Blue light radiation-க்கு தொடர்ந்து கண்களை வெளிப்படுத்துவது, ஒருவரது விஷயங்களை நினைவில் கொள்ளும் திறனை பாதிக்கிறது. தவிர குறுகிய கால நினைவாற்றலில் (short-term memory) குறுக்கிடுகிறது.

    இரவில் நீண்ட நேரம் மொபைல் பயன்படுத்தும் போது அதிலிருந்து வெளியேறும் புளூ ரேடியேஷன்ஸ், இது இரவல்ல பகல் என்று மூளையை நம்ப வைக்கிறது. இதனால் உடல் தூக்க ஹார்மோனான மெலடோனின் உற்பத்தியை நிறுத்துகிறது. எனவே அடுத்த நாள் தூக்கமின்றி களைப்பாகவும் எந்த வேலையையும் முழு திறனில் செய்ய முடியாமலும் ஒருவர் பாதிக்கப்படுவார்

    செல்போனில் மூழ்குவதால் ஏற்படும் ஆபத்துகளை உணர்ந்துள்ளதால் பள்ளிகளுக்கு ஓரிரு நாள் விடுமுறை கிடைத்தாலே ஏன்தான் விடுமுறை விட்டார்களோ என்று நினைக்கிறார்கள்.

    இந்த நிலையில் கோடை விடுமுறை வர உள்ளது. இதில் 85 சதவீத குழந்தைகள் செல்போனில் மூழ்கி கிடப்பார்களே என்று பெற்றோர்கள் கவலையில் மூழ்கி இருப்பதாக ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

    அமேசான் நிறுவனம் நாடு முழுவதும் 10 மாநகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் 2 முதல் 8 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வைத்திருக்கும் 750 பெற்றோரிடம் ஆய்வை நடத்தி உள்ளது.

    செல்போன் மற்றும் மின்னணு சாதனங்களில் மூழ்கும் போது குழந்தைகளிடம் சுறுசுறுப்பான உடல் இயக்கம் இல்லாமல் இருப்பதாக 90 சதவீதம் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

    2 மணி நேரம் வரை செல்போன்களை பயன்படுத்தலாம் என்று கூறும் நிலையில் 3 மணி நேரத்துக்கும் அதிகமாக பயன்படுத்துவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    96 சதவீதம் பெற்றோர்கள் குழந்தைகளின் கவனத்தை திசை திருப்ப பொழுதுபோக்கு போன்றவற்றுக்கு அழைத்து செல்ல ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

    82 சதவீதம் பெற்றோர்கள் குழந்தைகள் கவனத்தை திசை திருப்பி வேறு எந்தவிதமான செயல்பாடுகளில் ஈடுபடுத்துவது என்று யோசித்து கொண்டிருக்கிறார்கள்.

    இதில், குழந்தைகள் ஆங்கிலத் திறனை மேம்படுத்த 50 சதவீத பெற்றோரும், நல்லொழுக்கம் மற்றும் சமூக பழக்கவழக்கங்களை கற்றுக்கொடுக்க வேண்டுமென 45 சதவீத பெற்றோரும், நடனம், பாட்டு, இசைப் பயிற்சியில் ஈடுபடுத்த வேண்டும் என 36 சதவீத பெற்றோரும், கலை மற்றும் கைவினை பயிற்சியில் ஈடுபடுத்த வேண்டும் என 32 சதவீத பெற்றோரும், உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபடுத்த வேண்டும் என 32 சதவீத பெற்றோரும் விருப்பம் கொண்டிருப்பது இந்த ஆய்வின் மூலமாக தெரியவந்தது' என்றார்.

    • தூக்கமின்மை ஏற்பட்டால் உளவியல் செயல்பாடு மற்றும் வாழ்க்கை தரத்தை பாதிக்கும்.
    • தூக்கமின்மை என்பது ஒருவரை சோர்வாகவும், மனச்சோர்வுடனும், எரிச்சலுடனும் செயல்பட வைக்கும்.

    மணி எட்டு ஆச்சுடா... இன்னுமா தூங்குறே என்று அம்மாவோ, அப்பாவோ அலாரம் அடித்த பிறகுதான் பெரும்பாலும் படுக்கையில் இருந்து லேசாக புரள்வார்கள்.

    ஆனாலும் எழும்ப மாட்டார்கள். ஏம்மா தூக்கத்தை கெடுக்கிறே என்றுதான் கோபப்படுவார்கள். ஆனால் இப்போது தூக்கம் வராததே பலருக்கு பிரச்சினையாகி வருவது ஆச்சரியமாகி உள்ளது.

    பொதுவாக தூக்கமின்மை என்பது பல்வேறு காரணங்களால் ஏற்பட்டாலும் இதுவும் ஒரு நோயாக உலகம் முழுவதும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. 30 சதவீதம் மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு தரவுகள் தெரிவிக்கின்றன.

    சென்னை கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் எல்லா நோய் சார்ந்த பிரிவுகளைபோல் தூக்க குறைபாடு சிகிச்சை பிரிவும் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த துறைக்கு பிரத்யேகமாக மருத்துவ குழுவினரும் இருக்கிறார்கள். இதுபற்றி மருத்துவர்கள் கூறியதாவது:-

    ஒவ்வொருவருக்கும் தூக்கம்தான் ஆரோக்கியத்துக்கான அஸ்திவாரம். அயர்ந்து தூங்கி எழுந்தாலே உடல் புத்துணர்ச்சி பெற்று விடும்.

    தூக்கமின்மை ஏற்பட்டால் உளவியல் செயல்பாடு மற்றும் வாழ்க்கை தரத்தை பாதிக்கும். ஒரு நாளைக்கு 7 முதல் 8 மணி நேரம் தூங்குவது நல்லது. இருப்பினும் வயதுக்கு ஏற்ப தூக்க முறையில் மாற்றமும் வரும். உதாரணமாக வயதானவர்களுக்கு இரவில் தூக்கம் குறையலாம். அதற்கு ஈடுகட்டும் வகையில் பகலில் தூங்குவார்கள்.

    தூக்கமின்மை என்பது ஒருவரை சோர்வாகவும், மனச்சோர்வுடனும், எரிச்சலுடனும் செயல்பட வைக்கும். அன்றாடம் செய்யும் வேலை திறனை குறைக்கிறது.

    அது மட்டுமல்ல. ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, இதயநோய் போன்றவற்றை அதிகரிக்க செய்யும். உடலில் இருக்கும் பல்வேறு வலிகள், மோசமான உணவு பழக்கங்கள், பணி நேர மாறுதல்கள், மனஅழுத்தம், கவலை, ஹார்மோன் மாற்றங்கள் தூக்கமின்மையை ஏற்படுத்தலாம்.

    ஆஸ்துமா, கீல்வாதம், நெஞ்செரிச்சல், நீரிழிவு உள்ளிட்ட சில நோய்களாலும் தூக்கம் கெடும். ஒரு நோயாளியின் தூக்கமின்மைக்கான காரணங்களை கண்டறிந்து அதற்கு ஏற்ப மருத்துவ ஆலோசனை வழங்கப்படும். சிறந்த தூக்க பழக்கத்தை வளர்த்துக்கொள்ள சில ஆலோசனைகள்.

    * சோர்வாக உணரும்போது மட்டும் தூங்க வேண்டும்.

    * தூங்க செல்வதற்கு முன்பு ஒரு டம்ளர் சூடான பால் குடிக்கலாம்.

    * படுக்கை அறை அமைதியாகவும், இருட்டாகவும் இருக்க வேண்டும்.

    * படுக்கைக்கு செல்வதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு உடற்பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும்.

    * படுக்கையில் டி.வி. பார்ப்பது, படிப்பது, செல்போன் பயன்படுத்துவது, லேப்டாப்பில் மூழ்கி இருப்பது, கவலைப்படுதலை தவிர்க்க வேண்டும். இவை தூக்கத்தை கலைத்துவிடும்.

    தூக்க கோளாறுகள் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நல்ல இரவு தூக்கம் மிகவும் முக்கியமானது.

    நேத்து ராத்திரி...யம்மா தூக்கம் யோச்சுடி...யம்மா என்பது இரவு சுகமான அனுபவமாக இருக்கலாம்.

    எந்நாளுமே தூக்கம் போச்சே என்று புலம்பினால் அது சோக வாழ்க்கையின் அறிகுறிதான்.

    • ஏதாவது ஒரு பாடலை இயற்றி தானே மெட்டமைத்து, பெஞ்ச்சிலோ, தீப்பெட்டியிலோ தாளம் போட்டுக்கொண்டு பாடுவாராம்.
    • எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன் படத்தில் இடம்பெற்ற, அன்றைக்கும் இன்றைக்கும் ஏன் என்றைக்கும் அழியாத மிகப்பிரபலமான “தூங்காதே தம்பி தூங்காதே” பாடல்.

    அப்போது சென்னை மைலாப்பூரில் தங்கியிருந்த காமெடி ஏ.வீரப்பன் அறைக்கு அடிக்கடி போவாராம் பட்டுக்கோட்டையார். சில சமயம் இரவில் அங்கேயே தங்கிவிடுவது உண்டாம்.

    ஆனால் கவிஞர் எப்பொழுதும் அதிகாலையில் எழுந்துவிடுவாராம். எழுந்து ஏதாவது ஒரு பாடலை இயற்றி தானே மெட்டமைத்து, பெஞ்ச்சிலோ, தீப்பெட்டியிலோ தாளம் போட்டுக்கொண்டு பாடுவாராம்.

    ஆனால் அங்கு தங்கியிருக்கும் வேறு சில நண்பர்கள் பொழுது விடிந்து வெகுநேரம் ஆகியும் தூங்கிக் கொண்டு இருப்பார்களாம். அப்படி ஒருநாளில் இதைப் பார்த்த வீரப்பன்,தமாஷாக

    "தூங்காதீங்க தம்பிகளா தூங்காதீங்க...

    நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக்

    கெடுத்து இப்படி சோம்பேறி ஆகாதீங்க "

    என எதார்த்தமாகச் சொன்னாராம்.

    இதைக் கேட்டுக்கொண்டிருந்த கவிஞர், "மாப்ள! ஒரு பாட்டுக்கு பல்லவி கிடைக்காம திண்டாடிட்டு இருந்தேன். அருமையான பல்லவியைக் கொடுத்து விட்டீங்க"என்று கூறி, அப்பொழுதே பாடலை எழுதி அதற்கு மெட்டமைத்து, தாளம் போட்டுக்கொண்டே பாடினாராம்.

    அதுதான் எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன் படத்தில் இடம்பெற்ற, அன்றைக்கும் இன்றைக்கும் ஏன் என்றைக்கும் அழியாத மிகப்பிரபலமான "தூங்காதே தம்பி தூங்காதே" பாடல்.

    -பரதன் வெங்கட்

    • ஒரு நாள் ராதா விடுதலையானார். போலீஸ் அதிகாரி “சார் நீங்கள் உடனே கிளம்பலாம்” என்றார்.
    • ‘பழகின இடம். டக்குனு போகமுடியுமா? இருங்க குளிச்சிட்டு வாரேன்’ என்று நிதானமாகவே கிளம்பினாராம் ராதா.

    1975ஆம் ஆண்டு வந்த அவசரநிலை சட்டத்தால் (மிசா) எம்.ஆர். ராதா கைது செய்யப்பட்டார். இந்தச் சட்டத்தால் கைதான இந்தியாவின் ஒரே நடிகர் அநேகமாக ராதா ஒருவர்தான்.

    வீட்டில் தூங்கி கொண்டிருந்த எம்.ஆர்.ராதா அவர்களை இரவில் எழுப்பி மிசாவில் கைது செய்து சிறையில் அடைந்தார்கள்.

    சிறையில் அவரை பார்க்க வந்த அவரது மனைவி, "இனிமே இப்படி செய்யமாட்டேன்னு" எழுதிக் கொடுத்தா விட்டுருவாங்கலாமே... நீங்க எழுதிக் கொடுக்க வேண்டியதுதானே? என்று புலம்பினார்.

    எம்.ஆர்.ராதா பதில் சொன்னார்; "அட நீ வேற...தூங்கிக்கிட்டு இருந்தவனை தூக்கிட்டு வந்து ஜெயிலிலே போட்டுருக்காங்க. இனிமே தூங்கமாட்டேன்னா எழுதி கொடுக்கமுடியும்..?அவனா புடிச்சான்...அவனே விடட்டும்!"

    நடிகவேள் ராதாவின் மரண கலாய்!

    ஒரு நாள் ராதா விடுதலையானார். போலீஸ் அதிகாரி "சார் நீங்கள் உடனே கிளம்பலாம்" என்றார்.

    'பழகின இடம். டக்குனு போகமுடியுமா? இருங்க குளிச்சிட்டு வாரேன்' என்று நிதானமாகவே கிளம்பினாராம் ராதா.

    இன்பத்தையும் துன்பத்தையும் ஒரே மாதிரி பாவிக்கும் துறவு மனநிலையை ராதா பெற்றிருந்தார்.

    -வள்ளியம்மை

    • மஹந்திரா குழும தலைவர் பதவியை 48 ஆண்டுகளாக வகித்து வந்தவர் கேசுப் மஹிந்திரா.
    • பல்வேறு சர்வதேச நிறுவனங்களுடன் மஹிந்திரா கூட்டணி அமைக்கவும் முக்கிய பங்கு வகித்தார்.

    இந்திய ஆட்டோமொபைல் துறையின் முன்னோடியும், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா லிமிடெட் தலைவருமான கேசுப் மஹிந்திரா (99) இன்று அதிகாலை மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

    மஹந்திரா குழும தலைவர் பதவியை 48 ஆண்டுகளாக வகித்து வந்த கேசுப் மஹிந்திரா, ஆட்டோமொபைல் துறை மட்டுமின்றி தகவல் தொழில்நுட்பம், ரியல் எஸ்டேட், நிதி சேவைகள் மற்றும் மருத்துவம் என பல்வேறு துறைகளில் மஹிந்திரா குழுமம் களமிறங்க முக்கிய காரணமாக விளங்கினார்.

    இதுதவிர வில்லிஸ் கார்ப்பரேஷன், மிட்சுபிஷி, இண்டர்நேஷனல் ஹார்வெஸ்டர், யுனைடட் டெக்னாலஜிஸ், பிரிட்டிஷ் டெலிகாம் உள்பட பல்வேறு சர்வதேச நிறுவனங்களுடன் மஹிந்திரா கூட்டணி அமைக்கவும் முக்கிய பங்கு வகித்தார்.

    இந்நிலையில், கேசுப் மஹிந்திராவின் மறைவுக்கு பிரதமர் மோடிஇரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    கேஷுப் மஹிந்திராவின் மறைவால் வேதனை அடைகிறேன். வணிக உலகிற்கு அவர் ஆற்றிய பங்களிப்புக்காகவும், அவரது முயற்சிகளுக்காகவும் அவர் நினைவுகூரப்படுவார். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இரங்கல். ஓம் சாந்தி.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • மண்டபமா? மன்டபமா? சந்தேகம் வந்தால்... பக்கத்தில் ‘ட’ இருக்கிறதா, அப்ப இங்கே மூன்று சுழி ‘ண்’ தான் வரும்.
    • கொன்றானா? கொண்றானா? சந்தேகம் வந்தால்... பக்கத்தில் ‘ற’ இருக்கிறதா, அங்கு இரண்டு சுழி ‘ன்’ தான் வரும்.

    எழுத்துப்பிழை இல்லாமல் தமிழ் சொல்லித்தர பிள்ளைகளுக்குச் சில விளக்கங்கள்...

    "ண", "ன" மற்றும் "ந" எங்கெல்லாம் வரும்?

    ஓர் எளிய விளக்கம் :-

    மூன்று சுழி "ண", இரண்டு சுழி "ன" மற்றும் "ந" என்ன வித்தியாசம்?

    தமிழ் எழுத்துகளில் இரண்டு சுழி "ன" என்பதும், மூன்று சுழி "ண" என்பதெல்லாம் வெறும் பேச்சு வழக்கு.

    "ண" இதன் பெயர் டண்ணகரம்,

    "ன" இதன் பெயர் றன்னகரம்,

    "ந" இதன் பெயர் தந்நகரம் என்பதே சரி.

    மண்டபம், கொண்டாட்டம் – என எங்கெல்லாம் இந்த மூன்று சுழி "ணகர" ஒற்றெழுத்து வருகிறதோ, அதையடுத்து வரும் உயிர்மெய் எழுத்து 'ட' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதற்கு "டண்ணகரம்" என்று பெயர்.

    தென்றல், சென்றான் – என எங்கெல்லாம் இந்த இரண்டு சுழி "னகர" ஒற்றெழுத்து வருகிறதோ, அதையடுத்து வரும் உயிர்மெய் எழுத்து 'ற' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால் இதற்கு "றன்னகரம்" என்று பெயர்.

    இது இரண்டும் என்றுமே மாறி வராது..நினைவில் கொள்க..

    மண்டபமா? மன்டபமா? சந்தேகம் வந்தால்... பக்கத்தில் 'ட' இருக்கிறதா, அப்ப இங்கே மூன்று சுழி 'ண்' தான் வரும். ஏன் என்றால் அது "டண்ணகரம்".

    கொன்றானா? கொண்றானா? சந்தேகம் வந்தால்... பக்கத்தில் 'ற' இருக்கிறதா, அங்கு இரண்டு சுழி 'ன்' தான் வரும். ஏன் என்றால் அது "றன்னகரம்" என்று புரிந்து கொள்ளலாம்.

    இதே மாதிரிதான் 'ந' கரம் என்பதை, "தந்நகரம்" என்று சொல்ல வேண்டும். ஏன் என்றால் இந்த 'ந்' எழுத்தை அடுத்து வரக்கூடிய உயிர்மெய் 'த' மட்டுமே. (பந்து, வெந்தயம், மந்தை).

    -வங்கனூர் அ.மோகனன்.

    ×