என் மலர்
கதம்பம்

தமிழுக்காக மீறப்பட்ட சத்தியம்
- ஓலைச்சுவடிகளை வாங்கியதும், விளக்கு வெளிச்சத்தைக்கூட நாடிப் போகாமல், நிலா வெளிச்சத்திலேயே பிரித்துப்பார்க்கிறார் சாமிநாதய்யர்.
- 1889 ஆம் ஆண்டு ‘பத்துப்பாட்டு’ ஓலைச்சுவடி அச்சிடப்பட்டு நூலாக வெளியாகியது.
திருநெல்வேலிச் சீமையில் ஆழ்வார் திருநகரி என்னும் ஊருக்குச் சென்று அங்கே இலட்சுமணக் கவிராயர் என்னும் பெருந்தகையாளரைச் சந்தித்துப் 'பத்துப்பாட்டு' என்ற ஓலைச்சுவடி தேடி வந்திருப்பதாக உ.வே.சா. கூறினார்.
அவரது இல்லத்தில் எத்தனையோ ஓலைச் சுவடிகள் இருந்தன. அத்தனையும் தேடிப்பார்த்தார். ஆனால் 'பத்துப்பாட்டு' மட்டும் அகப்படவில்லை.
அப்போது இலட்சுமணக் கவிராயர், "என் வேலைக்காரன் சில ஓலைச் சுவடிகளை எடுத்துப்போய் என் மாமனாரிடம் கொடுத்துவிட்டான். ஒருவேளை நீங்கள் தேடிவந்த நூல் அவரிடம் இருக்கலாம்" என்றார்.
"வாருங்கள் போய்த் தேடுவோம்".- உ.வே.சா.
"நான் அங்கே வர இயலாது".
"ஏன்?"
"என் மாமனார் வீட்டு வாசற்படியை மிதிப்பதில்லை என்று நான் சத்தியம் செய்திருக்கிறேன்".
"அப்படியானால் நான் மட்டும் போய்ப் பார்க்கிறேன்"
"வேண்டாம்"
"ஏன்?"
"தமிழறிஞர்களை மதிக்கத் தெரியாதவர் அவர். உங்களைஅவமானப்படுத்தி விடுவார்"
"இதற்கு வேறு வழி?"
"இன்னும் ஒருநாள் பொறுங்கள்".
உ.வே.சா. மிக்க சோர்வோடு வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்தார். இரவு நேரம், நிலா வெளிச்சம். அப்போது இலட்சுமணக் கவிராயர் மேல்துண்டில் எதையோ சுற்றி எடுத்துக் கொண்டு ஓடோடி வருகிறார். அருகே வந்ததும், கவிராயர் மேல்துண்டை விரித்தார். உள்ளே இருந்தது ஓலைச்சுவடிக் கட்டு. அதைக்காட்டி,"நீங்கள் தேடி வந்த சுவடிகள் இதுதானா பாருங்கள்" என்றார்.
ஓலைச்சுவடிகளை வாங்கியதும், விளக்கு வெளிச்சத்தைக்கூட நாடிப் போகாமல், நிலா வெளிச்சத்திலேயே பிரித்துப்பார்க்கிறார் சாமிநாதய்யர்.
நக்கீரர் எழுதிய திருமுருகாற்றுப்படை முதலில் இருக்கிறது. தொடர்ந்து பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை இருக்கின்றன. பிறகு பார்க்கிறார், முல்லைப் பாட்டு இருக்கிறது. மேலே நிலா. உடனே, "நிலவில் மலர்ந்த முல்லையோ?" என்று ஆடுகிறார், பாடுகிறார். இலட்சுமணக் கவிராயரைக் கட்டி அணைத்துக் கொள்கிறார்.
"இந்த ஓலைச்சுவடிகள் எப்படிக் கிடைத்தன?"
"என் மாமனார் வீட்டில் போய்த் தேடிக் கண்டுபிடித்து வந்தேன்!".
"அவர் வீட்டு வாசற்படியைத்தான் மிதிப்பதில்லை என்று நீங்கள் சத்தியம் செய்துள்ளீர்களே?"
"ஆமாம், சத்தியம் செய்தது உண்மைதான். ஆனால் தமிழுக்காக நான் என் மானத்தை விற்றுவிட்டேன்!"
அதுகேட்டு சிலைபோல் நின்றார் சாமிநாதய்யர். செய்வதறியாது கண்ணீரை நன்றிக் கடனாகச் செலுத்திவிட்டு, ஓலைச்சுவடிகளுடன் ஊர் திரும்பினார்.
1889 ஆம் ஆண்டு 'பத்துப்பாட்டு' ஓலைச்சுவடி அச்சிடப்பட்டு நூலாக வெளியாகியது. படித்தவர்கள் எல்லாம் திகைத்தார்கள், மகிழ்ச்சியால் திளைத்தார்கள்.
-பாலு சுப்பிரமணியன்






