search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    கல்லீரலை காக்க செய்ய வேண்டியவை...
    X

    கல்லீரலை காக்க செய்ய வேண்டியவை...

    • கல்லீரலின் நலன் காப்பதில் நீர்ச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது.
    • கல்லீரலின் நலம் காக்க செய்யக்கூடாத முக்கிய விஷயங்களில் ஒன்று மது பழக்கம்.

    மூளைக்கு அடுத்தபடியாக உடலின் இரண்டாவது பெரிய உறுப்பாக கல்லீரல் விளங்குகிறது. நோய் எதிர்ப்பு சக்தி, செரிமானம், வளர்சிதை மாற்றம் உள்பட ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் கல்லீரலின் பங்களிப்பு முக்கியமானது. கல்லீரலின் செயல்பாட்டில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடலின் மற்ற பாகங்களின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படக்கூடும். மது பழக்கம், போதைப்பொருள் துஷ்பிரயோகம், ஹெபடைடிஸ் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் கல்லீரல் எதிர்மறையாக பாதிப்புக்கு ஆளாகிறது.

    ஒட்டுமொத்த உடல் நலனில் கல்லீரலின் பங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கல்லீரல் தொடர்பான நோய்கள், அதனை தவிர்க்கும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 19-ந் தேதி உலக கல்லீரல் தினமாக அனுசரிக்கப்படுகிறது. கல்லீரலை பாதுகாக்க செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகளை பற்றி பார்க்கலாம்.

    செய்யக்கூடியவை:

    * கீரை, புரோக்கோலி, காலே போன்ற பச்சை இலை காய்கறிகளை தவறாமல் உட்கொள்ளுங்கள். இந்த காய்கறிகள் உடலில் இயற்கையான சுத்திகரிப்பு செயல்முறையை தூண்டுவதற்கு உதவுகின்றன.

    * வால்நெட், அவகோடா மற்றும் ஆலிவ் எண்ணெய் போன்ற நல்ல கொழுப்புகள் நிறைந்தவைகளை அடிக்கடி உட்கொள்ள வேண்டும்.

    * கல்லீரலின் நலன் காப்பதில் நீர்ச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் தினமும் போதுமான அளவு தண்ணீர் பருகுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். நீர் தான் இயற்கையாகவே நச்சுத்தன்மையை நீக்கும் முகவராக செயல்படுகிறது. உடலில் இருந்து கழிவுகளை சுலபமாக அகற்ற கல்லீரலுக்கு நீர் உதவிகரமாக செயல்படுகிறது.

    * உண்ணும் உணவில் பழங்களும் இடம் பெற வேண்டும். அவை ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை, கிவி, ஸ்ட்ராபெர்ரி, பப்பாளி, கிரேப் புரூட் உள்ளிட்ட வைட்டமின் சி அதிகம் நிறைந்த பழங்களா? என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

    * தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதுதான் எல்லா நோய்களில் இருந்தும் உடலை காக்கும் அருமருந்து. உடற்பயிற்சி செய்வதற்கு நேரம் ஒதுக்க முடியாதவர்கள் அன்றாட வாழ்வில் குறைந்தபட்சம் அரைமணி நேரமாவது நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கு நேரத்தை செலவிட வேண்டும்.

    இன்றைய இளம் தலைமுறையினரிடையே 'டாட்டூ' எனப்படும் பச்சை குத்தும் மோகம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. டாட்டூ குத்துவதற்கு பயன்படுத்தும் மை தரமானதாக இருக்க வேண்டும். அதனை குத்துவதற்கு பயன்படுத்தும் கருவி கிருமி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறதா? என்பதையும் உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.

    ஒருவருக்கு பயன்படுத்திய டாட்டூ குத்தும் கருவி கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படாவிட்டால், மற்றொருவருக்கு பச்சை குத்தும்போது ரத்தம் மூலம் நோய்த்தொற்றுகள் பரவும் அபாயம் அதிகம். குறிப்பாக ஹெபடைடிஸ் பி மற்றும் ஹெபடைடிஸ் சி, கல்லீரல் நோய்த்தொற்றுகளுக்கு வழிவகுக்கும். டாட்டூ குத்தும் கருவிகள் மூலம் பரவும் வைரஸ்கள் ஆரம்பத்தில் கல்லீரல் வீக்கத்திற்கு வழிவகுக்கும்.

    காலப்போக்கில் கல்லீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். எனவே டாட்டூ குத்துவதற்கு பயன்படுத்தப்படும் அனைத்து உபகரணங்களும் புதியதா அல்லது பயன்படுத்துவதற்கு முன்பு கிருமி நீக்கம் செய்யப்பட்டதா என்பதை உறுதிப்படுத்துவது முக்கியம். ஏற்கனவே கல்லீரல் சார்ந்த நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள் பச்சை குத்திக்கொள்வதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியமானது.

    செய்யக்கூடாதவை:

    * பதப்படுத்தப்பட்ட உணவுகளை முடிந்தவரை தவிர்க்கவும். இந்த வகையான உணவுகள் அதிக கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டிருப்பதால் கல்லீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் இந்த உணவுகள் உடலில் சர்க்கரை அளவையும் அதிகரிக்க செய்துவிடும்.

    * கெட்ட கொழுப்புகள் எனப்படும் நிறைவுற்ற கொழுப்புகளை தவிர்க்கவும். பொரித்த உணவுகளும் இதில் அடங்கும்.

    * கல்லீரலின் நலம் காக்க செய்யக்கூடாத முக்கிய விஷயங்களில் ஒன்று மது பழக்கம். மதுவில் உள்ள ஆல்கஹால் நீரிழப்புக்கு வழிவகுக்கும். மேலும் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்கு கல்லீரலின் செயல்பாட்டை கடினமாக்கிவிடும். அதனால் கல்லீரல் எளிதில் பாதிப்புக்கு ஆளாகிவிடும்.

    * ஆடு, மாடு, பன்றி போன்ற பாலூட்டிகளின் இறைச்சி, சிவப்பு இறைச்சியாக கருதப்படும். அந்த வகை இறைச்சியை அதிகமாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த வகை இறைச்சி உணவுகள் கல்லீரலில் அதிக கொழுப்புகள் படிவதற்கு காரணமாக அமைந்துவிடும்.

    * சாக்லேட்டுகள், மிட்டாய்கள் மற்றும் குளிர்பானங்கள் போன்ற அதிக சர்க்கரை கொண்ட உணவுகளையும் அதிகமாக உட்கொள்ளக்கூடாது.

    Next Story
    ×