என் மலர்
அமெரிக்கா
- மூன்று நிமிடங்களில் கைகளால் அதிக பாக்ஸ் ஜம்ப், அதிக டைமண்ட் புஷ்-அப்கள் எடுத்துள்ளார்.
- சீயோன் கிளாக்கின் சாதனை குறித்த வீடியோவை சமீபத்தில் கின்னஸ் சாதனை அமைப்பு வெளியிட்டுள்ளது
அமெரிக்காவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி தடகள வீரரான சீயோன் கிளார்க்கின் உலக சாதனை தொடர்பான வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
பிறக்கும்போதே இரண்டு கால்களும் இல்லாமல் பிறந்த மிஸ்டர் கிளார்க், தனது விடா முயற்சியால் தடகளத்தில் சாதனை படைத்து வருகிறார். கால்கள் இல்லாத நிலையில் கைகளால் வேகமாக நடக்கும் பயிற்சியை மேற்கொண்ட அவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
கடந்த 2021ம் ஆண்டு 20 மீட்டர் தூரத்தை 4.78 வினாடிகளில் கடந்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார். இந்த வீடியோவை சமீபத்தில் வெளியிட்டுள்ள கின்னஸ் சாதனை அமைப்பு, 'இரண்டு கைகளில் வேகமாக நடக்கும் மனிதரான சீயோன் கிளார்க்கை பாருங்கள்' என கூறியிருந்தது.
அதேபோல் 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம், லாஸ் ஏஞ்சல்சில் உள்ள ஜிம்மில் மூன்று நிமிடங்களில் கைகளால் அதிக பாக்ஸ் ஜம்ப் மற்றும் அதிக டைமண்ட் புஷ்-அப்கள் எடுத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
மன உறுதியும் விடாமுயற்சியும் இருந்தால் உலக சாதனையை முறியடிக்கமுடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் சீயோன் கிளார்க்.
- புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது மர்ம நபர்கள் சிலர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
- சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சீன நாட்காட்டியின்படி இன்று புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வாழும் சீனர்கள் தங்கள் புத்தாண்டு பிறப்பை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மாண்டெரி பார்க் பகுதியில் உள்ள ஒரு கேளிக்கை விடுதியில் இன்று சீன புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். அப்போது, புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது மர்ம நபர்கள் சிலர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்த துப்பாக்கிச்சூடில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த துப்பாக்கிச்சூடு நடத்தியது யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாட்டில் நிலவும் தொடர் போராட்டம் காரணமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- மச்சு பிச்சு நகரில் சுமார் 300க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சிக்கியுள்ளனர்.
பெரு:
தென் அமெரிக்க நாடான பெருவில் அதிபராக இருந்த பெட்ரோ காஸ்டில்லோ பாராளுமன்றத்தை கலைத்து அவசர நிலையை கொண்டு வர திட்டமிட்டார்.
இதையடுத்து அவரை எம்.பி.க்கள் தீர்மானம் நிறைவேற்றி பதவி நீக்கம் செய்தனர். மேலும் கிளர்ச்சி மற்றும் சதித்திட்டம் தீட்டியதாக கூறி கைது செய்யப்பட்டார். புதிய அதிபராக பெண் தலைவர் டினா பொலுவார்டே பதவி ஏற்றார்.
இதையடுத்து பெட்ரோ காஸ்டிலோ ஆதரவாளர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதில் பல இடங்களில் வன்முறை ஏற்பட்டது. தலைநகர் லிமாலில் நடந்த பேரணியில் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அவசர நிலை பிறப்பிக்கப்பட்டாலும் போராட்டத்தை ஒடுக்க முடியவில்லை. இந்த நிலையில் பெருவில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான மச்சுபிச்சு நகரை அந்நாட்டு அரசு மூடியுள்ளது. நாட்டில் நிலவும் தொடர் போராட்டம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
15-ம் நூற்றாண்டு இன்கா பேரரசால் மலைமீது கட்டப்பட்ட பழம்பெருமை வாய்ந்த நகரமான மச்சு பிச்சுவுக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
தற்போது மச்சு பிச்சு நகரில் சுமார் 300-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சிக்கியுள்ளனர்.
தங்களை சொந்த நாட்டுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா அமைச்சருக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அரசின் அதிமுக்கிய, ரகசிய ஆவணங்கள் அதிபர் ஜோ பைடனின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட நிலையில் சோதனை.
- ஜோ பைடன் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக இருந்த 2009 முதல் 2016 ஆண்டு வரையிலான ஆணவங்கள் ஆகும்.
அமெரிக்க அதிபர் ஜோபைடனின் வீடு மற்றும் தனிப்பட்ட அலுவலகத்தில் அரசின் ரகசிய ஆவணங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த நவம்பர் 2-ந்தேதி, டிசம்பர் 20-ந்தேதி மற்றும் ஜனவரி 12-ந்தேதிகளில் நடந்த சோதனையில் 10-க்கும் மேற்பட்ட அரசின் ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அந்த ஆவணங்கள் ஜோபைடன் 2009 முதல் 2017-ம் ஆண்டு வரை துணை அதிபராக பதவி வகித்த கால கட்டத்தை சேர்ந்தவை ஆகும்.
இந்த விவகாரம் அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரசின் ரகசிய ஆவணங்கள் ஜோபைடன் வீட்டில் இருந்தது தொடர்பாக விசாரணை நடத்த அமெரிக்க அட்டர்ரனி ஜெனரல் மெரிக் ஹார் லெண்ட் உத்தரவிட்டார். இதற்கான விசாரணை குழு அமைக்கப்பட்டது.
எப்.பி.ஐ. சோதனை
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் வீட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனை டெலாவேரின் வில்மிங்டனில் உள்ள ஜோ பைடன் வீட்டில் நடந்தது. சுமார் 13 மணி நேரம் நடந்த சோதனையில் மேலும் 6 ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதில் சில ஆவணங்கள் ஜோபைடன் செனட்டராக இருந்த காலத்திலும், மற்றவை துணை அதிபராக இருந்த காலத்திலும் தயாரிக்கப்பட்டவை ஆகும்.
இது தொடர்பாக ஜோபைடனின் வக்கீல் பாப் பாயர் கூறும்போது, "ஜோ பைடன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் மேலும் 6 ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. கையால் எழுதப்பட்ட குறிப்புகள் மற்றும் சுற்றப்பட்ட பொருட்கள் ஆகியவற்றை எடுத்து சென்றனர். தனது வீட்டில் நீதித்துறை அதிகாரிகள் சோதனை நடத்த அதிபர் ஜோபைடன் சம்மதம் தெரிவித்தார்" என்றார்.
அதிபர் ஜோபைடன் வீட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் மற்றும் நீதித்துறையினர் சோதனை நடத்தியிருப்பது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 2022 டிசம்பர் 19 முதல் 2023 ஜனவரி 15 வரையிலான கடந்த 28 நாட்களில் சுமார் 1.3 கோடி புதிய பாதிப்புகளும், சுமார் 53 ஆயிரம் புதிய மரணங்களும் கொரோனாவால் நிகழ்ந்துள்ளன.
- கடந்த 15-ந் தேதி நிலவரப்படி உலக அளவில் மொத்தம் 66 கோடிக்கு அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வாஷிங்டன்:
உலக அளவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. குறிப்பாக சீனாவில் உருமாறிய கொரோனா வைரசால் தினமும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அத்துடன் மரணமும் அதிகரித்து வருகிறது. இதை உலக சுகாதார அமைப்பும் உறுதி செய்துள்ளது.
கடந்த டிசம்பர் 19-ந் தேதி முதல் கடந்த 15-ந் தேதி வரையிலான சுமார் 1 மாத காலகட்டத்தில் உலக அளவில் கொரோனா மரணங்கள் 20 சதவீதம் வரை அதிகரித்து இருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், '2022 டிசம்பர் 19 முதல் 2023 ஜனவரி 15 வரையிலான கடந்த 28 நாட்களில் சுமார் 1.3 கோடி புதிய பாதிப்புகளும், சுமார் 53 ஆயிரம் புதிய மரணங்களும் கொரோனாவால் நிகழ்ந்துள்ளன. இது முந்தைய 28 நாட்களை ஒப்பிடுகையில் முறையே 7 சதவீத சரிவும் (பாதிப்பு), 20 சதவீத அதிகரிப்பும் (மரணம்) ஆகும்' என கூறியுள்ளது.
கடந்த 15-ந் தேதி நிலவரப்படி உலக அளவில் மொத்தம் 66 கோடிக்கு அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டும், 67 லட்சத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
- உக்ரைன்-ரஷியா போரில் அமெரிக்கா உக்ரைனுக்கு பெரும் பக்கபலமாக இருந்து வருகிறது.
- உக்ரைனுக்கு மேலும் 2.5 பில்லியன் டாலர் ராணுவ உதவியை அமெரிக்கா வழங்குகிறது.
வாஷிங்டன்:
ரஷியா உடனான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா பெரும் பக்கபலமாக இருந்து வருகிறது. உக்ரைன் மீது ரஷியா போர் தொடுப்பதற்கான சூழல் தென்பட்டது முதல் இருந்தே உக்ரைனுக்கு அமெரிக்கா ராணுவ உதவிகளை வழங்கி வருகிறது.
அமெரிக்கா வழங்கி வரும் அதிநவீன ஆயுதங்களை கொண்டே உக்ரைன் ராணுவம் கிட்டத்தட்ட ஓர் ஆண்டாக ரஷிய படைகளை துணிவுடன் எதிர்த்து நிற்கிறது.
இந்நிலையில், உக்ரைனுக்கு மேலும் 2.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவியை வழங்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக, அமெரிக்க ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இருந்து உக்ரைனுக்கு ராணுவ தளவாடங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது 30-வது தொகுப்பாக ராணுவ தளவாடங்கள் வழங்கப்பட்டவுள்ளன. இந்த புதிய தொகுப்பில் 59 பிராட்லி காலாட்படை சண்டை வாகனங்கள், 90 ஸ்ட்ரைக்கர் கவச வாகனங்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் அதிநவீன பீரங்கி மற்றும் ராக்கெட் அமைப்புகள் உள்ளிட்டவை அடங்கும் என தெரிவித்துள்ளது.
- லஷ்கர்-இ-தொய்பா இயக்க தலைவர்களுள் ஒருவரான அப்துல் ரகுமான் மக்கியை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. சபை அறிவித்தது.
- நான் ஒசாமா பின்லேடன், அப்துல்லா ஆலம் போன்றவர்களை சந்தித்தது கிடையாது.
பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா இயக்க தலைவர்களுள் ஒருவரான அப்துல் ரகுமான் மக்கியை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. சபை அறிவித்தது. இவனுக்கு பல்வேறு பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அப்துல் ரகுமான் மக்கி லாகூர் ஜெயிலில் இருந்தபடி ஒரு வீடியோ வெளியிட்டு உள்ளார், அந்த வீடியோவில் அவர் தனக்கு அல்கொய்தா அமைப்புடன் எந்த தொடர்பும் கிடையாது. நான் ஒசாமா பின்லேடன், அப்துல்லா ஆலம் போன்றவர்களை சந்தித்தது கிடையாது. இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் நான் படிக்க வில்லை என்று தெரிவித்து உள்ளார்.
- என்ஜினில் பழுது ஏற்பட்டு இருப்பதை விமானிகள் கண்டுபிடித்தனர்.
- விமானத்தில் இருந்த பயணிகள் பீதியில் தவித்தபடி இருந்தனர்.
சிட்னி:
நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் இருந்து குவாண்டஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்று ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டது. போயிங் 737-800 ரக விமானமான அதில் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.
ஆஸ்திரேலியாவுக்கும், நியூசிலாந்துக்கும் இடையே டாஸ்மான் கடல் பகுதி மேலே விமானம் பறந்து கொண்டிருந்த போது என்ஜினில் பழுது ஏற்பட்டு இருப்பதை விமானிகள் கண்டுபிடித்தனர். இரட்டை என்ஜினில் ஒரு என்ஜினில் கோளாறு ஏற்பட்டது.
விமானிகள் உடனே விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விமானம் விபத்தில் சிக்க வாய்ப்பில் இருப்பதற்கான எச்சரிக்கையை கொடுத்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விமானம் ஆஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில் அவசரமாக தரை இறங்க வந்தது. இதையடுத்து அங்கு தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ்கள் மற்றும் மீட்பு குழுவினர் குவிக்கப்பட்டனர். விமானத்தில் இருந்த பயணிகள் பீதியில் தவித்தபடி இருந்தனர்.
ஒரு என்ஜினில் விமானத்தை இயக்கிய விமானிகள் அதை சிட்னி விமான நிலையத்தில் தரை இறக்கினர்.அதிர்ஷ்டவசமாக விமானம் பத்திரமாக தரை இறங்கியது. இதனால் பயணிகள், அதிகாரிகள் நிம்மதி அடைந்தனர்.
இதன் மூலம் சில மணி நேரம் நீடித்த பரபரப்பு முடிவுக்கு வந்தது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
- 2023-ல் உலக பொருளாதார வளர்ச்சி 1.7 சதவீதமாக குறையும் என உலக வங்கி கணித்துள்ளது.
- உலக பொருளாதாரம் மெதுவாகவே வளர்ந்து வருகிறது என உலக வங்கி தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்:
2023-ம் ஆண்டில் உலக பொருளாதார வளர்ச்சி 1.7 சதவீதமாக குறையும் என உலக வங்கி கணித்துள்ளது. இது கடந்த ஆண்டின் ஜூன் மாதத்தில் கணிக்கப்பட்ட 3 சதவீத வளர்ச்சி என்பதை விட குறைவாகும். மேலும் கடந்த 30 ஆண்டுகளில் 3-வது முறையாக உலக பொருளாதார வளர்ச்சி மிக குறைந்த அளவை எட்டியுள்ளது.
கடும் பணவீக்கம், வட்டி விகித உயர்வு, முதலீடு குறைவு, ரஷியா-உக்ரைன் போரால் ஏற்பட்ட நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உலக பொருளாதாரம் மெதுவாகவே வளர்ந்து வருவதாக உலக பொருளாதார வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக பொருளாதாரம் 2023 மற்றும் 2024-ம் ஆண்டுகளில் முறையே 1.7 மற்றும் 2.7 சதவீதமாக வளர்ச்சி அடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக காலநிலை மாற்றம் உள்ளிட்ட காரணிகளால் உலக பொருளாதாரத்திற்கு ஏற்படும் இடர்ப்பாடுகளை களைவதற்கு மக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.
- வீட்டில் கடந்த வாரம் போதை பொருள் தொடர்பான விசாரணையை போலீசார் நடத்தி இருந்தனர் என்றனர்.
- இரண்டு கோஷ்டிகளுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் துப்பாக்கி சூடு நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள துலாரே நகரில் ஒரு வீட்டில் துப்பாக்கி சூடு நடந்தது. தகவல் அறிந்ததும் போலீசார் அந்த வீட்டுக்கு விரைந்து சென்றனர். அங்கு 6 மாத குழந்தை, தாய் உள்பட 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டு பிணமாக கிடந்தனர். சிலர் காயம் அடைந்து கிடந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இது தொடர்பாக போலீசார் கூறும் போது, குழந்தையையும், அதனுடைய 17 வயது தாயையும் தலையில் சுட்டுள்ளனர்.
போதை பொருள் கும்பல் தாக்குதலில் ஈடுபட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். இத்தாக்குதலில் இரண்டு பேர் ஈடுபட்டுள்ளனர். இது தற்செயலான தாக்குதல் அல்ல. ஒரு குடும்பத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த வீட்டில் கடந்த வாரம் போதை பொருள் தொடர்பான விசாரணையை போலீசார் நடத்தி இருந்தனர் என்றனர்.
புளோரிடாவின் போர்ட் பியர்ஸ் பகுதியில் நடந்த மார்டின் லூதர்கிங் தின விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது மர்ம நபர்கள் கூட்டத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் 8 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இரண்டு கோஷ்டிகளுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் துப்பாக்கி சூடு நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
- 71வது பிரபஞ்ச அழகி பட்டத்துக்கான போட்டி நடைபெற்றது.
- இதில் அமெரிக்காவின் ஆர்’போனி கேப்ரியல் பட்டம் வென்றார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் லூசியானாவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் 71வது பிரபஞ்ச அழகி போட்டி நடைபெற்றது. இதில் (மிஸ் யுனிவர்ஸ் 2022) பிரபஞ்ச அழகி 2022-ன் பெயர் அறிவிக்கப்பட்டது. இந்த முறை பிரபஞ்ச அழகி பட்டத்தை அமெரிக்காவின் ஆர்'போனி கேப்ரியல் கைப்பற்றினார்.
இந்தப் போட்டியில் மொத்தம் 86-க்கும் மேற்பட்ட பெண்கள் போட்டியிட்டனர்.
வெனிசுலாவின் டயானா சில்வா 2வது இடத்தையும், டொமினிகன் குடியரசின் அமி பெனா 3வது இடத்தையும் பிடித்தனர்.
இந்தப் போட்டியில் இந்தியா சார்பாக போட்டியிட்ட திவிதா 'சோன் சிரியா' உடையணிந்து வந்து உலகத்தின் கவனத்தை ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கலிபோர்னியாவில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் பலத்த காற்று வீச்சு ஏற்பட்டு மொத்தம் 19 பேர் வரை உயிரிழந்து உள்ளனர்.
- நிலச்சரிவு, கடும் வெள்ளம் ஏற்பட கூடிய ஆபத்தும் உள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் குளிர்கால பருவத்தின்போது, கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் புயலானது பாதிப்புகளை ஏற்படுத்தி சென்றுள்ளது. பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது.
கடுமையான பனிப்பொழிவு மற்றும் பலத்த காற்று வீச்சும் ஏற்பட்டு மொத்தம் 19 பேர் வரை உயிரிழந்து உள்ளனர். கலிபோர்னியாவில் கார்மெல் மற்றும் பெப்பிள் பீச் ஆகியவை மிக பெரிய சுற்றுலா தலங்களாக அறியப்படுகின்றன.
இவற்றின் அருகேயுள்ள சாலினாஸ் ஆற்றில் கடுமையான வெள்ள பெருக்கு ஏற்பட்டால் பேராபத்து ஏற்பட கூடும். அதனால், சுற்றுலாவாசிகளுக்கு தடை விதிக்க கூடும் என எச்சரிக்கப்பட்டது.
இந்த ஆற்றில் நேற்று அபாய அளவை கடந்து வெள்ளம் ஓடியது. இதனை தொடர்ந்து, அந்த ஆற்றை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் 24 ஆயிரம் பேரை அதிகாரிகள் வேறு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றினர்.
புயல் பாதிப்புகளால் ஏற்பட்ட வெள்ளம் வீடுகளை சூழ்ந்து உள்ளது. கட்டிடங்கள், கார் உள்ளிட்ட வாகனங்கள் நீரில் மூழ்கி காணப்படுகின்றன. மரங்கள் வேருடன் சாய்ந்தன. மின் கம்பங்கள் சரிந்துள்ளன. சில பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டு உள்ளது.
இதனால், குடியிருப்பில் உள்ள மக்கள் பாதுகாப்பு தேடி புலம்பெயர்ந்து சென்றுள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில், 2.2 லட்சம் வீடுகள் மற்றும் வர்த்தக பகுதிகள் மின் இணைப்பு இன்றி பாதிக்கப்பட்டு உள்ளன. லட்சக்கணக்கான மக்கள் மின் வினியோகம் பாதித்து அவதிப்படுகின்றனர்.
இந்நிலையில், இன்னும் 2 புயல்கள் கூடுதலாக கலிபோர்னியா மற்றும் பசிபிக் வடமேற்கு பகுதியை பாதிக்ககூடும் என தேசிய வானிலை ஆய்வு மையம் கணித்து உள்ளது.
எனினும், கடந்த 2 வாரங்களில் 7 பருவகால புயல்கள் பாதிப்பை ஏற்படுத்தி சென்றுள்ளன. நிலச்சரிவு, கடும் வெள்ளம் ஏற்பட கூடிய ஆபத்தும் உள்ளது என பொதுமக்களுக்கு அதிகாரிகள் தரப்பில் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.






